கே.ரவி

ramanathan 2657மாமா, அதாவது என் வளர்ப்புத் தந்தை, கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். 1956-57, அவர் சென்னை, ஶ்ரீராம் நகரில் திரைப்படத் தயாரிப்பு அலுவலகம் திறந்த போதே அதில் தினமும் சிற்றுண்டி, சாப்பாடு செய்து போட ஆட்கள் அமர்த்தி விட்டார். அவருடைய குருநாதர் கே.சுப்பிரமணியத்திடம் இருந்து வந்த வழக்கம் அது. வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். மற்ற தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்கள் படப்பாடல்களுக்கு ஜி.ராமநாதனின் இசையும், ராமையா தாஸின் வார்த்தைகளும் பெற வேண்டி அங்கேதான் வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுக் காத்திருப்பார்கள். நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக் கொண்டே ஜி.ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி, ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அருகிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது.

ஜி.ஆர் மடியில் அமர்ந்து இசையின் ஆரம்பப் பாடத்தைச் செவிவழியே வாங்கிக் கொண்ட நான், ஏறக்குறைய 1பத்தாண்டுகள் கழித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கிடார் கற்றுக் கொள்ள ஒரு இசை மேதையிடம் சேர்ந்தேன். அவருக்கு வீடு கிடையாது. ஒண்டிக்கட்டை. சென்னை, லஸ் முனையில் இருந்த ஒரு லாட்ஜ் மாடியில் நிரந்தர அறை வாடகைக்கு எடுத்திருந்தார். அங்கேதான் குடியிருந்தார். மெய்யாகவே எப்போதும் குடியில் இருந்தார் என்று கூடச் சொல்லலாம். அவர் அறையில் ஒரு ப்யானோ இருந்தது. அது மூடியே இருக்கும். எப்பொழுதாவது அவர் அதைத் திறந்து வாசிப்பார். முதலில் எனக்கு ‘ட்விங்கிள், ட்வுங்கிள் லிட்டில் ஸ்டார்’, ‘ஜாக் அண்ட் ஜில்’ ஆகிய மழலைப் பாடல்களை கிடாரில் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். இரண்டு மாதங்கள் இந்த இரண்டு பாடல்களிலேயே கழிந்தன. எனக்குப் பொறுமை இல்லை. அத்துடன், ப்யானோ வாசிக்க வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. ஒருநாள், என்னை ‘ஜாக் அண்ட் ஜில்’ வாசிக்கச் சொல்லி விட்டு, எப்பொழுதும் போல் வெளியே தனக்கு ஸ்ருதி ஏற்றிக் கொள்ள அவர் சென்ற சமயம் ப்யானோவைத் திறந்து தடவ ஆரம்பித்தேன். திடீரென்று அவர் வந்து விட்டார். ‘நீ கிடார் வாசிக்கும் லட்சணத்திற்குப் ப்யானோ ஆசையா’ என்று கோவமாக என்னைத் திட்டி விட்டு அனுப்பி விட்டார். அதோடு முடிந்தது என் கிடார் பயிற்சி. ஆனால், அந்த மாமேதையிடம் வந்து பல பிரபல இசையமைப்பாளர்கள் தாங்கள் மெட்டமைத்த பாடல்களுக்கான பின்னணி இசை முறைப்பாட்டை, ஆங்கிலத்தில் அரேஞ்மெண்ட் என்பார்கள், எழுதிக் கொண்டு போவதைப் பார்த்திருக்கிறேன். அதை விட, அவரிடம்தான் இன்னொரு மாமேதை இசை கற்றுக் கொண்டு பின்னாளில் முன்னணி இசையமைப்பாளராக உருவானார். குருவான மாமேதை தன்ராஜ் மாஸ்டர். அவரிடம் உருவான மாமேதை இளையராஜா.

தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் வகுப்புச் சடார் என்று ஒரு முடிவுக்கு வந்தும், இசையுடன் எனக்கிருந்த தொடர்பு விட்டுப் போகவில்லை. நான் இசையை விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை.

போன பகுதிகளில் குறிப்பிட்ட கவிஞர்களுக்கெல்லாம் காலத்தாலும், நாத யோகம் பயிலும் சீலத்தாலும் முற்பட்ட ஒருவருடைய பாடல்கள் என்னை ஆட்கொண்டன. அந்தக் கிழவரோடு நேரடியாக நான் பேசிப் பழகியதில்லை. மார்கழி மாதங்களில் மயிலைக் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நாலு மாட வீதிகளிலும் அதிகாலைப் பொழுதில், வெடவெடக்கும் குளிரில் அவர் பஜனை செய்து கொண்டு வீதிவலம் போகும் போது நாலைந்து முறை நானும் அவர் திருக்கூட்டத்தில் ஒருவனாக, “நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே” என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல் சென்றிருக்கின்றேன். அவ்வளவுதான். என்றாலும் எனக்கு அந்த இளம் வயதில் (அப்போது புகுமுக வகுப்பில் பயின்று கொண்டிருந்தேன்) யாருக்கும் கிடைப்பதற்கு அரிய ஒரு வாய்ப்புக் கிட்டியது.

என் தந்தை விஸ்வம் வித்யா சாகர் என்றொரு பள்ளி நடத்திக் கொண்டிருந்தார். அது சென்னை, மயிலை, சாயிபாபா கோயில் எதிரில் உள்ள கபாலி நகரில் இருந்தது. அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளிச் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடக்கும். என் மற்றொரு சகோதரி மாலினிதான் முழுப் பொறுப்பும். அதில், அந்தக் கவிதைத் தாத்தாவின் பாடல்களை வைத்து அந்தத் தாத்தாவின் மகள் ‘பாரிஜாதம்’ என்ற நாட்டிய நாடகம் உருவாக்கித் தந்திருந்தார். அதில் கதைப் போக்குக்குச் சில பாடல்கள் இல்லாத குறையைப் போக்கச் சில பாடல்களை என் சகோதரி என்னை எழுதச் சொல்லி உருவான அந்த நாட்டிய நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்தச் சமயத்தில் வித்யா சாகர் என்ற அந்தப் பள்ளியில் உயர்வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பானுரேகா என்ற பெண்மணியுடன் எனக்கு நட்புண்டானதும், ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி மகளான அவர் பின்னாளில் ரேகா என்ற புகழ்பெற்ற ஹிந்தி நட்சத்திரமாக ஜொலித்ததும் நம் கவிதைச் சரிதைக்குத் தேவையில்லை என்பதால் விட்டு விடுகிறேன்.

நான் குறிப்பிட்ட கவிதைத் தாத்தா பழம்பெறும் பாடலாசிரியர் பாபனாசம் சிவன் அவர்கள். அவருடைய பாடல்களோடு என் பாடல்கள் கலந்து ஒரு நாடகம் உருவானது என்று சொன்னால் அது தெய்வம் தந்த வரமாகத்தானே இருக்க முடியும்!

பைந்தமிழ் மலர்ப்பா மாலை சூட்டியுன்PapanasamSivann
பாதமலர் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவுமெந் நேரமும் – உன்
திருப்பெயர்ப் புகழ் மறவாமையும் வேண்டும்
வந்த உலகில் மதி மயங்கி
அறு பகைவர் வசமாய் அழியாமல் உன்
அருள்பெற வேண்டும்

இப்படிக் காதலாகிக் கண்ணீர் மல்கச் செய்யும் பாபநாசம் சிவனின் பாடல்களை எம்.கே.தியாகராஜ பாகவதரின் தேன்குரலில் கேட்டு எத்தனை முறை நெகிழ்ந்திருக்கிறேன்!

பாபநாசம் சிவனின் மகள் நீலா ராமமூர்த்தி அம்மையார்தான் மேலே நான் குறிப்பிட்ட பாரிஜாத நாடகத்தைத் தம் தந்தையின் பாடல்களை வைத்து உருவாக்கித் தந்தவர்.

அடுத்த ஆண்டு அந்தப் பள்ளி, தேவடி தெரு என்ற இடத்துக்கு மாறியது. இடம் மாறினாலும் தடம் மாறாமல் ஆண்டு விழாவை மேலும் சிறப்பாகக் கொண்டாட மாலினி ஏற்பாடுகள் செய்தார். அவருடன், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்ட ஒரு மங்கையும் சேர்ந்து ஒரு முழு நாட்டிய நாடகம் எழுதித் தரச் சொல்லி என்னை வற்புறுத்தினார்கள். நான் குறிப்பிட்ட மங்கை சங்கீத ஞானம் மிக்கவர்; டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் மூத்த சகோதரி; ‘நீலு அக்கா’ என்று நான் அழைத்த பாசம் மிக்க சகோதரி. நான் எழுத, அவர் மெட்டமைக்க, துர்க்கா மிஸ் என்ற ஆசிரியை பாடப் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற நாட்டிய நாடகம் உருவானது. அதற்கு ஆர்மோனியம் வாசித்தவர் ராமமூர்த்தி என்ற பெரியவர். தசரதன், கைகேயியிடம் பலவாறு வாதாடியும் அவள் தான் கேட்ட இரு வரங்களில் பிடிவாதமாக இருந்ததால், கடைசியில்,

என்னுயிரைக் கேட்கின்றாய் என்ன செய்வேன்
இருந்தாலும் நானுனக்குக் கட்டுப் பட்டேன்
சொன்னசொல்லைக் காக்க இரு வரமும் தந்தேன்
சுகமுறுவாய் நானெந்தன் உயிரைத் தந்தேன்

என்று பாடிக் கொண்டே தசரதனாக நடித்த சுஜாதா என்ற சிறுமி மயங்கிவிழுந்த காட்சியில் பலர் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட காட்சியைக் கண்டேன். அட, மீண்டும் சுபபந்துவராளி ராகம் அப்பா!

என் மனத்தில் இசையும், கவிதையும் எப்படிக் கைகோத்துக் கொண்டு வளர்ந்தன என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

‘இசையா, கவிதையா என்று பட்டிமன்றம் வைத்தால் நீ எந்தக் கட்சி?’ என்று என்னிடம் சிகாமணி, அதான் நம்ம பழைய புத்தி சிகாமணி, முன்பு ஒருமுறை கேட்டான். பட்டென்று பாட்டாக வந்தது பதில்:

உனக்குத் தெரியும் கவிதை என்றால்
உயரப் பறப்பதென்று
எனக்குத் தெரியும் இசையென் றாலது
என்னை இழப்பதென்று
பறந்து கொண்டே இழந்தது பாதி
இழக்க இழக்க வளர்ந்தது மீதி

இவ்வாறு, 1969-70 களில், அதாவது என் பதினாறு வயதினிலே, இசையும், கவிதையுமாய் என் வாழ்க்கை இப்படிச் சென்று கொண்டிருந்த போதுதான் அதில், இல்லை என் நெஞ்சில், இல்லை இல்லை, என் உயிரில் இசைக்கவிதையாகவே அவள் நுழைந்தாள். அந்தக் கதை.. .. ! பிறகு சொல்கிறேன்.

(தொடரும்)

படங்களுக்கு நன்றி:

http://movieraghas.blogspot.in/2008/06/blog-post_12.html

http://malarum.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.