சு.கோபாலன்  

 

நவராத்திரி கொண்டாட்டம்

 

மூன்று தேவியராம் துர்கா லட்சுமி சரஸ்வதி தெய்வங்களை

மூன்று நாட்கள் ஒவ்வொரு தேவிக்கும் முறை வைத்து

ஒன்பது நாட்கள் மொத்தமாய் மெத்த சிரத்தையுடன் வழிபடுவது

என்பது நவராத்திரி எனப்படும் மங்கலமான கொண்டாட்டமாம்.

 

சக்திக்கு உரிய தெய்வமாம் துர்க்கையை முதல் மூன்று நாட்கள்

பக்தியுடன் பணிந்து வழிபட்டு வல்லமை அருளிட வேண்டுவோம்

பொருள் செல்வத்தின் தெய்வமாம் லட்சுமியை அடுத்த மூன்று நாட்கள்

அவளருள் செல்வம் அளித்திட வேண்டி  பணிந்து வணங்குவோம்

 

குறையாச் செல்வமாம் கல்விக்குரிய சரஸ்வதியை இறுதி மூன்று நாட்கள்

நிறைவாய் அச்செல்வம் நமக்கருளிட இறைஞ்சி அவளடி தொழுவோம்.

 வண்ண வண்ண பொம்மைகளை ஒற்றை எண்ணில் அமைத்த படிகளில்

கண்ணைக் கவரும் வண்ணம் கொலுவைத்து விளக்கேற்றி தேவி துதிபாடி

மஞ்சள் குங்குமம் மற்ற மங்கலப் பொருட்களை வரும் மங்கையருக்களித்து

நெஞ்சம் மகிழ்ச்சியால் நிறைய நவராத்திரி கொண்டாடுவரே இல்லத்தரசிகள்

 

புத்தகங்கள் அறிவொளி தரும் தெய்வங்களென அவற்றுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

எத்தகைய உயர்ந்த பண்பாடு என்பதில் பெருமை கொள்வோம்.

வாழ்வு தரும் கருவிகள், ஆயுதங்கள் இயந்திரங்களுக்கும்(9ம் நாள்)பூசை செய்வது

தாழ்வு வாராது நம்மைக் காத்திட தேவியரை உளமாற வேண்டிடுவோம்!

 

முற்றும் வாழ்க்கைக்கு ஆதாரமான செல்வங்களை பெற்றிட அலைமகளையும் (லட்சுமி)

பெற்ற செல்வத்தைக் காத்திடும் வல்லமை தைரியம் பெற்றிட மலைமகளையும் (துர்கை)

உற்ற முறையில் செல்வத்தை  பயன்படுத்த நன்மதி பெற கலைமகளையும் (சரஸ்வதி)

ஏற்ற முறையில் நவராத்திரியில் போற்றி வணங்கி வழிபடுவோமே!

கொடுமை மிக்க மஹிஷாசுரன் எனும் எருமை உருவம் கொண்ட

அசுரனோடு ஒன்பது நாட்கள்

கடுமையாய்ப் போரிட்ட சிம்ம வாகினி (துர்கை) பத்தாம் நாள்(விஜய தசமி)

அசுரனை அழித்து வெற்றி பெற்றாள்

வடநாட்டிலே

இராமனின் கதைகளைப் பக்தியுடன் ஆனந்தமாய்ப் பாடி ஆடி நடித்து

‘இராம லீலா’ என்று ஒன்பது நாட்கள் கொண்டாடி மகிழ்வரே!

பத்தாம் நாள்(தசரா) இராமன் இராவணனனைப் போரில் வென்றதைக் கொண்டாட

பத்துத்தலை இராவணன்,கும்பகர்ணன் மேகனாதன் உருவங்களை எரிப்பரே

 

பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் பலவிதமாய்க் கொண்டாடினாலும்

நல்லவை முன் தீயவை இறுதியில் அழியும் என்பதே செய்தியாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *