கால இயந்திரம்-(பாகம்-1)

பர்வத வர்த்தினி

 

 மேன்! நிஜமாவா சொல்றே? உங்க மாமா சயின்டிஸ்டா?” 

“ஆமாம் சாரு. அவரு ஒரு சயின்டிஸ்டு தான். ஆனா பெரிசா சொல்லும்படி இதுவரைக்கும் ஒண்ணும் கண்டுபிடிச்சதில்லை.ஏகப்பட்ட புக்ஸுக்கும் நிறைய தட்டுமுட்டு சாமானுக்கும் மத்தியிலே உக்காந்து ஏதோ செஞ்சிட்டு இருப்பாரு. ஏதாவது கேட்டா அவர் சொல்ற பதிலும் நமக்கு புரியாது. உருப்படியா வேலை செஞ்சு காசு சம்பாதிக்கற எண்ணமும் இல்லை. நல்லவேளை அவரு பண்ண ஒரே நல்ல காரியம் கல்யாணம் எதுவும் பண்ணிக்கலை. இல்லைன்னா இப்படி இவரு பொறுப்பில்லாம இருக்கறதுக்கு ரொம்பவே கஷ்டமா போயிருக்கும்.” 

“என்ன சொல்றே சித்து! அப்போ அவருடைய தினசரி செலவுக்கு என்ன செய்யறாரு?” 

“அதுவா… எங்க தாத்தா தஞ்சாவூர்லே நிறைய நிலபுலத்துக்கு சொந்தக்காரரா இருந்தாரு. அந்த நிலத்தோட குத்தகைப் பணம் மாமாவுக்கு  மாசம் தவறாம வந்துடும். அதுல தான் அவருடைய தினசரி செலவுக்கும் ஆராய்ச்சிக்கும் செலவு பண்ணுவாரு. அப்படியும் ஏதோ ஆராய்ச்சிக்குன்னு சொல்லி பாதிக்கு மேலே நிலத்தை மாமா வித்துட்டாரு. 

“நீ சொல்றதெல்லாம் பாக்கும் போது உங்க மாமாவை பாக்க எனக்கு ஆசையா இருக்கு, சித்து.” 

“அதுக்கென்ன, வர்ற சனிக்கிழமை போய் பாக்கலாம். ஆனா ரொம்ப எதிர்ப்பார்ப்போட வராதே, நீ ஓவரா நினைக்கற அளவுக்கு ஒண்ணும் இருக்காது.” 

“சரி சித்து. சனிக்கிழமை அன்னிக்கு போகலாம். சரி. நான் கிளம்பறேன். டைம் ஆகுது. பை.” என்று சொல்லி விடை பெற்றாள் சாரு. 

சாருலதா, சித்தார்த் – இருவரும் ஒரே கல்லூரியில் பிஸினஸ் மானேஜ்மண்ட் படித்து வருகிறார்கள். தினமும் உணவு இடைவேளையின்போது அரட்டை அடிப்பது அவர்களது வழக்கம். அன்றைக்கும் ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கும்போது பேச்சு விஞ்ஞானிகளைப் பற்றி திரும்பியது. அப்போது அவர்கள் பேசியது தான் நாம் மேலே கண்டது. 

சாருலதா அதீதகற்பனை விஷய்களில் அதிக ஆர்வம் கொண்டவள். படிப்பில் சுட்டியாக விளங்கிய போதும் நேரம் கிடைக்கும் போது நிறைய திரைப்படங்கள் குறிப்பாக இந்த ஃபேண்டஸி திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். புத்தகங்கள் மற்றும் நாவல்கள் படிப்பதும் அவளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அவளுடைய புத்தக ஆவலுக்கு வித்திட்டதே அவளுடைய பாட்டிதான். அவள் எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் விடுமுறைக்காக தன் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள். எப்போதும் மாமாவின் மகனும் மகளும் மற்றும் சித்தியின் மகனும் விடுமுறைக்கு வருவார்கள். அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பாள். அல்லது ஊரில் உள்ள வெயிலெல்லாம் இவர்கள் தலையில் விழும்படி ஆளுக்கு ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு  ஓட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த வருடம் மாமா குடும்பத்தினர் மாமியின் தம்பி திருமணத்திற்காக அவர்களுடைய வீட்டிற்கு சென்று விட்டார்கள், சித்தியின் மகனோ ஏதோ சம்மர் கிளாஸ் சேர்ந்திருந்ததால் பாட்டி வீட்டிற்கு வரவில்லை. 

எவ்வளவு தான் பாட்டி தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு மிகவும் போர் அடித்தது. போர் அடிக்குது பாட்டி என்று புலம்பிய தன் பேத்தியைப் பார்த்து அவளது பாட்டி கெளசல்யா ஒரு புத்தகத்தை அவள் முன் நீட்டினாள். “சாரு, புத்தகம் படிக்க உனக்கு பிடிக்குமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனா இந்த புத்தகம் உன்னை அப்படியே கட்டிப் போட்டுடும். தொடரா வந்திட்டிருந்த போது நான் ஒவ்வொரு பகுதியும் எடுத்து வெச்சு பைண்ட் பண்ணி வெச்சிருக்கேன்” என்று சொல்லி கொடுத்தாள். 

‘பொன்னியின் செல்வன்’ என்று முதல் பக்கத்தில் போட்டிருந்தது. ஏதோ பாட்டி மனம் நோகக்கூடாது என்று தான் சாரு அந்தப் புத்தகத்தைப் படிக்கத் துவங்கினாள். ஆனால் பக்கங்கள் திருப்ப திருப்ப அவளுக்கு அதில் நிரம்ப ஆர்வம் ஏற்பட்டது. முழுவதுமாக அது அவளை ஆட்கொண்டது. எங்கு சென்றாலும் பொன்னியின் செல்வன் கையுமாகவே சென்றாள். இரவில் வெகு நேரம் படித்தாள். விடியலில் சீக்கிரம் எழுந்து படித்தாள். அவள் பள்ளித் தேர்விற்கு கூட அப்படி படித்ததில்லை. 5 பகுதிகளையும் 5 நாட்களில் படித்து முடித்தாள். அதன் பின்பு இருந்த எல்லா தினங்களிலும் பாட்டியுடன் அந்த நாவலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். அவளது ஆர்வத்தைக் கண்டு அவளது பாட்டியும் அந்தப் புத்தகத்தை அவளுக்கே கொடுத்து விட்டாள். அதன் பின்பு பற்பல நாவல்களையும் புத்தகங்களையும் தேடி தேடி படிப்பதே அவளுக்கு பொழுதுபோக்கு ஆனது. இருந்தும் பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய தாக்கத்தை வேறெந்த நாவலும் அவளுக்குள் ஏற்படுத்த இயலவில்லை. 

அடடே! பொன்னியின் செல்வன் மீது சாருவிற்கு இருந்த ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொண்டு விட்டதோ! நாம் தற்சமயம் நடக்கும் கதைக்கு வருவோம். 

அன்று கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் சாருவின் மனம் சித்தார்த்தின் மாமாவாகிய அந்த விஞ்ஞானி பற்றியே இருந்தது. ஒரு விஞ்ஞானியை இத்தனை எளிதில் பார்க்கமுடியும் என்பதே அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் சினிமாவில் மட்டுமே விஞ்ஞானிகளை கண்டிருக்கிறாள். அவரிடம் என்ன பேசுவது என்ன கேட்பது என்று யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள். 

எப்போதும் போல் தினசரி வேலைகளை முடித்துவிட்டு தன் கல்லூரி பாடத்தையும் படித்து விட்டு டிவியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இரவு தன் படுக்கையில் வந்து படுத்தாள். இன்னமும் அவள் மனம் விஞ்ஞானியை சுற்றியே இருந்தது. 

ன்று சனிக்கிழமை. கல்லூரிக்கு விடுமுறை. சித்து சாருவை அழைத்துச் செல்ல அவள் வீட்டிற்கு வந்திருந்தான். இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி சித்தார்த்தின் மாமா வீட்டிற்கு சென்றனர். சித்துவின் மாமாவைக் கண்டதும் சாருவிற்கு ஆச்சரியம். உயரமாக நீளமான தலைமுடியுடனும் குறுந்தாடியுடனும் கண்ணாடி அணிந்து கிட்டத்தட்ட எந்திரனில் வந்த  வசீகரனான ரஜினிகாந்த் போல் இருப்பார் என்று எண்ணிய சாருவிற்கு சாதாரண பாண்ட் சட்டை அணிந்து சீராக தலைவாரி நன்கு சவரம் செய்யப்பட்ட முகத்துடன் இருந்த அவரைப் பார்த்ததும் நம்புவது கடினமாக இருந்தது. வயது நாற்பது அல்லது சற்று அதிகமாக இருக்கலாம். ஆழ்ந்து நோக்கும் கண்கள். இவரைப் பார்த்தால் விஞ்ஞானி போல் இல்லையே. எல்லோரையும் போல் சாதாரணமாகத் தான் இருந்தார். அது சரி, நாம் சினிமாவில் தான் விஞ்ஞானிகளைப் பார்த்திருக்கிறோம். சினிமா நமக்கு அப்படியொரு இமேஜ் ஐ தான் கொடுத்திருக்கிறது என்று நினைத்துத் தன்னுள் சிரித்துக் கொண்டாள். இருந்தும் அவரிடம் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் இருந்தது. 

“மாமா, இவள் பேரு சாருலதா. என்னோட காலேஜ்மேட். உங்களைப் பத்தி சொன்னதும், பார்க்கணும்னு ரொம்ப ஆர்வமா கேட்டா. அதான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் சித்தார்த். 

“அப்படியா, வாம்மா உள்ளே வா” என்றார் அவர். 

“வணக்கம் அங்கிள்” என்றவாறே உள்ளே நுழைந்தாள் சாரு. 

இருவருக்கும் குடிக்க குவளைகளில் பழச்சாறு கொடுத்தார். “சொல்லும்மா, என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தே” என்று அன்புடன் விசாரித்தார். 

“நீங்க சயின்டிஸ்ட்னு சித்து சொன்னதுமே எனக்கென்னமோ உங்களைப் பார்க்கணும்னு தோணிடுச்சு. இத்தனைக்கும் எனக்கும் சயின்சுக்கும் ரொம்ப தூரம். சயின்ஸ் படிக்க பயந்தே நான் ப்ளஸ் டூ’ல காமர்ஸ் க்ரூப் எடுத்தேன்” என்று பற்கள் தெரிய பளீரென சிரித்தாள். கிருஷ்ணசாமியும் அவருடன் சேர்ந்து சிரித்தார். மேலும் அவள், “என்னமோ ஒரு உந்துதல், உங்களைப் பார்த்து நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு வந்தேன்.  ஆனால் உங்களுக்கு விருப்பமிருந்தா மட்டும் சொல்லுங்க அங்கிள். நான் கட்டாயப்படுத்தலை” என்றாள்.  

சாருவின் பேச்சு கிருஷ்ணசாமிக்குப் பிடித்திருந்தது. “அதுக்கென்னம்மா, கண்டிப்பா சொல்றேன் இப்போ…” என்று தொடங்கியவரை சித்து பாதியில் நிறுத்தினான். “மாமா, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் ஒரு சின்ன வேலையை முடிச்சுட்டு ஒரு மணி நேரத்திலே வந்து சேர்ந்துடறேன்” என்றான். 

“என்ன சித்து? முக்கியமான வேலையா?” என்று கேட்டாள் சாரு. 

“ஆமாம் சாரு. இன்னிக்கு விட்டா ஒரு வாரத்துக்கு ஒண்ணும் பண்ணமுடியாது. நீ பேசிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்” என்றான் சித்து. சரி என்று தலையசைத்தாள் சாரு. 

முகத்தில் ஒரு புன்னகையுடன் “போய்ட்டு வா சித்து” என்றார் கிருஷ்ணசாமி. 

சித்து வெளியே சென்றதும் “இவன் இப்போ எதுக்கு போறான் தெரியுமா? நான் என்னோட ஆராய்ச்சிப் பத்தி பேச ஆரம்பிச்சேன்ல, அதனால தான். சித்துவுக்கு அதுல சுத்தமா உடன்பாடு கிடையாது. சான்ஸ் கிடைச்சா எஸ்கேப் ஆகிடுவான்” என்று சொல்லி சிரித்தார். சாருவும் புன்னகைத்தாள். 

“சரி உன்னை என்னோட லேப்புக்குக் கூட்டிட்டு போறேன் வா” என்ற கிருஷ்ணசாமி ஹாலின் பக்கவாட்டில் இருந்த ஒரு கதவைத் திறந்து வழிகாட்டினார். அவர் முன்னே செல்ல சாரு அவரைத் தொடர்ந்தாள். கதவைத் திறந்ததும் ஒரு சிறிய படிக்கட்டு கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றது. அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு கொடெளன் போல தான் காட்சியளித்தது. ஆனால் அது கொடெளன் அல்ல என்பதற்கு சாட்சியாக நிறைய புத்தகங்கள் இறைந்து கிடந்தன. மேலும் பல சாமான்கள் சுற்றிலும் இருந்தன. அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஏதோ ஒரு பொருள் பெரிய சீலை கொண்டு மறைத்திருந்தது. 

அவள் சுற்றும்முற்றும் பார்க்கையில் “இதுதான் சாரு. என்னோட லேப்  பொதுவா நான் இங்கே யாரையும் அனுமதிக்கறது இல்லை. ஏனோ நீ கேட்டதும் உனக்கு காமிக்கலாம்னு தோணிடுச்சு”. 

“ரொம்ப நன்றி அங்கிள். இப்போ நீங்க என்ன ஆராய்ச்சி பண்றீங்க?” என்று கேட்டாள் சாரு. 

“அதைப் பத்தி உனக்கு நான் கண்டிப்பா சொல்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நீ இங்க பார்க்கறதைப் பத்தியோ நாம பேசறதைப் பத்தியோ யார்கிட்டேயும் சொல்லக்கூடாது. சொல்லமாட்டேன்னு உறுதி தந்தா நாம  தொடர்ந்து பேசலாம்” என்றார். 

“கண்டிப்பா அங்கிள். நிச்சயமா யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்றாள் சாரு. 

“சரிம்மா. நான் இப்போ பண்ணிட்டு இருக்கிற ஆராய்ச்சி கால இயந்திரத்தைப் பத்தினது” என்றார் அவர். 

“கால இயந்திரமா?” என்று கண்களில் ஆச்சரியம் மின்னக் கேட்டாள் சாரு, “யூ மீன் டைம் மெஷின்?” என்றாள் உற்சாகத்துடன். 

“ஆமாம் சாரு. டைம் மெஷின்தான். கிlட்டத்தட்ட 20 வருஷமா இந்த ஆராய்ச்சியைத்தான் பண்ணிட்டு இருக்கேன்.99 சதவீதம் முடிச்சுட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அறையின் ஓரத்தில் சீiலையிட்டு மறைத்திருந்த பொருளுக்கு அருகில் சென்றார். 

“இதோ இதுதான் நான் தயாரிச்சிருக்கற கால இயந்திரம்” என்று சொல்லிக்கொண்டே அந்தச் சீலையை விலக்கினார். 

சாருவின் புருவங்கள் ஆச்சரியத்தால் மேலே சென்றன. ஒரு பெரிய அளவிலான கோழி முட்டை போன்று அதன் வெளித்தோற்றம் இருந்தது. அதன் முன்புறம் கண்ணாடியினால் ஆனது, சில விளக்குகளும் காணப்பட்டன. மேல்புறமும் சில விளக்குகள் இருந்தன. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டு கதவுகள் இருந்தன. கீழே இரண்டு சக்கரங்களும் பின்புறம் இறக்கை போன்ற வடிவமைப்புடனும் இருந்தது. கிருஷ்ணசாமி கதவுகளைத் திறந்து காண்பித்தார். உள்ளே, முன்னால் இரண்டு பின்னால் இரண்டு என நான்கு இருக்கைகள் இருந்தன. ஓட்டுனரின் இருக்கைக்கு எதிரே கார் போன்று ஸ்டீயரிங் இருக்கவில்லை. ஆனால் சில பட்டன்களும் விளக்குகளும் இருந்தன. ஒரு டிவி திரை (screen) போன்ற ஒன்றும் இருந்தது. மேலும் ஒரு திசைகாட்டி. இவையாவும் பொருத்தப்பட்டிருந்தன. 

“வாவ் அங்கிள்! பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. இது எப்படி வேலை செய்யும்? நம்மாலே நிஜமாவே டைம் டிராவல் பண்ண முடியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் சாரு. 

“இது எந்த அளவுக்கு வேலை செய்யும்னு நான் இனிமேல் தான் சோதனை செய்து பார்க்கணும்.  ஆனால் கண்டிப்பா சரியாக வேலை செய்யும்னு நம்பிக்கை இருக்கு. இதற்காக நான் பயன்படுத்தற எரிபொருள் நிலக்கரி. இது எப்படி வேலை செய்யும்னு மட்டும் என்னாலே இப்போ உன்கிட்ட சொல்ல முடியாது. அது ரகசியம். அப்படியே நான் சொன்னாலும் உனக்கு அது புரியாது” என்று சொல்லி சிரித்தார் கிருஷ்ணசாமி. 

சாருவிற்கு அது எப்படி வேலை செய்யும் என்பதில் அக்கறையிருக்கவில்லை. ஆனால் இதைப் பயன்படுத்தி தான் ஒருமுறை கடந்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்று விரும்பத் துவங்கினாள். தன் மனதில் தோன்றியதை கிருஷ்ணசாமியிடமும் கூறினாள். “அங்கிள், நீங்க கோவிச்சுக்கலைன்னா என்னை இதுலே ஏற்றி பழங்காலத்திற்கு அழைச்சுட்டு போவீங்களா?” என்று தயங்கி தயங்கிக் கேட்டாள். 

கிருஷ்ணசாமி சாரு தன்னிடம் இதைத்தான் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்தார். “உனக்கு நம்பிக்கையிருந்தால் நிச்சயம் அழைச்சுட்டுப் போறேன். நானும் இதை சோதனை செய்ய வேண்டியிருக்கு.” 

சாருவிற்கு தலை கால் புரியவில்லை. “தாங்க்ஸ் அங்கிள்! தாங்க்யூ  ஸோ மச்!” என்று சொன்னதையே திருப்பி திருப்பி கூறினாள். 

“சரி. நீ கால இயந்திரத்தில் ஏறிக்கோ” என்று சொல்லிக் கொண்டே கிருஷ்ணசாமி ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்தார். சாருவும் துள்ளிக்குதித்து அவருக்கருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். “பெல்ட் போட்டுக்கோ,சாரு. ஏன்னா நாம போகப் போகிற வேகம் அப்படி” என்று சொல்லிக்கொண்டே ஒரு பச்சை நிற பொத்தானை அழுத்தினார். இத்தனை நேரம் அமைதியாக இருந்த கால இயந்திரம் சட்டென உயிர் பெற்றது. உள்ளே பல வண்ண விளக்குகள் எரிந்தன. கதவுகள் தாமாக மூடி பூட்டிக்கொண்டன. டிவி திரை போல் இருந்த திரையில் வணக்கம் என்று ஒளிர்ந்தது. பின்பு போக வேண்டிய தேதி போக வேண்டிய இடம் என்று இரண்டு கேள்விகள் தோன்றின. 

“சொல்லு சாரு. உனக்கு எந்த காலகட்டத்திற்கு போகணும்? எந்த இடத்துக்கு போகணும்? உன்னோட விருப்பப்படி நாம போகலாம்” என்றார். 

சாருவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று அவள் எண்ணியதே இல்லை. 

“அங்கிள் நாம கி.பி. 969ம் ஆண்டுக்கு போகலாம். போக வேண்டிய இடம் கடம்பூர்” என்று உடனடியாக கூறினாள். 

எந்த காலத்திற்கு என்று கேட்டதும் சற்று யோசிப்பாள் என்று நினைத்த கிருஷ்ணசாமிக்கு அவள் உடனே தீர்க்கமாக சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியம். “அடடே எங்கே எப்போ போகணும்னு ஏற்கனேவே முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டார். 

அவள் புன்னகைத்தபடியே “என் கனவிலும் நினைவிலும் நான் போக விரும்பறது பொன்னியின் செல்வன் காலத்துக்குத்தான். அந்த காலத்துக்குப் போய் என் பேவரிட் காரக்டர் வந்தியத்தேவனைப் பார்க்கணும், அப்புறம் ஆதித்த கரிகாலனை கொன்னது யாருன்னு தெரிஞ்சுக்கணும்” என்று ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் கூறினாள். 

இளமைக் காலத்தில் அவரும் அந்தப் புத்தகத்தை படித்திருந்தபடியால் “சரி உன்னிஷ்டப்படியே போகலாம்” என்றார். 

அந்த திரையின் கீழ் இருந்த கீபோர்டு கொண்டு போக வேண்டிய  காலத்தையும் இடத்தையும் நிரப்பினார் கிருஷ்ணசாமி. பின்பு மற்றுமொரு பெரிய பொத்தானை அழுத்தவும் கால இயந்திரம் இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. அடுத்த வினாடி விர்ரென்ற சத்தத்துடன் கால இயந்திரம் பயணிப்பது சாருவிற்கு தெரிந்தது. கண்ணாடி வழியே ஒன்றும் தெரியவில்லை. மிக வேகமாக இயந்திரம் செல்வது மட்டும் உணர முடிந்தது. வயிறு கலங்குவது போல் இருந்தது. ஒரு வேளை இந்த இயந்திரம் சரியாக வேலை செய்யாமல் போனால் என்னவாகும் என்று திடீரென மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன இருந்தாலும் இப்போது ஏதும் செய்ய முடியாது, என்ன தான் ஆகிறது பார்ப்போமே என்று மற்றுமொரு கணம் தோன்றியது. பயத்தில் இருக்கையை அழுந்த பிடித்தபடி கண்களை மூடிக் கொண்டாள்.

(அடுத்து வரும்)

புகைப்படங்களுக்கு நன்றி:

http://www.clipartguide.com/_pages/0511-0810-1419-0753.html

http://www.xaraxone.com/FeaturedArt/may04/html/08.htm

16 thoughts on “கால இயந்திரம்-(பாகம்-1)

 1. கணக்கு வழக்கு, கணினி பழக்கம். எழுதறுது சயின்ஸ் ஃபிக்‌ஷன். பலே! நான் அனுபவித்துப் படித்தேன்.
  வாழ்த்துக்கள். தமிழில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் இன்னும் சூடு பிடிக்கவில்லை. வெளுத்து வாங்கவும்.

 2. ஆரம்பமே என்னைப் போன்ற “பொன்னியின் செல்வன்”  ரசிகர்களுக்கு 
  ஒரு த்ரில்லிங்கான அனுபவம் !   மிகவும் வித்தியாசமான, அருமையான 
  முயற்சி !  உங்கள்  தொடர்  வெற்றி அடைய வாழ்த்துக்கள் ! 

  வாஞ்சி 

 3. தங்களின் கதை, சரித்திர கதைகளுக்கெல்லாம் துருவ நட்சித்திரம்.
  அன்புள்ள 
  டாக்டர் எல். கைலாசம்

 4. aaha PV… excellent..!!! Charu santhichala illeyanu therinchukka  ippo engalukku padu aarvama irukku..:)

 5. Good start… I could Parvadha alias Charu in the story :).  Let me see how Parvadha a Charu gets to see Vandhiyathevan :).

  All the best.

 6. Thank you everyone for your kind words. All your encouraging words are a real boost to me. 🙂

 7. great concept parvadha.  everybody has a theory on who killed aditya karikalan. yours is a fantastic mode of expressing it.. like others waiting for the next part. BUT as in the picture alwarku adiyaan varaanaannu paarkanum.

 8. அருமை பர்வதா. கற்பனையை காலச் சக்கரத்தில் ஏற்றி பின்னோக்கி செல்கிறீர்கள். நல்ல அனுவபம் எங்களுக்கு ஏற்ப்பட வேண்டுகிறேன். ஒரே ஒரு வருத்தம். நான்கு இருக்கைகள் கொண்ட வண்டியில் 2 பேர் தானே செல்கிறீகள். சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே!!!

 9. அன்பு பர்வத வர்த்தினி

  மிகவும் அருமையான முயற்சி.. ஆரம்பமே மிகவும் அட்டகாசமாக இருக்கிறது…அந்த முதல் பொன்னியின் செல்வன் படித்த அனுபவம் மீண்டும் என்னை வேறு ஒரு காலகட்டத்திற்கே கொண்டு சென்றது உங்கள் கல இயந்திரத்தின் முதல் வெற்றி

  மேலும் எதிர்ப்பார்க்கும்

  சாகர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க