Blog

  • “அத்தை எங்கே கூப்பிடு “

     

    விசாலம்

    அது நான் சிறுமியாக  இருந்த காலம் .எங்கள் குடும்பத்துடன் என் அத்தையும் கூட இருந்தார் .எங்கள் குடும்பத்திற்கே  அவர் ஒரு தூண் என்றே சொல்லலாம் நான் பிறப்பதற்கு முன்னாலேயே  ,அவர் எங்கள் குடும்பத்திற்குள் புகுந்து விட்டார் .  1930லிருந்து என் அப்பாவுடன்  வந்தவர்  அவருடனேயே தங்கி விட்டார் .தனக்கென்றே வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர் . அவர் அந்தக்காலத்திலேயே ஆண் ஆதிக்கத்தை வெறுத்தவர் . தன் கணவருக்குக்கீழ்படிந்து  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து, விறகடுப்பு  ,புகை  தினமும் 15 பேருக்குச்சமையல்  என்று சமையல் அறையைவிட்டு வெளியே வாராமல் இருந்தாலும் அவருக்கு வாய்த்த கணவர் ஒரு ஹிட்லர் போல் இருந்தாராம் அவரிடம் முதலில் பயந்து பயந்து . அடி உதைகளும் வாங்கிக்கொண்டு  பொறுமையுடன் தான் இருந்தார் அவர் ..ஆனால் பின்னால் தான் இந்த கஷ்டத்திலிருந்து விடு பட தனியாக இருந்து காட்டவேண்டும் என்று அந்தக்காலத்தில் நினைத்த புரட்சிப்பெண் அவர் .அவர் என் அப்பாவிடம்  அடைக்கலம் பெற்ற சம்பவத்தை என்னிடம் கூறினார்

    ஒரு நாள் என் அத்தை  தோசைக்கு மிளகாய்ப்பொடி உரலில் இடித்துக்கொண்டிருக்க அந்த ஹிட்லர் கணவர் அவரை அழைத்தாராம்  . அங்கு கூடத்தில் சீட்டுக்கச்சேரி களைக்கட்டிக்கொண்டிருந்தது சீட்டு விளையாடுபவர்களுக்குச்  சூடான காபி கொண்டுவர குரல் கொடுத்தார் ”ஏண்டி எத்தனை தடவ கூப்பிடறது உன்னை …. செவிடாடி நீ! முண்டம் முண்டம் ‘ என்றுச்சொல்லி கத்தினாராம் . என் அத்தைக்கு இதைத்தாங்கிக்கொள்ளும் இதயம் இல்லை . எல்லா நண்பர்களுக்கெதிரில் இப்படி ஒரு அவமானமா என்று புழுங்கினார். பின் “நான் மிளகாய்ப்பொடி இடிச்சுண்டிருக்கேன் .இப்ப என்னாலே அங்க வரமுடியாது ‘ என்று பதில் கொடுத்தாள் .

    ஹிட்லர் அத்திம்பேருக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன .  ,, பாதி ஆட்டத்தில் எழுந்து உள்ளே வந்தாராம்   அத்தையின் முடியைப்பிடித்து இழுத்தார் . போன ஜன்மத்தில் துச்சாசனனாக இருந்திருப்பாரோ என்னமோ !  கோபம் என்று ஒன்று வந்தால் கண்மண் தெரியாதே . யோசிக்கும் சக்தி எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுவிடும் போலிருக்கு . அங்கு பொடித்து வைத்த மிளகாய்ப்பொடியை கையில் அள்ளினாராம் நேராக என் அத்தையின் கண்களில் வீசினாராம்  ஐயோ இது என்ன கொடுமை கண்கள் போயிருந்தால் என்ன செய்வது ?

    ” ஆ  ஆ எரியறதே  கண்ணு போச்சே  இப்படி ஒரு மனுஷனா நீ ” என்று முதல் தடவையாக “நீ ” என்று அவரை அழைத்து கண்களை அலம்ப கொல்லையை நோக்கி ஓடினாராம் .

    கண்களில் எரிச்சல் அதிகமாக எதிர் வீட்டு மாமியுடன் கண் டாக்டரிடம் தானே சென்று வந்தார் .மறு நாள் இரண்டு புடவைகளுடன் ரயில் ஏறி பம்பாய்க்கு என் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரது கணவரும் அவரைத்தேடி வந்தோ அல்லது செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்டோ செய்யவில்லை . தன்னிஷ்டப்படி ஜாலியாக இருக்க ஆரம்பித்தார் அந்த மனிதர்  .

    என் அத்தையின் வயது அப்போது சுமார் 25 இருக்கலாம்   .அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எங்கள் அத்தைதான் அவரை வாழாவெட்டி என்று ஒருவரும் சொன்னதில்லை தவிர அவர் ஆசிகளுடன் ஆரம்பிக்கும் காரியம் மிகவும் நலமாகவே முடியும் . அவரில்லாமல் எங்கள் குடும்பமே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது .அவரது புக்காத்தில் 14 வயதில் நுழைந்தவர் ஒரு பத்து வருடம் நரக வாழ்க்கை வாழ்ந்து புரட்சியுடன் வீட்டை விட்டு தன் தம்பியின் குடும்பத்திற்கே தன்னை அர்ப்பணித்த அவர் எனக்கு தெய்வம் போல் தெரிகிறார் .எங்கள் வீட்டு டாக்டர்  வக்கீல் . ஆடிட்டர்  சமையல் ஹெட்டு எல்லாமே அவர்தான் .

    அவரது டாக்டர் அவதாரத்தில் கேட்டவை

    “ஏண்டி லொங்கு லொங்குன்னு இருமறே .இஞ்சியை நெருப்ல சுட்டு பனங்கல்கண்டு சேத்து அரைச்சு தரேன் சளி துப்ப வந்துடும் கபம் போயிடும் .

    தொண்டை வலியா  இரு  இதோ ஒரு மருந்து தரேன்  என்று சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை வறுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைப்பார் பின் அதில் தேன் கலந்து தருவார்

    உடல் வலியுடன் வீக்கம் இருந்தால் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து வீங்கிய இடத்தில் ஒத்தடம் கொடுப்பார் மழைக்காலத்தில் மிளகு கஷாயம் நிச்சயம் உண்டு

    “மாமி உடம்பு ரொம்ப பருத்து போறது  என்ன செய்யலாம் என்று  ஒரு மாது வந்து சந்தேகம் கேட்க அதற்கும் பதில் ரெடியாக இருக்கும்

    “வா  ஜானகி வா   உடம்பு குண்டாப் போச்சுன்னு கவலைப்படாதே . கொஞ்சம் சிக்கை பொடி செஞ்சிக்கோ  ராத்திரி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலக்கி  படுக்கப் போறச்ச சாப்பிட்டு வா .வேண்டாத கொழுப்பு கரைஞ்சுபோய்டும்  .

    என் அம்மாவிடம்  ” இத பார்   சரஸ்வதி  அடுத்த மாசம்  தீபாளி வரது இந்த மாசம்  நூறுக்கு மேலே சிலவு போகாம பாத்துக்கப்போறேன் அப்பத்தான் தீபாளிக்கு குழந்தைகளுக்கு டிரெஸ்க்கு தாராளமாக சிலவு செய்யமுடியும்  . இரண்டு மாசம் முன்னாடியே  ஒரு நூறு சேர்த்துட்டேன்  “என்று ஆடிட்டர் ரோலை எடுத்துக்கொள்வார்

    இது போல் பல அவதாரங்களுடன் எங்களுக்காகவே உழைத்த என் அத்தையின்  ஞாபகம் எனக்கு அடிக்கடி வருகிறது . இந்தக்காலத்தில் இது போல் அத்தை  மாமா உறவுகள் திரும்பி தழைக்குமா  ? தன் வாழ்க்கையே குடும்பத்திற்காக  தன் திருமணம் பற்றிக்கூட எண்ணாமல்  மருமாள் மருமானுக்காகவும்   தன் சகோதர குடும்பத்திற்காகவும் வாழும் அத்தைகள் இன்று கிடைப்பார்களா? அத்தை மடி மெத்தையடி என்ற பாட்டு திரும்ப பாட வாய்ப்பு வருமா ? யோசிக்கத்தான் வேண்டும் .    .

    Share
  • வார ராசி பலன் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: சரளமான பண வரவால் பணியில் உள்ளவர்களின்  மனதில் சந்தோஷம் தங்கும். பெண்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டால் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள்  படிப்போடு, தங்கள் ஆக்கப்பூர்வமான  எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுத்தால், உயர்வு நிச்சயம்! பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உடன் இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அதிலும்  ஒரு எல்லைக் கோடு இருப்பது அவசியம். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், , உடனிருப்பவர்களிடம், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகளுக்கேற்ப,  பழைய கடன்கள்வசூலாகும். . கலைஞர்களுக்கு விரும்பிய வீடு, வாகனம் ஆகிய்வற்றை வாங்கும் யோகம் உண்டாகும். .

    ரிஷபம்: இந்த வாரம், பெண்கள் சகோதர, சகோதரிகள் மூலமாக நன்மைகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் காட்டும் பரிவும், அன்பும்,  மாணவர்களின் தோற்றத்தில், புதிய  பொலிவை உண்டாக்கும். கிடைக்கும் புத்திசாலிகளின் நட்பைத் தக்க வைத்துக் கொண்டால், பொது வாழ்வில் உள்ளவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும். சரளமான பணவரவால், கலைஞர்களின்  கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரிகள் திட்டமிட்டு வேலை செய்தால், ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்கள் வேண்டிய லாபத்தைக் கொடுக்கும். மாணவர்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால்,  சேமிப்பு என்பது எளிதாகும். பணியில் உள்ளவர்களுக்கு,  வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
    சுய தொழில் புரிபவர்கள் தங்கள் வரவுக்குள் செலவை அடக்குதலே புத்திசாலித்தனம்.
     
    மிதுனம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறையில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய்ப் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம்.

    கடகம்: வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

    சிம்மம்: குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தோன்றி மறையும். எனவே பெற்றோர்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். பணம் மற்றும் செலவு சம்பந்தமான விஷயங்களில் சற்று சிக்கனமாய் இருந்தால், பெண்கள் கடன் தொல்லைகள் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் தாழ்வு மனப் பான்மையை தூர எறிந்துவிட்டு, துணிவுடன் செயல்பட்டால்,உங்கள் திறமைகளை பிறர் உணர்வார்கள். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம். இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், நீங்கள் நினைத்த காரியத்தை திறம்பட முடித்து விடுவீர்கள்.

    கன்னி: பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும்வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

    துலாம்: சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. வெளி ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் விலை உயர்ந்த மின்பொருள்களின் பழுதை நீக்குவதற்காக அதிக பணம், நேரம் இரண்டையும் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும். வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் அதிக லாபம், புதிய ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் பெறுவர். முக்கியமான செயல்களை விரைந்து முடிக்க, நட்பும், உறவும் கை கொடுப்பார்கள்.

    விருச்சிகம்: தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், பெண்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள். வியாபாரிகளும், வேலைக்குச் செல்பவர்களும் தங்கள் வருமான வரி கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.அலுவலகத்தில் நிலவும் உட்பூசல்களில் தலையிடாதீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய சலுகைகளைப் பெறுவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது.

    தனுசு: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களைக் கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.

    மகரம்: மாணவர்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே , பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

    கும்பம்: வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளை கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்றுவிடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.  மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது.  பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப் போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடை முறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால்,கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

    மீனம்: மாணவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம்.பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டுப் பெற வேண்டியிருக்கும்.  வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையைக் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுபவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!  

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-1)

    பர்வத வர்த்தினி

     

     மேன்! நிஜமாவா சொல்றே? உங்க மாமா சயின்டிஸ்டா?” 

    “ஆமாம் சாரு. அவரு ஒரு சயின்டிஸ்டு தான். ஆனா பெரிசா சொல்லும்படி இதுவரைக்கும் ஒண்ணும் கண்டுபிடிச்சதில்லை.ஏகப்பட்ட புக்ஸுக்கும் நிறைய தட்டுமுட்டு சாமானுக்கும் மத்தியிலே உக்காந்து ஏதோ செஞ்சிட்டு இருப்பாரு. ஏதாவது கேட்டா அவர் சொல்ற பதிலும் நமக்கு புரியாது. உருப்படியா வேலை செஞ்சு காசு சம்பாதிக்கற எண்ணமும் இல்லை. நல்லவேளை அவரு பண்ண ஒரே நல்ல காரியம் கல்யாணம் எதுவும் பண்ணிக்கலை. இல்லைன்னா இப்படி இவரு பொறுப்பில்லாம இருக்கறதுக்கு ரொம்பவே கஷ்டமா போயிருக்கும்.” 

    “என்ன சொல்றே சித்து! அப்போ அவருடைய தினசரி செலவுக்கு என்ன செய்யறாரு?” 

    “அதுவா… எங்க தாத்தா தஞ்சாவூர்லே நிறைய நிலபுலத்துக்கு சொந்தக்காரரா இருந்தாரு. அந்த நிலத்தோட குத்தகைப் பணம் மாமாவுக்கு  மாசம் தவறாம வந்துடும். அதுல தான் அவருடைய தினசரி செலவுக்கும் ஆராய்ச்சிக்கும் செலவு பண்ணுவாரு. அப்படியும் ஏதோ ஆராய்ச்சிக்குன்னு சொல்லி பாதிக்கு மேலே நிலத்தை மாமா வித்துட்டாரு. 

    “நீ சொல்றதெல்லாம் பாக்கும் போது உங்க மாமாவை பாக்க எனக்கு ஆசையா இருக்கு, சித்து.” 

    “அதுக்கென்ன, வர்ற சனிக்கிழமை போய் பாக்கலாம். ஆனா ரொம்ப எதிர்ப்பார்ப்போட வராதே, நீ ஓவரா நினைக்கற அளவுக்கு ஒண்ணும் இருக்காது.” 

    “சரி சித்து. சனிக்கிழமை அன்னிக்கு போகலாம். சரி. நான் கிளம்பறேன். டைம் ஆகுது. பை.” என்று சொல்லி விடை பெற்றாள் சாரு. 

    சாருலதா, சித்தார்த் – இருவரும் ஒரே கல்லூரியில் பிஸினஸ் மானேஜ்மண்ட் படித்து வருகிறார்கள். தினமும் உணவு இடைவேளையின்போது அரட்டை அடிப்பது அவர்களது வழக்கம். அன்றைக்கும் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கும்போது பேச்சு விஞ்ஞானிகளைப் பற்றி திரும்பியது. அப்போது அவர்கள் பேசியது தான் நாம் மேலே கண்டது. 

    சாருலதா அதீதகற்பனை விஷய்களில் அதிக ஆர்வம் கொண்டவள். படிப்பில் சுட்டியாக விளங்கிய போதும் நேரம் கிடைக்கும் போது நிறைய திரைப்படங்கள் குறிப்பாக இந்த ஃபேண்டஸி திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். புத்தகங்கள் மற்றும் நாவல்கள் படிப்பதும் அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அவளுடைய புத்தக ஆவலுக்கு வித்திட்டதே அவளுடைய பாட்டிதான். அவள் எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்காக தன் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். எப்போதும் மாமாவின் மகனும் மகளும் மற்றும் சித்தியின் மகனும் விடுமுறைக்கு வருவார்கள். அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பாள். அல்லது ஊரில் உள்ள வெயிலெல்லாம் இவர்கள் தலையில் விழும்படி ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு  ஓட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த வருடம் மாமா குடும்பத்தினர் மாமியின் தம்பி திருமணத்திற்காக அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டார்கள், சித்தியின் மகனோ ஏதோ சம்மர் கிளாஸ் சேர்ந்திருந்ததால் பாட்டி வீட்டிற்கு வரவில்லை. 

    எவ்வளவு தான் பாட்டி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு மிகவும் போர் அடித்தது. போர் அடிக்குது பாட்டி என்று புலம்பிய தன் பேத்தியைப் பார்த்து அவளது பாட்டி கெளசல்யா ஒரு புத்தகத்தை அவள் முன் நீட்டினாள். “சாரு, புத்தகம் படிக்க உனக்கு பிடிக்குமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா இந்த புத்தகம் உன்னை அப்படியே கட்டிப் போட்டுடும். தொடரா வந்திட்டிருந்த போது நான் ஒவ்வொரு பகுதியும் எடுத்து வெச்சு பைண்ட் பண்ணி வெச்சிருக்கேன்” என்று சொல்லி கொடுத்தாள். 

    ‘பொன்னியின் செல்வன்’ என்று முதல் பக்கத்தில் போட்டிருந்தது. ஏதோ பாட்டி மனம் நோகக்கூடாது என்று தான் சாரு அந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்கினாள். ஆனால் பக்கங்கள் திருப்ப திருப்ப அவளுக்கு அதில் நிரம்ப ஆர்வம் ஏற்பட்டது. முழுவதுமாக அது அவளை ஆட்கொண்டது. எங்கு சென்றாலும் பொன்னியின் செல்வன் கையுமாகவே சென்றாள். இரவில் வெகு நேரம் படித்தாள். விடியலில் சீக்கிரம் எழுந்து படித்தாள். அவள் பள்ளித் தேர்விற்கு கூட அப்படி படித்ததில்லை. 5 பகுதிகளையும் 5 நாட்களில் படித்து முடித்தாள். அதன் பின்பு இருந்த எல்லா தினங்களிலும் பாட்டியுடன் அந்த நாவலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அவளது ஆர்வத்தைக் கண்டு அவளது பாட்டியும் அந்தப் புத்தகத்தை அவளுக்கே கொடுத்து விட்டாள். அதன் பின்பு பற்பல நாவல்களையும் புத்தகங்களையும் தேடி தேடி படிப்பதே அவளுக்கு பொழுதுபோக்கு ஆனது. இருந்தும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய தாக்கத்தை வேறெந்த நாவலும் அவளுக்குள் ஏற்படுத்த இயலவில்லை. 

    அடடே! பொன்னியின் செல்வன் மீது சாருவிற்கு இருந்த ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொண்டு விட்டதோ! நாம் தற்சமயம் நடக்கும் கதைக்கு வருவோம். 

    அன்று கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் சாருவின் மனம் சித்தார்த்தின் மாமாவாகிய அந்த விஞ்ஞானி பற்றியே இருந்தது. ஒரு விஞ்ஞானியை இத்தனை எளிதில் பார்க்கமுடியும் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சினிமாவில் மட்டுமே விஞ்ஞானிகளை கண்டிருக்கிறாள். அவரிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். 

    எப்போதும் போல் தினசரி வேலைகளை முடித்துவிட்டு தன் கல்லூரி பாடத்தையும் படித்து விட்டு டிவியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இரவு தன் படுக்கையில் வந்து படுத்தாள். இன்னமும் அவள் மனம் விஞ்ஞானியை சுற்றியே இருந்தது. 

    ன்று சனிக்கிழமை. கல்லூரிக்கு விடுமுறை. சித்து சாருவை அழைத்துச் செல்ல அவள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி சித்தார்த்தின் மாமா வீட்டிற்கு சென்றனர். சித்துவின் மாமாவைக் கண்டதும் சாருவிற்கு ஆச்சரியம். உயரமாக நீளமான தலைமுடியுடனும் குறுந்தாடியுடனும் கண்ணாடி அணிந்து கிட்டத்தட்ட எந்திரனில் வந்த  வசீகரனான ரஜினிகாந்த் போல் இருப்பார் என்று எண்ணிய சாருவிற்கு சாதாரண பாண்ட் சட்டை அணிந்து சீராக தலைவாரி நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருந்த அவரைப் பார்த்ததும் நம்புவது கடினமாக இருந்தது. வயது நாற்பது அல்லது சற்று அதிகமாக இருக்கலாம். ஆழ்ந்து நோக்கும் கண்கள். இவரைப் பார்த்தால் விஞ்ஞானி போல் இல்லையே. எல்லோரையும் போல் சாதாரணமாகத் தான் இருந்தார். அது சரி, நாம் சினிமாவில் தான் விஞ்ஞானிகளைப் பார்த்திருக்கிறோம். சினிமா நமக்கு அப்படியொரு இமேஜ் ஐ தான் கொடுத்திருக்கிறது என்று நினைத்துத் தன்னுள் சிரித்துக் கொண்டாள். இருந்தும் அவரிடம் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் இருந்தது. 

    “மாமா, இவள் பேரு சாருலதா. என்னோட காலேஜ்மேட். உங்களைப் பத்தி சொன்னதும், பார்க்கணும்னு ரொம்ப ஆர்வமா கேட்டா. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் சித்தார்த். 

    “அப்படியா, வாம்மா உள்ளே வா” என்றார் அவர். 

    “வணக்கம் அங்கிள்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் சாரு. 

    இருவருக்கும் குடிக்க குவளைகளில் பழச்சாறு கொடுத்தார். “சொல்லும்மா, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தே” என்று அன்புடன் விசாரித்தார். 

    “நீங்க சயின்டிஸ்ட்னு சித்து சொன்னதுமே எனக்கென்னமோ உங்களைப் பார்க்கணும்னு தோணிடுச்சு. இத்தனைக்கும் எனக்கும் சயின்சுக்கும் ரொம்ப தூரம். சயின்ஸ் படிக்க பயந்தே நான் ப்ளஸ் டூ’ல காமர்ஸ் க்ரூப் எடுத்தேன்” என்று பற்கள் தெரிய பளீரென சிரித்தாள். கிருஷ்ணசாமியும் அவருடன் சேர்ந்து சிரித்தார். மேலும் அவள், “என்னமோ ஒரு உந்துதல், உங்களைப் பார்த்து நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்.  ஆனால் உங்களுக்கு விருப்பமிருந்தா மட்டும் சொல்லுங்க அங்கிள். நான் கட்டாயப்படுத்தலை” என்றாள்.  

    சாருவின் பேச்சு கிருஷ்ணசாமிக்குப் பிடித்திருந்தது. “அதுக்கென்னம்மா, கண்டிப்பா சொல்றேன் இப்போ…” என்று தொடங்கியவரை சித்து பாதியில் நிறுத்தினான். “மாமா, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் ஒரு சின்ன வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரத்திலே வந்து சேர்ந்துடறேன்” என்றான். 

    “என்ன சித்து? முக்கியமான வேலையா?” என்று கேட்டாள் சாரு. 

    “ஆமாம் சாரு. இன்னிக்கு விட்டா ஒரு வாரத்துக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. நீ பேசிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றான் சித்து. சரி என்று தலையசைத்தாள் சாரு. 

    முகத்தில் ஒரு புன்னகையுடன் “போய்ட்டு வா சித்து” என்றார் கிருஷ்ணசாமி. 

    சித்து வெளியே சென்றதும் “இவன் இப்போ எதுக்கு போறான் தெரியுமா? நான் என்னோட ஆராய்ச்சிப் பத்தி பேச ஆரம்பிச்சேன்ல, அதனால தான். சித்துவுக்கு அதுல சுத்தமா உடன்பாடு கிடையாது. சான்ஸ் கிடைச்சா எஸ்கேப் ஆகிடுவான்” என்று சொல்லி சிரித்தார். சாருவும் புன்னகைத்தாள். 

    “சரி உன்னை என்னோட லேப்புக்குக் கூட்டிட்டு போறேன் வா” என்ற கிருஷ்ணசாமி ஹாலின் பக்கவாட்டில் இருந்த ஒரு கதவைத் திறந்து வழிகாட்டினார். அவர் முன்னே செல்ல சாரு அவரைத் தொடர்ந்தாள். கதவைத் திறந்ததும் ஒரு சிறிய படிக்கட்டு கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு கொடெளன் போல தான் காட்சியளித்தது. ஆனால் அது கொடெளன் அல்ல என்பதற்கு சாட்சியாக நிறைய புத்தகங்கள் இறைந்து கிடந்தன. மேலும் பல சாமான்கள் சுற்றிலும் இருந்தன. அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு பொருள் பெரிய சீலை கொண்டு மறைத்திருந்தது. 

    அவள் சுற்றும்முற்றும் பார்க்கையில் “இதுதான் சாரு. என்னோட லேப்  பொதுவா நான் இங்கே யாரையும் அனுமதிக்கறது இல்லை. ஏனோ நீ கேட்டதும் உனக்கு காமிக்கலாம்னு தோணிடுச்சு”. 

    “ரொம்ப நன்றி அங்கிள். இப்போ நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்க?” என்று கேட்டாள் சாரு. 

    “அதைப் பத்தி உனக்கு நான் கண்டிப்பா சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நீ இங்க பார்க்கறதைப் பத்தியோ நாம பேசறதைப் பத்தியோ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. சொல்லமாட்டேன்னு உறுதி தந்தா நாம  தொடர்ந்து பேசலாம்” என்றார். 

    “கண்டிப்பா அங்கிள். நிச்சயமா யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்றாள் சாரு. 

    “சரிம்மா. நான் இப்போ பண்ணிட்டு இருக்கிற ஆராய்ச்சி கால இயந்திரத்தைப் பத்தினது” என்றார் அவர். 

    “கால இயந்திரமா?” என்று கண்களில் ஆச்சரியம் மின்னக் கேட்டாள் சாரு, “யூ மீன் டைம் மெஷின்?” என்றாள் உற்சாகத்துடன். 

    “ஆமாம் சாரு. டைம் மெஷின்தான். கிlட்டத்தட்ட 20 வருஷமா இந்த ஆராய்ச்சியைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.99 சதவீதம் முடிச்சுட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அறையின் ஓரத்தில் சீiலையிட்டு மறைத்திருந்த பொருளுக்கு அருகில் சென்றார். 

    “இதோ இதுதான் நான் தயாரிச்சிருக்கற கால இயந்திரம்” என்று சொல்லிக்கொண்டே அந்தச் சீலையை விலக்கினார். 

    சாருவின் புருவங்கள் ஆச்சரியத்தால் மேலே சென்றன. ஒரு பெரிய அளவிலான கோழி முட்டை போன்று அதன் வெளித்தோற்றம் இருந்தது. அதன் முன்புறம் கண்ணாடியினால் ஆனது, சில விளக்குகளும் காணப்பட்டன. மேல்புறமும் சில விளக்குகள் இருந்தன. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டு கதவுகள் இருந்தன. கீழே இரண்டு சக்கரங்களும் பின்புறம் இறக்கை போன்ற வடிவமைப்புடனும் இருந்தது. கிருஷ்ணசாமி கதவுகளைத் திறந்து காண்பித்தார். உள்ளே, முன்னால் இரண்டு பின்னால் இரண்டு என நான்கு இருக்கைகள் இருந்தன. ஓட்டுனரின் இருக்கைக்கு எதிரே கார் போன்று ஸ்டீயரிங் இருக்கவில்லை. ஆனால் சில பட்டன்களும் விளக்குகளும் இருந்தன. ஒரு டிவி திரை (screen) போன்ற ஒன்றும் இருந்தது. மேலும் ஒரு திசைகாட்டி. இவையாவும் பொருத்தப்பட்டிருந்தன. 

    “வாவ் அங்கிள்! பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. இது எப்படி வேலை செய்யும்? நம்மாலே நிஜமாவே டைம் டிராவல் பண்ண முடியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சாரு. 

    “இது எந்த அளவுக்கு வேலை செய்யும்னு நான் இனிமேல் தான் சோதனை செய்து பார்க்கணும்.  ஆனால் கண்டிப்பா சரியாக வேலை செய்யும்னு நம்பிக்கை இருக்கு. இதற்காக நான் பயன்படுத்தற எரிபொருள் நிலக்கரி. இது எப்படி வேலை செய்யும்னு மட்டும் என்னாலே இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது. அது ரகசியம். அப்படியே நான் சொன்னாலும் உனக்கு அது புரியாது” என்று சொல்லி சிரித்தார் கிருஷ்ணசாமி. 

    சாருவிற்கு அது எப்படி வேலை செய்யும் என்பதில் அக்கறையிருக்கவில்லை. ஆனால் இதைப் பயன்படுத்தி தான் ஒருமுறை கடந்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பத் துவங்கினாள். தன் மனதில் தோன்றியதை கிருஷ்ணசாமியிடமும் கூறினாள். “அங்கிள், நீங்க கோவிச்சுக்கலைன்னா என்னை இதுலே ஏற்றி பழங்காலத்திற்கு அழைச்சுட்டு போவீங்களா?” என்று தயங்கி தயங்கிக் கேட்டாள். 

    கிருஷ்ணசாமி சாரு தன்னிடம் இதைத்தான் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்தார். “உனக்கு நம்பிக்கையிருந்தால் நிச்சயம் அழைச்சுட்டுப் போறேன். நானும் இதை சோதனை செய்ய வேண்டியிருக்கு.” 

    சாருவிற்கு தலை கால் புரியவில்லை. “தாங்க்ஸ் அங்கிள்! தாங்க்யூ  ஸோ மச்!” என்று சொன்னதையே திருப்பி திருப்பி கூறினாள். 

    “சரி. நீ கால இயந்திரத்தில் ஏறிக்கோ” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணசாமி ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்தார். சாருவும் துள்ளிக்குதித்து அவருக்கருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். “பெல்ட் போட்டுக்கோ,சாரு. ஏன்னா நாம போகப் போகிற வேகம் அப்படி” என்று சொல்லிக்கொண்டே ஒரு பச்சை நிற பொத்தானை அழுத்தினார். இத்தனை நேரம் அமைதியாக இருந்த கால இயந்திரம் சட்டென உயிர் பெற்றது. உள்ளே பல வண்ண விளக்குகள் எரிந்தன. கதவுகள் தாமாக மூடி பூட்டிக்கொண்டன. டிவி திரை போல் இருந்த திரையில் வணக்கம் என்று ஒளிர்ந்தது. பின்பு போக வேண்டிய தேதி போக வேண்டிய இடம் என்று இரண்டு கேள்விகள் தோன்றின. 

    “சொல்லு சாரு. உனக்கு எந்த காலகட்டத்திற்கு போகணும்? எந்த இடத்துக்கு போகணும்? உன்னோட விருப்பப்படி நாம போகலாம்” என்றார். 

    சாருவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று அவள் எண்ணியதே இல்லை. 

    “அங்கிள் நாம கி.பி. 969ம் ஆண்டுக்கு போகலாம். போக வேண்டிய இடம் கடம்பூர்” என்று உடனடியாக கூறினாள். 

    எந்த காலத்திற்கு என்று கேட்டதும் சற்று யோசிப்பாள் என்று நினைத்த கிருஷ்ணசாமிக்கு அவள் உடனே தீர்க்கமாக சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியம். “அடடே எங்கே எப்போ போகணும்னு ஏற்கனேவே முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டார். 

    அவள் புன்னகைத்தபடியே “என் கனவிலும் நினைவிலும் நான் போக விரும்பறது பொன்னியின் செல்வன் காலத்துக்குத்தான். அந்த காலத்துக்குப் போய் என் பேவரிட் காரக்டர் வந்தியத்தேவனைப் பார்க்கணும், அப்புறம் ஆதித்த கரிகாலனை கொன்னது யாருன்னு தெரிஞ்சுக்கணும்” என்று ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கூறினாள். 

    இளமைக் காலத்தில் அவரும் அந்தப் புத்தகத்தை படித்திருந்தபடியால் “சரி உன்னிஷ்டப்படியே போகலாம்” என்றார். 

    அந்த திரையின் கீழ் இருந்த கீபோர்டு கொண்டு போக வேண்டிய  காலத்தையும் இடத்தையும் நிரப்பினார் கிருஷ்ணசாமி. பின்பு மற்றுமொரு பெரிய பொத்தானை அழுத்தவும் கால இயந்திரம் இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. அடுத்த வினாடி விர்ரென்ற சத்தத்துடன் கால இயந்திரம் பயணிப்பது சாருவிற்கு தெரிந்தது. கண்ணாடி வழியே ஒன்றும் தெரியவில்லை. மிக வேகமாக இயந்திரம் செல்வது மட்டும் உணர முடிந்தது. வயிறு கலங்குவது போல் இருந்தது. ஒரு வேளை இந்த இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் போனால் என்னவாகும் என்று திடீரென மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன இருந்தாலும் இப்போது ஏதும் செய்ய முடியாது, என்ன தான் ஆகிறது பார்ப்போமே என்று மற்றுமொரு கணம் தோன்றியது. பயத்தில் இருக்கையை அழுந்த பிடித்தபடி கண்களை மூடிக் கொண்டாள்.

    (அடுத்து வரும்)

    புகைப்படங்களுக்கு நன்றி:

    http://www.clipartguide.com/_pages/0511-0810-1419-0753.html

    http://www.xaraxone.com/FeaturedArt/may04/html/08.htm

    Share
  • ஸ்வபாவ மதுரா

     

    கவிநயா

     

    ‘லலிதா சஹஸ்ரநாமத்தில்’ வரும் அன்னையின் அற்புதமான நாமங்களில் ஒன்று, ஸ்வபாவ மதுரா.

     ஸ்வபாவம், அல்லது தமிழில் சுபாவம். சுபாவம் என்றால் இயல்பு. மதுரம் என்றால் இனிமை. இயல்பிலேயே இனிமையானவள் என்று பொருள்.

     

    சாதாரணமாக, ஒருவரை இனிமையானவர் என்று எதை வைத்துச் சொல்கிறோம்? பெரும்பாலும் அவர் நம்முடன் பழகும் விதத்தை வைத்துத்தான். ஒருவருடைய நற்குணங்களாலும், நற்பண்புகளாலும், நன்னடைத்தயாலும், இனிய பேச்சாலும்தான் அவருடைய பழகும் விதம் அமைகிறது.

     

    முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள் என்று சொன்னாலும், பக்தர் மனதில் நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்பவள் அன்னை பராசக்தி. அவளுடைய அன்பு எப்பேர்ப்பட்டது! அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

     

    அபிராமி பட்டர் சொல்கிறார், “ஆசைக்கடலில் அகப்பட்டு, அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன்!” என்று. அன்னையின் அருள் இருந்தால்தான் அவளை நினைப்பதே, பக்தி செய்வதே, சாத்தியம் என்று ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் சொல்லுவார். அதே போல பட்டரும், “ஆசைக் கடலில் அகப்பட்டு எப்படியெல்லாமோ உழன்று கொண்டிருந்த என்னை, உன் வாசனை மிகுந்த தாமரைப் பாதங்களை என் தலையில் வைத்து, நீயாக வந்து என்னை ஆட் கொண்டு விட்டாயே! அத்தகைய உன்னுடைய அன்பை என்னவென்று சொல்லுவேன்!” என்கிறார்.

     

    தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனானவன், யோகத்தில் நிலைத்திருந்த மகேஸ்வரனின் மீது பாணங்களை விட்டு, அவர் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனான். அவன் மனைவியாகிய இரதிதேவியின் கண்ணீரைக் காணச் சகியாத தேவி, மன்மதன் அனங்கனாகி (உருவமில்லாதவனாய்), மனைவியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தவனாய் இருப்பான் என்று வரம் அளித்தாள். “சதாசிவ பதிவ்ரதா” என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் போற்றப்படும் தேவி, கணவனால் எரிக்கப்பட்டவன் என்பதால், அவரையும் மீறாமல், அதே சமயம் தன் குழந்தையான இரதிதேவியின் மனமும் திருப்தியுறும் வண்ணம் மிகுந்த கருணையுடன் நடந்து கொண்டாள் என்றால், அவளின் இனிமைக்கு இணையேது?

     

    சிறிதே பேசினாலும், நிறையப் பேசினாலும், வார்த்தைகளின் இனிமை மிகவும் முக்கியம் அல்லவா? வார்த்தைகளில் இனிமை எப்படி வரும்? நல்லதையே பேசும்போது, பிறரைப் புண்படுத்தா வண்ணம் பேசும்போதுதான் பேச்சில் இனிமை வரும்.

     

    அவளோ ‘வாக் அதீச்வரி”, வாக்கிற்கெல்லாம் முதன்மையானவள்; தலைவி.

     

    அவள் குரல் எப்படி இருக்கிறதாம்? சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகம் வருகிறது… அன்னைக்கு முன்னால் அமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்கும் வாணி, அன்னையின் பதியான சிவபெருமானின் பெருமைகளை இனிமையாக இசை கூட்டிப் பாடுகிறாள். பதியின் புகழைக் கேட்டுக் கொண்டு சரஸ்வதியின் கானத்தில் திளைத்திருக்கிறாள், அன்னை. வாணிகானம் முடிந்த பிறகு, அன்னை, வாணியைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறாள். அவள் குரலின் இனிமையில் சொக்கி, தன் வீணையின் நாதமும் ஒரு நாதமா என வெட்கி, வீணையைப் பார்க்கக் கூச்சப்பட்டு, அதனை உறைக்குள் போட்டு மூடி கண்படாத தொலைவில் வைத்து விடுகிறாளாம், வாணி!

     

    அவளுடைய சொல்லின் இனிமையைப் பற்றி, பலப்பலவாய்ப் போற்றிப் புகழ்கிறார் அபிராமி பட்டரும். “பண் அளிக்கும் சொல் பரிமள யாமைளப் பைங்கிளி” என்றும், “இன்சொல் திரிபுர சுந்தரி” என்றும், “பாலினும் சொல் இனியாய்” என்றும், “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியாள்” என்றும்…

     

    சிலர் தனக்குச் சமமானவர்களிடமும், தனக்கு மேலானவர்களிடமும், அன்பும் மரியாதையும் செலுத்துவார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் தம்மை விடத் தாழ்ந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், அவரை மதிக்கவே மாட்டார்கள். தம்மை விடத் தாழ்ந்தவராக யாரையும் நினைப்பதே தவறு, அதிலும் அதற்காக அவர்களை மதிக்காமல் இருப்பதோ அதை விடப் பெருந் தவறு. நற்பண்பு என்பது எப்போதும், எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில் இருக்கிறது. ஆளுக்குத் தகுந்தாற் போல் பழகுவதற்குப் பெயர் பண்பே அல்ல.

     

    அன்னை பராசக்தி எப்படிப்பட்டவள்? ஞானியர்க்கு மட்டுமே தன்னைத் தெரியப்படுத்துபவள் அல்ல, அவள். அவள், “ஆபால கோப விதிதா”! எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள். பட்டரும், “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். நின்னை பேயேன் அறிவும் அறிவு தந்தாய். என்ன பேறு பெற்றேன்” என்கிறார். “என்னைப் போன்ற நாயினும் கீழானவனுக்குக் கூட அருள் செய்தாயே! உன்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்தப் பேயேனுக்கு அருள் தந்தாயே!” என்று போற்றிப் பரவுகிறார்.

     

    மேலும், “உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை. நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை. சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே” என்பார். “எனக்காக இத்தனையும் செய்தாயே. உன் அன்பிற்கு எல்லை ஏது” என்று பரவசம் அடைகிறார்.

     

    அவளுடைய இனிமை இன்னும் எப்படி விரிகிறது பாருங்கள். சிவனும் அவளும் பாதிப் பாதி. பதியோடு பாதியாகி அர்த்த நாரியானவள், அவள். காமனைக் கண்ணால் எரித்த கண்ணில் பாதி இவளுடையது! மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, கூற்றுவனைக் காலால் உதைத்த இடது கால் இவளுடையது! இப்படியெல்லாம் இருந்தும் எல்லா ‘credit –ஐயும்’ பரமசிவனுக்கே கொடுத்து விட்டாள் என்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்!

     

    அது மட்டுமா? சிவன் அவளுக்குப் பாதி உடலைத் தந்ததாகவேதானே எப்போதும் சொல்கிறோம். அவளும் தன் பாதியைத் தந்ததால் அல்லவா இருவரும் சேர்ந்து அர்த்தநாரியானார்கள்! இருந்தாலும் அந்தப் புகழையும் பதிக்கே தந்து விட்டாள். அந்த அளவிற்கு ச்வீட்டானவள் அம்மா!

     

    அவளே ‘அவ்யாஜ கருணாமூர்த்தி”. காரணமின்றி கருணை செய்பவள். ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துப் பணி செய்தாலும், ஒரு இலையும் தண்ணீரும் மட்டும் வைத்துப் பூசித்தாலும், பக்தியுடன், உள்ளன்புடன் பூசித்தால், அவளுக்கு எல்லாமே ஒன்றுதான்.

     

    அன்னையின் அழகின், தோற்றத்தின், கடைக்கண் பார்வையின் சக்தியின், அவள் அருளின்,  இனிமைகளை, அவளின் மகிமைகளைப் பற்றிச் சொல்ல ஒரு ‘சௌந்தர்ய லஹரியே’ இருக்கிறது!

     

    மதுரமானவளே என்பதற்கு இனிமையானவளே என்றும் பொருள் கொள்ளலாம், மதுரையில் மீனாக்ஷியாக வசிப்பவளே என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறது அமரர் ‘அண்ணா’ எழுதிய ‘லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம்’. அவளைப் பற்றி இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு அபிராமி அந்தாதியில் இதே பொருள் (மதுரம் + மதுரை) உள்ள ஒரு மதுரமான பாடலைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்:

     

    கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
    களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
    மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
    பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

     

    “அபிராமி அன்னையே, உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் சூழ்ந்த இடத்தில் வசிக்கின்றவளே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் – இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.” –கவியரசர் கண்ணதாசன்.

     

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

     

    அன்புடன்

    கவிநயா

     படத்திற்கு நன்றி :

    http://santhipriyaspages.blogspot.in/2010/09/thirumeeyachur-sree-lalithambigai.html

     

    Share
  • தொல்லை காட்சி – விஜய் டிவி யும் புது படங்களும்

     

     

    விஜய் டிவி யும் புது படங்களும் 

     

    ஒரு புது படம் டிவி யில் போட்டால் எவ்வளவு நாள் கழித்து மறுபடி அதே படத்தை போடலாம்? ஆறு மாசம்? ஒரு மாசம்? ஒரு வாரம்? போட்ட மறு நாளே போடுறாங்க சார் விஜய் டிவி யில் ! மெரீனா படம் இந்த ஆயுத பூஜை அன்று போட்டனர். மறுபடி அடுத்த நாளே வேறு புரோகிராம் இல்லாமல் மீண்டும் மெரினாவை ஓட விட்டார்கள் ! அம்மா – ஐயா இருவர் சார்பின்றி இருக்கு என விஜய் டிவி பக்கம் ஒதுங்கினால் அங்கும் இப்படி ஒரு கொடுமை நடக்குது !!

     

    இதே விஜய் டிவியில் போட்ட இன்னொரு புது படம்: தோனி ! இதுக்கு என் பெண்ணோட கமன்ட்: விஜய தசமி அன்னிக்கு படிக்கணும்ன்னு சொல்லுவாங்க. இவங்க என்னா படிக்க  வேண்டாம்னு மெசேஜ் சொல்ற படத்தை  இன்னிக்கு போடுறாங்க !” 

     

    “வா பெண்ணே வா.. வருங்கால ப்ளாகர் ஆகி சமூக பங்காற்று ! அந்த கெப்பாசிட்டி உன்கிட்டே இருக்கு” என்று சொல்லி, வாங்கி கட்டி கொண்டேன் !

     

    ஜெயா டிவியில் மின் பற்றாக்குறை

     

    முதல்வர் அம்மா ஜெயா டிவியில் வந்து “மின் பற்றாக்குறை” (மின்வெட்டு இல்லிங்களாம்;மின் பற்றாக்குறையாம் ) பற்றி நிறைய பேசினார். இதற்கு முந்தைய தி.மு.க மற்றும் இப்போதைய மத்திய அரசு தான் காரணம். மேலும் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் பலிக்காமல் போக என்னென்ன காரணம், etc, etc

     

    சென்னை தாண்டி மற்ற ஊர்களில் இதை பார்த்திருப்பார்களா என்றே தெரியலை (கரண்ட் இருந்தால் தானே பார்க்க? இருக்கும் நேரம் மற்ற உருப்படியான வேலை பார்ப்பார்களா? ஜெயா டிவி போடுவார்களா)

     

    நிற்க அம்மா பேசிய விஷயத்துக்கு வருவோம்

     

    ” பிரசவ வலி எவ்ளோ கஷ்டம் என்பதை கேட்க யாரும் தயாராய் இல்லை. குழந்தை எப்படி இருக்கு; அதை சொல்லுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.

     

    மக்களுக்கு தேவை மின்சாரம். விளக்கங்கள் கேட்க, நம்ப யாரும் தயாராய் இல்லை.

     

    சீரியல் பக்கம் – ஜான்சி ராணி 

     

    ஜீ (Zee )  டிவி மிக பாப்புலர் ஆகா விட்டால் கூட, அதில் வந்த நல்லதொரு சீரியல் ஜான்சி ராணி. 

    ஜான்சி என்கிற ஊருக்கு ராணியாக இருந்த ஜான்சி ராணி கதையை சற்று மசாலா தூவி எடுத்துள்ளனர். ஹிந்தி டப்பிங் சீரியலான இது முன்பு தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. அதன் பெரும் வெற்றியை அடுத்து மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எத்தனை கஷ்டங்களை தாண்டி எடுத்த குறிக்கோளில் உறுதியாய் நிற்கும் இந்த நிஜ கதை நிச்சயம் inspitrational story  !

     

    மனதோடு மனோ 

     

    ஜெயா டிவியில் ” மனதோடு மனோ ” நிகழ்ச்சி பாடகர் அல்லது இசை அமைப்பாளர் ஒருவரின் திரை உலக அனுபவங்கள் பற்றி ஜாலியாய் பேசுகிறது. 

     

    இதில் சமீபத்தில் LR ஈஸ்வரி  வந்து பேசினார்/ பாடினார். “மாலை நேரத்து மயக்கம் “,  ” பட்டத்து ராணி பார்க்கும் பார்வை” போன்ற சில மறக்க முடியாத பாடல்கள் பாடினாலும் ஆடி மாதம் ஸ்பீக்கரில் இவர் பாட்டுகளை கேட்டு கேட்டே மிரண்டு போன தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். என் நண்பன் வழக்கறிஞர் பாலா இவர் பாட்டு கேட்டாலே டென்ஷன் ஆகிடுவான். இப்படி இவரை முழுசாய் வெறுப்போரும் உண்டு. 

     

    குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தெரிய வந்த ஆச்சரிய விஷயம்: பல மகமாயி பாட்டுகள் பாடி பெரும் புகழடைந்த, எப்போதும் பெரிய அளவு குங்குமம் வைக்கும் ஈஸ்வரி நிஜத்தில் ஒரு கிருத்துவர் ! ஈஸ்வரி என்பதே சினிமாவிற்கு மட்டும் தான் போலும் !  

     

     

     

    மாற்றான் பற்றி  KV ஆனந்தும் சூர்யாவும் 

     

    KV ஆனந்தும் சூர்யாவும் வெவ்வேறு சானல்களில் மாற்றான் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள். (நம்ம பதிவர்கள் பார்த்தா போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆகுது என கமன்ட் அடித்திருப்பர்; பின்னே அனைவரும் இணையத்தில் துவைத்து காய போட்ட படம் ஆயிற்றே ) 

     

    படம் பார்த்து விட்டாலும், மிக சுமார் என்றாலும், அதனை எடுக்க எவ்ளோ கஷ்டப்பட்டுள்ளனர் என்று பார்க்க பாவமாய் தான் உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை (வெவ்வேறு தினங்களில்) நடிக்கும் சூர்யா, லொகேஷன் சிரமங்கள், சண்டையில் உள்ள பிரச்சனை என ரொம்ப உருக்கமாய் பேசினார்கள். திரைக்கதையிலும் அதே மாதிரி மெனக்கேட்டிருக்கலாமே  சார் !

     படங்களுக்கு நன்றி :

    http://www.in.com/l-r-eswari/profile-167679.html

    http://tamil.oneindia.in/movies/review/2012/10/maatran-movie-review-163139.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 43. (29.10.12)

     

    மலர்சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
    (அடுத்த ஆறு வகைகள்)
     
     
    6. குடைக்கூத்து
     
    சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
    தாம் போர் செய்யவென
    எடுத்த படைக்கலங்களைக்
    கீழே போட்டுவிட்டுப்
    போர் புரிய இயலவில்லையே என
    வருத்தமுற்ற தருணத்தில்,
    குடையை அவர் முன் சாய்த்து
    முருகப்பெருமான் ஆடிய
    குடைக்கூத்து இது பாராய்!
     
     7. குடக் கூத்து
     
     வாணன் தன் மகள் உழை காரணமாகக்
    காமன் மகன் அநிருத்தனைச்
    சிறைப் பிடிக்க,
    சிறைமீட்டும் பொருட்டு,
    வாணாசுரனது ‘சோ’ எனும்
    பெருநகர வீதியில்,
    நீள் நிலத்தைத்
    தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
    மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
    குடங்கள் கொண்டு ஆடிய
    குடக்கூத்து இது பாராய்!
     
    8. பேடி ஆடல்
     
    அநிருத்தனை மீட்கவென
    ‘சோ’ நகர வீதிகளில்
    தந்தையவன் காமன்
    தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
    பெண்கோலம் புனைந்து ஆடிய
    பேடி ஆடல் இது பாராய்!
       
    9. மரக்கால் கூத்து
     
    கொதிக்கின்ற சினம் கொண்ட
    அசுரர்கள் தமது வஞ்சத்தால்
    பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
    போரிட்ட தருணமதில்
    அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
    மாயவள் துர்க்கை ஆடிய
    மரக்கால் கூத்து இது பாராய்!
     
    10. பாவைக் கூத்து
     
     சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
    காமத்தின் வயப்பட்டு,
    போரினை மறக்கச் செய்ய
    செந்நிறத் திருமகள்
    கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
    பாவைக் கூத்து இது பாராய்!
     
    11. கடையம்
     
    வாணர் நகராகிய சோ நகரத்தின்
    வடக்கு வாயில் கண்ணுள்ள
    வயலிடத்தே நின்று
    உழத்தியர் வடிவம் கொண்டு
    இந்திராணி ஆடிய
    கடையக் கூத்து இது பாராய்!
     
    அன்றொரு நாள்
    தாது அவிழ்ப் பூம்பொழிலில்
    நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
    மாதவி இவள் நடனம் பாராய்!
    அனைத்து தெய்வங்கள்
    ஆடிய கூத்தையும்
    தக்க மரபுகளுடன்
    கூத்தநூல் முறைப்படி ஆடிய
    அழகு பாராய்!

     
    இங்ஙனம்
    நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
    விஞ்சையன், அவன் காதலியுடன்
    மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
    விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
    இந்திர விழா நிகழ்வுகளைக்
    கண்டுதான் களித்திருந்தனர்.
     
     
    அடிப்படையாய் அமைந்திருந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 52 – 73
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram15.html
     
     
    படத்துக்கு நன்றி:
    http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-oil-painting-129.htm
    natiyam 2.jpg    natiyam 2.jpg

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-2)

    ராமஸ்வாமி ஸம்பத்

    “யாரது துவரகாதீசரா?” என்று வினவிய கர்ணன், “தாங்களா இந்த எளியேனிடம் வரம் கோரி வந்திருப்பது? தங்களிடம் இல்லாதது எதேனும் இந்த தேரோட்டி மகனிடம் இருக்குமா?” என ஆச்சரியத்துடனும் ஏளனத்துடனும் கேட்டான்.

    “ஆம் கர்ணா! உன்னிடம் தர்மத்திற்காக யாசிக்க வந்திருக்கிறேன்.”

    “கண்ணா, நீங்கள் மாயாவி என்பது ஜகப்பிரசித்தம். இந்நேரத்தில் யார் எதனை விரும்பினாலும் அளிப்பேன் என்பதனைத் தெரிந்துகொண்டுதானே இங்கு வந்துள்ளீர்? நீங்கள் யாசிக்கும் முன் நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எனக்கும்  என் இனிய நண்பனான துரியோதனனுக்கும் இடையே மித்திரபேதம் செய்ய முயலாதீர்.”

    “கர்ணா! நீ ’தானவான்’ எனப்பெயர் பெற்றுவிட்டாய். ‘கர்ணனுக்கு மிஞ்சிய கொடை வள்ளல் யாரும் இல்லை’ என்று உன்னை உலகம் புகழ்கிறது. தானவானாகிய நீ ’தர்மவான்’ என்று கீர்த்தி அடையவேண்டாமா?”

    ”நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”

    கண்ணன் சற்று அமைதியாக இருந்தான். பின்னர், “கர்ணா! தர்ம-அதர்மங்கள் பற்றி உனக்கு நான் விவரிக்க வேண்டியதில்லை. உனக்கும் அவை தெரியாததல்ல. விதிவசத்தால் நீ அதர்மத்திற்குத் ஆதரவு தரவேண்டிய  நிலையில் உள்ளாய். தர்மத்தைச் சார்ந்து நிற்கும் பாண்டவர்களுக்கு துரியோதனன் துவேஷ பாவத்தோடு தீமை இழைக்க நினைக்கிறான். அப்படிப் பட்டவனுக்கு நீ துணைபோகலாமா?” என்றான்.

    ”கண்ணா, பாண்டவர்கள்மீது என் இனிய நண்பன் துரியோதனனுக்கு மிக்க வெறுப்பு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய அரியணை ஏறும் ஆசைக்கு அந்த ஐவர் ஒரு தடையாக இருப்பதாக நினைத்து அவர்களை வெறுக்கிறான். எனினும் என் நண்பனின் எதிரிகள் எனக்கும் விரோதிகளே,” என்றான் கர்ணன்.

    “துரியோதனன் உன் உயிர்த்துணைவன் என்பதனை நான் அறிவேன். ஆனால் உண்மை நட்பின் இலக்கணத்தை நீ மறந்து விட்டாய். நட்பு என்பது  சிரித்து சல்லாபம் செய்வதற்கு மட்டும் பொருந்தாது. ஒருவன் தன் நண்பன் தவறு செய்யும்போது அதனைச் சுட்டிக்காட்டி, தேவையானால் உரிமையோடு இடித்துக்காட்டவும் சித்தமாக இருக்கவேண்டும். அதனை நீ செய்யத் தவறி விட்டாய்.”

    “கண்ணா, நீங்கள் எதனைச் சுட்டிகாட்டுகிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமன்னர் திருதாஷ்டிரர் முன்னிலையில் நடந்த சூதாட்ட்த்தில் சகுனி மாமா தர்மபுத்திரனைத் தோற்கடித்து அவரையும் அவர் தம்பிமார்களையும் பாஞ்சாலியையும் துரியனுக்கு அடிமைகள் ஆக்கிய சம்பவம் எனக்கும் ஒப்புதல் இல்லைதான். மாயச் சூதாடி அவர்கள் உடைமைகளைப் பறித்துப் பெற்றது ஒரு ஈனமான வெற்றி என்றே நான் கருதுகிறேன். அதைவிட ஐவருடன் போரிட்டு அவர்களை புறமுதுகிடச் செய்து இந்திரப்ரஸ்தத்தைக் கைப்பற்றி இருந்தால் துரியனை உலகமே போற்றியிருக்கும். என் வார்த்தைகளை அவன் கேட்கவில்லை. சகுனி மாமாவின் குறுக்குவழி அவனைக் கவர்ந்துவிட்டது,” என்ற கர்ணனை கண்ணன் இடைமறித்தான்.

    ”அது போகட்டும். பாண்டவமகிஷியான பாஞ்சாலியை அந்த மன்னர் அந்த மாபெரும் சபைதன்னில் மானபங்கம் செய்யத் தூண்டியது நீ தானே? அது எவ்வகையில் நியாயம்?”

    “கண்ணா, துரியோதனனை மகிழ்விப்பதுதான் எனது முதல் குறிக்கோள். இந்திரப்ரஸ்தத்தில் ராஜசூய யாகத்திற்குப்பின், அவன் தங்கியிருந்த மாளிகையில்  மயனால் நிர்மாணம் செய்யப்பட்ட விடுதியில் பாஞ்சாலியால் பரிகாசம் செய்யப்பட்ட நிகழ்வு அவன் மனதில் ஆழமாகப் பதிந்து, அவளைப் பழிவாங்கவேண்டும் என்ற ஒரு வெறி துரியனுக்கு ஏற்பட்டிருந்ததை நான் அறிவேன். அப்படிப் பழிவாங்கிவிட்டால் அவன் உள்ளம் உவகையடையும். அவனுக்கு அந்த மகிழ்ச்சி கிட்ட வேண்டும் என்று கருதியே நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அது அநீதி என்று தெரிந்தும் நண்பனின் மகிழ்ச்சிக்காக அப்பாபத்தினைச் செய்ய முற்பட்டேன்.”

    “பார்த்தாயா கர்ணா அப்பாபத்தின் விளைவை? எண்ணித் துணிக கருமம் என்று சான்றோர்கள் வெறும் வார்த்தை ஜாலமா செய்தார்கள்? துரியனுக்கு மகிழ்வூட்டுவதாகக் கருதி அவனை எமலோகத்தின் வாயிலுக்கே அனுப்ப முனைந்திருக்கிறாயே!”

    “என்னைப்போண்ற மஹாரதிகள் துரியனுக்குத் துணை நிற்கும்வரை அது ஒருநாளும் நடவாது. மாறாக பாண்டவர்களை நான் ஒருவனே எமனுக்கு இறையாக்குவேன்.”

    இதைக்கேட்ட கண்ணன் மோஹன புன்னகை புரிந்தான். ”அங்க அரசனே! உன் தன்னம்பிக்கை போற்றுதற்குரியதே. ஆயினும், நீ தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வினாலும் எப்படியும் தர்மம் மட்டுமே வெல்லும் என்பதனை மறந்து விட்டாயா?” என்றான்.

    ”கண்ணா, தர்மம் அதர்மம் என்ற கவைக்கு உதவாத விஷயங்களைப் பேசி என்னைக் குழப்பவேண்டாம். எனக்குத் தெரிந்த ஒரே தர்மம் என் ஆருயிர் மித்திரனைச் சார்ந்திருப்பதே,” என்று கர்ணன் உறுதியாக உரைத்தான்.

    கர்ணனின் நட்பு வெறி கண்ணனை வியக்க வைத்தது. “உன்னைப் போன்றவர் நட்பைப்பெற துரியோதனன் என் நோற்றான் கொலோ! உன்னை அங்கதேச அரசனாக்கினான் என்பதால் அவனை உன் எஜமானனாகக் கொள்வதில் தவறில்லை. அதுகூட உன்னைப் பாண்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தும் முயற்சிதான். ஆனால் இப்படிப்பட்ட கண்மூடித்தனமான விசுவாசம் தேவை தானா?” என வினவினான்.

    பனித்த விழிகளோடும் தழுதழுத்த குரலோடும் கர்ணன் கூறலுற்றான். “கண்ணா, எனக்கும் துரியனுக்கும் உள்ள நட்பின் ஆழம் புரிய என் பழங்கதையை உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கெளரவர்களும் பாண்டவர்களும் ஆச்சாரியர் துரோணரிடம் குருகுலவாசம் முடிந்ததும், மாமன்னர் திருதராஷ்டிரர் முன்னிலையில் தங்கள் தங்கள் போர்த்திறணை ஒரு போட்டி மூலம் தெரியப்படுத்தினர். அதன் இறுதியில் ‘வில்லுக்கோர் விஜயன்’ என்ற விருதினை துரோணாச்சாரியர் பார்த்தனுக்கு வழங்கினார். அவ்விழாவில் பார்வையாளனாக இருந்த நான் எழுந்து, ’அர்ஜுனன் என்னோடு விற்போட்டியிட்டு என்னை வெல்லும்வரை இந்த விருதுக்கு அருகதையற்றவன்’ என்று கூவினேன். அதனைக்கேட்ட பீமன் ஒரு தேரோட்டி மகனுக்கு அரசகுமாரனுடன் போட்டியிட உரிமையில்லை என கர்ஜித்தான். அந்த நேரத்தில்தான் துரியோதனன் எனக்கு அங்கதேச மன்னனாக ராஜ்யாபிஷேகம் செய்வித்தான். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஆச்சாரியர் என் அரசபரம்பரைபற்றிச் சொல்லச்சொன்னார். என் மூலம் தெரியாத நான் விழித்தேன். ‘க்‌ஷத்திரியன் இல்லாத நீ ஒரு அரசகுமாரனோடு எவ்வாறு போட்டியிட முடியும்?’ எனக்கேட்டு என்னை ஒதுக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து பீமன் ‘தேரோட்டிமகனே வெளியே போ’ என்று கூச்சலிட பல பார்வையாளர்களுட்ம் அவனுடன் சேர்ந்து கோஷமிட்டனர். அவமானத்தில் கூனிக்குறுகிப்போன என்னை துரியன் அணைத்தவாறு தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி:

    http://4.bp.blogspot.com/-YLd7LRURDcc/T72NXtbwO2I/AAAAAAAAAHU/XGeohOTO3AI/s1600/krishna1.jpg

    Share
  • எங்கும் பரவும் டெங்கை முறியடிப்போம்

     

    திருமலை சோமு

    மனிதன்.. மகத்தானவன்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சுகாதாரம் தரும்.. வரும் முன் காப்போம் என்றெல்லாம் எத்தனையோ மூத்தோர் சொல்லை  நாம் நினைவில் வைத்திருந்தாலும். இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் மருத்துவத்துக்கு சவால் விடும் வகையில் புதுவகையான நோய்கள் அவ்வப்போது மனிதனை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.. சில நாட்களாக சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று பயந்து  கிடந்த நாம் இப்போது மீண்டும் டெங்கு காய்ச்சலை கண்டு அச்சப்பட்டு இருக்கி றோம்.. டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட வேண்டாம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும் என்றெல் லாம் நம்பிக்கை வார்த்தைகளை அவ்வப்போது சொன்னாலும்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் டெங்கு தாக்கி அவதிபட்டு வரும் மக்களிடம் என்ன பேச முடியும்.?
    இந்த டெங்கு நேற்று இன்று முளைத்ததில்லை உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்றுநோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. 1779ம் ஆண்டு முதல் டெங்கு காய்ச்சல் நோய் சீனாவில் உறுதி செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.1820-ன் முற்பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் டெங்கு தொற்று நோய் உருவானது என்றும் உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

    டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணம் ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்கள் என்று நாம் அறிவோம்.. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. . சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்ச்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும். கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

     ”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங் கள்,தூய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலை யும் கொடுக்கலாம்” என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.  ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட் லெட்ஸ் வெகுவேகமாக குறைவ தால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட் டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை ஆங்கில மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன. ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து  சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும். மேலும் நிலவேம்பு கசாயம் தினம் – காலை, மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரசால் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும். சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு காய்ச்சல், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல் மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.

    கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப் படுகின்றது. மேலும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள்,டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச்சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து கொண்டால் நம்மை யார்தான் வெல்ல முடியும்? கொசுக்கடிக்கு இரையென மாயும் அற்ப ஜீவனாய் வீழ்வோம் என்று நினைத்தாயோ.. மனிதன்.. மகத்தானவன்!

    படத்திற்கு நன்றி

    http://blogs.burlingtonfreepress.com/weather/2011/09/20/vermonts-mosquito-coast/

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    நாம் பல திருத்தலங்களுக்குச் செல்கிறோம். அங்கே சென்றவுடன் கோயில் தரிசனத்தில் பெரும்பகுதியை சுவாமி தரிசனத்திலேயே செலவிட்டு வந்து விடுகிறோம். அப்படி  அந்தக் கோயிலுக்குள் சென்று சுவாமியையும் அம்பிகையையும் தரிசித்ததோடு மட்டுமல்லாமல், அக்கோயிலுள்ள பழம் பெருமை மிக்க சிற்பங்கள், அந்தத் தலம் பழைய காலத்தில் எவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்றிருக்கும் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டோமேயானால் நாம் சென்று வந்துள்ள தலத்தின் முக்கியத்துவம் நம் மனதுக்குள் மிக அதிகமாக எழுந்து ஒரு அசாதாரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.

    இப்படித்தான் சென்ற வாரம் திருவக்கரை – தேவாரப் பாடல் பெற்ற தலத்தினுக்கு சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கோயிலில் முதலில் நாம் தரிசனம் செய்வது கருணாமயியான வக்கிரகாளி அம்மன்தான். அம்மனைப் பற்றிய விவரங்கள் பிறகு ஓர் சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன் என்றாலும் நாம் இந்த அம்மனை திருவக்கரை காளி என்றே அழைக்க வேண்டும் என்ற விவரத்தினை அந்தக் கோயில் உட்புறம் சென்றபின் அங்குள்ள திருமுறைப் பாடல் கல்வெட்டின் மூலம் தெரிந்து கொண்டேன்.

    திருவக்கரை எனும் தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் சொரூபமான சிவபெருமானை சம்பந்த சுவாமிகள் வழிபடும்போது தம் பதிகத்தில் அத்தலத்தை ‘திருவக்கரை’ என்றே அழைக்கிறார். ஆகையினால் இங்குள்ள காளி தேவியைக் கூட திருவக்கரை காளி என்பது மருவி வக்கர காளி என்று வந்திருக்கவேண்டும் என்ற குறிப்பினையும் உணர்ந்துகொண்டேன். வக்ர காளியோ, வக்கிர காளி அல்லது வக்கர காளியென்றோ (கோயில் போர்டில் அப்படித்தான் தெரிவித்திருக்கிறார்கள்)  அழைப்பது உசிதம் அல்ல என்ற உண்மையும் புரிந்தது.

    நம் தமிழ்மொழியில் பண்டைய கால இலக்கியங்களில் மிக அதிகமாக மக்கள் வழக்கத்தில் இன்றளவும் உள்ள பாடல்களில் திருமுறைப்பாடல்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து கிடையாது என்பதும் உண்மைதானே. தேவாரப் பாடல் எல்லாமே உள்ளத்துக்கு மிக மிக ஆறுதலாகவும் நம்முடைய மனத்துயர் நீக்கும் அருமருந்தாகவும் இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் அந்த 1400 வருடங்களுக்கு முன் உள்ள இயற்கை காட்சிகளையும், பாடல் பெற்றுள்ள ஒவ்வொரு தலத்தில் வாழும் மக்கள் வாழ்க்கை நெறிகளையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் பெருகிறோம்.

    அதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால் அந்தக் காலகட்டத்திலே விளைந்த ஏராளமான விளைபயிர், பூக்கள், மரங்கள். செடிகள் என்பன அந்தக் காலத்திலே வழங்கப்பட்ட செய்திகளுடனே நமக்கு தேவாரப் பாடல் மூலம் கிடைக்கிறது. மயிலை நூ.த.லோகசுந்தரம் அவர்கள் திருமுறை பாடல் பெற்ற தலங்களை அநேகமாக அத்தனை தலங்களையும் சேவித்தவர் மட்டுமின்றி வைப்புத் தலங்கள் உட்பட அனைத்துத் தலங்கள் பற்றியும் அதிகமான அளவில் குறிப்பு எடுத்துக் கொண்டு அத்தலங்களப் பற்றி எழுதி வருகிறார். இப்படி ஒரு திருத்தலமான மாந்துறையைப் பற்றி அவரது விளக்கம் அத்தலத்துப் பாடலிலிருந்து நமக்குத் தருகிறார். http://www.vallamai.com/paragraphs/28023/

    இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்.

    இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகை மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.

    வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.

    தேவாரத் திருத்தலங்கள் பற்றிய செய்திகளையெல்லாம் நாம் நன்றாக அறிய வேண்டும். நம் தெய்வத் திருத்தலங்கள் எத்தனை பெருமைமிக்கவை என்பதை திரு நூ.த. லோகசுந்தரம் அவர்கள் தெரிவிக்கும்போது ஆச்சரியமும் அத்தலத்தை நேரில் காணும் ஆர்வமும் உண்டாகிறது. வல்லமை குழுவின் சார்பில் பெரியவர் திரு நூ.த.லோகசுந்தரம் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் நாம் பெருமை அடைகிறோம். வல்லமையாளருக்கும் நாம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா:

    விஜயதசமி திருநாளில் தமிழ் வகுப்பு ஒன்றினை ஆரம்பித்து வைத்திருக்கும் திரு இன்னம்புரான் அவர்களின் ‘தமிழார்வம்’ கட்டுரைத் தொடரில் உள்ள ஒரு உன்னதமான கருத்து ஒன்று இந்த வாரத்தில் கடைசி பாராவில் இடம் பெறுகிறது.

    செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.     நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.

    Share
  • அழகு நிலா

     

    வெ.மீரா ஜனனி

    இரவு இருட்டில் வானத்தின் கருமையில்
    சிரிக்கும் சப்தத்தைக் கேட்டேன்,
    மேலே நட்சத்திரத்துடன் மின்னும்
    நிலவு தான் சிரிக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்,
    “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டதற்கு
    நான் தேய்ந்து மறைவேன் என்று உணராமல்
    என்னை ரசிப்பதைப் பார்த்து என்றது.
    அப்பொழுது நிலா நிலா ஓடி வா என்று ஒரு சிறுமி பாட
    அது மேலும் சிரித்து மகிழ்ச்சியானது.
    நான் ஓடி வந்து விட்டால் இரவில் வெளிச்சம் ஏது?  என்று வியப்பாய்க் கூறியது.
    மகிழ்ச்சியினால் அது இன்னும் அழகாய் ஜொலிக்க
    அந்த சிறுமி நிலா என்னை நோக்கி வருகிறது என்று ஆனந்தக் கூத்தாடினாள்.
    மற்றவர்களை மகிழ்விப்பதே வாழ்க்கை என்று உணர்த்தும் அழகு நிலா
    வானிலும் என் பார்வையிலும் மேலும் உயர்ந்தது.

    படத்துக்கு நன்றி

    http://www.all4myspace.com/layouts-2.0/moon-myspace-layouts-2.0/0

    Share
  • பணத்தை என்ன செய்வது ….

    செழியன்

     

    அவருக்கு பணமுண்டு .
    அதற்கோர்  பெட்டகமுண்டு .
    அந்த பணம் ….
    வந்ததற்கும்  கணக்கில்லை .
    வருவதற்கும்  கணக்கில்லை .
    வேலைக்கோர்  உணவுண்டு .
    விருந்திற்கோர்  ஆளுண்டு .
    அருந்தத்தான் தடை  அவருக்கு.
    ஆம்!…
    அவர் உதிரத்தில்
    மிகையாம்  கொழுப்பு சத்து …..அது
    பகையாம்  அவர் உயிருக்கு .
    மருத்துவர் தடை  இது .
    மறுக்கமுடியவில்லை ,,….அவரால் .
    மனம்  வெதும்புகிறார் .
    இவர் பல்லவி ….
    பணத்தை  என்ன செய்வது .
    அவருக்கோ …
    அடுக்கு மாடியுண்டு .
    அதிலே .அடுக்கிய
    நோட்டு கத்தையுண்டு .
    அதை  எண்ணி  பார்க்க நேரமில்லை .
    கத்தை வந்த
    வித்தையை  எண்ணவும் மனமில்லை .
    கலருக்கொரு  காருண்டு .
    காருக்கொரு  ஓட்டிண்டு.
    இருந்தென்ன ……
    காலார நடக்க வேண்டுகிறார்  மருத்துவர்.
    கொழுத்த உடம்பை
    குறைப்பதற்கு .
    இவர்  பல்லவி ….
    பணத்தை  என்ன பண்ணுவது .
    அவருக்கோ
    ஆலைகள்  பலவுண்டு .
    அதிலே வேலைக்களுமுண்டு பலருக்கு .
    ஆலையில்   வந்ததை
    சாலையில்  போவோருக்கும்
    சார்பு அற்றவருக்கும்
    ஆதரவாய்  அளித்தார் .
    அவர் ஆனந்தம்  கண்டு
    இவர் மகிழ்ந்தார் .
    ஆனால் …
    அள்ளி  அணைத்து..
    கொஞ்சி மகிழ
    அன்பு மனைவிக்கு
    கொடுக்க முடியவில்லை
    குழந்தை  செல்வத்தை .
    கோடி கோடியாய்…
    பணமிருந்தென்ன…..
    கொஞ்சு மொழி  கேட்க
    குழந்தை  இல்லையே .
    இவர் பல்லவி
    பணத்தை  என்ன   செய்வது ?


    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (17)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 17

    தேவி அவ்வாறு கேட்டதும்,

    சுந்தர் தவித்தான்….துடித்தான்…அந்த விநாடியே தன் உயிர் போய், தன்னை ஒரு மாபெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடாதா? என எண்ணி எண்ணி மாய்ந்தான்.

    ‘ஏற்கனவே இவ கல்யாணத்துக்காக நான் ஒரு கிட்னிய வித்துட்ட விபரத்தை யாருக்கும் தெரியாம மறைச்சு வெச்சிருக்கேன்… இப்ப திருடனுக்குத் தேள் கொட்டின கதையா இவளே தன் புருஷனுக்காக என்கிட்ட கிட்னி தானம் கேட்கிறாளே!…நான் என்ன பண்ணுவேன்?…எப்படி அந்த உண்மையைச் சொல்வேன்.?”

    முகம் வெளிறிப் போய் நின்ற சுந்தரை ஊடுருவிப் பார்த்த தேவி, ‘என்னண்ணே..நான் கேட்டுட்டே இருக்கேன்…நீ பதிலே பேசாம வேற எங்கியோ யோசனை பண்ணிட்டிருக்கே?”

    ‘இல்லம்மா…அது…வந்து….இப்ப…இப்ப…நான்…மா;ப்பிள்ளைக்கு கிட்னி தானம் குடுக்க முடியாத நிலைல இருக்கேன்மா… அதான்..அதைப் பத்தித்தான்…யோசனை..” தட்டுத் தடுமாறி அவன் சொல்லி முடிக்கையில், அவனே கண் கலங்கி விட்டிருந்தான்.

    ‘விருட்‘டென்று அவனை நிமிர்ந்து பார்த்த, ‘என்னண்ணா…என்ன சொல்றே?… முடியாதுன்னா சொல்றே?” கொஞ்சமும் நம்ப முடியாதவளாய்க் கேட்டாள்.

    அவன் மௌனம் சாதிக்க,

    ‘அண்ணா…ஒரு காலத்துல நான் எது கேட்டாலும் தட்டாமச் செய்வே!…எனக்காக எதையும் விட்டுக் குடுப்பே!….உனக்கு ஞாபகம் இருக்கா?..பள்ளிக் கூடத்துல டீச்சர் வீட்டுப்பாடம் செய்யாமப் போனா அடிப்பாங்கன்னு ராத்திரி பூராவும் உட்கார்ந்து என்னோட வீட்டுப்பாடங்களை கையொடிய எழுதிக் குடுத்திட்டு…காலைல உன்னோட டீச்சர்கிட்டப் போய் உன் வீட்டுப்பாடத்தை எழுதாதற்காக நீ அடி வாங்கிக்குவியே!…அந்த அண்ணனா? இப்ப நான் கேட்டும் மறுப்பது?”

    ‘அய்யோ…தேவி…இப்படியெல்லாம் பேசாதம்மா!”

    ‘அண்ணா…நான் உன்னை விட்டா வேற யாருகிட்டண்ணா போய்க் கேட்பேன்?… எனக்கு உன்னையத் தவிர வேற யாரைண்ணா தெரியும்?”

    அவள் அழுவதையும், அவன் சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடுவதையும்  அந்த வழியே நடந்து சென்ற இருவர; வித்தியாசமாய்ப் பார்த்தபடியே சென்றனர்.

    ‘ஆண்டவா…நான் என்ன சொல்லி இவளுக்குப் புரிய வைப்பேன்?…என் தங்கமே….உன் புருஷனுக்கு கிட்னி குடுக்க எனக்கு மனசு இருக்கும்மா… ஆனா…கிட்னிதாம்மா இல்லை!” மனசுக்குள் கதறினான்.

    புத்து நிமிடம் அழுது ஓய்ந்தவள், ‘சரிண்ணா பரவாயில்லைண்ணா… எனக்கு வேணா என் புருஷன் உயிர் பெரிசா இருக்கலாம்…உனக்கு உன் உயிர்தானே பெரிசு!… ஹூம்…என் கிட்னி வேற பொருந்தாமப் போச்சு… இல்லேன்னா…நானே கொடுத்திருப்பேன்… இப்படி கண்டவங்க கிட்டக் கெஞ்சிட்டிருக்கற நிலைமையே வந்திருக்காது!”

    ‘தே…வீ…” அவன் கத்திய கத்தலில் அந்த வராண்டாவில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தவர;கள் திடுக்கிட்டுக் திரும்பினர;.

    ‘என்ன…என்ன வார;த்தை சொல்லிட்டே தேவி…என்னையா கண்டவங்கன்னு சொல்றே?..நான் உன்னோட அண்ணன்மா!…உனக்காக உடல்…பொருள்…ஆவி…அத்தனையையும் குடுக்கத் தயங்காத அண்ணன்மா!”

    ‘ஆனா..கிட்னி மட்டும் தரமாட்டே!….அப்படித்தானே?”

    சுந்தர; நொந்து போனான். ‘நான் என்ன செய்வேன்?…எப்படி இவகிட்ட என்னோட நிலைமைச் சொல்வேன்?” தவித்தான்.

    சில நிமிட அமைதிக்குப் பின், நீண்ட பெருமூச்சு விட்ட தேவி, ‘எனக்கு ஏண்ணா கல்யாணம் பண்ணி வெச்சே?…நானா வந்து உன்கிட்ட ‘எனக்குக் கல்யாணம் பண்ணி வை”ன்னு கேட்டேன்?…நீயே பாத்து இப்படியொரு நோயாளிப் புருஷனை என் தலைல கட்டி வெச்சிட்டு…இப்ப ‘எனக்கென்ன?…நீயாச்சு…உன் புருஷனாச்சு”ன்னுட்டு திரும்பிக்கிட்டுப் போறியே…இது நியாயமா?”

    ‘தேவி…வேண்டாம்மா…இப்படி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசாதம்மா”

    ‘பேசுவேன்..நான் பேசுவேன்…என்னால பொறுக்க முடியலை…அதான் பேசறேன்…எல்லோரோட சுயரூபமும் இப்பத்தான் தெரியுது!…’தங்கச்சி…தங்கச்சி”ன்னு தேனொழுகப் பேச மட்டும் தெரியும்!…அதே அவளோட தாலிக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது உதவ மனசு வராது!…பாசமாவது மண்ணாங்கட்டியாவது…எல்லாம் வேஷம்…மோசம்…”

    தன் கணவன் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் எந்தப் பெண்ணுமே இப்படித்தான் பேசுவாள்!…அதற்கு தேவி ஒன்றும் விதி விலக்கல்ல, என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டதால் சுந்தருக்கு அவள் மேல் போபமே சிறிதும் தோன்றவில்லை…மாறாய் பரிதாபம்தான் ஏற்பட்டது.  இந்தச் சூழ்நிலையில் அவளுடன் மேலும் மேலும் பேசுவது அவள் கோபத்தை இன்னும் அதிகரித்து இதை விடத் தாறுமாறாய்ப் பேச வைத்துவிடும் என்பதை உணர;ந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

    ‘போறான் பாரு!…நான் பேசிக்கிட்டேயிருக்கேன் போறான் பாரு!…நான் எக்கேடு கெட்டா இவனுக்கென்ன?…நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு நின்னா பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவும் இல்லையா?”

    பீறிட்டு வந்த அழுகையை பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கியவாறே ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினான் சுந்தர;.

    தொடரும்

    Share
  • ரௌத்திரம் பழகு

     
    கோதை வெங்கடேஷ் 

    அதிகாலையில் அடிக்கும் அலாரம் மீது ஒரு கோபம்.
    அடிக்காதிருந்து  விட்ட அலாரம் மீது அதை விட கோபம்.

    பொறுக்க முடியாது வாயை சுட்டு விடும் உணவென்றால் ஒரு கோபம்.
    சூடு இல்லாத உணவென்றால் அதை விட கோபம்.

    வார்த்தைகளை வைப்புநிதியில் சேமித்து,உடைக்க தயங்குபவர்கள் மீதொரு கோபம்.
    ஓயாது ,பெருமழையென கொட்டி தீர்ப்பவர்கள் மீதும் கோபம்.

    பார்த்து,சிரித்து,வழியும் எதிர்ப் பால் மீதொரு கோபம்.
    பார்க்காமல்,சிரிக்காமல்,வழியாமல் சென்று விட்டால் அதிலும் கோபம்.

    கோபமென்று அறிந்தும் சமாதனப்படுத்த முயலாதவர்கள் மீதொரு கோபம்.
    ஒற்றை புன்னகையால் ,என் கோபத்தை குறை ஆயுளில் கொன்று விட்டதில் கூட ஒரு சிறு கோபம்.

    அழையா விருந்தாளியாய்  என்னோடு வந்து ,என்  நெருங்கிய சிநேகம் என  
    சுயஅறிமுகம் செய்து கொள்ளும் இந்த கோபத்தின் மீதே ஒரு கோபம்.

    படத்துக்கு நன்றி

    http://www.mindful.org/in-love-and-relationships/working-with-emotions/the-hidden-treasure-of-anger

    Share
  • பணத்துக்கு என்ன செய்வது “

    செழியன்
     

    உழைக்க  மனமுண்டு .

    உடைக்க மரமுண்டு.
    அவனுக்கு கூலி ..ஐம்பது  ரூபா  நோட்டு  இரண்டு .
    அவன் வாழ்வது ……
    ஐந்து  ஜீவன்களோடு .
    கட்டிலில்  மூன்று
    தொட்டிலில்  ஒன்று .
    எட்டிபார்க்கிறது .
     

     

    கட்டியவள்…தங்க ..                                       
    கட்டி’ யவள் .அவனுக்கு .
    கஞ்சி குடித்தபின்
    எஞ்சி  இருப்பது
    நெஞ்சு விடும்
    நிறைவான மூச்சே !
    நிறைவான  உணவு
    அவன் வாழ்வில்
    வளையாத  கேள்விக்குறி  ஒன்று
    வந்தாலே  உண்டு .
    அவன்  பல்லவியோ……
    பணத்திற்கு   என்ன செய்வது…
    அவன் ..
    வெட்டிய   மரம்   பல.

    வெட்டா  மரமும்  உள
    வறுமை  எனும்  மரத்தை
    வாழ்வெனும்  கோடாலியால்
    தினமும் வெட்டுகிறான்
    தின கூலி  பேசி .
    வயது  ஏறுகிறது ..
    வாங்குபவன்  கூலி  ஏறவில்லை
    வெட்டிய பின் மரம் தளைகிறது
    வெட்டியவன்  வாழ்வு  தளையவில்லை
    தட்டி கேட் க
    இவனால்  முடியவில்லை .
    எட்டியே  நிற்கிறான் .
    கட்டி கொள்ள என்று
    உடுப்பு  என்று  ஒன்று  இவன்
    இடுப்பிற்கு  உண்டு .
    அதுவும் கிழிந்தால் ….
    அதையும்  கோவணமாக்குகிறான்..
    அவன் பெற்ற
    அருஞ் செல்வங்களுக்கு ..
    அவன் பல்லவியோ ….
    பணத்துக்கு  என்ன  செய்வது?

    அவன் ….
    இரவிற்கு  குடிசை  உண்டு
    குடிசைக்கு  கூரைஉண்டு
    கூரையில்  பலகணிகள்  பலவுண்டு
    அவைகளில்  சந்திரனின்  ஒளியுண்டு
    நாட்டிலே …பவர்  கட்   உண்டு .
    இதனால்
    பலருக்கு  சங்கட முண்டு
    இவனுக்கு ஏது…அந்த சங்கடம் .
    சிரிக்க மனமுண்டு ..
    சேமிக்க  வறுமை உண்டு
    செலவுக்கு  உடல் உண்டு
    வரவுக்கு குழந்தை  உண்டு
    வந்ததற்கு  நோயுண்டு
    நோய்க்கு மருந்து  உண்டு .
    மருந்துக்கு  பணமுண்டோ ?
    பல்லவிதானே உண்டு.
    அவன் பல்லவி ….
    பணத்துக்கு என்ன செய்வது ?
     

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (2)

     

    இன்னம்பூரான்

    ‘மேலும் சொல்ல இருக்கிறது’ என்ற எதிரொலி என் காதில் விழ ஒரு வருடம் ஆகி விட்டது. ஆம். வயது ஆக ஆக காது மந்தம். சரி. விஷயத்துக்கு வருவோம்.

    முதற்க்கண்ணாக, சென்னை பொது ஆஸ்பத்திரிக்கும், மதராஸ் மருத்துவக்கல்லூரிக்கும் நன்றி சொல்லவேண்டும். அவற்றின் வரலாறு எழுதிய டாக்டர் சுப்பா ரெட்டி காரு என் நண்பர். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு அது ஒரு தர்ம ஆஸ்பத்திரியாக பணி புரிகிறது. சேவையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. எக்கச்சக்கமான தவறுகள் நடந்து கொண்டு வருகின்றன. அபார சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. டா. ரங்காச்சாரி, டா. ராஜம், டா. பி.ராமமூர்த்தி போன்றோர் செய்த அருந்தொண்டுகள் நிகரற்றவை. அவர்களை பற்றி, பிறகு ஒரு நாள், வாசகர்கள் விரும்பினால், பேசலாம். ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது எப்படி என்று கூட நாம் கலந்தாலோசிக்கலாம்.

    மருத்துவ சேவை இடத்திற்கு இடம் வித்தியாசப்படுகிறது. இலவச மருத்துவ சேவையின் தரம் அபாயகரமாகக் குறைந்து விட்டதால், இந்தியாவில் மருத்துவம் அளிக்கும் கம்பெனிகளும், காப்புரிமை கழகங்களும் செல்வம் கொழிக்கின்றன. அமெரிக்காவில் யானை வாங்கலாம். டாக்டர்களிடம் போக முடியாது. அத்தனை செலவாகும். சர்வம் கலவரப்படுத்தும் காப்புரிமை அல்லது அரோஹரா. உழக்கு தவறினாலும் வழக்கு. இங்கிலாந்தில் மக்கள் நலம் பேணுவதை அடித்தளமாக வைத்து, அனூரின் பீவான், பார்பாரா கேஸில் போன்ற தீர்க்கதரிசிகள் அமைத்த நேஷனல் ஹெல்த் செர்வீஸ் பிரஜைகள் யாவருக்கும் வியக்கத்தக்க வகையில் இலவச மருத்துவப்பணி செய்து வருகிறது, அரை நூற்றாண்டுக்கு மேல். குற்றம் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், இது ஒரு மாடல் என்பதில் ஐயமில்லை. மக்களுக்குப் புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை, கூவி, கூவி இலவசமாக வழங்குவது இங்கு நல்லதொரு பணி. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.

    நான் டாக்டரல்ல. வாழ்நாள் முழுதும் குடும்பத்திலும், சுற்றத்திலும் உடல் நல சிக்கல்களுடன் போராடவேண்டியிருந்தது. கிடைத்தப் படிப்பினைகள் பல. உகந்த முறையில் அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நான் எழுதுவதெல்லாம் மருத்துவ வேத வாக்கு அல்ல. விழிப்புணர்ச்சி நாடுமொரு பாதை மட்டுமே என்று எச்சரிக்கை செய்வது என் கடமை. இது ஏதோ என் மனநிறைவுக்காக மட்டும் எழுதப்படும் தொடரும் அல்ல. வாசகர்களுடன் அளவளாவி, வினவிய வினாக்களுக்கு விடை அளித்து, ஆதாரமுள்ள ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அறிவுரைகள பகிர்ந்து கொண்டு இயங்க விழையும் பரஸ்பர சம்பாஷணை மையம். அந்த பணி திறன்பட நடப்பதற்காக உள்ள திட்டம்:

        எந்த கேள்வி எழுந்தாலும் பண்புடன் அதற்கான விடை, தேடல், பகிர்வு, பின்னூட்டங்கள் மூலம்.

        தனி மடல்களில் பிரத்யேக பதில் விரும்பினால், அதை அளிப்பது. வல்லமை ஆசிரியருக்கு அனுப்பலாம். ரகசியம் காப்பாற்றப்படும்.

        அடுத்த பகுதி என்ன என்றும், அது பற்றிய தொடர்புகளையும், முந்திய கட்டுரையில் அளிப்பது. அவரவர் வினா எழுப்ப அது உதவும்.

        தவிர்க்கமுடியாத இடங்களில், தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிலத்திலும் எழுதுவது. நமது இலக்கு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தனித்தமிழ் அல்ல.

        வல்லமை ஆசிரியரும், வாசகர்களும் அளிக்கும் ஆலோசனைகளை முடிந்தவரை ஏற்று நடப்பது.

    இன்றைய விஷயம்: ‘டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரைச் சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும்.’.

    மருத்துவம் செய்ய டாக்டருக்கு உறுதுணை: நாம் கொடுக்கும் எஃப்.ஐ. ஆர். தற்செயலாக, இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நூல்: Dr.Tom Smith (2007) How to Get the Best from Your Doctor: Oxford: ISIS Publishing Ltd. டாக்டருக்கும் அவரை நாடுவோருக்கும் இருக்கும்/இருக்கவேண்டிய உறவை பற்றிய அருமையான நூல், இது. இதிலிருந்து பல விஷயங்களை கறக்கவேண்டியிருக்கிறது. அவ்வவ்பொழுது பார்க்கலாம். அவரிடமிருந்து ஒரு குறிப்பு:  “ நாங்கள் என்றும் மறவாத மருத்துவக்கல்லூரி பாடம், நோயாளிகளுடன் டாக்டர் எப்படி உறவாடவேண்டும் என்பதை பற்றியது… துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஒரு டாக்டர். ஷெர்லாக் ஹோம்ஸுக்கு லாஜிக் ஒன்றே குறி; உள்ளுணர்வு, உணர்ச்சி வசம் ஆகியவற்றிற்கு இடம் கிடையாது. மருத்துவமும் அப்படித்தான். அதற்கான மும்மந்திரங்கள்: PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” இங்கிலாந்தில் பயன்படும் வகையில் அவர் பல விஷயங்களை அருமையாகவும், நுட்பமாகவும் அவர் எழுதியிருக்கிறார். நமக்கு வேண்டியதை, ஒவ்வொரு பதிவிலும், தவணை முறையில், எழுதுவதாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதே மாதிரி, என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மாதிரிக்கு ஒன்று: உசிலம்பட்டியில் சின்ன தாலுக்கா ஆஸ்பத்திரி, அந்த காலத்தில். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து, ‘டாக்டர்! முழங்காலில் சிராய்த்துவிட்டது. டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவுங்கள்’ என்றார். டாக்டரும் வினயமாக அதை செய்தார். ஒரே எரிச்சல் என்று முனகினார் காவல் தெய்வம். மருத்துவ சிறு தெய்வம், ‘இதற்கு மருந்து வேறே. நீங்கள் கேட்டதால், டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவினேன்’ என்றதே பார்க்கலாம்! படிப்பினை நம்பர் 1&2.

    இன்று: எஃப்.ஐ. ஆர். பற்றி டா. டாம் ஸ்மித்.

    ‘வலிக்கிறது’ என்று வருகிறார், ஒரு நோயாளி: எங்கே வலிக்கிறது? வலியின் தீவிரம் என்ன? வந்து, வந்து போகிறதா? இல்லை ‘யதாஸ்தானம் பிரதிஷ்டாபயமி’ (வந்துவிட்டேன்; நகரமாட்டேன் என்ற அடம்) என்று வலிக்கிறதா? மந்தமாக நீடித்த வலியா? தாங்கமுடியாத வலியா? அது பகல்/இரவு பேதம் பார்க்கிறதா? எப்போது வலிக்கிறது ~உடற்பயிற்சி/ உணவு உண்ட போது/அசைந்தால்? நீங்களே என்ன செய்தால் வலி குறைகிறது? கத்தி குத்தினமாதிரி வலிக்கிறதா இல்லை தடியால் அடித்த மாதிரி வலிக்கிறதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு பிறகு உங்கள் டாக்டர் மருந்து கொடுத்தாரா அல்லது வலி என்றவுடன் க்ரோசின் அல்லது இபுப்ருஃபென் (Crocin or Ibubrufen) கொடுத்து விரட்டி விட்டு, ‘நெக்ஸ்ட்’ என்று அடுத்தவரின் தொண்டையை பார்க்கப்போய்விட்டாரா?

    இந்த வினாத்தொடரை தலைவலி, வயிற்று வலி, இதய வலி என்று கேட்டுப்பார்த்தால், நான் சொல்வது புரியும்: (அதாவது) டாக்டரிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது என்பது பற்றி ஒத்திகை நடத்திக்கொள்ளுங்கள்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (3) மன அழுத்தத்தை பற்றி. முன்கூட்டியே கேள்விகள் கேட்கலாம். அதற்கு உதவ, சில இணைய தள தொடர்புகள் இங்கே:

    Stress management: International Stress Management Association: www.isma.org.uk

    Stress at work: www.hse.gov.uk/stress

    Saneline: www.sane.org.uk

     

    Share