தமிழே, அழகே, எனதுயிரே!

 

கோ. ஆலாசியம்

 

அறிவினில் உயரியத் தமிழே- எங்கள்

உயிரினில் ஊறிடும் அமுதே

 

அழகெனும் சொல்லின் பொருளே – ஆன்ற

பலச்செறிவுகள்  நிறைந்த ஆழ்கடலே

 

விடியலைத் தந்திடும் கதிரே – உயர்

படியெனும் வாழ்வின்விழுப் பொருளே

 

நீதியாய் நின்றொ ளிரும்குளிர்ச் சுடரே

நீதியிலாதனை யெரித்தழிக்கும் தனலே

 

வளியெனப்  பரவிடும் பூந்தளிர்மணமே – அது

வெளிகளைக் கடக்கச் செயுமற்புதமே

 

உலகிற் மூத்தத் தமிழே – உன்னதப்

புலவர்கள் போற்றியக் கலைமகளே

 

தவமே! அதனால் பெரும் வரமே

தவமுனிவர் போற்றிய ஒளிப்பிழம்பே

 

விண்மண்ணோடு  ஞாலம்விழுமியப் பொருளாவின்

நுண்ணிய பயனுரைக்கும் நுட்பமே

 

விண்ணோர் வந்துதித்துன் விழுமியப் பொருளுரைத்து

மண்ணோர் மாண்புறச்செய்ய அருளியவளே

 

எந்நாட்டவரும் கொண்டாடிடும் அவர்தம் மொழியில்

நின்களியாட்டம் காண்பாரும் உளரே

 

தென்னாட்டான் திக்கெட்டும் பரவியும் – தெய்வ

நின்மாட்டும்பேரன்புக் கொண்டக் காதலினிதே

 

கண்ணோட்டம் கொண்டார்க்கு நின்னொளி துல்லாழ

உண்மைப் பொருளுணர்த்திடும்  அழகே

 

இம்மாட்டும் எங்கள் உயிரோட்டம் இருப்பது

செம்மார்ந்த நினதனறிவுச் செழுமையாலே

 

எம்மாட்டும் நாங்களுமை மறக்க மாட்டோம்

அம்மே! என்னாட்டில்யாம் வாழ்ந்திடிலும்

 

உம்மாட்டும் கொண்டொளிரும் உலகப் பொதுமறையும்

தம்பட்டம் செய்யாதரணி யெங்கும்பரவியதே

 

கல்விக்குப் பெரியவனும் கவிவேள்விச்செய் இளங்கோவும்

அல்லல் தளையறுக்க அருள்பொழிந்த

 

ஆழ்வாரோடு நாயன்மார்கள் என்றொரு வரிசையிலே

வாழ்வாங்கு வாழ்ந்த ஞானியரே

 

வந்துதித்துப் போற்றிய தமிழ் அணங்கே

சிந்தனைக்கு பெரு விருந்தே

 

சீர்மேவும் பெருவாழ்வாம் வீடு பேறுக்கும்

நற்வழி காட்டும் அருமருந்தே

 

பாருக்குள் உயர்ந்த கவி எங்கள்

பாரதியின் நாவினில் ஆடியே

 

காதல் காதல் காதல் அதுபோயின்

சாதல் சாதல் சாதலென

 

யாருக்கு மெளிதில் புலப்படாத குயில்நாதம்

கூறியப் பொருளு ரைத்தான்

 

வேராக நீயிருந்தாய் வேறாகி நின்றவனும்

வேதமலர்களை ஆனம்மலர்ச் சென்டாக்கி

 

வேதவல்லியே நிந்தன் பாதம் சேர்பித்தான்

நாத வெள்ளத்தில் முத்தெடுத்தே

 

உலகப்பொருளாவினும் அதுவாயதனி யக்கமாயெம்

ஊனில் உயிரில் உறைபவளே

 

வாழி! வாழி! நீவாழீயவே! – பிரபஞ்ச

ஊழிக்குப் பின்னொரு ஆழியிலும்

 

முதலாய் வந்துதித்து மூத்தவளாய் -முழு

முதற் பொருளாயுதித்து வாழியவே!

 

 

படத்துக்கு நன்றி: http://omsakthionline.com/?katturai=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&publish=11

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தமிழே, அழகே, எனதுயிரே!

 1. தாங்கள் ஆக்கங்களில் தமிழ் செலுத்தும் ஆதிக்கம் பார்க்கும் போது தாங்களை நிகழ்கால தமிழ் புலவன் என்றே சொல்லத்தோன்றுகிறது

  ///”இம்மாட்டும் எங்கள் உயிரோட்டம் இருப்பது
  செம்மார்ந்த நினதனறிவுச் செழுமையாலே”///

  என்ன ஒரு தெய்வீக அன்பு இந்த தமிழ் மீது. வாத்துக்கள் கவிஞரே அத்துடன் தாங்களும் இந்த தமிழும் வாழ நான் வாழ்த்துவது தாங்களின் வார்த்தைகளை எடுத்தே!

  வாழி! வாழி! நீவாழீயவே! – பிரபஞ்ச
  ஊழிக்குப் பின்னொரு ஆழியிலும்!

 2. அருமை. தமிழின் இனிமையை மனதார இரசித்து இரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

  “வாழி! வாழி! நீவாழீயவே! – பிரபஞ்ச

  ஊழிக்குப் பின்னொரு ஆழியிலும்”
  மிகவும் ஆழமான வரலாற்று உண்மைகள் புதைந்திருக்கும் வரிகள்.

  வாழ்த்துக்கள் திரு.ஆலாசியம் அவர்களே!

 3. @கவி தனுசு!
  ///வாத்துக்கள் கவிஞரே அத்துடன் தாங்களும் இந்த தமிழும் வாழ நான் வாழ்த்துவது தாங்களின் வார்த்தைகளை எடுத்தே!//

  தங்களின்பாராட்டிற்கும்வாழ்த்திற்கும்மிக்கநன்றிதமிழ்கவியே!

 4. @ திருவாளர் சச்சிதானந்தம்
  ///அருமை. தமிழின் இனிமையை மனதார இரசித்து இரசித்து எழுதி இருக்கிறீர்கள்.///

  தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி திருவாளர் சச்சிதானந்தம் அவர்களே!

Leave a Reply

Your email address will not be published.