Blog

  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 16

    கே.ரவி

    ramanathan 2657மாமா, அதாவது என் வளர்ப்புத் தந்தை, கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். 1956-57, அவர் சென்னை, ஶ்ரீராம் நகரில் திரைப்படத் தயாரிப்பு அலுவலகம் திறந்த போதே அதில் தினமும் சிற்றுண்டி, சாப்பாடு செய்து போட ஆட்கள் அமர்த்தி விட்டார். அவருடைய குருநாதர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து வந்த வழக்கம் அது. வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படப்பாடல்களுக்கு ஜி.ராமநாதனின் இசையும், ராமையா தாஸின் வார்த்தைகளும் பெற வேண்டி அங்கேதான் வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுக் காத்திருப்பார்கள். நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக் கொண்டே ஜி.ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி, ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அருகிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது.

    ஜி.ஆர் மடியில் அமர்ந்து இசையின் ஆரம்பப் பாடத்தைச் செவிவழியே வாங்கிக் கொண்ட நான், ஏறக்குறைய 1பத்தாண்டுகள் கழித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கிடார் கற்றுக் கொள்ள ஒரு இசை மேதையிடம் சேர்ந்தேன். அவருக்கு வீடு கிடையாது. ஒண்டிக்கட்டை. சென்னை, லஸ் முனையில் இருந்த ஒரு லாட்ஜ் மாடியில் நிரந்தர அறை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கேதான் குடியிருந்தார். மெய்யாகவே எப்போதும் குடியில் இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் அறையில் ஒரு ப்யானோ இருந்தது. அது மூடியே இருக்கும். எப்பொழுதாவது அவர் அதைத் திறந்து வாசிப்பார். முதலில் எனக்கு ‘ட்விங்கிள், ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ ஆகிய மழலைப் பாடல்களை கிடாரில் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். இரண்டு மாதங்கள் இந்த இரண்டு பாடல்களிலேயே கழிந்தன. எனக்குப் பொறுமை இல்லை. அத்துடன், ப்யானோ வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. ஒருநாள், என்னை ‘ஜாக் அண்ட் ஜில்’ வாசிக்கச் சொல்லி விட்டு, எப்பொழுதும் போல் வெளியே தனக்கு ஸ்ருதி ஏற்றிக் கொள்ள அவர் சென்ற சமயம் ப்யானோவைத் திறந்து தடவ ஆரம்பித்தேன். திடீரென்று அவர் வந்து விட்டார். ‘நீ கிடார் வாசிக்கும் லட்சணத்திற்குப் ப்யானோ ஆசையா’ என்று கோவமாக என்னைத் திட்டி விட்டு அனுப்பி விட்டார். அதோடு முடிந்தது என் கிடார் பயிற்சி. ஆனால், அந்த மாமேதையிடம் வந்து பல பிரபல இசையமைப்பாளர்கள் தாங்கள் மெட்டமைத்த பாடல்களுக்கான பின்னணி இசை முறைப்பாட்டை, ஆங்கிலத்தில் அரேஞ்மெண்ட் என்பார்கள், எழுதிக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். அதை விட, அவரிடம்தான் இன்னொரு மாமேதை இசை கற்றுக் கொண்டு பின்னாளில் முன்னணி இசையமைப்பாளராக உருவானார். குருவான மாமேதை தன்ராஜ் மாஸ்டர். அவரிடம் உருவான மாமேதை இளையராஜா.

    தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் வகுப்புச் சடார் என்று ஒரு முடிவுக்கு வந்தும், இசையுடன் எனக்கிருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. நான் இசையை விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை.

    போன பகுதிகளில் குறிப்பிட்ட கவிஞர்களுக்கெல்லாம் காலத்தாலும், நாத யோகம் பயிலும் சீலத்தாலும் முற்பட்ட ஒருவருடைய பாடல்கள் என்னை ஆட்கொண்டன. அந்தக் கிழவரோடு நேரடியாக நான் பேசிப் பழகியதில்லை. மார்கழி மாதங்களில் மயிலைக் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நாலு மாட வீதிகளிலும் அதிகாலைப் பொழுதில், வெடவெடக்கும் குளிரில் அவர் பஜனை செய்து கொண்டு வீதிவலம் போகும் போது நாலைந்து முறை நானும் அவர் திருக்கூட்டத்தில் ஒருவனாக, “நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே” என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல் சென்றிருக்கின்றேன். அவ்வளவுதான். என்றாலும் எனக்கு அந்த இளம் வயதில் (அப்போது புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன்) யாருக்கும் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.

    என் தந்தை விஸ்வம் வித்யா சாகர் என்றொரு பள்ளி நடத்திக் கொண்டிருந்தார். அது சென்னை, மயிலை, சாயிபாபா கோயில் எதிரில் உள்ள கபாலி நகரில் இருந்தது. அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். என் மற்றொரு சகோதரி மாலினிதான் முழுப் பொறுப்பும். அதில், அந்தக் கவிதைத் தாத்தாவின் பாடல்களை வைத்து அந்தத் தாத்தாவின் மகள் ‘பாரிஜாதம்’ என்ற நாட்டிய நாடகம் உருவாக்கித் தந்திருந்தார். அதில் கதைப் போக்குக்குச் சில பாடல்கள் இல்லாத குறையைப் போக்கச் சில பாடல்களை என் சகோதரி என்னை எழுதச் சொல்லி உருவான அந்த நாட்டிய நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் வித்யா சாகர் என்ற அந்தப் பள்ளியில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பானுரேகா என்ற பெண்மணியுடன் எனக்கு நட்புண்டானதும், ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி மகளான அவர் பின்னாளில் ரேகா என்ற புகழ்பெற்ற ஹிந்தி நட்சத்திரமாக ஜொலித்ததும் நம் கவிதைச் சரிதைக்குத் தேவையில்லை என்பதால் விட்டு விடுகிறேன்.

    நான் குறிப்பிட்ட கவிதைத் தாத்தா பழம்பெறும் பாடலாசிரியர் பாபனாசம் சிவன் அவர்கள். அவருடைய பாடல்களோடு என் பாடல்கள் கலந்து ஒரு நாடகம் உருவானது என்று சொன்னால் அது தெய்வம் தந்த வரமாகத்தானே இருக்க முடியும்!

    பைந்தமிழ் மலர்ப்பா மாலை சூட்டியுன்PapanasamSivann
    பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
    சிந்தையும் என் நாவுமெந் நேரமும் – உன்
    திருப்பெயர்ப் புகழ் மறவாமையும் வேண்டும்
    வந்த உலகில் மதி மயங்கி
    அறு பகைவர் வசமாய் அழியாமல் உன்
    அருள்பெற வேண்டும்

    இப்படிக் காதலாகிக் கண்ணீர் மல்கச் செய்யும் பாபநாசம் சிவனின் பாடல்களை எம்.கே.தியாகராஜ பாகவதரின் தேன்குரலில் கேட்டு எத்தனை முறை நெகிழ்ந்திருக்கிறேன்!

    பாபநாசம் சிவனின் மகள் நீலா ராமமூர்த்தி அம்மையார்தான் மேலே நான் குறிப்பிட்ட பாரிஜாத நாடகத்தைத் தம் தந்தையின் பாடல்களை வைத்து உருவாக்கித் தந்தவர்.

    அடுத்த ஆண்டு அந்தப் பள்ளி, தேவடி தெரு என்ற இடத்துக்கு மாறியது. இடம் மாறினாலும் தடம் மாறாமல் ஆண்டு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட மாலினி ஏற்பாடுகள் செய்தார். அவருடன், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட ஒரு மங்கையும் சேர்ந்து ஒரு முழு நாட்டிய நாடகம் எழுதித் தரச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் குறிப்பிட்ட மங்கை சங்கீத ஞானம் மிக்கவர்; டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி; ‘நீலு அக்கா’ என்று நான் அழைத்த பாசம் மிக்க சகோதரி. நான் எழுத, அவர் மெட்டமைக்க, துர்க்கா மிஸ் என்ற ஆசிரியை பாடப் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற நாட்டிய நாடகம் உருவானது. அதற்கு ஆர்மோனியம் வாசித்தவர் ராமமூர்த்தி என்ற பெரியவர். தசரதன், கைகேயியிடம் பலவாறு வாதாடியும் அவள் தான் கேட்ட இரு வரங்களில் பிடிவாதமாக இருந்ததால், கடைசியில்,

    என்னுயிரைக் கேட்கின்றாய் என்ன செய்வேன்
    இருந்தாலும் நானுனக்குக் கட்டுப் பட்டேன்
    சொன்னசொல்லைக் காக்க இரு வரமும் தந்தேன்
    சுகமுறுவாய் நானெந்தன் உயிரைத் தந்தேன்

    என்று பாடிக் கொண்டே தசரதனாக நடித்த சுஜாதா என்ற சிறுமி மயங்கிவிழுந்த காட்சியில் பலர் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட காட்சியைக் கண்டேன். அட, மீண்டும் சுபபந்துவராளி ராகம் அப்பா!

    என் மனத்தில் இசையும், கவிதையும் எப்படிக் கைகோத்துக் கொண்டு வளர்ந்தன என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

    ‘இசையா, கவிதையா என்று பட்டிமன்றம் வைத்தால் நீ எந்தக் கட்சி?’ என்று என்னிடம் சிகாமணி, அதான் நம்ம பழைய புத்தி சிகாமணி, முன்பு ஒருமுறை கேட்டான். பட்டென்று பாட்டாக வந்தது பதில்:

    உனக்குத் தெரியும் கவிதை என்றால்
    உயரப் பறப்பதென்று
    எனக்குத் தெரியும் இசையென் றாலது
    என்னை இழப்பதென்று
    பறந்து கொண்டே இழந்தது பாதி
    இழக்க இழக்க வளர்ந்தது மீதி

    இவ்வாறு, 1969-70 களில், அதாவது என் பதினாறு வயதினிலே, இசையும், கவிதையுமாய் என் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அதில், இல்லை என் நெஞ்சில், இல்லை இல்லை, என் உயிரில் இசைக்கவிதையாகவே அவள் நுழைந்தாள். அந்தக் கதை.. .. ! பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    படங்களுக்கு நன்றி:

    http://movieraghas.blogspot.in/2008/06/blog-post_12.html

    http://malarum.com/

    Share
  • கண்கள் பார்க்கட்டும்…

    ஜெயஸ்ரீ ஷங்கர் 
    வையகமே ஒரு
    வண்ண வானம்
    கதிரொளி செய்யும்
    மாயாஜாலம்

    உயர்மலை பனியருவி
    நீள் நதி நீலக் கடல்
    வேடிக்கை காட்டும்
    பொன் மேகங்கள்

    பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும்
    வண்ண மலரினங்கள்
    கருவண்டுகள் சுற்றும்
    தாமரைக் குளங்கள்

    மலரிணை இறகு கொண்ட
    ஓவிய ஆடை கட்டி
    தேனுக்கு அலையும்
    பட்டான பூச்சிகள்

    உயர்ந்தும் படர்ந்தும்
    தென்றலோடு
    ஒய்யாரமாடும்
    தாவர சங்கமங்கள்

    விண்ணையும் மண்ணையும்
    வண்ணங்களால் மேகங்கள்
    அளக்கும் வானவில்லின்
    கம்பீர ஜாலங்கள்

    நாளெல்லாம் நடந்து
    களைத்த கதிரவன்
    கடல்குளிக்க சந்தியாகால
    வெட்கச் சிவப்புகள்

    பூமியெங்கும் கருமையை
    இறைத்த இருளரசனை
    விடியும்வரை எதிர்த்து நின்ற
    வெண்ணிலவின் சிரித்தமுகம்

    சோகம் சுமந்த மனங்கள்
    சுகம் பெறவே இயற்கை
    அன்னையென ஓடிவந்து
    அணைக்கும் பூமியிது

    கருவிழிகள் காணும் லோகம்
    ஏதுமறியா வெண்ணிலா விழிகள்
    பார்வை அறியா பரிதாப முகங்கள்
    இருளோடு அலைபாயும்
    மௌனப் பட்டாம்பூச்சிகள்….!

    தன்முகம் தானறியா முகம்
    பார்க்கும் கண்ணாடிகள்…!
    நொறுங்கும் இதயத்துள்
    இருளின் ரீங்காரங்கள்

    செவியும் குரலும்
    ஜீவனுக்கு ஒளியாக
    வழி சொல்லும்
    இரண்டு கண்கள்…!

    ஆதாரக் கண்கள்
    மூடிக் கிடந்தாலும்
    சேதாரம் ஏதுமில்லை
    ஆதரவுக் கரங்கள்
    திறந்து கொண்டால்
    ஆதரவு உத்திரவாதமுண்டு..

    வீழ்ந்த மரத்தின் விதையெடுத்து
    மீண்டும் மண் புதைத்து
    முளைவிடக் காத்திருக்கும்
    ஈர மனங்களே…!

    கண்களைச் சாம்பலாக்கிடாது
    சவாலாக்கி மீண்டும் காணவிடு ..!
    மறைந்த பின்னும் நீ பிறந்த
    அடையாளமாய் இன்னொரு
    முகத்தில் உனது அறிமுகம்!

    பார்வை பெற்ற புதியவன்
    காணும் உலகெங்கும்
    நிறைந்த இறைவனாய்
    உன்னையும் நினைப்பது …!

     

     

     

    Share
  • கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    என் சின்ன வயதில் நெஞ்சுக்குள் சுழன்று கொண்டிருந்த பாட்டு.. எம். எஸ். ராஜேஸ்வரி குரலில் ஒரு தென்றல் வந்து தவழும்..

    Nehruநேரு மாமா அங்கு ஒரு நாள் வந்திருந்தாராம் .. வார்த்தைகளில் கவிஞர் தஞ்சைவாணன் ஒரு பாடல் வழியாக ஒரு சரித்திரத்தை… எழுதி வைக்க..

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையும் நம்மை ஈர்க்க … இப்போதும் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது மனம்.

    பண்டிதர் ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்திய தேசம் கண்ணீர் வடித்தது.. அந்த சோகம் ஒவ்வொரு நெஞ்சிலும் அப்பியிருந்தது.

    அன்றைய நாளில் வெளியான பொன்னான வாழ்வு என்கிற திரைப்படத்திலும் இந்தப் பதிவு அழகாக .. நேர்த்தியாக.. இனிமையாக.. அமைத்திருந்தார்கள்

    என்பதுதான் சிறப்பு. ரோஜா மலருடன் நேருவின் பிணைப்பு.. அதனை கவிஞர் கையாண்டிருக்கிற விதம்.. பாருங்கள்…

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்

    குழந்தைக் குரலெடுத்து கூட்டும் இன்பத்தைத் தன் பாடல்களில் தரும் எம்.எஸ்.ராஜேஸ்வரி..

    ஒவ்வொரு வார்த்தையோடும் உள்ளத்தைப் பறிகொடுத்து.. பாவங்களுடன்.. பாடிய பாடலிது..

    சுகத்தையும் சோகத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்ள … இது போன்ற பாடல்களின் பங்களிப்பு அலாதி..

    அதுவும் காலத்தின் ஒரு பதிவாய் .. கவிஞர் தஞ்சைவாணன் இயற்றிய வரிகளுக்கும் இறப்பில்லையே…

    மதுரையில் ஒரு தியேட்டரில் சிறு வயதில் பார்த்தபோது.. இந்தப் பாடல் காட்சியில் என் கண்களில் மழை.. இன்னும் நெஞ்சத்தை ஈரமாக்கி வைத்திருக்கிறது.

    படம் : பொன்னான வாழ்வு
    குரல் : M.S.ராஜேஸ்வரி..

    கதை கதையாம் கதை கதையாம் காரணமாம்
    அதை வரிவரியா பாடிடுவேன் பாடிடுவேன்

    ( கதை)

    வண்ண வண்ண மலர்கள் பூத்த தோட்டத்திலே – ஒரு
    சின்ன அழகு ரோஜாச்செடி வளர்ந்திருந்ததாம்
    நேரு மாமா ஒரு நாள் அங்கு வந்திருந்தாராம்
    ரோஜா மலரை எடுத்து மார்பில் அணிந்து கொண்டாராம்
    நல்ல மணம் வீசுகின்ற ரோஜா மலருமே – தன்
    உள்ளத்திலே பெருமையோடு மகிழ்ச்சி அடைந்ததாம்

    ( கதை )

    மறுநாள் அவர் வருவார் என் பூத்திருந்ததாம்
    அவர் வரும் வழியை எதிர்பார்த்துக் காத்திருந்ததாம்
    தென்றல் காற்று புயலாக மாறி வீசியதாம்
    திடீர் என்று நேரு மறைந்த சேதி வந்ததாம்.

    அதனைக் கேட்டு ரோஜாமலரும் வாடிப் போனதுவாம்
    நேருஜியை அமர லோகம் தேடிப் போனதுவாம்..
    அவர் முன்னே சென்றதாம்..
    அன்பு நெஞ்சைத் தொட்டதாம்..
    கண்ணீர் விட்டதாம்..
    தேம்பித் தேம்பி அழுததாம்..

    பூவின் வருத்தம்தன்னை நேரு புரிந்து கொண்டாராம்
    நான் இறந்ததற்கு யாரும் அழக் கூடாதென்றாராம்
    பாரதத்தைக் காத்திடுவோர் பலர் இருக்கின்றார்
    ஆதலினால் அமைதியாக வாழ்க என்றாராம்
    அப்படியோ ரோஜாமலர் திரும்பி வந்ததாம்
    அவர் நினைவாய் உலகில் மீண்டும் பிறந்து மலர்ந்ததாம்

    ( கதை )

    http://www.mediafire.com/?ujnkznzymyd

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(114)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்…

    ஊரெல்லாம் திருவிழா, காரெல்லாம் இங்கிலாந்துக் கொடி, பேச்செல்லாம் இங்கிலாந்து உதை பந்தாட்ட அணியைப் பற்றி, என்ன எதைபற்றிய அலசல் எனும் கேள்வி எழுகிறதா ?

    உலகக் கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்தது. மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து அணி பிரேஸில் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தது முதல் எப்போதும் நான்கு வருடத்திற்கொருமுறை நடைபெறும் இவ்வுதைப் பந்தாட்டப் போட்டியை மிகவும் ஆர்வத்துடன் இரசிப்பதுண்டு.

    என்ன அதிலே விஷேசம் என்கிறீர்களா ?

    அடிப்படை வசதியற்ற ஏழ்மை சூழ்ந்த நாடுகள் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளுடன் சமதளத்தில் போட்டியிடும் ஒரே நிகழ்வு எனும் காரணமே !

    இதிலே போட்டியிடும் பல நாடுகள் பொருளாதர நிலையிலே பங்கு பெறும் பல நாடுகளை அண்மிக்கக் கூட முடியாது. இருப்பினும் இப்போட்டிக்குத் தமது அணிகளைத் தயார் செய்து மிகுந்த செலவுகளுடன் கூடிய பயிற்சிகளை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி இப்போட்டிகளில் பங்கு கொள்ள வைக்கிறார்கள்.

    ஆனால் இப்போட்டிகளில் பங்கு பெற்றும் தமது நாடுகளை தெருவோரம் நின்று தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் காட்சிக் கண்ணாடிகளின் முன் நின்று பார்த்துக் கைதட்டி ரசிக்கும் அவ்வேழை மக்கள் அதே உணவுக்குக் கூட வழியில்லா நிலையில் தான்.

    என்ன உலகமடா இது என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ?

    சரி இனி எமது நாடான இங்கிலாந்து நாட்டின் நிலைமைக்கு வருவோம். 1966ம் ஆண்டு உலக உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று உலகச் சாம்பியன்களாக வலம் வந்த பின்பு இன்றுவரை உதைபந்தாட்டப் போட்டியை நாம் தான் கண்டுபிடித்தோம் ( அதுவேறு சர்ச்சை) என்று மார்தட்டிக் கொள்ளும் இங்கிலாந்து நாட்டிற்கு மீண்டும் அந்தச் சந்தர்ப்பம் இன்றுவரை எட்டாமலே போகிறது.

    இது ஒருவகை சாபமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது .

    உலக அளவிலேயே உதைபந்தாட்டம் முக்கியமான விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்தில் நடப்பதே மிகவும் பிரசித்து பெற்றது.

    ஏனைய உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள திறமையான உதைபந்தாட்ட வீரர்கள் பலர் இங்கிலாந்தின் உள்நாட்டு உதைபந்தாட்ட அணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

    இதற்கு முக்கிய காரணமாக இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்டத்தின் தரத்தின் உயர்வைக் குறிப்பிடுகிறார்கள்.

    இத்தகைய உயர் அபிப்பிராயத்தினைக் கொண்ட உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடானது 1966ம் ஆண்டிற்குப் பின்னால் ஒரு தடவையாவது உலக உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்லவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமே !

    இங்கிலாந்து உதைபந்தாட்ட நிர்வாகக் குழுவினரும் இதுவரை எத்தனையோ திறமையான வெளிநாட்டு பயிற்சியாளர்களைத் தமது அணிக்கு முதன்மைப் பயிற்சியாளர்களாக நியமித்தும் அவர்களது இலக்கை இதுவரை அவர்களால் அடைய முடியவில்லை.

    FIFA 2014 England2FIFA 2014 England

    இங்கிலாந்து நாட்டின் உதைபந்தாட்ட உலகக் கோப்பை எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமடைந்தவர்களில் நானும் ஒருவன் .

    என்ன செய்வது இனி 2018ம் ஆண்டை நோக்கி எமது ஆவலைத் திருப்ப வேண்டியதுதான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    படம் உதவி: Getty Images, www.gettyimages.com

    Share
  • கிராண்ட் கேனியன் பயணக் கட்டுரை

    செம்பூர் நீலு

    நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆங்கிலத்தில் கைடு பெண்ணரசியின் நேர்முக வர்ணனை.

    grand canyon1

    லாஸ் விகாஸிலிருந்து தென் கிழக்கில் 30 மைல் தூரத்தில் ஓடும் கொலராடோ நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் அணை. 1930 ஆண்டில் கட்டப்பட்டது. 1250 அடி நீளமும் 730 அடி உயரமும் உள்ள இந்த அணை கொலராடோ நதியின் வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கும் மின்சார உற்பத்திக்கும் வேண்டி கட்டப்பட்டது.

    முதலில் இந்த அணை “பௌல்டர் அணை” என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1947ம் ஆண்டு, 31 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த “ஹெர்பர்ட் ஹூவர்” என்பவரின் ஞாபகார்த்தமாக “ஹுவர் டாம்” என்று பெயர் சூட்டப்பட்டது

    மேலிருந்தவறே கொலராடொ நதியில் கட்டப்பட்டிருக்கும் “ஹூவர் அணை” யின் தரிசனம்.

                                                                                                                        ஹூவர் அணை
    grand canyon2

    அடுத்த இருபது நிமிடங்களில் விமானம் தறையிறங்கியது. வரிசையாக எல்லோரையும் அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்றார்.

    grand canyon3

    அடுத்த 15 நிமிடஙளில் ஹெலிகாப்டர் மூலமாக 3500 அடி கீழே ஒடிக் கொண்டிருக்கும் கொலராடொ நதிக்கரைக்கு பயணம். ஐவர்  அமரக்கூடிய ஹெலிகாப்டர். ஐந்து  நிமிடங்களில் நதிக்கரையில் ஹெலிகாப்டர் தறை இறங்கியது.

    எங்களுடன் வந்த மற்ற சுற்றுலா நண்பர்களும் 3 ஹெலிகாப்டர்களில் வந்து சேர்ந்ந்தனர். அடுத்தது கொலராடொ நதியில் படகுப்பயணம். இரண்டு விசைப்படகுகளில். கரை புரண்டு வேகத்துடன் ஒடும் நதி. அதை எதிர்த்து விசைப்படகு அமைதியாக சென்றது. இரு மருங்கிலும் உயரமான மலைப்பகுதி.

    grand canyon4

    30 நிமிடங்களில் பயணம் முடிந்தது. படகோட்டி ஸ்பானிஷ் மொழியில் மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டிருந்தார். அவரே புகைப்படம் எடுப்பதற்கும் உதவியாக இருந்தார். மறுபடியும் ஹெலிகாப்டரில் பயணித்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தோம். விமான பயணத்திற்கு முன்னால் எல்லொருக்கும் ஒரு டிஃபன் பொட்டலம் கொடுத்தார்கள் அதில் காய்கறிகளுடன் கூடிய இரு பன் ரொட்டி, இரண்டு தடிமனான பிஸ்கட், ஒரு கொககோலா கேன். அதை ஒரு பிடிபிடித்துவிட்டு எல்லொரும் ஒரு வால்வோ பஸ்ஸில் 15 மைல் தொலைவிலுள்ள “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கிற்கு” 20 நிமிட பயணம்.

    40 மில்லிய்ன டாலர் செலவில் இரும்பினாலும் கண்ணாடியாலும் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கை வாக்  (சுற்று சூழல் பாழாகிவிடும் என்ற பலமான எதிர்ப்புடன்) ஒரு எஞ்ஜினியரிங் அற்புதம். 2007ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. பிரபல அப்போலொ விண்வெளி ராக்கெட்டில் பயணித்து சந்திர மண்டலத்தை ஆராயிச்சி செய்த விஞ்ஞானி “பஸ் ஆல்டெரின்” 2007 மார்ச் மாதம் 20 ஆம் தேதி சுற்றுலா பயணிகளுடன் இதில் நடந்து துவக்கிவைத்தார். இதன் முக்கியமான சிறப்பு அம்சங்கள்

    grand canyon5grand canyon6

    “ U ” வடிவமுள்ள கண்ணாடியாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட அமைப்பு மலை விளிம்பிலிருந்து 70 அடி முன்னாலும் மலை அடிவாரத்திலிருந்து 4000 அடி உயரத்தில் நிற்கிறது. அதன் எதிர்ப்பகுதி மலை மூன்று மைல் தொலைவிலிருக்கிறது.

    4 இன்ச் கடினமான கண்ணாடி படிமங்களை இதில் உபயோகபடுத்தியிருக்கிறார்கள், 70 டன் எடையை தாங்கும் சக்திகொண்ட்து. அதாவது சராசரி 175 பவுண்ட் எடையுள்ள 800 மனிதர்கள் ஒரே சமயத்தல் இதில் நடக்கலாம். இந்த அமைப்பு 8 மாக்னிட்யூட் பூகம்பத்தை தாங்கவும் 8 திசையிலிருந்து 80 முதல் 100 மைல் வேகத்தில் அடிக்கும் புயலை தாங்கும் சக்தியும் கொண்ட்து. ஆனாலும் ஸேஃப்டியை கணக்கில்கொண்டு ஒரு சமயத்தில் 120 மனிதர்களை மட்டும் இதில் நடக்க அனுமதிக்கின்றனர்..

    grand canyon0

    கண்ணாடி படிவங்களில் கீறல் மற்றும் சிராய்ப்பு வரமாலிருப்பதற்காக சுற்றுலா பயணிகள் செருப்பு / ஷூ அணிந்த கால்களில் ஸ்பெஷல் காலுறைகள் அணிந்து செல்லவேண்டும். காமிராக்கள் / மொபைல் போன்கள் அனுமதியில்லை.

    கிராண்ட் கேனியன் இலாக்காவை சேர்ந்த பழங்குடி மக்களான “ஹுஅலாபைஸ்” செவ்விந்தியர் இனத்தவரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக வேண்டி லாஸ் விகாஸை சேர்ந்த தொழிலதிபர் டேவிட் ஜின் என்பவர் லோக்ஸா எஞ்ஜினீரிங் கம்பெனியின் துணையுடன் இந்த “கிராண்ட் கேனியன் ஸ்கைவாக்கை” உருவாக்கினார்

    சுற்றுலா குழுவினருடன் செக்யூரிட்டி சோதனக்கு ப்பிறகு ஸ்கை வாக்கின் உள்ளே சென்றேன். ஆஹா!!!  என்ன ஒரு காட்சி. கண்ணாடி படிவங்கள் வழியாக 4000 அடி கீழேயுள்ள மலை பள்ளத்தாக்கை பார்கும்போது உடல் புல்லரிக்கிறது.  சுற்றி வந்து மூன்று பக்கஙளில் உள்ள மலை பள்ளத்தாக்கை காண கண் கோடி வேண்டும். என்ன ஒரு அருமையான காட்சி. மனத்தில் ஒரு பயம் தோன்றுகிற பயங்கரமான மலை பள்ளத்தாக்கு. ஒரு மணி நேரம் இருந்துவிட்டு அருகில் இருக்கும் செவ்விந்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை அற்புதமாக சித்தரிக்கும் ஒரு கண்காட்சியும் பார்த்தோம். .

                                                                                           செவ்விந்தியர்கள் வாழ்ந்த குடிசைகள்
    grand canyon7
    இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் அமெரிக்க கைட் பெண் அவசரபடுத்தினாள். எல்லோரும் பஸ்ஸில் அமர்ந்து   ஷாப்பிங் செண்டர் கம் ரெஸ்டாரெண்டிற்கு வந்தோம். அடுத்த 15 நிமிடஙளில் காலையில் வந்த சிறிய விமானத்தில் பயணித்து லாஸ் விகாஸ் வந்து சேர்ந்தோம். இந்த கிராண்ட் கேனியன் சுற்றுலா பயணம் மறக்க முடியாத ஒன்று.

    செம்புர் நீலு ( நீலகண்டன்)
    ஃப்ரீமாண்ட் காலிஃபோர்னியா

    Share
  • திருமால் திருப்புகழ் (131)

    கிரேசி மோகன்

    Tulasi priyam - #Krishnafortoday - Keshav
    Tulasi priyam – #Krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————-

    Experiments with Krishna series. #Krishnafortoday
    Experiments with Krishna series. #Krishnafortoday

    ரங்கா, அலர்மேல்வாழ் மங்கா, அரவணைக்கும்,
    அங்கா, அசுரர்க்(கு) அரியுருவில், -சிங்கா,
    பிரித்தாலும் மங்கா, பரிபூர்ண பங்கா,
    உரித்தாவாய் என்னை உவந்து….(302)

    சகஸ்ரமவன் நாமம், சகலமவன் ரூபம்,
    ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர், -அகஸ்மாத்தாய்,
    வானம் வசப்பட, நானவன் தானென்ற,
    ஞானத்தில் நிற்பார் நிலைத்து….(303)

    தீனர்க்(கு) அருளூற்றாய், ஈனர்க்(கு) இருள்கூற்றாய்,
    மீனமாய் ஏனசிம்ம வாமன, -மூணான,
    ராம, கிருஷ்ண, கலிபுருஷ னாய்வந்த,
    நாம சகஸ்ரனை நாடு….(304)

    எங்குநாம் சென்றாலும், அங்கவன் முன்னம்போய்,
    தங்கு தடைகள் தவிர்த்திடுவான், -செங்கண்மால்,
    தாளிரெண்டைப் பற்றித், துதிப்போர்தம் தீவினை,
    தாளிரெண் டாகும் தெறித்து….(305)

    இங்கிருப்ப தெல்லாம், இறப்பும் பிறப்புமாம்,
    எங்கெங்கும் என்றும் எதிலுமுள்ள, -செங்கண்மால்,
    இல்லா இடத்திலும், இல்லா(து) இருந்திடுவான்,
    பொல்லாப் பயலவனைப் பேணு….(306)

    உண்டா கடவுளென்றால், உண்டவன் கண்ணனென்பேன்,
    கண்டதுண்டா என்றால், கருத்தவனை, -விண்டுரைத்த,
    ஆழ்வார்கள் பாட்டில், அதிலொன்றுக்(கு) ஈடாக,
    பாழ்வாய் புகல்கையில் பார்….(307)

    —————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

    Share
  • திருமால் திருப்புகழ் (130)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series. #krishnafortoday - Keshav
    Vaatsalyam series. #krishnafortoday – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ”கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–

    Krithi drawings - Shambo, Shambo, Shivashambo Swayambo... Keshav
    Krithi drawings – Shambo, Shambo, Shivashambo Swayambo… Keshav

    பூவிருக்கும் உந்தியா, காவிருக்கும் வேங்கட,
    கோவிலுக்குள் வாழ்கின்ற கோவிந்தா, -பாவிருக்கும்,
    ஆழ்வார்கள் நாவிருக்கும், ஆண்டவா வாயிருக்க,
    தாழ்வான போதுமென்னுள் தாவு….(296)

    என்னத்தைக் கண்டேன்நான், உன்பித்தம் கொண்டதால்,
    கண்ணைத் திறந்துகேள் கார்முகிலே, -உன்னொத்த,
    தெய்வமிங்(கு) இல்லையென்ற, தற்பெருமை தேவையா,
    தொய்வுறுமுன் தற்பரமே தோன்று….(297)

    குன்றெடுத்த கோவிந்தன், கன்றணைக்கும் கோபாலன்,
    என்றுனக்கு கோலங்கள் ஏராளம், -இன்றெனக்கு,
    காட்சி அளித்திடுவாய், மோட்ச அரசாங்கம்,
    ஆட்சிசெய் சாட்சிபூதம் ஆய்….(298)

    வண்டரி யென்றரி, யாமலே வந்திரு,
    புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற, -பண்டரி,
    விட்டலா செங்கலை, விட்டுவா வெவ்வினை
    கொட்டுதே தேளாய்க் கடுத்து….(299)

    நித்திய சூரியாய், நூற்றியெட்டாம் தேசத்து,
    முத்தியை வேண்டேன் முளைக்கதிரே, -சத்தியம்,
    நன்குணர்ந்து பேத, நிலைகடந்து பூமியில்,
    நின்குணமாய் நிற்கவேண்டும் நான்….(300)

    வீசும் புயலில், விளையாடும் தென்றலில்,
    நாசிக்குள் சென்றுவரும் நம்மூச்சில், -ஓசை,
    இலாத பொழுதிலும் ஓமென்(று) ஒலிக்கும்
    கலாபக் கடவுளைக் காண்….(301)

    —————————————————————————————————————

    படத்திற்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_12_01_archive.html

     

     

    Share
  • கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? – கவிதை

    –தேமொழி.

    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

    Maya Angelou

    கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

     

    சுதந்திர பறவை வேகமெடுத்து
    காற்றில் பாய்ந்தது,
    காற்றோட்டத்தின் எல்லை வரை
    காற்றில் மிதந்தது,
    செங்கதிரின் வண்ணத்தில் தன்
    சிறகைத் தோய்த்து
    வானம் எனக்கே  சொந்தம்
    என எண்ணத் துணிந்தது

    கூண்டுப் பறவையோ குறுகிய
    கூண்டில் கொதிப்புடன் உலவியது,
    பொங்கி வரும் ஆத்திரம்
    அதன் கண்ணை மறைத்தது,
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

    சுதந்திர பறவை மற்றொரு
    இளந் தென்றலை நினைந்தது
    அசையும் மரங்களின் பெருமூச்சாய்
    மெல்லத் தவழ்ந்து   செல்லும்
    பருவக் காற்றை நினைந்தது
    காலைக்கதிரொளியில்
    ஒளிர்ந்திடும் புல்வெளியில்
    ஊர்ந்திடும் கொழுத்தபுழு
    உணவை மனதினில்  நினைந்தது
    இந்த வானமே எனதென மகிழ்ந்தது

    கூண்டுப்பறவையோ கனவுகளின்
    கல்லறை மேடையில் நின்றது
    பயங்கரக் கனவின் அலறலாக
    அதன் நிழல்  ஓலமிட்டது
    சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
    குரலெடுத்துப்  பாட முனைந்தது

    கூண்டுப்பறவை பாடுகிறது
    அச்சத்துடன் நடுங்கும் குரலில்
    அனுபவிக்காதவற்றை  எண்ணி
    மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
    அந்தப் பாடல் எதிரொலித்தது
    தொலை தூரத்து  மலையில்
    கூண்டுப்பறவையின்  வேட்கை
    தொனிக்கும் விடுதலைப் பாடல்

     

    மாயா ஆஞ்சலூ கவிதைகளின் மொழி பெயர்ப்பு:
    நான் எழுவேன் !!! (Still I Rise – Poem by Maya Angelou)
    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? (Caged Bird – Poem by Maya Angelou)
    தனிமையிலே … (Alone – Poem by Maya Angelo)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 15

    கே.ரவி

    என் வளர்ப்புத் தந்தை கவிராஜ காளமேகம் படம் தயாரிக்கத் தொடங்கிய போது எங்கள் இல்லம் மயிலை, பலாத்தோப்பில் இருந்தது. அங்கேதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன். கையை மடித்து விட்டிருந்த வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, நெற்றியிலே குங்குமப் பொட்டு, மீசை. இந்தத் தோற்றத்துடன் அங்கே வந்தவர் கவிஞர் வாலி.

    images (1)

    மாமா படத்துக்குப் பாட்டெழுத ஏ.எல்.நாராயணன் அழைத்ததும் ‘ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நான் அவர் வீட்டுக்கே வந்து விடுகிறேன், அவா நம்ம ஊர்க்காரா’ என்று சொல்லி வந்து விட்டராம்.

    ஏற்கனவே இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும், ஏ.எல்.நாராயணனும் வந்து காத்திருந்தனர். எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரே வெற்றிலை மணம், ஆர்மோனியச் சத்தம்.

    ஶ்ரீரங்கம் கோவில் மடப் பள்ளியில் சமையல் செய்து கொண்டே பின்னாளில் காளமேகமாக மாற இருக்கும் கதாநாயகன் நையாண்டியாகப் பாடவேண்டிய பாடல் என்று நாராயணன் விளக்க, உடனே வாலி, நானும் அதே ஊர், ஶ்ரீரங்கம்தான் என்று சொல்லி விட்டு, 5 நிமிடங்களுக்குள் பாடலை அமர்க்களமாக எழுதிக் கொடுத்த காட்சியைக் கண்குளிரக் கண்டும், செவிகுளிரக் கேட்டும் ரசித்தேன்.

    ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
    ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே

    சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
    இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
    பக்தாளுக்குத் தெரியாதோ பெருமாளின் சங்கதி
    உள்ளூரில் ரெண்டிருக்க உறையூரில் இன்னொருத்தி

    கைவழியே நெய்வழியும் பொங்கலுண்டு காலையிலே
    சித்திரான்னம் படைப்பதுண்டு மத்தியான வேளையிலே
    ஊருக்கெல்லாம் சோறூட்டும் சாமியெங்க சாமிதான்
    நான்சமச்சுப் போடாட்டா நாள்முழுக்கப் பட்டினிதான்

    பாட்டு முடிவதற்குள் டி.எம்.செளந்தரராஜனும் வந்து சேர்கிறார். எஸ்.எம்.எஸ் மெட்டுச் சொல்லி வாசிக்க, அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடிக் காட்ட, அடாடா, பெருமாளே கள்ளத்துயில் நீங்கி எழுந்து வந்து சிவதாண்டவம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

    maxresdefault

    இந்தப் பாட்டை கேட்கச் சொடுக்கலாமே,

    http://youtu.be/4XSsgperblo

    என்னையும் கவிஞன் என்று ஏ.எல்.நாராயணன் வாலிக்கு அறிமுகம் செய்து வைத்ததும், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, ஒழுங்காப் படி” என்றார் வாலி.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவிஞர் வாலியை நான் பல ஆண்டுகள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும் அவருடைய பாடல் வரிகள் பல என்னை ஆட்கொண்ட வரிகள்.

    “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா
    மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர வெறுத்திடுமா”

    எவ்வளவு அற்புதமான வரிகள்!

    “இடையோ இல்லை இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் – சின்னக்
    குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்”

    சொற்கள் எப்படி இயல்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு வருகின்றன!

    வாலியை அடுத்தமுறை நான் பார்த்தது 1997-ல் அவருடைய இல்லத்தில். வானவில் பண்பாட்டு மையம் எடுத்த இந்திய சுதந்திரப் பொன்விழாக் கவியரங்கத்துக்கு அவரை அழைக்கச் சென்றிருந்தேன். அப்போது என்ன சொன்னார் தெரியுமா? “ஏன்யா, நான் தப்பித் தவறி ஒரு நல்ல பாட்டு எழுதிட்டாப் போச்சு, அதையும் கண்ணதாசன் பாட்டுன்னு சொல்லிடுவீங்களே”. எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவரே விளக்கினார். நான் எழுதி வெளியிட்டு, அவருக்கும் அனுப்பி வைத்த ‘நமக்குத் தொழில் கவிதை’ என்ற நூலில்,

    “ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்கா கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க”

    என்ற பாட்டின் எளிய நடையை நான் பாராட்டி விட்டு அதைக் கண்ணதாசன் பாடல் என்று குறிப்பிட்டு விட்டேனாம். சிரித்துக் கொண்டே கோபித்துக் கொண்டார். நான் மன்னிப்புக் கேட்டேன். அவர் என் நூலை முழுமையாகப் படித்திருந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தேன்.

    பின்னொரு சமயம் சபரிமலைக்கு என்னுடன் யாத்திரை போய்க்கொண்டிருந்த நண்பர் குழுவின் பக்திப் பாடல்கள் அடங்கிய ‘சந்தன மணம் கமழ் ஐய்யப்பன்’ என்ற பாட்டு நூலை வாலியைக் கொண்டு சென்னை ஆஸ்திக சமாஜத்தில் வெளியிட எங்கள் குருசாமி, என் மூத்த சகோதரர் ஶ்ரீதர், ஏற்பாடு செய்திருந்தார். அதை வெளியிட்டுப் பேசிய வாலி அவர்கள் அதில் இருந்த என் பாடல் ஒன்றை முழுக்கச் சொல்லிப் பாராட்டினார். அந்தப் பாடல்:

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    பொய்யில் அமுக்கிப் புழுதியிலே என்னைப்
    புரள விட்டு நீ ஏய்க்கிறே – விட்டுப்
    போவானான்னு பாக்குறே

    சங்கீதம் தெரிஞ்ச சாஸ்திரக் காரங்க
    சந்தோஷமா ஒன்னப் பாடுறாங்க
    சங்கோஜங் கொண்ட பேர்வழிங்க – சத்தம்
    போடாம ஒன்னத் தேடுறாங்க
    எல்லாரும் ஒண்ணாக் கூடுறாங்க
    வில்லாளி வீரன்னு கூவுறாங்க
    வாச்சாலம் நானும் பழகலே – ஓன்
    வீராப்பும் எனக்கு வெளங்கலே

    வெளிச்சமில்லாத சாலையிலே – ஆள்
    அரவமில்லாத மூலயிலே – வெத்துக்
    காயிதமா நான் கெடக்குறேன் – ஓன்
    கைபடத்தான் படபடக்குறேன்
    பளிச்சுனு என்ன நீவிப்புட்டு – ஒரு
    பாட்டெழுதிக் கைநாட்டுவை
    பத்துத் தலமொறைக் கதுபோதும் – மக்கள்
    பாடுவாங்க நீ கேட்டுவை

    காட்டுல போயி குந்திக்குற – கண்ண
    மூடிக்கிட் டேதோ சிந்திக்குற – நான்
    பாட்டுக்குப் படுத்துத் தூங்கையிலே – ஒரு
    பாட்டாக வந்து சந்திக்கிற

    நெய் அபிஷேகம் ஜமாய்க்கிறே – என்னை
    எத்தன நாளா டபாய்க்கிறே
    மெய்யும் பொய்யும் கலந்துவச்சு – நான்
    மெரள மெரள சதாய்க்கிறே.

    மனம்திறந்து பாராட்டி விட்டுப் பேசி முடித்த பிறகு என் காதருகே வந்து ரகசியமாக மிரட்டினார்: “ராஜகோபாலா ஒங்கம்மா தோச வாத்தாளான்னு நீ சினிமாவுக்காக ஒரு ஆபாசப் பாட்டு எழுதினேன்னு மைக்குல சொல்லட்டுமா?” சிரித்துக் கொண்டேன்.

    நானும் அவரும் சந்தித்துக் கொண்ட போதெல்லாம், ஏதாவது எடக்கு முடக்காகவோ, பொய்க்கோபத்துடனோ என்னிடம் அவர் பேசியிருந்தாலும் அவருக்கு என் மீது அன்பும், பற்றும் இருந்ததை நான் உணரத் தவறவில்லை.

    பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தும் அதிகம் பேசவில்லை. அவருக்கு வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழாவில் ‘பாரதி விருது’ வழங்கிய போது, சாதரணமாக விருதுகள் பெறத் தாம் சம்மதிப்பதில்லை என்ற போதிலும், பாரதி பெயரால் தரப்படும் விருது என்பதாலும், நான் அழைத்த காரணத்தாலும் தாம் விருது பெற்றுக் கொள்ள வந்ததாகப் பேசி, என் மீது அவருக்கு இருந்த அன்பை உறுதிப் படுத்தினார்.

    அவர் இறைவனடி சேர்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன் அவருடன் நான் தொலைபேசியில் பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் சகோதரி மகள் ஸ்வர்ணமால்யா, “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்” என்ற தன் நாட்டிய நாடகத்தை ஒளிப்பேழையாக , அதாவது, டி.வி.டி யாகக் கொண்டுவர இருப்பதால், அதற்கு வாலி அவர்களின் முன்னுரை பெற்றுத் தர வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டாள். அது குறித்துத்தான், நான் வாலி அவர்களைத் தொலைபேசியில் கேட்டேன். அவர் சொன்னார்: ” ரவி, இப்போதெல்லாம் நான் போகிற வழிக்குப் புண்ணியம் தரக்கூடிய கடவுள் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறெதையும் படிப்பதில்லை. சிலப்பதிகாரமெல்லாம் இப்பொழுது படித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை” என்றார். நான் சொன்னேன், ” நீங்கள் இப்படிச் சொல்லலாமா? உங்களுக்குத் தெரியாததா? நானறிந்தவரை சிலப்பதிகாரம் ஒரு சிறந்த பக்தி இலக்கியம். ஆய்ச்சியர் குரவையில் எப்படியெல்லாம் திருமாலைப் போற்றியுள்ளார் இளங்கோவடிகள்!” என்று கூறிவிட்டுத் தொலபேசியிலேயே, “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே”, “நாராயணா என்னா நாவென்ன நாவே” ஆகிய வரிகளைச் சொல்லி, உங்கள் ஆழ்வார்களுக்கெல்லாம் முன்னோடி இளங்கோ சார்” என்று நான் சொன்னதும் சிறிது மெளனத்துக்குப் பிறகு அவர் சொன்னார்: ” சரி ரவி, நாளை நான் என் ஆச்சாரியன் அழகிய சிங்கர் மீது ஒரு காவியம் வெளியிடுகிறேன், ம்யூஸிக் அகடமியில், அங்கே வந்துவிடு பேசுவோம்” என்றார்.

    ஏதோ காரணம் மறுநாள் நான் அந்த விழாவுக்குப் போக முடியாமல் தடுத்து விட்டது. அதற்கு மறுநாளே அவருக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டதையும் இரண்டு வாரங்களில் அவர் நம்மைப் பிரிந்ததையும் இன்னும் நினைத்து வருந்துகிறேன்.

    அவருடைய கள்ளம் கபடமற்ற கவிதையுள்ளம் நான் நன்கு அறிவேன். புன்னகை என்பது இதயத்தோடு தொடர்புடையது, காதலியின் கன்னமோ காதலனின் கையோடு தொடர்புடையது என்ற நுட்பத்தை மிக எளிமையாக அவர் பாடியுள்ளதை நினைவு கூர்ந்தால், திரைப்படப் பாடல்கள் இலக்கிய சம்பந்தம் அற்றவை என்ற பேச்சுக்கே இடமில்லை. பாடுவோமே:

    “இந்தப் புன்னகை என்ன விலை – என்
    இதயம் சொன்ன விலை – இவள்
    கன்னங்கள் என்ன விலை – இந்தக்
    கைகள் தந்த விலை”.

    தொடரும்.

    Share
  • விடை

    -மன்னை சதிரா

    நாணத்தால் சிவந்த கண்கள்
    நகைதவழ்ந்து மின்னும் இதழ்கள்                       woman
    மான்கொடுத்த மருட்  பார்வையளே
    மனமிலையோ வாய் மலர்த்த!

    தங்கத்தில் வைரம் பதித்ததுபோல்
    அங்கமெலாம் அழகு மிளிர்ந்திடச்
    சிந்தையினிக்கும் செந்தமிழ்ச் சிலையே
    வந்து தானாக  மலர்வாய் திறவாயோ?

    நாளுக்கு நாளுன்னை நினைந்திரங்கி
    நான்மெலிந்து போனேன் வாடும்என்
    தோளுக்குத் தோள்கொடுக்க மனமிரங்கு!

    வாள்தோற்கும்  விழியழகுச் செல்வியே!
    வாய்  மலர என்னதடை? ஏது தடை?
    உன்னைச் சிலையென வர்ணித்ததாலா
    நான்விடுத்த சொல்லுக்கு விடையேயில்லை!

    Share
  • ஜெய் ஜெய் ஹரி போல்!

    -விசாலம்

    radhakrishnaமணிப்பூர் மக்களுக்குப் பங்குனி மாதப் பௌர்ணமி  வந்தாலே கொண்டாட்டம்தான். இந்த மாதத்தில்தான் இரண்டு விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடக்கும். நம் தீபாவளியின்போது  நாம், ’இருள் நீங்கி ஒளி பரவி நாடு நலமாகட்டும்! நாட்டு மக்கள் வளமாகட்டும்!’ என்று வாழ்த்துவதுபோல்  மணிப்பூர் மக்களும் இந்த விழாக்களால் இருள் நீங்கி ஒளி பரவி பல நன்மைகளும் சுபிட்சங்களும் கிடைக்கும் என நம்புகிறார்கள். அதுவும் வானத்தில் முழு நிலவு ஒளி வீசப்  பௌர்ணமி நிலவின் ஒளி எல்லா இடங்களிலும் பரவ ஆட்டமும் கொண்டாட்டமும் களைக்கட்டும். மணிப்பூர் இருக்கும் இடமும் கொள்ளை அழகு. இயற்கை அன்னை அங்கு நன்கு வியாபித்திருக்கிறாள்.

    இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில்  இருக்கும் மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் நதி ஓடும் அழகைச் சொல்வதா? மலைச்சரிவில் வெள்ளிக் கம்பிப்போல் வழியும் நீரின்  அழகைச்சொல்வதா? மலைப்பிரதேச ஊசி இலைக்காடுகளின் அழகைச்சொல்வதா? அங்கு ஆடும் மணிப்புரி நடனத்தின் அழகை ரசிப்பதா? இத்தனைக்கும் மேலாக அங்கு கொண்டாடப்படும் ‘யவொசாங்‘  என்ற திருவிழா மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

    மணிப்பூர் பாமன் என்ற பிராம்மண  மக்களுக்குத் தெய்வமாக விளங்குவது கீதை நாயகன்  கிருஷ்ணர்தான். இவர்கள் ராதா கிருஷ்ண பிரேமையை ‘ராஸ்லீலா’  என்ற நடனம் மூலம்  வெளிப்படுத்துவார்கள். ‘யவொசாங்’ என்றால் பக்தியுடன் கூடி ஆடிப்பாடுவது  என்று பொருள் கொள்ளலாம். இந்த விழாவுக்கென்று பெரிய கொட்டகை அமைக்கப்படும்; இது நதிக்கரை அருகில் அமைந்திருக்கப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். நாம் பந்தல் வாயிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது போல் அவர்களும் கொட்டகையைக் காய்கறிகளாலும் தோரணங்களாலும் அலங்காரிப்பர்.

    கொட்டகையில் ஒரு மேடை அமைப்பார்கள்.  பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச்சென்று  அங்கிருக்கும் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சிலையை ஒரு ரதத்தில் வைத்து மேளதாளத்துடன்  ஷெனாய் ஒலி மங்களகரமாக ஒலிக்க  ஊர்வலம் வருவார்கள். பின் அதை அந்த மேடையின் மேல் வைப்பார்கள். பின்னர் மக்கள் நலமாக வாழவும் முன்னாள்  மணிப்பூர் மன்னரின் சுபிட்சத்திற்காகவும்  பிரார்த்தனை நடக்கும். பின் “தஸ்டா” என்ற இசை நாடகம் தொடங்கும். இதில் அரசரின் வீர தீரங்களின் பெருமையைச் சில கலைஞர்கள் நடித்துக்காட்டுவார்கள்.

    அதன்பின் நாம் நிகழ்த்தும் கதாகாலட்சேபம் பாணியில் அவர்களும் ‘கதாவாசகம்” எனக் ’கண்ணனின்  அவதாரம், பால லீலைகள், பூதனை வதம்’ என்று தொடங்கி  நடத்துவார்கள். இதைக்கேட்கப் பலர் கூடுவார்கள். பின் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கும். பல ஆண்கள் கிருஷ்ணன் வேஷத்தில் வந்து புல்லாங்குழலை இசைப்பார்கள். பெண்களும் நெற்றியில்  சூடாமணி அணிந்து தங்களை கோபியர்களாக  வேடமணிந்து வட்டமாக  நின்றபடி சுழன்று சுழன்று நடனமாடுவதைப்பார்க்க உடலில் ஒரு  ஆன்மீக அனுபவம் ஏற்படுவதை உணரமுடியும். நாமும் அங்கு ராதையாகவோ அல்லது கிருஷ்ணனாகவோ  மாறிவிடுவோம். இது வசந்தகாலத்தில் நடப்பதால் ’வசந்த ராஸ்’ என்று சொல்வார்கள்.

    பின் வருவது கோலாட்டம்.  நல்ல நீளமான கோலாட்டங்கள் கைகளில் இருக்க எந்தக் கை எங்கு போய் லாவகமாக ஒலி எழுப்பி வருகிறது என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி அத்தனை வேகமான நடனம். கால்களோ பஞ்சு போல் தரையில் படிகிறதா இல்லையா என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி துள்ளித்துள்ளி ஒரு நடனம். சலங்கை ஒலியுடன் கோலாட்ட ரிதமுடன் மான் துள்ளி ஓடுவது போல்  இந்த நடனத்தைப் பார்க்க மனதில் ஒரு கிளுகிளுப்பு உண்டாகிறது. இந்த நடனத்தை  ‘சிருங்கார ராசா ‘  என்கிறார்கள்.

    பின் ஆரம்பமாகிறது ஜெய் ஜெய் ஹரி போல்’ முழக்கம். மேடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சைதன்ய மகாபிரபுவுக்கு அர்ச்சனையும் மங்கள ஆரத்தியும் ஆரம்பமாகிறது. ஆரத்தி முடிந்தப் பின்னரும் ’ஜெய் ஹரி போல்’ என்ற முழக்கம் தொடர்ந்து கேட்கிறது. பின் பிரசாதமாக இனிப்பு வழங்கப்படுகிறது.

     பின்னர் சைதன்ய சுவாமியின் சிலைப் பழையபடி கோயிலுக்குச்சென்று விடும். இதெல்லாம் முடிந்தபிறகு நடக்கும் வைபவம் மனதை எதோ செய்கிறது. இத்தனை அழகாகக்   கட்டப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட கொட்டகைக்கு அக்னி வைத்து எரிக்கப்படுவதைப் பார்த்தால் அது தேவையா எனத் தோன்றுகிறது. ஆனால் இது போல் செய்தால் தங்களின் மனக் கஷ்டங்கள், வியாதிகள் தீர்ந்து விடும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்தச்சூழ்நிலை புகையினால் எத்தனைக் கெட்டுப்போகிறது என்று யோசிப்பதில்லை. நாம்  ஹோமம் முடிந்தபின் பூர்ண ஆஹூதி என்று ஒரு சிறு மூட்டையைப் புடவையுடன் ஹோமத்தில் இடுவது வழக்கம். அதேபோல் இதையும் அவர்கள் “பூர்ண மாஷி ‘என்கிறார்கள் .

    இனி இரண்டாவது விழாவைப் பார்க்கலாம். இந்த விழா பார்க்க நாம் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலாவுக்கு வரவேண்டும் . நேராக கிருஷ்ணன் ராதா இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜி ராதேஸ்வரி என்ற கோயிலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் ராதா கிருஷ்ணனுக்கு வண்ணப் பொடிகளால் பூஜை நடக்கும்.ஹோலியின் போது வண்ணப் பொடிகளைத் தூவுவதுப்போல்  இங்கும் சிவப்பு, பச்சை, நீலம் என்று பல வண்ணக் கலவைகளைத் தூவி பூஜிக்கப் பார்க்க மிக அழகாக இருக்கும். பலர் பலவிதமான பக்தி பாடல்களைப் பாடுவார்கள்.  கோயில் வாசல் மண்டபத்தில் கிருஷ்ண பஜனையும் நடக்கும். அவர்கள் அடிக்கும் டோலும் அதை அடித்தபடியே சுழன்று சுழன்று ஆடும் நடனமும் காணக்கிடைக்காத ஒன்று. விழாக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொருவிதமாக நடந்தாலும் அது ஆன்மாவைத்தொட்டு ஆன்மீக வழியைக் காட்டுவது என்பது என்னவோ உண்மைதான்!

     

    Share
  • திருத்தணி முருகா.. தென்னவர் தலைவா..

    –காவிரிமைந்தன்.

    திருத்தணி முருகா

    சந்தக் கவிதை அருணகிரியாருக்கு வந்தகவியாவும் வழங்கியவன் கந்தநாதன்!  சிந்தையில் நிறைந்தபடி கந்தனை நினைத்தாலே முத்தமிழால் உள்ளம் துள்ளும்! எத்தனைப் பாடல்கள் எழுதினாலும் இன்பத்தேன் சிந்திடும்! அத் தமிழ்க் கடவுள் அவனாலே கற்பனை வளங்கள் பெருகும்! சக்தியின் மைந்தன்.. கருணையில் வள்ளல்!  சிவகுருபாலன்!.. நமைக் காக்கும் தெய்வம்!

    மலையரசி தாயால் மகிமை பெற்ற நம் கண்ணதாசன் – உள்ளம் உருகியே இயற்றிய பலத் திரைப்பாடல்கள் பக்திக்கு பல்லக்குத் தூக்கும்!  உருகாதோர் உள்ளமிங்கே ஒன்றிரண்டும் கிடையாது என்றே சொல்லும்!  கந்தன் கருணை முதல் திருவருள் முதலாக தமிழ்த் ‘தெய்வம்’ பற்றிய அவனது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்!

    arupadaiveedu_krstiruttani_murugathiruthani

     

    ‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கா கவியரசு கண்ணதாசன் இயற்றிய பைந்தமிழ்ப் பாசுரம்.. கர்நாடக இசையிலும் வில்லிசைதன்னிலும் தேர்ச்சி பெற்று திரைக்கு இசையமைக்க முன்வந்த மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் தூய இசைக் கோர்வையில் முருகக்கடவுள் புகழ்பாடவே இப்பூமிக்கு வந்து அவதரித்த சூலமங்கலம் சூலமங்கலம் ராஜலட்சுமி – பி.சுசீலாவுடன் இணைந்து வழங்கிய குரல்களில் தெய்வீக மணம் கமழும் தெள்ளமுதம் இதோ..

     

    காணொளி : http://youtu.be/O3HbgyxHcW4

    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    படம்: நீலகிரி எக்ஸ்பிரஸ்
    இசை: மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி
    தாம் தித் தாம் – தை தித் தை
    தாம் தித் தாம் – தை தித் தை

    திருத்தணி முருகா தென்னவர் தலைவா
    சேவலும் மயிலும் காவலில் வருமா
    (திருத்தணி)

    தென் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
    செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
    வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
    காணும் – கண்ணில் எங்கும் – கண்டாள் உந்தன் தேவை
    (திருத்தணி)

    கந்த வேலை எந்த வேலும்
    வெல்லுவதில்லை!
    உந்தன் பேரை அன்றி வேறு
    சொல்லுவதில்லை!
    உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
    கொள்ளுவதில்லை!
    இன்று நாளை என்றும் துன்பம்
    அண்டுவதில்லை!

    மலையும் நீயே, கடலும் நீயே
    வானும் நீயே,  நிலமும் நீயே

    பஞ்ச பூதம் – ஒன்று கூடும் மன்றம்
    வந்த பேர்க்கு – வாழ்வு நல்கும் குன்றம்
    மங்கல குங்குமம் – கிண்கிணி மங்கலம்
    ஓம் எனும் மந்திரம் – யாவையும் சங்கமம்

    ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
    அலைகள் கலகலென
    இலைகள் சலசலென
    மலைகள் மடமடென
    உலகம் இசை பொழிய

    வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா

    Share
  • சொட்டு மருந்து … 2

    –இன்னம்பூரான்.

    விநாசகாலே விபரீத புத்தி

     

    110401_193350கலயம் நிரம்பி வழிகிறது. அமுத கலயம். அக்ஷயபாத்திரம். வாழ்வாதாரம் அதுவே. சொட்டு மருந்து போல் பருகவேண்டும். எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமல்லவா! ஒரு அதமன் சொட்டு  ஆலகால விஷம் கலக்கிறார். அனைவரும் பரலோக யாத்திரை. தேர்தலில் தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஒரு சுயபரிசோதனை கூட்டம் நடத்துகிறது. அதில் தன்னுடைய அருள்வாக்கு அளித்த கட்சியின் காரியதரிசியான திக்விஜய சிங்  ஆடிட்டர் ஜெனெரல் மீது, “ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்” என்று சொன்னது போல ஒரு போலி குற்றச்சாட்டை சாற்றினார். ‘பா.ஜ.க. தான் ஆடிட்டர் ஜெனெரலின் எஜமானன். அடிமை CAGயை அந்த கட்சி ஆட்டுவிக்கிறது. 2ஜி வழக்கில் இது கண்கூடு’ என்பது தான் அந்த அருள்வாக்கு! எங்கே சொன்னார்? போயும் போயும் கர்நாடகாவில். அங்கு முன் ஆட்சி நடத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டிய ஆடிட் ரிப்போர்ட்களையும், 150 வருடங்களாக, அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்கிய தணிக்கைத்துறை மீது, ஆதாரமே இல்லாமல் அவர் அள்ளி வீசிய சேறு, காங்கிரஸ் கட்சி முகத்தில். உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் கூறியதை துச்சம் என்று கடாசிவிட்டார்.

    சமயத்தில், அவர் உண்மை விளம்பி: ராகுல் காந்தி ஆளும் திறனற்றவர் என்று சொன்ன மஹானுபாவன், அவர். தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஜட்டிபனியனையும் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறார், இந்த பெரிய மனிதர். அவர் இயக்கிய பெண்பாவம் பற்றி நான் பேசபோவதில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கிறார், திரு மல்லிகார்ஜுன கார்கே. அவரை எதிர்க்கட்சி தலைவராக, அரசியல் சாஸனத்தை மீறி, அமர்த்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஹீனக்குரலில் கொக்கரிக்கறது. திரு. திக்குவிஜய் சிங்கை பொது கணக்கு மன்றத்தில் தலைவராக போட, இது ஒரு வழி. அப்போது, அவர் கட்சிபற்று அற்ற ஆடிட் ரிப்போர்ட்டுகளை எப்படி கையாளுவார்? சாக்கோ என்ற அவருடைய சகாவே தேவலை என்று ஆகிவிடும். விநாசகாலே விபரீத புத்தி!

    2. துர்ச்சம்பவம்.

    சென்னை மெளலிவாக்கத்தில் ஜூன் 28 அன்று கனத்த மழை பெய்தது. ஒரு 11 மாடி கட்டிடம் வீழ்ந்தது. இன்று காலை வரை 13 சடலங்கள் கிட்டின. அருகிலிருந்த வீடுகள் சுக்குநூறாயின. பாவம் கணேசன் என்ற அண்டை வீட்டுக்காரர் பலியானார். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையே. எல்லாரும் ஏழைகள். ஒரு தொல்லைக்காட்சியில், இடி விழுந்ததே அதற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தது, கல்யாணக்கூடத்தில் சீப்பை ஒளித்து வைப்பது போன்ற, எதையோ மறைக்கும் செய்தியாகத்தான் தோன்றியது. பிறகு பல தரப்புகளிலிருந்து வந்த செய்திகளை அலசிப்பார்த்தால், பல ஏமாற்று சித்து வேலைகள் தென்படுகின்றன. சில துண்டுச்செய்திகள்:

    ➢ கனத்த மழையால் சில இயந்திரங்களை இயக்க முடியவில்லை. ராப்பகலாக் மீட்பு பணி நடக்கிறது. தொடங்கியதும், அதீத துரித கதி.

    ➢ அடித்தளம் முதல் கட்டுமானத்தில் அசட்டை தென்படுகிறது. ஒருவருக்கொருவர் இணைந்து செய்யாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதாகத் தோற்றம்.

    ➢ முதல் நம்பர் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். அவருக்குக் கோடிக்கணக்காக செல்வம் வந்தது எப்படி என்ற கேள்வி ஒரு புதிர். அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் வாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். பினாமிப்பணமா????????

    ➢ இடி மின்னல் ஒன்றுமில்லை. அத்து மீறி கட்டியது தான் குற்றம் என்றாராம் ஒரு ஊழியர். முதல்வரும் அத்தகைய பொருள்பட கூறியதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

    ➢ “எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம்.”மீட்பு பணி ஊழியர்களுக்கு வந்த குடிநீர் அபேஸ்!

    ➢ தினகரன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி 108க்கு ஃபோன் செய்து நிவாரணத்தை துவக்கி வைத்தார், ஒரு நிமிட தாமதம் இல்லாமல். அவருக்கு ஒரு அரசு சாதனையாளர் விருது தகும்.

    இன்னும் பல சிக்கல்களை பற்றி எழுதவேண்டும், விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்ப. உதாரணமாக ‘டார்ட்’ சட்டம். முழுவிவரங்கள் கிடைத்த பின் தான் அவற்றை பற்றி எழுதலாம். உடனே துரிதமான நடவடிக்கைகள் எடுத்த அரக்கோணம் அமைப்பு முதல், தீயணைப்பு படை, காவல் துறை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாருக்கும் நாம் நன்றி நவிலவேண்டும். முதல்வரும் துரித நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார் என்று பறை சாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை விட அவருடைய பொறுமையை போற்றவேண்டும். துர்ச்சம்பவம் நடந்தால், அங்கு அரசியல்வாதிகள் வீடீயோக்காரர்களுடன் படையெடுத்து, மீட்புப்படையின் உயிரை வாங்குவார்கள். நம் முதல்வர் தாமதித்து உரிய காலத்தில் மட்டும் சென்றார்.

    இன்னும் பல மருந்துகள்/மாயம்/ வேஷம்/ நஞ்சு செய்திகள் வந்த வண்ணம். பார்க்கலாம்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2011/04/banana-8.jpg

    Share
  • திருமால் திருப்புகழ் (129)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    ——————————————————————————————————-
    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    பூந்தன மாதோடு, சாந்தமும் பூசிய,
    காந்தனே கண்துயில்ஏ காந்தனே, -நான்தினம்,
    நின்புகழ், நின்னெழில், நின்கதை, நின்னருள்,
    வெண்பாவில் பாட விரும்பு….(290)

    காண்பதுன் கோலத்தை, கேட்பதுன் ஜாலத்தை,
    பூண்பதுன் நாமத்தை போற்றுதலாய், -கூன்பதும,
    கொங்கையாள் மார்பில், குலாவும் அரங்கனே,
    சங்கையா உன்தாள் சரண்….(291)

    குறையெனக்குன் காட்சி, நிறையெனக்குன் நாமம்,
    சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி, -அரியுனக்கு,
    இன்னும் தயக்கமேன், என்னைப் பிடித்திட,
    கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….(292)

    கரத்தில் எழுத்தாணி, கற்பனையில் வாணி,
    புரத்தை மறந்து புணர்வோம், -தரத்தில்,
    குறையாத வெண்பாக்கள், கூடிப் பெறுவோம்,
    இறையாத வாவா இசைந்து….(293)

    தூணுண்டு வீட்டில், துரும்புமுண்டு, வாஞ்சையாய்,
    நானுண்டு வாராய் நரசிம்மா, -பூநின்ற,
    சாந்த இலக்குமியை, ஏந்திக் களிக்கின்ற,
    காந்த வடிவில் கனிந்து….(294)

    அய்யோ எனக்குரல், அன்றிட்ட பாஞ்சாலி,
    மெய்யாடை மேவ மறைத்தனை, -அய்யா,
    தவலையில் கட்டித், தயிராடை ஏற்றென்,
    கவலையை கட்டிக் கசக்கு….(295)

    —————————————————————————————————————

    Share
  • அ. ச. ஞானசம்பந்தன் மக்களின் நன்கொடை

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனுக்கும்
    இலங்கைக்கும் நெருங்கிய தொடர்பு.

    book

    ஆறுமுகநாவலர் பதிப்பித்த பெரிய புரணைம், book1
    அரசங்குடி சரவண முதலியாரின் கைந்நூல்.
    அவரது சொற்பொழிவுகளுக்கு அந்த நூலே பயன்படும்.
    தந்தையாரின் பெரியபுராண நுண் மா நுழை புலத்தின் வழிவந்த
    அசஞாவுக்கும் அதுவே கைந்நூல்.

    பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியரான காலத்தில்
    சனிக்கிழமை காலை சென்னையில் புறப்பட்டு
    விமானத்தில் யாழ்ப்பாணம் வருவார்.
    கரவெட்டி தச்சன்தோப்புத் திருக்கோயிலில் மாலைச் சொற்பொழிவு.
    ஞாயிறு மாலையும் அங்கே சொற்பொழிவு.
    திங்கள் காலை யாழ்ப்பாணத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச்
    சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் பணிக்குப் போவார்
    பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.

    book21959 தொடக்கம் அவர் 2002இல் மறையும் வரை சென்னையில் எனக்கு ஆசானாய், வழிகாட்டியாய், இருந்தவர் பேராசிரியர் அ. ச. ஞா.

    இன்றுவரை அவருடைய மக்களும் என்னைத் தன்னுள் ஒருவராகக் கருதி வருகின்றனர்.

    அப்பாவின் நூல்களை அந்தந்தத் துறை சார்ந்தவரிடம் கொடுக்கிறோம் என 2013இல் மூத்த மகன் மெய்கண்டான் மற்றும் கடைசி மகள் மீரா என்னிடம் சொன்னபொழுது, நூல்களுக்கான யாழ்ப்பாணப் புலமையாளரின் தவிப்பும் ஏக்கமும் என் கண்ணில் தெரிந்தன.

    யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்துக்கு எடுத்துச் செல்கிறேன் என்றேன். மகிழ்ச்சி பொங்க, 440 தலைப்புகளைத் தந்தார்கள்.
    17 பெட்டிகளில் கட்டுவித்தேன். யாழ்ப்பாணம் கொணர்ந்தேன்.

    இணுவில் பொது நூலகக் காப்பாளர் அண்ணா தொழிலகம் திரு. சு. பொ. நடராசா என்னை அழைத்து நூலக வளரச்சிக்கு உதவுமாறு கேட்டது என் நினைவில் இருந்தது. 17 பெட்டிகளையும் அவர்களிடம் கையளித்தேன்.

    29.6.2014 மாலை 1630 மணிக்கு முறையாகக் கையளித்தேன். படங்கள் பார்க்க

    Share