Blog

  • அழகான ராட்சஷியே!!!

    தேமொழி

     

    “அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
    முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
    அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”

    என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.

    காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

    நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.

    கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
    (பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)

    பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.

    ——————————————————————————————————————————————————————-
    பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
    ——————————————————————————————————————————————————————-

    ”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
    வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”

    என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.

    வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.

    மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.

    இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

    மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

    பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

    இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.

    அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.

    இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

    அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.

    நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.

    அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

    ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

     

     

     

     

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர். காவிரிமைந்தன்

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

    காலம் எத்தனையோ கவிஞர்களை பிரசவித்திருக்கிறது! அவர்களும் தங்கள் திறமையால்.. தமிழ் மொழியில் அற்புதங்களைப் படைத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணதாசன் அவர்களும் இந்தவழியில்தான் வந்து சென்றார்! ஆனால் சாதாரண ஜீவமரண கணக்குக்குள் அடங்கிவிடாத ஜீவநதியாய் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார் தன் படைப்புகளால்! அவரின் கவித்துவம் எளிமையில் பிறக்கிறது! நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அவரும் கைப்பிடிக்கிறார். ஆனால் கவிஞரின் வசப்பட்டதும்.. அந்த வார்த்தைகள் பெருமையுறுகின்றன. நம்மை உடனே வியப்பில் தள்ளிவிடுகின்றன!

    இயற்கையாக நடக்கும் எதுவும்கூட கவிஞனின் கைவண்ணத்தால் இன்னும் மெருகேறுகிறது! இறைவனை .. இந்த உலகில் கண்ணதாசன் இழுத்துவந்ததைப் போல் இன்னொருவர் செய்ததுண்டா என்றால் சந்தேகமே!

    கடவுளை வணங்கிப் போற்றி வந்தனை செய்தவர்தான் என்றாலும் பாடல் வரிகளில் நியாயம் கேட்கத் தயங்காத எதார்த்தவாதியாக பரிணமிக்கிறார்! பாடலின் பல்லவி தவிர மூன்று சரணங்கள்.. திரைக்கதைக்காக எழுதப்பட்ட பாடல்தான் என்றாலும்.. இதில் உள்ள நியாயங்கள் திரைப்படத்தைத் தாண்டியும் உணரப்படுகிறதே!

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    திரைப்படக்காட்சியில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் பண்பட்ட நடிப்பில் பார்ப்பவர்கள் கண்ணில் நீர்வரும்! இசையின் வடிவமோ திரையிசைத்திலகத்தின் கைவண்ணத்தில் உணர்வுகளை மீட்ட வருகிறது! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சரஸ்வதி சபதம் திரையோவியம். இப்பாடலைக் கேட்கும் போது இதயத்தின் துடிப்பு ஏனோ இருமடங்காகிறது!!

    http://youtu.be/xjiRbHe-VG4

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

     

    Song: தாய் தந்த பிச்சையிலே – thai thantha pichchaiyile
    Movie – திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    Singers: P. Suseela பாடியவர்: P. சுசீலா
    Lyrics: Poet Kanndasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: K.V. Mahadevan, இசை: K.V. மஹாதேவன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • Mahakavi Bharathi day celebrations at Sevalaya – tomorrow 11 AM

    Greetings from Sevalaya!

    We are pleased to inform you that we have a function to celebrate Mahakavi Bharatiyar’s birth anniversary on 11th December 2013 –Wednesday– At Sevalaya’s Mahakavi Bharatiyar Higher Secondary School, Kasuva Village, Near Tiruninravur at 11.00 AM.

    Mr. K. Chandrasekaran, M.A., .Ed., Chief Educational Officer, Tiruvallore district has kindly consented to be the Chief Guest to the occasion. As part of the programme prizes will be distributed to the children, from various Schools in Tamilnadu participated and won on the competition

    barathy 1

    barathy 2

    Share
  • கொஞ்சம் டீ! கொஞ்சம் தீ!

    வணக்கம்!

    இன்று (10.11.2013) மாலை 6.00 மணிக்கு, மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தில் (திருவல்லிக்கேணி, சென்னை)

    திருமதி பாரதி பாஸ்கர், கவிமாமணி திரு. வ.வே.சு. ஆகியோருடன் என் சித்தத்தில் சித்திரமாய்ப் பதிந்துவிட்ட பாரதியைப் பற்றி உரையாடுகிறேன்.

    வாருங்களேன்!

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • நோட்டோலை

    இன்னம்பூரான்

    2

    சாக்கு சாக்கா காசு பணம் டோய்!

    கோக்கு மாக்கா சிக்கன் குருமா டோய்!

    நோக்கும் நேக்கும் நாக்குக் கேட்டாலும் டோய்!

    வாக்குக் கேக்கறான்னு மசியாதே டோய்!

    மகா கனம் பொருந்திய மகாஜனங்களே!

    விடுதலை வாங்கியது நன்நிமித்தமேயாயினும், வாக்களிப்பது ஜனநாயக உரிமையாயினும், குடிசை போட இடம் கேட்டு, அங்கு மனையொன்று அமைத்து, அடுத்த மனையை ‘லபக்கி’ மாடமாளிகை கட்டி, ஊரை வளைத்து கோட்டை கொத்தளம் எழுப்பி, உம்மை நடுத்தெருவில் விட்ட பிரதிநிதிகள் சிலரால் ஜனநாயகத்தின் நாயகம் எண்டேஞ்சர்ட் லிஸ்டில். களிம்போ! கட்டெறும்போ! வந்து குதித்தது நோட்டோலை ( NOTA). 2013 புள்ளி விவரம் கேளும். புள்ளி விவரம் ஒரு புதிய இலக்கிய தரவு! ஆமாம். புள்ளியில் விவரம் கொடுத்து சேதிக்குத் திரை போடலாம். விவரத்தில் புள்ளி போட்டு கதி கலங்க அடிக்கலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ஒட்டகத்தில் போடலாம். கயிறை மணலாக பிரிக்கலாம். யான் அந்த மாயாமாலங்கள் செய்ய தகுதியற்றவன். கொஞ்சம் உண்மையை கண்டு நடுங்குவோம்.

    மக்கள் மன்றத்தில், இந்த தேர்தல் கமிஷன் நோட்டோலை வாசிக்கிறது. ஷரத்து 158 படி(Representation of the People Act, 1951)இவை செல்லாத ‘நோ’ வாம்; நோவு தான்! இத்தனைக்கும் காத்த வீர்யனுக்கும், வீராயிக்கும் வாக்களித்தவர்கள் எந்த கவனத்தில் செய்திருக்கலாம் என்பது ஊகம். நோட்டோலை முத்திரை போட்டவர்கள் கவனம் செலுத்தித் தான் ‘ஒண்ணுமே உருப்படாது’ என்று தீவிரமாக சிந்தித்து இயங்கியவர்கள் எனலாம். நடக்கவேண்டியது, வேண்டாதது எல்லாம் நடந்து முடிந்த பின் இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், டிபாசிட் இழந்தவர்களின் முகத்திரை கிழியலாம்.

    ஒன்று மறக்கலாகாது. ஒரு வாக்குச்சாவடியிலாவது இந்த நோட்டாலை முத்திரையாளர்கள் இல்லாமல் இல்லை. அதாவது, மக்களுக்கு புரிந்து விட்டது, இந்த பாணத்தின் மகிமை. மத்திய பிரதேசத்தில் பான்செமால் தொகுதி பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு நோட்டோலை போட்டவர்களின் எண்ணிக்கை தோற்றவர், கெலித்தவருக்குள்ள வித்தியாசத்தை விட அதிகம். அதாவது அவர்களில் பெரும்பாலோர் தோற்றவருக்கு வாக்களித்திருந்தால், அவர் கெலித்திருப்பார்! சர்வ அசக்தி படைத்த வாக்காளர்களே! கவனிக்கவும். இது பழங்குடி தொகுதி. போட்டி இருவர் மட்டும். இருவருக்கும் உள்ளூரில் நல்ல பெயரோ, கெட்ட பெயரோ, இரண்டுமோ இருந்திருக்க வேண்டும். பழங்குடி மக்கள் சக்திக்கு சலாம்! கவார்தா, கைராகர், கல்லாரி, டோங்கர்காவ்ம் தொகுதிகளிலும் இதே கதி. நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார்-சர்குஜா பகுதிகளில் நோட்டோலை அலை, அலையாக: சித்ரகூட்: 10848; தந்தேவாடா-9677, கேஷ்கல்-8381, கொண்டகாவ்ம்-6773.ரஜிம்-5673, பாதால்காவ்ம் 5533. அரசு இதன் பின்னணியை நோக்கினால், பல உண்மைகள் கதவு திறக்கும்.

    வம்சாவளிக்கு ஆதரவு இல்லையோ? சர்ச்சைக்கு அப்பாற்படாத அஜீத் ஜோகியின் மகனுக்கும், மனைவிக்கு நோட்டோலை 7115, 1074. பின் தங்கிய பிராந்தியம் எனப்படும் சட்டீஸ்கரில் தான் நோட்டோலை அதிக. மெத்த படித்த டில்லியில் குறைவு. 460 வாக்காளர்களுக்கு ஷீலா தீக்ஷித் மேலும் நம்பிக்கையில்லை; அர்விந்த் கெஜ்ரிவால் மேலும் நம்பிக்கையில்லை. மத்ய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் செளஹான் மீது 4112 பேருக்கு நம்பிக்கையில்லை; ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது 3729 பேருக்கு நம்பிக்கையில்லை.

    போறப்போக்கைப் பார்த்தால் நான் தேர்தலுக்கு நின்றால், என் பெயரை NOTA என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இப்படிக்கு,

    நோட்டா இன்னம்பூரான்

    09 12 2013

    உசாத்துணை:

    இன்றைய ஹிந்து இதழ்.
    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-5XCyte3dQZ0/UnNMi2PIEHI/AAAAAAABcvc/p9F9u1CshuY/s1600/2.jpg

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்ற நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே சுவையானவைதான். அரங்கமாநகரை தன்னுள்ளே வைத்திருக்கும் பாசுரங்கள் எல்லாமே அழகான தமிழால் அரங்கனுக்கு சாத்தப்பட்ட பூமாலைதான். தமிழ் இலக்கிய, பக்திப் பாடல்களில் மிக அதிக அளவில் இடம்பெற்ற நகரம் கூட அரங்கமாநகரம்தான். இந்த நகரைப் பற்றியும் நகரத்தில் கோயில் கொண்ட அரங்கத்தான் பற்றியும் புத்தகங்கள் நிறைய உள்ளன. அதிக அளவில் வைணவ ஆச்சாரியர்களின் ஈடுகள் பேசுகின்றன.

    திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலத்தில் இந்த நகரம் மிகப் பெரிதாக விரிவுபடுத்தியிருக்க வேண்டும் என நாம் தோராயமாகச் சொல்லலாம். ஆழ்வார் பாடல்களில் பல இடங்களில் திருவரங்கத்தின் சுற்றுப்புறப் பெருமைகள் பேசப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த தலத்தின் கோயில் கொண்டுள்ள பெருமாள் அரங்கநாதனுக்கும் மிகப் பெரிய ஒரு சோதனையான கட்டமாக பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விளைந்த மாலிக்காபூர் படையெடுப்பைச் சொல்வார்கள். அந்தச் சமயத்தில் வைணவ ஆச்சாரியராக இருந்த மன்னுபுகழ் வேதாந்த தேசிகர் அரங்கனின் உற்சவமூர்த்தியை எடுத்துச் சென்று திருப்பதியில் வைத்ததாக இன்றைக்கும் திருமலை கோயிலில் ஒரு அறிக்கை மாட்டி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அரங்கன் உற்சவத் திருமேனி திருமலை ஏறிவிட்டாலும், ஸ்ரீராமனின் குலதெய்வமான மூலவநாதன் திருவரங்கன் அங்கே பள்ளி கொண்டிருந்தானே அவன் என்ன ஆனான்..

    இதோ கோவையைச் சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி தரும் சுவையான தகவல்கள் அவர் எழுத்திலேயே பார்க்கலாமா

    பரிதாபி ஆண்டு, வைகாசி திங்கள் 17ம் நாள். ரங்க நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னால் தன் இருப்பிடத்திலிருந்து அவசரஅவசரமாய் வெளியேறிய அழகிய மணவாளன் காவிரியின் தென்கரையை அடைந்து, பின் தொண்டைமான் காட்டிற்குள் புகுந்து, திருக்கோஷ்டியூர், திருமால் இருஞ்சோலை, யானைமலை, மதுரை, திருக்குருகூர், நாகர்கோவில், திருஅனந்தன்புரம், கோழிக்கூடு, திருநாராயணபுரம், திருமலைக் காடுகள், திருமலை, செஞ்சி, அழகிய மணவாளம் வழியாக தென் தேசங்களை பிரதக்ஷணம் செய்து இப்போது காவிரியின் வடகரை கடந்து ரங்கத்திற்குள் மீண்டும் பிரவேசிக்கிறார். கேட்க வேண்டுமா ரங்கத்தினர் உற்சாகத்திற்கு? வீட்டு வாசல்கள் தெளிக்கப்பட்டு மாக்கோலங்கள். வாழைகள். மாவிலைத் தோரணங்கள். பூ மாலைகள். மேள தாளத்துடன் மங்கல இசை. விண்ணைப் பிளக்கும் வேத கோஷங்கள். தமிழ் மறை பிரபந்தங்கள். போரில் வெற்றி கண்ட கம்பண, கோபணருக்கு ஜய கோஷங்கள். வீதியெங்கும் மகிழ்ச்சி கூத்தாடல்கள். பல்லக்கில் நெஞ்சு நிறைந்து பவனி வரும் ரங்கனுக்கும், அதை சுமக்கும் விஜய நகர அரசன், படைத் தளபதிகளுக்கு ஆரத்திகள், அவர்கள் அனைவரின் மீதும் வாரி இறைக்கப் படும் பூக்கள், கொட்டும் முரசுகளின் பேரொலிகள் என திருவரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.

    இக்கொண்டாட்டங்களை எல்லாம் பார்த்துக் கொண்டும், குழுமி இருந்த ஜன சமுத்திரத்தின் ‘ரங்கா, ரங்கா’ (அரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதே ரங்கா, ரங்கா முழக்கத்தோடு அவனுக்காக உயிர் துறந்த ரங்க வீரர்களின் வம்சா வழி வந்தவர்களே இவர்கள்) எனும் சந்தோஷ கூச்சல்களை கேட்டுக் கொண்டும், அவர்களின் ஊடே புன்னகை தவழும் முகத்துடன் ஊர்வலமாய் சென்று தன் சாம்ராஜ்ஜிய பீடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக புளகாங்கிதமாய் எழுந்தருளினார் அரங்கன். (காணாமல் போன நாச்சியார் உற்சவ பேரங்கள் இப்போது எப்படி வந்தன? இவ்விக்ரஹங்கள் வேறு. இவை, அழகிய மணவாளர் திருமலையில் தங்கி இருந்த போது சந்திரகிரி அரசர் யாதவராயரால் செய்து வைக்கப் பட்டவை).

    ஆனால், இங்கென்ன கூட்டத்தினரிடையே சலசலப்பு? ஆ இதென்ன இன்னொரு ரங்கர்? ஆமாம், பல வருடங்களுக்கு முன்னால், ரங்கம் சற்று அமைதியானவுடன், அரங்கன் ஆலயத்தில் மாற்று மூலவர்களுக்கு பூஜைகள் பிறர் அறியா வண்ணம் நடக்க ஆரம்பித்தது. அக்காலத்தில், இவர்தான் அவர் என்று வேறொரு அரங்க உற்சவர் வந்து சேர்ந்தார். இப்போது புதிதாய் ஒருவர். இதில் யார் உண்மையான பழைய உற்சவர் என்று எப்படி தீர்மானிப்பது? இது நாள் வரை தாங்கள் புஜித்தவரை ஒதுக்குவதா? இதுதான் முனுமுனுப்புகளுக்கும், சர்ச்சைக்கும் காரணம்.

    இச்சமயத்தில்தான் விஜய நகரத்தார் போரில் வெற்றி பெற்றதை ஸ்வாமி வேதாந்த தேசிகரிடம் நேரில் கூறி அவரை திருவரங்கம் அழைத்து வந்திருந்தனர். எவர் முன்னிலையில் நாற்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மூலவரை மறைக்கும் வகையில் குலசேகரன் வாயிலில் சுவர் எழுப்பப்பட்டதோ, நூறு பிராயத்தை கடந்திருந்த அவரே இப்போது முன் நின்று அக்கற்தடுப்பை தகர்த்து ரங்கனை மீண்டும் உலகத்தாருக்கு வெளிப்படுத்தினார். அரங்கனை முதன் முறையாய் தரிசித்தவர்கள் பரவசமாகி ‘ரங்கா, ரங்கா’ என கூக்குரலிட்டனர். பலரின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். பிறகு, ரங்கனுக்கு முறைப்படி வெகு விமர்சையாக பூஜைகள் நடந்தது. ஸ்வாமி தேசிகர், சுல்தானுக்கு எதிரான போரில் விஜய நகர படைகளுக்கு தலைமை வகித்து வெற்றி கண்ட கோபணரை போற்றி ஒரு ஸ்லோகம் எழுதினர். அது கல்லில் பொறிக்கப்பட்டு இன்றும் காணக் கிடைக்கிறது.

    சரி, நாம் தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். யார் பழைய உற்சவ அழகிய மணவாளன்? தேசிகர் முன்னிலையில் விவாதம் நடந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவரை வெகு அருகாமையில் தரிசித்தவர் எவரேனும் இப்போது ரங்கத்தில் இருந்தால் அவர் வந்து அடையாளம் காட்ட வேண்டும் என்று முடிவாயிற்று. ஆனால், ஒருவரேனும் முன் வரவில்லை. இந்நிலையில்தான், இரு கண்களிலும் பார்வை இழந்த அந்த ஈரங்கொல்லி (வண்ணான்) ‘நான் அடையாளம் காட்ட முயற்சிக்கலாமா? என்று கேட்டபடி வந்தான்.

    பெருமாள் திருமஞ்சன நீராடும் போது அணியும் வஸ்திரங்களை நான் துவைத்து தருவது வழக்கம். அப்போது, அத்துணியை பிழிந்து அந்நீரை தீர்த்தமாகப் பருகுவேன். அதற்கென ஒரு சுவை உண்டு. இப்போது, இரு மூர்த்தங்களையும் நீராட்டி வஸ்திரங்களைக் கொடுத்தால் நான் அவற்றின் சுவை கொண்டு எதை அணிந்தவர் பழைய உற்சவர் என்று சொல்ல முடியும் எனக் கூறினான். அனைவரும் அவன் சொன்னதை ஏற்றனர். அவன் தீர்த்தங்களை பருகி, கோபணர் கொண்டு வந்த அரங்கனின் வஸ்திரத்தை கையில் வைத்துக் கொண்டு இதை அணிந்தவரே ‘நம் பெருமாள்’ என்றான். அதன் பின்னர் ரங்க உற்சவருக்கு ‘நம் பெருமாள்’ என்பதே பெயராயிற்று.

    மேலும் படிக்க திரு கிருஷ்ணமூர்த்தியின் ஃபேஸ் புக்’ விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    https://www.facebook.com/krishnamurthy.krishnaiyer

    அரங்கன் தகவல்கள் என்றாலே இனிப்பவை என்று முதலிலேயே குறிப்பிட்டேன். இப்படி இனிக்க இனிக்க தகவல்களை அள்ளித் தரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மேகலா ராமமூர்த்தி அவர்களின் ’சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம்’ – வல்லமையில்.

    மற்ற காப்பியங்கள் எல்லாம் அரசர்களையோ, குறுநில மன்னர்களையோ, அல்லது வள்ளல்களையோ பெரிதும் போற்றுவதாகவும், அவர்தம் கொடைச் சிறப்பினையும், போர் வெற்றிகளையும் வானளாவப் புகழ்வதாகவுமே இயற்றப்பட்டிருக்க, அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டுச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவனாகவும், தலைவியாகவும் தேர்ந்தெடுத்து அவர்தம் வாழ்வையே காப்பியக் களனாக்கிய ’புரட்சிச் சிந்தனையாளர்’ இளங்கோவடிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

    Share
  • வேண்டாம் இந்த அம்மா

    நிர்மலா ராகவன்    

    “டேய் பத்மா! இந்த ஒரு தடவையாவது எங்களோட வாடா!” நண்பர்கள் வற்புறுத்தினார்கள்.

    “அவன் வரமாட்டாண்டா. எந்தச் சனிக்கிழமைதான் நாம்ப கூப்பிட்டு அவன் வந்திருக்கான்?”

    பத்மராசனுக்கு அழுகைதான் வந்தது. அவர்களிடம் உண்மையைச் சொல்ல முடியுமா?

    அது ஏன் இவனுடைய அம்மா மட்டும் எல்லா அம்மாக்களையும்போல் இல்லை?

    பாலாவின் அம்மாவைப் பார்த்தால், யாரும் அவளுக்கு மீசை முளைத்துக்கொண்டிருக்கிற மகன் இருக்கிறான் என்றால் நம்பமாட்டார்கள். ஏன், ஒரு தடவை அவர்கள் நண்பர்களிலேயே சற்று தடியாக இருந்த அர்ஜூன் சொல்லவில்லை, `கூட்டாளியோட அம்மாவாப் போயிட்டாங்க! இல்லாட்டி, `சைட்’அடிச்சிருப்பேன்,’ என்று?

    இவன் மட்டும், அம்மா உயிரோடு இருந்தும், இறந்துவிட்ட அப்பாவோடேயே போய்விட்டதாக நினைவு தெரிந்த நாள்முதல் சொல்லித் தொலைக்க வேண்டிய நிலை.

    அட, அழகும், இளமையும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. இப்படி, பேச்செல்லாம் குளறிப்போய், கண்களில் சிறிதுகூட ஒளி இல்லாமல், ஆண்பிள்ளைபோல் குட்டை முடியுடன், முழங்கால்வரையே தொங்கும் கவுனைப் போட்டுக்கொண்டிருந்த அந்த உருவத்தை `அம்மா’ என்று ஏற்றுக்கொள்ளவே எவ்வளவு கடினமாக இருந்தது!

    அப்பா தவறிப்போனபோது அவனுக்கு ஒரு வயதுகூட நிரம்பவில்லையாம். அக்காதான் சொல்வாள். அவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் அம்மா. தெரு ஓரமாக நடந்துகொண்டிருந்த அப்பாமேல் போதையிலிருந்த பஸ் டிரைவர் தனது வாகனத்தை ஏற்ற, தலத்திலேயே அப்பாவின் உயிர் பிரிந்ததை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறக் கேட்டு, கைக்குழந்தையை நழுவவிட்டு, பித்தான்கள் நீக்கப்பட்டு இருந்த ஜாக்கெட்டை புடவைத் தலைப்பால் மறைத்துக்கொள்ளும் பிரக்ஞைகூட இல்லாது, அலறியபடி வெளியே ஓடியவள்தான் அம்மா. அவளைக் கட்டுப்படுத்த முடியாது, சில மாதங்களுக்குள் தஞ்சோங் ரம்புத்தானிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டார்கள் தாத்தாவும், பாட்டியும்.

    கோலாலம்பூரின் வடக்குப் பகுதியில், பேராக் மாநிலத்தில் இருந்த தஞ்சோங் ரம்புத்தானில் 1911 ஆண்டே மனநிலை சரியாக இல்லாதவர்களுக்காகவென ஆஸ்பத்திரி துவங்கப்பட்டது.  அந்த இடத்தின் பெயரைக் கேட்டாலே, விவரம் புரியாத பலரும் கேலிச் சிரிப்பு சிரிப்பார்கள். `இவன் சரியான தஞ்சோங் ரம்புத்தான்!’ என்று சிறுவர்கள் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்வதுண்டு.

    இதெல்லாம் புரிந்து, வேறு ஊருக்கு மாறினார்கள். பாட்டி மட்டும் மாதம் தவறாது, அம்மாவைப்போய் பார்த்து வருவாள். அப்போதெல்லாம், “ராசா, ராசான்னு ஒம்மேல உசிரையே வெச்சிருந்தாளே, பாவி! இப்படி, தன் பேருகூடத் தெரியாம ஆகிட்டாளே!” என்று  புலம்புவாள். பத்மராசாவுக்குத் தர்மசங்கடமாக இருக்கும். எப்போதாவது அக்காவும் பாட்டிக்குத் துணையாகப் போவாள்.

    “நீ அம்மாவைப் பாத்ததே இல்லியே, பத்மா. எங்ககூட வாடா,” என்று அக்கா ஒருமுறை இழுத்துப்போனாள் அவனை.

    “நம்ப ராசா பாத்தியாம்மா? இப்ப பெரியவனா ஆகிட்டான், பாரு. ஸ்கூலுக்குப் போறான்ல!” வலிய வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன், பெற்றவளுக்கே மகனை அறிமுகப்படுத்தினாள், அக்கா.

    எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்த அம்மா சட்டெனத் திரும்பினாள். விரைந்து வந்து அணைத்தாள். அவளுடைய பிடியின் இறுக்கத்தில் சிறுவன் மிரண்டு போனான். அம்மா முத்தமாரி பொழிய ஆரம்பித்ததும், அழ ஆரம்பித்தான்.

    அதைக் கவனிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. “ராசாக்குட்டி!  ராசாக்குட்டி!” வெறிபிடித்தவளாய் கத்தினாள். உபயோகமற்று இருந்த குரல் கரகரப்பாக இருந்தது.

    ஆனால், அடைந்து கிடந்த உணர்வுகள் வெளிப்பட்டதால், நாளடைவில் அவளுடைய நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. அம்மாவை வீட்டுக்கே திரும்ப அழைத்து வந்தார்கள்.

    கணவருடனேயே அவளுடைய புத்தி ஸ்வாதீனம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது என்பது பிறகுதான் புரிந்தது. ஆடை அணிய மறுத்தாள். வாழ்நாள் பூராவும் மருந்து சாப்பிடவேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறினாள். `எனக்கு விஷம் கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?’ என்று, கத்தியைக்  கையில் எடுத்துக்கொண்டு அவள் மிரட்ட, வேறு வழியின்றி, ஆஸ்பத்திரியிலேயே மீண்டும் கொண்டுவிட்டார்கள். அங்கு, உச்சந்தலையில் மின் அதிர்வு வைத்துச் சிகிச்சை அளித்து சாதுவாக்கிய அம்மாவை மீண்டும் வீட்டுக்கே அழைத்துப் போகலாம் என்று தகவல் கொடுத்தார்கள்.

    `அவளை எங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லையே!’ என்று பாட்டியும், அக்காவும் போய் மன்றாட, அருகிலிருந்த ஒரு இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்தார் பெரிய டாக்டர்.

    `இவர்களால் பிறருக்கு ஆபத்து இல்லை,’ என்ற நிலையிலிருந்த பிற பெண்கள் தங்கியிருந்த இடம் அது. எல்லாருமே மனநிலை பிறழ்ந்து, தீவிர சிகிச்சைக்குப்பின் அங்கு அனுப்பப்பட்டவர்கள். நாள் தவறாது, மூன்று வேளை மருந்தும், மாதம் ஒரு ஊசியுமாக, ஒருவித போதை நிலையிலிருந்த பிறருடன் அம்மாவும் ஒருத்தியாகிப் போனாள்.

    “ஒன்னைப் பாக்கிறதுக்காகவே ஒங்கம்மா உசிரை வெச்சுக்கிட்டிருக்கா, ராசா. வாரம் தவறாம போய் பாத்துட்டு வா. வேற என்னதான் இருக்கு அவளுக்கு, பாவம்!” மரணப் படுக்கையிலிருந்த பாட்டி சும்மா போகாமல், சத்தியம் வாங்கிக்கொண்டுதான் போனாள்.

    அப்போது பத்மராசாவுக்கு பத்து வயது. இருபது வயதான அக்கா கல்யாணத்தைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தாள். வேலைக்குப் போனாள். மாதாமாதம் அம்மாவுக்காக ஒரு பெருந்தொகையை எடுத்துவைக்க வேண்டுமே!

    சற்று விவரம் புரிய ஆரம்பிக்க, பத்மராசாவுக்கு அம்மாவின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன் வயதுப் பையன்களெல்லாம் ஒன்று சேர்ந்து பேரங்காடிகளில் சுற்றிக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும் உல்லாசமாகக் கழிக்கையில், தன் விதி மட்டும் ஏன் இப்படிப் போயிற்று? வாரம் பூராவும்தான் பள்ளிக்கூடமும், டியூஷனும் இருக்கவே இருக்கின்றன. ஒவ்வொரு சனியன்றும் பஸ் பிடித்துப்போய், அந்த அழகான அம்மாவைத் தரிசனம்! அந்தக் கசப்பிலிருந்து மீள அடுத்த நாளும் அனேகமாக விரயமாகிவிடும்.

    தன்னைப்பற்றி மறக்கவேபோல், ஓயாது படித்ததில், வகுப்பில் இவன்தான் முதல். ஆனால், நண்பர்களிடமிருந்து இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் உண்மையை மறைக்க முடியும்! உண்மை வெளியாகிவிட்டால், `பைத்தியத்தோட பிள்ளை டோய்!” என்று ஏளனம் செய்வார்களோ?

    “இப்படி முகத்தை சிடுசிடுன்னு வெச்சுக்கிட்டு அம்மாவைப் பாக்கவந்தா நல்லாவேயில்ல, பத்மா!” ரகசியக் குரலில் அக்கா அதட்டினாள்.

    உதட்டைச் சுழித்துக்கொண்டான் பையன். பத்து வயதுவரை அம்மாவிடம் தலை வாரிப் பின்னிக்கொண்டு, அம்மா கதை கதையாகச் சொல்ல சாப்பிட்டு, தரையில் அமர்ந்து வீட்டுப்பாடம் பண்ணிய நினைவுகளையெல்லாம் அக்கா பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். தானும் அவளும் ஒன்றா?

    அவனைப் பார்த்ததும் லேசாகச் சிரித்தாள் அம்மா. “நல்லாப் படிக்கிறயாமே, ராசா?” என்று எடுத்த எடுப்பிலேயே விசாரித்தாள். “அக்காவுக்கு நான்தான் பாடம் சொல்லிக் கொடுப்பேன்!” அவளுடைய பழைய நினைவு சற்றே திரும்பியிருந்தது.

    “இப்ப அவனுக்கு நான் சொல்லிக் குடுக்கிறேம்மா!” அக்கா முந்திக்கொண்டாள், அநாவசியமான வருத்தத்தால் அம்மாவின் நிலை மறுபடியும் மோசமாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தவளாக.

    “எனக்கு ஒங்ககூடவே வந்துடணும்போல இருக்கு. ஆனா, இங்க இருக்கிறதுங்க வேலை செய்யறதுக்காக என்னைப் பிடிச்சு வெச்சிருக்குங்க!” தனது உண்மை நிலை புரியாது பேசியவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது பத்மராசாவுக்கு. ஆறுதலாக ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. “இங்கே எவ்வளவு அழகா தோட்டம் போட்டிருக்காங்க! ஒரே போகன்விலா செடியில எத்தனை கலர் பூ!” என்று வியந்தான்.

    அம்மாவின் கண்களில் அபூர்வமாக ஒரு ஒளி. “ஆர்கிட் தோட்டம்கூட இருக்கு. பாக்கறியா?” எதிரே இருந்த ஐந்தரை அடி மகனை, தான் என்றோ விட்டு வந்த குழந்தையாகவே பாவித்து, ஆசையோடு அவன் முகவாயைப் பிடித்தாள் அம்மா. “காட்டறேன், வா!”

    இவளுடன் தான் நடப்பதா?

    அந்த எண்ணமே கோபம், பயம், அருவருப்பு, இன்னும் ஏதேதோ உணர்வுகளைத் தோற்றுவிக்க,`வேண்டாம்,’ என்பதுபோல் வேகமாகத் தலையாட்டிவிட்டு, அவளுடைய கையை முரட்டுத்தனமாக விலக்கியவன், சட்டென எழுந்து, திரும்பிப் பாராது வாயிலை நோக்கி நடந்தான். அம்மா வெறி பிடித்தவளாக ஏதோ கத்தியது அவனைப் பாதிக்கவில்லை.

    அவ்வாரமே, தன் தலைமுடியை வெட்ட வந்தவளின் கையிலிருந்த கத்தரிக்கோலைப் பிடுங்கி, என்ன நடக்கிறதென்று பிறர் புரிந்துகொள்ளுமுன், அதைத் தன் வயிற்றில் செருகிக்கொண்டாள் பத்மராசாவின் அம்மா. பெற்ற மகனுக்கே வேண்டாதவளாகப் போய்விட்டோம், இனி உயிரோடு இருந்துதான் என்ன பயன் என்று அவளுக்கு மிச்சம் மீதியிருந்த அறிவுக்குப் புலனாகிவிட்டதோ!

    உலகம் அறியாத அவனுடைய அம்மாவுக்கு சொற்ப ஈமக்கடன்களைச் செய்து முடித்தான் மகன். அழுகைதான் வரவில்லை. உள்ளத்தில் பீறிட்ட நிம்மதியாவது வெளியே தெரியாமல் இருக்க வேண்டுமே என்று அவன் எடுத்துக்கொண்ட முயற்சி இறுகிப் போயிருந்த முகத்தில் தெரிந்தது.

    Share
  • எங்கே நீயோ

    உமா மோகன் 

    friends 2

    –பிரியம் சொல்லில் தளும்பல்

    உன் ப்ரியம்

    கருணை கண்ணில் வழிவது

    பார்வைக்கு அழகு

    பார்ப்பவர்க்கு அழகா ..?

    என் ஆன்மாவை

    துடைத்துத் தூபம் காட்டி

    இறுகப் பூட்டிவிட்டேன்

    புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

     

    அழுக்கு தின்று மூச்சு விடும்

    மீன் அது என்பதை அறியாயோ

    அகவிழி திறந்து ஆன்மாவை

    உலவவிடு…

    தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு

    நீந்தும்போதில்

    நீயும் கற்பாய் பிரியமும் கருணையும்

    விரல் வழியும் வழியும் என்பதை…

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 100

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மூவரும் வழிக்கொள்ளல்

     

    குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும்
    தோளில் இடுகின்ற உறியையும்
    மயிற்தோகையையும் எடுத்துக் கொண்டு
    ஐந்து எழுத்து மந்திரத்துக்குப்
    பொருளாக விளங்கும் தெய்வம்
    யாம் செல்லும் வழிக்கண்
    துணையாக நின்றிடட்டும்”
    என்று கூறிய கவுந்தியடிகள்
    பழியில்லாத சிறப்புடைய
    அந்தப் பயணத்தை மேற்கொண்டார்
    கண்ணகியுடனும் கோவலனுடனும்.

     

    காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்

     

    மழையது பொய்த்திடும்
    பஞ்ச காலத்தை விளக்கும் முகமாய்,
    சனி எனும் கோள் புகைந்தாலும்
    தூமகேது வானில் தோன்றினாலும்
    விரிந்த கதிரினையுடை சுக்கிரன்
    தென் திசைதான் சென்றிட்டாலும்

    அக்காலத்திலும் கூட
    காற்றுவந்து மோதும் குடகுமலை உச்சியில்
    கடுமையான இடிமுழக்கத்துடன்
    கருமுகில் மழையைப் பொய்க்காது பெய்திடும்.

     

    அதனால் பெருகிய வெள்ளத்துடன்
    பாய்ந்து வரும் காவிரியாறு
    குடகு மலையில் விளைந்திடும்
    அகில் சந்தனம் முதலியவற்றை
    அடித்துக் கொண்டுவந்து
    முத்து பவளம் முதலான
    கடலின் வளப்பொருட்களை எதிர்கொண்டு
    கரையைக் குத்திநின்று கடல்தனில் கலக்கும்.

     

    இங்ஙனம் சத்தத்துடன் பெருக்கெடுத்து
    காவிரிநீர் ஓடி வருகையில்
    மதகுகளின் மீதுள்ள
    நீர்ப்பலகைகளை அடித்துக் கடந்து பாய்ந்தது;
    அப்போது உண்டான பெருத்த ஒலி
    எங்கும் கேட்டபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 109

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 17

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (2), பாரிஸ், ப்ரான்ஸ்

     

    நாம் இப்பொழுது லூவ்ரெ அருங்காட்சியகத்தில் 6ம் எண் அறைக்கு வந்திருக்கின்றோம்.  நேராக அங்கு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மோனா லிஸா படத்தைத் தான் இப்போது பார்க்கின்றோம். டாவின்சியின் மோனா லிஸா !

    இரண்டு பக்கங்களும் கைப்பிடியுள்ள ஒரு மர நாற்காலியில் அமர்ந்து இடது பக்க கைப்பிடியில் தன் இரு கைகளையும் வைத்துக் கொண்டு இடது புறமாக தன் தலையைத் திருப்பி அதே சமயம் நேராகப் பார்க்கும் வகையில் இந்த உருவம் வரையப்பட்டிருக்கின்றது. மோனா லிஸாவிற்குப் பின்புறம் தெரிவதாக அமைந்துள்ள இயற்கை காட்சியில் இரண்டு வகையான காட்சிகளின் தன்மையைக் காண முடியும். முதலில் இயற்கை காட்சியாக சிறு குன்றுகள் பாதைகள் போன்றவை இயற்கையின் வர்ணங்களாகவும் அதன் பின்னே அடுத்து தெரியும் காட்சி கற்பனை உலகம் போல வெளிர் நீல நிறத்தில் விரிந்த பரந்த ஒரு பகுதியைக் காட்டுவது போலவும் அமைந்திருக்கின்றது.

     unnamed

    மோனா லிஸாவின் உருவ அமைப்பையும் உடைகளையும் காணும் போது மிக எளிமையான தோற்றத்தை இப்படம் அளிப்பதை உணர முடியும். அரச குடும்பத்து பெண்மணியாகவோ பொருள் வசதி படைத்த ஒரு பெண்ணின் உருவமாகவோ காட்டாமல் ஒரு சாதாரண பெண், ஆளுமை நிறைந்த திடமான மனத்துடனான ஒரு பெண்ணாகவே மோனா லிஸா காட்டப்படுகின்றார். அவரது தெளிவான பார்வை இப்படைப்பின் தன்மையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. நகைகள் ஏதும் கழுத்திலோ கைகளிலோ காதிலோ காணப்படவில்லை. அகன்ற கழுத்துப்பகுதி தெரியும் வகையில் அதே வேளை நுணுக்கமாகத் தைக்கப்பட்ட ஒரு பழுப்பு நிற ஆடையுடனும் தலையில் முடியின் மேல் மெலிதான ஒரு துணியை அணிந்திருப்பதையும் காணலாம்.

    பல அரிய கண்டுபிடிப்புகளையும் கலைச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உலகுக்கு அளித்த மாபெரும் சிற்பி லியோனார்டோ டாவின்சி. இவரைப் பற்றியும் இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளையும், சிந்தனைகளையும் பற்றி யோசிப்பதே எனக்கு பல வேளைகளில் மனத்தை மகிழ்விக்கும் ஒரு விஷயமாக அமைந்து விடும். டாவின்சியின் அறிவியல் கலைப்படைப்புகளைத் தனித்தனியாக எடுத்துப் பார்த்து அவற்றை அவரது பார்வையின் ஊடாக சிந்தனையின் பாதையில் சென்று விவரிக்க வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மனத்தில் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு முறை நேரமும் வேளையும் கூடி வரும் போது நிச்சயம் செய்ய நினைத்திருக்கின்றேன். இப்போது மோனா லிஸாவை மட்டும் பார்ப்போம்.

    மோனா லிஸாவை யார் கேட்டு, எத்தகைய சூழலில், யாருக்காக டாவின்சி வரைந்தார் என்பது தெளிவாக அறியப்படாத ஒன்று. கிடைக்கின்ற  பழைய வஸாரியின் ஆட்டோ பயோக்ராஃபியிலிருந்து  இந்த  ஓவியத்தை Francesco del Giocondo என்ற வர்த்தகருக்காக அவரது மனைவியின் (Gherardini) உருவப்படத்தை 1502ல் அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் வரவை நினைத்து மகிழவும் புது மனைக்குச் சென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடவும் அவரது வேண்டுதல் படி டாவின்சி வரைந்த ஒரு ஓவியம் என்று தெரிகிறது.  ஜியோர்ஜியோ வஸாரி இந்தச் செய்தியை விவரிக்கும் வகையில் ஒரு பகுதியை தனது சிற்பக் குறிப்பு தொகுப்பு நூலில் பதிகின்றார். வஸாரி, டான் ப்ரவ்னின் புதிய நாவலான இன்பர்ஃனோவில் மிக முக்கிய பாத்திரம் என்பதையும் இவ்வேளையில் நாம் குறிப்பிட வேண்டும். வஸாரி இப்பதிவில் மோனா லிஸா உண்மையில் கெரார்டினியின் உருவம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட இதுவே  மோனா லிஸா உருவான கதை என முழுதும் நம்பி விடவும் முடியாது என்றே தெரிகிறது.

    மோனா லிஸா எனும் இப்படம் ஒரு சாதாரண ஓவியம் அன்று.  ஐரோப்பாவின் ரெனைஸான்ஸ் சிந்தனை மாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்த பல கலைப்படைப்புக்களில் பிரதான நிலையைப் பெறும் ஒரு ஓவியம் இது. இது மட்டுமன்றி தற்கால சூழலில் ஐரோப்பா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பிரபலமடைந்த ஒரு ஓவியம் இது என்பது யாரும் மறுக்கவும் முடியாது.

    மோனா லிஸாவின் படங்களின் பிரதிகளை பலர் உருவாக்கினாலும் டாவின்சி இந்த  ஓவியத்தை வரைந்த வேளையில் அவருக்குப் பின்புறமாக அமர்ந்து டாவின்சியின் மாணவர் ஒருவர் அதே ஓவியத்தை வரைந்தார் என்பதுவும் அவ்வோவியம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தபோது அதனைப் பெற பலர் முயன்றாலும் இறுதியில் அவ்வோவியம் ஸ்பெயின் மட்ரிட்டின் மாபெரும் அருங்காட்சியகமான ப்ராடோவின் விலைமதிக்க முடியாத அரும்பொருட்களின் வரிசையில் இணைந்து கொண்டது என்பதுவும் உண்மை. இந்த ஓவியத்தையும் நான் நேரில் ப்ராடோ அருங்காட்சியகத்திலேயே பார்த்து புகைப்படங்களும் எடுத்துள்ளேன். டாவின்சியின் மோனா லிஸாவின் முகத்தில் தெரியும் சிறு முதிர்ச்சி இல்லாத சற்று இளமை தெரியும் முகச் சாயலோடு இந்த மோனா லிஸாவின் உருவப்படம் இருக்கும்.

    unnamed (1)

    டாவின்சி ஒரு சாதாரண மனிதரோ வெறும் கலைஞரோ அல்ல. புதிய உலகம் படைக்க வந்த சிற்பிகளில் சிறப்பிடம் பெறும் ஒருவர். ஒரு வகையில் டாவின்சி தனது மனத்தின் செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்த பயன்படுத்திய ஒரு கருவியே  மோனா லிஸா என்பது தற்கால குறியீடு வல்லுனர்கள் (Symbologists)  கூறும் தகவல்.

    உற்று நோக்கும் போது மோனா லிஸாவின் முகத்தில் புருவம் இல்லாமையும், இமைகளில் உரோமம் இல்லாததையும் நாம் காண்போம். வலது கையை இடது கைமேல் வைத்திருக்கும் போதும் வெளியே தெரியும் கர்ப்பமான பெண்ணின் பெரிய வயிற்றுப் பகுதி மேரி மெக்டலின் ஏசு கிறிஸ்து இறந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்தார் என்ற வகையில் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த நிகழும் வாதங்களுக்கும் காரணமாக அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ அடிப்படை நம்பிக்கைகளின் ஆதாரங்களை அசைக்க முயலும் ஒரு மாஸ்டர் பீஸ் மோனா லிஸா என்பது கடந்த சில ஆண்டுகளில் பரவி வரும் ஒரு தகவலாகவும் உள்ளது. இதனைச் சுற்றி அமைந்ததாக வருவதே டான் ப்ரவ்னின் டாவின்சி கோட் நாவலும் அதனை மையமாக வைத்து சோனி ப்ரொடக்‌ஷன்ஸ் எடுத்த அதே தலைப்பிலான திரைப்படமும். இந்த நூல்கள் மட்டுமன்றி குறிப்பிடத்தக்க பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  தொடர்ந்தும் வெளிவருகின்றன. உதாரணமாக, Fear Not, Buried by the Church, The truth and fiction in the DaVinci Code, Gospel Code, the DaVinci Hoax  போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    மோனா லிஸாவின் மந்திரப் புன்னகையின் பின்னணி ரகசியத்தை அறிவது நமக்கு எளிதல்ல. தொடரும் ஆய்வுகளுக்கு மேலும் பல ஆவணங்கள் கிடைத்தால் ஆய்வுலகம் மகிழ்ச்சியடையும்.

    லூவ்ரெ அருங்காட்சியகத்தின் உள்ளே சுவரின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் மோனா லிஸா உருவப்படத்தை நேரில் காணும் அனுபவம் பெற இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். பல கோணங்களில் இப்பக்கத்தில் மோனா லிசா பற்றிய தகவல்களைப் பெறலாம்.  http://musee.louvre.fr/oal/joconde/indexEN.html

    தொடர்ந்து அடுத்த அறைகளுக்குச் செல்வோம். லூவ்ரே நமக்கு பல அதிசயங்களை வைத்திருக்கின்றது.

    தொடரும்..!

    Share
  • வாழும் தமிழே வாலி! (1)

    தமிழ்த்திரையுலகில் தமிழ் மொழியை தங்க சிம்மாசனத்தில்

    தம் பாடல் வரிகளால்  அமரவைத்த பெருமைக்குரியவர்களில் காவியக்கவிஞர் வாலி அவர்களும் முக்கிய இடம் வகிக்கிறார்.  ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்தம் எண்ணங்கள்எழுத்துக்கள் – வண்ணத்தமிழ் உலாவாக மக்கள் மனதில் நடைபெற்றது  என்பதனை..

    காவியக் கவிஞர் வாலியின் புகழ்பாடி

    காவிரிமைந்தன் எழுதும்

    வாழும் தமிழே வாலி!

    தொடர் ஆரம்பம்!!

     

    போற்றுதலுக்குரிய இவர்தம் தமிழ்ப்பணி இவரை அங்குலம் அங்குலமாக உயர்வுபெறச் செய்திருக்கிறது.  மறக்க முடியாத மாணிக்க வரிகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் கவிஞர் வாலி அவர்களின் பெயரில்  உள்ள அர்த்த புஷ்பங்கள் ஆச்சர்யம் தரவைக்கின்றன. புராணத்தில் வருகின்ற வாலி’ எனும் பாத்திரப் படைப்பின்படி. எதிரே உள்ள பலசாலியின் பலத்தில் பாதியைப் பெற்றுவிடுவதாக உள்ளது.  அஃது உண்மையோ என்னவோ.. தமிழ்த்திரையுலகில்  தமிழ்மொழிக்கு அணிகலன்கள் பூட்டிய கவிஞர் பெருமக்கள் தஞ்சை ராமையாதாஸ்உடுமலை நாராயண கவிகவிஞர் மருதகாசிபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்கவியரசு கண்ணதாசன் முதலான ஜாம்பவான்கள் முன் – அவர்தம் திறமையெல்லாம் கலந்த கலவையாய்.. முத்தமிழில் இவர் இயற்றியுள்ள அரும்பெரும் பாடல்கள் – வார்த்தை வளம்அர்த்தச் செறிவுகள்மொழியின் ஆளுமைஇசையோடு இணைந்த அற்புதங்கள்,உள்ளடக்கம்பொருளடக்கம்மென்மை என எண்ணிலா இன்பங்களை படிக்க.. படிக்க.. ரசிக்க.. ரசிக்க.. கேட்க.. கேட்க.. இன்பம் தருகின்ற கற்பகத்தருவாய் நிலைத்து நிற்கின்றன.

    மேலும்வாலிபம் என்கிற சொல்லிலும் முன்பாதி தான்’ என்பதை முழுக்க முழுக்க உண்மையாக்கிடும் இவர்தம் காதல் பாடல்கள் கனிரசம் சொட்டச் சொட்டத்  ததும்பி வழிவதை எவர் மறுக்க முடியும்?  அருமையான கவிஞர் இவரை தமிழ்த்திரையுலகம் சரியாகக் கண்டெடுத்துஆதரித்துஊக்குவித்து உயர்வுபெறச் செய்தது தமிழுக்கு கிடைத்த பெருமையென்றே சொல்லலாம்.  இவர்தம் பாட்டுமொழி கலந்த பல்சுவைகலந்த தேவாமிர்தம்! இவரின் தமிழாற்றல் நாடறிந்த ஒன்றுமட்டுமின்றி எந்த ஒரு தமிழனையும் தன் வசமிழுக்கும்! 

    இவரின் பாடல்களில் முகிழ்த்தல் என்பது ஒரு சுகானுபவம்! இவரின் கற்பனைச் சிறகுகள் எட்டியிருக்கும் உயரம் அளவிடற்கரியது!  எளிமையான சொற்களையே கையாண்ட போதும்.. அவை தக்க இடத்தில்.. இடம்பெறுவதால் வலிமை மிக்கவையாய் காட்சி தருகின்றன! காட்சியமைப்புகதையோட்டம்பாத்திரப் படைப்பு இவற்றின் தன்மைகளை ஒட்டுமொத்தமாய் வார்த்தைகளில் வடித்துக் காட்டும்போது கவிஞரின் கைவண்ணம் மிளிர்கிறது.  பட்டுத் தெறிக்கும் முத்துச் சரங்களாய்  வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் நம் உள்ளத்திரையிலும் நிழலாடுகின்றது.  இத்தகு கவிஞரை நேரிலே  கண்டு நெஞ்சம் நிறைய உரையாடி மகிழ்ந்திருக்கிறேன் என்பது மட்டிலா ஆனந்தம் கொள்ளச் செய்கிறது!  கட்டுக்கடங்காத காவிரிபோல்  சொற்களின் சுவையூட்டம்பேசுகின்ற போதிலும் வெட்டவெளிச்சமாய் தென்பட்டதை மறக்க முடியுமா?  உள்ளம் திறந்து பேசுகின்ற ஒரு உன்னத மனிதரை எண்ணியெண்ணி நெகிழ்கிறேன்.

    அவரின் கவியாற்றலைஎனது சிறுவயது முதற்கொண்டு பல்வகைகளில் கேட்டுச் சுவைத்த ஒரு ரசிகனாய்.. குறிப்பாக நான் கடவுளாக வணங்கும் என் கண்ணதாசனைக் காணுகின்ற பேற்றினை ஒருமுறைகூடப் பெறவில்லை என்கிற ஆதங்கம் தீர.. அவரோடு நேரில் பலமுறை சந்தித்து உரையாடுகின்ற அதிர்ஷ்டசாலியாய்.. என்ன ஓய்.. என்று ஓங்காரமாய் அழைக்கின்ற பாக்கியம் பெற்றவனாய் – அவர்தம் 108 பாடல்கள் பற்றி  நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலை அவரிடம் சமர்பித்து கவிஞரின் பரிபூரண ஆசிகளைப் பெற்றதோடு.. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நீதான் பாலம் என்று அத்திருமகன் மொழிந்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்.

    அதில் ஒரு பங்களிப்பாக.. வாழும் தமிழே வாலி என்கிற இந்தத் தொடர் இன்றுமுதல் தொடங்குகிறது! உங்கள் பார்வைக்காக.. உங்கள் பின்னூட்டங்களுக்காக.. உங்கள் ரசனைக்காக!!

    இஃது திரைப்பாடல்கள் மக்கள் மனதில் எத்தனை தாக்கத்தை தந்திருக்கின்ற என்பதற்கான சாட்சியாகும்.  நன்றிப் பெருக்கோடு இனிமையான அந்த வார்த்தைப் பிரயோகங்களால் கட்டுண்டுபோன இதயங்களின் சார்பாக.. கவிஞர் வாலி அவர்களின் ஆகச்சிறந்த பாடல்களைப் பற்றிய என் கருத்துக்குவியல்களை உங்கள் முன் படைக்கிறேன்.  இதில் உள்ள சிறப்புகள் அனைத்தும் காவியக் கவிஞர் வாலி அவர்களுக்கே காணிக்கையாக்குகின்றேன்!

    காற்று வாங்கப் போனேன்..

    காலங்களை வென்று சில நூறு பாடல்களே சிரஞ்சீவிதம் பெற்றுத் திகழ்கின்றன எனில் அதற்கு காரணம் வார்த்தை வளம், கருத்துச் செறிவு, கற்பைன அழகு, பொருத்தமான இசையமைப்பு, பாடிய குரல் என்று இதற்கான கூட்டணி நம் கண்முன்னே நிழலாடுகிறது.

    பலமுறை கேட்ட பாடலிது என்றாலும்  மறுமுறை கேட்கத்தூண்டினால் அதுவே பிரசித்தி பெற்ற பாடலாகும். இதோ.. அவ்வரிசையில் காவியக் கவிஞர் வாலி அவர்களின் கற்பனை முகிழ்ப்பில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையருவியில் ஏழிசை மன்னர் டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரையில்  தோன்றிடும் கலங்கரை விளக்கம் பாடலுக்கு இன்னும் சில விளக்கங்கள்.. அல்ல.. சுவையான சம்பவம் ஒன்று!!

    இப்பாடல் இயற்றப்பட்ட நாளில் நடந்த அந்த சுவையான சம்பவம் கவிதைபோலவே இனிமையானது! ரசிக்கத்தக்கது!! சரவணா பிலிம்ஸாரின் தயாரிப்பில் அமரர் கே.சங்கர் இயக்கத்தில் உருவான இப்பாடல் பதிவின்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் கவிஞர் வாலி அவர்களிடம் தான் அணிந்திருந்த விலைமதிப்பான தங்கச் சங்கலியைக் கழற்றி ஆர்மோனியத்தின்மீது வைத்து நான் பாராட்டும் அளவிற்கு ஒரு அருமையான பல்லவியைத் தந்து இந்தச் சங்கலியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம். கவிஞரும் தனது கற்பனா வானத்தில் உலவி..

    காற்றுவாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..

    அதைக் கேட்டுவாங்கிப் போனாள் அந்தக் கன்னி என்னவானாள்?

    என்கிற பல்லவியை எழுதிக்காட்டினாராம்.  மெல்லிசை மன்னர் அப் பல்லவியை மெச்சிப் பாராட்டி.. தனது தங்கச் சங்கலியை எடுத்து வாலி  அவர்களுக்கு வழங்க.. அதை மறுத்த வாலி அவர்கள்.. தான் இதைவிட மதிப்புமிக்க ஒன்றையே  பெற விரும்புவதாக தெரிவித்தாராம்!  திடுக்கிட்ட மெல்லிசை மன்னர் இதைவிடவா என்று திரும்பக் கேட்டார்.  ஆம்.. உங்கள் அன்பும் ஆசியும் என்றென்றும் வேண்டும் என்றார்  வாலி!  கவிஞரின் உள்ளம் கண்டு ஆனந்த லஹரியில் மூழ்கிய எம்.எஸ்.வி. இதயம் நிறைய வாழ்த்தியதோடு.. என்றும்  அவருடன் கைகோர்த்து தமிழ்த்திரைக்கு பல்லாயிரம் பாடல்கள் வழங்கியிருக்கிறார் என்பதே வெற்றிச் சரித்திரம்!

    பாடல் வரிகளில் ஒவ்வொரு சரணத்திலும் உள்ள கோடி சுகம் என்ன என்பதை நான் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்..

    என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை..

    என் பார்வை நீந்துமிடவோ அவள் பருவமென்ற ஓடை..

    நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்

    அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்!

    இதுபோல் பாடல் பிறந்த கதைகள் எத்தனையோ இருந்தாலும் செவிக்கு வந்து சேர்ந்தவை சிலதான் எனும்போது இதற்காக ஒருவரை ஒவ்வொரு கவிஞரும் நியமித்திருந்தாலும் நலமாகவே இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது!!

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

    http://www.youtube.com/watch?v=8rL9RjU8A6U

     
    நான் காற்று வாங்கப் போனேன்

    நான் காற்று வாங்கப் போனேன்
    ஒரு கவிதை வாங்கி வந்தேன்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    நடை பழகும்போது தென்றல்
    விடை சொல்லிக்கொண்டு போகும்
    அந்த அழகு ஒன்று போதும்
    நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    நல்ல நிலவு தூங்கும் நேரம்
    அவள் நினைவு தூங்கவில்லை
    கொஞ்சம் விலகி நின்ற போதும்
    என் இதயம் தாங்கவில்லை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் உள்ள என்ற ஊஞ்சல் 
    அவள் உலவுகின்ற மேடை
    என் பார்வை நீந்தும் இடமோ
    அவள் பருவம் என்ற ஓடை
    அதைக் கேட்டு வாங்கிப் போனால்
    அந்தக் கன்னி என்ன ஆனாள்
    (நான்..)

    படம்: கலங்கரை விளக்கம்
    பாடியவர்: TM சௌந்தர்ராஜன்

     

    காவிரிமைந்தன்

     
     
     
     
     
    Share
  • வியர்வையூர் – (2)

    பிச்சினிக்காடு இளங்கோ 

     

    இவையும்
    இன்னபிறவும் இருக்கும்
    இல்லமாய் மாறியது
    கொஞ்சநாட்களாகத்தான்

    இரண்டு ஆண்டுகளுக்குமுன்
    அந்தவீட்டில்
    மனம் திறந்த சிரிப்பில்லை

    மகிழ்ச்சி விளைந்த
    முகமில்லை

    கையில் செலவுக்குப்
    பணமில்லை

    நிலம் கொஞ்சம்
    இருந்தது
    மாடும் மனையும்
    இருந்தன
    சொந்தங்கள் எல்லாம்
    உண்டு பெரிதாய்…. (more…)

    Share
  • வார ராசி பலன்-09.12.2013-15.12.2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  வியாபாரிகள் புதிய முயற்சியில் இறங்குமுன் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். பணியில் இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உடனிருப்பவர்களிடம் வன்மம் பாராட்டாமல் நடந்து கொள்ளுங்கள். உங்களின் கௌரவம் தானே உயரும். மாணவர்கள் எவரையும் எளிதில் நம்பி விடுவது சில சமயங்களில் சிரமத்தைத் தரலாம். எனவே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்தாலும், வீண் செலவினங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வேண்டிய பொருட்களை வாங்க இயலும்.
    ரிஷபம்:சக ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறைந்தாலும், பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் வேலைகளை முடித்து நல்ல பெயரைப் பெறுவர். பெண்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் பிரச்னைகளை கையாளுவார்கள். ஏனோ தானோ வென்று செயல்படும் ஊழியர்களை வியாபாரிகள் இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் தகுந்த ஆலோசனையை பெற்று முடிவெடுத்தால், நஷ்டமிராது. கலைஞர்கள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயலுபவர்களை இனங்கண்டு ஒதுக்கி விட்டால், வாழ்க்கை மகிழ்வாக அமையும்.
    மிதுனம்: உறவுகள் காட்டும் ஆதரவால், பெண்கள் தங்கள் ஆக்கப் பூர்வமான எண்ணங்களை செயலாய் மாற்றுவது எளிதாக இருக்கும். வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில், கண் மூடித்தனமாக யாரையும் நம்பாமல் விழிப்புடன் இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாவதால், கலைஞர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவர். சுய தொழில் புரிபவர்களைத் தேடி வரும் வாய்ப்புகளை கடின உழைப்பின் மூலம் தக்க வைத்துக் கொண்டால், வருமானத்தில் எந்தக் குறைவும் இராது.
    கடகம்: கடன் தொல்லைகள் குறைவதால், பெண்கள் இல்ல த்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பார்கள். வாய்ப்புகள் உங்களை நாடி வரும் போது அதனைத் திறம்பட பயன்படுத்தினால் கலைஞர்களின் உயர்வும், வெற்றியும் உறுதி. வியாபார விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும், உங்கள் சேவையை நாடி வரும் வடிக்கையாள்ர்களின் எண்ணிக்கையும் கூடும். மேற்படிப்புக்கான வாய்ப்புகள் கனிந்து வருவதால், மாண வர்கள் விரும்பிய பாடத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதுடன் மற்றவரின் பாராட்டையும் பெற்று மகிழ்வர்.
    சிம்மம்: உடன்பிறந்தவர்கள் அனுசரணையாய் இருப்பதால், சொத்து விஷயங்களை லாபகரமாய் முடித்துக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாய் இருப்பது அவசி யமாகும். குடும்ப நலம் சிறக்க பெண்கள் காரசாரமான உரையாடல்களைத் தவிர்த்து விடவும். சோம்பலுக்கு விடை கொடுத்தால்தான் சிறப்பான மதிப்பெண் பெற முடியும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்வது நல்லது. கலைஞர்கள் சரளமான பணப்புழக்கம் இருந்தாலும் , தவறான பாதைக்கு மற்றவர் அழைத்துச்செல்லும் அளவிற்கு நெருங்கிப் பழக வேண்டாம். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
    கன்னி:  இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை இடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.
    துலாம்: மாணவர்கள் எந்த சூழலிலும் பொறுமையைக் கடை பிடிப்பது நல்லது. வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறான வேலைப்பளுவால், தொல்லைப்பட நேரிடலாம். எனவே திட்டமிட்டப்படி வேலைகளை விரைந்து முடிப்பதில் கவனமாய் இருங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனில் காட்டும் அக்கறைக்கேற்ப அவர்கள் பெறும் மதிப்பெண்ணும் கூடும். ஏறுக்கு மாறாக நடந்து கொள்ளும் பெண்கள் உறவுகளிடம் இதமான அணுகுமுறையை கையாண்டால், பிரச்னைகள் தானே அமுங்கி விடும். இந்த வாரம் வீண் செலவும், நெருக்கடியும் பொது வாழ்வில் இருப்பவர்களின் பொறுமையை சோதிக்கலாம்.
    விருச்சிகம்: கலைஞர்கள் தங்கள் பேச்சில் சினம் கலவாமல் பார்த்துக் கொண்டால், சிறப்பான பெயரும், செயல்பாடும் உங்கள் வசமாகும். வியாபாரிகள் பணியாளர்களுக்கு பணம் கொடுப்பதில் கவனமாய் இருந்தால், வீண் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். பெண்கள் எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் உற்சாகத்தைக் குறைக்க இடம் தராதீர்கள். பயணங்கள், இனிமையான அனுபவம், என்று மாணவர்களுக்கு பொழுது கலகலப்பாகச் செல்லும். பிள்ளைகள் சளியால் அவதிப்படலாம். புதிய வீடு வாங்கும் முயற்சியில் நிதானமாகச் செயல்படுவது நல்லது
    தனுசு: இந்த வாரம் வீண் செலவால், உங்கள் பணம் கரையும். மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றாமலிருக்கும். வியாபாரிகள் பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கமறிந்து செயல்பட்டால் பெரும் தொகை முடங்காமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் காலத்திற்கேற்ப மாறுதல்களை மேற் கொண்டால், போட்டிகளை முறியடிப்பது சிரமாய் இராது. கலைஞர்களுக்கு லாபம் நல்கும் பெரிய நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை சற்று ஒத்திப் போடுவது நல்லது.
    மகரம்: மாணவர்கள் முன் கோபத்தை வளர விடாமலிருந்தால் அதிக நன்மையும் லாபமும் கிடைக்கும்.கலைஞர்கள் பாடுபட்டு தேடிய நல்ல பெயரை பழுதாக்கும் விஷயங்களிலிருந்து விலகியிருப்பது நல்லது.பொது வாழ்வில் இருப்பவர்கள் திடமான மனதுடன் இருந்தால் நல்ல வழிகாட்டல் உங்களை மேலும் உயர்த்தும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், பிறரின் தலையீடின்றி பணிகளை செய்ய இயலும். வியாபாரிகள் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களிடம் கவனமாக இல்லாவிட்டால், வீண் தொல்லை வாசலில் வந்து நிற்கும்.
    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் வகுப்பறைகளில் வீண் பேச்சு,கேலி ஆகியவற்றில் கலந்து கொள்ளாமலிருந்தால், ஆசிரியரின் அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்ளாலாம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் கவனமாக இருப்பது மூலம் தேவையற்ற நஷ்டத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கௌரவம் நிலைத்திருக்க நேர்வழியில் நடப்பது சிறந்ததாகும். கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளை நழுவ விடாமல் புத்திசாலித்தனமாக செயல்படுவது மூலம் தங்கள் வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.
    மீனம்: குடும்பத்தில் உள்ளவர்கள் பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் .தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரிகள் எடுக்கும் பணியில் நிதானத்துடன் செயல்பட்டால், சிக்கல்கள், வேண்டாத மனௗளைச்சல் ஆகிய இரண்டையும் தவிர்த்து விடலாம். கலைஞர்களுக்கு அவர்களின் தன்னம்பிக்கை முயற்சிக்குத் தக்க விதத்தில் துணை புரியும். பணியில் இருப்பவர்கள் வேலை விஷயத்தில் மெத்தனமாய் இராமல், கவனத்துடன் இருத்தல் அவசியம்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 21ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    பிறப்பைத் தவிர்த்தையிலை பின்னாகக் கொண்டையிலை
    இறப்பைத் தவிர்த்தையிலை என்னென்று கேட்டைய்லை
    பாசமெரித்தையிலை பரதவிப்பைத் தீர்த்தையிலை
    பூசியநீற்றைப் புனை என்று அளித்தையிலை
    அடிமையென்று சொன்னையிலை அக்குமணி தந்தையிலை
    விடுமுலகம் போக்கி உன்றன் வேடம் அளித்தையிலை
    உன்னிலழைத்தையிலை ஒன்றாகிக் கொண்டையிலை
    நின்னடியார் கூட்டத்தில் நீ அழைத்து வைத்தையிலை
    ஓங்குபரத்துள் ஒளித்த அடியார்க்கு அடியான்
    ஈங்கோர் அடியான் எமக்கென்று உரைத்தையிலை
    நாமந்தரித்தையிலை நானொழிய நின்றையிலை
    சேவவருளி எனைச் சிந்தித்தழைத்தையிலை
    முத்தி அளித்தையிலை மோனங் கொடுத்தையிலை
    சித்தி அளித்தையிலை சீராட்டிக் கொண்டையிலை
    தவிர்ப்பைத் தவிர்த்தையிலை தானாக்கிக் கொண்டையிலை
    அவிப்பரிய தீயாய் என் ஆசை தவிர்த்தையிலை
    நின்ற நிலையில் நிறுத்தி எனைவைத்தையிலை
    துன்றும் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை
    கட்ட உலகக் காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை
    நிட்டையிலே நில்லென்று நீ நிறுத்திக் கொண்டையிலை. 1.

    கன்னிவன நாதனே கன்னிவன நாதனே, மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்த்தாயில்லை, பிறந்தபின் தடுத்து ஆட்கொண்டாயில்லை, இறப்பையும் தடுத்ததில்லை, ஏன், எதற்கு என்று எனை எதுவும் வினவவும் இல்லை. உறவையும் பாசத்தையும் நீக்கியபாடில்லை, பரிதவித்து ஏங்குவதையும் தீர்க்கவில்லை, நெற்றியில் இடும் திருநீற்றையும் அணியும்படி எனக்குத் தரவில்லை. நான் உனது அடிமை என்பதை ஏற்று அறிவித்தாயில்லை, அணிந்துகொள்ள ருத்திராக்ஷ மாலையும் தரவில்லை, சாச்வதமில்லாத இந்த உலகத்தை மாயம் என்பதை உணர்வித்து உன் காட்சியைக் கொடுத்தாயில்லை. உன்னிடம் என்னை அழைத்துக் கொள்ளவில்லை, உன்னோடு என்னையும் ஒன்றாக்கிக் கொண்டாயில்லை. கூடிநிற்கும் உன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்தாயில்லை. உன்னையே கதியென்று ஏற்றுக் கொண்ட அடியார் கூட்டத்தில் இவனும் ஒருவன் என்று என்னை அறிமுகம் செய்தாயில்லை. என்னை அடியவன் எனப் பெயர் சொல்லி அழைக்கவில்லை, ஆணவ மலத்தை அழித்தாயில்லை, உனது திருவருட் கருணையில் பிணைத்தாயில்லை. முக்தி தந்தாயில்லை, மோன நிலையை அளித்தாயில்லை, அட்டமா சித்திகளை அருளிச் செய்தாயில்லை. பரிதவிப்பை நீங்க்கினாய் இல்லை, என்னைச் சிவமாய்க் கொண்டாயில்லை. யோகத்தில் நிலைத்திட செய்தாயில்லை. யோகம் செய்யும் சாதனமான தீய அகக் கரணாதிகளை அடக்கினாயில்லை. சிரமம் தரும் உலக வாழ்விலிருந்து நீங்கி நிற்கும் மார்க்கத்தை அருளினாயில்லை, நிஷ்டையில் நிலைத்திரு என உபதேசம் செய்யவும் இல்லை.

    கன்னிவனநாதா கன்னிவனநாதா
    கடைக்கண் அருள்தாடா கன்னிவனநாதா
    கெடுக்கும் மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா
    காதல் தணியேனோ கண்டு மகிழேனோ
    சாதல் தவிரேனோ சங்கடந்தான் தீரேனோ
    உன்னைத் துதியேனோ ஊர்நாடி வாரேனோ
    பொன்னடியைப் பாரேனோ பூரித்து நில்லேனோ
    ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
    பாங்கான தண்டை பலபணியும் பாரேனோ
    வீரகண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
    சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
    இடையில் புலித்தோல் இருந்தநலம் பாரேனோ
    விடையில் எழுந்தருளும் வெற்றிதனைப் பாரேனோ
    ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ
    மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ
    மாண்டார் தலைப்பூண்ட மார்பழகைப் பாரேனோ
    ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ
    கண்டங்கறுத்து நின்ற காரணத்தைப் பாரேனோ
    தொண்டர் குழுவில் நின்ற தோற்றமதைப் பாரேனோ
    அருள் பழுத்த மாமதியாம் அனனத்தைப் பாரேனோ
    திருநயனக் கடைஒளிரும் செழுங் கொழுமைப் பாரேனோ
    செங்குமிழின் துண்டம் வளர் சிங்காரம் பாரேனோ
    அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ
    முல்லை நிலவெறிக்கு மூரல் ஒளி பாரேனோ
    அல்லார் புருவத்து அழகுதனைப் பாரேனோ
    மகரங்கிட்னதொளிரும் வண்மைதனைப் பாரேனோ
    சிகரமுடியழகும் செஞ்சடையும் பாரேனோ
    கங்கையொடு திங்கள் நின்ற காட்சிதனைப் பாரேனோ
    பொங்கரவைத் தான் சடையில் பூண்டவிதம் பாரேனோ
    சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ
    எருக்கறுகு ஊமத்தை அணி ஏகாந்தம் பாரேனோ
    கொக்கிறகு சூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ
    அக்கினியை ஏந்திநின்ற ஆந்தம் பாரேனோ
    தூக்கிய காலும் துடியிடையும் பாரேனோ
    தாக்கு முயலகன் மேல் தாண்டவத்தைப் பாரேனோ
    வீசுகரமும் விகசிதமும் பாரேனோ
    ஆசையளிக்கும் அபயகரம் பாரேனோ
    அரிபிரமர் போற்ற அமரர் சயசய எனப்
    பெரியம்மை பாகம் வளர்பேரழகைப் பாரேனோ
    சுந்தர நீற்றின் சொகுசுதனைப் பாரேனோ
    சந்திரசேகரன் ஆய்ந்த் தயவுசெய்தல் பாரேனோ.

    மதுரைக்கரசே, கன்னிவனநாதா கடம்பவன ஈசா! கடைக்கண் பார்த்து கருணை புரிவாய், ஆணவ மலம் என் மனத்தை ஆட்டிப் படைக்காமல் அதை வீழ்த்தி என்னிடம் நெருங்கி வரப் பார்ப்பாயே! நின் அருட்பார்வையொன்றை என்னை வீழ்ச்சியிலினின்றும் தடுத்து நிறுத்தும். உன் அருட்பார்வை கிடைக்கப் பெற்றால் உலகத்துப் பற்றை ஒழிப்பேன்; உந்தன் மலர்த்திருப்பதம் கண்டு தரிசிப்பேன், மரணத்தை வெல்வேன், சங்கடங்கள் தீர்வேன். உன் அருள் கிட்டிவிட்டால் உன்னை எப்போதும் துதிப்பேன், நீ கோயில்கொண்ட தலங்கள் தோறும் சென்று தரிசித்து மகிழ்வேன், நினது திருமலரடிகளைத் தொழுது பூரித்து நிற்பேன். பிரணவத்தின் தோற்றமாய் அமைந்துள்ள நின்றன் சிலம்பின் அழகைக் கண்டு களிப்பேன், காலின் அசைவில் ஓசையெழுப்பும் நினது தண்டையொலியை பரிவோடு பார்ப்பேன். நடனமாடும் நின் திருப்பாதத்தில் அணிந்த வீரகண்டாமணியின் வெற்றிகளைக் காண்பேன், சூராதி சூரர்கள் உன் புகழை வாயாரப் பேசுவதைக் கேட்டு மகிழ்வேன். அரையில் அணிந்த புலித்தோலின் அழகைக் கண்டு களிப்பேன், ரிஷப வாகனம் ஏறி காட்சி தரும் இன்பத்தை நுகர்வேன். தாருகவனத்தில் மோதிய யானையைக் கொன்று மேலே போர்த்திய காட்சியக் கண்டு களிப்பேன், மானைப் பிடித்து கையில் வைத்த நின் தாமரைக் கரங்களைக் கண்டு மகிழ்வேன். கல்பகோடி ஆண்டுகள் வாழ்ந்த பிரம்மாக்களின் சிரங்களை மாலையாய் அணித்த அழகைக் காண்பேன், என்னுடைய இறைவன் இவன் என்று மகிழ்ந்து திரிவேன். நினது பொன்னிறத்து கண்டம் கருமை நிறம் ஆனதன் காரணத்தை அறிந்து கொள்வேன், மெய்யன்பர்களோடு உவந்து நிற்கும் காட்சியைக் காண்பேன். கனிவு ததும்பும் நின் நிலவொத்த முகத்தைக் காண்பேன், கடைவிழியின் அழகை மனம் களித்துப் பார்ப்பேன். சிவந்த குமிழ மலரையொத்த உன் நாசியழகைக் கண்டு மகிழ்வேன், கொவ்வைக் கனியினும் சிவந்த உன் உதட்டழகைப் பார்த்து மகிழ்வேன். முல்லை மலரைப் போன்ற உன் பல்வரிசை அழகைக் கண்டு மகிழ்வேன், கரிய நெற்றிப் புருவ அழகைக் கண்டு மகிழ்வேன். மகர குண்டலம் அணிந்த நின் காதின் அழகைக் காண்பேன், திருமுடியில் துலங்கும் சிவந்த சடையழகைக் காண்பேன். கங்கையும் நிலவையும் அணிந்த நின் தலைமுடியை எண்ணி மகிழ்வேன், சீறும் பாம்பை முடியில் அணிந்த அழகைக் காண்பேன். சரக்கொன்றை மலரணிந்த நின் கற்றைச் சடையழகைக் காண்பேன், எருக்கு, அறுகு, ஊமத்தை மலர்களை அணிந்த நின் அழகைப் பார்ப்பேன். கொக்கின் இறகைச் சூடிய அழகைக் காண்பேன், இடக்கரத்தில் அனலை ஏந்திய உன் அழகினை நன்கு பார்ப்பேன். நடனமாட தூக்கிய அந்த குஞ்சித பாதத்தின் அழகைக் கண்டு மகிழ்வேன், எதிர்த்து வந்த தீமைகளின் ஒருமுகப்பட்ட முயலகனை வலக்காலின் கீழிட்டு ஆடுகின்ற அழகைக் காண்பேன். ஆடலின் போது வீசுகின்ற கரத்தினையும், நேரே வந்து தோன்றும் அழகினையும் கண்டு களிப்பேன். ஆசிவழங்கும் வலக் கரத்தை வணங்கி மகிழ்வேன். பெருமாளும், பிரம்மனும் துதி செய்ய, தேவாதி தேவரெல்லாம் ஜெய ஜெய என்று கோஷமிட, உமையினை இடப்பக்கம் கொண்டு நீ நிற்கும் அழகைக் கண்டு களிப்பேன். நெற்றியில் பூசிய திருநீற்றின் அழகைப் பார்ப்பேன். சந்திரசேகரனாய் தோன்றி ஆருயிர்க்கெல்லாம் அருள்புரியும் காட்சியைக் கண்டு களிப்பேன்.

    (அடுத்தது “இந்தப் பாடலின் நிறைவுப் பகுதி”)

    Share
  • எத்தனை முகங்கள்?

    தஞ்சை வெ. கோபாலன்

    அன்று சம்பள நாள். இப்போது போல் அப்போதெல்லாம் வங்கியில் செலுத்திவிட்டு அங்கு போய் பணம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை வரவில்லை. அலுவலக கணக்குப் பிரிவில் கணக்காயர் மேஜைக்குச் சென்று அங்குள்ள சம்பளப் பட்டியலில் ரெவின்யூ ஸ்டாம்பில் கையெழுத்திட்டுவிட்டு அவர் கொடுக்கும் சம்பள உறையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி தன்னுடைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவரில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான் சரவணன். அதில் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களும் அறுபது பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அப்பாடா, இன்றே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். வாடிக்கை வைத்துக் கொண்டிருக்கும் மளிகைக் கடைக்கு முதலில் நூற்றி முப்பது ரூபாயை வீட்டுக்குப் போகும் வழியிலேயே கொடுத்தால்தான் நாளைக்கு அடுத்த மாத சாமான்களை வாங்க முடியும். இதென்ன வெறும் முன்னூற்று சொச்சம் ரூபாய் சம்பளம் என்று திகைக்காதீர்கள். இது நடந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஊதியம் அவ்வளவுதான்.

    சம்பள உறையை வாங்கி தன் சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டான். பின்னர் தன் இடத்தில் போய் முடிக்க வேண்டிய அன்றைய வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டுத் தன் பை, டிபன் கேரியர், குடை இவை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்டான். அப்போதே மாலை மங்கி இரவு படரத் தொடங்கிவிட்டது. மெல்லிய இருட்டு எங்கும் பரவிய போது ஆங்காங்கே விளக்குகளும் எரியத் தொடங்கின. வீதியில் இறங்கி வீடு நோக்கிக் கிளம்பினான்.

    வழக்கம் போல சம்பள தினத்தில் மனைவிக்கு பம்பாய் இனிப்புக் கடையில் ஏதாவது இனிப்பும், வாசலில் உட்கார்ந்து கூடையில் வைத்துக் கொண்டு பூ விற்கும் பெண்மணியிடம் ஒரு முழம் மல்லிகைப் பூவையும் வாங்கிக் கொண்டான். தன் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான், பணக் கவர் பத்திரமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, அது அங்கு இருந்தது.

    வழியில் ரயில்வே லெவல் கிராசிங். அப்போது எந்த ரயிலும் வரும் நேரமில்லை என்பதால் கேட் திறந்தே இருந்தது. சாலையில் நடந்து போவோர் அதிகம் இருந்தனர். சில வாகனங்களும் கேட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்குப் போகும் அவசரம் ஒரு புறம் இருந்தாலும் சரவணனுக்கு வழியில் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைக்குச் சென்று போன மாதம் வாங்கிய சாமான்களின் பில் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டும். சரவணனுடைய நாணயத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர் அண்ணாச்சி. அவரிடம் தன் கணக்கில் அவ்வப்போது தேவைப்படும் சாமான்களை வாங்கிக் கொண்டு கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவான், அந்த மாதம் முடிந்து சம்பளம் வாங்கிய அடுத்த கணம் கடைக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும். ஆகையால் சரவணன் எந்த பொருள் எப்போது கேட்டாலும் அண்ணாச்சி கடையில் கிடைத்துவிடும் அதனால் அவன் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவதும் சிரமம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

    சரவணனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவி தவிர அவனுடைய இரண்டு குழந்தைகள் வயதான விதவைத்தாயார் ஆகியோர் அவன் வீட்டில் இருந்தனர். குழந்தைகளில் முதல் பையன் கல்லூரியிலும், அடுத்த பெண் பள்ளிக் கூடத்திலும் படித்து வந்தனர். இவர்கள் படிப்புக்கும் சரவணன் செலவு செய்ய வேண்டியிருந்ததால் குடும்பம் சிரமமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.

    அலுவலக வேலைக்கிடையே அவன் காலை மாலை வேளைகளில் பூஜைகளும் செய்து வந்தான். அது தவிர கைரேகை, நியுமராலஜி எனும் எண்கணிதம் ஆகியவற்றிலும் தேர்ந்தவனாக இருந்தான். இவனிடம் ஆரூடம் பார்க்கவும், கைரேகை சாஸ்திரம் பார்க்கவும், நாள் குறித்துக் கொடுக்கவும் அடிக்கடி பலர் வந்து விடுவார்கள். அவன் குறித்துக் கொடுத்த நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அவன் தோற்றமே அவனை ஒரு நல்ல ஆத்திகனாகவும், தவறிழைக்காத நல்ல மனிதன் என்பதையும் காட்டியது.

    வரும் மாதத்தை எப்படிக் கழிப்பது எந்தெந்த செலவுகளைச் சரிக்கட்டுவது என்ற கவலையில் வீட்டை நோக்கி நடந்த போது ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்கும் போது எதிரில் வந்த யாரோ ஒருவன் அவன் மீது இடித்துவிட்டுச் சென்றான். இடது தோளில் சிறிது வலித்தது. தடவி விட்டுக் கொண்டு, இத்தனை வெளிச்சத்திலேயே இப்படி இடிக்கிறானே, கும்மிருட்டாக இருந்தால் நம்மைக் கீழே தள்ளிவிட்டே போய்விடுவான் போல் இருக்கிறதே என்று எண்ணியபடியே மேலே போய்க்கொண்டிருந்தான்.

    அண்ணாச்சியின் கடை வந்துவிட்டது. கடையில் விளக்கு ஏற்றியாகிவிட்டது. கடையிலும் அதிகக் கூட்டம் இல்லை. அண்ணாச்சியின் முன்பு வந்து நின்றுகொண்டு இந்த மாதம் என்ன ஆயிருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள், சம்பளம் வந்து விட்டது, கொடுத்துவிட்டுப் போகிறேன் என்றான் சரவணன்.

    அண்ணாச்சி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு நூற்று முப்பது என்றார். சரி என்று சொல்லிவிட்டு பைக்குள் கைவிட்ட சரவணன் அதிர்ச்சியில் துள்ளினான். என்ன ஆயிற்று என்றார் கடைக்காரர். என்ன சொல்வதென்று புரியாமல் சரவணன் திணறினான். பையில் இருந்த பணக் கவர் .. என்று இழுத்ததைத் தொடர்ந்து கடைக்காரர், “என்ன சாமி, கவர் காணலியா, எங்கே வச்சீங்க நல்லா கவனப்படுத்தி பாருங்க” என்றார்.

    “இல்லை அண்ணாச்சி, பணக் கவரை பையில்தான் வைத்துக் கொண்டேன். வழியில் பூக்காரியிடம் பூ வாங்கும் போதுகூட பையில் இருந்ததே, இப்போது காணோமே” என்றான்.

    “ஓகோ, வழியிலே ரயில்வே கேட் கிட்டே கூட்டமா இருந்திச்சா, அதில யாரும் உங்க மேல வந்து மோதினாங்களா?” என்றார் அண்ணாச்சி.

    “ஆமாம், ஒரு ஆள் வந்து இடித்துவிட்டு நிற்காமல் போய்விட்டான்” என்றான் சரவணன்.

    “அதுதான், அங்கே இதே வேலைதான். சாயங்காலம் ஆயிடுச்சின்னா கூட்டமா வந்து நின்னுகிடுவானுங்க. போற வர ஆளுங்களை நோட்டம் விட்டு யார் மடியில என்ன இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு சாமர்த்தியமா அடிச்சிட்டுப் போயிடுவானுங்க. அது சரி, போனது இனி திரும்ப வரவா போவுது. இந்நேரம் பணத்தை அடிச்சவன் எங்கேயாவது சாரயக் கடைக்குப் போயிருப்பான். போங்க சாமி, எனக்கு அடுத்த மாசம் சேர்த்து கொடுத்தா போதும், நான் உங்களை நெருக்க மாட்டேன்” என்றார் அண்ணாச்சி.

    “நல்லதுங்க, எல்லாம் என் தலைவிதி, இந்த மாதம் எப்படி போகுமோ, அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்” என்று முணுமுணுத்துக் கொண்டே சரவணன் வீட்டுக்கு நடந்தான்.

    வீடு போய்ச் சேர்ந்ததும், ஆவலோடு எதிர்பார்த்திருந்த மனைவி இவனுக்கு அன்று அதிகப்படி உபசாரம் செய்தாள். “சூடா காப்பி கொண்டு வரவா” என்றும் கேட்டாள். “ஏன் இன்னிக்கு முகம் வாடியிருக்கு, வேலை அதிகமா?” என்று விசாரித்துவிட்டு அவன் சம்பள கவரை எடுத்துத் தருவான் என்று எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தாள்.

    சரவணன் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “அம்மா எங்கே?” என்றான்.

    “அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, இன்னும் வரலை” என்றாள் அவன் மனைவி.

    “சரி, சரி, அம்மாவுக்குத் தெரியவேண்டாம், தெரிஞ்சா பெரிசா ரகளை செய்துடுவா. இந்த மாச சம்பள கவர் வீட்டுக்கு வரும்போது யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான், போயிடுத்து” என்றான் சரவணன்.

    “அடக் கடவுளே. என்ன கொடுமை இது. இந்த மாதம் என்ன பண்றது. நாளைக்கு பொழுது விடிஞ்சா அத்தனை பேரும் பாக்கிக்கு வந்து நிற்பாங்களே, எப்படிப் போச்சு, எங்கே போச்சு?” என்று பதறினாள்.

    “கொஞ்சம் பேசாம இரு, என்னைக் கொஞ்சம் அமைதியா இருக்கவிடு, அப்புறமா பேசிக்கலாம். அம்மா வந்தா மூச்சு விடாதே, அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம். நாளைக்கு என் நண்பன் முத்துகிருஷ்ணன் கிட்ட போய் கொஞ்சம் பணம் கடன் வாங்கிட்டு வந்துடறேன். கவலைப் படாதே போ, போய் உன் வேலையைப் பாரு” என்றான் சரவணன்.

    கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மனைவியும் சமயலறை நோக்கிப் போனாள். அப்போது வாயிலில் சைக்கிள் மணி அடிக்கும் ஓசை கேட்டது. சரவணன் போய் யார் என்று பார்த்தான். அங்கு அவனுக்கு ஏற்கனவே கடைத்தெருவில் அறிமுகமான சண்முகம் என்பவன் சைக்கிளில் வந்து காலை ஊன்றிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.

    “என்ன சண்முகம்? என்ன இந்த நேரத்துல” என்றான் சரவணன்.

    “ஒண்ணுமில்ல சாமி, உங்ககிட்ட ஒரு வேலையா வந்தேன். இப்போ கொஞ்சம் பேசமுடியும்னா வரேன்” என்றான்.

    “வா, வா எனக்கு ஒண்ணும் அவசர வேலை எதுவும் இல்லை” என்றான் சரவணன்.

    இந்த சண்முகம் ஒரு மாதிரியான பேர்வழி. கடைத்தெருவில் இவனை ஒரு போக்கிரி என்பார்கள். இவனைக் கண்டு பலரும் அஞ்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த விவரமும் சரவணனுக்குத் தெரியவில்லை. இவனுக்கு ஒரு தையல் கடை இருந்தது. அதில் ஐந்தாறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஊரில் பலரும் அந்தக் கடையில்தான் பேண்ட் சட்டை தைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் நாகரிகமாக இருக்க இவன் கடையில் தைத்துக் கொள்வது என்பது பல இளைஞர்களும் விரும்பிய ஒன்று. இவனை ஒரு டைலர் என்ற முறையில் சரவணன் அறிந்து வைத்திருந்தான்.

    ஒரு சில முறை நாள் குறித்துக் கொள்ளவும், பெயர் வைக்கவும் இவனிடம் வந்து நியுமராலஜிப்படி கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான். சரவணன் முன்பு அவன் உட்கார்வதில்லை, பவ்யமாக நின்று கொண்டுதான் பேசுவான். சாமி சாமி என்று இவனை மரியாதையோடு அழைப்பான். சரவணனுடைய திருநீறணிந்த நெற்றியும் வம்பு தும்புக்குப் போகாத குணமும் அந்த சண்முகத்தை இவனிடம் அப்படி பணிவாக இருக்கும்படி செய்திருக்கிறது போலும்.

    “சாமி முகம் ஏதோ வாடின மாதிரி இருக்கே. என் வேலைய வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம். உங்க பிரச்சினை என்னன்னு சொன்னீங்கன்னா என்னால முடிஞ்சத செய்யறேன், என் வேலைய அப்புறமா நாளைக்குக்கூட பார்த்துக்கலாம்” என்றான் சண்முகம்.

    “ஒண்ணுமில்லை சண்முகம், ஆபீஸ்ல இன்னிக்கு சம்பளம். அந்த சம்பளப் பணத்தை வாங்கி சட்டைப் பாக்கெட்ல வச்சுகிட்டு வந்திகிட்டிருக்கும்போது எங்கோ காணாம போயிடுச்சி. எங்கேன்னு தெரியல” என்றான் சரவணன்.

    “அட! அப்படியா? ரயில்வே கேட் வழியா வந்தீங்களா? என்றான் சண்முகம்.

    “ஆமாம்பா, அந்த வழிலதான் வந்தேன்”

    “அப்படின்னா கொஞ்சம் இருங்க, இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சண்முகம் அவசரமாகத் தன் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான்.

    என்ன இது? இவன் போய் என்ன செய்யப் போகிறான், வைத்ததை எடுப்பது போல போகிறானே, என் பணத்தை ஏதாவது மீட்டுக் கொண்டு கொடுப்பானோ? அட, அப்படி செய்துவிட்டால் என் இந்த மாதக் கவலை போயிடுமே, கடவுளே அப்படி ஏதாவது நடக்கக் கூடாதா என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் சரவணன்.

    அரை மணி கழித்து சண்முகம் இன்னொரு இளம் வயது பையனையும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். சரவணன் வாசலுக்கு வந்து நின்றதும், சண்முகம் அந்தப் பையனைக் கழுத்தில் கையை வைத்துத் தள்ளி, “போடா, போயி ஐயா காலில் விழுந்து மன்னிப்புக் கேளு, அதையும் அவர்கிட்ட கொடு” என்றான்.

    அந்தப் பையனும் சரவணன் அருகில் வந்து காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சரவணனுடைய காணாமல் போன சம்பளக் கவரை அவன் கையில் கொடுத்துவிட்டு, “மன்னிச்சுடுங்க சாமி, உங்களைப் பற்றி தெரியாம உங்க பாக்கெட்ல கைய வச்சுட்டேன். இனிமே உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன் என்றான்.”

    பையன் பார்க்க லட்சணமாக, நாகரிகமாக இருந்தான், இருந்தாலும் இப்படியொரு காரியத்தை இவன் எப்படி செய்தான், யார் இவன், இவனுக்கும் இந்த சண்முகத்துக்கும் என்ன சம்பந்தம், என் பணத்தை இவந்தான் எடுத்திருப்பான் என்று எப்படி இவனுக்குத் தெரிந்து அவனை இங்கு இழுத்து வந்திருக்கிறான் என்று மனம் குழம்பிக் கிடக்க சண்முகத்தை நோக்கினான்.

    அப்போது சண்முகம் பேசினான். “ஐயா ஒண்ணும் நெனச்சுக்காதீங்க. இவன் நம்ம ஆளுதான். இவனைப் போல பல பசங்க நம்மகிட்ட வேலை பண்றானுங்க. நீங்க ரயில்வே கேட் வழியா வந்தபோது பணத்தைக் காணோம்னு சொன்னதுமே அந்த ஏரியாவுல நம்ம பசங்கதானே இருக்காங்கன்னுதான் ஓடிப்போய் விசாரிச்சேன். இந்தப் பயதான் எடுத்திருக்கான். எலே, யார் மடிலடா கை வச்சே, அவரு சாபம் கொடுத்தா நீ நாசமா போயிடுவேடா, ஓடிப்போய் பணத்தை அவர்கிட்டே கொடுன்னு சொல்லி அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றான் சண்முகம்.

    இதென்ன கூத்து. இவனோ டைலர். அந்த பையனோ பிக்பாகெட். அவனுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?

    சரவணன் விழிப்பதைப் பார்த்துவிட்டு சண்முகமே பேசினான். “ஐயா, உங்க குழப்பம் புரியுது. நான் செய்யற வேலை டைலர் வேலைதான். என் உள்வேலையை மறைக்க டைலர் ஷாப் எல்லாம் வச்சு அஞ்சாறு பேரை வேலைக்கு வச்சு நல்லபடியா கடையை நடத்தறேன். ஆனா எனக்கு பின்னால ஒரு கதை இருக்கு சாமி. என் தொழிலே இந்தப் பய செய்யற தொழில்தான். அதுலேர்ந்துதான் முன்னேறி இப்போ கொஞ்சம் கெளரவமா இருக்கத் தொடங்கிருக்கேன். நான் நேரடியா இதுல ஈடுபடலைன்னாலும், இவனைப் போல ஒரு பத்து பதினஞ்சு பேரைத் தயார் பண்ணி அவங்களுக்கு ஏரியாவ பிரிச்சுக் கொடுத்து இப்படி கொண்டு வரச் சொல்லிருக்கேன். அதுல மாசம் இத்தனைன்னு ஒவ்வொருவருக்கும் கொடுத்துட்டு, மிச்சத்தை நான் வச்சுக்குவேன்.”

    சண்முகம் சொல்லச் சொல்ல சரவணனுக்குத் தலை சுற்றியது. ஒருவனுக்கு எத்தனை முகங்கள். இவன் நல்லவனா, கெட்டவனா? ஒரு பக்கம் நல்லவனாகவும், சிலருக்குக் கெட்டவனாகவும் இருக்கும் இவனது குணம்தான் என்ன?

    சண்முகம் மேலும் பேசினான். “ஐயா, ஒண்ணுமே இல்லாத பிளாட்பாரமா இருந்தபோது பிழைக்க இப்படியெல்லாம் நடந்துக்க வேண்டியிருந்திச்சு. அப்புறம் கொஞ்சம் நிலைமை மாறினபிறகு, நானே நேரடியாகச் செய்யாம இவனைப் போல பசங்களை வச்சு செஞ்சிட்டிருந்தேன். இனிமே இதுவும் நான் நிறுத்திவுட்டு கெளரவமா நடந்துக்கப் போறேன். இவனுங்க இனிமே தனியா அவங்களே வேலையைப் பார்த்து முன்னேறிக்குவாங்க”

    “அது சரி சண்முகம். நீ டைலர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இப்படியொரு வாழ்க்கை உன் பின்னால் இருக்குங்கறது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அது போகட்டும் இன்னைக்கு என்னைத் தேடி வந்த காரணம் என்ன” என்றான் சரவணன்.

    “அது சாமி! நாந்தான் சொன்னேனில்ல. இனிமே திருந்தி நல்லபடியா கெளரவமா வாழப்போறேன்னு. அதுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எல்லா வேைலைகளும் செஞ்சு முடிச்சுட்டேன். இடம் எல்லாம் தயார். முதல்ல சின்ன புள்ளைங்களுக்கு வகுப்புங்க நடத்த பர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சி, டீச்சர் எல்லாம் கூட போட்டாச்சு. இந்த பள்ளிக்கூடத்தை நல்லபடியா நடத்தி, கொஞ்சம் கொஞ்சமா இதைப் பெரிசா ஆக்கிடணும். சமூகத்துல என்னையும் எல்லாரும் மதிக்கும்படியா நடந்துக்கணும். அதுக்காகத்தான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேரு வைக்கணும், ஆரம்பிக்க நாள் பார்க்கணும்னுதான் உங்ககிட்ட வந்தேன். நீங்க பணத்தைப் பறிகொடுத்திட்டு வந்து நிக்கறதைப் பார்த்து, அதை மீட்டுக் கொண்டு வந்து கொடுக்கணும்னு இவனைப் பிடிச்சு கொண்டுவந்தேன்.” என்றான் சண்முகம்.

    அடடா, ஒரே ஆளுக்கு எத்தனை முகங்கள் என்று திகப்போடு சண்முகத்துக்கு பள்ளிக்கூடப் பெயரும், ஆரம்பத்துக்கு நாளும் குறித்துக் கொடுத்தான் சரவணன்.

    Share