“அத்தை எங்கே கூப்பிடு “
விசாலம்
அது நான் சிறுமியாக இருந்த காலம் .எங்கள் குடும்பத்துடன் என் அத்தையும் கூட இருந்தார் .எங்கள் குடும்பத்திற்கே அவர் ஒரு தூண் என்றே சொல்லலாம் நான் பிறப்பதற்கு முன்னாலேயே ,அவர் எங்கள் குடும்பத்திற்குள் புகுந்து விட்டார் . 1930லிருந்து என் அப்பாவுடன் வந்தவர் அவருடனேயே தங்கி விட்டார் .தனக்கென்றே வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர் . அவர் அந்தக்காலத்திலேயே ஆண் ஆதிக்கத்தை வெறுத்தவர் . தன் கணவருக்குக்கீழ்படிந்து வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து, விறகடுப்பு ,புகை தினமும் 15 பேருக்குச்சமையல் என்று சமையல் அறையைவிட்டு வெளியே வாராமல் இருந்தாலும் அவருக்கு வாய்த்த கணவர் ஒரு ஹிட்லர் போல் இருந்தாராம் அவரிடம் முதலில் பயந்து பயந்து . அடி உதைகளும் வாங்கிக்கொண்டு பொறுமையுடன் தான் இருந்தார் அவர் ..ஆனால் பின்னால் தான் இந்த கஷ்டத்திலிருந்து விடு பட தனியாக இருந்து காட்டவேண்டும் என்று அந்தக்காலத்தில் நினைத்த புரட்சிப்பெண் அவர் .அவர் என் அப்பாவிடம் அடைக்கலம் பெற்ற சம்பவத்தை என்னிடம் கூறினார்
ஒரு நாள் என் அத்தை தோசைக்கு மிளகாய்ப்பொடி உரலில் இடித்துக்கொண்டிருக்க அந்த ஹிட்லர் கணவர் அவரை அழைத்தாராம் . அங்கு கூடத்தில் சீட்டுக்கச்சேரி களைக்கட்டிக்கொண்டிருந்தது சீட்டு விளையாடுபவர்களுக்குச் சூடான காபி கொண்டுவர குரல் கொடுத்தார் ”ஏண்டி எத்தனை தடவ கூப்பிடறது உன்னை …. செவிடாடி நீ! முண்டம் முண்டம் ‘ என்றுச்சொல்லி கத்தினாராம் . என் அத்தைக்கு இதைத்தாங்கிக்கொள்ளும் இதயம் இல்லை . எல்லா நண்பர்களுக்கெதிரில் இப்படி ஒரு அவமானமா என்று புழுங்கினார். பின் “நான் மிளகாய்ப்பொடி இடிச்சுண்டிருக்கேன் .இப்ப என்னாலே அங்க வரமுடியாது ‘ என்று பதில் கொடுத்தாள் .
ஹிட்லர் அத்திம்பேருக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன . ,, பாதி ஆட்டத்தில் எழுந்து உள்ளே வந்தாராம் அத்தையின் முடியைப்பிடித்து இழுத்தார் . போன ஜன்மத்தில் துச்சாசனனாக இருந்திருப்பாரோ என்னமோ ! கோபம் என்று ஒன்று வந்தால் கண்மண் தெரியாதே . யோசிக்கும் சக்தி எங்கேயோ ஓடி ஒளிந்துகொண்டுவிடும் போலிருக்கு . அங்கு பொடித்து வைத்த மிளகாய்ப்பொடியை கையில் அள்ளினாராம் நேராக என் அத்தையின் கண்களில் வீசினாராம் ஐயோ இது என்ன கொடுமை கண்கள் போயிருந்தால் என்ன செய்வது ?
” ஆ ஆ எரியறதே கண்ணு போச்சே இப்படி ஒரு மனுஷனா நீ ” என்று முதல் தடவையாக “நீ ” என்று அவரை அழைத்து கண்களை அலம்ப கொல்லையை நோக்கி ஓடினாராம் .
கண்களில் எரிச்சல் அதிகமாக எதிர் வீட்டு மாமியுடன் கண் டாக்டரிடம் தானே சென்று வந்தார் .மறு நாள் இரண்டு புடவைகளுடன் ரயில் ஏறி பம்பாய்க்கு என் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார் .அவரது கணவரும் அவரைத்தேடி வந்தோ அல்லது செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்டோ செய்யவில்லை . தன்னிஷ்டப்படி ஜாலியாக இருக்க ஆரம்பித்தார் அந்த மனிதர் .
என் அத்தையின் வயது அப்போது சுமார் 25 இருக்கலாம் .அன்றைய தினத்திலிருந்து எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எங்கள் அத்தைதான் அவரை வாழாவெட்டி என்று ஒருவரும் சொன்னதில்லை தவிர அவர் ஆசிகளுடன் ஆரம்பிக்கும் காரியம் மிகவும் நலமாகவே முடியும் . அவரில்லாமல் எங்கள் குடும்பமே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது .அவரது புக்காத்தில் 14 வயதில் நுழைந்தவர் ஒரு பத்து வருடம் நரக வாழ்க்கை வாழ்ந்து புரட்சியுடன் வீட்டை விட்டு தன் தம்பியின் குடும்பத்திற்கே தன்னை அர்ப்பணித்த அவர் எனக்கு தெய்வம் போல் தெரிகிறார் .எங்கள் வீட்டு டாக்டர் வக்கீல் . ஆடிட்டர் சமையல் ஹெட்டு எல்லாமே அவர்தான் .
அவரது டாக்டர் அவதாரத்தில் கேட்டவை
“ஏண்டி லொங்கு லொங்குன்னு இருமறே .இஞ்சியை நெருப்ல சுட்டு பனங்கல்கண்டு சேத்து அரைச்சு தரேன் சளி துப்ப வந்துடும் கபம் போயிடும் .
தொண்டை வலியா இரு இதோ ஒரு மருந்து தரேன் என்று சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை வறுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைப்பார் பின் அதில் தேன் கலந்து தருவார்
உடல் வலியுடன் வீக்கம் இருந்தால் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து வீங்கிய இடத்தில் ஒத்தடம் கொடுப்பார் மழைக்காலத்தில் மிளகு கஷாயம் நிச்சயம் உண்டு
“மாமி உடம்பு ரொம்ப பருத்து போறது என்ன செய்யலாம் என்று ஒரு மாது வந்து சந்தேகம் கேட்க அதற்கும் பதில் ரெடியாக இருக்கும்
“வா ஜானகி வா உடம்பு குண்டாப் போச்சுன்னு கவலைப்படாதே . கொஞ்சம் சிக்கை பொடி செஞ்சிக்கோ ராத்திரி ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலக்கி படுக்கப் போறச்ச சாப்பிட்டு வா .வேண்டாத கொழுப்பு கரைஞ்சுபோய்டும் .
என் அம்மாவிடம் ” இத பார் சரஸ்வதி அடுத்த மாசம் தீபாளி வரது இந்த மாசம் நூறுக்கு மேலே சிலவு போகாம பாத்துக்கப்போறேன் அப்பத்தான் தீபாளிக்கு குழந்தைகளுக்கு டிரெஸ்க்கு தாராளமாக சிலவு செய்யமுடியும் . இரண்டு மாசம் முன்னாடியே ஒரு நூறு சேர்த்துட்டேன் “என்று ஆடிட்டர் ரோலை எடுத்துக்கொள்வார்
இது போல் பல அவதாரங்களுடன் எங்களுக்காகவே உழைத்த என் அத்தையின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வருகிறது . இந்தக்காலத்தில் இது போல் அத்தை மாமா உறவுகள் திரும்பி தழைக்குமா ? தன் வாழ்க்கையே குடும்பத்திற்காக தன் திருமணம் பற்றிக்கூட எண்ணாமல் மருமாள் மருமானுக்காகவும் தன் சகோதர குடும்பத்திற்காகவும் வாழும் அத்தைகள் இன்று கிடைப்பார்களா? அத்தை மடி மெத்தையடி என்ற பாட்டு திரும்ப பாட வாய்ப்பு வருமா ? யோசிக்கத்தான் வேண்டும் . .
ஆஹா! எத்தனை அத்தைகள். அத்தை மடி மெத்தை தான். என்னுடைய அத்தை இப்படித்தான். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தின் மகப்பேறு தாதி வேறே. அவளுடைய பின்னணி வேறு என்றாலும், எங்கள் குடும்பத்தின் திவான், அவர். நான்கு வயதில் குளித்த பின் துவட்டிக்கொள்வது எப்படி என்று எனக்கு சொல்லிக்கொடுத்தவள். நேற்று காலை துவட்டிக்கொள்ளும் போது, அவளை நினைத்துக்கொண்டேன். நன்றி, திருமதி.விசாலம்.