கவிநயா

 

‘லலிதா சஹஸ்ரநாமத்தில்’ வரும் அன்னையின் அற்புதமான நாமங்களில் ஒன்று, ஸ்வபாவ மதுரா.

 ஸ்வபாவம், அல்லது தமிழில் சுபாவம். சுபாவம் என்றால் இயல்பு. மதுரம் என்றால் இனிமை. இயல்பிலேயே இனிமையானவள் என்று பொருள்.

 

சாதாரணமாக, ஒருவரை இனிமையானவர் என்று எதை வைத்துச் சொல்கிறோம்? பெரும்பாலும் அவர் நம்முடன் பழகும் விதத்தை வைத்துத்தான். ஒருவருடைய நற்குணங்களாலும், நற்பண்புகளாலும், நன்னடைத்தயாலும், இனிய பேச்சாலும்தான் அவருடைய பழகும் விதம் அமைகிறது.

 

முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவள் என்று சொன்னாலும், பக்தர் மனதில் நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்பவள் அன்னை பராசக்தி. அவளுடைய அன்பு எப்பேர்ப்பட்டது! அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

 

அபிராமி பட்டர் சொல்கிறார், “ஆசைக்கடலில் அகப்பட்டு, அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன்!” என்று. அன்னையின் அருள் இருந்தால்தான் அவளை நினைப்பதே, பக்தி செய்வதே, சாத்தியம் என்று ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் சொல்லுவார். அதே போல பட்டரும், “ஆசைக் கடலில் அகப்பட்டு எப்படியெல்லாமோ உழன்று கொண்டிருந்த என்னை, உன் வாசனை மிகுந்த தாமரைப் பாதங்களை என் தலையில் வைத்து, நீயாக வந்து என்னை ஆட் கொண்டு விட்டாயே! அத்தகைய உன்னுடைய அன்பை என்னவென்று சொல்லுவேன்!” என்கிறார்.

 

தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனானவன், யோகத்தில் நிலைத்திருந்த மகேஸ்வரனின் மீது பாணங்களை விட்டு, அவர் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனான். அவன் மனைவியாகிய இரதிதேவியின் கண்ணீரைக் காணச் சகியாத தேவி, மன்மதன் அனங்கனாகி (உருவமில்லாதவனாய்), மனைவியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தவனாய் இருப்பான் என்று வரம் அளித்தாள். “சதாசிவ பதிவ்ரதா” என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் போற்றப்படும் தேவி, கணவனால் எரிக்கப்பட்டவன் என்பதால், அவரையும் மீறாமல், அதே சமயம் தன் குழந்தையான இரதிதேவியின் மனமும் திருப்தியுறும் வண்ணம் மிகுந்த கருணையுடன் நடந்து கொண்டாள் என்றால், அவளின் இனிமைக்கு இணையேது?

 

சிறிதே பேசினாலும், நிறையப் பேசினாலும், வார்த்தைகளின் இனிமை மிகவும் முக்கியம் அல்லவா? வார்த்தைகளில் இனிமை எப்படி வரும்? நல்லதையே பேசும்போது, பிறரைப் புண்படுத்தா வண்ணம் பேசும்போதுதான் பேச்சில் இனிமை வரும்.

 

அவளோ ‘வாக் அதீச்வரி”, வாக்கிற்கெல்லாம் முதன்மையானவள்; தலைவி.

 

அவள் குரல் எப்படி இருக்கிறதாம்? சௌந்தர்ய லஹரியில் ஒரு சுலோகம் வருகிறது… அன்னைக்கு முன்னால் அமர்ந்து வீணை மீட்டிக் கொண்டிருக்கும் வாணி, அன்னையின் பதியான சிவபெருமானின் பெருமைகளை இனிமையாக இசை கூட்டிப் பாடுகிறாள். பதியின் புகழைக் கேட்டுக் கொண்டு சரஸ்வதியின் கானத்தில் திளைத்திருக்கிறாள், அன்னை. வாணிகானம் முடிந்த பிறகு, அன்னை, வாணியைப் பாராட்டிப் பேசத் தொடங்குகிறாள். அவள் குரலின் இனிமையில் சொக்கி, தன் வீணையின் நாதமும் ஒரு நாதமா என வெட்கி, வீணையைப் பார்க்கக் கூச்சப்பட்டு, அதனை உறைக்குள் போட்டு மூடி கண்படாத தொலைவில் வைத்து விடுகிறாளாம், வாணி!

 

அவளுடைய சொல்லின் இனிமையைப் பற்றி, பலப்பலவாய்ப் போற்றிப் புகழ்கிறார் அபிராமி பட்டரும். “பண் அளிக்கும் சொல் பரிமள யாமைளப் பைங்கிளி” என்றும், “இன்சொல் திரிபுர சுந்தரி” என்றும், “பாலினும் சொல் இனியாய்” என்றும், “பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியாள்” என்றும்…

 

சிலர் தனக்குச் சமமானவர்களிடமும், தனக்கு மேலானவர்களிடமும், அன்பும் மரியாதையும் செலுத்துவார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் தம்மை விடத் தாழ்ந்தவர் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டால், அவரை மதிக்கவே மாட்டார்கள். தம்மை விடத் தாழ்ந்தவராக யாரையும் நினைப்பதே தவறு, அதிலும் அதற்காக அவர்களை மதிக்காமல் இருப்பதோ அதை விடப் பெருந் தவறு. நற்பண்பு என்பது எப்போதும், எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில் இருக்கிறது. ஆளுக்குத் தகுந்தாற் போல் பழகுவதற்குப் பெயர் பண்பே அல்ல.

 

அன்னை பராசக்தி எப்படிப்பட்டவள்? ஞானியர்க்கு மட்டுமே தன்னைத் தெரியப்படுத்துபவள் அல்ல, அவள். அவள், “ஆபால கோப விதிதா”! எளியவர்களுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கும், இடையர்களுக்கும் கூட அடைவதற்கு எளியவளாய் இருப்பவள். பட்டரும், “நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய். நின்னை பேயேன் அறிவும் அறிவு தந்தாய். என்ன பேறு பெற்றேன்” என்கிறார். “என்னைப் போன்ற நாயினும் கீழானவனுக்குக் கூட அருள் செய்தாயே! உன்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு இந்தப் பேயேனுக்கு அருள் தந்தாயே!” என்று போற்றிப் பரவுகிறார்.

 

மேலும், “உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு படைத்தனை. நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை. சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே” என்பார். “எனக்காக இத்தனையும் செய்தாயே. உன் அன்பிற்கு எல்லை ஏது” என்று பரவசம் அடைகிறார்.

 

அவளுடைய இனிமை இன்னும் எப்படி விரிகிறது பாருங்கள். சிவனும் அவளும் பாதிப் பாதி. பதியோடு பாதியாகி அர்த்த நாரியானவள், அவள். காமனைக் கண்ணால் எரித்த கண்ணில் பாதி இவளுடையது! மார்க்கண்டேயனைக் காப்பாற்றுவதற்காக, கூற்றுவனைக் காலால் உதைத்த இடது கால் இவளுடையது! இப்படியெல்லாம் இருந்தும் எல்லா ‘credit –ஐயும்’ பரமசிவனுக்கே கொடுத்து விட்டாள் என்கிறார் ஸ்ரீநீலகண்ட தீக்ஷிதர்!

 

அது மட்டுமா? சிவன் அவளுக்குப் பாதி உடலைத் தந்ததாகவேதானே எப்போதும் சொல்கிறோம். அவளும் தன் பாதியைத் தந்ததால் அல்லவா இருவரும் சேர்ந்து அர்த்தநாரியானார்கள்! இருந்தாலும் அந்தப் புகழையும் பதிக்கே தந்து விட்டாள். அந்த அளவிற்கு ச்வீட்டானவள் அம்மா!

 

அவளே ‘அவ்யாஜ கருணாமூர்த்தி”. காரணமின்றி கருணை செய்பவள். ஆயிரக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துப் பணி செய்தாலும், ஒரு இலையும் தண்ணீரும் மட்டும் வைத்துப் பூசித்தாலும், பக்தியுடன், உள்ளன்புடன் பூசித்தால், அவளுக்கு எல்லாமே ஒன்றுதான்.

 

அன்னையின் அழகின், தோற்றத்தின், கடைக்கண் பார்வையின் சக்தியின், அவள் அருளின்,  இனிமைகளை, அவளின் மகிமைகளைப் பற்றிச் சொல்ல ஒரு ‘சௌந்தர்ய லஹரியே’ இருக்கிறது!

 

மதுரமானவளே என்பதற்கு இனிமையானவளே என்றும் பொருள் கொள்ளலாம், மதுரையில் மீனாக்ஷியாக வசிப்பவளே என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறது அமரர் ‘அண்ணா’ எழுதிய ‘லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம்’. அவளைப் பற்றி இன்னும், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு அபிராமி அந்தாதியில் இதே பொருள் (மதுரம் + மதுரை) உள்ள ஒரு மதுரமான பாடலைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம்:

 

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண்
களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும்,
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

 

“அபிராமி அன்னையே, உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் சூழ்ந்த இடத்தில் வசிக்கின்றவளே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் – இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.” –கவியரசர் கண்ணதாசன்.

 

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!

 

அன்புடன்

கவிநயா

 படத்திற்கு நன்றி :

http://santhipriyaspages.blogspot.in/2010/09/thirumeeyachur-sree-lalithambigai.html

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஸ்வபாவ மதுரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.