இப்படியும் சில மனிதர்கள்! – 7

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

தில், திவானா ஆகியோரின் நடவடிக்கைகள் பிடிக்காததாலும், தில் தன் மகனை ‘கெட் அவுட்’ என்று வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டதாலும், அவர்கள் மகனும் மருமகளும் நெற்குன்றத்திலிருந்த அவர்கள் சொந்த மனையில் வீடு கட்டிக்கொண்டு குடிபோன விவரத்தைச் சென்ற பகுதியில் பார்த்தோம். அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக அவருடைய அலுவலகம் செல்ல வசதியாகவும் இருந்தது. சாமிநாதனின் மனைவி எம்.எஸ்.சி. எம்.எட். படித்திருந்தாள். அப்போது வேலப்பன்சாவடியில் இருந்த ஒரு கல்லூரியில் அவளுக்கு வேலை கிடைத்தது. கணவன் அலுவலகம் சென்றதும், இவளுக்குக் கல்லூரி சென்று வர பஸ்சில் போக முடிந்தது. நெற்குன்றத்திலிருந்து அவள் கல்லூரி மிக அருகில் இருந்ததால் அவளுக்கு ஒரு மொப்பெட் வாங்கிக் கொடுத்திருந்தார் கணவர். இப்படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் மாம்பலத்திலிருந்து தில்லும் திவானாவும் ஒருநாள் பெட்டி படுக்கையோடு நெற்குன்றம் வந்து சேர்ந்தனர். மாம்பலத்தில் தண்ணீர் கஷ்டம் அதிகமாக இருக்கிறது. அங்கு இருக்க முடியவில்லை. அதனால் இனி இங்கேயே தங்கிவிடுவதாக நினைத்து வந்திருக்கிறோம் என்றனர். என்ன செய்வது? மகனும் மருமகளும் சரியென்று தலை அசைத்து வைத்தனர்.

சாமிநாதன் மகளுக்கு டியூஷன் நடத்த அதிக அளவில் மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீடு தனி வீடு என்பதாலும் வீட்டுக்கு வாயிலில் மரங்களும் பரந்த புல் வெளியும் அமைந்திருந்ததனால் மாணவர்கள் அங்கு அமர்ந்து படித்து வந்தனர். அவர்களை அடிக்கடி தில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பார். நாளடைவில் தில்லும் திவானாவும் அந்த மாணவர்களின் கேலிப் பொருளாக மாறினர். இவர்களை அந்த மாணவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதிலும் இவர்கள் தங்கள் ஆசிரியையைத் துன்புறுத்துவது அவர்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

அதிகாலையில் எழுந்ததும் மருமகள்தான் எழுந்து காப்பி போட்டுக் கொண்டு வந்து தில்லுக்கும் திவானாவுக்கும் கொடுக்க வேண்டும். இருவரும் சூரிய உதத்துக்குப் பிறகுதான் எழுந்திருப்பார்கள். பிறகு அவசர அவசரமாக கணவனுக்கு பிரேக்பாஸ்ட் தயார் செய்து கொடுத்து அவரை அலுவலகம் அனுப்பிய பிறகு குளித்துவிட்டு சமையலை முடிக்க வேண்டும். இவ்வளவும் செய்து முடிக்கும் போது மணி ஒன்பதைத் தாண்டிவிடும். அவளுக்குக் கல்லூரிக்கு நேரம் ஆகிவிடும். தான் ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்றால் தில், திவானா குளிக்காமலும், எங்களுக்கு இப்போ சாப்பாடு இறங்காது, பதினோரு மணியாயிடும் என்பாள் நீட்டி முழக்கிக் கொண்டு திவானா. அவர்கள் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் கல்லூரி செல்லலாம் என்றால், அப்படி ஒருநாள் செய்தபோது, இது என்ன இது? பெரியவா ஆத்துல இருக்கறச்சே நீ முதல்ல சாப்பிடறது எந்த சாஸ்த்திரத்திலே சரின்னு சொல்லறது என்று வக்கணையாகப் பேசினாள் திவானா. சரி நீங்கள் குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்காருங்கோ, உங்களுக்குப் போட்டுவிட்டு நானும் சாப்பிட்டுவிட்டு காலேஜுக்குப் போறேன் என்பாள் மருமகள். அதெல்லாம் எங்களுக்குச் சரிப்படாது. நாங்க முதல்ல ஸ்நானம் பண்ணி, ஜபம் பண்ணனும், அதுக்குப் பிறகுதான் சாப்பாடு என்பாள். அப்போ நான் என்ன செய்யட்டும், பட்டினியா போகட்டுமா என்பாள் மருமகள். அது உன் இஷ்டம். கஷ்டமா இருந்தா வேலையை விட்டுடு என்றாள் மாமியார் சுலபமாக.

இது சரிவராது என்று மருமகள் பட்டினியோடு காலேஜ் செல்லலானாள். அங்கு கேண்டீனில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்வாள். இதையெல்லாம் எதிர்வீட்டில் இருந்த மகாலக்ஷ்மி என்னும் சக ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வலிய வந்து சாமிநாதன் பெண்ணிடம் நட்பு பூண்டு பழகத் தொடங்கினாள். அந்த மகாலக்ஷ்மி துணிச்சலான பெண். தில்லும் திவானாவும் செய்யும் அட்டூழியங்களை அப்போதைக்கப்போது போட்டு உடைத்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கிவிடுவாள். படிச்சிருந்தா தெரியும் பண்பாடெல்லாம், உங்களுக்கு என்ன தெரியும். அழுக்குத் துணிமணிகளை வீட்டுக்குள்ளேயே மடி உலர்த்தரேன்னு நிழலில் ஒணர்த்தி அதன் பிசுக்கு நாத்தத்தோடு கட்டிக்கொண்டு பளிச்சென்று சுத்தமாக வரும் எங்களைப் பார்த்து மடி, தீட்டுன்னு சொல்லி கழுத்தறுப்பேள். நீங்க சாப்பிட்ட பிறகுதான் வேலைக்குப் போகும் மருமகள் சாப்பிடணும்னா எல்லா மருமகளும் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்று சாடிவிட்டு, வாம்மா நீ எங்க வீட்டிலே சாப்பிட்டுட்டு காலேஜ் போகலாம். இவா என்னிக்குக் குளிக்கறது, என்னிக்கு ஜபம் பண்ணி முடிக்கிறது, நீ எப்போ காலேஜ் போறது என்று மருமகளைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பிட்டுவிட்டு இருவரும் காலேஜ் போய்விடுவார்கள். இது தொடர்வது தில், திவானாவுக்குப் பிடிக்கவில்லை.

அடிக்கடி அந்த மகாலக்ஷ்மியோடு சண்டைக்குப் போய்விடுவார்கள். இது எங்காத்து விஷயம். இதில் தலையிட நீ யார்? என்று திவானா விரட்டுவாள். விஷயம் உங்க மட்டும் இருந்தா அது வீட்டு விஷயம், அடுத்தவளை பட்டினி போட்டா அது பொது விஷயம் யார் வேணுமானாலும் வந்து கேள்வி கேட்பாங்க. கொடுமை படுத்தறீங்கன்னு ஒரு புகார் போதும், உங்களைப் புடிச்சுண்டு போய் வறுத்து எடுத்துடுவாங்க. தெரிஞ்சுக்கோங்க. சும்மா பழம் பெருச்சாளிகள் மாதிரி படிச்ச பொண்ணை கொடுமை படுத்தறதை விட்டுட்டு ஒழுங்கா இருக்கப் பாருங்க என்று சாடிவிடுவாள். நீ இனிமே எங்காத்துப் பக்கம் வரக்கூடாது என்பார் திவானா. அதெல்லாம் ஒங்க மாம்பலத்திலே, இது நெற்குன்றம், இந்த வீடு இவளுக்கும், இவ கணவனுக்கும் சொந்தம். என்னை வெளியே போகச்சொல்லற அதிகாரம் உங்களுக்கு இல்லை. வேணும்னா உங்க மகனை விட்டுச் சொல்லச் சொல்லுங்கோ. நான் போறேன் என்பாள். ஆக, இங்கே தில், திவானாவின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை.

நாளடைவில் மருமகள் கை ஓங்க, தில் திவானா கரங்கள் ஒடுங்கத் தொடங்கியது. மருமகள் தன்னுடைய தோழி இருக்கும் தைரியத்தில் காலையில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் செய்து தில்லுக்கு வைத்துவிட்டு காலேஜுக்குக் கிளம்பிவிடுவாள். போகும்போது சொல்லிக் கொண்டுகூட போவதில்லை. இதெல்லாம் தில் திவானாவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. மருமகளைக் கெடுப்பது அந்த மகாலக்ஷ்மிதான் அவளை நம் வீட்டு வாசலை மிதிக்கவிடக்கூடாது என்று கருவினாள் திவானா.

மருமகள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். மாலை வேளைகளில், விடுமுறை நாட்களில் இரு வேளைகளிலும் டியூஷன் படிக்க வரும் மாணவர்களோடு பொழுது போய்விடும். அவர்கள் வீட்டின் நிலைமையை நன்கு உணர்ந்த இளைஞர்கள். அதில் சில மாணவிகள் ஆசிரியருக்குக் கூடமாட வேலை செய்வார்கள். இது திவானாவின் கண்களை உறுத்தும். அவாளையெல்லாம் ஏன் சமையலறைக்குள் விடுகிறாய். நாங்கள் சாப்பிடவேண்டாமா என்பாள். அவற்றையெல்லாம் மருமகள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவாள்.

இந்த நிலையில் ஒரு நாள். தில்லும் திவானாவும் ரகசியமாகப் பேசிக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சில நாட்கள் அவர்கள் தங்கள் அறையில் கதவைச் சாத்திக் கொண்டு பேசினர். ஒரு சில நேரம் அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க நேர்ந்த போது மாம்பலம் வீட்டை தில் விலை பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. தன் மகனிடமோ மருமகளிடமோ மூச்சு விடவில்லை கிழம். ஒழிந்து போகட்டும், அவர்கள் என்ன வேணுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று மகனும் விட்டுவிட்டார். தன் மனைவியையும் அவர்களிடம் இதுபற்றி நீயும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

டியூஷன் மாணவர்கள் இந்த விஷயத்தைத் துப்பறிந்து வந்து மருமகளிடம் சொல்லிவிட்டார்கள். மனைவி சொல்ல மகனும் புரிந்து கொண்டார். இதுவரை ஒரு விஷயம் கூட மகனுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. ஒருநாள் பிரவீண், பாபு எனும் சகோதரர்கள் ஓடிவந்து மருமகளிடம், மேடம் மேடம், மாம்பலம் வீட்டை விற்றுவிட்டார்கள், நேற்றுதான் ரிஜிஸ்ட்டிரேஷன் முடிந்துதாம் என்று தகவல் சொன்னார்கள். என்ன விலைக்கு விற்றார்கள், யாரிடம் என்பது போன்ற விவரங்களும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கணவன் வந்ததும் சாமிநாதன் மகள் அவரிடம் விவரங்களைச் சொன்னாள். அவர் எப்படி வேணுமானாலும் செய்து கொள்ளட்டும், நீ கவலைப் படாதே என்று சொல்லிவிட்டார்.

ஒரு வாரம் சென்றிருக்கும், தில்லும் திவானாவும் வீட்டில் தங்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பெண்கள் பெரியவர்கள் இருவர் ஒவ்வொருவராகத் தனித்தனியாக வந்து பெற்றோர்களிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் அவர்கள் அறைக் கதவு சாத்தப்படும். பின்னர் அவர்கள் சென்று விடுவார்கள். வீடு விற்ற பணத்தில் அவர்களுக்குப் பங்கு கொடுத்தார்கள் போலிருக்கிறது. ஆனால் ஒரே மகனான தன் கணவருக்கோ, தனக்கோ இது பற்றி ஒன்றும் சொல்லாததோடு, பணத்தையும் கண்ணில்கூட காட்டவில்லை. அதோடு கதவை சாத்திக்கொண்டு பணத்தைத்தான் இவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பது அவள் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆனால் கிழங்கள் இருவரையும் டியூஷன் மாணவர்கள் மறைமுகமாக கேலியும் கிண்டலும் செய்து ஓயாமல் அவர்களை வம்புக்கு இழுத்தார்கள். இந்த மாணவர்கள் வந்து விட்டால் தில்லும் திவானாவும் ஓடி ஒளிந்துகொள்ளத் தொடங்கினர்.

தங்கள் பெண்கள் வந்துவிட்டுச் சென்ற மறுநாள், தில் வந்து மருமகளிடம், இந்தா இதை உன் வீட்டுக்காரனிடம் கொடுத்துவிடு என்று ஒரு கவரைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தாள் மருமகள். அதில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு இந்திரா விகாஸ் பத்திரம் இருந்தது தன் கணவர் பெயரில். இது எதற்கு இப்போது என்று மருமகள் கேட்டாள். உனக்கு எதுக்கு அதெல்லாம், நீ உன் ஆம்படையானிடம் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் தில். கணவன் மாலையில் வந்தவுடன் இதைக் கொடுத்தாள். அவர் விவரங்களைக் கேட்டுவிட்டு, அதை ஒரு புறமாக வீசி எறிந்தார். இதையெல்லாம் எதற்காக வாங்கி வைத்திருக்கிறாய். அவர்கள் முகத்திலேயே விட்டு எறிய வேண்டியதுதானே என்று கடுப்படித்துவிட்டுப் போய்விட்டார். அது குறித்து பிறகு அவரும் கேட்கவில்லை, மனைவியும் சொல்லவில்லை. ஆனால் அதை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டாள் மருமகள்.

அவர்கள் வீட்டுத் தொட்டத்தில் புல்லோடு பலவகை பூண்டுகளும் முளைத்திருந்தன. அதில் ஒருநாள் பாம்பு வந்துவிட்டது. அங்கு அமர்ந்து படிக்கும் மாணவர்கள் மேடம் மேடம் இங்கு ஒரு பாம்பு வந்துவிட்டது. ஒரே காடாக புல் பூண்டு இருப்பதால்தான் அவைகள் வருகின்றன. நாங்கள் சுத்தம் செய்து விடுகிறோம் என்று அங்கிருந்த புல் பூண்டுகளைச் சுத்தமாக அகற்றிவிட்டனர். மாலையில் தில் எங்கோ வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தவர். தோட்டம் சுத்தமாக இருப்பதைப் பார்த்தார். மனசு கேட்குமா? தானாக முளைத்த பூண்டுகள் அதைக்கூட வேறு எவரோ அகற்றிவிட்டது அவருக்குக் கோபத்தை உண்டு பண்ணியது போலிருக்கிறது.

“இங்கிருந்த எல்லா செடிகளையும் பிடுங்கிப் போட்டது யார்?” என்று கத்தினார். மருமகள் வெளியே வந்து, இங்கு பாம்பு வந்துவிட்டது. பசங்க உட்கார பயந்தாங்க. அவங்கதான் எல்லாத்தையும் பிடுங்கிப் போட்டுட்டு சுத்தப் படுத்தியிருக்காங்க என்றாள். போச்சு போச்சு, அதில நிறைய காசித்தும்பை செடி பூத்துண்டு இருந்தது. காசித்தும்பை பிள்ளையாருக்கு பிரீதி. அதைப் போய் பிடுங்குவாங்களா? யாரைக் கேட்டு இதெல்லாம் அந்தப் பசங்க செய்யறாங்க என்றார். எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியாது மருமகளுக்கு. நான் தான் பிடுங்கச் சொன்னேன். பாம்பு கடிச்சுட்டா அவா குடும்பத்துக்கு யார் பதில் சொல்றது? காட்டுச் செடியெல்லாம் விநாயகருக்குப் பிரீதி என்றால் காட்டிலே போயி பறிச்சுக்க வேண்டியதுதான். வீட்டிலே எதுக்கு அந்தச் செடியெல்லாம். பசங்க உசுரு பெரிசா, விநாயகருக்குப் பிரீதியான பூ பெரிசா? என்றாள்.

தில் திகைத்துப் போனார். இனி நமது அதிகாரம் எடுபடாது. இவள் மகாலக்ஷ்மி, மாணவர்கள் இவர்களது தெம்பில் பேசுகிறாள். இனி நம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இங்கு இருப்பது சரியாக இருக்காது என்று முடிவு செய்தார். ஓரிரு நாட்களில் தனது பெட்டி படுக்கைகளுடன் கிளம்பிவிட்டார். மருமகளும் எங்கே போகப் போகிறீர்கள் என்று கேட்கவில்லை. வாசலில் வந்து நின்ற டாக்சியில் சாமான்களை ஏற்றும்போது நாங்கள் சைதாப்பேட்டைக்கு எங்க ரெண்டாவது பெண்கிட்டே போறோம். அவளுக்கு அங்கே உதவிக்கு யாரும் இல்லையாம் எங்களை வந்து இருக்கச் சொன்னா நாங்க போறோம் என்று சொல்லிவிட்டு திவானா போனாள். அப்போது அங்கே நின்றிருந்த மாணவர்களில் ஒருவனை அழைத்து அதோ பாருப்பா அந்த துளசி மாடம் என்னோடது. அதை எடுத்து கார் டிக்கியில் வை என்றாள். அந்த பையன் மிகவும் விவேகமானவன் போலிருக்கிறது. வாழற வீட்டிலேருந்து துளசி மாடத்தையெல்லாம் எடுக்கக்கூடாது பாட்டி, புதுசா ஒண்ணு வாங்கிக்கோங்கோ. இங்கே டீச்சருக்கு இருக்கட்டும் அது என்றான்.

“போடா, சொன்னதைச் செய், அதிகப்பிரசங்கி, உங்கிட்டே நான் அட்வைசா கேட்டேன்” என்று எரிந்து விழுந்தாள் திவானா. அந்தப் பையன் துளசி மாடத்தை எடுக்க விரும்பாமல் வேறு பக்கம் போய்விட்டான். பிறகு தில்லும் திவானாவுமே அதைப் பெயர்த்து எடுத்துக் காரில் வைத்துக் கொண்டு போய்விட்டார்கள். அடுத்த விநாடி, டியூஷன் படிக்கும் பையன்கள் செங்கற்களைக் கொண்டு வந்து அடுக்கி புதிதாக ஒரு துளசிமாடம் அமைத்து அதில் மண்ணை நிரப்பி ஒரு துளசிச்செடியையும் கொண்டு வந்து வைத்து நீர் ஊற்றினார்கள். அது நன்கு வளர்ந்தது. அதுமுதல் சாமிநாதனின் மகளுக்கு நல்ல காலம் என்றே சொல்லலாம். எனினும் அவ்வப்போது அமாவாசை வந்து நிலவை மூடுவது போல தில், திவானா வந்து ஏதாவது வெடிகுண்டு வீசிவிட்டுப் போவது வழக்கமாகிவிட்டது. எனினும் மகாலக்ஷ்மியும், மாணவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வாடிய பயிர்போல இருந்த அவர்கள் வாழ்க்கையில் நீர் ஊற்றி தளதளவென்று வளரவைத்தார்கள். .

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *