Blog

  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26

     பெருவை பார்த்தசாரதி

    சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் நமக்கு விட்டுச்சென்ற அறநெறிகள் என்கிற பொக்கிஷங்களை எவ்வாறு படைத்திருப்பார்கள். சற்று ஆராந்து பார்த்தோமானல், இவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்?…யாரிடம் கல்வி பயின்று பட்டம் பெற்றார்கள்?….,எப்படி அறிவிற்சிறந்து விளங்கினார்கள்?…என்ற சந்தேகங்கள் எழும்.  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணிப் பார்த்தால் கூட வியப்பு மிகும். இயற்கையோடு ஒன்றி, விலங்கினங்களோடும், தாவரங்களோடும், சுற்றுப் புற சூழ்நிலைகளோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்தார்கள். இயற்கையே தெய்வமாக வணங்கினார்கள். இயற்கையோடு நல்லுறவாடும்போது, போற்றி வணங்கும்போது, விண்ணிலும் மண்ணிலும் அமைதி நிலவுவதை உணர்ந்தார்கள். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதினார்கள். அவர்களால் படைக்கப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், காப்பியங்கள் போன்றவற்றில் நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற போற்றுதற்கரிய காப்பியங்களைப் படைத்தவர்கள், எந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, இதைப் படைத்திருப்பார்கள்?… விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைக் காலத்தில் ‘வாழ்வதற்கே சிரமப்பட்ட சூழ்நிலையில்’ இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல செளகர்யங்களில் ஒன்று கூடத் தோன்றாத கற்காலத்தில், இப்படிப்பட்ட அரிய சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்தவர்கள் மனதில் தோன்றியது வியப்புக்குறியது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், இன்று ‘தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற படி மாறிக்கொள்ளும் மாட மாளிகைகளும், அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியோடு சுகபோகத்தை அனுபவித்துவாழும் அறிஞர்களுக்குக் கூட காட்டில் வாழ்ந்த ஞானிகளின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

     மனித வாழ்க்கையே ஒரு போராட்டம், இந்த நிலையில் சிந்தனை தோன்றுவது அபூர்வம் அதிலேயும், துன்பங்கள் என்னும் அலைகளில் சிக்கித் தவிக்கின்றபோது நற்சிந்தனைக்கும், சாதனைக்கும் இடமில்லை. பணிசெய்யும் இடத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சிக்கல், உறவினர்களால் வரும் துன்பம், நாமே தேடி வரவழைத்துக் கொள்ளுகின்ற கவலைகள் இப்படி துன்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பவர் இவ்வுலகில் உண்டா?.. என்ற கேள்விக்கு விடை காண்பதரிது…எல்லா வசதிகள் இருந்தும், ஏதாவதொரு துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

     நல்வாழ்க்கை வாழ அனைவருமே ஏதாவதொரு வேலையில், பணியில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால், சுபிட்சமான வாழ்க்கை கிட்டினாலும் அதை அனுபவிக்கத் தெரியாமல் சிக்கித் தவிப்போரும் உண்டு.  ஒரு சிறிய துன்பத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புவது இல்லை. சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சிலரிடத்தில் ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே அதை ஏன் கேட்கிறீகள், அலுவலகத்தில் ஒரே வேலை, இங்கும் அங்கும் ஓட வேண்டியிருக்கிறது, இடையே டிரெய்னிங் ப்ரோக்ராம் வேறு, ஒரு வாரம் சரியாகச் சாப்பிடவில்லை, உடம்பு சரியில்லை, தூங்கவில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்வார்கள், முடிவில் பெரிதாக ஒன்றும் சாதித்திருக்கவும் மாட்டார்கள். இதில் உடற்குறையைச் சொல்லி, கடமையைத் தட்டிக் கழிப்பவர்களும் உண்டு.ஆக நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் இத்தகய சலிப்புக்கு அங்கே இடமிருக்காது. எதையுமே இன்முகத்தோடு வரவேற்பவருக்கு எல்லாமே இன்பம்தான். வாழ்க்கை எவ்விதம் அமைந்தாலும், அதை ஏற்று வாழும் மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு முதுமையும், உடல் உபாதைகளும் பெரிதாகத் தோன்றாது, வயதானாலும் இளைமையாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம் என்பது மனநல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை அனைத்துக்கும் காரணமாக அமைவது மனது. மனம் தெளிவாக இருந்தால் சிந்தனை பிறக்கும். சிந்தனை தெளிவானால் மனதிலே சக்தி பிறக்கும், மனசக்தி தடைகளை உடைத்தெறியும், சாதனை படைக்கும்.

    ஒரு வயதானவர் கூறுகிறார், என்னுடைய கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன்.  பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது, ஆனால் அவர்கள் இன்னும் செட்டில் ஆக வில்லை என்கிறார். பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பெற்றோர் பங்கெடுத்துக் கொள்வதால், இந்தக் கடமை என்பதற்கு எல்லை இல்லைபோலும். சிலர் வசதியாக வாழ்ந்து பிறகு முதியவராகும்போது, ஏதாவதொரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு (dependent) ஆகிவிடுகிறார்கள்.  உடல்நலக் குறைபாடுகள் ஒன்றா, இரண்டா,  மருத்துவரிடம் விவரிக்கும்போது, அவரே குழப்பத்துக்குள்ளான மாதிரி, உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள், முடிவில் ஒரு பெரிய மருத்துவசோதனைப்பட்டியல், மருந்துச்சீட்டு, இயன்முறை பயிற்சிமையத்துக்கு (psysiotheraphy centre) ஒரு வாரகாலம் பரிந்துரைத்தல் போன்றவற்றோடு மருத்துவமனையிலிருந்து விடுதலை. இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பந்தங்களில் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவது சகஜம். துன்பம் வரும்போது துணைக்கு வருபவரது அறிவுரை, உறவினர், நண்பர்களது பரிந்துரை, நல்ல மருத்துவர் மற்றும் மருத்துவமனையைத் தேடுதல் போன்றவைகளும் பின் தொடரும், இதனால் மனம் மேலும் குழப்பமடையும், நாம் பூஜை, பிரார்த்தனை, பரிகாரம் முதலியவற்றைச் சரிவர செய்துகொண்டிருக்கின்ற போதிலும், பரிகார ஸ்தலங்கள், குளங்கள், மஹான்கள், சாதுக்கள் முக்கியமாக துறவறம், காவிவேட்டி போன்றவைகள் அடிக்கடி ஞாபத்துக்கு வந்து மேலும் நம்மை அலைக்கழிக்கும். நலம் விசாரிப்பவர்களோடும்,  நண்பர்களோடும் உரையாடும்போது தத்துவங்கள் பேசத்தோன்றும். மருத்துவமனையில் தனிமையை விரட்டி, மருத்துவருக்காகவும், மருத்துவ சோதனைக்காகவும் காத்திருக்கும் நேரத்தில், மற்றவரின் அறிவுரையைவிட, நமக்கெல்லாம் உதவக்கூடியது, கைகொடுக்கக்கூடியது என்று சொன்னால், நம்மைப் போல வேறு பலரும் துன்பங்களை அனுபவிப்பவர்களைப் பார்க்கும் போது சற்று ஆறுதல் கிடைக்கும். உடலில் ஒரு சிறிய காயம் பட்டால்கூட, சாதாரண மருத்துவரிடம் செல்லாமல் நிபுணரிடமல்லவா செல்கிறோம். இந்நேரத்தில் ஜனனம் எடுக்கும்போதே குறைகளோடு பிறப்போரைப் பற்றிச் சிந்திக்கிறோமா?…பிறக்கும் போதே ஊனத்தோடு பிறந்தவர்கள், உலக சாதனை புரிவதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?…என்றால் ‘இல்லை’ என்பதே பெரும்பாலானவரிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். மருத்துவரிடம் போகும் போது மட்டும் இத்தகய சிந்தனைகள் நமக்கு எழுவது இயல்பு என்றாலும், மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் போதாவது, இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. கஷ்டத்தை வெல்ல மந்திர உச்சாடனை செய்வதைவிட, குறைகளைக் களைந்து சாதனை வாழ்க்கை வாழ்ந்த பலரில், ஒரு சிலரை மட்டும் நினைத்தாலே துன்பங்கள் ஓடோடிவிடும். தினமும் காலையில் மகிழ்ச்சியாக படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு, மின்விசிறியை ஆன் செய்து, தினசரிகளைப் புரட்டுகிறோம் அல்லது பாட்டுக் கேட்கிறோம். இந்த ஒரு சாதாரண செயலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை என்றாவது ஒரு நாள் சிந்தித்தித்திருக்கிறோமா!..

    தனது 46 வது வயதில், இடது கையிலும், காலிலும் சில இடங்களில் நிரந்தரமாக செயலிழந்த போது இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவித ஆராய்ச்சித் துறையில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார். பதப்படுத்துதல், நுண்ணுயிர்கள் பற்றிய இவரது தொடர் ஆராய்ச்சிகள் முடிவில் இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தன. அனுதினமும் பால், பியர், ஒயின், மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தினமும் அதிகாலையில், பாக்கட் பால் வாங்குபவர்கள் காபி குடிப்பதற்கு முன் தவறாமல் நினைத்துப் பார்க்க வேண்டியவர்தான் லூயிஸ் பாஸ்ச்சர்

    இன்று நாம் மகிழ்ச்சியோடு பாட்டு மற்றும் பலரது பேச்சுக்களையும் கேட்கிறோம். வெளிச்சம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதுபோல மின்சார வெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதும் பலன்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஐந்து நிமிடம் கரெண்ட் இல்லையென்றால், ஒருவேலையும் செய்ய இயலவில்லை. ‘சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது’ என்பதை உணருகிறோம். ஆனால் தனது இளம் வயதிலேயே ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி, நாளடைவில் காது கேட்கும் திறனையும் வெகுவாக இழந்து விட்டார் ஒருவர். அதனால் படிப்பிலும் அதிக நாட்டம் இல்லை. அங்கக் குறையைத் தாங்கி, அயறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகத்துக்கே ஒளி ஏற்றினார். இவரது கண்டுப்பால் இரவு பகலானது. நமது வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு பொருளைத் தொடும் போதும், தவறாமல் நம் நினைவில் கொள்ள வேண்டியது இவரைத்தான். இவர் இறந்தபோது உலகமே ஒரு நிமிடம் கண்ணைமூடி (மின்சார விளக்குகளை அணைத்து) நன்றி செலுத்தியது, அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    மிகச்சிறந்த இசைப் படைப்பாளர் என்ற பெயருக்கு உரியவர். உலகத்தை தன் இசையால் கட்டிப்போட்டவர் என்றுகூடச் சொல்லுவார்கள். இவர் ஒரு கால கட்டத்தில் முழுவதும் காது கேளாதவராக இருந்தார் என்பதும் அந்தக் கால கட்டத்தில்தான் தனது 9 வது சிம்பனியை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இனிமையான இசையைக் காதால் கேட்டுத்தானே ரசிக்க முடியும். காதால் கேட்டு இசையை ரசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தான் பெறவில்லை என்றாலும், பிறருக்கு அந்த இன்பத்தைத் தரமுடிந்த அந்தக் கலைஞனின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்?……நிச்சயமாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை எதிர்கொண்டு, உலகையே இனிமையான இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்தான் இசைச் சக்கரவர்த்தி பீத்தோவான்.

    இவர்களைப் போல் இன்னும் எத்துணையோ சாதனையாளர்கள், பிறவித் துன்பத்தைத் துச்சமாகக் கருதி, சுயநலம் இன்றி சிந்தித்ததால்தான், இன்றய வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை நாம் எட்டமுடிகிறது.  

    மகாகவி பாரதி எப்போதுமே, உலகவியலைப் பற்றிக் கனவு கண்டவர். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களைக் கண்டு ஒரு போதும் உழல மாட்டேன் என்று உறுதிபட எடுத்துரைத்தவர். அவரது படைப்புகளில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் சாகாமல் இருக்கும் கலையைக் கற்றவன்’ என்று சொல்வது போல ஒரு பாடலை அமைத்திருப்பதைக் காணமுடியும். உலகநியதி என்று சொல்லக்கூடியவைகளை வென்று காட்டுவேன் என்று சொன்ன அவர், பிறப்பும், இறப்பும் மாற்றமுடியாத உலக நியதி, அதிலே கூட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு ரசிக்கும் பாரதி, துன்பங்களைக் கண்டு ஒருபோதும் நான் சாக மாட்டேன் என்று உறுதி கூறுகின்றான் போலும். கவலையையும், அச்சத்தையும் போக்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல மாகாளியிடம் வரம் வேண்டுவதைப் பாருங்கள்!…

    முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்

    முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

    பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ

    புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே

    சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே

    சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,

    நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;

    நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!

    அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;

    அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

    சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,

    தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,

    பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

    பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

    மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,

    மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

    நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!

    நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

    சுருங்கச் சொல்லின், வருகின்ற துன்பத்தை இன்பத்தோடு வரவேற்று, அதையும் இன்பமாகவே கருதினால், பகைவரும் கூட பாராட்டுவர் என்பதைத்தான் ‘துன்பத்தை இன்பமெனக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்தலே சாலச்சிறந்தது’ என்கிறது வள்ளுவனின் வாழ்வியல் பாடம்.

     இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

    ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள்-630)

    தொடரும்………

    Share
  • கல்லூரி கட்டணம்

    மாதவன் இளங்கோ

    “ஏண்டா சீனி, காத்தால சீக்கரமா போவணும்னு நேத்து ராவே சொல்லமாட்டே? சாப்பாடே உன்னும் ஆகல!” என்று திட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து வெளியே வந்தாள் என் தாய்.

    “பரவால மா. இன்னிக்கி எங்க கம்பெனி கஸ்டமர்ஸ் ரெண்டு பேரு     அமெரிக்காலர்ந்து வராங்களாம். ஏர்போர்டுக்கு போயி கூட்டினு போணும். கம்பெனி காரு சாவிய வேற நைட் ட்யூடி பாத்த இன்னோரு டிரைவர் மறந்து வீட்டுக்கு எடுத்துனு போயிட்டானாம். அவன் வீட்டுக்கு வேற போணும். நான் மத்தியானம் ஹோடல்லயே சாப்டுக்கறேன்.” என்று கூறிவிட்டு எனது ஷூவை துடைத்து மாட்டிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன்.

    “பால் சுத்தமா இல்ல. முருகன் கடைல டீயாச்சும் குடிச்சிட்டு போடா. வெறும் வயித்துல போகாத.”

    “சரிம்மா. ஆமா, செல்விக்கு இன்னக்கி காலேஜ் இல்லையா? இன்னும் தூங்கினே இருக்குது.”

    ” அட போடா! ஒன்னும் தெரியாத மாரி கேக்கற. ஏந்தான் அவள நீ அந்த காலேஜில சேத்துவுட்டியோ? அப்பப்போ காசு கேட்டு ராவடி பண்றானுங்க. காலேஜி பீசு கட்டணும்னு அவ மூஞ்ச உம்முன்னு வெச்சிணு கிறா. நீயும் கம்முனு கீற. கொஞ்சம் எதனா பண்ணமுடியுமா பாரு. கட்டற தேதி முடிஞ்சி ஒன்ற மாசம் ஆகுது.”

    “நான் என்னா மா பண்றது? எங்க போறது? நான் என்னா யார்கிட்டயும் கேக்காமையா இருக்கேன்?”

    “இல்லாட்டி பேசாம அவள நிறுத்திட்றா நீ. கல்யாணம் பண்ணி அனுப்பில்லாம். படிப்பும் வேணா! ஒரு எழவும் வேணா!” என்று கத்தினாள்.

    “மா, காலாங்காத்தால உன் கச்சேரிய ஆரம்பிக்காத. என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். சாயங்காலம் பேசிக்கலாம்.” என்று கடிந்து விட்டு அய்யப்பந்தாங்கல் பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தேன்.

    நல்லவேளையாக தாம்பரம் செல்லும் பேருந்து ஒன்று கிளம்பத் தயார் நிலையில் இருந்தது. இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தேன். உட்கார இடம் கிடைத்ததில் சிறிது மகிழ்ச்சியடைந்தாலும், சற்று நேரத்திற்கு முன்பு என் தாயுடன் பேசியது நினைவுக்கு வரவே, மீண்டும் விசனம் வந்து என்னைத் தொற்றிக்கொண்டது.

    நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே என் தந்தை காலமாகிவிட்டார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவுகள் தானாய் விலகிக்கொண்டன. எங்கே நாங்கள் அவர்களுக்கு பாரமாகி விடப் போகிறோமோ என்கிற (அ)நியாயமான பயம் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

    என் தாய் வீட்டுவேலை செய்ததில் கிடைத்த பணம் எங்கள் உணவிற்கே போதவில்லை என்பதால், என் படிப்பை நிறுத்திவிட்டு, என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் லாரி கிளீனராக என் வேலையைத் தொடங்கி, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ஓட்டுநராகி விட்டேன்.

    கல்வி கற்க வேண்டும் என்கிற ஆவல் நிறைய இருந்தாலும், போதாமையால் இளம் வயதிலேயே இந்த வேலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். ஆனால், என் தங்கையை மட்டும் எப்பாடுபட்டேனும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்கிற வெறி அந்த வயதிலிருந்தே எனக்கு இருந்தது.

    அவளுடைய பள்ளிக்கல்வி வரை அதிக சிரமமில்லாமல் எங்களால் சமாளிக்க முடிந்தது. ஆனால், என்றைக்குக் கல்லூரிக்குப் போக ஆரம்பித்தாளோ அன்றைய நாளிலிருந்தே நிலைமை தலைகீழ் ஆகிப்போனது.

    இந்த இரண்டு வருடங்களில் நிறைய கடன்கள் வாங்கிவிட்டேன். மேலும் யாரிடம் கடன் கேட்கலாம் என்று எனக்குத் ரொம்பத் தெரிந்தவர்கள், சுமாராகத் தெரிந்தவர்கள், எங்களை விட்டு என்றோ விலகிப் போன உறவுகள் என்று இப்படி எல்லோரையும் பட்டியலிட்டு, ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்டேன். சொல்லி வைத்தார் போல அனைவரிடமிருந்தும் ஒரேமாதிரியான பதில் வரும். இதற்கு மேல் கடன் கேட்க எனக்கு யாருமேயில்லை என்கிற நிலை.

    வீட்டிலும் இதற்கு மேல் விற்பதற்கு என்று எதுவுமே இல்லை. என்னுடைய ஓரே ஒரு சொத்தான பைக்கையும் விற்றுவிட்டேன். நான் பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர வாசிக்கும் பழக்கம் அதிகமாய் இருந்ததால், தெருவோரக் கடைகளில் வாங்கிய புத்தகங்கள் மட்டும் வீட்டில் ஒரு மூலையில் இரண்டு மூட்டைகள் முழுக்க நிரம்பிக் கிடந்தது. அடுத்ததாக அவைகளைத்தான் விற்கவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் யார் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்? தமது கதாநாயகர்களின் திரைப்படங்களின் ஆரம்ப நாள் அமர்க்களங்களுக்கு வேண்டுமானால் ஆயிரம், இரண்டாயிரம் இறைப்பார்கள்; குடம் குடமாக பால் வாங்கி அபிஷேகம் செய்வார்கள். புத்தகமாவது? வாங்குவதாவது?

    சரி, வீட்டையாவது விற்கலாமென்றால், புறம்போக்கு நிலத்தில் கட்டிய குடிசையை யார் வாங்குவார்கள்? இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் என்றைக்கு அந்த இடத்தை எங்களிடமிருந்து பறித்து, வீட்டை இடித்துத்தள்ளுமோ என்கிற எண்ணம் அவ்வப்போது எனக்குத் தோன்றி மிரட்டிப் பார்க்கிறது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு சிறிய ‘கால் டாக்ஸி’ நிறுவனத்தில் ஆம்னி ஓட்டிக்கொண்டிருந்தேன். என் தங்கை பொறியியல் கல்லூரி சேர்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் சென்று கடன் கேட்டேன். எனது தற்காலிகப் பணியை காரணங்காட்டி எல்லா வங்கிகளுமே கடன் தர மறுத்து விட்டன.

    இதற்காகவே அரசாங்கத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நல்ல நிறுவனத்திலோ ஓட்டுநராக வேலைக்குச் சேர வேண்டும் என்கிற வெறியோடு வேலை தேடியலைந்தேன்.

    கடன் வாங்குவதற்கானத் தகுதியை அடைவதற்காகவே ஒரு நல்ல வேலையை த் தேடிய முதல் ஆள் நானாகத் தானிருப்பேன்.

    எங்கள் கம்பெனி டாக்ஸியில் அடிக்கடி பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் எனக்கு ஓட்டுநராக வேலை கிடைத்தது. மாத ஊதியம் கொஞ்சம் குறைவாயிருந்தாலும், சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, நன்றாக வேலை செய்வோருக்கு கூடுதல் ஊதியம் என்று நிறையச் சலுகைகள் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இந்த வேலை மிகவும் பிடித்திருந்தது.

    என் மேலதிகாரி வேணுகோபால் மிகவும் கண்டிப்பானவர். மற்ற ஓட்டுநர்களை விட என் மீது அவருக்கு ஒரு தனி அக்கறை உண்டு. எனக்கு இருக்கும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தையும், எனது தமிழ் உச்சரிப்பையும் பாராட்டினாலும், ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி அறிவுரை வழங்குவார். என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையினால் என்னை வங்கிக்குச் செல்வது, பொருட்கள் வாங்கி வருவது போன்ற மற்ற சில அலுவலகப் பணிகளையும் செய்யச் சொல்லுவார். நல்ல உடைகளை அணிந்து வரச்சொல்வார். அதனால் தான் இப்போதெல்லாம் நான் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, ஷூவெல்லாம் அணிந்து கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மென்பொருள் வல்லுநரைப் போல அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னையே எனக்கு இப்போதுதான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

    வார நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு, வார ஈறுகளில், சொந்தமாகக் கார் வைத்திருக்கும் எனக்குத் தெரிந்த பழைய வாடிக்கையாளர்கள் சிலருக்கு கார் ஓட்டினேன். அதன்மூலம் சிறிது கூடுதல் வருமானம் கிடைத்தாலும், என் தங்கையின் கல்லூரிச் செலவுகளுக்கு அது போதுமானதாக இல்லை.

    போதிப்பது என்ன அவ்வளவு சிரமமான விஷயமா? பிறகு ஏன் இந்தக் கல்லூரிகள் இப்படி வசூல் வேட்டை நடத்துகின்றன? தரமான கல்வி ஏன் எங்களைப் போன்ற ஏழைகளுக்கு ஒரு எட்டாக்கனியாகவே இருக்கிறது? என் தங்கையின் இந்த வருடக் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டுவது? வேணுகோபால் சாரிடம் கேட்கலாமா? தருவாரா? நல்லவர்தான்! ஆனால் கண்டிப்பானவர் ஆயிற்றே? எப்போது திருப்பிக் கொடுப்பாய் என்று கேட்டால் என்ன சொல்வது? திருப்பிக் கொடுக்காவிட்டால் வேலைக்கே உலை வைத்துவிடுவார்களே?” என்று இப்படி ஏதேதோ கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு சிந்தனையில் தொலைந்து போயிருந்த என்னை, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தது எம்.டி.சி பேருந்து எஸ் 166.

    மேற்கு தாம்பரத்திலிருந்த மற்றொரு ஓட்டுநரின் வீட்டிற்கு ஓட்டமாய் ஓடி, சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து நேராக அலுவலகத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்திற்குள் நுழையவும், எங்களுடைய அமெரிக்க கஸ்டமர்கள் வந்த விமானம் தரையிறங்கவும் சரியாக இருந்தது.

    அவர்களுடைய பெயர்கள் எழுதியிருந்த போர்டை கையில் வைத்துக்கொண்டு வருகைக்கூடத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன்.

    இரண்டு மேல்நாட்டவர்கள் புன்னகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள். அவர்களாகத்தானிருக்கும் என்று யூகித்த சமயம், அவர்களில் ஒருவர், “ஆ யூ சி..ரி..நி.. வசன்?” என்று கேட்டார்.

    பெயரைச் சிறிது குழப்பி உச்சரித்தாலும், அவர்கள் எனது பெயரை  தெரிந்து வைத்திருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

    “எஸ் சார். ஐயாம் சீனிவாசன்!” என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்த கைவண்டியைப் பெற்றுக் கொண்டு,  கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றேன்.

    சரியாக இருபது நிடங்களில், எங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமாகத் தங்கும் ராடிசன் ஹோட்டலுக்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தேன். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, காலையுணவை முடித்துக் கொண்டு வந்த அவர்களுடன் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

    அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே காரை ஓட்டிச் சென்றேன். அது ஆங்கிலம் போலவே இருந்தாலும், பெரும்பாலான வார்த்தைகளும், விஷயங்களும் எனக்குப் புரியவே இல்லை. போக்குவரத்து நெரிசலைப் பற்றியும், ஒழுங்கீனமாக வண்டிகள் சென்று கொண்டிருப்பதைப் பற்றியும் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பது போலத் தெரிந்தது. ஒருவேளை என் தங்கைக்கு இவர்கள் பேசுவது நன்றாகப் புரியும் என்று நினைத்துக் கொண்டபோது, அவளின் கல்லூரி கட்டணமும் சேர்ந்து நினைவுக்கு வந்து வருத்தியது.

    முப்பது நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஐ.டி நெடுஞ்சாலையில் இருந்த எங்கள் அலுவலகத்திற்கு சென்றடைந்தோம். காரிலிருந்து இறங்கிய அவர்கள், “யுவர் டிரைவிங் இஸ் ஆசம்! வெரி டிசிப்ளின்ட் டிரைவர்! ப்ரிசியேட் இட்!” என்று கூறிவிட்டு என்னிடம் கைகுலுக்கி வாழ்த்தினர்.

    “தாங்க்யூ சார்!” என்று கூறிய எனக்கு அவர்கள் பயன்படுத்திய சில வார்த்தைகளும், உச்சரிப்புகளும் புரியவில்லை என்றாலுங்கூட, அவற்றிலிருந்த உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.

    மாலை ஐந்து மணிக்கு வேணுகோபால் சாரிடமிருந்து எனது கைபேசிக்கு அழைப்பு வந்தது.

    “ஸ்ரீனி, ரிசெப்ஷனுக்கு கொஞ்சம் உடனே வா.”

    “இதோ வர்றேன் சார்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினேன்.

    வரவேற்பு கூடத்தில் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தது அந்த ஆறடி உயரம்.

    “ஸ்ரீனி, இன்னிக்கி ஒரு ஆறுமணிக்கு திரும்பவும் கஸ்டமர்ச ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகணும். நம்ம பாபு சாரும் கூட வருவார். அவர் டீம்லர்ந்து இருபது இருபத்தைஞ்சி பேர் கஸ்டமர்சோட டீம் ப ஃபே டின்னருக்குப் போறாங்க. டின்னர் முடியற வரைக்கும் நீ அங்க வெயிட் பண்ணிட்டு, அவங்க டீம்ல மூணு கேர்ல்ஸ மட்டும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு போய்டு. ஒகே வா?”

    “ஒகே சார்.” என்று தலையாட்டிவிட்டு, சிறிது தயக்கத்துடன் அவரை அழைத்தேன், “சார்…”

    “என்னப்பா?”

    “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சார்..”

    “இப்போ கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு ஸ்ரீனி, நாளைக்கு மார்னிங் கண்டிப்பா பேசலாம்.” என்று கூறிவிட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து, “ப்யூ மோர் திங்க்ஸ், ஸ்ரீனி. பாபு சார்கிட்ட டின்னர் முடிஞ்சப்புறம் ரெசீட் வாங்கிட்டு வந்து சைலஜா கிட்ட கொடுத்துடு. அப்புறம், நாளைக்கு மார்னிங் கஸ்டமர்ச கூட்டிட்டு நம்ம சிறுசேரி ஆபீஸ் வந்துடு! அவங்க ரொம்ப இம்பார்டன்ட் கஸ்டமர்ஸ். டிரைவ் பண்ணும்போது சும்மா போனெல்லாம் எடுத்து பேசிட்டு இருக்காதே! ஒகே?”

    “ஒகே சார். ஆனா, நான் டிரைவ் பண்ணும்போது எப்போவுமே போன சுட்ச் ஆப் பண்ணிடுவேன் சார்.” என்றேன்.

    “ஐ நோ யூ ஸ்ரீனி. பட் இட்ஸ் மை ட்யூட்டி டு வார்ன் யூ.” என்று கூறி என் தோள் மீது  தட்டிக்கொடுத்து விட்டுச் சென்றார்.

    சுமார் ஆறேகால் மணியளவில் பாபு அவர்களையும், அமெரிக்கர்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழு. அவர்கள் இறங்கிய பிறகு கதவுகளை மூடிவிட்டு மீண்டும் காருக்குள் அமரச் சென்றபோது, அவர்களில் ஒருவர், “ஹே, சி..ரி..நி, ஆ யூ நாட் ஜாய்னிங் அஸ்?” என்று கேட்டார்.

    இந்தக் கேள்வியே எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. வழக்கமாக விருந்து முடியும் வரை நான் வெளியேதான் காத்திருப்பேன்.

    “நோ சார். ஐயாம் ஈட் ஹோம்.” என்று எதோ எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உளறினேன்.

    “நோ நோ! ப்ளீஸ் கம்! பேபு, ப்ளீஸ் ஆஸ்க் ஹிம் டு ஜாயின் அஸ்!”

    “ஸ்ரீனி, வாங்க. ப்ளீஸ். கஸ்டமர்ஸ் தப்பா நினைப்பாங்க!” என்று பாபு சார் வற்புறுத்தியதின் பேரில் அவர்களோடு விருந்திற்குச் சென்றேன்.

    என் வாழ்க்கையிலேயே அத்தனை உணவு வகைகளை நான் பார்த்ததே இல்லை. எங்களுடைய நீண்ட மேசையில், கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து பேர் அமர்ந்து இருந்தனர். எல்லோருமே குதூகலத்துடன் உணவுவகைகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டும், அலுவலகத்தில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைப் பற்றி உரையாடிக்கொண்டும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அந்த அணியில் நிறைய பேரை எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும், அந்தச் சூழல் எனக்கு புதியது என்பதால் அங்கு அமர்வதற்கே சிறிது வெட்கமாக இருந்தது.

    அதிலும் இந்த மேசைக்கரண்டியையும், முள்கரண்டியையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ? முதலில் தட்டிலிருக்கும் உணவுக்கும் கரண்டிகளுக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம்; பிறகு, அதை வாயில் திணிப்பதற்கு ஒரு பகீரதப் பிரயத்தனம் என்று எனக்கு  எப்போதுதான் விருந்து முடியுமோ என்றாகி விட்டது.

    அத்தனை பெயர் தெரியா உணவு வகைகள் விதம் விதமாய் இருந்தாலும், எதையுமே திருப்தியாக ரசித்து ருசித்து உண்ண முடியவில்லை. எந்த வகையான உணவிற்கு எந்தக் கரண்டி, எதை வலது கையில் பிடிப்பது, எதை இடது கையில் பிடிப்பது என்று அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிடுவதற்குள் போதுமென்றாகி விட்டது. வெளியே எழுந்து சென்றால் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்கிற பயம் வேறு இருந்ததால் தட்டையே குனிந்து பார்த்துக்கொண்டு, மெதுவாக உணவருந்திக் கொண்டிருந்தேன். இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும், கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவது எனது தாயையும் தங்கையையும் அழைத்து வந்து இத்தனை உணவு வகைகளையும் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது.

    ஒரு வழியாக விருந்து முடிந்தது. அனைவரது தட்டிலும் உணவு வகைகள் தொட்டும் தொடாமலும் இன்னும் நிறைய மீதமிருந்தது. பஃபே முறையில் அளவில்லா உணவு என்பதால் வீணடிப்பதில் தவறில்லை போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டே வெளியே செல்ல நினைத்த போது, என்னுடைய புதிய வெள்ளைக்கார நண்பர்கள் சிரித்துக்கொண்டே என்னிடம் வந்து மீண்டும் கைகுலுக்கினார்கள்.

    இதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது. என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களே இதுநாள் வரை  என்னிடம் கைகுலுக்கியெல்லாம் நட்பாகப் பேசியதில்லை. அவர்களிடம் மறுநாள் காலை எட்டு மணிக்கு வருவதாய் சொல்லி விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.

    பாபு சார் என்னிடம் வந்து, “ஸ்ரீனி, இந்தாங்க ரெசிட். தென், அந்த கேர்ல்ஸ பத்திரமா வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!” என்று கூறிவிட்டு ஒரு கவரைத் தந்தார்.

    அதை வாங்கி காரில் வைத்துவிட்டு, அந்த மூன்று பெண்களையும் சென்னை நகரின் ஒவ்வொரு மூலையில் இருந்த அவர்களின் வீடுகளில் பாதுகாப்பாய் விட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்த போது மணி பதினொன்று.

    காரிலிருந்து கீழே இறங்கும் போது அந்த வெள்ளைக் கவர் தென்பட்டது. நான் அலுவலகக் கவர்களை என்றுமே பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆனால், என் தாயையும் தங்கையையும் அது போன்ற விருந்திற்கு ஒருநாள் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஆதங்கம் மேலெழுந்ததால் பிரித்துப்  பார்த்தேன்.

    அதிர்ந்தே போனேன்.

    மொத்தச் செலவு 41000 ரூபாய் என்று இருந்தது. இருபத்தைந்து பேரின் இரவு உணவிற்கு நாற்பத்தியோராயிரமா??? நமக்கெதற்கு இதெல்லாம்? என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்துச் செல்லவேண்டும் என்கிற கனவை அந்தக்கணமே தகர்த்து எறிந்துவிட்டேன்.

    அந்நேரத்திற்கு பேருந்து எதுவும் கிடைக்காததால், நடந்தே கிட்டத்தட்ட கிண்டிவரைச் சென்று விட்டேன். அங்கே எதிர்பட்ட ஷேர் ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி போரூர் வரைக்கும் அதில் சென்று, மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். இது ஒன்றும் எனக்குப் புதிதில்லை. நள்ளிரவில் போரூர் ஏரியை பார்த்துக் கொண்டே நடப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம்.

    சில நிமிட நடையில் என் வீட்டுத் தெருமுனையைச் சென்றடைந்த போது, அங்கு வழக்கமான நாய் குரைப்புகளோடு சேர்ந்து ஒருவித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது.

    அந்த இருட்டில் என் வீடு மங்கலாகத் தெரிந்தது.

    ஆனால்….

    அங்கு ஏன் அவ்வளவு கூட்டம்?

    நெஞ்சம் படபடத்தது. எனக்கு என்னவோ தவறாகப் பட்டது. இன்னும் அருகே சென்றபோது அங்கே ஒலித்துக்கொண்டிருந்த அழுகுரல்கள் மெள்ள மெள்ள என் காதுகளை வந்து நிரப்ப, என் இதயத்தில் கனம் ஏறிக்கொண்டிருப்பதை உணர முடிந்தது. என் கால்கள் உதறல் எடுக்க ஆரம்பித்து, எனது நடைச் சிறிது சிறிதாய் தளர்ந்தது.

    “அதோ சீனி வந்துட்டான்…..” என்று என்னைக் கண்டவுடன் என் நண்பன் துரை உரக்கக் கத்தினான்.

    அடுத்த நிமிடமே, உள்ளேயிருந்த என் தாய் தலைவிரிக் கோலத்தோடு, தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டும், “டேய்ய்ய்ய்ய் சீனி……..,” என்று கதறிக்கொண்டும் என்னருகே ஓடிவந்து என் சட்டையைப் பிடித்து இரு கன்னங்களிலும் அறைந்துவிட்டு, “எங்கடா போய்த் தொலைஞ்சே? எங்க போயி தொலைஞ்சே? செல்வி நம்மள விட்டுட்டு போய்ட்டா டா சீனீ….! அய்யோ! நான் இப்போ என்னடா பண்ணுவேன்?” என்று அவள் கதறி ஓலமிட்ட அந்த நொடி, என் இதயம் தடதடதடவென்று அதிர்ந்து கொண்டிருந்தது.

    எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது என்று கேட்கவும் வாயெழவில்லை. வீட்டிற்குச் சென்று என் தங்கையைப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை. என் மனம் உறைந்து போயிருந்தது. அப்படியே பிரமைப் பிடித்தவன் போல துரைமீது சாய்ந்து கிடந்தேன்.

    “எம் பொண்ண நானே கொன்னுட்டேன். நானே கொன்னுட்டேன்.” என்ற என் தாயின் கதறல்கள் என் நெஞ்சைத் தைத்துக்கொண்டே இருக்க, துரை சொல்லிக்கொண்டிருந்த எல்லா விஷயங்களும் மெல்லியதாக என் செவிகளுக்குள் சென்று கொண்டிருந்தது.

    “பீஸ் கட்டாட்டி காலேஜுக்கு வராதேனு சொல்லிட்டாங்களாம் டா பாவிப்பசங்க. வகுப்பறைல இவ பேர மட்டும் படிச்சாங்களாம். சாயங்காலம் ரொம்ப அழுதிருக்கா. அம்மா சும்மா இல்லாம, கன்னா பின்னானு திட்டிட்டு, வேலை பாக்கற எடத்துல பணம் கேக்க போனாளாம். வர்றதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிடிச்சி போல. அதுக்குள்ற மருந்து நெறைய குடிச்சிட்டா டா. இவள என்ன பண்ண? உனக்கு போன் பண்ணோம். சுட்ச் ஆபுல இருந்துச்சி. வேற யாரு நம்பரும் தெரில. ராமச்சந்திரா ஆஸ்பிடலுக்குப் போறதுக்குள்றயே போய்ட்டா டா.” என்று மெதுவாகக் கூறிவிட்டு, “இந்தா அவ எழுதன லெட்டர்.”

    நடுநடுங்கிக்கொண்டிருந்த என் கைகளில் அந்தக் கடிதத்தைத் திணித்தான் துரை. மெதுவாக அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன்.

    “அன்புள்ள அண்ணா, தன்னலமில்லாமல் இதுவரை நீ செய்த…….” – வாசிக்க ஆரம்பித்த போதே மூச்சு த் திணறியது. அதற்கு மேல் படிக்கத் தோன்றவில்லை. கடிதத்தோடு வேறொரு தாளும் இருந்தது. அதில் அவளுடைய அந்த வருட கல்லூரி கல்வி கட்டண விவரங்கள் இருந்தன.

    அந்த வருட மொத்த கல்லூரி கட்டணம் –

    41000 ரூபாய்.

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமண சமயமும், சமண சமய பொது அறங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற பகுப்புமுறையில்  அமைந்துள்ள சமண சமயம் சார்ந்த காப்பியங்கள் சமணசமய ஆளுமையைத் தமிழிலக்கியப் பரப்பில் வெளிப்படுத்துவனவாகும். சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம் என்பது அதனுள் இடம்பெறும் சமண சமயச் செய்திகள், சமண சமயப் பாத்திரங்கள் ஆகியவற்றால் உணரத்தக்கதாக உள்ளது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசெல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயததைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும். இவர்களின் பயணத்தின்போது சந்திக்கின்ற அறவாணர் சமண சமயம் சார்ந்தவர். அவரின் நல்மொழிகளுடன் தங்கள் பயணத்தை அவர்கள் தொடருகின்றார்கள். இவைபோன்ற பற்பல செய்திகள் சமணசமயத்தின் ஆளுமைப்பரவல் சிலப்பதிகார காலத்தில் இருந்தமையைத் தெரிவிக்கின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை உணர்த்தும்  பல அகச்சான்றுகளும் இக்காப்பியத்துள் உண்டு. சமண சமயத்தின் சிறப்புக் கூறுகளும், பொதுமைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் உணர்த்தும் சமண சமயம் சார்ந்த செய்திகளையும் அச்சமயம் உணர்த்தும் பொது அறங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

    புகார் நகரமும் சமண சமயமும்

    காவிரிப்பூம்பட்டிணம் என்றழைக்கப்பெறும் பூம்புகார் நகரத்தில் பல் தெய்வக் கோயில்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றோடு சமண சமய வழிபாட்டு இடங்களும் அமைந்திருந்தன.

    அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை
    மெய்வகை உணர்நத விழுமியோர் குழீஇய
    ஐவகை நின்ற அருகத்தானத்துச்
    சந்திஐந்தும் தம்முடன் கூடி
    வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
    பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
    நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்  
    சாரணர் வரூஉம் தகுதியுண்டாமென
    உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
    இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு (நாடுகாண் காதை 16-25)

    என்ற பாடலடிகள் புகார் நகரத்தில் இருந்த சமண இருக்கைகளைப் பற்றி விவரிக்கின்றன. புகாரில் மூவகையான சமண இருப்பிடங்கள் இருந்துள்ளன. அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் என்பன அவையாகும்.

    அருகத்தானம்

    புகார் நகரில் அருகத்தானம் என்ற இடம் சமண சமய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. இங்கு புலால் உண்ணாமலும், பொய்கூறாமை என்ற விரதத்தை மேற்கொண்டும், இவற்றோடு துன்பம் நீக்குவதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், அடங்கிய கொள்கை உடையவர்கள் இருக்கும் இடம் அருகத்தானம் ஆகும். இது ஸ்ரீகோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது.

    பெருமன்றம்

    இத்தானத்தை அடுத்துப் பெருமன்றம் என்ற பகுதி அமைந்திருந்தது. ஐவகைப் பட்ட சந்திகள் ஒன்று கூடும் மன்றமாக அது விளங்கியது. ஐந்து சந்திகள் என்பது பஞ்ர பரமேட்டிகள் என்றழைக்கப் பெறும் ஐவகைச் சான்றோர்களைக் குறிக்கும்.  அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற அவ்வைவரும் இம்மன்றத்தில் ஒன்று  கூடியிருந்தனர். சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் அவர்கள் அம்மன்றத்தில் உறைந்தனர்.

    சிலாவட்டம்

    இவ்வருகத்தானத்தில் பல்வகை விழாக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றுள்ளன. பொன்போன்ற பூக்களைத் தரும் அசோகமரத்தின் நிழலில் இருந்த அருகப் பெருமானின் உருவத்திற்கு அவ்வருகப்பெருமானின் அபிடேகத்திருநாளில் ஒரு பெருவிழா நடந்துள்ளது. அவருக்குத் தேர்த்திருவிழா ஒன்றும் நடைபெற்றுள்ளது. இவ்விழாக்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சாரணர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அறக்கருத்துகளை உணர்த்துவதற்கு அமைக்கப் பெற்ற  மேடை போன்ற இடம் சிலாவட்டம் ஆகும். பத்துப்பாட்டில் சிலாவட்டம் என்றால் சந்தனம் அரைக்கும்இடம் என்று பொருள். சந்தனம் அரைக்கும் இடத்தில் இருந்த மணமும், குளிர்ச்சியும் நிரம்பிய இடமாக இவ்விடம் இருந்திருந்த காரணத்தால் இதனையும் சிலாவட்டம் என அழைத்துள்ளனர்.

    கோயில், மன்றம், மேடை போன்ற பல்வேறு அமைப்புகளைப் புகார் நகர அருகன் கோயில் கொண்டிருந்தது என்பதை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

    கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தினர்

    கோவலனும் கண்ணகியும் சமண சமயம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

    கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் முதன் முறையாகக் காணுகின்றார். அவர்கள் திசையறியாது மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சூழலில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

    ‘‘உருவும் குலனும் உயர்பேர்ஒழுக்கமும்

                                     பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

                                    உடையீர் என்னோ உறுகணாளரின்

                                    கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறென’ ( நாடுகாண்காதை, 46-49)

    என்ற இப்பாடலடிகளில் பயின்று வந்துள்ள “பெருமகன் திருமொழி பிறழா நோன்பு” என்ற குறிப்பு சமண மதத்தில் இருந்துப் பிரியாத  கொள்கை உடையர்கள் கோவலனும் கண்ணகியும் என்பதை உணர்த்தி நிற்கின்து. கவுந்தியடிகள் கேட்ட இக்கேள்விக்கு ‘‘உரையாட்டில்லை உறுதவத்தீர்’என்று பதில் சொல்லாதுத் தவிர்க்கிறான் கோவலன்.

    கவுந்தியடிகள்

    கவுந்தியடிகள் மதுரை வருவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகின்றார்.

    ‘‘அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத்

                                    தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு

                                    ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்

                                    போதுவல்யானும் போதுமின் ‘ (நாடுகாண் காதை, 57-60)

    மதுரைக்குச் சென்று அங்குள்ள அருகதேவனை வணங்குவதைத் தன் விருப்பமாகக் கொண்டவர் கவுந்தியடிகள் ஆவார். இதன் காரணமாக மதுரைவரை சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இருந்துள்ளது என்பதைச் சிலப்பதிகாரத்தின் வழி அறியமுடிகின்றது.

    திருவரங்கத்தில் சமணம்

    புகாரிலிருந்து நடந்து வந்த இம்மூவரும் அரங்கம் என்ற திருவரங்கத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு ஒரு சாரணரைச் சந்திக்கின்றனர். திருவரங்கத்திலும் அந்தக் காலத்தில் சமண சமயம் பரவியிருந்ததை இதன்வழி அறியமுடிகின்றது. இச்சாரணர் ஆங்காங்குத் தோன்றி அறக்கருத்துகளை எடுத்துரைப்பவர் ஆவார். முன்னர் பட்டினப்பாக்கம் என்ற புகாரின் நகரப்பகுதியில் சமயவுரையாற்றிய இவர் தற்போது அரங்கத்தி;ல் இம்மூவரும் கேட்க அறவுரை பகர்கின்றார்.

    அருகப் பெருமானின் இயல்புகள்

    சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான அருகப்பெருமானின் சிறப்பியல்புகளைச் சாரணர் இவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

    ‘‘அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்

                     செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்

                    தரும முதல்வன் தலைவன் தருமன்

                    பொருளன் புனிதன் புராணன் புலவன்

                    சினவரன் தேவன் சிவகதிநாயகன்

                    பரமன் குணவதன் பரத்திலொளியோன்

                    தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்

                    சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி

                    இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்

                    குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்

                    சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்            

                    அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி

                    பண்ணவன் எண்குணன் பரத்தில் பழம்பொருள்

                    விண்ணவன் வேத முதல்வன் விளங்குஒளி

                    ஓதிய வேதத் தொளியுறின் அல்லது

                    போதார் பிறவிப் பொதியறையோரென’ (நாடுகாண்காதை 176- 191)

    இப்பெருகிய அடிகள் அருகப் பெருமானை வாழ்த்துவனவாகும். அருகப் பெருமானின் வழியல்லது மற்றைவழி செல்லுவோர் பிறவிச் சிறையிலிருந்து விடைபெறமாட்டார்கள் என்று துணிகின்றது இப்பகுதி.

    சமண சமயக் கருத்துகளை, சமண சமயச் சான்றோர்களை நினைவு கூர்ந்த இந்தப் பகுதியைக் கேட்டு ஆனந்தமும், நெகிழ்வும் அடைகிறார் கவுந்தியடிகள். இப்பகுதி சமண சமயக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற பகுதியாக இளங்கோவடிகளுக்கு அமைந்துவிட்டது.

    வினையின் காரணமாக காப்பியத்தில் இனி சோகம் ததும்பிய காட்சிகள் வரப்போகின்றன என்பதை எடுத்துக்காட்டவும்,  அத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைப் பாத்திரங்களும் படிப்போரும் உணரவேண்டும் என்பதற்காக இவ்விடத்தில் சாரணர்காட்சியையும், அவரின்அறவுரையையும் அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.

    வினைக் கோட்பாடு

    சமண சமயத்தின் உயிர்க்கொள்கை என்பது வினைக்கோட்பாடு ஆகும். இவ்வினைக்கோட்பாடே சிலப்பதிகாரத்தின் படைப்புக் கொள்கைகளுள் ஒன்றான ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதலாக வெளிப்பட்டுள்ளது. சிலப்பத்திகாரத்தில் சாரணர் அறிவிக்கும் முதல் சமணசமயக் கொள்கை வினைக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகின்றது.

    ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை

                    இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி

                    ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா

                    கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன

                    ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)

    தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். இக்கருத்துகளைச் சாரணர் கோவலன் உள்ளிட்ட மூவரையும் கண்டவுடன் சொன்னதற்குக் காரணம் கோவலன் வினைவலிமை காரணமாக இறக்கப் போகிறான், அவனையிழந்து இவர்கள் தவிக்கப் போகிறார்கள் என்பதுதான். இந்த முன்னுணர்தல் இளங்கோவடிகளின் படைப்பாற்றலில் காணப்படும் சிறப்புக்கூறு ஆகும்.

    கோவலனின் இறப்பிற்குக் காரணம் அவன் செய்த முன்வினையேயாகும். கலிங்க நாட்டில் அரசனுக்கு உறுதுணை செய்யும் பரதன் என்பவனாகக் கோவலன் முற்பிறவியில் பிறந்திருந்தான். அவன் சங்கமன் என்னும் வணிகனை வஞ்சகத்தால் அரசனிடம் காட்டிக் கொடுத்துக் கொலைப்பட வைத்தான். அவனின் மனைவி நீலி இவ்வஞ்சனை செய்தவர்கள் ‘எம்முறு துயரம் செய்தோர் இயாவதும் தம்முறு துயரமிற்றாகுக வென்றே’  என்று உரைத்ததன் வாயிலாக இப்பிறவியில் கோவலன் வணிகனாகப் பிறந்து முன்வினைப்பயனை நுகர்ந்தான்  என்ற தொடர்வும் வினைப்பயன் என்ற சமண உயிர்க்கொள்கையின் விரிவாகும்.

    காமநீக்கம்

    சமணத்தின் மற்றொரு தலையாய கொள்கை காமநீக்கம் ஆகும். இல்லறத்தாரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறுவது முக்தி என்பது இச்சமயக் கருத்தாகும்.  இதனைக் கவுந்தியடிகள் கோவலனுக்கு விளக்குகின்றார்.

       ‘‘வல்வினை ஊட்டுமென்று

                    அறத்துறை மாக்கள் திறத்;திற் சாற்றி

                    நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்

                    யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்

                    தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்

                    பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்

                    ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை

                    கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

                    பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்

                    உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்

                    புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது

                    ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை

                    பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்

                    கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்

                    கண்டனராகிக் கடவுளர் வரைந்த

                    காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு

                    ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்

                    இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)

    என்ற இந்தப் பகுதி காம நீக்கம் என்ற கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது. இப்பகுதி காம நீக்கம் என்ற சமணக் கொள்கையின் வெளிப்பாடாகும்.

    இவ்வாறு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஆங்காங்கே வலியுறுத்தி வந்த இளங்கோவடிகள் பொது அறங்களைக் காப்பிய நிறைவில் உணர்த்துகின்றார். சமண சமயம் சார்ந்தவர்களுக்கும், சாராதவர்களுக்கும் பொதுவான அறங்கள் இவ்வகையில் இளங்கோவடிகளால்  எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

    பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

                    தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

                    பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்

                    ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

                    தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்

                    செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்

                    பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

                    அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்

                    பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

                    பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

                    அறமனை காமின் அல்லவை கடிமின்

                    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

                    வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்

                    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

                    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

                    செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

                    மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தரு காதை 186- 202)

    என்ற இவை சமண மதச் சார்புடைய ஆனால் பொதுவான அறங்களை எடுத்துரைக்கும் இளங்கோவடிகளின் கவிதையாகும். இதனுள் சொல்லப்பெற்றுள்ள அத்தனை அறங்களும் எளிய மக்களும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். இவற்றைக் காப்பிய நிறைவில் அளிப்பதன் வாயிலாக சமணமதத்தைச் சார்ந்த காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்கினாலும் சமயப் பொதுமை, சமுதாயப் பொதுமையை வேண்டிப் படைக்கப் பெற்றுள்ளது என்பது உறுதி.

    Share
  • இதயக்கோயிலைக் காப்போம்!

    மேகலா இராமமூர்த்தி

    ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவையார். இத்துணை சிறப்பு வாய்ந்த இம்மானிடப் பிறவியிலே மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் தனித்தன்மை வாய்ந்தது; எந்த உறுப்பின் பணியையும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாதெனினும் அனைத்திலும் மேலாக நாம் எண்ணுவது நம் மூளையையும், இதயத்தையுமே அல்லவா? அதிலும் ’இதயம்’ என்ற சொல்லைத்தானே நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடிப் பயன்படுத்துகின்றோம்.

    இரக்கமில்லாதவனை “இதயமில்லாதவன்” என்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தவர்களை “இதய தெய்வம்” என்கின்றோம். ஆனால் நாம் இங்கே பேசப்போவது இதயத்திற்குப் பிடித்தமானவர்களைப் பற்றியோ அல்லது இதயமில்லாத நபர்களைப் பற்றியோ அல்ல, இதயத்தைப் பற்றியே.

    சமீபத்தில் உலக சுகாதார அமைப்பானது (World Health Organization) வெளியிட்ட அறிக்கையில், வரும் 2020-இல் இந்தியாவில் அதிகப்படியான மரணங்கள் இதயநோய்களினாலேயே (cardiovascular diseases) ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகவே இதயத்தைப் பற்றியும், அதனைப் பீடிக்கின்ற பல்வேறு நோய்களைப் பற்றியும், அவற்றைத் தவிர்ப்பதற்கு செய்யவேண்டுவன பற்றியும் நாமிங்கே சிந்திக்க இருக்கின்றோம்.

    முதலில் இதயத்தின் அமைப்பையும், அது செய்கின்ற பணிகள் குறித்தும் சுருங்கப் பார்ப்போம்.

    ஓர் பேரிக்காய் வடிவில் (pear-shaped) நம் கையளவினும் சற்றே பெரிய அளவுள்ள நம் இதயம் கிட்டத்தட்ட ஒரு பவுண்டு கனமுடையது. நம் உடல் முழுவதற்கும் தேவையான இரத்தவோட்டத்தைத் தருவதே (blood circulation) இதயத்தின் தலையாய பணி எனலாம். சாதாரணமாக ஒரு நோயற்ற மனித இதயம் நிமிடத்திற்குத் தோராயமாக 72 முறைகள் துடிக்கின்றது (heartbeat) எனலாம்.

    இதயம் நான்கு அறைகளைக் (four chambers) கொண்டுள்ளது. மேலுள்ள இரண்டு அறைகள் ஏட்ரியா (atria) அல்லது ஆரிக்கிள்கள் (auricles) எனவும், கீழுள்ள இரண்டு அறைகள் வென்ட்ரிகிள்கள் (ventricles) எனவும் அழைக்கப்படுகின்றன. அசுத்த இரத்தமானது (deoxygenated blood) உடலின் பிற பகுதிகளிலிருந்து சிரைகள் வாயிலாக (superior vena cava, inferior vena cava) இதயத்திலுள்ள வலது ஆரிக்கிளை வந்தடைகின்றது. பின்பு வலது வென்ட்ரிக்கிளை அடைந்து அங்கிருந்து நுரையீரலுக்குச் சென்று உயிர்க்காற்றைப் (oxygen) பெற்றுச் சுத்த இரத்தமாக மாறிப் பிறகு இடது ஆரிக்கிளை அடைகின்றது. அங்கிருந்து இடது வென்ட்ரிகிளுக்குச் செல்கின்றது. பின்பு உயிர்க்காற்று நிறைந்த சுத்த இரத்தத்தை மகாதமனியின் (aorta) வழியாக உடலின் பிற பாகங்களுக்குச் செலுத்தி உடலுக்குத் தேவையான சத்துக்களை (nutrients) வழங்கிக் கழிவுப் பொருள்களை வெளியேற்ற உதவுகின்றது.

    செப்டம் (septum) என்று சொல்லப்படுகின்ற சுவர் இதயத்தின் வலது பக்கத்தையும், இடது பக்கத்தையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதயத்தின் சுவர் மூன்றடுக்குகளால் ஆனது. அவை முறையே வெளியடுக்கு (epicardium), மையஅடுக்கு (myocardium) மற்றும் உள்ளடுக்கு (endocardium) ஆகியன.

    இனி, இதயத்தைத் தாக்குகின்ற பல்வேறு நோய்களைப் பற்றிப் பார்ப்போம். இதயநோய் என்றாலே பொதுவாக நம் நினைவுக்கு வருவது மாரடைப்பு (heart attack) மட்டுமே ஆகும். ஆனால் அதைத் தவிரவும் பல நோய்கள் இதயத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கின்றன. அவற்றில் சிலவற்றை அறிந்து கொள்வோம்.

    முதலாவது, இதயத் தசைகளுக்குச் சுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் (coronary arteries) ஏற்படுகின்ற அடைப்புக்களினால் வரும் இதயநோய் (coronary artery disease). உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு (bad cholesterol) இத்தமனிகளில் படியும்போது  அவை அடைப்பை (plaque) ஏற்படுத்தி இந்த இரத்தக் குழாய்களின் அளவைக் குறுக்கி விடுகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைகின்றது. இதயத்தின் இயல்பான வேலைத்திறன் தடைப்படுகின்றது. இரத்தவோட்டம் தடைப்படுவதினால் இதயத்தில் வலி (angina), மூச்சுத் திணறல் (shortness of breath) ஆகியவை ஏற்படுகின்றன. இரத்தவோட்டம் முற்றிலும் தடைப்படும்போது மாரடைப்பு (heart attack) ஏற்படுகின்றது.

    மாரடைப்பிற்கான 5 முக்கிய அறிகுறிகள்:

    1. தாடை, கழுத்து மற்றும் முதுகுப்பகுதியில் ஏற்படுகின்ற வலி (jaw, neck and back pain), அசௌகரியம் (discomfort) முதலியன.
    2. தலைசுற்றல் (lightheadedness), மயக்கம் (dizziness) மற்றும் உடல் பலவீனம் (fatigue).
    3. நெஞ்சுவலி (angina) அல்லது நெஞ்சில் ஏற்படும் அசௌகரியம்.
    4. கைகளிலோ, தோளிலோ ஏற்படும் வலி (arms and shoulder pain) அல்லது அசௌகரியம்.
    5. மூச்சுத்திணறல் (shortness of breath), வியர்த்துக் கொட்டுதல் (sweating) முதலியன.

    இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் விரைவில் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

    இரண்டாவது, இதயத் தசைகளின் மாறுபாட்டால் ஏற்படுகின்ற நோய் (cardiomyopathy). இந்நோய் இதயத் தசைகளை பலவீனப்படுத்தவோ (muscle weakness) அல்லது பெரிதாக்கவோ (muscle enlargement) செய்கின்றது. இந்நோயினால் இதயம் சுருங்கி விரிவதிலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை அனுப்புவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது பரம்பரை நோயாகவோ, ஏற்கனவே ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவோ வரலாம். கிருமித்தொற்றுக்களினால் (infection) கூட இந்நோய் ஏற்படக்கூடும். இந்நோயின் விளைவாக இதயம் முற்றிலும் செயலிழந்து போகும் அபாய நிலை ஏற்படும். அது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் ஐயமில்லை.

    இதன் அறிகுறிகள்:

    1. வேலை செய்யும்போது மூர்ச்சையடைதல் (breathlessness); சில சமயங்களில் ஓய்வாக இருக்கும்போது கூட மூர்ச்சையடைய வாய்ப்புண்டு.
    2. கால்கள், கணுக்கால்கள், பாதங்கள் ஆகியவற்றில் வீக்கம் (swelling).
    3. நீர்கோர்த்துக் கொள்ளுவதால் ஏற்படும் வயிற்று உப்புசம் (bloating of the abdomen).
    4. விரைவான, தாறுமாறான இதயத்துடிப்பு (rapid, pounding and fluttering heartbeat).
    5. அயர்ச்சி, தலைசுற்றல், மயக்கமடைதல் (fatigue, lightheadedness, fainting).

    இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை உடனே நாடுதல் நலம்.

    அடுத்ததாகக் கருத்தில் கொள்ளவேண்டிய இதயநோய் இயல்புக்கு மாறான ஒழுங்கற்ற இதயத்துடிப்பு (arrhythmia). இந்நோயினால் இதயத்தின் துடிப்பு இயல்பைவிட அதிகமாகவோ (tachycardia) அல்லது குறைவாகவோ (bradycardia) இருக்கக் கூடும். மேலும் இந்நோயினால் இதயவலி, மூச்சுத்திணறல், தலைசுற்றல், மயக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு. இந்நோய் உடனடியான ஆபத்து எதனையும் பொதுவாக விளைவிப்பது இல்லை. எனினும், இது போன்ற மிக விரைவான அல்லது மிக மெதுவான இதயத் துடிப்பு திடீரென்றோ அல்லது அடிக்கடியோ ஏற்பட்டால் உடனடியாய் மருத்துவ ஆலோசனை பெறுவது இன்றியமையாதது.

    மற்றொன்று, இதயத்தைச் சுற்றியிருக்கின்ற உறையில் ஏற்படுகின்ற அழற்சி (pericarditis). இது பொதுவாக கிருமித் தொற்றுக்களினாலோ (cardiac infection), இதய அறுவை சிகிச்சைகளுக்கு பிறகோ, அல்லது புற்றுநோய் போன்றவற்றினாலோ இதயத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது.

    இவை தவிர, பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயக் கோளாறுகள் (congenital heart defects) இன்னொரு பக்கம். இந்நோய்கள் பிறந்த குழந்தைகளையும், வளரிளம் பருவத்தினரையும், இளைஞர்களையும் கூடத் தாக்கக் கூடியது.

    மரபணுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அவற்றின் இயல்புக்கு மாறான தன்மை (genetic changes, chromosomal abnormalities) ஆகியவையே இத்தகைய நோய்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். இதன் அறிகுறிகளாக தோல் நீலநிறத்தில் இருத்தல் (cyanosis), விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலோ ஈடுபடும்போது எளிதில் களைத்துப் போதல், மூச்சுத்திணறல் ஏற்படல், இதயத்தைச் சுற்றியும், நுரையீரலிலும் நீர்கோர்த்துக் கொள்ளுதல், கை, கால்கள் வீங்கிப்போதல் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

    இப்படிப் பலதரப்பட்ட இதயநோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிறவியிலேயே ஏற்படுகின்ற இதயநோய்களான (congenital heart defects) தவிர மற்றவகை இதயநோய்களை மனிதர்களாகிய நாம் மனது வைத்தால் பெருமளவில் தவிர்க்கலாம், தடுக்கலாம்.

    “எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

    அதிர வருவதோர் நோய்.” என்கிறார் திருவள்ளுவர். ஆகவே நோய்களை வருமுன்னர்க் காத்தலே சாலச் சிறந்தது.

    பொதுவாகவே நம்முடைய உணவுப்பழக்கம் நோயற்ற வாழ்வை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்றால் மிகையாகாது. மனிதனின் உடலுக்கு ஊறு விளைவிக்காத உணவை அளவோடு உண்டால் நோயற்ற வாழ்வைப் பெறலாம்.

    ”மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்

    ஊறுபா டில்லை உயிர்க்கு.” என்பது பொய்யாமொழி.

    ஆகவே உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை ஆகிய இரண்டையுமே கருத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்வது ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமாக இதயத்தைக் காக்க இதய மருத்துவர்கள் (cardiologists) கூறும் அறிவுரைகள் சில. இவற்றைப் பத்து கட்டளைகளாகவும் (Ten Commandments) எடுத்துக் கொள்ளலாம்.

    1. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), ஓட்ஸ், சோயாபீன்ஸ், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (fiber-rich food) ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    2. கொழுப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்வது நலம். குறிப்பாக உறை கொழுப்பு (saturated fat) என்று சொல்லப்படுகின்ற மிருகக் கொழுப்பு, முட்டை, மற்றும் எண்ணெய் வகைகளான தேங்காயெண்ணெய், பனையெண்ணெய் (palm oil) ஆகியவற்றை முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது நல்லது. மேற்குறிப்பிட்ட எண்ணெய்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணெயை (olive oil) உபயோகிக்கலாம்.

    Trans fat என்று சொல்லப்படுகின்ற கொழுப்பும் இதயத்திற்குத் தீங்கானதே. வறுத்த, பொரித்த (deep-fried food) உணவு வகைகள், ரொட்டிகள் (biscuits), கேக்குகள் (cakes) ஆகியவற்றில் இந்தக் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. எனவே இத்தகைய உணவுகளைக் கூடுமானவரைத் தவிர்த்திட வேண்டும்.

    1. நல்ல கொழுப்பாகக் கருதப்படும் omega-3 fatty acids நிறைந்த காய்கறிகளான கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கீரை வகைகள், பரங்கி விதைகள், பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி வகைகள், மற்றும் மீன், மீன்எண்ணெய் ஆகியவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டை (nuts) வகைகளான  பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் (walnuts), வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு கைப்பிடியளவு தினமும் உண்ணலாம்.
    2. உணவில் உப்பின் (sodium) அளவைக் குறைத்து உண்பது நன்மை பயக்கும்.
    3. உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம். அதற்கு வாரத்தில் 5 நாட்களேனும், 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.
    4. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களையும் (sugary drinks), சர்க்கரை நிறைந்த உணவுப் பண்டங்களையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
    5. சுய சுகாதாரத்தில் (personal hygiene) அதிகக் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகப் பற்களையும், ஈறுகளையும் சரியாகப் பேணவும், பராமரிக்கவும் வேண்டும். இதன்மூலம் இதயத்தில் ஏற்படுகின்ற பல்வேறு தொற்றுநோய்களைத் தவிர்க்க இயலும் என இதயநோய் மருத்துவர்கள் உறுதியளிக்கின்றனர்.
    6. மன அழுத்ததைக் குறைக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ற மூச்சுப் பயிற்சிகளையும், தியானம் போன்றவற்றையும் பழகுதல் நலம்.
    7. இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவற்றைக் கட்டாயம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
    8. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இருப்பின் அவை ’இதயத்தின் எதிரிகள்’ என்பதனை உணர்ந்து அவற்றிற்குப் ’பிரியாவிடை’ கொடுத்துவிட வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளைத் தவறாது கடைப்பிடித்தாலே இதயநோய்களையும், உடலைத் தாக்கும் வேறுபல நோய்களையும் தவிர்க்கலாம். ஆன்றோர்களும், மருத்துவ அறிஞர்களும் கூறுகின்ற வழி நடப்போம். நம் இதயமென்ற கோயிலை நோய்களின் பிடியிலிருந்து காத்து நலமாய் வாழ்வோம்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.cdc.gov/heartdisease/coronary_ad.htm                  http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    தகவல்களுக்கு நன்றி:

    http://en.wikipedia.org/wiki/Human_heart

    http://en.wikipedia.org/wiki/Congenital_heart_defect

    http://www.emunix.emich.edu/~armstron/spmd201/anat06-08.pdf

    http://www.cdc.gov/heartdisease/other_conditions.htm

    http://health.nytimes.com/health/guides/disease/congenital-heart-disease/overview.html

    http://articles.timesofindia.indiatimes.com/2012-10-17/health/34523974_1_heart-diseases-diseases-study-chest-pain

    http://www.webmd.com/heart-disease/ss/slideshow-visual-guide-to-heart-disease

    Share
  • தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

    மோகன் குமார்

    டாடி ஒரு சந்தேகம்அ

    ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி ” டாடி ஒரு சந்தேகம்” ; ஒரு அப்பா – மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

    மகனாக – சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் ” டாடி ஒரு சந்தேகம்” என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

    உதாரணத்துக்கு  ஒன்று

    ” டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி “

    ” வேணாம்பா தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் “

    ” டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்-  புல் ஆனா, தியேட்டர்  புல் – னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?”

    இப்படி மொக்கை போட்டாலும் கூட சின்னப் பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

    பிளாஷ் பேக் – ஜோடிப் பொருத்தம்

    சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது ” ஜோடிப் பொருத்தம்”. ரெகோ  என்கிற பெயர் கொண்ட நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டிக் கொண்டு கணவன் – மனைவியை கேள்வி கேட்பார். வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது. ஒரு நேரத்தில்,  வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடந்த போது (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்தப் பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி  வழிந்தது.

    ரெகோ  கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ  என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

    இது மாதிரி நிகழ்ச்சிகள்  இப்போது எதோ ஒரு சின்ன டிவியில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

    சூப்பர் சிங்கர் -4

    மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா & புஷ்பவனம் குப்புசாமி இருந்தனர். ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள் யாரிடம் போய் பாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் 🙁

    மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

    டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை

    குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு  சற்று   கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில்  பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )

    முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று  செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா  போதும், போனை எடுத்து மத்த விபரங்களைக் கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரைப் பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும்

    இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர்  என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    Share
  • மறைந்தும் மறையாத மலர்மன்னன்

    ஜோதிர்லதா கிரிஜா

    எழுத்துலகத்து விடிவெள்ளியொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளிலிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆணம்க்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்ப்ட்டுச் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கும் போது என்க்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது, தெரியுமா?’  என்று உரிய நியாயத்துடன் தாம் எனக்கு எழுதிய கடிதத்தில் பெருமிதப் பட்டுக்கொண்டார். சீரியசிந்தனையும், சமுதாய் உணர்வும். மகாகவி பாரதியார் மீது ஆழ்ந்த பக்தியும். தனிச்சிறப்புக் கொண்ட் எழுத்துத் திறனும் வாய்க்கப்பெற்றிருந்த மனிதாபிமானி மலர்மன்னனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையன்று. அவரது மறைவு நெஞ்சில் ஒரு பள்ளம் விழுந்த உணர்வை உண்டாக்கியது

    Share
  • எழுத்தாளர் மலர் மன்னன் இறைவனடி சேர்ந்தார்

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மலர் மன்னன் அவர்கள், பிப்ரவரி 9 அன்று அதிகாலை 5 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து கவனித்து வந்த, எழுத்தாளர் தி.ஜ.ர. அவர்களின் பெயர்த்தி சத்தியபாமா, இதனைத் தொலைபேசியில் தெரிவித்தார். தன் மறைவுச் செய்தியை இறுதியாகச் சிலருக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் என் எண்ணும் இருந்தது.

    2003 முதலாக, அவர் தாடி வைப்பதற்கும் முன்பாகவே மலர் மன்னனுடன் எனக்கு நட்பு உண்டு. நான் அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது, அந்த இதழின் பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா, மலர் மன்னனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு மலர் மன்னன், நான் தயாரித்த பதிப்பகச் சிறப்பிதழில் உ.வே.சா. தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார். அவரின் ‘மலர்மன்னன் கதைகள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பினை அமுதசுரபி வெளியிட, அதற்கு நான் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அது, அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (அவருக்கு முன்னதாகவே அவரின் சகோதரர் சாம்ராட் என்ற பெயரில் எழுதும் அசோகனை நான் அறிவேன். என் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அநேக முறைகள், அமுதசுரபிக்காக எழுதியிருக்கிறார். மலர்மன்னனின் சகோதரி விஜயா சங்கரநாராயணனையும் நான் நன்கு அறிவேன். அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.)

    மலர் மன்னன், 26.5.2006 அன்று நட்பு நிமித்தம் என்னை டைடல் பூங்காவில் சந்தித்தார். பல தலைப்புகளில் சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட மலர் மன்னனைத் தமிழ் சிஃபியில் தொடர்ந்து எழுத அழைத்தேன். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மலர் மன்னனை அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறும் கேட்டுக்கொண்டேன். இசைந்தார். அதன் பிறகு அவர், பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரை அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டைடல் பூங்காவிற்கும் அழைத்து வந்தார். தமிழ் சிஃபியில் தமது பத்தியைத் தொடங்கினார். ஏராளமான கட்டுரைகள் மூலமாக, தமிழ் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சினார். வரலாறு, சம கால அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள், உலக நிகழ்வுகள்… என ஒவ்வொரு கட்டுரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தார்.

    மலர் மன்னனின் இயற்பெயர், சிவராம கிருஷ்ண அரவிந்தன். இவர், 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர். ‘மலையிலிருந்து வந்தவன்‘ என்ற நாவல் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இது, கி.பி.1800இன் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திச் சிறையிலேயே உயிர் துறந்த டார்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது; ‘கண் விழித்த கானகம்‘ என்ற தலைப்பில் அவரது சொந்தப் பதிப்பகத்தின் வாயிலாக மறுபதிப்பானது.

    ‘சிந்தனையாளர் நியெட்ஸே‘ என்ற நூலைப் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ளது. ‘தி.மு.க. உருவானது ஏன்?’, ‘ஆரிய சமாஜம்’, ‘திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்’ ஆகிய வரலாற்று நூல்களைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘வந்தே மாதரம் – எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம்’ என்ற நூலைத் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அடுத்து, கிலாபத் இயக்கம் தொடர்பான நூலை எழுதி வருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    மலர் மன்னன், அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். திராவிட அரசியலின் நேரடி சாட்சிகளுள் ஒருவர். அதே நேரம், இந்துத்துவ நிலைப்பாடு கொண்டவர். திண்ணை உள்பட பல தளங்களிலும் மலர் மன்னன் எழுதிய கட்டுரைகள், பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. மின்னிதழ்கள் மட்டுமின்றி, அச்சிதழ்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார்.

    மலர் மன்னனின் மறைவு, தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய, எங்கள் பிரார்த்தனைகள்.

    Share
  • தேவன் ஒரு சகாப்தம்

    திவாகர்

    தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.

    இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.

    தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும்  ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

    சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.

    தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).

    தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

    “ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)

    சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?

    (தொடர்வோம்)

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5

     

    தேமொழி

     

     

     
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி…
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்…
    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்…
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்…
    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…

    வரிகள்: கண்ணதாசன்

     

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4>>

    Share
  • வயோதிகருக்குமுண்டு வெறி

    நாராயண் சுவாமிநாதன்

    “என்ன போட்டிருக்கு பேப்பர்ல ” என்றான் கோபாலன்.

    “சேலத்துல எண்பது வயசுக் கிழவன்  எட்டு வயசுப் பெண்ணைக் கற்பழிச்சிட்டானாம்” என்றான் ரகுபதி.

    ” நாட்ல சட்டம் சரியில்ல. மைனர், மேஜர், மனித உரிமைன்னு தண்டிக்கத் தடை வருது. பெண்கள் கவர்ச்சி உடை, சினிமா குத்தாட்டம், கவர் ஸ்டோரி எல்லாம் காரணம். இவனுகளை தூக்ல போடணும். இல்லாட்டி வேதியியல்  முறையில வலிக்காம ஆண்மை நீக்கம் கூட..”

    “ஆமாண்டா. இவனுக கதறக் கதற கற்பழிப்பானுக..இவனுகளைப் பிடிச்சு தண்டனை கொடுக்கறச்சே மட்டும் நோவாம நுங்கெடுக்கணுமா. ஒரு அருவாளால..”

    “வெறிபிடிச்ச வெளி ஆளுகள் செய்யறதவிட,  வீட்லேயே சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க கூட தப்பு செய்யறாங்க. நம்ம வீட்டு வாசல்லயே நடக்கற ந்யூஸ் தெரியுமா உனக்கு ?”

    “இந்த வீட்டுலயா ? என்ன நடக்கறது ?”

    ” வாசல் திண்ணையில இருக்காறே கிழவரு…அவர் ஒரு ஜொள்ளுப் பேர்வழி. தெரியுமா”

    அவர்கள் குடியிருந்த அந்த வீட்டு  முன்னறையின் சன்னல் வழியாகப்  பார்த்தால்  வாசல் திண்ணையில ஒரு கிழவர் அமர்ந்திருப்பது தெரியும். அந்த  வீட்டு சொந்தக்காரரின் தகப்பனார் அவர். தினமும்  காலையிலும் மாலையிலும் தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் அவர்.

    ரகுபதியால் நம்ப முடியவில்லை.

    “பாவம் அவரைப் போயா ஜொள்ளு பேர்வழிங்கறே ?
    பேத்தாத. அவர் வயசென்ன..எழுவது எழுவத்தஞ்சுக்கு மேல இருக்காது ? தப்பாப் பேசாத…” என்று பொரிந்தான்.

    “பார்க்காம சொல்வனா..  மூணு நாளா வாட்ச் பண்றேன்”

    “என்ன பண்ணினாரு அப்படி ?”

    “ஒரு ஸ்கூல் பெண்ணுக்கு தூண்டில் போட்டு பிடிச்சிட்டாரு”

    “யார் அந்தப் பெண் ?”

    “இதே தெருல ரேவதின்னு ஹைஸ்கூல் பெண்ணு. பார்க்கத் தளதளன்னு இருக்கு.  இவரு கூப்பிட்டுப் பேசறாரு.  குழையறாரு. நான் கண்ணால பார்த்தேன்.
    அதுவும் விவரம் புரியாம இருக்கு”

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே கிழவர் தெருவை நோக்கி  “ரேவதி..ரேவதி இங்க வா” என்று அழைத்தார்.

    மினுக்கி குலுக்கி அந்தப் பெண் அவர் அருகில் வந்தாள்.

    ”கிட்ட வா” என்றழைத்து, அவள் கழுத்தை அணைத்தவாறே காதில் மெதுவாக  ஏதோ சொன்னார். ரகுபதிக்கு சரியாகப் புரியவில்லை. “மறக்காதே, அது ரொம்ப அவசியம் ” என்று சொன்னது கேட்டது.

    அவள் தலையசைத்து,  “சாயங்காலம் ஸ்கூல் விட்டவுடனே வந்திடவா ? ” என்றாள்.

    “வந்தா ஆறுமணிக்கு மேல வா. என் பிள்ளையும் மருமகளும் வெளிய போனப்பறமா வா. அவங்க  அஞ்சு  அஞ்சரைக்கு ஏதோ கல்யாண ரிசப்ஷன் போறாங்களாம். முன் ரூமில குடியிருக்கறவங்க ஏழு மணிக்கு மேலதான் வருவாங்க. நாம தனியா இருந்தா நமக்கு ஒரு தொந்திரவும் இருக்காது” என்று சொல்லி

     ” சொக்கும் விழிக்காரி  சொப்னசுந்தரி
      சொன்னது  தப்பாமல் வந்திரி “ என்று பாடினார்.

    ரேவதி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

    அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் தணிந்த குரலில் “பாத்தியா உன் கண்ணால. கிழத்துக்கு ஹார்மோன் பிரச்னை. அதான் அலையுது. ”அது” அவசியமா வேணுமாமே. எது ?ஆணுறையா? வெவரமான ஆளாத்தான் இருக்கு. தடயம் இல்லாம தப்பு செய்யப் பாக்குது”

    ரகுபதிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

    “இதைத் தொடர்ந்து கண்காணிக்கணும் கோபாலா..  இந்த மாதிரி ஜொள்ளு கிழத்தை எல்லாம் கேஸ்ட்ரேஷன்  பண்ணணும். என்ன  நடக்குதுன்னு இதை ரூம்லயே இருந்து கவனிக்கப்போறேன்.  நமக்கு என்னனு இல்லாம ஒரு சமூகப் பொறுப்போட நாம செயல்படணும்”
    என்று சூளுரைத்து சன்னல் கதவை லேசாக சார்த்தி வைத்தான்.

    “வம்புல மாட்டிக்காத. வாடகைக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. எனக்கு  ஆபீஸ்ல வேலை இருக்கு. என்ன நடக்கறதுன்னு பார்த்துச் சொல்லு” என்றான் கோபால்.

    சாயங்காலம் அஞ்சுமணி.

    “மாமா நாங்க திரும்பி வர ரெண்டு மணி ஆகும்.  மேஜையில அடை வார்த்து வெச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. கதவை சாத்தி வெச்சுங்கோ” என்று சொல்லிவிட்டு  கிழவரின் மருமகள் தன் கணவனோடு ஆட்டோவில்  ஏறிப் போனாள்.

    அவர்கள் போனதும் குஷியான கிழவர் ஒரு பாடலை  முணுமுணுத்தார்.

    “எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
    என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே “

    துள்ளுதோ ? வெட்டிப்போடறேன் என்று நினைத்துக் கொண்டான் அறையில் இருந்த ரகுபதி.

    சற்று நேரத்தில் ரேவதி வந்தாள்.

    மருளும் விழிகளால் சுற்று முற்றும் பார்த்தாள்.

    ” வா ரேவதி ,வா,  லைன் கிளியர்….. அவாள்ளாம் வெளிய போயாச்சு ” என்றார் கிழவர் பரபரப்புடன்.

    ரேவதி ஜாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறு சதுரமான பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க கிழவர் அதை மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்.

    அது என்ன என்று ரகுபதிக்கு அறையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

    பார்க்க ஆணுறை போலன்னா இருக்கு. அந்தப் பெண்ணே இதை எடுத்திட்டு வரதா. சே கேவலம்.  நாடு எங்க போயிட்டிருக்கு ? அந்த சின்னப் பொண்ணுதான் ஏதோ வயசுக் கோளாறு ஆர்வத்தில  வந்துட்டாலும், தாத்தன் வயசான இந்தக் கிழம் நல்ல வார்த்தை சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்ப வேணாம் ? வேலியே பயிரை மேஞ்சா…வெட்கக்கேடு.

    அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஏற்படுமுன் நிறுத்திடணும்.  நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கிழவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடணும் என்று  அறையிலிருந்து வெளியே வந்தான்.

    அவனைப் பார்த்ததுமே ரேவதி தெருவில் இறங்கி ஓடிவிட்டாள்.

    கிழவர் நடுங்கும் கரங்களால் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தார். கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து அதில் ஏதோ எடுத்தார்…பின்னர்…
    சர்..சர்.. என்று  தன் மூக்கில்  இழுத்தவுடன்  அருகே வந்த   ரகுபதியைப் பார்த்தார்.

    ஒரு அசட்டு சிரிப்புடன் ” ஆபீஸ்லேருந்து சீக்கிரமா வந்துட்டீங்களா? இந்த மூக்குப் பொடிப்பழக்கம் என்னால விட முடியல. என் மகனும் மருமகளும்  வாங்கித் தர மாட்டேங்கறா.. நான் பொடி போடறது அவங்களுக்குப் பிடிக்கல. நல்ல வேளையா மூணாம் வீட்டுப்பெண்  ரேவதிதான் வாங்கிட்டு வந்து
    கொடுத்துது. காசு கூட வாங்கிக்காம ஓடிப்போயிட்டுது.  இதை நீங்க எங்க வீட்ல யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம்” என்று சொல்லி, பொடிப் பாக்கெட்டை வேட்டியில் பத்திரமாய் முடிந்து கொண்டார்.

    பிறகு, மிகுந்த மனநிறைவுடன், ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா ரகுபதி ?” என்று கேட்டுவிட்டு,

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    என்று பாடிக் கொண்டே உள்ளே எழுந்து போனார்.

    =========

    என். சுவாமிநாதன்
    லாஸ் ஏஞ்சலஸ்

    Share
  • ஆத்மாவின் மொழி.!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    நிமிர்ந்த உன்னிடம் சரண் அடைந்து
    சொல்கிறேன் சக்தியும் சிவனும் நீ..!

    அழிக்காது உயிரைக் காப்போம் அன்பில்
    நீர் ஊற்றுவோம் வா..!

    பிறந்தது ஓரிடம் வளர்ந்தது வேறிடம்
    இறந்திடும் ஒன்று கூடி..!

    தலை நீயும் கால் நானுமாய்
    உலகை அளப்போம் சேர் !

    நித்தம் ஜெபிக்கும் எந்தன் மனம்
    நிந்தன் நாம மந்திரம்..!

    லட்சம் உருவைப் போற்றும் போதும்
    குறைந்த பட்சம் இது..!

    முன்னம் யாரோ…பின்னம் யாரோ…?
    இருப்பதில் மகிழ்ந்து விடு..!

    தயா…காருண்யம் சித்தம் கருணை
    பூரணம் பரி வாரணம்..!

    ஆனந்தம் ஆடும் மனது நோக்கினால்
    அழிவின்றி தொடரும் உடல்.

    அஞ்சும் உன்னோடு கரைந்து போகட்டும்
    நெஞ்சே நிமிர்ந்து நில்..!

    தீயாக என்னுள் நீயே தீயாக ஜோதி
    பொய்யென கரைத்தது காற்று..!

    வெட்டி மறையும் ஒளிக்கீற்று மின்னலாய்
    நமக்குள் அவனிட்ட  அன்பு..!

    பாராது பார்க்கும் பார்வை துரத்த
    வாராதது வந்தது பார்..!

    கதிரொளி ஈதென்று மனம் உரைத்திட
    அறிவொளி நீ யென்  கண் ..!

    வாழா திருந்த உடலே மனமே..
    சாகாது ஏகாந்தமாக இரு..!

    செல்லல், நிகழல், வகுதல் மூன்றினையும்
    கடக்கும் நமது மௌனம்..!

    சிறுபொறி பட்ட பஞ்சாக கனன்று
    சுடர் எழுவாய்த் தூயவளே…!

    உருமாறி  உடம்புமாறி மனதளவில் ஒற்று
    வருமாரி பருவமாறிப் பற்று..!

    நெற்றிக்கு நேரே நெற்றி முட்டி
    மூனக்கனல் முழுதும் ஏற்று..!

    ஸ ….நீ , ப…நீ..,ச….நீ..!
    என்னுள் ஸ்வர சங்கமம்…!

    கண்ணாடி முன்னில் நானின்று காணின்
    கண்டேன் உன்னாடும்  முகம்..!

    பஞ்சு மனம் பிஞ்சு மனம் பார்த்ததும்
    துஞ்சுவ தில்லை ஜெயம்..!

    தோன்றாத மலர்கள் தோன்றியதால் உன்னைச்
    சேராமலே வாடி விடும்..!

    விண்ணிறைத்த ஒளியே நின் கண்முன்
    திறந்ததோ என்னுள் விழி..!

    ஆதி ஜோதி நீ என்னுள் பாதி நீ
    சாரதியா யானேன் உனக்கு..

    உன்பால் அறியாத பந்தம் நெஞ்சத்தைத்
    தாகுவ தாகும் தவம்..!

    பற்றில்லை பற்றில்லை பற்றில்லை  என்றே
    பற்றினேன்  நின் பதத்தை..!

    அங்கி தரும் உடல் காப்பு போல்
    நெஞ்சம் காப்பதுன் நினைவு..!

    ஒன்றுள் ஒன்றாகி ஒடுங்கி விட்டால்
    வேறாகுமா ஒன்றும் பூஜ்ஜியமே..!

    அறிந்து கொண்டேன் நாட்டம் நட்டம்
    வருமா எழுந்து செல்..!

    மூலமும் முடிவும் ஒன்றான போது
    தேவை யொன்றும் இல..!

    வேறாகி நின்றாய் நேற்றில் என்னுள்
    வேராகிப் போனதுன் மனம்..!

    வாயுவாய்  வேகமாய் ஒளிக்குள் விழியாய்
    தேடுவாய் சேருவாய் செல்..!

    சிந்தை தெளிந்தும் விகாரம் அடங்கியும்
    தன்னைத் தெளிந்தோம் யாம்..!

    அடக்கத்தின் அரியணையில் அமர்ந்தாளும்  ஆறறிவே..
    எதுவும் தேவையில்லை உனக்கு.

    தன்னையே உணர்ந்து நான் காணும்
    மோஹனம்  நீயன்றி யாரிங்கு சொல்..!

    பெண்ணிவள் பெற்ற பயன் நோக்குங்கால்
    விண்ணாகி விரிந்தாய் வியப்பு..!

    சித்தம் கலங்கிட விரிந்தாய் என்னுள்
    மனக் குளத்தின் தாமரை நீ..!

    பாலுக்குள் மறைந்து காத்து நிற்கும்
    நெய் போல் ஆனதடி நம்முறவு..!

    எண்ணெய்  தீர்ந்தேன் உள்ளத்தின் எண்ணத்தில்
    தீயிட்டு எரித்தாய்த்  திரி..!

    பாரிதில் பரிதியைப் பார்த்ததால் இந்தப்
    பாரிஜாதம் பூத்தது பார்..!

    பெண்ணல்ல ஆணல்ல  திருநங்கையல்ல பேருமல்ல ..
    எனக்குள் யார் புகுந்தார் வியப்பே..!

    அனைத்துமாய் அனைத்திலும் அதிகமாய் அகத்தினை
    ஆழச்  சொரிந்தாய் ஆள் ..!

    உள்ளத்தின் ஓசைக்கு இசை சேர்த்த
    பாசக்கார பவித்ரமோ அன்பு..!

    நெஞ்சத்து நினைவுக்கு வாசமலர் போலானாய்
    மலராது வாடாது உதிராது நீ..!

    வீரிய விதையாய் விழுந்த நிலமாக
    மனத்துள் ஆணிவேராகக்  காலூன்றியாய்..!

    அகடம் விகடமாகி ஊடகச் காந்தமே
    பகடம் தகடாமுகோ சொல்..!

    சத்தியம் நித்தியம் சுகம்தரும் சுகந்தமாய்
    சாத்தியம் நீயும்  சத்தியம்..!

    இளைத்துவிட்ட ஜீவனுக்கு சாபல்ய வரமானாய்..
    மீண்டும் எதற்குப் பவம்..?

    இருசுடர் சிந்தித்தேன் இராப்பகல் ஒன்றாய்
    உட்புகுந்து ஜீவன் தந்தாய்..!

    கடலலை உள்ளத்தின் கலங்கரை விளக்கு நீ
    கலங்காத சிந்தையின்  பாவை விளக்கு..!

    வா…வா…என்றென்னை மனம் விரித்தழைத்த
    உந்தன் கருணையே பாயுமொளி..!

    மதிமுகம் மதியகம் மதியை மயக்கும்
    விதியிது வழியிது ஈசன் செயல் ..!

    தேடியே உள்ளே ஆதியின் அறிவாய்
    ஓடியே ஒளிந்து கொள்வாய்..!

    களைந்த பிறவிகள் பண்ணிய பயனாய்
    வந்திங்கு சேர்ந்து விட்டாய்..!

    கலையா தவத்தால் கலைந்தது  மோட்சம்
    உன்னைப் பெற்றது உணர்வு..!

    வீடெது வீடது விடாது வேண்டினேன்…
    வீடகம் உன்னுள்  கலந்து..!

    சப்த நாடிகள் சப்தம் அடங்க
    பூரகம் பொங்கிய உயிரே..!

    சுழுமுனையுள் தாமரை நூலாம் நாடியது
    என்னுயிரில்  உன் நினைவாம்..!

    ஆதித்தன் சிரிக்க இதழ் விரியும் மாமலராய்
    எனக்குள்  சிரிக்கும் முகம்..!

    நரம்போடு எலும்புமஜ்ஜை  தசையோடு பிசைந்து
    பொய்யில்லை நீ  நிஜம்..!

    வாயு ஓடும் வரையிலா நீளும் வாழ்வு
    அதையும் தாண்டி ஆயுமா சொல்..?

    நாடிகள் ஆயிரமாயிரம் ஒடுங்கால்  நம்மிடத்துள்
    நீ பத்துக்குள் சுழுமுனை எனக்கு.

    உச்சி முகர்ந்தென்னை பரிந்து கட்டு
    புதிதல்லவே நம்முள் உறவு..!

    பெற்றதும் உற்றதும் சுற்றதும் சூழ்ந்திங்கு
    கற்றுத் தந்தது காடு.

    படத்துக்கு நன்றி

    http://www.tumblr.com/tagged/7%20chakras

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (44)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நாம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிரோம், பேசுகிறோம், பழகுகிறோம் ஆனால் அவர்களில் அனைவருமே எமது மனங்களில் நிரந்தரமாகத் தங்குவார்கள் என்பது நிச்சயமல்ல.

    அதேசமயம் சிலபேரைச் சந்திப்பதில்லை தோலைபேசியில் பேசியோ அன்றிக் கடித, மின்னஞ்சல் தொடர்பு மூலமாகவோ அறிந்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் எமது மனங்களில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

    மற்றும் சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக அந்நிகழ்ச்சியின் நடத்துனர்களாகக் காண்கிறோம்.

    அவர்களில் சிலரும் எமது மன‌ங்களிலே தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    எனது பணியின் நிமித்தம்  ஜந்து வாரங்களுக்கு ஒருமுறை வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நான் பணிமனைக்குச் செல்ல வேண்டிவரும்/. அந்த ஞாயிறுகளைத் தவிர்ந்த மற்றைய ஞாயிறுகளில் வீட்டில் இருக்கும் தினங்கள் அனைத்திலும் நானும் என் மனைவியும் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் “ The Andrew Marr Show ” அன்ட்ரூ மார் ஷோ , இது ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியின் விஷேசமாக பத்திரிகைத் தலைப்புகளைப் பற்றியும், முக்கிய செய்திகளைப் பற்றியும் விவரமாக அலசுவதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சார்பான பத்திரிக்கைத் துறையினருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அன்ட்ரூ மார் (Andrew Marr)”  அவர்கள் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யமாக நடத்துவார்.

    அது தவிர அந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும்  அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு வித்தியாசமானவர்களுடனான நேர்காணல்கள் இடம்பெறும்.

    இந்த நேர்காணலை மிகவும் காரசாரமாக நடத்துவதில் அன்ட்ரூ மார் அவர்கள் அற்புத ஆற்றல் மிகுந்தவர். மக்களின் மனங்களிலே நீந்தும் முக்கிய்மான கேள்விகளை இவ்வரசியல்வாதிகளை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைத்து விடுவார்.

    இவரின் மற்றுமோர் தனிப்பட்ட திறமை, கேட்கப்படும் கேள்விகளைத் தமக்கேயுரிய சமயோசித புத்தியினால் தமக்கேற்றவாறு திசைதிருப்பி விட முனையும் அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப அக்கேள்விக்கே அழைத்து வந்து அவர்களின் திசைமாற்றும் போக்கை பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடும் தன்மையாகும்.

    இத்தகைய அற்புத ஆற்றல் மிக்க ஒரு ஊடகவியலாளரான அன்ட்ரூ மார் அவர்களின் வயது வெறும் 53 தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் “ஸ்ட்ரோக் (Stroke)”  எனப்படும் ஒருவகை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

    தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்களைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம், வானொலியில் எத்தனையோ அறிவிப்பாளர்களைக் கேட்டு ரசிக்கிறோம், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அருமையான எழுத்தாளர்களின் பல ஆக்கங்களைப் படித்து மகிழ்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை அன்ட்ரூ மார் அவர்களின் இச்சுகயீனச் செய்தி எம் மனதில் ஒருவகை சோகத்துடனான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    1959ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரில் பிறந்த இவர் தனது ஆங்கில மொழி பட்டப்படிப்பினை உலகப் பிரசித்தி பெற்ற “கேம்பிரிட்ஜ் (Cambridge)” பல்கலைக்கழத்தினில் பயின்று பட்டம் பெற்றார்.

    இவர் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

    இவரது பத்திரிக்கைத் துறையிலான ஊடகப்பிரவேசம் 1981ம் ஆண்டு ஸ்கொட்லாந்து பத்திரிக்கையான ” ஸ்கொட்ஸ் மான்(Scots Man)” எனும் பத்திரிக்கை வாயிலாக நிகழ்ந்தது. இப்பத்திரிக்கையின் வியாபார சம்பந்தமான செய்திகள் பிரிவில் ஒரு பயிற்சிபெறும் நிருபராகத்தான் இவரது ஊடகத்துறை பிரவேசம் ஆரம்பித்தது.

    “த இன்டிபென்டன்ட் (The Independant) ” பத்திரிகையினூடாக அரசியல் நிருபராக வளர்ச்சியடைந்த இவரின் ஊடகத்துறையின் மகுடமாக பி.பி.ஸி தொலைக்காட்சிச் சேவையின் செய்திப்பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியதே.

    தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பதவியினின்றும் விலகினார்.

    அதைத் தொடர்ந்து பி.பி.ஸி தொலைக்காட்சிக்காக பல தொடர்களைத் தாயரித்து தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றிலே குறிப்பிடப்படக்கூடியவை ,

    ” நவீன இங்கிலாந்தின் சரித்திரம் ( History of the modern Briton)”  , ” அன்ட்ரூ மாரின் உலகச் சரித்திரம் (Andrew Marrs History of the world”  என்பன ஆகும்.

    இவரின் நேர்காணல்களில் பெயர் பெற்றதாக 2004ம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவர்களுடனான நேர்காணலில் நான்காவது முறை பிரதமராகத் தான் வரமாட்டேன் எனும் டோனி பிளேயரின் பிரசித்தி பெற்ற வாக்கினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    மற்றும் இவருடைய அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பாக அப்போதைய லேபர் அரசாங்கத்தின் வியாபார அமைச்சராக இருந்த பீட்டர் மண்டல்சன் பற்றிய விபரங்களை வெளியிட்டமை அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு வழி வகுத்தது.

    இத்தகைய ஒரு இளைய பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் குணமடைந்து மீண்டும் ஊடகத்துறைக்கு பல உன்னதமான ஆக்கங்களை அளிக்க வேண்டுமென எண்ணுவோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரிய வடுக்களின் [Sun Spots] காந்த வீச்சுகள் நேரடியாகப் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    காலக் குதிரையின்
    ஆழியைச் சுழற்றுவது சூரியன்.
    ஊழியின்
    ஓவியக் கரம் புரிவது !
    ஓயாத சூரியனும்
    ஒருநாள் ஒளியின்றி முடங்கும் !
    பூமியின் உட்கருவில்
    சங்கிலித் தொடரியக்கம்
    தூண்டும் யந்திரம்
    பரிதி !
    பூமி ஒரு வெங்காயம் !
    உடைந்த தட்டுகள்
    அடுக்கடுக் காய்ப் படிந்த
    பொரி உருண்டை !
    சூரிய காந்தம், கதிர்வீச்சு
    காமாக் கதிர்கள்
    சூழ்வெளி படைப்பவை !
    பூமியின் உட்கரு வெப்பக் கனல்
    அரங்கேற்றம் செய்யும்
    பூகம்ப அடித்தட்டு
    நடனத்தை !
    எரிமலைக் கண்ணைத்
    திறந்து விடும் !
    பரிதி வடுக்களின் காந்தம்
    கைநீட்டிப்
    நிலநடுக்கம் தூண்டலாம் !
    சுனாமி அலைகளை
    எழுப்பி
    மனித இனத்தை அழிக்கலாம்
    மாநிலத்தில் ?
    +++++++++++++

    Fig 1 Sun's Furnace & Process

    “சமீபத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான் : பூமியின் உட்கருவை மெதுவாக ஆனால் அசுரத் தீவிரத்தில் பாதிப்பது சூரியன் ஒன்றே ! பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனே பிரதானக் காரணி என்பதை நானும் எனது கீர்த்தி பெற்ற விருந்தினர்கள் டாக்டர் பீட்டர் ஆல்ஸனும் டாக்டர் நிகோலா ஸ்கஃபீட்டாவும் ஒப்புக் கொண்டோம்.”

    மிட்செல் பாட்டிரோஸ் (Mitchel Battros) (Solar Rain நூல் படைப்பாளி)

    “பரிதி உச்சத்தின் (Solar Maximum) போது எப்போதும் (பரிதித் துருவத் திருப்பம்) நிகழ்கிறது ! பரிதி வடுக்களின் எண்ணிக்கை (Sunspots) உச்சமாகும் போது அதன் துருவ முனைகள் மாறுகின்றன. இப்போது அந்த உச்ச நிலையைப் பரிதி அடைவது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.”

    டேவிட் ஹாத்தவே (David Hathaway, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1E Solar Weather & Atmosphere

    பரிதிக் கோளத்தில் (Heliosphere) நிகழும் துருவத் திருப்பத்தின் தாக்கம் மிகவும் சிக்கலானது ! பரிதி வடுக்கள் தீவிரக் காந்த முடிப்புகள் சேமிக்கப் பட்டுள்ள பெரும் களஞ்சியம். இரட்டைத் துருவக் காந்தப் பட்டை (Dipole Magnetic Field) மறைந்து போனாலும் முடிச்சு அவிழ்ந்து காந்த தளம் சுருள் சுருளாக வெளிப்புறம் பாய்கிறது. துருவத் திருப்பம் நேரும் போது பரிதிக் கோளம் காணாமல் போவதில்லை ! வெற்றிடத்தை நிரப்பிட ஏராளமான, சிக்கலான அளவுக் காந்த அமைப்பாடுகள் இருக்கின்றன. இதுவரை விஞ்ஞானிகள் மேலிருந்து கீழ் நேரான நோக்கில் துருவத் திருப்பத்தைக் காணவில்லை. இப்போது “யுலிஸிஸ் விண்ணுளவி” விஞ்ஞானிகளுக்கு பரிதியின் மெய்யானச் சோதிப்பு உளவைக் காட்டப் போகிறது.

    டேவிட் ஹாத்தவே. (டிசம்பர் 9, 2005)

    “பரிதியின் காந்த மண்டலம் சூரிய குடும்பம் முழுவதையும் பரிதிக் கோளம் எனப்படும் ஒரு குமிழிக்குள் (Heliosphere Bubble) மூடிக் கொள்கிறது. அப்பரிதிக் கோளம் 50 AU முதல் 100 AU வானியல் அளவீட்டில் நீட்சி அடைந்து புளுடோ சுற்று வீதிக்கு அப்பாலும் செல்லும். [1 Astronomical Unit (AU) = Unit Distance Between Sun & Earth]. சூரியனின் காந்தத் தள மாறுபாடுகள் பரிதிக் கோளத்தின் வழியாக பரிதிப் புயலால் எடுத்துச் செல்லப் படுகின்றன.”

    ஸ்டீவ் சூயஸ் (Steve Suess, Solar Physicist, Marshal Space Flight Center)

    Fig 1A Earth's Internal Structure

    அடித்தட்டு நகர்ச்சியின் போது பூமிக்குள்ளே என்ன நிகழ்கிறது ?

    பூமிக்குள் அடித்தட்டு நகர்ச்சியைத் (Plate Tectonics) துடிக்க வைத்துப் பூகம்பத்தை எந்த விதப் புறத் தூண்டல் உண்டாக்குகிறது என்பதைப் பூதள விஞ்ஞானிகள் இதுவரைக் குறிப்பிட்டுக் காட்ட வில்லை ! ஆனால் அவர்கள் கருதுவது : பூமியின் உட்கருவில் எழும் வெப்பம் மெதுவாக உள்தட்டு (Mantle) ஓட்டத்தைத் தடிப்பான மேல்தட்டு (Lithosphere) அடுக்கில் எழுப்பி விடுகிறது. கடந்த மில்லியன் கணக்கான ஆண்டுகளாய்க் கடையும் இந்த கொந்தளிப்பு இயக்கமே கடற்தட்டுகளையும், அடித்தட்டுகளையும் நகர்த்தி வருகிறது. பூதள விஞ்ஞானிகள் இவ்வித அடித்தட்டு நகர்ச்சி நிகழ்ந்து கடந்த 2.5 முதல் 4 பில்லியன் ஆண்டுகளாகப் பூமியின் மேல் தளத்தை உருவாக்கி வந்திருக்கிறது என்று மதிப்பிடுகிறார்கள். இப்போதும் அந்த நகர்ச்சி தொடர்ந்து இயங்கி வருகிறது.

    இந்திய மண்திணிவு எதிர்த்துத் தள்ளுவதால் இமயத்தின் சிகரங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன ! ஹவாயித் தீவுகள் ஜப்பானை நோக்கி அங்குல அங்குலமாய் நகர்கின்றன ! ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன ! அதாவது அட்லாண்டிக் கடல் அகலமாகிப் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது ! இன்னும் மில்லியன் ஆண்டுகள் தாண்டி ஒருவர் நோக்கினால் உலகக் கண்டங்களின் புதிய அமைப்பில் வேறு முகத்தோடு செதுக்கப் பட்டிருக்கும் ! பூமியானது மாபெரும் ஏழு அடித்தட்டுகளோடு பல்வேறு சிறு அடித்தட்டுகளைப் பின்னி மேல் தளத்தை அமைத்துக் கொண்டுள்ளது ! உள்ளே உள்ள பூமியின் வெப்ப திரவம் வலுவற்ற பகுதிகளின் வழியே கசிந்து வெளியேறி அவற்றில் எரிமலை அரங்குகள், தீவுகள் உண்டாகின்றன.

    Fig 1A The Sun's Core

    ஓராண்டில் சுமார் ஒரு மில்லியன் நிலநடுக்கங்கள் பூமியில் நேருகின்றன என்று பூதள விஞ்ஞான நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது ! இவற்றில் பல மிகச் சிறிய அதிர்வுகள். கருவிகளால் மட்டுமே அவை உணரப்பட்டுப் பதிவாகின்றன. ஒவ்வோர் ஆண்டிலும் சராசரிச் சுமார் 10,000 பூகம்ப மரணங்கள் நேருகின்றன. அதாவது ஓராண்டில் இரண்டு பூகம்பங்கள் நேர்ந்தால் சராசரி மரணங்கள் 5000 (2X5000 =10,000) ஏற்படலாம். 1900 ஆண்டு முதல் 2009 வரை 6.1 முதல் 9.5 ரிக்டர் அளவீட்டில் சுமார் 50 அசுரப் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன ! அவற்றில் 2004 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் 9 ரிக்டர் அளவீட்டில் நேர்ந்த இந்தோனேஷியா கடற்தட்டுப் பூகம்பத்தில் எழுந்த சுனாமி அலையடிப்பில் தென்னாசியக் கடற்கரை நாடுகளில் 250,000 மக்கள் உயிரிழந்தனர் ! உடைந்த இல்லங்கள், இழப்புகள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ளவை ! வரலாற்றில் மாபெரும் மனித இனச் சேதம் !

    Fig 1C Solar Magnetic Field

    பூகம்ப நகர்ச்சியும் பூமியின் பூதள மின் ஜனனியும்

    பூகம்பம் என்பது பூமிக்கடியில் எழுந்து மேல் தளத்தில் அல்லது கடற் தளத்தில் நேரும் ஒரு திடீர் நில அதிர்ச்சி ! அந்த நிலநடுக்கத்தைப் பூமிக்கடியில் மெதுவாகப் பாறைகளில் சேமிக்கப்பட்ட சக்தியின் வெளிப்பாடே உண்டாக்குகிறது ! இந்தச் சக்திக்கு மூல காரணி யாது ? எப்படிச் சக்தி பாறைகளில் சேமிப்பாகிறது ? ஏன் திடீரென நிலநடுக்கம் ஏற்படுகிறது ? பூமியின் உள்ளமைப்புப் படத்தைப் பார்த்தால் “லித்தோ கோளம்” (Lithosphere) முறியும் பாறைகளைக் கொண்டதாகத் தெரியும். அக்கோளம் சுமார் 100 கிலோமீடர் (60 மைல்) தடிப்புள்ளது. மேலும் “ஆஸ்தெனோ கோளத்தின்” (Asthenosphere) சூடான பிளாஸ்டிக் பாறையில் அது மிதக்கிறது. லித்தோ கோளம் அனைத்தும் “நகர்ச்சி அடித்தட்டுகள்” (Tectonic Plates) எனப்படும் ஏழு பெரும் துண்டங்களாகவும் பல்வேறு சிறு துண்டங்களாகவும் பிரிக்கப் பட்டுள்ளன ! அந்த நகர்ச்சி அடித்தட்டுகள் ஆண்டுக்குச் சதா 1 முதல் 1.8 செ,மீடர் நகர்ந்து செல்வதால், ஒன்றை ஒன்று முட்டி, மோதி, நழுவிக் குதிரை ஏறி எல்லைப் பகுதியில் (Plate Boundaries) தள முறிவுகளை ஏற்படுத்துகின்றன. அவ்விதம் அடுத்தடுத்து ஜப்பான், இந்தோனேஷியா, ஸான்பிரான்சிஸ்கோ, தென்னமெரிக்காவின் பெரு (Peru) நாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

    Fig 1D Earthquake Wave Travel

    பூதள விஞ்ஞானிகள் பூமி உட்கருவின் காந்தத் தளத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம் என்பதை நீண்ட காலமாக அறிந்திருந்தார்கள். நமது பூமி மற்ற சூரியக் கோள்களைப் போல் தனது உட்புறப் “பூதள மின் ஜனனியைக்” (Internal Geodynamo) கொண்டு சுயக் காந்த தளத்தை உண்டாக்கிக் கொள்கிறது. பூமியின் மின் ஜனனி சாதாரண மின்சார ஜனனி போல் சுழலும் உட்கருவின் இயக்கத்தால் மின்னோட்டத்தை நிகழ்த்துகிறது. நிலவைப் போல் ஏழு மடங்கு கொள்ளளவுள்ள ஓர் இரும்புத் திரவக் கடல் பூமிக்குள் சுற்றிப் பூதள மின் ஜனனியாக இயங்கி வருகிறது.

    பரிதி வடுக்களின் விளைவுச் சமன்பாடு

    பூமியின் மாறுதலைப் பற்றி ஒளிக்காட்சி (Earth Change TV) முறையில் அறிவித்து வரும் மிட்சல் பாட்டிரோஸ் (Mitchel Battros) என்பவர் சூரிய வடுக்களின் தீவிரக் காந்த சக்தி பூமியைத் தாக்கி விளைவிக்கும் தீங்குகளுக்கு ஒரு சமன்பாட்டை (Sunspot Effect Equation) எழுதி யிருக்கிறார். அவர் சூரிய மழை (Solar Rain) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அவர் தயாரித்த சமன்பாடு கீழே கொடுக்கப் பட்டுள்ளது :

    Mitch Buttros Equation :

    Sunspots ==>> Solar Flares ==>> (Solar) Magnetic Field Shift ==>> (Earthern) Shifting Ocean & Jet Stream Currents ==>> Extreme Weather & Human Disruption

    Fig 3 The Equation for Sunspots & Extreme Weather

    மிட்செல் பட்டிரோஸ் சமன்பாடு :

    பரிதி வடுக்கள் ==>> பரிதி கனல்வீச்சுகள் ==>> பரிதிக் காந்த முனைத் திருப்பம் ==>> பூமியின் கடல் தட்ப வெப்ப ஆறோட்ட நகர்ச்சி ==>> அசுரக் காலநிலை மற்றும் மனித இனத் துன்பங்கள்.

    மிட்செல் பாட்டிரோஸ் இரண்டு முறை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதளவாதி டாக்டர் பீட்டர் ஆல்ஸன் (Dr. Peter Olson) & டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பௌதிகவாதி டாக்டர் நிகோலா ஸ்கா·பெட்டா (Dr. Nicola Scafetta) ஆகியோருடன் உரையாடித் தனது சமன்பாட்டைத் தெளிவாக விருத்தி செய்தார்.

    Fig 5 Ulysses Solar Probe

    சூரியனே பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குக் காரணம்

    பூமியின் காலநிலைச் சூழ்வெளி மாறுதலுக்குச் (Climate & Weather Change) சூரியனின் வாயுக் கோளக் கொந்தளிப்பே காரணம் என்பது பூதள விஞ்ஞானிகள் பலரது முடிவாகத் தெரிகிறது. பூகோளச் சூடேற்றத்தின் நீட்சிக்குப் (Global Warming Trend) பரிதியின் கொந்தளிப்புப் புயலே பெரும் பங்கேற்கிறது. அதற்கு மனித விளைவுகளின் பங்கு சிறிதளவே ! சூரியனே நமது பூமியில் நேரும் பாதிப்புகளுக்கு பூகோளத்தின் உட்கருவில் ஒரு சங்கிலி இயக்கத்தைத் தூண்டும் ஒரு யந்திரமாக உள்ளது ! நமது விஞ்ஞான நுண்கருவிகள் அனைத்தும் (விண்ணுளவிகள், தொலைநோக்கிகள்) விண்ணை நோக்கிப் பரிதியின் இயக்கத்தையும், அதனால் ஏற்படும் பூமியின் காந்த தளம், பூமியின் சூழ்வெளியில் அயனிக் கோளம், ஸ்டிராடோ கோளம் ஆகியவற்றின் பாதிப்புகளையும் ஆராய்ந்து அளந்து வருகின்றன.

    பூமியில் இடி மின்னல் தாக்குவது போல் பூமியின் சக்தி முறுக்கேறிய உட்கருவும் (Highly Charged Core) நடந்து கொள்கிறது. பூமியின் உட்கரு, கீழ்த்தட்டு, மேல்தட்டு (Core, Mantle & Crust) ஆகியவற்றை ஆய்ந்து உளவு செய்த டாக்டர் பீட்டர் ஆல்ஸன் கருத்துக்கேற்ப பரிதியின் “கனற் திணிவு வெளியேற்றம்” [Corona Mass Ejection (CME)] மற்றும் பல்வேறு விண்வெளி அனுப்பும் மின்கொடைத் துகள்கள் (Charged Particles) மின்னல் அடிப்பு போல் தாக்கும் பொருட்களில் எதிரடியும் உண்டாக்குகின்றன !

    Fig 1G The Climate Connection

    பூகாந்த முனைத் திருப்பமும் கண்டங்கள் நகர்ச்சியும்

    1900 ஆண்டுகளில் ஜெர்மன் பூதள விஞ்ஞானி ஆல்·பிரட் வெகினர் (Alfred Wegener) உலகக் கண்டங்களின் வரைப்படங்களைக் கண்டு ஒரு யுகத்தில் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கே ஒட்டி இருந்தன என்றும் பிறகு மெதுவாக அவைத் தனித்தனியாக புலம்பெயர்ந்து தற்போதுள்ள இடங்களில் அமைந்துள்ளன என்னும் தனது “உலகக் கண்டங்களின் பிரிப்பு” நியதியை (Continental Drift Theory) அறிவித்தார். அதற்குச் சான்றாக பொருந்திடும் விளிம்புகளில் 1918 இல் அவர் பல்வேறு கண்டத்துப் பாறைகள் ஒத்திருந்ததைக் கண்டார். கடலில் மிதந்து நகரும் பெரும் பனிப்பாறைகள் போல், கண்டங்களும் பூமியின் உலோக திரவத்தில் மிதந்து நகர்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதம் பல மில்லியன் ஆண்டுகள் மெதுவாக நகர்வதற்குச் சக்தி அளித்தது பூமியின் உட்கரு வெப்பமே என்றும் கூறினார். ஆல்·பிரட் வெகினர் கூறிய கண்ட நகர்ச்சி நியதிக்குக் கடும் எதிர்ப்பு பூதள விஞ்ஞானிகளிடம் முதலில் இருந்து, பின்னால் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    Fig 2 The Corona Heating Mystery

    மீளும் பூகாந்த முனைத் திருப்பங்கள்

    எரிமலைக் கண்ணில் பொங்கிக் கசியும் குழம்பு (Lava) பூமியின் மேல்தளத்தில் குளிர்ந்து பாறையாக இறுக்கம் அடைகிறது. பெரும்பான்மையாக அது கறுப்பாக இருக்கும் பஸால்ட் பாறைக் காந்தமாகும் (Magnetic Basalt Rock). அப்பாறைக் காந்தம் குளிரும் போது பூகாந்தத் தளத்தின் துருவத் திசையிலே உண்டானது. காந்த மானிகள் பஸால்ட் காந்த துருவத்தைக் கண்டுவிடும். அவ்விதம் பலதடவைகளில் எரிமலை கக்கும் போது உண்டாகும் பாறைப் படிமானங்கள் வெவ்வேறு (நேர்-எதிர்) திசைக் காந்த முனைகளைக் கொண்டிருந்ததால் பூமியானது தனது காந்த முனைத் திருப்பங்களை எத்தனை முறை செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

    கடற் தளத்தின் மீது சீரான காந்தத் திணிப்புகள்

    1950 ஆண்டுகளில் கடற் தளத்தின் கீழ் பெட்ரோலிய ஆயில் புதையல்களைத் தேடிச் செல்லும் பூதள ஆய்வாளர் காந்தக் கருவிகளைக் கட்டிக் கப்பல் அல்லது விமானம் மூலம் ஆராய்ந்த போது காந்த வலுவற்ற பாறைகளுக்கு அருகில் ஆயில் கிணறு இருப்பதைச் சோதித்தார்கள். பூமியின் தளத்தில் நோக்கிய போது பாறைக் காந்தங்கள் தாறுமாறாய் இங்கும் அங்கும் செம்மை யில்லாது இருந்தன. ஆனல் கடற்தளங்களில் காந்தப் பாறைகள் அவ்விதம் அமையவில்லை ! மாறாக 1960 ஆண்டுகளில் அட்லாண்டிக் கடலில் தேடிய போது கடற்தளப் பாறைகளின் காந்தங்கள் சீராக ஓரினப் பண்பாட்டில் விந்தையாக நீண்ட அளவுத் துண்டங்களாய் “மைய அட்லாண்டிக் பிளவுக்கு” இணையாக (Parallel to the Mid-Atlantic Ridge) அமைந்திருந்தன. அந்த மைய அட்லாண்டிக் கோட்டில்தான் எரிமலைக் கசிவுகள் உண்டாகி எரிமலைத் தீவுகள் எழும்பியுள்ளன ! மற்றும் எல்லைக் கோட்டில்தான் பூகம்பங்களும் பல நேர்ந்துள்ளன.

    Fig 4 The Nature of Solar Flares

    கடற் தளப்பரப்பு விலகி நகர்தல் !

    1962 இல் லாரென்ஸ் மார்லி (Lawrence Morley) என்பவர் கடற்தள விரிவைப் பற்றி முதன்முதல் அறிவித்தைப் பல பூதள விஞ்ஞானிகள் நிராகரித்தார். லாரென்ஸ் மார்லி, அடுத்து டிரம்மண்டு மாத்யூஸ், ·பிரெடெரிக் வைன் ஆகிய மூவரும் கடற்தளம் தொடர்ந்து சீராக ஆண்டுக்கு 2.5 செ.மீடர் வீதத்தில் விலகிக் கொண்டு வருவதாக அறிவித்தனர். அடித்தட்டுகள் விலகும் போது பிளவில் எரிமலைக் குழம்பு கசிந்து பிறகு குளிர்ந்து படிகிறது. அப்போது அவை தமது காந்த முனை அமைப்புகளையும் முத்திரை செய்தன. சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகாந்தம் முனைத் திருப்பம் செய்கிறது. அதே போல் கடற்தளப் பாறைகளும் தமது காந்த முனைத் திருப்பங்களைப் பதிவு செய்கின்றன. அதாவது பூமியின் கடற்தளம் ஒரு “பூத நாடாப் பதிவு மானி” (Giant Tape Recorder) போல் இயங்குகிறது ! இவ்விதமாக அனைத்துக் கடற்தளங்களும் வெவ்வேறு காந்த முனைகளைப் பதிவு செய்த பாறைத் துண்டங்கள் கொண்டதாக காணப் படுகின்றன. அந்த கடற்தள அடித்தட்டுகளைத் தொடர்ந்து தள்ளிக் கொண்டு நகர்த்துவது பூமியின் உட்கரு வெப்பச் சக்தியே !

    Fig 7 Corona Mass Ejections (CME)

    [தொடரும்]
     +++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By : Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)
    19 India Daily Technology Team (Aug 8, 2005)
    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)
    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)
    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)
    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)
    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)
    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)
    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)
    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences
    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)
    29 National Geographic Picture Atlas of Our Universe By : Roy Gallant (1986)
    29 (a) National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)
    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: <http://www.sec.noaa.gov> (April 25, 2007)
    31 Philip’s World Atlas – Solar System Profile & Anatomy of the Earth (2005)
    32 Oxford Essential World Atlas – Restless Earth (2006)
    33 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    34 National Geographic Picture Atlas of Our Word (1990)
    35 Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    ******************

    jayabarat@tnt21.com (February 5, 2013) [R-1]

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

    பவள சங்கரி

    நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்

    வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் க்டைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

    நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு? கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும். ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை. அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும். அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே? இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை. உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா? அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.

    அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். நல்ல வாழ்த்துக்களைப் பெற்றுத்தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதை அனுபவிக்கப் பழகிவிட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.

    வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும். குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.

    நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?

    பெற்ற சிறிய வெற்றியையும் மனம்கிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா..  அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே. ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே. இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://rishikajain.com/2012/02/01/happiness-will-never-come-to-those-who/

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான்

    ஓர் ஆத்மீகக் கவிஞன் நான்

    சொர்க்கபுரி இன்பங்கள் பெற்றவன் நான்

    நரகத்தின் துயர்கள் உற்றவன் நான்

    முன்னதை என்னுள் புகுத்தி நான்

    உன்னத மாக்கிக் கொண்டது;

    பின்னதைப் புது மொழியாக நான்

    மொழி பெயர்த்தியது.

    மாதரின் கவிஞன் நான், அதுபோல்

    ஆடவருக்கும் கவிஞன்.

    மாதராய்ப் பிறந்தது மகத்துவம் என்பேன்

    ஆடவர் போல.

    மானிடத் தாயை விட

    பேறு பெற்றவர் வேறில்லை என்று

    கூறுவேன் !

    பரிவுடன் மலரும் இரவிலே நான்

    திரியும் ஒரு மனிதன்;

    கடலும், புவியும் தேவை எனக்கு;

    இரண்டிலும் பாதி நேர ஆட்சி

    இரவு புரியும் !

    மார்பில்லாச் சூனிய இரவைக்

    இறுகத் தழுவிக் கொள் !

    காந்தக் கவர்ச்சி ஊட்டும் இரவைக்

    கட்டித் தழுவிக் கொள் !

    தென்திசைக் காற்றுகள் வீசும் இரவு

    பெருவடிவ விண்மீன்கள்

    சிலவற்றைப்

    பெற்றுள்ளது இரவு !

    நடுங்கும் இரவு மேலும் !

    பித்துப் பிடித்துள்ளது !

    உடுப்பில்லா அமணத்தில் இரவு !

    சிரிப்பாய் புவியே ! காமக் களிப்பொடு

    குளிர் மூச்சை உள்வாங்கி !

    நீர் மய மரங்கள் தூங்கிடும்

    பூமியே !

    அத்தமன மாகிப் பிரிந்த பரிதியின்

    அண்டப் புவியே !

    பனி மூட்டம் உச்சியில் மூடிய

    மலைகளின் பூமியே !

    பூரண நிலவு நீல வானில்

    பொங்கிடும் பளிங்குப் பூமியே !

    ஒளிப்புள்ளி, கரும்புள்ளி பற்பல மின்னி

    ஓடும் நதியின் புவியே !

    தூயப் பழுப்பு முகில் பளிச்செனத்

    தோரணமாய்த் தெரிகிறது

    என் பொருட்டு !

    நீள்கரம் திடீரென நீட்டும் பூமியே !

    ஆப்பிள் செழித்துக் கொத்தாய்ப்

    பூத்துக் குலுங்கும் பூமியே!

    நீ சிரிப்பாய்

    நின் காதலன் வருகிறான் !

    ஊதாரிப் பையன் எனக்குக்

    காதல் அளித்துள்ளாய் நீ !

    ஆதலால் அளிப்பேன் நானுனக்கும்

    காதல் ! அந்தோ

    தாகமான மௌனக் காதல் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 6, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share