ஜெயஸ்ரீ ஷங்கர் 
வையகமே ஒரு
வண்ண வானம்
கதிரொளி செய்யும்
மாயாஜாலம்

உயர்மலை பனியருவி
நீள் நதி நீலக் கடல்
வேடிக்கை காட்டும்
பொன் மேகங்கள்

பச்சயத் தட்டுக்கள் உயர்த்தும்
வண்ண மலரினங்கள்
கருவண்டுகள் சுற்றும்
தாமரைக் குளங்கள்

மலரிணை இறகு கொண்ட
ஓவிய ஆடை கட்டி
தேனுக்கு அலையும்
பட்டான பூச்சிகள்

உயர்ந்தும் படர்ந்தும்
தென்றலோடு
ஒய்யாரமாடும்
தாவர சங்கமங்கள்

விண்ணையும் மண்ணையும்
வண்ணங்களால் மேகங்கள்
அளக்கும் வானவில்லின்
கம்பீர ஜாலங்கள்

நாளெல்லாம் நடந்து
களைத்த கதிரவன்
கடல்குளிக்க சந்தியாகால
வெட்கச் சிவப்புகள்

பூமியெங்கும் கருமையை
இறைத்த இருளரசனை
விடியும்வரை எதிர்த்து நின்ற
வெண்ணிலவின் சிரித்தமுகம்

சோகம் சுமந்த மனங்கள்
சுகம் பெறவே இயற்கை
அன்னையென ஓடிவந்து
அணைக்கும் பூமியிது

கருவிழிகள் காணும் லோகம்
ஏதுமறியா வெண்ணிலா விழிகள்
பார்வை அறியா பரிதாப முகங்கள்
இருளோடு அலைபாயும்
மௌனப் பட்டாம்பூச்சிகள்….!

தன்முகம் தானறியா முகம்
பார்க்கும் கண்ணாடிகள்…!
நொறுங்கும் இதயத்துள்
இருளின் ரீங்காரங்கள்

செவியும் குரலும்
ஜீவனுக்கு ஒளியாக
வழி சொல்லும்
இரண்டு கண்கள்…!

ஆதாரக் கண்கள்
மூடிக் கிடந்தாலும்
சேதாரம் ஏதுமில்லை
ஆதரவுக் கரங்கள்
திறந்து கொண்டால்
ஆதரவு உத்திரவாதமுண்டு..

வீழ்ந்த மரத்தின் விதையெடுத்து
மீண்டும் மண் புதைத்து
முளைவிடக் காத்திருக்கும்
ஈர மனங்களே…!

கண்களைச் சாம்பலாக்கிடாது
சவாலாக்கி மீண்டும் காணவிடு ..!
மறைந்த பின்னும் நீ பிறந்த
அடையாளமாய் இன்னொரு
முகத்தில் உனது அறிமுகம்!

பார்வை பெற்ற புதியவன்
காணும் உலகெங்கும்
நிறைந்த இறைவனாய்
உன்னையும் நினைப்பது …!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *