ஜெய் ஜெய் ஹரி போல்!
-விசாலம்
மணிப்பூர் மக்களுக்குப் பங்குனி மாதப் பௌர்ணமி வந்தாலே கொண்டாட்டம்தான். இந்த மாதத்தில்தான் இரண்டு விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடக்கும். நம் தீபாவளியின்போது நாம், ’இருள் நீங்கி ஒளி பரவி நாடு நலமாகட்டும்! நாட்டு மக்கள் வளமாகட்டும்!’ என்று வாழ்த்துவதுபோல் மணிப்பூர் மக்களும் இந்த விழாக்களால் இருள் நீங்கி ஒளி பரவி பல நன்மைகளும் சுபிட்சங்களும் கிடைக்கும் என நம்புகிறார்கள். அதுவும் வானத்தில் முழு நிலவு ஒளி வீசப் பௌர்ணமி நிலவின் ஒளி எல்லா இடங்களிலும் பரவ ஆட்டமும் கொண்டாட்டமும் களைக்கட்டும். மணிப்பூர் இருக்கும் இடமும் கொள்ளை அழகு. இயற்கை அன்னை அங்கு நன்கு வியாபித்திருக்கிறாள்.
இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் இருக்கும் மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் நதி ஓடும் அழகைச் சொல்வதா? மலைச்சரிவில் வெள்ளிக் கம்பிப்போல் வழியும் நீரின் அழகைச்சொல்வதா? மலைப்பிரதேச ஊசி இலைக்காடுகளின் அழகைச்சொல்வதா? அங்கு ஆடும் மணிப்புரி நடனத்தின் அழகை ரசிப்பதா? இத்தனைக்கும் மேலாக அங்கு கொண்டாடப்படும் ‘யவொசாங்‘ என்ற திருவிழா மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.
மணிப்பூர் பாமன் என்ற பிராம்மண மக்களுக்குத் தெய்வமாக விளங்குவது கீதை நாயகன் கிருஷ்ணர்தான். இவர்கள் ராதா கிருஷ்ண பிரேமையை ‘ராஸ்லீலா’ என்ற நடனம் மூலம் வெளிப்படுத்துவார்கள். ‘யவொசாங்’ என்றால் பக்தியுடன் கூடி ஆடிப்பாடுவது என்று பொருள் கொள்ளலாம். இந்த விழாவுக்கென்று பெரிய கொட்டகை அமைக்கப்படும்; இது நதிக்கரை அருகில் அமைந்திருக்கப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். நாம் பந்தல் வாயிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது போல் அவர்களும் கொட்டகையைக் காய்கறிகளாலும் தோரணங்களாலும் அலங்காரிப்பர்.
கொட்டகையில் ஒரு மேடை அமைப்பார்கள். பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச்சென்று அங்கிருக்கும் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சிலையை ஒரு ரதத்தில் வைத்து மேளதாளத்துடன் ஷெனாய் ஒலி மங்களகரமாக ஒலிக்க ஊர்வலம் வருவார்கள். பின் அதை அந்த மேடையின் மேல் வைப்பார்கள். பின்னர் மக்கள் நலமாக வாழவும் முன்னாள் மணிப்பூர் மன்னரின் சுபிட்சத்திற்காகவும் பிரார்த்தனை நடக்கும். பின் “தஸ்டா” என்ற இசை நாடகம் தொடங்கும். இதில் அரசரின் வீர தீரங்களின் பெருமையைச் சில கலைஞர்கள் நடித்துக்காட்டுவார்கள்.
அதன்பின் நாம் நிகழ்த்தும் கதாகாலட்சேபம் பாணியில் அவர்களும் ‘கதாவாசகம்” எனக் ’கண்ணனின் அவதாரம், பால லீலைகள், பூதனை வதம்’ என்று தொடங்கி நடத்துவார்கள். இதைக்கேட்கப் பலர் கூடுவார்கள். பின் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கும். பல ஆண்கள் கிருஷ்ணன் வேஷத்தில் வந்து புல்லாங்குழலை இசைப்பார்கள். பெண்களும் நெற்றியில் சூடாமணி அணிந்து தங்களை கோபியர்களாக வேடமணிந்து வட்டமாக நின்றபடி சுழன்று சுழன்று நடனமாடுவதைப்பார்க்க உடலில் ஒரு ஆன்மீக அனுபவம் ஏற்படுவதை உணரமுடியும். நாமும் அங்கு ராதையாகவோ அல்லது கிருஷ்ணனாகவோ மாறிவிடுவோம். இது வசந்தகாலத்தில் நடப்பதால் ’வசந்த ராஸ்’ என்று சொல்வார்கள்.
பின் வருவது கோலாட்டம். நல்ல நீளமான கோலாட்டங்கள் கைகளில் இருக்க எந்தக் கை எங்கு போய் லாவகமாக ஒலி எழுப்பி வருகிறது என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி அத்தனை வேகமான நடனம். கால்களோ பஞ்சு போல் தரையில் படிகிறதா இல்லையா என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி துள்ளித்துள்ளி ஒரு நடனம். சலங்கை ஒலியுடன் கோலாட்ட ரிதமுடன் மான் துள்ளி ஓடுவது போல் இந்த நடனத்தைப் பார்க்க மனதில் ஒரு கிளுகிளுப்பு உண்டாகிறது. இந்த நடனத்தை ‘சிருங்கார ராசா ‘ என்கிறார்கள்.
பின் ஆரம்பமாகிறது ஜெய் ஜெய் ஹரி போல்’ முழக்கம். மேடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சைதன்ய மகாபிரபுவுக்கு அர்ச்சனையும் மங்கள ஆரத்தியும் ஆரம்பமாகிறது. ஆரத்தி முடிந்தப் பின்னரும் ’ஜெய் ஹரி போல்’ என்ற முழக்கம் தொடர்ந்து கேட்கிறது. பின் பிரசாதமாக இனிப்பு வழங்கப்படுகிறது.
பின்னர் சைதன்ய சுவாமியின் சிலைப் பழையபடி கோயிலுக்குச்சென்று விடும். இதெல்லாம் முடிந்தபிறகு நடக்கும் வைபவம் மனதை எதோ செய்கிறது. இத்தனை அழகாகக் கட்டப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட கொட்டகைக்கு அக்னி வைத்து எரிக்கப்படுவதைப் பார்த்தால் அது தேவையா எனத் தோன்றுகிறது. ஆனால் இது போல் செய்தால் தங்களின் மனக் கஷ்டங்கள், வியாதிகள் தீர்ந்து விடும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்தச்சூழ்நிலை புகையினால் எத்தனைக் கெட்டுப்போகிறது என்று யோசிப்பதில்லை. நாம் ஹோமம் முடிந்தபின் பூர்ண ஆஹூதி என்று ஒரு சிறு மூட்டையைப் புடவையுடன் ஹோமத்தில் இடுவது வழக்கம். அதேபோல் இதையும் அவர்கள் “பூர்ண மாஷி ‘என்கிறார்கள் .
இனி இரண்டாவது விழாவைப் பார்க்கலாம். இந்த விழா பார்க்க நாம் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலாவுக்கு வரவேண்டும் . நேராக கிருஷ்ணன் ராதா இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜி ராதேஸ்வரி என்ற கோயிலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் ராதா கிருஷ்ணனுக்கு வண்ணப் பொடிகளால் பூஜை நடக்கும்.ஹோலியின் போது வண்ணப் பொடிகளைத் தூவுவதுப்போல் இங்கும் சிவப்பு, பச்சை, நீலம் என்று பல வண்ணக் கலவைகளைத் தூவி பூஜிக்கப் பார்க்க மிக அழகாக இருக்கும். பலர் பலவிதமான பக்தி பாடல்களைப் பாடுவார்கள். கோயில் வாசல் மண்டபத்தில் கிருஷ்ண பஜனையும் நடக்கும். அவர்கள் அடிக்கும் டோலும் அதை அடித்தபடியே சுழன்று சுழன்று ஆடும் நடனமும் காணக்கிடைக்காத ஒன்று. விழாக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொருவிதமாக நடந்தாலும் அது ஆன்மாவைத்தொட்டு ஆன்மீக வழியைக் காட்டுவது என்பது என்னவோ உண்மைதான்!