தேமொழி

 

“அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே”

என்று கதாநாயகன் பாடும்பொழுது, “வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது,” என்று பெருமூச்சு விட வேண்டாம். தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம். அவள் அவ்வாறு செய்வதற்கும் காரணம் இருக்கிறது.

காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம். இதை நான் சொன்னால், அதாவது …ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நம்ப முடியவில்லையா? பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார். ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி. அக்குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள். அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது. ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார். ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு “பெண்டாட்டிக்கு ஜயம்.” அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகையைப் பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சியைப் பற்றி எழுதியவையே அதிகம்.

கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர் என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார். பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.
(பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்:http://projectmadurai.org/pmworks.html)

பாரதிக்கு பெண்களின் சார்பில் நன்றி நவில்கிறேன்.

——————————————————————————————————————————————————————-
பாரதியாரின் “சந்திரிகையின் கதை” என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
——————————————————————————————————————————————————————-

”வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.”

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது. இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது. இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும்.

வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது.

மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள்.

இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை. மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது. மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன. ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன. மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும். அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும். அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான். புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான். மழை பெய்தால் கஷ்டப்படுவான். காற்றடித்தால் கஷ்டப்படுவான். தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது. இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ”பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்” என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள். வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும். வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும்.

அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம். பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள். மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள். இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம்.

இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள்.

அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும். இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள்.

நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் – நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு.

அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

 

 

 

 

 

 

நன்றி: வகுப்பறை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *