Featuredஇலக்கியம்கட்டுரைகள்

நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26

 பெருவை பார்த்தசாரதி

சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் நமக்கு விட்டுச்சென்ற அறநெறிகள் என்கிற பொக்கிஷங்களை எவ்வாறு படைத்திருப்பார்கள். சற்று ஆராந்து பார்த்தோமானல், இவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள்?…யாரிடம் கல்வி பயின்று பட்டம் பெற்றார்கள்?….,எப்படி அறிவிற்சிறந்து விளங்கினார்கள்?…என்ற சந்தேகங்கள் எழும்.  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை எண்ணிப் பார்த்தால் கூட வியப்பு மிகும். இயற்கையோடு ஒன்றி, விலங்கினங்களோடும், தாவரங்களோடும், சுற்றுப் புற சூழ்நிலைகளோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்தார்கள். இயற்கையே தெய்வமாக வணங்கினார்கள். இயற்கையோடு நல்லுறவாடும்போது, போற்றி வணங்கும்போது, விண்ணிலும் மண்ணிலும் அமைதி நிலவுவதை உணர்ந்தார்கள். இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதினார்கள். அவர்களால் படைக்கப்பட்ட இதிகாசங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள், காப்பியங்கள் போன்றவற்றில் நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகள் நிறைந்து காணப்படுகின்றன. இது போன்ற போற்றுதற்கரிய காப்பியங்களைப் படைத்தவர்கள், எந்தச் சூழ்நிலையை அடிப்படையாக வைத்து, இதைப் படைத்திருப்பார்கள்?… விஞ்ஞான வளர்ச்சியடையாத பண்டைக் காலத்தில் ‘வாழ்வதற்கே சிரமப்பட்ட சூழ்நிலையில்’ இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல செளகர்யங்களில் ஒன்று கூடத் தோன்றாத கற்காலத்தில், இப்படிப்பட்ட அரிய சிந்தனைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்வாழ்ந்தவர்கள் மனதில் தோன்றியது வியப்புக்குறியது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், இன்று ‘தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற படி மாறிக்கொள்ளும் மாட மாளிகைகளும், அதிநவீன கம்ப்யூட்டர் யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியோடு சுகபோகத்தை அனுபவித்துவாழும் அறிஞர்களுக்குக் கூட காட்டில் வாழ்ந்த ஞானிகளின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

 மனித வாழ்க்கையே ஒரு போராட்டம், இந்த நிலையில் சிந்தனை தோன்றுவது அபூர்வம் அதிலேயும், துன்பங்கள் என்னும் அலைகளில் சிக்கித் தவிக்கின்றபோது நற்சிந்தனைக்கும், சாதனைக்கும் இடமில்லை. பணிசெய்யும் இடத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சிக்கல், உறவினர்களால் வரும் துன்பம், நாமே தேடி வரவழைத்துக் கொள்ளுகின்ற கவலைகள் இப்படி துன்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பவர் இவ்வுலகில் உண்டா?.. என்ற கேள்விக்கு விடை காண்பதரிது…எல்லா வசதிகள் இருந்தும், ஏதாவதொரு துன்பத்தை அனுபவிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

 நல்வாழ்க்கை வாழ அனைவருமே ஏதாவதொரு வேலையில், பணியில் ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால், சுபிட்சமான வாழ்க்கை கிட்டினாலும் அதை அனுபவிக்கத் தெரியாமல் சிக்கித் தவிப்போரும் உண்டு.  ஒரு சிறிய துன்பத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் ஒப்புவது இல்லை. சாதாரணமாக நம்மிடம் பழகுபவர்கள் சிலரிடத்தில் ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டுப் பாருங்கள். உடனே அதை ஏன் கேட்கிறீகள், அலுவலகத்தில் ஒரே வேலை, இங்கும் அங்கும் ஓட வேண்டியிருக்கிறது, இடையே டிரெய்னிங் ப்ரோக்ராம் வேறு, ஒரு வாரம் சரியாகச் சாப்பிடவில்லை, உடம்பு சரியில்லை, தூங்கவில்லை, வீட்டைக் கவனிக்க முடியவில்லை, என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொள்வார்கள், முடிவில் பெரிதாக ஒன்றும் சாதித்திருக்கவும் மாட்டார்கள். இதில் உடற்குறையைச் சொல்லி, கடமையைத் தட்டிக் கழிப்பவர்களும் உண்டு.ஆக நேரத்தை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் இத்தகய சலிப்புக்கு அங்கே இடமிருக்காது. எதையுமே இன்முகத்தோடு வரவேற்பவருக்கு எல்லாமே இன்பம்தான். வாழ்க்கை எவ்விதம் அமைந்தாலும், அதை ஏற்று வாழும் மனப்பக்குவம் உள்ளவர்களுக்கு முதுமையும், உடல் உபாதைகளும் பெரிதாகத் தோன்றாது, வயதானாலும் இளைமையாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம் என்பது மனநல ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இவை அனைத்துக்கும் காரணமாக அமைவது மனது. மனம் தெளிவாக இருந்தால் சிந்தனை பிறக்கும். சிந்தனை தெளிவானால் மனதிலே சக்தி பிறக்கும், மனசக்தி தடைகளை உடைத்தெறியும், சாதனை படைக்கும்.

ஒரு வயதானவர் கூறுகிறார், என்னுடைய கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன்.  பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது, ஆனால் அவர்கள் இன்னும் செட்டில் ஆக வில்லை என்கிறார். பிள்ளைகள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் பெற்றோர் பங்கெடுத்துக் கொள்வதால், இந்தக் கடமை என்பதற்கு எல்லை இல்லைபோலும். சிலர் வசதியாக வாழ்ந்து பிறகு முதியவராகும்போது, ஏதாவதொரு வகையில் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு (dependent) ஆகிவிடுகிறார்கள்.  உடல்நலக் குறைபாடுகள் ஒன்றா, இரண்டா,  மருத்துவரிடம் விவரிக்கும்போது, அவரே குழப்பத்துக்குள்ளான மாதிரி, உடலில் ஏகப்பட்ட சிக்கல்கள், முடிவில் ஒரு பெரிய மருத்துவசோதனைப்பட்டியல், மருந்துச்சீட்டு, இயன்முறை பயிற்சிமையத்துக்கு (psysiotheraphy centre) ஒரு வாரகாலம் பரிந்துரைத்தல் போன்றவற்றோடு மருத்துவமனையிலிருந்து விடுதலை. இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பந்தங்களில் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விடுவது சகஜம். துன்பம் வரும்போது துணைக்கு வருபவரது அறிவுரை, உறவினர், நண்பர்களது பரிந்துரை, நல்ல மருத்துவர் மற்றும் மருத்துவமனையைத் தேடுதல் போன்றவைகளும் பின் தொடரும், இதனால் மனம் மேலும் குழப்பமடையும், நாம் பூஜை, பிரார்த்தனை, பரிகாரம் முதலியவற்றைச் சரிவர செய்துகொண்டிருக்கின்ற போதிலும், பரிகார ஸ்தலங்கள், குளங்கள், மஹான்கள், சாதுக்கள் முக்கியமாக துறவறம், காவிவேட்டி போன்றவைகள் அடிக்கடி ஞாபத்துக்கு வந்து மேலும் நம்மை அலைக்கழிக்கும். நலம் விசாரிப்பவர்களோடும்,  நண்பர்களோடும் உரையாடும்போது தத்துவங்கள் பேசத்தோன்றும். மருத்துவமனையில் தனிமையை விரட்டி, மருத்துவருக்காகவும், மருத்துவ சோதனைக்காகவும் காத்திருக்கும் நேரத்தில், மற்றவரின் அறிவுரையைவிட, நமக்கெல்லாம் உதவக்கூடியது, கைகொடுக்கக்கூடியது என்று சொன்னால், நம்மைப் போல வேறு பலரும் துன்பங்களை அனுபவிப்பவர்களைப் பார்க்கும் போது சற்று ஆறுதல் கிடைக்கும். உடலில் ஒரு சிறிய காயம் பட்டால்கூட, சாதாரண மருத்துவரிடம் செல்லாமல் நிபுணரிடமல்லவா செல்கிறோம். இந்நேரத்தில் ஜனனம் எடுக்கும்போதே குறைகளோடு பிறப்போரைப் பற்றிச் சிந்திக்கிறோமா?…பிறக்கும் போதே ஊனத்தோடு பிறந்தவர்கள், உலக சாதனை புரிவதைப் பற்றி எண்ணிப் பார்க்கிறோமா?…என்றால் ‘இல்லை’ என்பதே பெரும்பாலானவரிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். மருத்துவரிடம் போகும் போது மட்டும் இத்தகய சிந்தனைகள் நமக்கு எழுவது இயல்பு என்றாலும், மற்ற நேரங்களில் மகிழ்ச்சியாக இருக்கும் போதாவது, இவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை. கஷ்டத்தை வெல்ல மந்திர உச்சாடனை செய்வதைவிட, குறைகளைக் களைந்து சாதனை வாழ்க்கை வாழ்ந்த பலரில், ஒரு சிலரை மட்டும் நினைத்தாலே துன்பங்கள் ஓடோடிவிடும். தினமும் காலையில் மகிழ்ச்சியாக படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி அருந்திவிட்டு, மின்விசிறியை ஆன் செய்து, தினசரிகளைப் புரட்டுகிறோம் அல்லது பாட்டுக் கேட்கிறோம். இந்த ஒரு சாதாரண செயலுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகளை என்றாவது ஒரு நாள் சிந்தித்தித்திருக்கிறோமா!..

தனது 46 வது வயதில், இடது கையிலும், காலிலும் சில இடங்களில் நிரந்தரமாக செயலிழந்த போது இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவித ஆராய்ச்சித் துறையில் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்டார். பதப்படுத்துதல், நுண்ணுயிர்கள் பற்றிய இவரது தொடர் ஆராய்ச்சிகள் முடிவில் இவருக்கு உலகப் புகழைத் தேடித்தந்தன. அனுதினமும் பால், பியர், ஒயின், மதுவகைகள் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்கள் இவரை நினைத்து நன்றி செலுத்த வேண்டும். தினமும் அதிகாலையில், பாக்கட் பால் வாங்குபவர்கள் காபி குடிப்பதற்கு முன் தவறாமல் நினைத்துப் பார்க்க வேண்டியவர்தான் லூயிஸ் பாஸ்ச்சர்

இன்று நாம் மகிழ்ச்சியோடு பாட்டு மற்றும் பலரது பேச்சுக்களையும் கேட்கிறோம். வெளிச்சம் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்பதுபோல மின்சார வெளிச்சத்தில் வாழ்க்கை முழுவதும் பலன்களை அனுபவத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஐந்து நிமிடம் கரெண்ட் இல்லையென்றால், ஒருவேலையும் செய்ய இயலவில்லை. ‘சம்சாரம் இல்லாமல் வாழ்ந்தாலும், மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது’ என்பதை உணருகிறோம். ஆனால் தனது இளம் வயதிலேயே ஒருவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி, நாளடைவில் காது கேட்கும் திறனையும் வெகுவாக இழந்து விட்டார் ஒருவர். அதனால் படிப்பிலும் அதிக நாட்டம் இல்லை. அங்கக் குறையைத் தாங்கி, அயறாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகத்துக்கே ஒளி ஏற்றினார். இவரது கண்டுப்பால் இரவு பகலானது. நமது வீட்டில் மின்சாரத்தால் இயங்கும் எந்தவொரு பொருளைத் தொடும் போதும், தவறாமல் நம் நினைவில் கொள்ள வேண்டியது இவரைத்தான். இவர் இறந்தபோது உலகமே ஒரு நிமிடம் கண்ணைமூடி (மின்சார விளக்குகளை அணைத்து) நன்றி செலுத்தியது, அவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

மிகச்சிறந்த இசைப் படைப்பாளர் என்ற பெயருக்கு உரியவர். உலகத்தை தன் இசையால் கட்டிப்போட்டவர் என்றுகூடச் சொல்லுவார்கள். இவர் ஒரு கால கட்டத்தில் முழுவதும் காது கேளாதவராக இருந்தார் என்பதும் அந்தக் கால கட்டத்தில்தான் தனது 9 வது சிம்பனியை உருவாக்கி சாதனை நிகழ்த்தினார். இனிமையான இசையைக் காதால் கேட்டுத்தானே ரசிக்க முடியும். காதால் கேட்டு இசையை ரசிக்கக்கூடிய பாக்கியத்தைத் தான் பெறவில்லை என்றாலும், பிறருக்கு அந்த இன்பத்தைத் தரமுடிந்த அந்தக் கலைஞனின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும்?……நிச்சயமாக எல்லோரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தனது சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகங்களை எதிர்கொண்டு, உலகையே இனிமையான இசையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்தான் இசைச் சக்கரவர்த்தி பீத்தோவான்.

இவர்களைப் போல் இன்னும் எத்துணையோ சாதனையாளர்கள், பிறவித் துன்பத்தைத் துச்சமாகக் கருதி, சுயநலம் இன்றி சிந்தித்ததால்தான், இன்றய வாழ்க்கையில் மேம்பட்ட நிலையை நாம் எட்டமுடிகிறது.  

மகாகவி பாரதி எப்போதுமே, உலகவியலைப் பற்றிக் கனவு கண்டவர். வாழ்க்கையில் நிகழும் துன்பங்களைக் கண்டு ஒரு போதும் உழல மாட்டேன் என்று உறுதிபட எடுத்துரைத்தவர். அவரது படைப்புகளில் ‘என்னுடைய வாழ்நாளில் நான் சாகாமல் இருக்கும் கலையைக் கற்றவன்’ என்று சொல்வது போல ஒரு பாடலை அமைத்திருப்பதைக் காணமுடியும். உலகநியதி என்று சொல்லக்கூடியவைகளை வென்று காட்டுவேன் என்று சொன்ன அவர், பிறப்பும், இறப்பும் மாற்றமுடியாத உலக நியதி, அதிலே கூட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு ரசிக்கும் பாரதி, துன்பங்களைக் கண்டு ஒருபோதும் நான் சாக மாட்டேன் என்று உறுதி கூறுகின்றான் போலும். கவலையையும், அச்சத்தையும் போக்கி, துன்பத்திலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல மாகாளியிடம் வரம் வேண்டுவதைப் பாருங்கள்!…

முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்

முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ

புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே

சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே

சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,

நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!

அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;

அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,

நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!

நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை

சுருங்கச் சொல்லின், வருகின்ற துன்பத்தை இன்பத்தோடு வரவேற்று, அதையும் இன்பமாகவே கருதினால், பகைவரும் கூட பாராட்டுவர் என்பதைத்தான் ‘துன்பத்தை இன்பமெனக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்தலே சாலச்சிறந்தது’ என்கிறது வள்ளுவனின் வாழ்வியல் பாடம்.

 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள்-630)

தொடரும்………

Print Friendly, PDF & Email
Share

Comments (9)

 1. Avatar

  சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்துக்கள், மேற்கோள்கள், உதாரணங்கள் என அசத்திவிட்டீர்கள். நன்றி!

  –மேகலா

 2. Avatar

  நம5க்கு பெருவை பார்த்தசாரதியும் ஒரு  நல்வாழ்க்கை வாழ வழிகாட்டி ஆவார்!

 3. Avatar

  பொருமையாகப் படித்து,  மனதில் எழும்  சிந்தனைகளை கருத்தாகத்  தெரிவித்த, திருமதி மேகலா இராமமூர்த்தி மற்றும் சூரி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 4. Avatar

  பொன்னான வழிகாட்டிகள்! மனதில் உறுதியோடு மக்களுக்கு, நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும் என்னும் கொள்கையோடு வாழ்ந்த நற்பண்பாளர்களை குறிப்பிட்டு நாம் எப்படி வாழவேண்டு என்று எடுத்துரைத்த நண்பர் பெருவை பார்த்தசாரதி வாழ்த்துக்குரியவர்

  அன்புடன்

  தமிழ்த்தேனீ

 5. Avatar

  super explanation very nice sir.

 6. Avatar

  நல்வரவு.

 7. Avatar

  பதினைந்து நாட்கள் யோசித்து, 150 வாக்கியங்கள் எழுதுகின்ற ஒரு படைப்பாளனுக்கு,  ஒரு வரி பாராட்டுதல் வந்தால், அது ஒன்றே போதும்.  எழுத்துக் கலையை வளர்க்க இதற்கு மேல் வேறென்ன!…செய்ய வேண்டும்.  மதிப்பிற்குறிய இன்னம்பூரான், எழுத்தாளார் தமிழ்த்தேனீ  மற்றும் முல்லை அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 8. Avatar

  பெருவை சாரதி இங்கு எமக்கொரு பாரதி. பாரினிலே துன்பமில்லா வாழ்வு வாழ்வதெப்ப்டி என்று பகன்றுரைத்தார். ராமனும் கண்ணனும் ஏசுவும் புத்தனும் சங்கரனும் ஏன் பாரதியும் மாண்டாலும். நல்வாழ்க்கை வழிகாட்டியாய் நம் வாழ்க்கை தேரை ஓட்டிச்செல்லும் சாரதி இவர். அன்று பாரத போரிலே பார்த்தனுக்கு கிடைத்தான் ஒரு சாரதி பகன்றான் கீதையை. இன்று அல்லலுறும் மாந்தர்க்கு நல்லுதவி செய்திட வந்திட்டான் எங்கள் பெருவை பார்த்த சாரதி. அருமை மிக அருமையான தொடர்.

 9. Avatar

  the present day youth requires simple small relevant to the current scenario hints to make their life eventful. kudos to your sincere efforts.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க