Blog

  • நம்பிக்கை அதானே .. எல்லாம்!

    சங்கர் ராமன்

    தேநீர்த் திருவிழா

    “யாராவது பாத்தா என்ன நெனைப்பாங்க…

    இந்த ட்ரெஸ் அவனுக்குப் பிடிக்குமானு தெரியலே… நாளைக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலையே” இன்றைய அவசர உலகில் நாம் ரசித்த நிமிடங்களை விட ரசிக்கத் தவறிய நிமிடங்களே அதிகம்.

    மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இந்த நிமிடம் வரை உங்களில் ஒருவராவது தன்னுடைய வாழ்க்கையை தனக்காக வாழ்ந்திருக்கிறீர்களா? பரபரப்பான உலகில் யாராவது பட்டாம்பூச்சியை ரசித்ததுண்டா?. அவசர உலகில் அவசியமான விருப்பங்களைக்கூட ரசனை இல்லாமல் இழந்து தவிக்கிறோம். போலியான முகங்களை வைத்துக் கொண்டு அவற்றையே உண்மை என நம்புகிறோம்.

    நிமிடங்களில் வாழ்வது எப்படி என்பதை நமக்கு எளிமையாகச் சொல்லிக் கொடுப்பது ஜைனமதம் தான். அந்த ஜைன மதக் குருக்களிடம் ஒரு திருவிழா மிகப் பிரபலமாகும். அதுதான் தேநீர்த் திருவிழா . வருடம் தோறும் கொண்டாடி மகிழும் இந்தத் திருவிழாவின் மையமான ஒரு செய்தி உண்டு. ஆளுக்கு ஒரு குவளை தேநீர் எடுத்துக் கொண்டு அதனை சுமார் 2 மணி நேரம் வரை ரசித்துக் குடிப்பார்களாம். காரணம் என்னவென்றால் அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடிக்கிறார்கள்.

    நாமும் இதனைச் செய்ததுண்டு எப்போது? நாம் குழந்தையாக இருக்கும்போது சில்வர் டம்ளரில் ஸ்டிரா போன்ற அமைப்பில் நாம் உறிஞ்சி உறிஞ்சி குடித்ததுண்டு. மிக மகிழ்ச்சியாக. கோப்பையில் இருக்கும் தேநீர் முடிந்திருக்கும். ஆனாலும் மனம் தளராமல் குவளையில் ஒட்டியிருக்கும் சர்க்கரையை நம் நாக்கால் தடவியே காலி செய்திருப்போம்? ஞாபகமிருக்கிறதா? ஏன்? அப்போது நாம் குழந்தை. மிக மகிழ்ச்சியாக இருந்தோம். இப்போது வளர்ந்து விட்டோம். வாழத் தெரியாமல் நிற்கிறோம்.

    சாதாரண உதாரணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன். ஆடித்தள்ளுபடிக்கு ஆடை எடுக்க கடைக்குச் செல்கிறோம். ஓர் அழகான சட்டையைப் பார்க்கிறோம். இல்லை ஒரு சுடிதாரைப் பார்க்கிறோம். ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு தேர்வு செய்து எடுத்த அந்த ஆடை நமக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே அதைத் தேர்வு செய்து விடுவோமா? கூடவே ஒரு இராகு காலத்தைக் கூட்டிக் கொண்டு போயிருப்போம்.

    நம் நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருப்பார்கள். அவர்களிடம் அந்த ஆடையைக் காட்டி கருத்துக் கேட்போம். அவர் அரை விநாடியில் முகம் சுளிப்பார். நமக்குப்பிடித்து ஒரு மணிநேரம் செலவு செய்து தேர்வு செய்த ஆடை அவர்களின் அரை விநாடி முகஞ்சுளிப்பிற்கு தியாகம் செய்துவிடுவோம். இதுதான் இன்றுவரை நாம் வாழும் வாழ்க்கை. நமக்குப் பிடித்த பல விஷயங்களை அடுத்தவருக்காக இழந்து கொண்டிருக்கிறோம்.

    நான் சுயநலமாகஇருக்கச் சொல்லவில்லை. ரசனையோடு இருக்கச் சொல்கிறேன். உலகத்திலேயே மிக ரசனை மிக்கவர்கள் இந்தியர்கள். எல்லாவற்றிலும் ரசனையோடு இருப்பவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆம் அந்த திருமணத்தில் 523 வகையான உணவுப் பதார்த்தங்கள் சமைக்கப்பட்டனவாம். இதிலிருந்தே நம் ரசனையை உலகம் அறிந்து கொள்ளும்.

    நேற்று நடந்த நிகழ்வுகளை மட்டுமே மனதில் வைத்து வாழ்பவர்கள் இறந்தவர்களாக கருதப்படுவர். இப்படிப்பலர் நம்மிடையே உள்ளனர். இல்லையேல் எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என்ற கற்பனை வாழ்க்கையிலே கலந்து போய்விடுகிறோம். நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் மிகச் சிலரே. ஆனால் அவர்கள்தான் இந்த உலகின் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள்… ஒவ்வொரு நிமிடமும் வாழ்வது எப்படி?.

    குழந்தைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு சிறு கிலுகிலுப்பையை குழந்தையின் முன்னால் சென்று ஆட்டினோம் என்றால் அந்தக் குழந்தை எவ்வளவு அழகாகச் சிரிக்கிறது. அந்த மழலையின் சிரிப்பிற்கு ஈடு இணை ஏதுமுண்டா? இல்லை. அதே நேரம் அந்த கிலுகிலுப்பையை நேரே வீட்டிற்குள் சென்று நம் அப்பாவிடமோ கட்டிலில் படுத்திருக்கும் நம் தாத்தாவிடமோ ஆட்டினால்…? என்ன ஆகும். அவர்கள் நவீன ஹம்சர்களாக மாறிவிடுகின்றனர்.

    சிறுவயது குழந்தைகளாக இருக்கும் போது அவர்களும் சிரித்தவர்கள்தானே. இப்போது ஏன் சிரிக்கவில்லை? ஆம்! நாம் யாரும் நிகழ்காலத்தில் வாழவில்லை. கடந்த காலக் குப்பைகளை மனதிலே தேக்கி வைத்திருக்கிறோம். விளைவு பலவற்றை ரசிக்கத் தவறிவிடுகிறோம்.

    பறக்கும் பட்டாம்பூச்சி பூக்கும் ரோஜா, அழகாய்ப் பொழியும் நிலவின் ஒளி, லேசான தென்றல் இவை எல்லாம் நம்மை எதுவும் செய்வதில்லை. இவற்றை யாராவது ரசித்தால் அவர்களை பிழைக்கத் தெரியாதவர் என்ற பட்டமிட்டு ரசிக்கிறோம். ரசனையுள்ளவர்களே இந்த உலகில் சாதனை படைத்தவர்களாக இருந்து வருகின்றனர்.

    சிட்டுக்குருவி சிறகசைத்துப் பறப்பதை கொண்டாடியவன் பாரதி. இயற்கையைக் கொண்டாடி அழகின் சிரிப்பைப் பாடியவன் பாரதிதாசன். பயணம்தான் உலகின் மிகப் பெரிய ரசனை மையம். பல்வேறு அறிஞர்களின் பயண அனுபவங்களை இன்று உலகமே கொண்டாடி வருகிறது. நாமோ ரசனை என்ன விலை என்று கேட்கிறோம்.

    ஒரு அழகான ஜென்கதை ஒன்றைக் கூறுகிறேன். மதத் தலைவர் ஒருவர் வயதாகி படுத்த படுக்கையாகக் கிடந்தார். சுற்றிலும் சீடர்கள் ஆர்வமுடன் நின்று கொண்டிருந்தனர். அவர் சாவதற்காக அல்ல. கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்று?. ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உயிர் பிரியவில்லை.

    வெளியூர் சென்றிருந்த ஒரு பிரியமான மாணவன் தன் குருவின் உயிர் பிரிந்து கொண்டிருந்ததை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு உடனே அவருக்கு மிகவும் பிடித்தமான திராட்சைப் பழங்களை வாங்கிக் கொண்டு ஆசிரமம் நோக்கி விரைந்து வந்தான். வந்து தன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு தான் வாங்கிவந்த பழங்களில் ஒன்றைக் கொடுத்தானாம்.

    குரு அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு; அதை வாங்கிச் சுவைத்து சாப்பிட ஆரம்பித்தாராம். குழுமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை. அவர்களுக்கும் பழம் வேண்டும் என்பதல்ல. குரு கடைசியாக ஏதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்றுதான். ஒருவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டே விட்டானாம்.

    இனி நீங்களும் முடிந்து போனதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.யாரையும் பின்பற்றி வாழ முயற்சி செய்யாதீர்கள். வாழ வேண்டும் எனில் நாமும் நம்மைத்தான் பின்பற்றி வாழ வேண்டும். யாரும் யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. ஏனெனில் யாரும் யாரையும் விட உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. ஒவ்வொருவரிடத்திலும் ஒரு திறமை உள்ளது. அதைக் கண்டுபிடித்து பயன்படுத்தக் கற்றுக் கொண்டாலே நம் வெற்றி எளிதாகும்.

    எப்போதுமே இயல்பாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். தோல்விகள் வருவதனால்தான் நாம் தோற்கிறோம் என்பது உண்மையல்ல… மாறாக தோல்வி என்று கருதப்படுகின்ற ஒன்றை நம்மை வந்து சேரும் போது அதை நாம் தோல்வியாக ஏற்றுக்கொண்டு விடுவதால்தான் நாம் தோற்றுப் போகிறோம். ஒரு தோல்வியையே வெற்றியாக எடுத்துக் கொள்வதா என்று கேட்கக் கூடாது.

    ஒரு தோல்வி வரும்போது அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி அமைகிறது. அதாவது வெற்றிக்கு முன் வரும் தற்காலிகத் ‘தோல்வி’களை நாம் வரவில் வைக்கவே கூடாது.

    வெற்றி என்பது உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது உங்களுக்கு வெகு அருகாமையில் உள்ளதே. இன்னும் சொல்லப் போனால் அது உங்களுக்கு உள்ளேயே உள்ளது. அதனாலேயே அதனை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் போகலாம். ஏனெனில் ஒரு விஷயத்தைப் பார்க்க தூரம் கொஞ்சமாவது தேவைப்படுகிறது. கடலைத் தேடிய மீன்களைப் போல்தான் நாமும். ஆம் நம்மை நாம் உணா;ந்து கொண்டாலே போதும்.

    நிறைவாக ஒரு கதை. ஒரு கிராமத்திற்குத் துறவி ஒருவர் வந்திருந்தார். அவரைச் சுற்றி அருள்வாக்கு கேட்க ஒரே கூட்டம் பக்தி பரவசத்துடன்… அதில் ஒரு சிறுவன். துறவியை முட்டாளாக்க வேண்டும் என்ற ஆசையுடன் நின்றிருந்தான். வேகமாக ஓடிப்போய் ஒரு தட்டாம் பூச்சியைப் பிடித்து வந்தான். அவன் கையில் தட்டாம் பூச்சியை வைத்து இருகைகளையும் பின்னால் கட்டிக் கொண்டான். தட்டாம் பூச்சியின் கழுத்தில் விரலைத் தயாராக வைத்திருந்தான். நேராக துறவியிடம் சென்று “ஐயா! உங்களுக்கும் எல்லாம் தெரியுமா?” என்றான். துறவியும் “முடிந்தவரை முயற்சிக்கிறேன்” என்றார். அவரிடம் ஒரு வித்தியாசமான கேள்வி கேட்கப்பட்டது… “ஐயா! என் கையில் ஒரு தட்டான் உள்ளது. அது உயிரோடு இருக்கிறதா? இல்லையா?” என்றான் சிறுவன்.

    போதி தர்மர்

    உயிரோடு இருக்கிறது என்று சொன்னால் சிறுவனின் விரல் தட்டானின் கதையை முடித்துவிடும். உயிரோடு இல்லை என்று சொன்னல் சிறுவன் தட்டானை பறக்க விட்டுவிடுவான். தர்ம சங்கடமான நிலை துறவிக்கு… என்ன சொல்வது. சிறிது நேரம் யோசித்து ஒருபதில் சொன்னார் துறவி. ஆகவே நம் வாழ்க்கைக்கான பதில். ஆம். “தட்டான் உயிரோடு இருப்பதும் சாகிறதும் உன் கையில்தான் இருக்கிறது” என்றார் துறவி.

    நம் வாழ்வும் நம் கையில்தான். நாம் மகிழ்வாக இருக்கும்போது வாழ்க்கை மகிழ்வாக செல்கிறது. துயரக் கடலில் இருக்கையில் வாழ்க்கையும் துயரமாகவே இருந்துவிடுகிறது. எனவே வாழ்க்கையை மகிழ்வாக ஏற்றுக்கொள்ளுங்கள் மகிழ்ச்சி தான் வெற்றியின் அடையாளம்…

    வாழ்க்கை கண்ணாடி போன்றது.

    நாம் நினைப்பதையே அதுவும் பிரதிபலிக்கிறது.

    தொடரும்.

    Share
  • “அக்கூ…. அக்கூ….”

    Plaintive cuckoo-4-pic by Allen

    (Plaintive cuckoo – அக்கூ பட்சி – Picture by Allen)

     நடராஜன் கல்பட்டு

    நேற்று அவருக்கு, அதான் என் கணவருக்கு, அறுபது வயது முடிந்தது.  சஷ்டி அப்த பூர்த்தியை திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அம்ருதகடேஸ்வரர் சன்னதியில் செய்தால் விசேஷம் என்று பலரும் சொன்னதால் அங்கு சென்று வைதீக சடங்குகளை எல்லாம் செய்து முடித்தோம்.

    அந்த ஊர்க் கோயிலின் விசேஷம் அங்குதான் சிவ பக்தனான மார்கண்டேயனுக்காக சிவ பெருமான் யமனையே செயல் இழக்கச் செய்தார்.  பக்தன் அபிராமி பட்டருக்காக அமாவாசையையே பௌர்ணமி ஆக்கினாள் அம்பாள் அபிராமி.

    பூஜைகள் முடிந்ததும் உணவு உண்டபின் கிளம்பி பம்பாய் திரும்பு முன் எனது பிறந்த ஊரான திருச்சிக்கும் சென்று பார்த்து விட வேண்டும் என்பது எங்கள் திட்டம்.

    அவர் சொன்னார், “லக்ஷ்மி போற வழிலெ கும்பகோணம் தஞ்சாவூர் எல்லாம் வரது.  அங்கெல்லாமும் ஒரொரு நாள் தங்கீட்டுச் செல்லலாம்..  அங்கெ இருக்குற கோயில்களையும் பாத்தா மாதிரி இருக்கும்.  கும்பகோணத்தில் காவேரிலெ குளிச்சூட்டு கும்பேஸ்வரர், சாரங்கபாணி இவாளெயும் தரிசிக்கலாம்” என்று.

    “சரி” என்று தலை ஆட்டினேன்.

    மறு நாள் காலை காவேரிக்குச் சென்றோம் குளிக்க.  அங்கு கேட்ட “அக்கூ… அக்கூ…” என்ற அக்கூ பட்சியில் குரல் என்னை முப்பத்தேழு வருஷம் பின்னிழுத்துச் சென்றது.

    அப்போது எனக்கு வயது பத்தொன்பது.  பியெஸ்ஸி பரீட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன்.  அக்கா மீனா தன் கணவருடன் கும்பகோணத்தில் இருதாள்.  அவளுக்குத் தலைப் பிரசவம் ஆக இன்னும் சுமார் மூன்று மாதங்கள் இருந்தன.  அவள் மிகவும் பலவீனமாக இருப்பதாகக் கடிதம் எழுதி இருந்தாள்.  நல்லபடியாகப் பிரசவம் ஆக வேண்டுமே என்று அம்மா வேண்டாத தெய்வம் இல்லை.  தாயுமானவர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவாள்.  ஆஞ்சனேயர் கோவிலுக்குச் சென்று வடமாலை சாத்துவாள்.

    ஒரு நாள் அம்மா சொன்னாள், “ஏண்டீ லக்ஷ்மி ஒன் டிகிரி கைக்கு வரத்துக்கே இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆயிடும்.  மீனாக்கு அடுத்த மாசம் சீமந்தம் வறது.  அதெ அவாத்துலெ செய்வா.  அது முடிஞ்சதும் ஒரு நல்ல நாள் பாத்து அவளெ நம்மாத்துக்கு அழெச்சிண்டு வந்துடலாம்.  இந்த ரெண்டு மாசம் நீ அங்கெ போயி அவளுக்கு ஒத்தாசையா இருந்தூட்டு வாயேண்டி.”

    “சரிம்மா” என்றேன் புது ஊர் பார்க்கும் ஆசையிலும் அக்காவைப் பார்க்கும் ஆசையிலும்.

    எனக்கும் மீனாவுக்கும் ஆறு வயது வித்தியாசம்.  எத்தனை நாட்கள் என்னை அவள் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்திருக்கிறாள்?  வெளியே எங்கு போனாலும் அக்காவின் இடுப்புதான் எனக்கு வண்டி.

    இரண்டு நாட்களுக்குப் பின் கும்பகோணம் வழியாக விழுப்புரம் செல்லும் ஒரு வண்டியில் என்னை பத்திரமாக பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டார் அப்பா.

    கும்பகோணத்தில் அத்திம்பேர் ஸ்டேஷனுக்கு வந்திருந்தார் (அப்படித்தான் நாங்கள் அழைப்போம் அக்காவின் கணவரை.  மற்றவர்கள் போல மாமா என்றழைத்தால் தாய் மாமன் உரிமையைக் கொண்டாடி விடுவாரோ அவர் என்ற பயமாக இருக்குமோ?)  இருவரும் குதிரை வண்டியில் ஏறி கிழக்கு டபீர் தெருவை அடைந்தோம்.  என்னைப் பார்த்த அக்காவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.  ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்.

    “எப்பிடி வளந்தூட்டேடி நீ?”

    “பின்னெ வளராமெ அப்பிடிய அங்குஷ்டாப்யாம் நமஹன்னு இருக்க முடியுமாக்கா?”

    “இல்லெடி.  ஒன்னெ இடுப்புலெ தூக்கி வெச்சிண்டு வீட்டெச் சுத்தி ஓடிவருவேன் நீ குதெரெ சவாரி போகணும்னு அடம் புடிக்கச்சேல்லாம்.  இப்பொ தூக்கினா என் இடுப்புதான் ஒடிஞ்சு போயிடும.”

    “வாணாங்க்கா.  ஒன் கொழிந்தெயெத் தூக்கி வெச்சுக்க ஒனக்கு இடுப்பு வேணும்.”  கொல்லென்று சிரித்தோம் மூவரும்.

    “மூஞ்சி, கை, கால் எல்லாம் அலம்பிண்டு வாடி. சூடா சாப்பிடலாம்.”  அக்கா சொன்னபடி செய்தேன்.

    எனக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி, கத்தரிக்காய் ரசவாங்கி, கெட்டித் தயிர்.  அக்காவுக்கு தான் எத்தனை ஞாபக சக்தி.  புது வாழ்க்கையில் பழையது எதையும் மறக்க வில்லை அவள்.  அன்று மாலை வரை வீட்டில் பழங் கதைகள் பேசிக் கொண்டு கழிந்தது பொழுது.

    அத்திம்பேர் சொன்னார், “மீனா, லக்ஷ்மி ரெண்டு பேரும் கெளம்புங்கோ.  குபேஸ்வரர், சாரங்கபாணி இவாளெ எல்லாமும் பாத்தூட்டு வரலாம்.”

    அவசர அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பினோம்.

    கோவில்களைச் சுற்றிப் பார்த்தபின் அத்திம்பேர் கேட்டார், “லக்ஷ்மி நீ டிகிரி காபி சாப்பிட்டு இருக்கையோ?”

    “டிகிரி காப்பீன்னா?”

    “சுண்டக் காச்சின பாலுலெ அப்பொ எறக்கினெ டிகாக்ஷனெ உட்டுக் கலந்து சக்கெரெ போட்டுக் குடுப்பா.  அதுதான் டிகிரி காப்பி.  அதோடெ டேஸ்டே அலாதி.”

    வெங்கடேஸ்வரா கஃபே உள்ளே நுழைந்தோம்.  காலியாய் இருந்த ஒரு டேபிளில் உட்கார்ந்தோம்.  அடுத்த கணம் அருகில் வந்து விநயமாக, “சாருக்கு என்ன வேணும்?” என்று கேட்ட பையனிடம், “மூணு நெய் ரோஸ்ட் மசாலா தோசை, மூணு டிகிரி காப்பி” என்றார் அத்திம்பேர்.

    “மூணு மசாலா நெய் ரோஸ்ட்……………” என்று அந்தப் பையன் எங்கள் அருகில் இருந்தபடியே கத்தியது என் காதுகளை ‘ரொய்ங்’ என்று துளைத்தது.  மூன்று நிமிஷம் கூட ஆகியிருக்காது.  மசாலா நெய் ரோஸ்ட் குட்டி முழு வாழை இலைகளில் வந்து சேர்ந்தது.  அதை நாங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடிப்பதற்கும் காப்பி வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.  எனக்கு இரு விஷயங்கள் புரியவில்லை.  கிச்சனில் தோசை வார்ப்பவர் காதுகள் என்ன கட்செவியா, எந்த பையன் என்ன பொருளை எவ்வளவு கேட்டான் என்பதை அறிய? பையன் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்டு தயார் செய்து எடுத்துத் தர அவரது நினைவாற்றல் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?

    வீடு வந்து சேர்ந்த போது இருட்டி விட்டது.  மூன்று பேருக்குமே வயிறு நிரம்பி இருந்ததால் இரவு ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டுப் படுத்துக் கொண்டோம்.

    அத்திம்பேர், “மீனா நாளெய்க்கி நீ லக்ஷ்மியெக் காவேரிக்குக் கூட்டிண்டு போ.  அங்கெ குளிச்சூட்டு அப்படியே ஆஞ்சநேயர், பக்த விநாயகர், வேத விநாயகர் இவாளெயும் தரிசனம் பண்ணீட்டு வாங்கோ.  காவேரிலெ குளிக்கறச்சே ஜாக்கிரதெ.  ஒத்தர் கையெ ஒத்தர் புடிச்சுக் கோங்கோ.  ரெண்டு நாள் லீவு போட்டதுனாலெ நாளெய்க்கி நான் சீக்கிரமே ஆபீஸ் கெளம்பணும்.  இல்லேன்னா நானே அழெச்சிண்டு போயிருப்பேன் ஒங்களெ” என்றார்.

    “நீங்க கவெலெப் படாமெ ஆபீசுக்கு போயிட்டு வாங்கோன்னா.  நான் என் லக்ஷ்மியெ கை நழுவ உடமாட்டேன்.”

    மறு நாள் அக்காவும் நானும் காவேரிக்குச் சென்றோம்.  திருச்சியில் பார்க்கும் காவேரிக்கும் இங்கு பார்க்கும் காவேரிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!  அங்கு அகலமான காவேரி.  அதில் இரண்டு மாதங்கள் போக மற்ற மாதங்களில் முக்காலே மூணு வீசம் மணல்.  ஓர் ஒரமாகத் தண்ணீர்.  இங்கோ குறுகலான ஆறு.  ஆனால் ஆறு பூராவும் தண்ணீர்.  கரையோரம் எல்லாம் அடர்ந்த மரங்கள்.  அவற்றைத் தாண்டி பச்சைப் பசேலென்று வயல் வெளிகள்.  தண்ணீர் சற்றே ஜில்லென்று இருதாலும் குளிக்க சுகமாக இருந்தது.

    எங்கிருந்தோ “அக்கூ… அக்கூ…” என்று ஒரு குரல் கேட்டது.

    “அக்கா அது என்ன சத்தம்?”

    “அது அக்கூ பட்சியோடெ அழு குரல்.  அதோட அக்காவெ ஆத்து வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்தாம். தன் அக்காவைத் தேடி அழறதாம் அது.  ஆத்துலெ நெறெய தண்ணி போறப்பொதான் அதோடெ கொரல் கேக்கும்.”

    “பாவம்கா.  அது அக்கா மேலெ எவ்வளோ ஆசெ வெச்சிருக்கும்?”

    ஆஞ்சனேயர், பிள்ளையார் சன்னதிகளி லெல்லாமும் என் காதுகளில் அக்கூ பட்சியின் குரல்தான் ஒலித்துக் கொண்டிருநது.  வீடு வந்த பின்னும் அதே நினைவுதான்.

    நாட்கள் மள மளவென்று ஓடின.  அத்திம்பேருக்கு தான் அக்கா மேல் எவ்வளவு ஆசை?  ஆபீசில் இருந்து திரும்பும் போது மல்லிகையோ, கதம்பமோ வாங்கி வரத் தவறியது இல்லை ஒரு நாளும் அவர்.  அவ்வப்போது காரா சேவை, முறுக்கு, ராயர் கடை போளி இப்படி ஏதாவது ஒன்றும் வரும்.

    பதினைந்து நாட்கள் கட கடவென்று ஓடி விட்டன.

    ஒரு ஞாயிறன்று நான் அம்மாவுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன்.  சத்தமின்றி பூனை போல் நடந்து வந்து என் பின்னிருந்து என்னை இறுக்கக் கட்டி என் கன்னத்தில் முத்தமிட முனைந்தார் என் அத்திம்பேர்.  நான், “அம்மா” என்று அலறினேன்.  என் அலறல் கேட்டு, “என்னடீ ஆச்சு லக்ஷ்மீ?” என்று கத்தியபடி பக்கத்து அறையில் படுத்திருந்த அக்கா அங்கு ஓடி வந்தாள்.  அவள் வந்ததைப் பார்த்த அத்திம்பேர் அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.  ஆனாலும் அவர் கைப் பிடியின் இறுக்கம் தளரவே இல்லை..

    “என்ன செய்யறேள்?  விடுங்கோ அவளெ.”

    “என்னடி செய்யறேன் நான்?  என் பொண்ணு மாதிரிடி அவொ.  ஒரு அப்பா பொண்ணுக்கு முத்தம் கொடுக்கறது தப்பாடீ?”

    தாவி வந்து அக்கா அவர் கைகளைப் பிரிக்கப் பார்த்தாள்.  கைகள் பிரிந்தன.  ஆனால் அவை அடுத்த கணம் நிறை கர்ப்பிணியை வேகமாகத் தள்ளியது சுவ்ற்றுப் பக்கம்.  அக்காவின் பின் மண்டை சுவற்றில் மோதியது.

    “அம்மா….” என்றலறியபடி தரையில் சாய்ந்தாள் அக்கா.  அத்திம்பேர் ஓடிப் போய் அடுத்த் தெருவில் இருந்த ஒரு டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார்.

    டாக்டர் கையால் அக்காவின் நாடியையும், பின் ஸ்டெத்தா ஸ்கோப்பால் இதயத்ட் துடிப்பையும் பார்த்தார்.  கண் இமைகளைத் திறந்து ஒரு டார்ச் லைட்டை இப்படி அப்படி ஆட்டினார்.

    “அம்மா போயி பத்து நிமிஷம் ஆச்சு” என்று சொன்ன டாக்டர் அக்காவின் தலையை சற்று தூக்கிப் பார்த்தார்.  தரையிலும் தலையிலும் ரத்தம்.  அவர் கண்கள் தன்னிச்சையாக அக்கா கீழே கிடந்த இடத்துக்கருகே இருந்த சுவற்றுப் பக்கம் திரும்பியது.  அங்கு சுவற்றிலும் ரத்தக் கறை.

    “என்ன ஆச்சு?”

    நான் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

    “வேகமா வந்தா. சுவத்துலெ இடிச்சுண்டுட்டா.”

    “அப்படியா? யாரு சார் பின் பக்கமா இவ்வொளோ வேகமா நடக்கறாங்க?  இது போலீசு கேசு.  நான் இன்ஃபார்ம் பண்ணலேன்னா நாளெய்க்கு நானும் கம்பி எண்ண வேண்டி வரும்.”

    அவசர அவசரமாக வெளியேறினார் டாக்டர்.  பத்து நிமிஷத்தில் போலீசும் வந்தது.  பின் நடக்க வேண்டியவை நடந்தன.  ஏழாண்டுகள் சிறையில் களி தின்ன பின் இன்று எங்கு இருக்கிறாரோ அவர்.

    “அக்கூ… அக்கூ…” என்ற குரல் என்னை உலுக்கியது.  அந்தப் பறவை போல நானும் “அக்கா… அக்கா…” என்று கத்தவேண்டும் போல இருந்தது.

    “எந்தக் கோட்டெயெப் பிடிக்கப் போறெ நீ?  படிக் கட்டுலெ அப்பிடியே பிரமெ புடிச்சா மாதிரி உக்காந்து இருக்கே?”

    கணவர் குரல் கேட்டு படிக்கட்டை விட்டு எழுந்தேன்.  அவர் பின் நடைப் பிணமாய் நடந்து சென்றேன்.

    Share
  • 12 -ஆம் ஆண்டுக் கம்பன் விழா அழைப்பிதழ்.

     

     பெஞ்சமின் ,இலெபோ 

    செயலர் 

    பிரான்சு கம்பன் கழகம்.

     

    Kamban vizha P1

     

    Kamban vizha P2

     

    Kamban vizha P3

    Kamban vizha P4

     

    Kamban vizha P5

    Kamban vizha P6

    Kamban vizha P7

    Kamban vizha P8

     

     

    Share
  • விநாயகர் துதி

     

    சு.கோபாலன்

     

    vinayagar-jaffnavoice

     

     

     

     

     

     

     

     

     

    ஆறுமுகன் மூத்தவன் அவன் ஆனை முகத்தவன்

    ஊறுகள் யாவும் களைந்து உவகை அளிப்பவன்

    புல்லையும் பூவாய் உகந்து ஏற்றுச் சூடுவான்

    தொல்லை எல்லாம் தொலைத்து நல்லதே செய்வான்

    மோதகப் பிரியன் பாதகம் யாவும் போக்கி

    சாதகமாய் சந்தர்ப்பங்கள் சேர்ந்திட அருள் புரிவான்

    புள்ளிமயில் வாகனன் இளையவன் முருகனுக்கு

    வள்ளி கரம் பற்றிட வழிவகுத்து உதவியவன்

    வலது தந்தத்தால் வியாசர் கூற்றை எழுதி

    உலகு பாரதமெனும் காவியம் பெற்றிட அருளியவன்

    நம்பிக்கை கொண்டு நாள்தோறும் வழிபடும் அடியவர்க்கு

    தும்பிக்கை சாமி காலமெலாம் துணை நிற்பானே!

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

     

    திவாகர்

    meditating buddhaஎன்னை எப்போதும் அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தாம். எத்தனைக் கட்டுரைகள்.. எத்தனை விஷயங்கள், ஒவ்வொரு விஷயத்திலும் ஆத்மார்த்தமாகத் தொக்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி, தமிழ் இணைய உலகத்தின் மகாமனிதர் இவர் என்றால் அதை மறுப்பதற்கு யாரும் முன்வரமாட்டார்.

    தமிழன்னைக்கு தினம் மாலை சூடும் தமிழன்னையின் மகாரசிகர் அதுவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ்நாட்டு விஷயங்களையும் தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்து நமக்கு விளக்கம் தந்துகொண்டிருக்கும் ஆராயும் அறிஞர்.. சரித்திர சம்பந்தமானாலும், விஞ்ஞானப் பூர்வ விளக்கமானாலும் இவரிடம் நிச்சயமான பதில் கிடைக்கும். ஆமாம். டாக்டர் எஸ். ஜெயபாரதிதான் அந்த பேரறிஞர்..மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருந்து கொண்டு உலகத் தமிழரையே அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த அறிஞரை நான் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

    இந்த வாரத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றை உங்கள் முன்னே வைக்கிறேன். முற்றூட்டு, மகமை போன்ற தமிழ்ச் சொல்லுக்கான விளக்கம். .

    அன்பர்களே,

    கூட்டிக்கழிச்சுப் பார்த்தோம். ஏராளமான நூல்களைப் புலவர்கள் சேகரம் பண்ணி, படித்து ஆராய்ச்சியும் பண்ணவேண்டியிருந்தது.
    ஏதாவது புதிதாகத் தோன்றினால் அப்படியே பாய்ந்து கபாலென்று பிடித்துக் கொள்ளவேண்டும். அந்த அலை வரிசையை அப்படியே ஸ்தூல வைகரீ வாக்காக மாற்றி, எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் மாற்றி, வாக்கியங்களாகப் படைத்து, எழுத்துருக் கொடுத்து, ஓலையில் பதிவும் செய்ய வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகள்தாம் நிலவின.

    இருப்பினும் ஏராளமான உரை நூல்கள், பாஷ்யங்கள், துணை நூல்கள், வழிநூல்கள், மொழி பெயர்ப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏதோ சில supportive systemகள் இருந்திருக்கத்தான் வேண்டும். இருந்தன. ஓரளவுக்கு இருந்திருக்கின்றன. ஓரளவுத்தான்.

    பழங்காலத்தில் புலவர்களுக்காக வரியில்லாத நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் ‘முற்றூட்டு’ என்பது. முழு முழு கிராமங்கள்கூட கொடுக்கப்பட்டுள்ளன. அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவ்வாறு முற்றூட்டுப் பெற்றவர். அவருக்கு ராமநாதபுரம் சேதுபதி முற்றூட்டாகக் கிராமங்களைக் கொடுத்தார். பாடம் கேட்க வருவோருக்கு – உடன் வைத்திருந்து – கவிராயர்களே பாடமும் சொல்லிக்கொடுத்தால் கவிராயர்களுக்கு ‘ஆசிரியக் காணி’, ‘ஆசிரிய விருத்தி’, ‘ஆசிரிய போகம்’ என்ற நன்கொடை கிடைத்தது. முற்றூற்றெல்லாம் பேர் போட்ட கவிராயர்களுக்குத்தான். எல்லாருக்கும் கிடைக்காது.

    யார் பேர் போட்ட கவிராயர் என்பதில்கூட இப்போது போலவே அந்தக் காலத்திலும் ரொம்பக் கசகல் இருந்தது. (இந்த ‘வாச்சான் போச்சான்’, ‘கசகல்’ போன்ற சொற்களுக்குப் பொருள் வேண்டுமானால் இராம கிரு, இரா முருகன் போன்றோரிடம் கேட்டுக்கொள்ளலாம். அதெல்லாம் வட்டார வழக்கு).

    பேர் போட்ட புலவருக்கு உரிய லட்சணங்களாக அந்தக் காலத்தில் எந்த மாதிரியான க்ரைட்டீரியாக்களை வைத்திருந்தார்கள் என்பதற்கு அவ்வையார் பாடல் ஒன்று இருக்கிறது.

    (இப்போதெல்லாம் ‘ஔ’ எழுத்தைத் தவிர்ப்பது உண்டு. ஏனெனில் அதை ‘Ola’ ‘ஒ-ள என்று வாசித்துவிடுகிறார்கள். அதற்குப் பதில் ‘அவ்’ என்று
    எழுதினால் வம்பத்த பாடு. ‘ஔ’வுக்கு ‘அவ்’ போலியல்லவா? இந்தக் காலத்தில் அவ்வையாரை யெல்லாம் நம்ம பசங்க தெரிந்துவைத்திருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியவில்லை. எதைச் சொல்வதானாலும் சாங்கோபாங்கமாகச் சொல்ல
    வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ·பூட்நோட் – அடிக்குறிப்புக் கொடுக்கவேண்டியுள்ளது.)

    விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
    விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
    பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர் கவிதை
    நஞ்சேனும் வேம்பேனும் நன்று

    Sycophant எனப்படும் துதிபாடிகள், ஆமாஞ்சாமிகள் இரண்டு பேராவது கூடவே இருக்கவேண்டும். விரல் நிறைய மோதிரங்கள் போட்டிருக்கவேண்டும்.
    இடையில் உயர் ரக பருத்தி ஆடை அல்லது பட்டாடை அணிந்திருக்கவேண்டும். பருத்தி ஆடையை உயர்வாகச் சொல்கிறார். எனெனில் பழங்காலத்தில் மரவுரி,
    லினன் போன்றவையும் இருந்தன. பன்னாடை என்னும் தென்னை மர உரியிலிருந்தும் இடுப்புத் துணி செய்யப்பட்டது. காடாத் துணி எனப்படும்
    கனமான துணியும் இருந்தது.

    ஹைக்கிலாஸ் காட்டன் என்பதைத்தான் பஞ்சு என்று குறிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் சொல்லும் கவிதை நஞ்சாக இருந்தாலும் சரி, வேப்பிலை போல கசந்தாலும் சரி, அதை ‘நன்று’ என்றே பாராட்டுவார்கள்

    முற்றூட்டு, ஆசிரிய விருத்தி, ஆசிரியக் காணி, ஆசிரிய போகம் தவிர இன்னொரு முறையும் இருந்தது. இதற்கு ‘மகமை’ என்று பெயர். இதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இருந்திருக்கின்றன. வேறு வகையான மகமைகளும் இருந்தன.. உள்ளபடிக்குப் பலவகைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தமிழ்த்தாத்தா உவெசாமிநாதய்யர் தம்முடைய இளமைக்காலத்தில் அரியிலூர் சடகோபய்யங்கார் என்னும் கல்விமானிடத்தில் கல்வி கற்றார். இங்கே தமிழ்த் தாத்தாவைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டும்.

    மலேசிய இளைஞர்கள் 22 பேரைப் பரீட்சார்த்தமாக சில கேள்விகள் கேட்டேன். அந்தக் கேள்விகளில் ஒன்று – “உ.வே.சாமிநாதய்யர் பற்றி என்ன தெரியும்?”
    தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புவரை படித்தவர்கள். 22 பேருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இவ்வளவுக்கும் மலேசியத் தமிழர்களுக்காக ‘தமிழ்த் தாத்தா’ என்னும் தலைப்பில் ஒரு நீள்கட்டுரையை எழுதியிருக்கிறேன். ‘மயில்’ என்னும் இலக்கிய இதழில் பத்து வாரங்கள் வெளிவந்தது. நல்ல பாராட்டைப் பெற்ற தொடர் அது. ஆனால் அதெல்லாம் இந்த இளைஞர்களின் தலைமுறைக்கும் முந்திய தலைமுறையினர் காலத்து விஷயம். 1992-இல் எழுதினேன். இப்போது இருபத்தோரு ஆண்டுகள் ஆகின்றன. ஐயரவர்கள் சடகோபைய்யங்காரைப் பற்றி எழுதியவற்றின் பகுதிகளைத் தருகிறேன். அவர் எப்படி மகமையை வசூலித்தார் என்பது பற்றி……

    “கல்வியின்பம் ஒன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர், வறுமை நிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. (அவரை ஆதரித்து வந்த) அரியிலூர் சமஸ்தானத்தின் நிலை வரவர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு ஆதரவு குறைந்து போயிற்று..மாலைவேளையில் அவர் கடைவீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும்.அவர் செல்லும்போது ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் அமரச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்பு காணிக்கையை அப்படியே வீட்டுக்குக் கொண்டுவருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக்கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமேயில்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை.”

    இப்படியும் ஒரு மகமை நடந்தது.

    எத்தனை விவரங்கள் பார்த்தீர்களா? மருத்துவரான டாக்டர் ஜேபி யின் இன்னொரு கட்டுரை ஒன்று ‘சும்மா’ எனும் வார்த்தை எப்படி வந்தது என்பது பற்றி விவரமாகத் தெரிவிக்கும் .எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று .http://www.visvacomplex.com/summa_1.html.. அவருடைய எல்லாக் கட்டுரைகளையும் அவர் விஸ்வா காம்ப்ளெக்ஸ் தளத்தில் படிக்கலாம். சாக்தத்திலும் சைவத்திலும் வித்தகரான மலேஷிய பேரறிஞர் டாக்டர் ஜேபியை வல்லமை இந்த வார வல்லமையாளராகப் போற்றி அவரை கௌரவம் செய்து அதனால் பெருமை பெறுகிறது, டாக்டர் ஜேபி அவர்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடு இருந்து எங்களுக்கு மேலும் மேலும் புதிய விஷயங்களையும் படைத்து பழைய விஷயங்களையும் தெளிவித்துக் கொண்டே இருக்க இறைவனை பரிபூரணமாக வேண்டுகிறேன்.

    கடைசி பாரா:வல்லமையில் திரு ஆவுடை நாயகம் அவர்கள் கட்டுரையிலிருந்து
    “சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
    1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை.

    Share
  • தமிழே, அழகே, எனதுயிரே!

     

    கோ. ஆலாசியம்

     

    அறிவினில் உயரியத் தமிழே- எங்கள்

    உயிரினில் ஊறிடும் அமுதே

     

    அழகெனும் சொல்லின் பொருளே – ஆன்ற

    பலச்செறிவுகள்  நிறைந்த ஆழ்கடலே

     

    விடியலைத் தந்திடும் கதிரே – உயர்

    படியெனும் வாழ்வின்விழுப் பொருளே

     

    நீதியாய் நின்றொ ளிரும்குளிர்ச் சுடரே

    நீதியிலாதனை யெரித்தழிக்கும் தனலே

     

    வளியெனப்  பரவிடும் பூந்தளிர்மணமே – அது

    வெளிகளைக் கடக்கச் செயுமற்புதமே

     

    உலகிற் மூத்தத் தமிழே – உன்னதப்

    புலவர்கள் போற்றியக் கலைமகளே

     

    தவமே! அதனால் பெரும் வரமே

    தவமுனிவர் போற்றிய ஒளிப்பிழம்பே

     

    விண்மண்ணோடு  ஞாலம்விழுமியப் பொருளாவின்

    நுண்ணிய பயனுரைக்கும் நுட்பமே

     

    விண்ணோர் வந்துதித்துன் விழுமியப் பொருளுரைத்து

    மண்ணோர் மாண்புறச்செய்ய அருளியவளே

     

    எந்நாட்டவரும் கொண்டாடிடும் அவர்தம் மொழியில்

    நின்களியாட்டம் காண்பாரும் உளரே

     

    தென்னாட்டான் திக்கெட்டும் பரவியும் – தெய்வ

    நின்மாட்டும்பேரன்புக் கொண்டக் காதலினிதே

     

    கண்ணோட்டம் கொண்டார்க்கு நின்னொளி துல்லாழ

    உண்மைப் பொருளுணர்த்திடும்  அழகே

     

    இம்மாட்டும் எங்கள் உயிரோட்டம் இருப்பது

    செம்மார்ந்த நினதனறிவுச் செழுமையாலே

     

    எம்மாட்டும் நாங்களுமை மறக்க மாட்டோம்

    அம்மே! என்னாட்டில்யாம் வாழ்ந்திடிலும்

     

    உம்மாட்டும் கொண்டொளிரும் உலகப் பொதுமறையும்

    தம்பட்டம் செய்யாதரணி யெங்கும்பரவியதே

     

    கல்விக்குப் பெரியவனும் கவிவேள்விச்செய் இளங்கோவும்

    அல்லல் தளையறுக்க அருள்பொழிந்த

     

    ஆழ்வாரோடு நாயன்மார்கள் என்றொரு வரிசையிலே

    வாழ்வாங்கு வாழ்ந்த ஞானியரே

     

    வந்துதித்துப் போற்றிய தமிழ் அணங்கே

    சிந்தனைக்கு பெரு விருந்தே

     

    சீர்மேவும் பெருவாழ்வாம் வீடு பேறுக்கும்

    நற்வழி காட்டும் அருமருந்தே

     

    பாருக்குள் உயர்ந்த கவி எங்கள்

    பாரதியின் நாவினில் ஆடியே

     

    காதல் காதல் காதல் அதுபோயின்

    சாதல் சாதல் சாதலென

     

    யாருக்கு மெளிதில் புலப்படாத குயில்நாதம்

    கூறியப் பொருளு ரைத்தான்

     

    வேராக நீயிருந்தாய் வேறாகி நின்றவனும்

    வேதமலர்களை ஆனம்மலர்ச் சென்டாக்கி

     

    வேதவல்லியே நிந்தன் பாதம் சேர்பித்தான்

    நாத வெள்ளத்தில் முத்தெடுத்தே

     

    உலகப்பொருளாவினும் அதுவாயதனி யக்கமாயெம்

    ஊனில் உயிரில் உறைபவளே

     

    வாழி! வாழி! நீவாழீயவே! – பிரபஞ்ச

    ஊழிக்குப் பின்னொரு ஆழியிலும்

     

    முதலாய் வந்துதித்து மூத்தவளாய் -முழு

    முதற் பொருளாயுதித்து வாழியவே!

     

     

    படத்துக்கு நன்றி: http://omsakthionline.com/?katturai=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&publish=11

     

    Share
  • அறிவியல் நாயகன்

    ஆவுடை நாயகம்

    ganeshpicture5சமயம் என்பதற்கும் மதம் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. மதம் என்பது தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது அதனால் தான் அதை மெய்யியல்/தத்துவயியல் என்போம். சமயம் என்பது தத்துவயியல் கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கலாம் ஆனால் சமயம் ஒன்றுதான் அதுவும் அது இந்து மதம் மட்டும்தான். அப்படிப்பட்ட இந்து மதத்தின் முழுமுதற் கடவுள் ஆனைமுகன். உலக வரலாற்றில் அறுவை சிகிச்சை முறைக்கு அறிவு வழங்கியது அவன் பிறப்பு. உலகம் மிகப் பெரியது என்று எடுத்துச் சொன்னவன் முருகன் இல்லை அவன் தம்பி. உலகம் உள்ள கையில் என்று இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு (மடிகணினி ,இணையதள மொபைல்) அன்றே வழிகாட்டியவன் விநாயகன். பெற்றவளையும், தந்தையையும் வணங்கு என்று பகுத்து அறிவு வழங்கிய பாலகன். இயற்கையால் உருவான அனைத்தும் அனைவர்க்கும் பொதுவானது என்று கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை கவிழ்த்து கம்யூனிசம் சொன்ன கவிநாயகன் எங்கள் சிவமைந்தன் அல்லவா ? மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்து பலர் முகவரி சொல்லும் மூத்தவன் அவன் அல்லவா ? கூரை தேவை இல்லை கோபுரம் தேவை இல்லை விநாயகர் சிலை இருந்தால் போதும் வீதிக்கு ஒரு விருட்சம் உண்டு. எளிமையாக இருப்பவன் எழுந்து வந்தால் விசுவரூபம் எடுப்பவன். குழந்தையில்லாத பிரச்சனைக்கு குளக்கரையில் குளித்து அரச மரம் சுத்தினால் ஆணுக்கு விந்தணுவும் வீரியமும் பெண்ணுக்கு கர்பப்பை கோளாறும் நேராகும் என்கிறது நாட்டு வைத்தியம். குலம் தழைக்க குளத்தாங்கரை அருகில் இருந்தவன் எங்கள் தேவியின் தெய்வமகன். குழந்தைகளைப் பார்த்து பிள்ளையாரைச் சுத்தி வா என்ற முதுமொழி போய் ஊரை சுத்திவா என்று ஊதாரியை வளர்க்கும் அம்மை அப்பன்களுக்கு இது பொருந்தாது. தலையில் கொட்டி தோப்புக்கரணமும் போடுவது கேலியாகப் பார்த்தவர்களுக்கு இப்போது ஜெர்மன் நாட்டில் இது ஒரு அறிவு பயற்சிக்காக என்று பணம் வாங்கி வகுப்புகள் நடத்தும் போது வலிக்கிறது. எதையுமே இழந்த பிறகு விழிக்கும் விழிகளுக்கு என்ன எழுதி என்ன பயன்? பகுத்து அறிவு என்பது பிறர் மனதை புண்படுத்தக் கூடாது என்பது. ஆனால் வழக்கம் போல விடுமுறை தினக் கொண்டாட்டம் என்று தொலைக்காட்சிப் பெட்டி தொல்லை கொடுத்தாலும் சகிப்புத்தன்மை என்ற சோம்பேறித்தனத்தோடு வீட்டில் கொழுக்கட்டை உண்டு கழியுங்கள்.பிற மதங்களைப் போல வன்முறையை கையாளச் சொல்லவில்லை. ஜனநாயகம் ,கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் அவர்களின் கைகளை நீதியின் துணை கொண்டு கட்டி இருக்கலாம். இல்லை விளம்பரம் கிடையாது என்று பொருளாதார நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். எதுவும் செய்யாமல் எல்லாம் அவன் செயல் என்பது முயற்சி இல்லாமை என்பதைக் காட்டுகிறது. விநாயகர் சதுர்த்தியில் புதிய விழிப்புணர்வு பிறக்கட்டும்.

    படத்திற்கு நன்றி :

    http://www.google.co.in/imgres?imgurl=http://isexiiindia.files.wordpress.com/2010/10/ganeshpicture5.jpg&imgrefurl=http://isexiiindia.wordpress.com/2010/10/01/lord-vinayagar-tamil-first-god-prayer/&h=361&w=360&sz=12&tbnid=E4PiRvteA-cIfM:&tbnh=87&tbnw=87&zoom=1&usg=__K6csU5olg6__OjsMozPzH5nkorE=&docid=7YUWP3bCrqEi2M&sa=X&ei=2AIqUtv1KoWakAXaq4HIAg&ved=0CDAQ9QEwAQ&dur=119

    Share
  • விநாயக சதுர்த்தி!…

    சு.ரவி

    Birth of Mahabharatham

    வணக்கம்,வாழியநலம்

    வேழமுகத்து விநாயகனை,
    ஏழிசை அருளிய இறையவனை,
    பனிமாமலை மேவிய சிவன் மகனை,
    இளையவன் சினமுறக் கனிவென்று,
    பின் அவன் மனம் மகிழ்வுற
    அருள்செய்தானை,
    வளைமுறி எயிறொடு வடமலையில்
    வளர் பாரதம் எழுதிய மதகளிற்றை
    அரக்கரினத்தை அழித்த களத்தில்
    ஆடிய நாயகி பாலகனை- மலர்
    நிகர்த்த பதத்தை மனத்தில் இருத்தி வணங்குவோம்!

    கற்பனை வளம் கொழிக்கக் காவியம் பாடும் வியாசமுனிவர் முன், ஒரு பள்ளிமாணாக்கனைப்போல் பணிவுடன் அமர்ந்து பாரதத்தை எழுதிப் பதிவு செய்யொம் கணபதியின் எண்ணெய்வண்ண ஓவியம் இணைப்பில்…

    கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கி, விநாயகர் மீது நான் எழுதி, நண்பர் ராஜகோபால் பாடிய 8 இசைப்பாடல்களைக் கேட்கலாம்.

    பார்க்க, கேட்க, ரசிக்க…

    Share
  • கணபதி அருள்…

     செண்பக ஜெகதீசன்  iganeshjimages

    கரமது ஐந்தாய் உடையவனை

    காணும் ஆனை முகத்தவனை,

    சிரமதில் மணிமுடி தரித்தவனை

    சீக்கிரம் வந்தே அருள்பவனை,

    புரமது எரித்தான் திருமகனை

    பூமகள் கணவன் மருமகனை,

    கரமது கூப்பி வணங்கிடுவாய்

    கணபதி அருளினைக் கண்டிடுவாய்…!

     

    கரமதாய்த் துதிக்கை உடையவனை

    கடவுளர் யாவரின் முதலவனை,

    வரம்பல தந்திடும் வல்லவனை

    வகைவகை வடிவம் கொண்டவனை,

    அரணென நம்மைக் காப்பவனை

    அருகம் புல்லை அணிந்தவனை,

    உருவினில் பெரிய விநாயகனை

    உளத்தினில் கொண்டால் உயர்வுதானே…!

    படத்துக்கு நன்றி

      http://www.bhmpics.com/view-lord_ganesha_awesome_art-1920×1080.html

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் 5

    5. இஸ்லாமிய கலைப்பண்பாட்டு சேகரிப்புக்கள், பெர்காமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இன்னமும் நாம் பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தின் உள்ளே தான் இருக்கின்றோம். 5000 ஆண்டு பழமை மிக்க ஊருக் நகர் பற்றி விளக்கும் கண்காட்சியைப் பார்த்த நாம் அடுத்த பகுதிக்குச் செல்வோமா?

    பெர்காமோன் அருங்காட்சியகத்தின் சிறப்பினைப் பற்றிக் கூறும் முதல் பகுதியிலேயே இந்த அருங்காட்சியகம் இன்றைய ஐக்கிய அரபு நாடுகள் இருக்கின்ற பகுதிகளிலிருந்து சேகரிப்பட்ட இஸ்லாமிய கலைப்பொருள் கண்காட்சியையும் கொண்டிருக்கும் விஷயத்தைச் சிறிது குறிப்பிட்டிருந்தேன். இந்த இஸ்லாமிய கலைப் பொருட்கள், அவற்றின் தனிச் சிறப்புக்கள் யாவை என்பதனைப் பற்றியும் விளக்க வேண்டியது அவசியம் என நான் நினைப்பதால் இப்பதிவில் அதனைப் பற்றி சில விவரங்கள் பகிர்ந்து கொள்கிறேன்.

    பெர்லின் அருங்காட்சியகத் தீவு (Museum Insel) பகுதியில் முதலில் தென்படுவது ‘போட அருங்காட்சியம்’. அதனைத் தொடர்ந்தார் போல பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கின்றது. வரலாற்றை நோக்கினால் இப்பகுதியில் முதலில் அமைந்திருந்த கட்டிடம் போட அருங்காட்சியகம் மட்டும் தான். இங்கு தான் முதன் முதலில் பல்வேறு நாடுகளிலிருந்து பெர்லினில் அருங்காட்சியகத்திற்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அதில் இஸ்லாமிய கலைப்பொருட்களும் அடங்கும் . வில்ஹெல்ம் போஃன் போட (Wilhelm von Bode) இந்த அருங்காட்சியகத்தில் இஸ்லாமிய கலைப்பொருட்களுக்கானச் சிறப்புப் பகுதியை ஏற்பாடு செய்திருந்தார். அப்பொழுது அந்தச் சேகரிப்பில் இடம்பெற்றிருந்த கலைப்பொருட்கள் அனைத்திலும் மிகப் புகழ் பெற்றதும் அளவில் பெரியதுமாக அமைந்தது மஷாட்டா அரண்மணை சுவர்ப்பகுதி தான். இது இன்றைய சிரியாவிற்கும் ஜோர்டான் நாட்டிற்கும் இடையே அமைந்துள்ள ஒரு அரண்மணையின் சுவர் பகுதி. ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் (1842 – 1918) இந்த அரண்மனை சுவரை ஜெர்மானிய அரசுக்குப் பரிசாக வழங்கியிருந்தார். இந்த அரண்மனைச் சுவர் மட்டுமன்றி ஏனைய கலைபொருட்களையும் முறையாகக் காட்சிக்கு வைப்பதிலும் சிரமம் இருந்து வந்தது. 1932ம் ஆண்டு பெர்காமோன் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு பெர்காமோன் கோயிலுடன் அருங்காட்சியகம் அமைந்த போது இங்கு சில அறைகள் இஸ்லாமிய கலைப்பொருட்களின் காட்சிக்காகவும் ஒதுக்கப்பட்டன. அன்றிலிருந்து இஸ்லாமிய பண்பாடு மற்றும் கலைகளைச் சொல்லும் வெவ்வேறு காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இங்கு தொடர்ந்து இணைக்கப்பட்டு இப்பொழுது ஈரான், ஈராக், சிரியா, இந்தியா, பாக்கிஸ்தான், ஸ்பெயின். லிபியா, எகிப்து, மொரோகோ, துனிசியா போன்ற நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் காட்சியில் அங்கம் வகிக்கின்றன.

    இஸ்லாமிய கலை என்பது இஸ்லாமிய மதம் பரவிய எல்லா நாடுகளிலும் பரவியுள்ளதை இன்றும் நாம் காண்கின்றோம். மன்னர்களின் விருப்பத்தின் பெயரிலும் ஆணையின் படியும் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சியின் கட்டிடங்களாக, ஓவியங்களாக, கலைபொருட்கள் தனித்துவத்துடன் காட்சியளிப்பதைக் காண்கின்றோம். ஐக்கிய அரபு நாடுகள் மட்டுமன்றி இஸ்லாம் பரவிய ஸ்பெயின், இந்தியா, போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் இங்கிருக்கின்றன. உதாரணத்திற்காக இங்கு சேகரிப்பில் உள்ள குறிப்பிடத்தக்க கலைப்பொருட்களை அறிமுகம் செய்வது தகும் என நினைக்கிறேன்.

    மஷாட்டா (Mshatta) அரண்மனை சுவர்.

    பெர்காமோன் அருங்காட்சியகத்தில் இருக்கும் இஸ்லாமிய கலைப்பொருட்களிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருள் இது என்றால் அது மிகையில்லை. இந்த அரண்மனை உடைந்தோ சிதிலப்பட்டோ அழிந்த ஒன்றல்ல. இன்றும் இருக்கும் ஒரு அரண்மனையே. ஜோர்டான் தலைநகர் அம்மானின் விமான நிலையத்திற்கு அருகாமையில் இருக்கின்றது இந்த அரண்மனை. 1903ம் ஆண்டு இந்த அரண்மனையின் ஒரு பக்க மதில் சுவரை அன்னாளைய ஓட்டோமான் சுல்தான் அப்ஹுல் ஹமீட் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்குத் தனது பரிசாக அனுப்பி வைத்தார். ஏன் அனுப்பி வைத்தார் அதற்கான காரணமென்ன என்பது தெரியவில்லை.ஆனால் பரிசாக இந்த மதில் சுவர் வந்தமை குறிப்பில் உள்ளது.

    மஷாட்டா அரண்மனை இடதுபக்கச் சுவரின் முன்னே (ஆகஸ்ட் 2013)
    மஷாட்டா அரண்மனை இடதுபக்கச் சுவரின் முன்னே (ஆகஸ்ட் 2013)

    இன்றைய சிரியா ஜோர்டான் ஆகிய நாடுகள் இருக்கும் பகுதி இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய மதத்திற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக அமைந்திருந்தது. முகமது நபி இறந்த பிறகு இப்பகுதியில் உமையாட் பரம்பரையினர் அடுத்தடுத்து வரிசையாக ஆட்சி புரிந்து வந்தனர். அக்காலகட்டத்தில் அதாவது 8ம் நூற்றாண்டு வாக்கில் (கிபி 740) கட்டப்பட்டது இந்த அரண்மனை. ஏறக்குறைய 20,000 சதுர அடி பரப்பளவில் இந்த அரண்மனையைக் கட்டியிருக்கின்றனர். ஒரு வகையில் இதன் கட்டுமானம் தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கின்றன. அறைகளுக்கு மேல் அறைகள் என விரிவாகிக் கொண்டேயிருந்திருக்கின்றது இந்த அரண்மனை. அந்த அரண்மனையின் மதில் சுவரின் ஒரு சிறு பகுதியே இங்கிருப்பது.

    மஷாட்டா அரண்மனை சுவரின் கலைவேலைப்பாடு (ஆகஸ்ட் 2013)
    மஷாட்டா அரண்மனை சுவரின் கலைவேலைப்பாடு (ஆகஸ்ட் 2013)

    பெர்கமோன் அருங்காட்சியகத்தில் ஒரு அறை முழுமையையும் நிறப்பிய வண்ணம் இந்தச் சுவர் அமைந்திருக்கின்றது. அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்து இந்த சுவர்ப்பகுதி பெர்லினுக்குப் பயணித்து வந்த தகவல்களை ஒலிப்பதிவின் வழி கேட்டு அறிந்து கொள்ளலாம். மிகப் பிரம்மாண்டமான மதிற் சுவரில் கலை வண்ணங்கள் நிரம்பியிருப்பதை நன்கு காணலாம். மயில், புலி, சிங்கம், பறவைகள், விலங்குகள் பூ வடிவங்கள், கொடிகள், போன்ற அமைப்புகளில் சுவர் அலங்காரம் செய்யப்பட்டு இந்த மதிற் சுவர் காட்சியளிக்கிறது. உதாரணமாக மேலுள்ள படத்தில் புலி நீர் அருந்துவதையும் அதிலிருந்து Tree of life அதாவது உயிர்களின் ஆதாரம் எனப்படும் தாவரங்கள் முளைத்து எழுவதும் உள்ளுரை உவமமாகக் காட்டப்படுகின்றது. Tree of life என்பது பண்டைய பெர்ஷிய தாக்கத்தின் வெளிப்பாடு.

    எகிப்திய பொன் ஆபரணங்கள்
    உடைந்த சுவர்களும் ஓவியங்களும் மட்டும் கலைப்பொருட்களல்ல. அக்காலத்தில் இஸ்லாமிய அரச குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஆபரணகங்களும் கூட இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை நிறைத்திருக்கின்றன.

    எகிப்திய காதணிகள் (ஆகஸ்ட் 2013)
    எகிப்திய காதணிகள் (ஆகஸ்ட் 2013)

    இங்கு படத்தில் காணப்படுவது 7ம் அல்லது 8ம் நூற்றாண்டெனக் கணிக்கப்படும் ஒரு எகிப்திய அரச குடும்பத்தின் காதணிகள். இதனைப் போன்று மோதிரங்கள், கழுத்தணி, காலில் அணிந்து கொள்ளப்படும் ஆபரணங்கள் ஆகியவை இங்கு சேகரிப்பில் உள்ளன.

    மோகுல் கம்பளம்

    கம்பளங்களைப் பற்றி ஆசிய நாடுகளில் பொதுவாக அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. வரவேற்பு அறையை அலங்கரிக்க கம்பளங்களை வாங்கி அலங்கரிப்பது வழக்கம். ஆனால் வட ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள் எங்கெங்கிலும் கம்பளங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன என்பது உண்மை.

    ஒரு முறை துருக்கியில் பஸ் பயணம் செய்து கொண்டிருந்த போது சுற்றுலா வழிகாட்டி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த ஜெர்மானிய பயணிகளைப் பார்த்து ‘உங்கள் ஊரில் எப்படி மெர்ஸடிஸ் கார்கள் உங்கள் நாட்டிற்குப் பெருமையானதாகக் கருதுகின்றீர்களோ அதைப் போல எங்களுக்குக் கம்பளங்கள் நாட்டிற்குப் பெருமை அளிப்பன’ என்று விளக்கினார். கம்பளங்களின் விலை அதன் தரம் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொருத்து வித்தியாசப்படும் என்பதை கம்பளங்களை வாங்க முயற்சித்தவர்கள் அறிந்திருப்பர். மொரொக்கோ, துனிசியா, லிபியா, ஜோர்டான், எகிப்து, துருக்கி என இங்கெல்லாமே கம்பளங்கள் ஒரு குடும்பத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகக் கருதப்படுகின்றன.

    மோகுல் பேரரசின் 17ம் நூற்றாண்டு கம்பளம் (ஆகஸ்ட் 2013)
    மோகுல் பேரரசின் 17ம் நூற்றாண்டு கம்பளம் (ஆகஸ்ட் 2013)

    1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மோகுல் பேரரரசின் அரண்மனை கம்பளம் ஒன்று இங்கு சுவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பாக்கிஸ்தானின் லாகூரிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கம்பளம்.

    இது தவிர்த்து வட இந்தியாவிலிருந்து சேகரிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக பேரரசர் ஜஹாங்கீர் தொழுது கொண்டிருப்பது போன்ற ஒரு ஓவியம் ஒன்றும் இந்த சேகரிப்பில் அடங்கும். கிபி 1610ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இது 33 x 19.3 cm அளவில் பூக்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் கண்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இதுவரை இஸ்லாமிய கலைப்பொருட்களைப் பார்த்து ரசித்தோம். இனி முன்பக்கம் வந்து பெர்காமோன் கோயிலைச் சுற்றி வருவோமா?

    தொடரும்…

    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
     
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி
    Share
  • அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

    மேகலா இராமமூர்த்தி

    வட அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு (Washington D.C.) அருகிலுள்ள மேரிலாந்தில் (Maryland) ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இருநாட்களும் நடைபெற்ற முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு பரவலாக அமெரிக்கவாழ் தமிழர்கள் அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. அம்மாநாட்டு நிகழ்வுகள் குறித்துச் சுருக்கமாக நம் ‘வல்லமை’ வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். இனி மாநாட்டிற்குள் செல்வோம் வாருங்கள்!

    மேரிலாந்திலுள்ள “கல்சுரல்  ஆர்ட்ஸ் சென்டரில்’ ஆகஸ்ட் 31, 2013 அன்று சரியாக மதியம் 2 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் புறநானூற்று மாநாடு இனிதே தொடங்கியது. சுமார் 500 பேர் அமர்வதற்கான இடவசதி கொண்டது இந்த அரங்கு. தமிழன்னையை வாழ்த்தியபின் குழந்தைகளுக்கான ‘புறநானூறு – ஒப்புவித்தல் போட்டி’ நடைபெற்றது. புறநானூற்றுப் பாடல்கள் பத்தினை மனப்பாடமாகச் சொல்லிச் சிறுகுழந்தைகள் பரிசுகளைத் தட்டிச் சென்றது உள்ளம் கவர்ந்தது.

    null

    புறநானூற்று மாநாட்டுப் பதாகை

    அதனைத் தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். இம்மாநாட்டிற்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் அமைந்தது அவருடைய முயற்சியும், ஆர்வமுமே எனலாம். கடந்த நான்காண்டுகளாகப் புறநானூற்றுப் பாடல்களை அமெரிக்கத் தமிழர்கள் அனைவருக்கும் பயிற்றுவித்ததோடல்லாமல், அதற்குப் புதிய எளிய உரை ஒன்றையும் வரைந்த சாதனையாளர் அவர்.

    null

    முனைவர் மருதநாயகம், முனைவர் பிரபாகரன் மற்றும் முனைவர் முருகரத்தினம் (இடமிருந்து வலம்)

    அடுத்துப் புறநானூறு குறித்தச் சிறப்புக் கருத்தரங்கிற்கான முதல் அமர்வு (first panel) நடைபெற்றது. இதனைக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

    இவ்வமர்வில் முனைவர் திரு. சங்கரபாண்டி அவர்கள் ‘சங்க காலத்தில் சாதி – புதிய ஆய்வு முடிவுகள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் திரு. சிவயோகநாதன் அவர்கள் ‘அஞ்சாமை புலவரின் உடமையடா’ என்ற தலைப்பிலும், மருத்துவர் திருமதி. சரோஜா இளங்கோவன் அவர்கள் ’புறநானூற்றில் சமூக விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலும், மென்பொருள் பொறியாளர் திருமதி. மேகலா இராமமூர்த்தி அவர்கள் ’புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். இச்சொற்பொழிவுகள் அரங்கில் நிறைந்திருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது அவர்கள் அடிக்கடி எழுப்பிய கரவொலிகளால் நன்கு புலனானது.

    null

    முனைவர் சங்கரபாண்டி (உரை நிகழ்த்துபவர்), முனைவர் சிவயோகநாதன், மருத்துவர் சரோஜா இளங்கோவன் மற்றும் மென்பொருள் பொறியாளர் மேகலா இராமமூர்த்தி (இடமிருந்து வலம்)

    இரவு உணவு இடைவேளைக்குப் பின் இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருந்த தலைமை விருந்தினர், முனைவர் திரு. மருதநாயகம் அவர்களின் பேருரை இடம்பெற்றது. ’புறநானூறு போற்றும் வாழ்வியல் நெறிகள்’ என்ற பொருளில் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதாக இருந்தது எனலாம். நம் சங்க இலக்கியத்தைக் கிரேக்க மற்றும் ரோம இலக்கியங்களோடு ஒப்பிட்டு அவர் நிகழ்த்திய பேருரை பல புதிய தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகின்ற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உலக சகோதரத்துவக் கோட்பாடு வேறு எந்த நாட்டு இலக்கியத்திலுமே பேசப்படவில்லை என்று முடித்து அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக்கொண்டு போனார் அவர்.

    அடுத்த நிகழ்வாகவும் முதல்நாள்  மாநாட்டின் இறுதி நிகழ்வாகவும் அமைந்தது, ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ என்ற பெயரில் வந்த இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த முத்தமிழ் நிகழ்ச்சி. அதுவே அன்றைய விழாவின் மணிமகுடமாய்த் திகழ்ந்த நிகழ்ச்சியுமாகும். பள்ளிப் பிள்ளைகள் பலர் இணைந்து ‘தகடூரான் தந்த கனி’ என்ற பெயரில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி வழங்கித் தமிழ்ப் புலவரைச் சிறப்பித்த வரலாற்றைச் சுவைபட மேடையில் நடித்துக் காட்டினர்.

    null

    ‘புறநானூற்றுப் பாடல்களுடன் முத்தமிழ் முழக்கம்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சி..

    அடுத்துத் ’தலை கேட்டான் தம்பி’ என்ற பெயரில் குமண வள்ளலின் வரலாறு அரங்கேறியது. குமணனின் தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து ஆட்சியைப் பறித்துகொண்டதோடல்லாமல் ’அவன் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பத்தாயிரம் பொன் பரிசு’ என்றுவேறு அறிவித்தான். அவ்வேளையில் தமிழ்ப்புலவர் ஒருவர் குமணனைக் கண்டு பரிசில் பெறுவதற்காக அவன் தங்கியிருந்த கானகத்திற்குச் செல்கின்றார். புலவருக்கு ஏதும் கொடுக்கவியலாத நிலையில் இருந்த குமணன் ’தன் தலையை வெட்டித் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்க!’ என்று வாளைப் புலவரிடம் நீட்டிய காட்சி காண்போர் கண்களில் நீர்மல்கச் செய்தது.

    அடுத்து இடம்பெற்றது ‘கவரி வீசிய காவலன்’ என்ற தலைப்பில் தமிழ்ப்புலவர் மோசிகீரனார்க்குச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசித் தமிழைப் பெருமைப்படுத்திய வரலாறு. நிகழ்ச்சியின் முடிவில் அரங்கத்தினரின் கரவொலி விண்ணைப் பிளந்தது என்றால் மிகையில்லை.

    இரண்டாம் நாள் நிகழ்வுகள் காலை 9 மணிக்குத் தொடங்கின. ’புறநானூற்றில் எனக்குப் பிடித்த பாடல்’ என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் அவர்களுக்குப் பிடித்த புறநானூற்றுப் பாடலையும் அதற்கான காரணத்தையும் தங்கள் மழலைக் குரலில் கூறி அனைவரையும் மகிழ்வித்தனர். ’கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ எனத்தொடங்கும் ’ஒக்கூர் மாசாத்தியார்’ என்ற பெண்பாற் புலவரின் புறப்பாடலையே தங்கள் விருப்பப் பாடலாகப் பல குழந்தைகள் குறிப்பிட்டனர்.

    அடுத்து மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’  நடைபெற்றது. அதில் பங்குபெற்ற குழந்தைகள் புறநானூற்றிலிருந்து கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்குக்கூடச் சிறப்பாய் பதிலளித்து அரங்கத்தை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    null

    மாணவர்களுக்கான ‘புறநானூறு – வினாடிவினாப் போட்டி’

    அடுத்ததாக, புறநானூற்றுக்  கருத்தரங்கின் இரண்டாவது  அமர்வு (second panel) தொடங்கியது. அதில் பேராசிரியர் முருகரத்தினம் அவர்கள் ‘புறநானூறு பேசும் வாழ்வியல் விழுமியங்கள்’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் அறிவுநம்பி அவர்கள் ‘புறநானூறு – பலதுறைப் பேழை’ என்ற தலைப்பிலும், பேராசிரியர் வாசு. அரங்கநாதன் அவர்கள் ‘உவமைகள் வழிச் சங்கத் தமிழகம்’ என்ற தலைப்பிலும் தங்கள் கருத்துக்களை வழங்கினார்கள். இவ்வமர்வை முனைவர் மருதநாயகம் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

    பின்பு, புறநானூற்று ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ’மாநாட்டு மலர்’ ஒன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்த முக்கிய நிகழ்வுகளாக மற்றுமொரு புறநானூற்றுக் கருத்தரங்கம் மற்றும் சங்க இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அம்மையாருடன் ஓர் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன. வேறு யாருடைய உதவியும் இல்லாமல் தாம் தனியாகவே சங்கத்தமிழ் நூல்கள் பன்னிரண்டை இதுவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதாகத் திருமதி. வைதேகி அவர்கள் தெரிவித்தது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. அவருடைய முயற்சியையும், ஆர்வத்தையும் விழாவைக் காண வந்திருந்தோர் பலரும் பாராட்டினர். உண்மையிலேயே போற்றத்தக்க அரும்பணிதானே இது!

    அதற்கடுத்தபடியாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்  பிரபாகரன் அவர்கள் ‘புறநானூறு காட்டும் தமிழ்ச் சமுதாயம்’  என்ற பொருளில் சிறப்புச்  சொற்பொழிவாற்றினார். திருக்குறளோடு புறநானூற்றை ஒப்பிட்டு அவர் வழங்கிய அவ்வுரை மிகச் சிறப்பாகவும், சுவையாகவும் அமைந்திருந்தது.

    நாட்டிய நாடகம் ஒன்று அடுத்து  அரங்கேறி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றது. தன் தந்தையையும், பின்பு கணவனையும் போரில் இழந்த பெண்ணொருத்தி மீண்டும் ஒலிக்கின்ற போர்ப்பறை முழக்கத்தைக் கேட்டு வீரம் கொண்டு தன் இளம் புதல்வனையும் போருக்குச் செல் என்று அனுப்புவதை மையக்கருவாகக் கொண்டிருந்தது அந்நாடகம்.

    பின்பு மாலை 4 மணியளவில்  புறநானூற்றில் பல்லூடக (multi-media) வினாடிவினா ஒன்று நடைபெற்றது; இஃது பெரியவர்களுக்கானது. ‘கடையெழு வள்ளல்கள் அணி’ மற்றும் ‘மூவேந்தர் அணி’ என்ற இரண்டு அணிகள் இவ்வினாடிவினாப் போட்டியில் பங்கேற்றன. இறுதியில் ‘கடையெழு வள்ளல்கள் அணி’ பரிசினைத் தட்டிச்சென்றது (வென்ற அவ்வணியில்தான் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே).

    null

    புறநானூற்றில் பல்லூடக வினாடிவினா (பெரியவர்களுக்கானது)

    பின்பு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் திரு. அறிவுமதி அவர்கள் ‘புறநானூற்றில் முதியோள் சிறுவர்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பழகுவதற்கு மிகவும் இனியவராகவும், எளியவராகவும் திரு. அறிவுமதி திகழ்ந்தார் என்பதனை இங்கு நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

    இரவு உணவு இடைவேளைக்குப் பின்பு ’அமரர் கல்கி’ அவர்கள் எழுதி இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் ‘சிவகாமியின் சபதத்தை’ நாட்டிய நாடகமாக அரங்கேற்றினர்.

    null

    ’சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகத்திலிருந்து….

    மிகச் சிறப்பான முறையிலே அமைக்கப்பட்டிருந்த காட்சிகள், நாட்டியங்கள், பங்கேற்ற கலைஞர்களின் தேர்ந்த நடிப்பு எல்லாமும் சேர்ந்து அந்நிகழ்ச்சியை அனைவரும் பிரமிக்கும்வண்ணம் மாற்றியிருந்தன. விழாவைக் காணவந்திருந்தோர் யாவரும் இந்நாட்டிய நாடகத்தை வெகுவாக இரசித்து மகிழ்ந்தனர் என்று சொல்லவும் வேண்டுமோ!!

    இவ்வாறு இரண்டு நாள் நிகழ்வுகளை உள்ளடக்கிய முதல் பன்னாட்டுப் புறநானூற்று மாநாடு ’வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்’, மற்றும் ’வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு’ (FeTNA) ஆகியவற்றின் சீரிய தலைமையிலும், உழைப்பிலும் தமிழ்கூறு நல்லுலகே வியந்து பாராட்டும் ஓர் வெற்றி மாநாடாய்த் திகழ்ந்தது எனில் மிகையில்லை.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 88 (09.09.13)

    மலர் சபாkannagi and devanthi

    புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை

    தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்

    குறைவில்லாத நிறைந்த புகழையுடைய
    தன் தோழி கண்ணகி
    தன் கணவனைப் பிரிந்து வருந்துகிறாளே
    என்று எண்ணிய தேவந்தி
    கோயிலுக்குச் சென்று
    அறுகு, சிறுபூளை மற்றும் நெல் தூவி வழிபட்டுக்
    கண்ணகி தன் கணவனை
    மீண்டும் பெற வேண்டினாள்.

    பின் கண்ணகியிடம்
    “நீ உன் கணவனைப் பெற்று வாழ்வாயாக”
    எனக் கூறினாள்.

    கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்

    அது கேட்ட கண்ணகி
    தேவந்தியிடம் கூறினாள்:
    “செறிந்த வளையலை அணிந்தவளே!
    நீ இங்ஙனம் கூறக்கேட்டு
    ஆறுதல் அடைந்தாலும்
    நான் கண்ட ஒரு கனவினால்
    என் நெஞ்சம் என்ன நேருமோ
    என்று பயமடைகிறது.

    அந்தக் கனவு என்னவென்றால்…..
    என் கணவர் என்னைக்
    கைப்பிடித்து அழைத்துச்செல்ல
    நாங்கள் இருவரும்
    ஒரு பெரிய நகரம் புகுந்தோம்.
    அங்ஙனம் புகுந்த் ஊரில் உள்ளவர்கள்
    இடக்கூடாத பழியை எங்கள் மீது
    இடுதேளாய் இட்டனர்.

    அப்பழியின் காரணமாக
    என் கணவன் கோவலனுக்கு
    மிக்க தீங்கு ஒன்று ஏற்பட்டது என்று
    ஊரார் கூறக்கேட்ட நானும்
    அரசனின் அவை சென்று வழக்குரைத்தேன்.

    அதனால் அம்மன்னனுக்கும் ஊருக்கும்
    நேர்ந்த தீங்கு ஒன்றும் உண்டு.
    அது தீய கனவாதலால் அதைப்பற்றி
    உன்னிடம் ஒன்றும் கூறமாட்டேன்.
    அவ்வூருக்கு நேர்ந்த தீங்கு
    நான் செய்த
    குற்றத்தினால் உண்டானதுபோல் தெரிகின்றது;
    இவ்வாறு குற்றம் புரிந்த பின்னும்
    நானும் என் கணவரும் பெருநன்மை அடைந்தோம்.
    அதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு கூட வரலாம்…

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 40 – 54
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

    படத்துக்கு நன்றி:
    http://www.panoramio.com/photo/33347498

    Share
  • இளமைப் பருவத்திலே….

    ஜோதிர்லதா கிரிஜா

    செல்வியும் தியாகுவும் அந்த விடுதியை அடைந்து தங்களுக்குத் தரப்பட்டிருந்த ஒன்பதாம் இலக்கமிட்ட அறையை அடைந்து, கதவு திறந்து தங்கள் கைப்பெட்டிகளை அங்கிருந்த பெரிய  கட்டிலின் ஒரு பக்கமாய் வைத்துவிட்டு அதிலேயே உட்கார்ந்த போது அங்கிருந்த சுவர்க்கெடியாரம் ஒன்பது முறை அடித்தது.
    “மணி ஒம்போது! இன்னும் குளிர் விட்ட பாடில்லே!” என்ற தியாகு சோம்பல் முறித்தான்.
    “அண்ணே! இன்னும் ஒரு காப்பி குடிக்கலாமா?” என்று செல்வி கேட்டதும், தியாகு அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவனைப் போல் சடக்கென்று எழுந்து நின்றான்.
    “நானே சொல்லணும்னு நினைச்சேன்… இத வந்துர்றேன்,” என்று சொல்லிவிட்டு அவன் படியிறங்கினான்.

    செல்விக்குத் தெரியாமல் சங்கரலிங்கம் பிள்ளையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பிய அவனுக்கு அவள் காப்பி கேட்டது வசதியாக இருந்தது. அவர்கள் தங்கிய அறையில் தொலைபேசி இல்லாததும் நல்லதாயிற்று. இருந்திருந்தால் அதன் மூலமே காப்பிக்குச் சொல்ல நேர்ந்திருக்கும்.
    கல்லாவில் இருந்தவரிடம் முதலில் தொலைபேசி வழிகாட்டியைக் கேட்டுப் பெற்றுப் புரட்டினான்.  சங்கரலிங்கம் எனும் பெயரில் யாருக்குமே தொலைபேசி இல்லை. கல்லாவில் இருந்தவர் நடுத்தர வயதுக்காரராக இல்லாமல் ஓர் இளைஞனாக இருந்ததும் அவனுக்கு வசதியாக இருந்தது. இல்லாவிட்டால், இருபது ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டுப் போன தன்னை அவர் அடையாளம் கண்டிருப்பார் என்று அவன் தன்னுள் நினைத்துக்கொண்டான்.  வயதானவர்களுள் எவர் பார்வையிலும் படாமல் தான் அங்கிருந்து கிளம்ப வேண்டுமே என்று அவன் கவலைப்பட்டான்.
    அந்த ஊரின் பெரும் பணக்காரரான அவர் பெயரில் தொலைபேசி இல்லாதிருக்க முடியாது என்று எண்ணியதால், ஒருகால் அவர் காலமாகி யிருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. பார்வதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஒரே துடிப்பாக இருந்தது.  அவன் காதலித்த முதல் பெண்… செல்வி பிற்பகல் தூக்கம் போடும் போது ஊருக்குள் ஒரு நடை போய்ப் பார்த்துவர வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
    காப்பி மேசைக்குச் சென்று ஒன்பதாம் அறைக்கு இரண்டு காப்பிகள் எடுத்துவரப் பணித்த பின் படியேறி முதல் மாடியில் தாங்கள் தங்கியிருந்த அறையை யடைந்தான்.
    சற்று நேரத்துக்கெல்லாம் காப்பிக் கோப்பைகளை எடுந்த வந்து குட்டை மேசை மீது வைத்த பணியாள், “காப்பிக்குச் சொல்லணும்னா நீங்க கீழ எறங்கி வரவேணாங்க. அதோ, சுவத்துல இருக்குற பெல்லை அடிச்சா வந்து விசாரிப்போம். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபோன் வந்துடும்…” என்று சொல்லிச் சென்றார்.
    காப்பியைக் குடித்து விட்டு அவன் கால் நீட்டிப் படுத்தான்.
    செல்வி, “அண்ணே! நான் ஊருக்குள்ள போய் என் ஃப்ரண்டு விமலா இருந்தாப் பாத்துப் பேசிட்டு வர்றேன்,” என்று, அவனது தலையசைப்பைப் பெற்ற பிறகு, முகம் கழுவிப் பொட்டு வைத்துத் தலை முடியைக் கோதிக்கொண்டபின், சேலையைச் சரிசெய்து கொண்டு புறப்பட்டாள்.
    வழியில் அவள் மனம் பார்வதியைப் பற்றித்தான் அசை போடலாயிற்று.  விமலாவைப் பார்ப்பதைக் காட்டிலும் பார்வதியைப் பார்க்க்கவே அவள் அதிகம் அவாவினாள். தியாகுவும் அவளைப் பற்றித்தான் யோசிப்பான்  என்று எண்ணிக்கொண்டாள்.
    தியாகுவுக்கு மாரியம்மனுக்குக் கண்மலர் சாத்துவதற்கான நேர்த்திக்கடன் ஒன்று பாக்கி இருந்தது.  அவன் மனைவி தன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் திருநெல்வேலிக்குப் போயிருந்ததாள்.  எண்பது வயதான அவன் அம்மா அவனுடன் – தன் புருசன் வீட்டிலிருந்து வந்திருந்த, செல்வியையும் உடனனுப்பி வைத்திருந்தாள்.  நேர்த்திக் கடனில் எல்லாம் அவ்வளவாய் நம்பிக்கை இல்லாத அவன் சரியாக அதைச் செய்ய மாட்டான் என்கிற அவநம்பிக்கையால் தான் செல்வியையும் அவன் அம்மா உடனனுப்பி வைத்திருந்தாள்.
    இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தியாகுவுக்கும் பார்வதிக்குமிடையே தான் தபால்காரியாகப் பணி செய்தது செல்விக்கு ஞாபகம் வந்தது. எதிராளியின் வயதையோ, சாதியையோ கேட்டுத் தெரிந்துகொண்டபின் யாரும் காதலிக்க முற்படுவதில்லையே!  அப்படித்தான் அவர்கள் இருவரிடையேயும் காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகள் போல் கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டு தங்ககள் காதலை வளர்த்துகொண்ட இருவருக்குமிடையே இருந்த வயதுப் பிரச்சினையால்தான் அது நடக்காமல் போனது. பார்வதி அவனைவிடவும் ஒரு வயதும் சில மாதங்களும் மூத்தவளாக இருந்ததால், அவர்கள் மணம் செய்து கொள்ளுவதற்கு இரு தரப்புப் பெற்றோரும் சம்மதிக்கவில்லை!  கடைசியில் ஓடிப்போக முடிவு எடுத்தார்கள்.  பக்கத்து வீட்டு அம்மாளின் கழுகுக் கண்கள் இருவரும் இரவில் கிளம்பியதைப் பார்த்துப் பார்வதியின் அப்பாவுக்குத் தகவல் சொல்லிவிட, அவர்களது திட்டம் நடைபெறாது போயிற்று…. சேதியும் கசிந்து பார்வதியின் பெயர் கெட்டுப் போயிற்று.
    ஊரின் பெரும் பணக்காரரான சங்கரலிங்கம் அடியாள்கள் மூலம் விடுத்த மிரட்டலுக்கு அஞ்சி, அவர்களது குடும்பம் சென்னையில் இருந்த அவர்களுடைய பெரியப்பா வீட்டுக்குப் போயிற்று. வெகு நாள் வரையில் தியாகு திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்தான்.  பார்வதியையும் அவள் பெற்றோர் வேற்றூரில் குடியேற்றவே, எந்தத் தகவலும் கிடைக்க வழியற்றுப் போன நிலையில் அவன் கடைசியில் அவன் அம்மா பார்த்த பெண்ணை மணந்துகொள்ள சம்மதிக்க நேர்ந்தது. இப்போது அவனுக்கு இரண்டு குழந்தைகள் –  ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக.
    பார்வதிக்குக் கலியாணம் ஆகியிருக்குமா என்று செல்வி யோசித்த கணத்தில், “ஏய்! செல்வி!” என்று கூவிய பெண்குரல் அவளது எண்ண ஓட்டத்துக்குத் தடை போட்டது.
    ஒரு திடுக்கீட்டுடன் தன் சிந்தனையிலிருந்து விடுபட்டுத் தலை உயர்த்தி பார்த்த செல்விக்கு வியப்புத் தாளவில்லை.
    “அட! பார்வதி! நீயா? உன்னையப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டே வந்தேன்னு சொன்னா நம்புவியா?” என்ற செல்வி ஆசையோடு பார்வதியின் ஒரு கையைப் பற்றிக்கொண்டாள். மறு கையில் அவள் காய்கள் அடங்கிய பையை வைத்துக்கொண்டிருந்தாள்.
    “எங்கே இம்புட்டுத் தொலவு?”
    செல்வி சேதியைச் சொன்னாள்.  “உன்னையப் பாக்குறதுக்குத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். விமலாவைப் பார்க்கப் போறதா அண்ணன்கிட்ட பொய் சொல்லிட்டு வந்தேன். உன்னையப் பார்த்துப் பேசிட்டு, முடிஞ்சா அப்படியே அவளையும் பார்த்துருவேன்…”
    “விமலா ஊர்ல இல்லே, செல்வி. அது நாத்தனாருக்குப் பேறுகாலம்னு மணப்பாறைக்குப் போயிருக்குது…வாயேன் எங்க வீட்டுக்கு..”
    “உங்கப்பாம்மா எதுனாச்சும் சொல்லுவாங்களா?”
    “எங்கம்மா காலமாயாச்சு.  அப்பா இருக்காரு. ஆனா கண் தெரியாது. காதும் கேக்காது.  அதனால பயப்படாம வா…”
    “உங்க வீட்டுக்காரரு…”
    “முதக்கா எங்க வீட்டுக்கு வா. அப்புறமேட்டு எல்லாத்தையும் வெவரமாச் சொல்றேன்..”
    பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்த வரையில் அதன் பின் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
    செல்வியின் பார்வை மட்டும் அடிக்கடி பார்வதியின் மீது பதிந்து பதிந்து மீண்டது.  நாற்பதுக்கு மேற்பட்ட வயதுக்காரி மாதிரியே அவளைப் பார்த்தால் தெரியவில்லை. முப்பது-முப்பத்திரண்டுக்கு மேல் சொல்ல முடியாது. அவ்வளவு இளமையாக இருந்தாள். அவள் அப்பா தமது அறையில் படுத்துக்கொண்டிருந்தார்.

    “உக்காரு, செல்வி.  முதக்க உன்னையப் பத்திச் சொல்லு.  அப்புறமேட்டு நான் என்னையப் பத்திச் சொல்றேன். காப்பி குடிக்கிறியா?”
    “வர்றப்பதான் குடிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு டீ இருந்தாக் குடு.”
    “இருக்குது. தர்றேன். சொல்லு. உனக்கு எத்தினி பசங்க?”
    “ஒரே ஒரு பையன்.  எட்டு வயசு. எங்க வீட்டுக்காரரு போஸ்டல் டிபார்ட்மென்ட்ல இருக்காரு. அண்ணன் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட்ல இன்ஸ்பெக்டரா இருக்குது… ரெண்டு பசங்க. அவனுக்கு ஒரு ஆம்பளப் புள்ள, ஒரு பொம்பளப்புள்ள.  சரி…. உன் விசயத்தைச் சொல்லு…”
    பார்வதி பக்கென்று சிரித்து விட்டு, “ எனக்கு ஏகப்பட்ட பசங்க செல்வி…” என்றாள்.
    “   ?  “
    “டஜன் கணக்குல இருக்குதுங்க. நான் டீச்சர் வேலை பாக்குறேன், செல்வி.”
    “அப்ப, உனக்குன்னு பசங்க இல்லியா?”
    “இல்லே.  வீட்டுக்காரரும் இல்லே.”
    “என்ன சொல்றே? அப்படின்னா?”
    “நான் கலியாணமே கட்டல்லே, செல்வி.”
    “என்ன சொல்றே நீ?  ஏன் கட்டல்லே?”
    “எனக்குப் புடிக்கல்லே. பண்ணிக்கல்லே.  என்னைக் கலியாணங்கட்டச் சம்மதிச்சவங்களுக்கெல்லாம் ‘அந்தப் பொண்ணு வேணாம்.  அது ஓடிப் போய்ச் சீரழிஞ்ச பொண்ணு’ன்னு நானே மொட்டைக் கடுதாசி எழுதிப்போட்டுடுவேன்… அம்புட்டுத்தேன்..”
    “என்ன பார்வதி இது! சே. காலம் முச்சூடும் அப்ப தனியாவேயா இருக்கப் போறே?”
    “இப்பல்லாம் பொண்ணுங்களுக்கு நிறையவே விடுதிங்கல்லாம் இருக்குது, செல்வி…ஒண்ணும் பயப்படவே தேவையில்லே…”
    “ஏன் இப்பிடிப் பண்ணினே?”
    “உங்க அண்ணனைத் தவிர வேற யாருக்கும் என் மனசில இடம் குடுக்க முடியல்லே செல்வி! என்ன செய்ய?” என்ற பார்வதி தலையைக் குனிந்துகொண்டாள்.
    “ஒரேநிமிசம்.  டீ எடுத்தாறேன்…” என்று விட்டு அவள் எழுந்து போனது அவளது கண்களின் கலக்கத்தைத் தான் பார்த்துவிடக்கூடாது என்னும் எண்ணத்தில்தான் என்பது புரிய, செல்விக்கும் கண்கள் கலங்கின.
    சற்றுப் பொறுத்து இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் வந்த பார்வதி, “இந்தா. .. ஒரு வேண்டுகோள், செல்வி… உங்க அண்ணன் கிட்ட நான் கலியாணம் பண்ணிக்கல்லைன்னு சொல்லாதே.  அவரு மனசு உடைஞ்சுபோவாரு.  எனக்கும் ரெண்டு பசங்க, எங்க வீட்டுக்காரரு டீச்சரா இருக்காருன்னு எனக்காக ஒரு பொய் சொல்லு, செல்வி!…” என்ற பார்வதி புன்னகை செய்தாள்.  செல்வியால் பதிலுக்குப் புன்சிரிப்புக் காட்டமுடியவில்லை.
    ………

    நன்றி: கோகுலம் கதிர்

    Share
  • குழம்பிக்கிடக்கும் குட்டை

    தனுசுcar-index

    ஆடையில்லா மனிதன்
    அரை மனிதன்!
    ஆசையில்லா மனிதன்
    குறை மனிதனா?

    ஆசைப்படு என்கிறது
    அனைத்து முன்னேற்ற நூல்களும்
    கலாம் சொன்னதால்
    கனவும் காண்கிறேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில்
    ஒரு வீடு!
    போகவர வாகனமும் ஒன்று அதனோடு!
    ஆண்டுக்கொரு
    உல்லாசப் பயணம்!
    பெண்டு பிள்ளை பெயரில்
    சில நிலபுல ஆவணம்!
    வங்கி இருப்பில்
    கொஞ்சம் நிரந்தரம்!
    நறுமணமும் வெள்ளுடையும்
    என்னை ஆக்கவேண்டும்
    அழகு சுந்தரம்!

    ஆனால்
    அகப்பையில் வர
    சட்டியில் இல்லையே!

    வேண்டாமென்றால்
    இந்த விளம்பரங்கள் விடுவதாயில்லை!
    வேண்டுமென்றால்
    வெள்ளையப்பன் வசதியில்லை!

    என் நண்பனும்
    அவனின் எதிர் வீடும்
    போட்டியிலிருக்க
    உன்னாலும் முடியும் தம்பி எனும்
    உற்சாக கீதம் என்னுள் எழுப்பி
    முகூர்த்தக்கால் நட்டு விட்டது மனம்!

    ஆட்டம் காணாமலிருக்க
    ஆடாமல் இருக்க வேண்டுமென்ற
    வேதமும் எச்சரிக்கிறது!

    ஆசையை விலக்க
    என் மனம்  நாகசாதுவல்ல
    நான்
    தத்தாத்ரேயர் படையாளியுமல்ல!

    ஆசைப்பட்டதை வாங்க
    நான்
    அம்பானியுமல்ல
    கையூட்டு வாங்கும்
    களவாணியுமல்ல!

    தேடலில்
    நிதானம் அவசியம்
    கவர்ச்சி
    வியாபாரத்தின் வசியம்

    இரண்டுக்கும் இடையில்
    அவசியமில்லா குழப்பத்தில்
    மாட்டிக்கொண்ட நான்
    நாலோரைப்போல்
    நாகரீக வாழ்வில்
    நடிக்கத் துடிக்கிறேன்
    முடிவில்
    வேட்டியாவது மிஞ்சுமா?
    வேறு விடையாவது கிடைக்குமா?

    படத்துக்கு நன்றி

    http://barbarashdwallpapers.com/cars-wallpapers-part-2/

    Share
  • வார ராசி பலன்!…09-09-13 – 15-09-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் இயல்பும், குணமும் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனைகளை வழங்குவது புத்திசாலித் தனம். மாணவர்கள் உங்கள் நற்பெயர் என்னும் மந்திரச் சாவியை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புக் கதவுகள் தானே திறக்கும். கணிசமான லாபம் கிட்ட வேண்டுமா? தொழில் புரிபவர்களும், வியாபாரிகளும், வியாபார நிலவரத்திற் கேற்ற வாறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்ப கணக்கு வழக்கு, நிர்வாகம் ஆகியவற்றில் பதற்றமான முடிவுகளுக்கு இடம் கொடாமலிருந்தால், பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்கலாம்

    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால், மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம்.

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர். பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

    சிம்மம்: கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான்.

    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறை வாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களு க்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மனத் திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகி வந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்தி சாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய் போவது புத்திசாலித் தனமாகும்.மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசி யம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

    மகரம்: பங்கு தாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த்தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்தகாரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக் கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

    கும்பம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றா மலிருக்கும். உயர்பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திகழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்பு களை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்து பறக்கலாம்.

    மீனம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மனத் திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகி வந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    Share