Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சென்னை தாம்பரம்-பீச் இடையேயான லோகல் ரயிலில் பிஸியான நேரத்தில் பிரயாணிப்பவர்கள் அதுவும் நின்று கொண்டே பிரயாணம் செய்பவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்தான். ஆனால் இந்த சிரமத்தைப் போக்கும் மருந்தாக அவ்வப்போது சில பாடல்கள் கேட்கும். கண்ணிழந்தவர் ஓரிருவர் பக்தி பாடலோ அல்லது ஜனங்களுக்கு மத்தியில் புகழ்பெற்ற சோகப்பாடல்களில் ஒன்றையோ பாடிக் கொண்டே பிச்சை எடுப்பார்கள். பிரயாணிகள் அவர்களுக்கு உதவுகிறார்களோ இல்லையோ அவர்கள் பாடல்களை இவர்கள் உதடுகளும் நிச்சயம் முணுமுணுக்கத்தான் செய்யும். பிரயாணப் பொழுது எத்தனை சிரமமாக இருந்தாலும் மனம் திசை திருப்பப்பட்ட நிலையில் சிரமத்தை பொருட்ப்படுத்தமாட்டார்கள். இப்படி ஆரம்பகால மாணவப்பருவத்தில் இப்படி ரயிலில் நான் கேட்ட ஒரு பாடல் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்.. எனும் செவிக்கினிய, மனதுக்கினிய செந்தமிழ்ப் பாடல்.

    நான் வெகு நாட்கள் வரை இது ஏதோ திரைப்படப்பாடல் என்றுதான் நினைத்திருந்தேன். பின்னொருநாள் நண்பன் கொடுத்த டி.எம்.எஸ் பாடிய.முருகர் பாடல் தனிப்பாடல்கள் மூலம்தான் உண்மையை அறிந்துகொண்டேன். என் மனதைக் கொள்ளை கொண்ட அந்தப் பாடல் எத்தனையோ பேருக்கு ஆழ்ந்த ஆறுதலையும் பக்தியையும் கொடுத்திருக்கத்தான் வேண்டும் என நான் எனக்குள்ளேயோ சொல்லிக் கொள்வதுண்டு.. டி.எம்.எஸ் இன் முருகர் பாடல்கள் இன்றளவும் இயற்கையான, எளிமையான பக்தி பாடல்களாகவே இருப்பது மட்டுமல்லாது பாமரர் மத்தியிலும் புகழடைவதென்பது அவருக்கு முருகர் கொடுத்த வரம் போலும். உள்ளம் உருக வைக்கும் முருகைய்யாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக விற்பனையானது ஆச்சரியமல்ல வென்றும், அதன் காரணம் டி.எம்.எஸ் எனும் மக்கள் கலைஞனின் குரல் வண்ணத்தால் என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

    இதோ இந்த வாரம் டி.எம்.எஸ் பற்றி அஞ்சலிக் கட்டுரையை சமூக ஆர்வலர் திரு வேணுகோபாலன் உணர்ச்சிகரமாக எழுதி இருக்கிறார்

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    டி எம் எஸ் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றுமே நம் மனதை விட்டு மறையப்போவதில்லைதான். இந்த வேளையில். மனதுக்கு இதமாக இப்படி ஒரு அஞ்சலிக்கட்டுரையை எழுதிய திரு வேணுகோபால் அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். திரு வேணுகோபால் அவர்களுக்கு,, வல்லமையாளருக்கு எம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: மலர்சபா அவர்களின் ’நான் அறிந்த சிலம்புப் பாடல்’

    மயக்கத்தையுடைய மாலைப்பொழுதே!

    நின் கொடுமைதான் காணச் சகியாமல்
    நிலமகளும் கண் மூடிக்கொண்டனள்;

    நீ மட்டும் வந்திடுவாய் ஆயின்,
    எம் தலைவர் வாராதிருப்பார் ஆயின்,
    யாம் மட்டுமின்றி இவ்வையமே
    இங்ஙனம் துன்புறுமன்றோ..
    மாலையே! நீ வாழ்வாயாக!

     

    Share
  • மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. சரி, இனி பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடராது என்று நினைத்து முடித்தால் இன்னொரு கொடுமை பற்றிய செய்தி வருகிறது. டில்லியில் 2012 டிசம்பரில் ஓடும் வேனில் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடுமை பற்றிப் பத்திரிக்கையில் படித்து அதிர்ந்து போனதோடு இனி கண்டிப்பாக அரசும் காவல்துறையும் ஏதாவது செய்து பெண்களைக் காப்பாற்றுவார்கள் என்று நிம்மதி அடைய முடியவில்லை. இந்தியா முழுவதும் கொதித்து எழுந்து அரசியல்வாதிகள் விழித்தெழுந்து இம்மாதிரிக் கொடுமைகள் நிகழாமல் தடுக்க சட்டம் இயற்றினர். அதன் பிறகும் தொடர்ந்து அப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காது என்று நினைத்ததிற்கு மாறாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பத்திரிக்கைகள்தான் இந்தச் சம்பவங்களை மிகைப்படுத்துகின்றனவா அல்லது இத்தனை குற்றங்கள் நடைபெறுகின்றனவா என்று அனுமானிக்க முடியவில்லை.

    இம்மாதம் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள க்ளீவ்லேண்ட் ஊரில் இன்னொரு கொடுஞ்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அதுவும் தொழில்நுட்பத்திலும் வளத்திலும் சிறந்து விளங்கும் அமெரிக்காவில் இப்படி நடக்க எப்படி அனுமதித்தார்கள் என்று நினைத்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

    2002-லிருந்து 2004 வரை ஒரு கொடியவன் மூன்று பெண்களைக் கடத்திக்கொண்டுபோய் ஒரு பாழடைந்த வீட்டில் பதுக்கிவைத்து அவர்களுக்குப் பல கொடுமைகள் புரிந்திருக்கிறான். அந்தப் பெண்களில் ஒருத்தி இவனுடைய மகளின் நெருங்கிய தோழி. மனைவியை பல முறை அடித்து அவளுடைய உடம்பில் பல வகையான காயங்கள் ஏற்படுத்திக் கடைசியில் அவள் இவனிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறாள். இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிமன்றம் அவனுடைய குழந்தைகளைப் பார்க்கக் கூட இவனுக்கு அனுமதி வழங்கவில்லை. அப்படியும் குழந்தைகளை அவ்வப்போது மனைவியிடமிருந்து கடத்திக்கொண்டு வந்திருக்கிறான். இவனுடைய மகளின் தோழியைக் கடத்திவந்த பிறகு இவனுடைய மகளே அது பற்றி ஒரு உரையில் குறிப்பிட்டிருக்கிறாள். அவனுடைய மகன் அது பற்றிப் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறான். இவர்கள் இருவருக்கும் இந்தக் கொடுமையைச் செய்தவன் தங்கள் தந்தைதான் என்று தெரியாது.

    பத்து வருடங்களுக்கும் மேலாக இந்தப் பெண்களை இந்தக் கொடியவன் அடைத்துவைத்திருந்தது அவனுடைய சகோதரர்களுக்குக் கூடத் தெரியாதாம். அடைத்துவைக்கப்பட்ட வீட்டின் அருகில் வசித்துவந்தவர்களுக்கும் தெரியாதாம். அவர்களிடம் அந்தப் பக்கம் போகும்போதும் வரும்போதும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு சுமுகமாகப் பேசிவிட்டுப் போவானாம். ஆனாலும் அவர்களுக்கு இவன் மூன்று பெண்களைப் பத்து வருடங்களாக அடைத்துவைத்திருக்கும் விஷயம் தெரியாதாம். பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற விஷயங்கள் எப்படித் தெரியாமல் போகும், அதுவும் பத்து வருடங்களுக்கு. மூன்று பெண்களில் ஒரு பெண்ணோடு பெற்றுக்கொண்ட ஒரு பெண் குழந்தையைத் தன்னோடு தன் உறவினர் வீடுகளுக்குக் கூட்டிச் சென்று தன் பேத்தி என்று உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பானாம். அவன் எப்போது அந்தப் பெண்ணைப் பெற்றெடுத்தான் என்று எப்படி அந்த உறவினர்களுக்கு தெரியாமல் போயிற்று? அவன் அப்படி ஒன்றும் பல ஏக்கராக் கணக்கில் விஸ்தீரணமுள்ள வீட்டில், பல காத தூரத்திற்கு அக்கம்பக்கம் யாரும் இல்லையென்ற இடத்தில் வசிக்கவில்லை. எப்படி இவனுடைய தினசரி நடவடிக்கைகளை அதுவும் பத்து வருடங்களுக்குக் கவனிக்காமல் விட்டார்கள்? ஒருவர் அந்தரங்கத்தில் (privacy) இன்னொருவர் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இத்தனை தூரம் கொண்டுபோக வேண்டுமா?

    இந்தக் கொடூரச் செய்தியை ஜீரணித்துக்கொள்வதற்குள், அமெரிக்காவில் பெண்களின் நலனுக்காகப் பாடுபட்டுவரும் ஒரு பெண் பிரேசில் போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில்லை என்று சொல்லி வாய் மூடும் முன் அந்த நாட்டிலேயே இந்தியாவில் நடந்தது போன்ற ஒரு கொடூரச் செயல் நடந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது? திடீரென்று மனிதர்களில் சிலர் மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? இந்தக் கொடூரங்கள் இனியும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று நெஞ்சு குமுறுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத்தனம் ஏற்கனவே இருக்கும் சோகத்தை இன்னும் அதிகரிக்கிறது.

    எழுதுவதற்கே கை கூசும் இன்னும் பல சம்பவங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

    கடைசியாக இறைவனைத்தான் நாடுகிறேன். நான் தினசரி இறைவனிடம் எனக்காகக் கேட்கும் வரங்களில் இன்னொன்றாக ‘இறைவா, உலகில் இனி ஒரு போதும் எந்தப் பெண்ணிற்கும் இத்தகைய கொடுமைகள் நடக்கக் கூடாது’ என்ற வரத்தையும் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

    Share
  • முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    மாதவன் இளங்கோ

     

    Author’s Note:

    சில சந்திப்புகள் நம் மனதிற்கு இனிமையானதாக அமையும்; சில சந்திப்புகள் நம்மை சிந்தனையாளர்களாக மாற்றும்; சில சந்திப்புகள் நம்மை முட்டாள்களாக்கும்; சில சந்திப்புகள் நம் வாழ்க்கைப் பாதையை  சற்று மாற்றும்; சில சந்திப்புகள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். சில சந்திப்புகள் சில மணித்துளிகளே நீடித்தாலும், நம் மனதில் ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு தான் ‘முன்னைப் பிறவியில்..’ எழுத உந்துதலாக அமைந்தது.

    ஒரு வியாழக்கிழமை மாலை. ப்ரசல்சு மாநகரத்தின் நார்டு (வடக்கு) ஸ்டேஷன். லூவன் நகரம் செல்வதற்காக, இரயிலுக்காகக் காத்திருந்த போதுதான் நான் மேலே கூறிய அந்த ‘கொந்தளிப்பு’ சந்திப்பு நிகழ்ந்தது. அந்த மனிதர், ‘நீங்கள் தமிழரா?’ என்று கேட்டதில் ஆரம்பித்த உரையாடல் ஒரு இருபது நிமிடம் நீடித்தது. சில நிமிட உரையாடலாக இருந்தாலும் என்னை வெகுவாய் பாதித்து விட்டது – தமிழனாக அல்ல; வெறும் மனிதனாகவே!! இன்னும் சொல்லப்போனால் அவர் பகிர்ந்துகொண்ட விதத்தில், மொழியே புரியவில்லை என்றாலும் கூட, எங்களருகே அமர்ந்து கொண்டிருந்த ஃப்ளம்மியரின் மனதிலும் அது ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்கக் கூடும்.

    பெல்ஜியத்தின் பிரெஞ்சு பகுதியிலுள்ள லியாஷே (Liege) நகருக்கு செல்லும் இரயிலுக்காக அவர் காத்திருந்தார். நானும் அதே இரயிலில் சென்று இடையில் வரும் ஃப்ளம்மிய நகரான லூவனில் (Leuven) இறங்க வேண்டும். வண்டியிலும் அவர் பேச்சு தொடர்ந்தது. நான் அமைதியாக அவரருகே அமர்ந்து அவர் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், என் மனது மட்டும் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

    ‘காலம் நிச்சயம் மாறும்; விடியல் பிறக்கும்!’ என்று கூறிவிட்டு , லூவன் நகரில் இறங்கிய என் மனதில் ஏராளமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், கொந்தளிப்புகளை ஏற்படுத்திவிட்டு அவர் விடைபெற்று இரயிலோடு சென்று விட்டார். அப்போது  வேறொரு சமயத்தில், வேறொரு இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வர, இவையிரண்டையும் இணைத்துப் பார்க்கையில் ‘முன்னைப் பிறவியில்..’ பிறந்தது.

    வீட்டிற்கு வந்தவுடன், அதே வேகத்தில், அதே மனநிலையில் ஒரு இருபத்து ஐந்து நிமிடத்தில் எழுதியதைத்தான் இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    இதோ… முன்னைப் பிறவியில்… 

    இம்மையில்,

    என் பெயர் வேதநாயகம்.

     

    காதலில் விழுந்து,

    திருமணம் முடிந்து,

    ஐந்து ஆண்டுகளோடிய பின்னும்

    மழலை இல்லை வீட்டினிலே!

     

    முதல் குழந்தைகருவிலே மரித்தது!

    இரண்டாவதுஇறந்தே பிறந்தது!

    மூன்றாவதோபிறந்து இறந்தது!      

     

    உற்றார் உறவினர் –

    துரத்தி அடித்தனர்!

    மருத்துவம் பாரென்றனர்!

    கருக்காவூர் போவென்றனர்

    திருமலை நடவென்றனர்!

    தானம்புரி என்றனர்!

     

    அவர்தம் பரிகாசப்

    பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு,

    நாணிக் குறுகினோம்,

    நானும் என் மனையாளும்!

    ஓடி ஒளிந்தோம்.

    உற்றார் உறவினரின்,

    தொடர் பறுத்தோம்!

     

    மூலகாரணம் அறிந்திடல்

    முக்கிய மென்றார்,

    நண்பர் ஒருவர்.

    அவர் நாடச் சொன்னது

    நாடி சோதிடம்‘!

     

    நாடி‘ நாடித்

    தேடி ஓடினேன் –

    வைத்தீசுவரன்கோவில்!   

     

    ஓலைகள் பல அலசியபின்

    சோதிடர் சொன்னார் என்னிடமே:

    முன்னைப் பிறவியில் நீ,

    அந்தத் தீவினில்’ பிறந்தவன்!

    பந்துக் களுடன் கூட்டாய்

    செய்தாய் பல நீ உயிர்வதைகள்.

    அதற்கு விலையே,

    இப்பிறவியிலே உனக்கு

    இத்தனை சித்ரவதைகள்!”

     

    சோதிடர் சொன்னதை நான்,

    துளியும் நம்பவில்லை!

    வீடு திரும்பினேன்.

    நாடி சோதிடத்தை,

    நம்பி ஓடுபவர்கள்

    அனைவருமே அவிவேகிகள்,

    என்றெண்ணிச்

    சிறிது கண்ணயர்ந்தேன்.

     

    கனவிலே,

    கடல் கடந்து சென்றேன்.  

    அங்கேபச்சை உடையணிந்த

    வெறிபிடித்தக் கூட்டமொன்று,

    வளைத்துப் பிடித்தது –

    சில அப்பாவி மக்களை!

    அதில் ஆடவர் சிலர்,

    பெண்டிர் பலர்,

    நிறைமாதக் கர்ப்பிணிகள் சிலர்

    சிறார்களோ பலர்.

     

    பிடித்தோம்!” என்றும்,

    சிக்கினர்!”  என்றும்,

    கொக்கரித்தது,

    அந்தப் பச்சை உடையணிந்தக் கூட்டம்!

     

    அதோ!

    அந்த கூட்டத்தின் தலைவன்!

    அவன் என்னைப்போல்!

    அது நானா?

    எனக்கு என் நண்பர்கள்

    வைத்த பெயர் ‘சாந்த சொரூபி‘ அன்றோ?!

    ஆனால்அந்தக் கொடூர முகம்?

    அதில் குடிக்கொண்டிருந்த வெறித்தனம்!

    அது நிஜமாய் நான் தானா?

    ஆம்நானே தான்!

    அந்தச் சிரிப்பு

    அந்த அசுரச் சிரிப்பு?

    அதற்குச் சொந்தக்காரன்?

    அதுவும் நானே தான்!

     

    பெண்களைசிறார்களை

    மட்டும் விட்டு விட

    ஆடவர் வேண்டினர்

    கர்ப்பிணிகளை மட்டும் விட்டு விட

    பெண்டிரும் கதறித் துடித்தனர்!

    ஒன்றும் புரியா மழலைகளோ,

    ஒளிந்து அழுதன – 

    சேலையின் மறைவில்!

    அனைவரையும் விட்டு விட,

    கிழவர்கள் சிலர் – என்

    காலில் விழுந்து மன்றாடினர்!  

     

    நான் தந்த பதிலோ,

    சிரிப்பு மட்டும் தான்!

    ஏளனச் சிரிப்பு!

    இடிச்சிரிப்பு!

     

    சில நிமிடங்களில்,

    வெடிச்சிரிப்பு மறைந்தது,

    வெறித்தனம் புகுந்தது,

    வெறிச்சிரிப்பானது!

    கண்கள் சிவந்தது,

    வானம் பார்த்தோம்,

    உரக்கக் கத்தினோம்!   

     

    வெட்டிச் சாய்த்தோம்

    ஆடவர் கைகளை – பின்

    அவர்தம் கால்களை – அதன் பின்

    அவர்தம் தலைகளை!

     

    சிட்டுக் குருவிகளைப்  போல்,

    சுட்டு வீழ்த்தினோம் – அவர்தம்

    சிறார்களை!

    ஓடி விளையாடும் வயதில்,  

    அவர்தம் உடல்களில் – எம்

    துப்பாக்கிக் குண்டுகள்

    விளையாடின!

     

    கதறினர் பெண்டிர் – அவர்

    கண்களில் நீர் வற்றும் வரை!

    அழுகுரல்கள் நிறைந்த

    அந்த அவல ஓசை,

    எங்கள் செவிகளில்

    தேனினு மினிய’ 

    நாதமாய் ஒலித்தது!

     

    சபித்தனர் எங்களை:

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இங்கே புதைக்கப்படும்,

    ஒவ்வொரு உடலும்,

    விதைகள்!

    அவைகள் மரமாய் வளர்ந்து

    உங்களைச் சாய்க்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நிராயுதபாணிகளை நிர்வாணப்படுத்திச்

    சுட்டுக் கொல்லும்

    உங்களைஉங்கள் பாவங்களே

    ஆயுதங்களாய் மாறித்

    தாக்கி அழிக்கும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ‘நாய்நிலைக்கும் கீழ்நிலை

    எம்நிலை’ கண்டு

    கொக்கரிக்கும் நீவீர் – நாளை

    உம்நிலை மாறுகையில்

    கதறி வீழ்வீர்கள்!!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    இயற்கை தந்த மண்ணை ஆள,

    இன்றெம்மைக் கொல்லும் உம்மை

    இனிதாய் வாழவிடுமா இயற்கை?

    இந்நிலத்தை அதன் சீற்றமே,

    சிதைத்தெறியும் நாள் தூரமில்லை!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    ஆம்எம் மக்களின்

    சதை தின்று,

    எம் குஞ்சுகளின்

    குருதி குடித்த உம்மை

    அந்தக் கடல் குடிக்கும் நாள் வரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    உங்கள் ஒவ்வொரு கொலைக்கும்,

    உங்கள்  சந்ததி விலை கொடுக்கும்!

    ஏன்இன்னொரு பிறவி

    என்று ஒன்று இருப்பின்,

    நீங்களே அதற்கு விலை கொடுப்பீர்கள்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    நீங்கள் கொன்று குவித்த

    அவைகள் –

    எம் பிள்ளைகள் அல்ல!

    உம் பிள்ளைகள்!

    அவைகளுக்கும் இது நேரும்!

    அதுவரைநீங்கள்

    எங்களைக் கொன்று விட்டுப் போங்கள்!

     

    எம் பிள்ளைகளா?

    ஹா ஹா ஹா” என

    மீண்டும் அதிபயங்கரமாய்,

    அசுரத்தனமாய்ச் சிரித்தோம்!

     

    கொலைவெறிகாமவெறியும் ஆனது!

    பேதை முதல்

    பேரிளம்பெண் வரை  

    ஆளுக்கு ஒன்றாய்ப் பகிர்ந்து,

    இழுத்துச் சென்றோம்!

    கதறக் கதறச்

    சூறையாடினோம்!

    சூறையாடிய பின்

    சிதைத்தோம்

    சுட்டு வீழ்த்தினோம்!

     

    அங்கே பாரென்றான் தோழன்!

    அவன் காட்டிய திசையில்,

    கர்ப்பிணிப் பெண்ணொருத்தி,

    மடிந்து கிடந்தாள்!

    வயிற்றினில் சுட்டேன்!

    சுட்டுச் சிரித்தேன்!

     

    சிரித்தேன்சிரித்தேன்!

    இடியெனச் சிரித்தேன்!

     

    அந்த வயற்காட்டை

    இடுகாடாய்சுடுகாடாய்,

    பூலோக நரகமாய்

    மாற்றிக் காட்டி இருந்தோம்!

    எங்கள் சாதனைகளைக் கண்டு

    குதூகலித்தோம்!

     

    வானத்தில் வட்டமிடும்,

    வல்லூறுகளாய்ச் சுற்றிப் பார்த்தோம்!

     

    எங்கெங்கு காணினும்

    உடையில்லா உடல்கள்!

    சிதைக்கப்பட்ட உறுப்புகள்!

    அறுபட்ட தலைகள்!

    அவற்றினூடே ஓடிய

    குருதி ஆறு!

     

    ஹா ஹா ஹா!”

    மீண்டும் சிரித்தேன்!

    உடல்களின் மீதேறிக் குதித்துத்

    தாண்டவ மாடினோம்!

     

    திடீரென,

    நிலை தடுமாறி

    கீழே விழுந்தேன்,

    ஆவென்று கத்தி,

    விழித்தேன்‘!

     

    அது கனவா?”

     

    இதயம் இரைத்தது,

    தேகம் நடுங்கியது,

    தலை கனத்தது,

    கண்களில் கண்ணீர்

    வழிந்து ஓடியது!

     

    ஆயிரமாயிரம் எண்ணங்கள்

    ஆணிபோல் என் நெஞ்சில்

    அறைந்ததாய் உணர்ந்தேன்!

     

    எனக்குள் இப்படி ஒரு மிருகமா?”

     

    ஐயோஅந்தக் குழந்தைகள்!!!”

     

    முன்தினப் பிறவியில்,

    நான் கொன்றது,

    அவர்கள் எவருடைய

    குழந்தைகளையோ அல்ல!

    என்னோடு இன்று 

    வாழ்ந்திருக்க வேண்டிய

    என் குழந்தைகளே!”

     

    எந்த இனத்தை அழித்துக்

    கொக்கரித்தேனோ,

    அதே இனத்தில்

    இன்று நானா?”

     

    இனமென்ற குறுகிய

    வட்டத்திற்குள் நான்

    சிக்க வேண்டாம்!

    அவர்களெல்லாம் மனிதர்களல்லவா?

    வெறும் மனிதனாகவே,

    வெட்கித் தலை குனிகிறேன்!” 

     

    அந்த இரத்த பூமி!”

     

    அந்த உடல்கள்!”

     

    பொசுக்கப்பட்ட அந்த பொடியன்கள்!”

     

    அந்த கதறல்கள்!”

     

    என்றோ செய்த

    என் குற்றங்கள்          

    என் கண்முன்னே

    படமாய் ஓடின!

     

    கதறிக் கதறிக்

    கடவுளை வேண்டினேன் –

    வேண்டாம் எனக்கு

    பெண் குழந்தைகள்!

    ஏனெனில்அவர்கள்

    கண்டிப்பாய்ச் சூறையாடப்படுவார்கள்!”

     

    மீண்டும் வேண்டினேன் –

    இன்னொரு பிறவி இருப்பின்,

    நானும் பெண்ணாய்ப்

    பிறந்திடல் வேண்டாம்!

    ஏனெனில்நானும்

    நிச்சயமாய் சூறையாடப்படுவேன்!”

     

    கடவுளே

    என்று மீண்டும் கத்திக் கதறினேன் !

     

    ஓடி வந்தாள் மனையாள்!

    என்னவென்று கேட்டாள்,

    பதறியபடி!

     

    அந்தத் தீவினில்

    குழந்தைகளையுமா கொன்றார்கள்?”

    என அதிர்ச்சியுடன் கேட்டேன்.

     

    தீவிரவாதம் பேசாதீர்,” என்றாள்!

     

    சிந்தித்தேன் –

    கொடூரக் கொலைகளை

    எதிர்த்து இந்த மண்ணில்

    கொடுக்கப்படும்

    குரல்களெல்லாம் ,

    தீவிரவாதத்தின் குரல்களாக

    மாற்றிக்காட்டியது

    யார் குற்றம்?”  

     

    என்னவென்று மீண்டும் வினவினாள்

    என் மனையாள்.

    அதற்கு பதிலாய்,

    நான் தந்தேன் உபதேசம்,

    அவளுக்கு மட்டுமல்ல,

    என் முன்னைப்பிறவி சக மிருகங்களுக்கும்:

    நீ விதைக்கும் ஒவ்வொன்றையும்,

    நீ அறுவடை செய்தே ஆகவேண்டும்!

    நீ கொலைகாரன் என்றால்,

    நீ கொல்வது மற்றவரை அல்ல!

    உன்னையே தான்!

    நீ செய்வது கொலையல்ல,

    தற்கொலை!

    ஏனெனில்,

    நீ கொல்லும் ஒவ்வொரு முறைக்கும்,

    நீ ஒருமுறை கொல்லப்படுவாய்!    

     

    முன்னைப் பிறவியில் நான் மிருகம்!

    என் கொலைகளுக்கு விலையாய்,

    இம்மையில் நானே அந்த

    மிருகம் தின்ற ஆடாய்!

     

    இம்மை மிருகங்களே!

    அங்கிருந்தவன்,

    இங்கிருந்து பேசுகிறேன்!

    ஆடாதீர்ஆவீர்கள் ஆடுகளாய்!

    யாரும் ஆக்கவேண்டியதில்லை!

    நீங்களாகவே ஆவீர்கள்!

      

    பழிக்குப் பழி

    சரியான பதிலல்ல!

    கண்ணுக்குக் கண்

    சரியான பதிலல்ல!

    கொலைக்குக் கொலை

    சரியான பதிலல்ல!

    ஆனால்,

    இயற்கைக்குக்

    கண்ணனையும்,

    நியூட்டனையும்,

    தெரிந்த அளவிற்கு,

    காந்தியம் தெரியாது!

     

    ஊழிற் பெருவலி யாவுள?’

     

     

     

    Share
  • அந்த நேரம்…

    செண்பக ஜெகதீசன்

    மேலே வானத்து மேகங்களுக்கு

    மேலைக் கடல்விழும் சூரியன்

    மேலாய்த்

    தங்கநிறம் தடவிவிடும் நேரம்..

     

    குஞ்சுப் பறவைக்கு இரைதேடிய

    தாயின்

    காட்டைத் தாண்டிய பயணம்

    கூட்டில் முடியும் நேரம்..

     

    பிஞ்சுக் குழந்தைகள்

    பள்ளிப் பையெனும் பாரமிறக்க

    வீட்டில் வந்து

    விடுதலையாகும் நேரம்..

     

    கண்கள் பேசியதைக்

    காரியமாக்கிட,

    இரவின் வருகைக்கு

    இணைபிரியா

    காதல் உலகம்

    காத்திருக்கும் நேரம்..

     

    கடவுள் தோட்டத்து

    மணிமலரின் வாசம்

    ஓசையாய்

    வெளிவந்திடும் நேரம்..

     

    இது,

    இரவும் பகலும் இணைந்திடும்

    மணவிழா-

    மாலையாகிய நேரம்…!

     படத்துக்கு நன்றி

      http://www.hiren.info/desktop-wallpapers/natural-pictures/sunset_kauai_hawaii    

    Share
  • புத்த பூர்ணிமா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்

     

    நேற்றைய முழுநிலா வடமாநிலங்களில் புத்த பூர்ணிமாவாகக் குறிக்கப் பட்டுள்ளது.

     

    அன்பு, அறம், அஹிம்ஸை, அவா அறுத்தல் என எளிமையும், வலிமையும் நிறைந்த

    வழிமுறைகளைப் போதித்த மஹான்!

     

    சித்தார்த்தன் புத்தராகப் பரிணாமம் பெற்றது இந்த பாரத மண்ணிலே எனினும், இவர் தூவிய விதைகள்

    பரவிச் செழித்ததென்னவோ கிழக்காசிய நாடுகளிலே!

     

    (புத்தரையும், இந்துமதம் தனது கடவுளின் அவதாரங்களில் ஒன்றாக உள்வாங்கி விழுங்கிவிட்டதோ!)

     

    அமைதிதவழும் புத்தரின் சாந்தமுகம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!

     

    வண்ணப்படமாக இணைப்பில்..

     

    பார்க்க, ரசிக்க

     

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!.. 6

     

    சாகர் 

     

    புராதன கைரோ

    கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Synagogue) மூன்றும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி எப்படி மூன்றும் இனத்தினரும் அன்னியோனியமாக வசிக்கின்றனர் இங்கே என்று சுட்டிக்காட்டினார். யூத சமயத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து போதித்தது பிற்காலத்தில் கிருஸ்துவ மதம் என்று அவதரித்தது.பின்னர் வந்த முஹம்மத் நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதம் யூத மற்றும் கிருஸ்துவ சமய போதகர்களையும் துறவிகளையும் கடவுளின் தூதர்கள்(prophets) என்று அங்கீகரித்த போதும் அவர்களுக்கும் எல்லாம் உயர்ந்த தேவதூதர்  நபிகள் என்று நம்புகிறது.  ஒன்றுபட்ட ஆரம்பம் உள்ள இந்த சமயங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ரத்த ஆறு ஓடியதும் உண்மை.

    மஹ்மூத் பெருமையாக இதை சொன்னாலும் எகிப்தும் இஸ்ரேலுடன் பலமுறை போர் செய்ததும் சரித்திரம் தான். இன்றும் எந்த நேரம் போர் மூளும் ஒரு சூழ்நிலை உள்ள பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஸ்துவமதம் எகிப்திற்கு வந்தது அந்த மதம் தோன்றுவதற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது. ஏரோது(Herod) மன்னரின் கட்டளையின் பேரில் யூதர்களின் அரசன் என்று நம்பப்பட்ட குழந்தை இயேசுவை காப்பாற்ற ஜோசப்பும் மேரியும் தப்பி ஓடி ஓளிந்த இடம் எகிப்து தான். எகிப்து ஏரோதின் ஆதிக்கத்தில் இல்லாத நாடு என்றாலும் அது ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி என்பதால் அவர்களால் தடை இன்றி தப்பிக்க முடிந்தது. மேரி ஜோசப் மற்றும் குழந்தை ஏசு அவர்கள் தங்கியதாக ஒரு இடம் இன்றும் கோப்டிக் கைரோவில் உள்ளது. அப்படி தப்பி ஓடிய குழந்தைதான் பின்நாளில் ஏசுவாக வாழ்து போதித்தது தான் கிருஸ்துவ மதம். அவரது சீடர்களில் ஒருவரான புனித மார்க்(St Mark) இந்த மதத்தை எகிப்திற்கு போதித்தார்.

    எங்களை முதலில் கைரோவின் மிக பழமையான சர்ச்சிற்கு அழைத்து சென்றார். இந்த கோவிலுக்கு தொங்கும் சர்ச்(HangingChurch) என்று ஒரு பெயர் உண்டு.

    இன்றைய கோப்டிக் கைரோ பெர்சிய மன்னர்களால் தங்கள் பெருமை வாய்ந்த நகரான பாபிலோன் (Babylon) நகரத்தை நினைவாக பாபிலோன் என்ற நகைரை நிறுவினர். பின்னர் அங்கே அரசாண்ட ரோமானியர் அங்கே ஒரு கோட்டையும் கட்டி அரசாண்டார்கள். பண்டை ரோமானியர் கட்டிய பாபிலோன் கோட்டை மதில்களில் மேல் கட்டப்பட்டது இந்த சர்ச். அடித்தளம் இல்லாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டது என்பதால் இந்த பெயர். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் 29 படிகளை கொண்ட இந்த சர்ச்சை படிகோயில் என்றும் அழைத்தனர். இந்த இடத்தில மூன்றாம் நூற்றாண்டில் சிறிய சர்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. கட்டிய காலத்திற்கும் இன்றைக்கும் பூமியளவு ஆறடி உயர்துள்ளமையால் இன்று பாபிலோன் கோட்டை மண்ணிற்கு கீழே தான் உள்ளது. சில இடங்களில் இருந்து பார்த்தால் அந்த கோட்டை சுவர்கள் இன்றும் சர்ச்சிற்கு கீழே உள்ளது தெரிகிறது.

    கிழக்கு ஆர்த்தோடாக்ஸ்(orthodox) கிருத்துவ வகுப்பினரான கோப்டிக் கிருஸ்துவ அமைப்பின் தலைமை தளமாகவும்  ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ போபாண்டவரின் ஜாகையகம் இந்த சர்ச் திகழ்ந்தது.

    மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சர்ச்சின் சிறப்பம்சங்கள் கருமையான எபோனி மரம்(Ebony) மற்றும் யானைத்தந்தங்களால் செய்யப்பட்டவேலைப்பாடுகள்.  மேலும் இங்கு உள்ள ஒரு புனித மேரியின் ஓவியம் எகிப்திய மோனலிசா என்ற சிறப்புப்பெற்றது. நாம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த மேரி ஓவியம் நம்மை பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தும். ஓவியத்தை பார்த்தவாறு நாம் நகர்ந்தாலும் இதே உணர்வு தோன்றுவது இதன் சிறப்பு.

    அடுத்து சர்ச்சின் பக்கத்தில் உள்ள ஒரு யூதர் வழிபாடுதளமான பெண் எஸ்ரா (Ben Ezra) சைனகாகிற்கு சென்றோம். இந்த சைனகாக் பாலஸ்தீனர்களின் சைனகாக் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை மோசஸ் இந்த இடத்தில தான் எகிப்திய ராணியால் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு வரலாறு நிலவுகிறது.

    சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. யூதர் இஸ்லாமிய பாணியில் உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. இந்த கோவிலை சுற்றிபார்க்க கால்மணிநேரம் போதுமானதாக இருந்தது.

    அடித்து கைரோவின் புகழ் பெற்ற முகம்மது அலி மசூதி நோக்கி சென்றோம். கைரோவிர்க்கு ஆயிரம் மசூதி கோபுரங்கள் கொண்ட நகரம்(City of 1000 minarets) என்ற பட்டபெயர் உண்டு. எந்த திசையில் பார்த்தாலும் மசூதி கோபுரங்களுள் மினாரெட்ட்டுகளும் கண்ணை கவரும்.

    கைரோ சிட்டாடல்(Citadel) எனப்படும் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பெரிய மசூதி முஹம்மத் அலி பாஷா எனப்படும் ஒட்டமன் அரசர்  மகனின் நினைவாக கட்டியது. இவர் துருக்க வம்ச்சதினர் என்பதால் இஸ்தான்புல்லில்(Istambul) உள்ள ஏணி(Yeni) மசூதியை போல வடிவமைத்தார்.1857 வருடம் கட்டிமுடித்தபோது இதுதான் பத்தொம்பதான் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி.

    சுண்ணாம்பு கற்களால்(Limestone) கட்டப்பட்ட இந்த மசூதி அலபாச்டர் (Alabaster)பளிங்கினால் அலங்கரிக்க பட்டது. உள்ளே நுழையும் முன் பெண்கள் தலையில் மூடும் பழக்கம் துருக்கியை போலவே இங்கும் நிலவியது. நன்று அலங்கரிக்கப்பட்ட குவிந்த கூரை (Dome) மற்றும் நான்கு சிறிய மண்டபக்கூரைகளும் கொண்டதாக அமைக்கபட்டிருந்தது.

    வடமேற்கு பகுதியில் ஒரு அழகிய பித்தளை மணிக்கூண்டு (brass clock tower)அமைந்திருந்தது. லக்சோர் ஒபெளிச்க்(Luxor Obelisk) ஒன்றை முஹம்மத் அலி பிரான்சு அரசருக்கு பரிசளித்தாராம். இந்த கடிகாரம் முஹம்மத் அலிக்கு பிரான்சு அரசர் லூயிஸ் பிலிப்(Louis Philip) தந்த மாற்று பரிசாம். லக்சோர் ஒபெளிச்க் இன்றும் பாரிஸ் நகரத்தில் பிளேஸ் டி ல கண்க்கார்டில் உள்ளது(Place de la Concorde).

    முஹம்மத் அலி மசூதியை பார்த்து முடித்து மீண்டும் வண்டியில் ஏறி கைரோ அருங்காட்சியகத்திற்கு சென்றோம். கைரோ அருங்காட்சியகம் ஒரு எகிப்திய கலாச்சாரத்தின் கடல். தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டெடுக்கபட்டவை பெரும்பாலானவை இதில் உள்ளது. மற்றவை பாரிஸில் உள்ள லூவ்ரு(Louvre) அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    சிறிது நேர பயணமுடிவில் தாஹ்ரிர் சதுக்கத்தை அடைந்தோம்.  இந்த சதுக்கத்தில் தான் எகிப்திய புரட்சியின் பொது மக்கள் கூடி கிராசி செய்தனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடந்த கைகலப்புகள் இங்கே அதிக்கம் அரங்கேறியது. புரட்சியின் பொது அருங்காட்சியகம் தாக்கப்பட்டது என்றும் அப்போது இரண்டு மம்மிகள் மற்றும் பல தொல்பொருள்கள் சிதலமடைந்தன என்று மஹ்மூத் குறிப்பிட்டார்.

    மேலும் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி அது முன்னால் அதிபர் முபாரக்கின் அலுவலங்களில் ஒன்று என்றும் புரட்சியின் பொது கோபமடைந்த மக்கள் அதனை கொளுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புகைப் படிந்து சிதலமடைந்த நிலையில் இருந்தது அந்த கட்டிடம்.

    மேலும் எகிப்திய அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தொல் பொருட்களை கீஸாவில் புதிதாக கட்டப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இன்னும் சில வருடங்களில் கொண்டு செல்வதாக திட்டம் என்றும் கூறினார்.

    நான்காயிர வருட வரலாறு மற்றும் தொல்பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடு உள்ளே சென்றோம்.

    தொடரும்…….

    Share
  • மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட மாட்டாயா….

    அண்மையில் மறைந்த திரு பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களது நினைவில் அன்றைய இரவே நான் எழுதிய இந்த எளிய பிரதி, ஏப்ரல் 22 தீக்கதிர் நாளேட்டில் வந்திருக்கிறது….
    உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது….

    நன்றி
    எஸ் வி வேணுகோபாலன்

    அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் சித்திரை திங்கள் முதல் நாள் காலமாகிவிட்டார்.

    காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் என்று முணுமுணுக்காத பழைய தலைமுறை இருப்பது அபூர்வம். மெல்லிசை என்று அழைக்கப்படும் திரை இசையை அதனினும் மெல்லிய இசையாகத் தமது குரல் வழி பொழிந்தவர் பி பி எஸ்.

    மிகக் குறைந்த எண்ணிக்கையில் கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், கதாநாயகர்கள் இருந்த அந்த அறுபதுகளில் சிவாஜி, எம் ஜி ஆர் என்ற பெரிய நடிகர்களுக்கு டி எம் சவுந்திரராஜன் நிரந்தர பாட்டுக்காரராகத் திகழ்ந்தார். எங்கே நிம்மதி என்று வானொலியில் பாடல் புறப்படுகையிலேயே ரசிகன் சிவாஜி படம் என்று முடிவுக்கு வந்துவிடுவான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று தொடங்கும் பாடலை வாத்தியார் பாட்டுடா என்று கூத்தாடத் தொடங்கிவிடுவான்…

    பி பி எஸ் அவர்களது அலை வரிசை வேறு தளத்தில் இயங்கியது. பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ , ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம். துள்ளலான காதலைக் கூட அவரது கொஞ்சும் மொழி இலக்கியப் படுத்தியதை, தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் என்னும் எதிர் நீச்சல் படத்தின் பாடலில் கேட்க முடியும். வாலியின் அருமையான வார்த்தை விளையாட்டு நிறைந்த அந்தப் பாடலில் (மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் என்று பி சுசீலா இழைக்கும் இடம் அத்தனை அழகு), நாகேஷின் சேட்டை நிறைந்த உடல் மொழிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும் சரணங்களைப் பாடியிருப்பார் பி பி எஸ்.

    ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் காதல் உருக்கத்திற்கு இலக்கணம் எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே எழுத வேண்டிய சாகித்தியம். உதடுகளை அவர் எப்படிப் பிரித்து எப்படி மூடி பாடலின் சொற்களை உச்சரித்தார் என்று யோசிக்க வைக்கும் எழில் அவரது குரலில் நெளிகிறது. வீரத் திருமகன் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலிலும் சுசீலா அவருக்கு ஏற்ற இணை குரலாய் ஒலித்தார்

    எம் எஸ் விஸ்வநாதன் தமது எந்த மெல்லிசைக் கச்சேரியிலும் முதல் பாடலை இசைக் கருவிகளைக் கொண்டு தான் தொடங்குவார். எண்பதுகளில் நான் பார்த்தவரையில் அது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம் என்ற இனிமை நிறைந்த பாடலாகத் தான் இருக்கும். அதில், இளைய கன்னிகை என்ற சொற்களை அத்தனை கிறக்கமாக எடுத்துக் கொடுப்பார் பி பி எஸ். அதே கதியில் சரணங்களை இசைக்கும்போதும், ஹம்மிங் செய்கையிலும் அப்படி ஒரு சுகானுபவத்தை அளிப்பார் கேட்போர்க்கு.

    அவருக்கே உரித்தான வெல்வெட் குரலில் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய போலீஸ்காரன் மகள் படத்தின், பொன் என்பேன் சிறு பூ என்பேன் என்ற கீதம், வித்தியாசமான திரை இசைப் பாடல்களைத் தொகுத்தால் அதில் முக்கிய இடத்தில் இருக்கும்.

    சொற்களை அவர் கொஞ்சம் நகாசு வேலை செய்து சொகுசாக்கி உருட்டி விடுவது போல் வந்து நமது இதயத்தைத் தொடும்….சோகப் பாடல்களோ இதயத்தை வருடும். ஜெமினி கணேசனுக்கென்றே அவர் குரல் கொடுத்த கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள் இரவின் தனிமையில் நம்மை வேறு ஒரு கிரகத்திற்குக் கொண்டு போய்க் குடியமர்த்தும். அப்படியான பாடல்களில் மயக்கமா கலக்கமா ஒரு தினுசான வித்தை காட்டும் என்றால் அசர வைக்கும் வேறொரு பாடலான யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன என்பது கற்பனையான ஒரு சோகத்தைக் கேட்பவருள் உருவாக்கி அதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நிறைவுறும்.

    டி எம் சவுந்திரராஜனோடு இணைந்து பி பி எஸ் கொடுத்த அருமையான பாடல்களில், மறக்க முடியாதவை, பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை என்பது தனி ராகம். புல்லாங்குழல் இசையின் ஒத்த கதியில் மிகவும் அமைதியான பரஸ்பர காதல் பகிர்வின் இரண்டு வெவ்வேறு குரல்கள் கலந்து மிதக்கும் அந்தப் பாடலில், ஸ்ரீநிவாஸ் அழுத்தமான டி எம் எஸ் குரலினூடே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போல மென்சிதறலாய்த் தமது குரலைப் பொழிவார். அவள் பறந்து போனாளே பாடல் வேறொரு பாவத்தில் இதே இருவரின் குரல்களை இணைக்கும் பாடல். எம் எஸ் வி தேர்ச்சியான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கத்திய சூழலை மனத்திற்குள் படரவிடும் அழகே தனி.

    தவப் புதல்வன் படத்தில், சிவாஜிக்காக ‘உலகின் முதலிசை தமிழிசையே’ என்று டி எம் எஸ் பாடுவதற்குப் போட்டியாக, திக்குரிசி சுகுமாரன் நாயர் என்ற நடிகர் பாடுவதற்கு பி பி எஸ் பாடிய, சங்கீத குலோமினி பஹியாகே என்ற சங்கீதம் ருசியானது

    என்ன சொன்னாலும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய தத்துவப் பாடல்களில், கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்றான காட்டு ரோஜாவில் வரும் எந்த ஊர் என்றவனே பாடல் ரசனைக்கு ஏற்ற சரக்கு. அதில்

    காதலூர் காட்டியவள்
    காட்டூரில் விட்டுவிட்டாள்,
    கன்னியூர் மறந்தவுடன்
    கடலூரில் விழுந்துவிட்டேன்,
    பள்ளத்தூர் தன்னில் என்னை
    பரிதவிக்க விட்டுவிட்டு
    மேட்டூரில் அந்த மங்கை
    மேலேறி நின்று கொண்டாள்….

    என்று ஓர் இழு இழுத்து ஒரு நொடி pause கொடுப்பார்….இசையின் அழகு, நடுவே கடந்து போகும் ஓசையற்ற மவுன இடங்கள் என்பதன் இலக்கணம் அந்த இடம்…

    ‘அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்? இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்?

    கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.

    இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை…இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற இரத்தினத்தை பி பி எஸ் வழங்கியது

    மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்….கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்.

    எந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டாலும் அவரது கவிதை ஒன்று தயாராக இருக்கும்….ஆங்கிலத்திலும் தமிழிலும் தம்மை சிறப்பித்த மனிதரின் பெயரில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து அத்தனை வரிகளில் ஒரு கவிதை எடுத்து விடுவார் அல்லது அந்த அமைப்பின் பெயரில்.! இந்தியன் வங்கியில் ஒரு பாடல் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டபோது வங்கியைப் பெருமைப் படுத்தி அப்படியான ஒரு கவிதையை வாசித்தார் அவர்.

    தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.

    அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்….சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.

    சில மாதங்களுக்குமுன் பாண்டி பஜாரில் ஓர் ஓட்டலில் இருந்து அவர் வெளியே வருவதைப் பார்த்தேன்…உடன் வந்த குடும்ப உறுப்பினர்களில் இளைய தலைமுறைக்கு அவர் பெயரைச் சொல்லத் தெரியாமல் திணறிய போது வருத்தமாக இருந்தது…அவரைத் தெரியும் என்றால் அருகே போய்ப் பேசுங்களேன் என்றார்கள். எனக்குத் தான் அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. .இந்த முதிய வயதில் அவர் தேடித் தேடி அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் அற்ப ரசனையுடன் குறுக்கிட எனக்கு தயக்கமாக இருந்தது….வழக்கமாக இத்தனை யோசிக்கவே மாட்டேன்.

    அவரை இனி ஒரு போதும் அருகே சென்று பார்த்துப் பேசவோ அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று நடுங்கும் அவரது கைகளை எடுத்து எனது இதயப் பக்கத்தில் அழுத்தியவாறு பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று இன்று நினைக்கும்போது அன்றைய தயக்கம் இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது…..

    வணக்கம் பி பி எஸ்…..எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் – தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என உங்கள் குரல் ஒலித்த அத்தனை மொழிகளிலும்…..

    *************************
    நன்றி: தீக்கதிர் – ஏப்ரல் 22

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 73 (27.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்”

    (51)

    தீயைக் கொட்டிப் பரப்பி
    அதன் வெப்பத்தினால்
    எமை வருந்தச் செய்கிறதே
    இம்மாலைப்பொழுததுவே!

    இது இங்ஙனம் நமை வருத்தும்
    என்று சற்றும் நினைந்து பார்த்திடாது
    தலைவன் உரைத்திட்ட
    பொய்ச் சூளுரைகளை
    உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே!

    பூமணம் நிறை கானற்சோலையில் வாழுகின்ற
    சிறப்புப் பொருந்திய கடல் தெய்வமே!
    எம் தலைவர்தம் பொய்ச்சூளுரையைத்
    தண்டிக்காது பொறுத்தருள்வாயாக!
    நின் மலரடி போற்றி வணங்குகிறோம்.

    கட்டுரை

    “கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்”

    (52)

    இவ்வாறெல்லாம் மாதவி பாடக்கேட்ட கோவலன்
    நான் கானல்வரி பாடினேன்;
    அங்ஙனம் பாடாமல்
    வஞ்சனைப் பொய்கள் கூட்டி
    மாயம் செய்திடும் இம்மாயக்காரியோ
    வேறு யாரையோ நினைத்துப் பாடினள்
    என்று எண்ணுகையில்,
    யாழிசை மேல் வந்து நின்றது
    அவனுடைய ஊழ்வினை.

    முழுநிலவு நாளில் தோன்றுகின்ற
    நிலா போலும் முகமுடைய மாதவியுடன்
    இணைத்த தன் கையை
    அப்போதே ஞெகிழவிட்டனன்;
    பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறியே
    ஏவலர் மட்டும் சூழ
    மாதவியை விடுத்துப் புறப்பட்டனன்;

    மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
    தன் மனை புகுதல்”
    தாது விரிந்த பூக்கள் நிறைந்த சோலையில்
    தனித்துக் கோவலன் விட்டுச் சென்றிட
    செயலற்றுத் தவித்த மாதவி
    ஆங்கே நிலவிய ஆரவார ஒலிகள் அடங்கியதும்
    வண்டியில் சென்றமர்ந்து
    தனியே தன்மனை புகுந்தனள்
    கோவலன் உடன் இன்றியே.

    புகுந்தபின்,
    இவ்வுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கும்
    சோழ மன்னனையும்,
    அவனது
    முகபடாம் அணிந்த யானையையும்
    ஒளி பொருந்திய வாளையும்
    “மிகப்பெரிய சக்கரவாளம்
    எனும் மலையை உள்ளடக்கி
    ஆட்சி புரிவதாகுக” என்று
    வெண்கொற்றக் குடையையும்
    வாழ்த்தி நின்றனள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02141l6.htm
    கானல்வரி முற்றியது; தொடர்வது வேனில் காதை

    Share
  • சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே…

     

    -சு.ரவி

     

    “சின்னஞ் சிறிய உன் சிந்தைக்குள்ளே

    என்னென்ன கனவுகள் நிகழ்கின்றவோ!

     

    அன்னை அணைத் துன்னைக் கொஞ்சினளோ-அவள்

    ஆசைமுகம் அங்கே தோன்றியதோ

    பின்னணி யாயவள் தீங்குரலில்-ஒரு

    பாடலும் காதினில் கேட்கின்றதோ

     

    வண்ணங்கள் நாட்டியம் ஆடினவோ-ஏழு

    ஸ்வரங்களும் வானவில் ஆயினவோ

    கண்ணனும், கந்தனும் உன்னுடனே- உன்]

    கனவினிலே விளையாடினரோ

     

    கண்ணிமை மூடியுன் கையினிலே-பட்டுக்

    கன்னம் அழுந்திடத் தூங்குகிறாய்

    வண்ண ரோஜாஇதழ் மொட்டினைப்போல்-செப்பு

    வாயைச் சுழித்து உறங்குகிறாய்

     

    கண்மணியே உந்தன் சொப்பனத்தில்-நீ

    காண்பதெல்லாம் இங்கே தீட்டிவிட

    வண்ணமில்லை, ஒரு வார்த்தையில்லை-இதை

    ரசிப்பதல்லாதொரு வாழ்க்கையில்லை!”

     

    Share
  • வடக்கிருத்தல்

     

    -மேகலா இராமமூர்த்தி

     

    இப்போதெல்லாம் செய்தித்தாளைப் பிரித்தாலே ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவரோ அல்லது அவருடைய தொண்டரடிப்பொடிகளோ உண்ணாநோன்பு இருப்பது குறித்த செய்திகள் கட்டாயம் கண்ணில் படுகின்றன. இவர்கள் மேற்கொள்ளும் உண்ணாநோன்புகள் தங்கள் (அரசியல்சார்) கோரிக்கை நிறைவேறவில்லை என்பதற்காகவோ அல்லது எதிர்க்கட்சியினருக்கு தம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவோ பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாகவே விளங்கிவருகின்றன. இவை பெரும்பாலும் ’ஒரு பகல் வாழ்க்கை கொண்ட ஈசல்’ போலச் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிடுகின்றன. மற்றும்சில உண்ணாநோன்புகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஓரிரு நாட்கள் நீடிப்பதும் உண்டு.

    இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் சமுதாய நலனையும், நம் இந்தியச் சுதந்திரத்தையுமே நோக்கமாகக் கொண்ட உண்ணாநோன்புகள் பலவற்றை நம் தேசப்பிதா ‘மகாத்மா’ காந்தியடிகள் சென்ற நூற்றாண்டில் மேற்கொண்டிருந்தார் என்பதனை நாம் அறிவோம். அவ்வுண்ணாநோன்புகளில் சில மாதக் கணக்கில் கூட நீடித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் ‘நவகாளி’யில் மேற்கொண்ட உண்ணாவிரதம் இன்றும் நினைவுகூரப்படுகின்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வாகத் திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

    இவற்றையெல்லாம் நோக்கும்போது, இந்த உண்ணாநோன்புகள் எப்போது, யாரால் தொடங்கப்பட்டன? இவற்றின் உண்மையான நோக்கம் என்ன என்று அறிந்துகொள்ளும் ஆவல் நமக்கு எழவே செய்கின்றது அல்லவா! இவற்றின் தொடக்கம் குறித்தும், இவற்றை ஆரம்பித்து வைத்தவர்கள் யார் என்பது பற்றியும் சற்று ஆய்ந்து பார்ப்போம்.

    உண்ணாநோன்பிருந்து ’உயிர்நீத்தல்’ என்ற கொள்கையை முதன்முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ‘சமணர்கள்’ என்பது நமது பண்டைய தமிழிலக்கியங்கள் மூலமாகத் தெரியவருகின்றது; ’சல்லேகனை’ என்ற பெயரில் அவர்கள் இதனை வழங்கிவந்துள்ளனர். எந்தச் சூழ்நிலையில் இந்த ’சல்லேகனை’ மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ‘அருங்கலச் செப்பு’ என்ற சமண நூல் அழகாகத் தெளிவுபடுத்துகின்றது.

    ”இடையூறு ஒழிவில்நோய்  மூப்பிவை வந்தால்
    கடைதுறத்தல் சல்லே கனை.”

    தாங்கமுடியாத அளவிற்குப் பிறரால் ஏற்படுகின்ற தொல்லை, தீராத நோய், மிகுந்த மூப்பு ஆகியவை வரும்காலத்துச் ’சல்லேகனை’ செய்து உயிர்விடலாம் என்கின்றது இந்நூல். இவையல்லாது பஞ்சம் (வற்கடம்) வந்தகாலத்தும் ‘சல்லேகனை’ மேற்கொள்ளலாம் என அனுமதி அளிக்கின்றது, இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் மற்றொரு சமண நூல்.

    தூய எண்ணத்தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு ’சல்லேகனை’ இருக்கவேண்டும் என்பதும் இந்நூல்களால் வலியுறுத்தப்படுகின்றது. ஆகவே சல்லேகனையைத் ’தற்கொலை’ என்று கொச்சைப்படுத்தலாகாது; அஃது எத்தகைய பலனையும் எதிர்பாராது அறவழியில் உயிர்விடும் ஓர் உயரிய முறையே என்கிறது ‘நீலகேசி’ என்னும் சமண நூல்.

    ’சல்லேகனை’ செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவுகொள்ளாமல் இருக்க வேண்டும். தேவையாயின் நீர் மட்டும் உட்கொள்ளலாம். வடக்கு திசை நோக்கி அமர்ந்து உயிர்துறக்கின்ற காரணத்தினாலேயே இஃது ‘வடக்கிருத்தல்’ என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். பின்பு அப்பெயரே பரவலான வழங்குபெயராகத் தமிழரிடையே நிலைத்துவிட்டது.

    சமண முனிவர்களால் ஏற்படுத்தப்பட்ட ’வடக்கிருத்தல்’ என்ற இம்முறையினைப் பின்பற்றி உயிர்துறந்தோரில் பெரும்பாலோர் தீர்த்தங்கரர்களே (சமண முனிவர்கள்). அவர்களேயல்லாது, வேறு சில தமிழ்ச் சான்றோரும் வடக்கிருந்து உயிர்துறந்திருப்பது நம் சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தெரியவருகின்றது. இம்முறையில் பொன்னுடலை நீத்தும் புகழுடம்பால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயர்ந்தோர் சிலர் குறித்து இங்கே காண்போம்.

    ’வடக்கிருந்து உயிர்துறந்தவர்’ என்று சிந்திக்கும்போதே, சட்டென்று நம் நினைவுக்கு வருவது கோப்பெருஞ்சோழன் என்னும் பெயரே! ஆம்..கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறந்தது உண்மையே என்பதனை ஆதாரங்களோடு விளக்குகின்றது புறநானூறு. அடடா…இது என்ன கொடுமை! அவன் மன்னனாயிற்றே, அவனுக்கு என்ன துன்பம் இருக்கமுடியும்? பஞ்சம் பசி போன்றவை அவன் அரண்மனை இருக்கும் திசைப்பக்கம் கூட வர வாய்ப்பில்லையே! பின்பு யாது காரணத்தினால் அவன் வாழ்வையே வெறுத்து உயிர்துறக்க முடிவெடுத்தான் என ஆராயும்போது….அவனுடைய பிள்ளைகள் தம் தீயொழுக்கத்தின் காரணமாக அவனுக்கு எதிராகக் கலகம் விளைவித்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற விழைந்தனர் எனவும், அதனை விரும்பாத அவன் அவர்களோடு போர் புரிய எத்தனித்த வேளையில் அவனுடைய அவைக்கண் வீற்றிருந்த அறிவுசால் புலவர்பெருமக்கள், ”பிள்ளைகளுக்கெதிராய்த் தந்தை போர்புரிவது பீடன்று” என்று அவனைத் தடுத்துவிட்டனர் எனவும், அதன்பிறகும் உயிர்வாழ்தலை விரும்பாத அவன் ‘வடக்கிருந்து’ உயிர்துறந்தான் எனவும் கூறுகின்றது புறப்பாட்டு.

    கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்த வேளையில் தன் ஆருயிர் நண்பர் ’பிசிராந்தையாரும்’ தன்னோடு உயிர்துறக்க அவ்விடத்திற்கு வருவார் என்று உறுதியாக நம்பியவனாக அவருக்கும் ஓர் ஆசனம் இடச் சொல்கின்றான். இதில் விந்தை என்னவென்றால், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதுநாள் வரைப் பார்த்ததுகூடக் கிடையாது. கோப்பெருஞ்சோழன் சோழ நாட்டின் அரசன்; பிசிராந்தையாரோ பாண்டிய நாட்டில் வாழ்ந்துவந்த ஓர் புலவர் பெருந்தகை. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட அதிசய நட்போ இன்றளவும் நமக்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அள்ளி வழங்கும் ’முகமறியாத அகம் ஒத்த நட்பு’; இதைக் காணும்போது இவ்வாறெல்லாம்கூட நட்பு மலர முடியுமா? என்று நமக்கு ஐயம் ஏற்படுகின்றது இல்லையா? ஆனால் அந்த ஐயத்தை அழகாகத் தெளிவுபடுத்திவிடுகிறார் நம் வள்ளுவப் பேராசான்,

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

    நட்பாம் கிழமை தரும்.(குறள்: 785) என்ற இந்தக் குறள் வாயிலாக.

    இக்குறளுக்கு இவர்களினும் சிறந்த ஓர் சான்றை நாம் காட்டிவிட முடியுமா?

    பிசிராந்தையாருக்குத் தன்னருகே ஆசனமிடச்சொன்ன கோப்பெருஞ்சோழன் அவர் பாண்டிய நாட்டிலிருந்து (தன்னிடம்) வந்து சேரும் வரை உயிரோடு இல்லை. அதற்கு முன்னரேயே உண்ணாநோன்பின் காரணமாக உயிர்துறந்து விடுகின்றான். அங்கே குழுமியிருந்த அரசவைப் புலவோர், இனியும் பிசிராந்தையார் வர வாய்ப்பில்லை என்றே எண்ணினர். ஆனால் நடந்ததோ வேறு. அவர்கள் அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் பிசிராந்தையார் அங்கே வந்து விடுகிறார். அதுமட்டுமல்ல…..தன் நண்பன் கோப்பெருஞ்சோழன் உயிர்துறந்து ’நடுகல்லான’ இடத்திற்கருகிலேயே தனக்காக இடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து தன் இன்னுயிரையும் நீத்துச் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற சான்றோரின் உயர்ந்த நட்பிற்கும் இலக்கணம் வகுத்துவிடுகின்றார்.

    இந்நிகழ்வினைக் கண்டு நெகிழ்ந்துபோன கோப்பெருஞ்சோழனின் அரசவைப் புலவர்களில் ஒருவரான ‘பொத்தியார்’ என்பவர், ”தன் நண்பன் தன்னைக் காண வருவான் என்றெண்ணிய மன்னனின் சிறப்பும், அந்தச் சொல் பழுதாகாதவாறு வந்துவிட்ட இப்புலவரின் அறிவும் வியக்குந்தோறும், வியக்குந்தோறும் வியப்பை மிகுதியாக்குகின்றதே” என்று இவ்விரு நண்பர்களையும் போற்றிப் புகழ்கின்றார்.

    ”……..வருவ னென்ற கோனது பெருமையும்
    அதுபழு தின்றி வந்தவ னறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே….” (புறம்: 217)

    கோப்பெருஞ்சோழனின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கிய ’பொத்தியார்’ என்னும் அப்புலவரும் பின்பு வடக்கிருந்து உயிர்துறக்கிறார் என்ற செய்தியையும் புறநானூறு புலப்படுத்துகின்றது. இப்புலவர் பெருமக்களுக்குத்தான் கோப்பெருஞ்சோழன்மீது எத்துணை பேரன்பு!!

    இதுபோன்று வடக்கிருந்து உயிர்நீத்ததாகப் புறநானூறு போற்றும் மற்றோர் அரசன் ’சேரமான் பெருஞ்சேரலாதன்’ ஆவான். இவனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் நடைபெற்ற போரில், வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பிலும்
    முகத்திலும் படும் புண்ணையே விழுப்புண்ணென வீரர்கள் விரும்புவர். மார்பில்பட்ட கருவியால் முதுகிலும் இச் சேரமானுக்குப்புண் ஏற்பட்டதால், இவன் மிகவும் நாணம் கொண்டு வடக்கிருந்து உயிர்துறந்தான் எனப் புறநானூறு 65, 66-ஆம் செய்யுள்களும் அவற்றின் உரைகளும் எடுத்தியம்புகின்றன.

    கழாஅத்தலையார்’ எனும் புலவர் சேரமான் பெருஞ்சேரலாதனின் வடக்கிருத்தலைப் புகழ்ந்து பாடிய பாடல் இது…

    ”…….தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த

    புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்

    வாள்வடக் கிருந்தன னீங்கு……………………….” (புறம்: 65)

     

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின்.” (குறள்: 969) என்ற குறளுக்கு இலக்கணமாகவன்றோ திகழ்கின்றான் இச்சேரமான்!!

    கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பைப் போலவே காலத்தை வென்ற காவிய நட்பு மற்றொன்றையும் நம் தமிழிலக்கியம் காட்டுகின்றது. ’புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்று ’மாறோக்கத்து நப்பசலையார்’ என்னும் புலவரால் பாராட்டப் பெறும் கபிலரும், ’பறம்பு மலையை’ ஆண்ட குறுநில மன்னன் பாரியுமே அந்த நண்பர்கள்.

    பாரியையும், அவன் ஆண்ட பறம்பு மலையையும் பாடுவதற்காகவே பிறந்த புலவராகக் கபிலர் காட்சியளிக்கிறார். பாண்டிய நாட்டைச் சுற்றியிருந்த பகுதியான ‘பறம்பு மலை’யை ஆண்ட வேள்பாரியும், திருவாதவூரில் பிறந்த பெரும்புலவரான கபிலரும் இனிய நண்பர்களாய் விளங்கினர்.

    கடையெழுவள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த பாரி, பற்றிப்படரக் கொழுகொம்பு இன்றிக் காற்றில் அலைந்த முல்லைக் கொடியைக் கண்டு உள்ளம் வருந்தித் தன் தேரையே அது படர்வதற்காக விட்டு வந்தவன். அத்தகைய அருள் உள்ளமும், வள்ளன்மையும் வாய்ந்தவனாயிருந்ததனால் மக்கள் கூட்டம் எப்போதும் அவனைச் சூழ்ந்திருந்தது. இரவலர்கள் வந்து பரிசல்பெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர். பாரியின் சிறப்புமிகு வள்ளன்மையை (வஞ்சப் புகழ்ச்சியாக) கபிலர் பாடிய ஓர் இனிய பாடல்.

    ”பாரி பாரி யென்றுபல வேத்தி
    ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
    பாரி யொருவனு மல்லன்
    மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறம்: 107)

    ”பாரி..பாரி என்று ஏன் எல்லாரும் அவனையே போற்றிப் புகழ்கிறீர்கள்? அவன் ஒருவன்தான் இருக்கிறானா உங்களைக் காக்க? ஏன் மாரி(மழை) இல்லையா? என்று மக்களைக் கேட்கும் வகையில் கபிலர் இப்பாடலை அழகுற அமைத்துள்ளார். இதில் பாரியை இகழ்வதுபோல் ‘மாரி’ நிகர்த்தவன் என்று அவனுக்குப் புகழ்மாலை சூட்டுகின்றார்.

    பேரும், புகழும் பெற்றவனாக ஓர் குறுநில மன்னன் விளங்குவது கண்ட மூவேந்தர்களும் அவன்பால் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் கொண்டு அவனைத் தந்திரமாகக் கொன்றுவிடுகின்றனர். அதுகண்டு பாரியின் உயிர் நண்பரான கபிலர் பெருந்துயர் அடைகின்றார்.

    பாரியின் புதல்விகள் (பாரி மகளிர்) இருவரையும் தாமே தந்தைபோல் இருந்து காத்து அவர்கட்குத் திருமணம் செய்வித்தபின்பு, தன் உயிர்நண்பன் பாரியை நினைந்தேங்கி ‘வடக்கிருந்து’ உயிர்துறக்கிறார் என்ற செய்தியைப் புறம் நமக்குச் சுட்டுகின்றது. நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தகைய அரிய நட்பு இவர்களுடையது!

    வடக்கிருந்து உயிர்துறந்த உத்தமர்கள் வரிசையில் அடுத்து நம் நினைவுக்கு வருபவர் சமணத் துறவியான ‘கவுந்தியடிகள்’ என்னும் பெண்மணி. சிலப்பதிகாரத்தில் ஓர் முக்கியப் பாத்திரமாகத் திகழ்கின்ற இவ்வம்மையார் கோவலனும், கண்ணகியும் மதுரைக்குப் பயணப்பட்டபோது அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும், வழித்துணையாகவும் உடன்சென்றவராவார். ‘மாதரி’ என்ற ஆயர்குல முதியவளிடம் கண்ணகியையும், கோவலனையும் அவர் அடைக்கலமாகக் கொடுக்கின்றார். கண்ணகியின் பெருமையைக் கவுந்தியடிகள் மாதரியிடம் விளக்கும் அற்புதமான பாடல் வரிகள் நம்மைக் கண்ணகிபால் பெருமதிப்பு கொள்ள வைக்கின்றன.

     “கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது,
     பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்” (சிலம்பு: அடைக்கலக் காதை: 143-144).

    உயர்ந்த தவசீலராக விளங்கிய கவுந்தியடிகள் பின்பு கோவலன் கொலையுண்டது, பாண்டியனும் அவனுடைய மனைவியாகிய கோப்பெருந் தேவியும் உயிர்நீத்தது, அரண்மனை எரியுண்டது, மாதரி என்னும் மூதாட்டி தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலன், கண்ணகியைக் காக்கத் தவறிவிட்டோமே என்று துயருற்றுத்  தீயில் பாய்ந்து உயிர்விட்டது ஆகிய அவலச் செய்திகளையெல்லாம் கேள்வியுறுகின்றார்; ஆற்றொணாத் துயரம் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண்டு என்று எண்ணி வருந்துகிறார். மாசற்ற தூய மனம் படைத்த அவருக்குத் தாங்கவியலா மனவேதனை ஏற்படுகின்றது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார். இதனை,

    ”தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்

    நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன்
    போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
    என்னோ டிவர்வினை யுருத்த தோவென
    உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..”     (சிலம்பு: நீர்ப்படைக் காதை: 79-83) என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ குறிப்பிடுகின்றது.

    இவ்வாறு சமணர்களால் தொடங்கப்பட்டு பின்னர் ஏனைய தமிழ்ச் சான்றோராலும் பின்பற்றப்பட்ட பொருள்பொதிந்த ஓர் உயிர்நீத்தல் முறையே வடக்கிருத்தல் எனப்படும் சல்லேகனை. இம்முறையைத் தகுந்த, உயர்ந்த காரணங்களுக்காகவே நம் முன்னோர் பின்பற்றி வந்திருக்கின்றனர் என்பது மேற்கூறப்பட்ட நிகழ்வுகளால் உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

    அதைவிடுத்து, வடக்கிருத்தலை அவமதிக்கும் விதமாகவும், கேலிக் கூத்தாக்கும் வகையிலும், தற்காலத்தில் ’உண்ணாநோன்பு’ என்ற பெயரில் பலரும் இதனைத் தம் ’சுய லாபம்’ கருதி மேற்கொள்வது மிகவும் வருந்தத்தக்கது. அந்நாளில் மேற்கொள்ளப்பட்ட (உண்மையான) வடக்கிருத்தல் முறையானது நமது பண்டைய நாகரிகத்தின் சிறப்பினையும், மேன்மையையும் தெளிவாய்ப் படம்பிடித்துக் காட்டித் தமிழர்களாகிய நம்மை இன்றும் பெருமைகொள்ளச் செய்கின்றது என்பதில் ஐயமில்லை.      

     

    படத்துக்கு நன்றி: http://emadal.blogspot.com/2006/02/blog-post_19.html

     

    Share
  • வார ராசி பலன்!…27-05-13 to 01-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும், வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் எந்தத் தொல்லையும் இராது. பெண்கள் எந்த சூழலிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படும் வாரம்  இது. சிறிய அளவில் பண முதலீடு செய்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனமாய் இருப்பது அவசியம். மாணவர்கள்  உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம்.  பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வரை பொறுமையாய் இருப்பது நல்லது

    ரிஷபம்:  தனியார் துறையில் பணி புரிபவர்களுக்கு,உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே  என்ற குறை இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் செல்லும் வியாபாரிகள் புதிய உணவு வகைகளை விலக்குவது நலம். பெண்கள் செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித் தனமாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல்நலம் சுமாராக இருக்கும். இருந்தாலும் பித்தம் போன்ற  உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம்.   பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியில் சிரத்தை எடுத்து செய்தால், வேண்டிய வேண்டிய பலனோடு  எதிர்பார்த்த  பாராட்டும், புகழும்  தானே வந்து  சேரும்

    மிதுனம்:   இந்த வாரம்  கலைஞர்கள்   மேற்கொள்ளும் வெளியூர் பயணம் மூலம் பெறும் பலன்கள் சொற்பமாக இருப்பதால், திறமையை முழு அளவில் பயன்படுத்தி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம். வியாபாரிகள் இறங்கும் புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அளவில் விஷயங்கள் அமையாமல்,  சிற்சில பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே திட்டங்கள் நிறைவேறும் வரை பொறுமையாகசெயல்படுவது அவசியம்.. பொதுவாக இந்த வாரம் மாணவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.     பெண்கள் பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும்.

    கடகம்: முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள்   அவ்வப்போது  வழக்குகளின் போக்கை கவனித்து வருவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள்  உடன்  இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும்.   லாபத்தைப்பெற வியாபாரிகளும் பணியாளர்களோடு  சேர்ந்து  உழைக்க வேண்டியது இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய இலாக்காவிற்கு மாறும் வாய்ப்பிருப்பதால் வேலைப்  பளு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள எடுக்கும் முயற்சிக்குத் தக்க பலனிருக்கும்   கலைஞர்கள்   சக கலைஞர்களிடம் தங்கள் கோப தாபத்தைக் கொட்ட வேண்டாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் கடன்தொகை கைக்கு வந்து சேர்வதோடு .  மேலதிகாரிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும்  தானே  மறையும்.  பெண்களுக்கு உறவினர்கள் மூலம்  நற்பலன்கள் கிடைக்கும்    சுய  தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது வரை இருந்த நெருக்கடிகள் விலகி நிறைவான வாழ்க்கையும், கையில் சரளமான பணப் புழக்கமும் இருக்கும்   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  தேவையில்லாத அலைச்சல்களும், மன சங்கடங்களும் தோன்றி மறையும். வயதானவர்கள் தங்கள்  உடல் ஆராக்கிய வகையில் கவனம் செலுத்துவது அவசியம்.

    கன்னி.  பணியில்  இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு , இந்த வாரம் அனுகூலமான  தகவல் வந்து சேரும்.   பெண்கள் இல்லத்தில் அவ்வப்போது தோன்றும்  சிறிய பிரச்னைகளை, பெரிதாக வளரவிடாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்  .  தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைப்பதால், மாணவர்கள் புதுத் தெம்புடன் திகழ்வார்கள்.  கலைஞர்கள்  உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும்.

    துலாம்: மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காமலிருப்பது நல்லது. வெளி இடங்களில் கவனமாக நடந்து கொள்வதன்  மூலம் கலைஞர்கள் அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க முடியும். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்  பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதைத் தவிர்த்தால், சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றிலிருந்து ஓரளவு தப்பி விடலாம்.  . சிறு தொழில் புரிபவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றியோடு, வேண்டிய லாபமும் வந்து சேரும் . பெண்கள் குடும்ப அமைதிக்காக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும்.

    விருச்சிகம்; பெண்கள் எப்போழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடை பிடித்தால், சிறப்பான பலன்களை பெறலாம்: புதிதாய் வேலையில் சேர்ந்தவர்கள் தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள்.  இந்த வாரம் கலைஞர்களுக்கு  புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும் வாய்ப்பிருப்பதால், செலவுகளில் சிக்கனமாக இருப்பது அவசியம். . வியாபாரிகள் இது வரை சந்தித்த மன உளைச்சல், நெருக்கடியான சூழ்நிலை ஆகியவை மாறி இணக்கமான சூழல் உருவாக தொழிலாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி சாதனை படைப்பார்கள்.

    தனுசு: பொருளாதார இறக்கம் என்பது படிப்படியாக குறைந்து விடுவதால், வியாபாரிகள் விரும்பியவாறு விரிவாக்கப் பணிகளை செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும்.  இந்த வாரம் மாணவர்கள் அரசு அளிக்கும்  சலுகைகளை  பெற்றுக் கொள்வதில் இருந்த குழப்பமும், பிரச்னைகளும் தீர்ந்து விடும்  வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ள கலைஞர்களுக்கு உழைப்பு கை கொடுக்கும்.   வேலையில் இருப்பவர்கள் பணிகளைத் திருத்தமாகச் செய்வதால் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். இருந்த போதிலும் கர்வம் தலைக்கேறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் .  பெண்களுக்கு  மனம் மகிழும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு  மகிழும் வாய்ப்பு  வந்து சேரும்.

    மகரம்: முதியவர்களுக்கு தெய்வீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்பு கூடி வரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய பிள்ளைகள் உதவி செய்வார்கள்.    , தேவையற்ற இடமாற்றம் வேலையில் இருப்பவர்களின் அமைதியை கெடுக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் .  மற்றவரை நம்பி ஒப்படைத்த வேலைகளை மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் சூழல் நிலவும். எனவே முக்கியமான பணிகளில் உங்களின் நேரடி கவனத்தை வைப்பது நல்லது. .  மாணவர்கள்  நல்லவர்கள் போல் ந்டிப்பவர்களை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம் . . வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியோடு இருந்தால், பணம் முடங்காமலிருக்கும்.

    கும்பம்: இந்த வாரம்  மாணவர்களுக்கு  புதிய நட்பு, இனிமையான நிகழ்ச்சி, என்று பொழுது போகும்.  பிள்ளைகள் பெற்றோரின் குணமறிந்து இணக்கமாக நடந்து கொள்வார்கள்.   பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  பல நேரங்களில் உழைப்பு அதிகமாகவும், அதற்கான பலன் குறைவாகவும் இருக்கும்  .  : கலைஞர்கள் எந்த சூழலிலும் அமைதிக் குறைவு, பதற்றம் ஆகியவை ஏற்பட இடம் கொடாமல் விழிப்பாய் இருப்பது அவசியம் .  வியாபாரிகள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ,இயல்பு வாழ்க்கையோடு மோதாமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம். குடும்ப விவகாரங்களில்  பெண்கள் பிறரை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

    மீனம்: மாணவர்கள் வாகனங்களின்  பராமரிப்பில், கவனமாக இருந்தால் வீண் செலவை குறைத்து  விடலாம். பொது வாழ்வில் இருபவர்கள்   தேவையற்ற இடங்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல் வேண்டும் . கலைஞர்கள் தங்கள்  பொருளாதார தேவைகளை சமாளிக்க கடன்பட நேரலாம்.  உயர் பதவியில் உள்ளவர்கள் பொறுப்புடன் கடமையற்றினால், அவப்பெயருக்கு ஆளாகாமல் தப்ப  முடியும் பண விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், . வியாபாரிகளின் கடன் தொல்லையும் கணிசமாகக் குறையும்.  உடல் நலத்தை நன்றாக பராமரித்தால்,பெண்களின்  உற்சாகம் குறையாமலிருக்கும்.

    Share
  • குமுறுகிறாள் கண்ணம்மா

     

    -தனுசு

    சபையோருக்கு வணக்கம்
    நான்
    பாரதி பாடிய பாஞ்சாலி வீட்டு பெண்!

    நான் சொல்வதெல்லாம் உண்மை!
    உண்மையைத் தவிர
    வேறொன்றுமில்லை.
    இது
    நீதிமன்ற வாக்குமூலமல்ல
    நான்
    வீதி தோறும் பார்க்கும் உண்மை!

    தேடினேன் தேடினேன்
    தேமதுரத் தமிழை தேடினேன்.
    ஓடினேன் ஓடினேன்
    ஒப்பில்லாத் தமிழை தேடி ஓடினேன்;

    கண்டேன்
    அந்த மொழி உலகின் முதல் கதாநாயகியை
    முள்வேலி முகாமில்!
    மீட்டெடுக்க
    போராளியோ
    ராஜாளியோ யாருமின்றி!

    “தவறு செய்தால்
    அதை தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
    மண்ணின் மைந்தன் சொன்னது,

    தாயின்றி பிறப்பார் யாருமில்லை
    பாதிபொழுதில் மறையும் சூரியனுமில்லை
    தமிழும் தானாய் மறைந்ததில்லை
    தமிழா…
    நீ தமிழை
    மறந்தது மட்டும் எப்படி தவறில்லை?

    பட்டுடுத்திய தமிழ்
    இன்று
    பட்டுப் போனது
    பஞ்சபூதம் வணங்கிய தமிழ்
    இன்று
    பஞ்சமாகிப் போனது
    மகுடம் சூடிய தமிழ்
    இன்று
    மக்கி மண்ணாகிறது!

    தென்வேந்தர்
    சங்கம் வைத்து காத்தது
    பார் வேந்தர்
    பாலூட்டி வளர்த்தது
    இன்று
    பாலூற்ற வைத்திடுமோ?

    தமிழுக்குத் தேவையா இந்த
    அவலம்?
    தமிழனுக்குத் தேவையா இந்த
    கேவலம்?

    தாம்பத்யம் துறந்தவன் சன்யாசி!
    பல ஊர் சுற்றுபவன் பரதேசி!
    நீ பிழைக்க
    தமிழை மறந்ததை யோசி
    நீ எந்தவகை தாசி!

    Share
  • இசையும் கோயிலும் 2

    விசாலம்

    வாத்தியங்களை எடுத்துக்கொண்டால் எல்லா கோயில்களிலும் நாம் கேட்டு அனுபவிப்பது நாதசுரம் தான் என்பதில் சந்தேகமேயில்லை இது இந்த அளவு சிறந்து விளங்குவதன் காரணம் அதன் ஒலிதான்.மங்களகரமான அதன் த்வனி எல்லோரையும் ஈர்க்கும் சக்தியுடையது. .மேலும் கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் இந்த ஒலி எதிரொலித்து அருகில் இருக்கும் அக்கிரகாரம் கோடி வரை கேட்பதால் அந்தச்சூழ்நிலையே ஆன்மீக நற்றலைகளால் நிரம்பி மனதுக்கு ஆனந்தமளிக்கிறது, இதைத்தவிர சங்கு, திருச்சின்னம், உடல், முகவீணை, பஞ்சமுகவாத்தியங்கள் என பலவகை வாத்தியங்களையும் காணமுடிகிறது. கேரள நாட்டுக்கோயில்களில் அதிகமான வாத்தியங்கள் இசைப்பதை நாம் காணமுடிகிறது .ஆடிப்பூரம் திருநாளில் ஜண்டை .தவில் தொப்பிமத்தளம் ,வீராணம் டமாரம், மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் முக்கியப்பங்கு வகித்து கேட்பவரைப் பரவசப்படுத்துகின்றன. வித விதமான லயங்களை அள்ளி வீசுகின்றன. இவைகளுடன் சேங்கலை,குழித்தாளம்,ஜால்ரா, போன்றவைகளும் ஒன்று சேர நம்மை நாமே மறந்துவிடுகிறோம். .

    கோயில் மணியும் அதன் ஒலியும் நம்மை ஆன்மீக சூழ்நிலைக்கு எடுத்துச்சென்று நம்மையுமறியாமல் இறைவன், இறைவியின் பால் நம் கவனத்தைச்செலுத்துகிறோம்.சில சமயம் அந்த மணி நிற்காமல் டண்,டண் டண் என்று வரிசையாக ஒலிக்கும் சில சமயம் அந்த மணி விட்டு விட்டு ஒலிக்கும் அதன் ஸ்வரம் சட்ஜமமாக இருக்கும் சில கோயில்களில் கோயில் மணியுடன் சங்கும் ஊதுவதுண்டு .நான் அடிக்கடி சிதம்பரம் போய்வருவேன்.அப்போது இதைக்கூர்மையாக கவனிப்பேன் இதில் என்ன சிறப்பென்றால் மணியின் ஒலி “ஸ’ என்று கேட்க சங்கின் ஒலி “ப” என்று இசைக்கும் “ஸ பா ஸ பா “என்று வரிசையாக கேட்க உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் ஆஹா அது என்ன ஆனந்தம் !

    திருச்சின்னம் என்ற வாத்தியம் பித்தளையினால் ஆனது என நினைக்கிறேன் .இது ஒரு காற்று வாத்தியம் ஆனால் இதன் நடுவில் துளைகள் இல்லை .பெருமாளின் திருமஞ்சனம் அல்லது சிவனின் அபிஷேகம் போது முழங்கப்படும்.இதனது ஒலியும் வெகு தூரம் வரை எட்டும் சீரடி பாபா மந்திரில் இது போன்று ஒலி எழுப்பி கண்டிருக்கிறேன். உடல் என்னும் வாத்தியம் ஒரு பெரிய குச்சியால் அடித்து ஒலி எழுப்புவதாக இருக்கிறது . கோயிலிலிருந்து சுவாமி புறப்பாட்டின் போது “டம்டம்” என்றோ அல்லது மூன்று மூன்றாக “டம் டம் டம் ” என்றோ அடித்து சுவாமி எழுவதைத் தெரிவிப்பது உண்டு கிராமத்து எல்லை தெய்வங்களின் கோயில்களில் தவிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன் உடுக்கு, தண்டைக்கொலுசு, தம்பட்டம்,சலங்கை போன்றவைகளும் பூசாரி உபயோகிப்பதைக்காணலாம் இங்கு இருக்கும் தேவி மாரியம்மன், காளி, பேச்சாயி மூக்காயி போன்ற பெயர்களிலும் ஆண்தெய்வம் கருப்பண்ண சுவாமி மதுரை வீரன் முனீஸ்வரன் போன்ற பெயர்களிலும் காணமுடிகிறது

    தொடரும் .

    Share
  • அஞ்சலி: டி எம் சவுந்திரராஜன்

     

    உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு….

    எஸ் வி வேணுகோபாலன்

     

    ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்….இதெல்லாம் ஒரு சகாப்தம்..திரும்ப வராது….

    மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.

    பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது.

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    தமிழ் அவரது தாய்மொழி இல்லை என்றபோதும் (அவரது சவுராஷ்டிரா மொழி), மொழியின் தூய்மை கெடாது உச்சரிக்கும் திறன் அவருக்கிருந்தது. தெருக்கூத்து, எம் கே தியாகராய பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி பாடலின் சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் டி எம் எஸ் பாடிய பாடலும் பிரபலம் பெற்றது. அந்த உயர்ந்த கட்டைகளில் பாடிய காலம் பின்னர் மாறிக் கொண்டு வந்தது. அடிமைப் பெண் படத்தில் எம் ஜி ஆர்,புதிதாக அறிமுகப் படுத்திய எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரம் நிலவே பாடல் வெற்றி பெற்றபோது இனி அவர் தான் தமக்குக் குரல் கொடுப்பார் என்று சொன்னது டி எம் எஸ் அவர்களின் பாடல்க குறையத் தொடங்கிய காலம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்குப் பாட அழைத்தார். இரண்டு பாடல்கள். ஒன்றின் முதல் வரி, என் கதை முடியும் நேரம் இது…அடுத்தது: நான் ஒரு ராசியில்லா ராஜா. அதற்குப் பிறகு பெரிய அளவில் பாடல்கள் இல்லை…வயது அவரது குரலை உடைத்தது.

    பெரிய அங்கீகாரம் அற்ற அண்மைக் காலத்தில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கைரளி தொலைகாட்சி அவரை அழைத்து சிறப்பித்து பரிசும் நிதியும் வழங்கியது குறிப்பிடத் தக்கது. கலைஞர்களை, எழுத்தாளர்களை, ஓவியர்களை தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த விழாவின் புகைப்படம். அவரது மறைவுச் செய்தி கேட்ட பிறகு, இணைய தலத்தில் அவரது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலி) என்ற ஆரம்ப கால பக்திப் பாடலைக் கேட்டேன்….இளமை சொட்டும் குரலில், பிசிறற்ற இழைவும், குழைவும், ராக ஏற்ற இறக்கங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டது.

    அவரது மறைவு, அவரது பாடல்களை – அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார். என்ன தான் புதிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்தாலும், அரை மணி நேரம் கழித்து ஒருவர் ஓசைப் படாமல் பழைய டயரியை எடுத்துத் திருப்பிக் கொண்டே வந்து, ‘பாவாடை தாவணியில்…’ (நிச்சய தாம்பூலம்) என்று மைக்கில் குரலெடுக்கும் போது சபை களைகட்டிவிடும். அப்புறம் ‘இன்பமே உந்தன் பேர்…(இதயக்கனி)’ தொடரும். சிவாஜியே பாடியது போல, எம் ஜி ஆரே வந்து இசைத்தது போல மக்கள் புளகாங்கிதம் அடைந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்…..

    ****************

    Share
  • நரஸிம்ஹ ஜயந்தி

     

    சு.ரவி

    இன்று(24.5.2013) நரஸிம்ஹ ஜயந்தி!

     

    தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத சிங்கங்கள் என திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் குறிப்பிடுவார்:

    ஒன்று- “மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கி… மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டெழுந்த” சிம்மம்- ஆண்டாள் பாடியது.

    மற்றது, கம்பன் வாக்கிலே “ககன முட்டை, கிளர்ந்து கீழும், மேலுமாய்க் கிழிபடத்”தோன்றியது.

    திருவரங்கத்தில் கம்பராமாயண அரங்கேற்றத்தின்போது,கம்பனின் வாக்கிற்குப் பிரமாணமாக மேட்டழகிய சிங்கரி கருவறையிலிருந்து “ சிரித்தது செங்கட் சீயம்”.

    நரசிம்மன் என்னை மறுபடியும் தன்னை வரையத் தூண்டினான்.

    இம்முறை சோளிங்கரில் கோயில் கொண்டமர்ந்த யோக நரசிம்மர்.

    “உன்னை வரைவதற்கும் நீயே கைகொடுப்பாய் நரசிம்மா!”

    ” லக்ஷ்மீந்ருஸிம்ஹ, மமதேஹி கராவலம்பம்!”

     

    பார்க்க, படிக்க, ரசிக்க….

    வார்த்தை பிளக்கும் நரசிம்மம்

    அவன் வேதங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்!

    அவனே      பாற்கடல்  கடையும்  நேரம்  வடவரை  தாங்கிய  ஒருகூர்மம்!

     அவனே     ஏனம்,      எனவடி   வங்கள்  பலவாய் எடுத்துத் தோன்றிடினும்  

    அவதா       ரத்தின் பரிணா    மத்தில் அற்புத    வடிவம்          நரசிம்மம்

     

    விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!

    எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!

    சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்! 

    இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச்  சத்தியமாக்கும்    நரசிம்மம்! 

     

    அகந்தைக் கால்கள் அறிவுத் தூணை எட்டிஉ தைக்கும் அந்நேரம்

    யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே  சீயம்  கர்ஜிக்கும்

    அகமும்புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்! 

     நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!

     

    அழகிய சிங்கம் துளஸி  தரிக்கும்அபயமளிக்கும், துயர்நீக்கும்

    அழகிய  வடிவினள்  திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்

    கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்

    பழவினை   யெல்லாம்  பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

     

    போக்கும்வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!

    யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?

    கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்

    வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே  வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

     

     

    Share