உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு….

எஸ் வி வேணுகோபாலன்

 

ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்….இதெல்லாம் ஒரு சகாப்தம்..திரும்ப வராது….

மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.

பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது.

டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

தமிழ் அவரது தாய்மொழி இல்லை என்றபோதும் (அவரது சவுராஷ்டிரா மொழி), மொழியின் தூய்மை கெடாது உச்சரிக்கும் திறன் அவருக்கிருந்தது. தெருக்கூத்து, எம் கே தியாகராய பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி பாடலின் சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் டி எம் எஸ் பாடிய பாடலும் பிரபலம் பெற்றது. அந்த உயர்ந்த கட்டைகளில் பாடிய காலம் பின்னர் மாறிக் கொண்டு வந்தது. அடிமைப் பெண் படத்தில் எம் ஜி ஆர்,புதிதாக அறிமுகப் படுத்திய எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரம் நிலவே பாடல் வெற்றி பெற்றபோது இனி அவர் தான் தமக்குக் குரல் கொடுப்பார் என்று சொன்னது டி எம் எஸ் அவர்களின் பாடல்க குறையத் தொடங்கிய காலம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்குப் பாட அழைத்தார். இரண்டு பாடல்கள். ஒன்றின் முதல் வரி, என் கதை முடியும் நேரம் இது…அடுத்தது: நான் ஒரு ராசியில்லா ராஜா. அதற்குப் பிறகு பெரிய அளவில் பாடல்கள் இல்லை…வயது அவரது குரலை உடைத்தது.

பெரிய அங்கீகாரம் அற்ற அண்மைக் காலத்தில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கைரளி தொலைகாட்சி அவரை அழைத்து சிறப்பித்து பரிசும் நிதியும் வழங்கியது குறிப்பிடத் தக்கது. கலைஞர்களை, எழுத்தாளர்களை, ஓவியர்களை தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த விழாவின் புகைப்படம். அவரது மறைவுச் செய்தி கேட்ட பிறகு, இணைய தலத்தில் அவரது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலி) என்ற ஆரம்ப கால பக்திப் பாடலைக் கேட்டேன்….இளமை சொட்டும் குரலில், பிசிறற்ற இழைவும், குழைவும், ராக ஏற்ற இறக்கங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டது.

அவரது மறைவு, அவரது பாடல்களை – அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார். என்ன தான் புதிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்தாலும், அரை மணி நேரம் கழித்து ஒருவர் ஓசைப் படாமல் பழைய டயரியை எடுத்துத் திருப்பிக் கொண்டே வந்து, ‘பாவாடை தாவணியில்…’ (நிச்சய தாம்பூலம்) என்று மைக்கில் குரலெடுக்கும் போது சபை களைகட்டிவிடும். அப்புறம் ‘இன்பமே உந்தன் பேர்…(இதயக்கனி)’ தொடரும். சிவாஜியே பாடியது போல, எம் ஜி ஆரே வந்து இசைத்தது போல மக்கள் புளகாங்கிதம் அடைந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்…..

****************

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அஞ்சலி: டி எம் சவுந்திரராஜன்

 1. அவரது பாடல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பசுமையாக இருக்கும் அவரது  பக்தி பாடல்களும் சரி .காதல் பாடல்களும் சரி அப்படியே அதன் ரசத்தை நாம் அனுபவிக்க முடியும் .அவரது இடத்தை நிரப்புவது கடினம் .அவரது ஆன்மா சாந்தியடையட்டும்  

 2. பாட்டும் ஆனாய்.. பாவமும் ஆனாய்.. காலமும் ஆனாய்..

  பாட்டு ஆனாய்.. 
  பாட்டு நீ!
  பாவம் ஆனாய்.. 
  பாவம் நீ!
  காலம் ஆனாய்.. 
  காலம் நீ!

  You have become TIME! 
  You are TIME!
  But, Your songs are ‘TIME-LESS’!
  Rest in Peace, TMS Sir!

  🙁

 3. திரு.டி.எம்.எஸ் அவர்கள், இனி நம் நினைவில் வாழ்வார். காற்றலைகள் நம் செவிகளில் கொண்டு சேர்க்கும் அவரது குரலோசை,  அவரது நினைவுகளை  என்றும் நிலைக்கச் செய்யும்.  அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *