திவாகர்

meditating buddhaஎன்னை எப்போதும் அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதர் ஒருவர் உண்டென்றால் அது இவர்தாம். எத்தனைக் கட்டுரைகள்.. எத்தனை விஷயங்கள், ஒவ்வொரு விஷயத்திலும் ஆத்மார்த்தமாகத் தொக்கிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி, தமிழ் இணைய உலகத்தின் மகாமனிதர் இவர் என்றால் அதை மறுப்பதற்கு யாரும் முன்வரமாட்டார்.

தமிழன்னைக்கு தினம் மாலை சூடும் தமிழன்னையின் மகாரசிகர் அதுவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ்நாட்டு விஷயங்களையும் தமிழ்ச் சொல்லையும் ஆராய்ந்து நமக்கு விளக்கம் தந்துகொண்டிருக்கும் ஆராயும் அறிஞர்.. சரித்திர சம்பந்தமானாலும், விஞ்ஞானப் பூர்வ விளக்கமானாலும் இவரிடம் நிச்சயமான பதில் கிடைக்கும். ஆமாம். டாக்டர் எஸ். ஜெயபாரதிதான் அந்த பேரறிஞர்..மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருந்து கொண்டு உலகத் தமிழரையே அதிசயித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்த அறிஞரை நான் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

இந்த வாரத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரை ஒன்றை உங்கள் முன்னே வைக்கிறேன். முற்றூட்டு, மகமை போன்ற தமிழ்ச் சொல்லுக்கான விளக்கம். .

அன்பர்களே,

கூட்டிக்கழிச்சுப் பார்த்தோம். ஏராளமான நூல்களைப் புலவர்கள் சேகரம் பண்ணி, படித்து ஆராய்ச்சியும் பண்ணவேண்டியிருந்தது.
ஏதாவது புதிதாகத் தோன்றினால் அப்படியே பாய்ந்து கபாலென்று பிடித்துக் கொள்ளவேண்டும். அந்த அலை வரிசையை அப்படியே ஸ்தூல வைகரீ வாக்காக மாற்றி, எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் மாற்றி, வாக்கியங்களாகப் படைத்து, எழுத்துருக் கொடுத்து, ஓலையில் பதிவும் செய்ய வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலைகள்தாம் நிலவின.

இருப்பினும் ஏராளமான உரை நூல்கள், பாஷ்யங்கள், துணை நூல்கள், வழிநூல்கள், மொழி பெயர்ப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏதோ சில supportive systemகள் இருந்திருக்கத்தான் வேண்டும். இருந்தன. ஓரளவுக்கு இருந்திருக்கின்றன. ஓரளவுத்தான்.

பழங்காலத்தில் புலவர்களுக்காக வரியில்லாத நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் ‘முற்றூட்டு’ என்பது. முழு முழு கிராமங்கள்கூட கொடுக்கப்பட்டுள்ளன. அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவ்வாறு முற்றூட்டுப் பெற்றவர். அவருக்கு ராமநாதபுரம் சேதுபதி முற்றூட்டாகக் கிராமங்களைக் கொடுத்தார். பாடம் கேட்க வருவோருக்கு – உடன் வைத்திருந்து – கவிராயர்களே பாடமும் சொல்லிக்கொடுத்தால் கவிராயர்களுக்கு ‘ஆசிரியக் காணி’, ‘ஆசிரிய விருத்தி’, ‘ஆசிரிய போகம்’ என்ற நன்கொடை கிடைத்தது. முற்றூற்றெல்லாம் பேர் போட்ட கவிராயர்களுக்குத்தான். எல்லாருக்கும் கிடைக்காது.

யார் பேர் போட்ட கவிராயர் என்பதில்கூட இப்போது போலவே அந்தக் காலத்திலும் ரொம்பக் கசகல் இருந்தது. (இந்த ‘வாச்சான் போச்சான்’, ‘கசகல்’ போன்ற சொற்களுக்குப் பொருள் வேண்டுமானால் இராம கிரு, இரா முருகன் போன்றோரிடம் கேட்டுக்கொள்ளலாம். அதெல்லாம் வட்டார வழக்கு).

பேர் போட்ட புலவருக்கு உரிய லட்சணங்களாக அந்தக் காலத்தில் எந்த மாதிரியான க்ரைட்டீரியாக்களை வைத்திருந்தார்கள் என்பதற்கு அவ்வையார் பாடல் ஒன்று இருக்கிறது.

(இப்போதெல்லாம் ‘ஔ’ எழுத்தைத் தவிர்ப்பது உண்டு. ஏனெனில் அதை ‘Ola’ ‘ஒ-ள என்று வாசித்துவிடுகிறார்கள். அதற்குப் பதில் ‘அவ்’ என்று
எழுதினால் வம்பத்த பாடு. ‘ஔ’வுக்கு ‘அவ்’ போலியல்லவா? இந்தக் காலத்தில் அவ்வையாரை யெல்லாம் நம்ம பசங்க தெரிந்துவைத்திருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கமுடியவில்லை. எதைச் சொல்வதானாலும் சாங்கோபாங்கமாகச் சொல்ல
வேண்டியுள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ·பூட்நோட் – அடிக்குறிப்புக் கொடுக்கவேண்டியுள்ளது.)

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று

Sycophant எனப்படும் துதிபாடிகள், ஆமாஞ்சாமிகள் இரண்டு பேராவது கூடவே இருக்கவேண்டும். விரல் நிறைய மோதிரங்கள் போட்டிருக்கவேண்டும்.
இடையில் உயர் ரக பருத்தி ஆடை அல்லது பட்டாடை அணிந்திருக்கவேண்டும். பருத்தி ஆடையை உயர்வாகச் சொல்கிறார். எனெனில் பழங்காலத்தில் மரவுரி,
லினன் போன்றவையும் இருந்தன. பன்னாடை என்னும் தென்னை மர உரியிலிருந்தும் இடுப்புத் துணி செய்யப்பட்டது. காடாத் துணி எனப்படும்
கனமான துணியும் இருந்தது.

ஹைக்கிலாஸ் காட்டன் என்பதைத்தான் பஞ்சு என்று குறிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் சொல்லும் கவிதை நஞ்சாக இருந்தாலும் சரி, வேப்பிலை போல கசந்தாலும் சரி, அதை ‘நன்று’ என்றே பாராட்டுவார்கள்

முற்றூட்டு, ஆசிரிய விருத்தி, ஆசிரியக் காணி, ஆசிரிய போகம் தவிர இன்னொரு முறையும் இருந்தது. இதற்கு ‘மகமை’ என்று பெயர். இதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இருந்திருக்கின்றன. வேறு வகையான மகமைகளும் இருந்தன.. உள்ளபடிக்குப் பலவகைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ்த்தாத்தா உவெசாமிநாதய்யர் தம்முடைய இளமைக்காலத்தில் அரியிலூர் சடகோபய்யங்கார் என்னும் கல்விமானிடத்தில் கல்வி கற்றார். இங்கே தமிழ்த் தாத்தாவைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் வேண்டும்.

மலேசிய இளைஞர்கள் 22 பேரைப் பரீட்சார்த்தமாக சில கேள்விகள் கேட்டேன். அந்தக் கேள்விகளில் ஒன்று – “உ.வே.சாமிநாதய்யர் பற்றி என்ன தெரியும்?”
தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புவரை படித்தவர்கள். 22 பேருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இவ்வளவுக்கும் மலேசியத் தமிழர்களுக்காக ‘தமிழ்த் தாத்தா’ என்னும் தலைப்பில் ஒரு நீள்கட்டுரையை எழுதியிருக்கிறேன். ‘மயில்’ என்னும் இலக்கிய இதழில் பத்து வாரங்கள் வெளிவந்தது. நல்ல பாராட்டைப் பெற்ற தொடர் அது. ஆனால் அதெல்லாம் இந்த இளைஞர்களின் தலைமுறைக்கும் முந்திய தலைமுறையினர் காலத்து விஷயம். 1992-இல் எழுதினேன். இப்போது இருபத்தோரு ஆண்டுகள் ஆகின்றன. ஐயரவர்கள் சடகோபைய்யங்காரைப் பற்றி எழுதியவற்றின் பகுதிகளைத் தருகிறேன். அவர் எப்படி மகமையை வசூலித்தார் என்பது பற்றி……

“கல்வியின்பம் ஒன்றையே பெரிதாகக் கருதி வாழ்ந்த அவர், வறுமை நிலையில்தான் இருந்தார். அதனால் அவர் மனம் சலிக்கவில்லை. (அவரை ஆதரித்து வந்த) அரியிலூர் சமஸ்தானத்தின் நிலை வரவர க்ஷீணமடைந்தமையால் அவருக்கு ஆதரவு குறைந்து போயிற்று..மாலைவேளையில் அவர் கடைவீதி வழியே செல்வார். என் வஸ்திரத்தை வாங்கி மேலே போட்டுக்கொண்டு போய்விடுவார். அதுதான் அவருடய திருவுலாவிலே அங்கவஸ்திரமாக உதவும்.அவர் செல்லும்போது ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து மரியாதை செய்வார். அவரை அழைத்து ஆசனத்தில் அமரச் செய்து மரத்தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். அந்த அன்பு காணிக்கையை அப்படியே வீட்டுக்குக் கொண்டுவருவார். எல்லாவற்றையும் சேர்த்து விற்று வேறு ஏதாவது வாங்கிக்கொள்வார். அதனால் வருவது பெரிய தொகையாக இராது. இராவிட்டால் என்ன? உப்புக்காவது ஆகாதா? இந்த நிலைக்கும் அவருடைய தமிழ் இன்பத்துக்கும் சம்பந்தமேயில்லை. அந்த உலகமே வேறு. அதில் அவர்தாம் சக்கரவர்த்தி. அங்கே பசியில்லை, வறுமையில்லை, இளைப்பில்லை.”

இப்படியும் ஒரு மகமை நடந்தது.

எத்தனை விவரங்கள் பார்த்தீர்களா? மருத்துவரான டாக்டர் ஜேபி யின் இன்னொரு கட்டுரை ஒன்று ‘சும்மா’ எனும் வார்த்தை எப்படி வந்தது என்பது பற்றி விவரமாகத் தெரிவிக்கும் .எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று .http://www.visvacomplex.com/summa_1.html.. அவருடைய எல்லாக் கட்டுரைகளையும் அவர் விஸ்வா காம்ப்ளெக்ஸ் தளத்தில் படிக்கலாம். சாக்தத்திலும் சைவத்திலும் வித்தகரான மலேஷிய பேரறிஞர் டாக்டர் ஜேபியை வல்லமை இந்த வார வல்லமையாளராகப் போற்றி அவரை கௌரவம் செய்து அதனால் பெருமை பெறுகிறது, டாக்டர் ஜேபி அவர்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடு இருந்து எங்களுக்கு மேலும் மேலும் புதிய விஷயங்களையும் படைத்து பழைய விஷயங்களையும் தெளிவித்துக் கொண்டே இருக்க இறைவனை பரிபூரணமாக வேண்டுகிறேன்.

கடைசி பாரா:வல்லமையில் திரு ஆவுடை நாயகம் அவர்கள் கட்டுரையிலிருந்து
“சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. ஆகா! அருமை,

  வெற்றிக் கலைமகள் என்றப் பெயர் கொண்ட தமிழறிஞர் அவர்களின் ஆய்வும் அவர்களைப் பற்றிய கருத்தும் மகிழ்வைத் தருகிறது.

  வல்லமையாளர் என்று பாராட்டி பெருமை படும் வல்லமையின் இந்த அறிவிப்பு பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

  ‘சும்மா’ பற்றி சுவாரஸ்யமான கட்டுரையும் அருமை.

  நாமெல்லாம் ‘ஓசியில்’ கிடைத்தது என்கிறோமே அதைப் பற்றிய ஒரு தகவல். இது தமிழ் வார்த்தையா?

  வேறெந்த மொழி, இது எப்படி எப்போது புழக்கத்தில் வந்தது…  

  வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலர்களுக்கு அளிக்கப் பட்ட போக்குவரத்து வண்டிகளில் O/C (On Contract) என்று பொறிக்கப் பட்டு இருக்குமாம் ! அதை அப்போது எல்லோரும் இனாமாக செல்லும் வண்டியை ஓசி வண்டி என்று அழைப்பது வழக்கமாம்… ஆக, அப்போதில் இருந்து தான் இந்த ஓசி என்ற வார்த்தை பழக்கத்தில் வந்ததாக அறிகிறேன்! வேறு ஒரு விளக்கம் இருந்தாலும் கொடுங்களேன் 🙂

 2. வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள். அவரின் ஆய்வும், தமிழ் அறிவும் வணக்கத்திற்குரியது.

  தமிழ் எனும் ஆழ்கடலை அளவிடமுடியாது என்பதே வல்லமையாளரின் கட்டுரை சொல்கிறது. அதற்கு ஆதாரமாக இன்று ஆலாசியம் அவர்கள் எழுதியுள்ள கவிதை அதனை கோடிட்டு காட்டுகிறது.

  ராஜாக்கள் காலத்திலிருந்தே வறுமையும் புலமையும் புலவர்களுக்கு சேர்ந்தே இருக்கும். உடன் புரவலர்களும் இருந்ததால் புலவர்களின் பசி பட்டினி மறைந்தது. இப்படி பசி பட்டினி நலிந்த குடும்பம் என இருந்தாலும் தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு அவர்கள் பட்டினி போட்டதில்லை அந்த தமிழை நலியவிட்டதுமில்லை. நல்லதொரு பதிவு நன்றிகள்.

  சிறப்பு பதிவர் ஆவுடை நாயகம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 3. வல்லமையாளர் டாக்டர்.எஸ்.ஜெயபாரதி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  வா.உ.சி. அவர்களைப் பற்றிய சிறப்பானதொரு கட்டுரையை வழங்கிய திரு.ஆவுடை நாயகம் அவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

 4. டாக்டர் ஜெயபாரதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  அன்புடன்

  தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.