சு.ரவி

இன்று(24.5.2013) நரஸிம்ஹ ஜயந்தி!

 

தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத சிங்கங்கள் என திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் குறிப்பிடுவார்:

ஒன்று- “மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடந்துறங்கி… மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டெழுந்த” சிம்மம்- ஆண்டாள் பாடியது.

மற்றது, கம்பன் வாக்கிலே “ககன முட்டை, கிளர்ந்து கீழும், மேலுமாய்க் கிழிபடத்”தோன்றியது.

திருவரங்கத்தில் கம்பராமாயண அரங்கேற்றத்தின்போது,கம்பனின் வாக்கிற்குப் பிரமாணமாக மேட்டழகிய சிங்கரி கருவறையிலிருந்து “ சிரித்தது செங்கட் சீயம்”.

நரசிம்மன் என்னை மறுபடியும் தன்னை வரையத் தூண்டினான்.

இம்முறை சோளிங்கரில் கோயில் கொண்டமர்ந்த யோக நரசிம்மர்.

“உன்னை வரைவதற்கும் நீயே கைகொடுப்பாய் நரசிம்மா!”

” லக்ஷ்மீந்ருஸிம்ஹ, மமதேஹி கராவலம்பம்!”

 

பார்க்க, படிக்க, ரசிக்க….

வார்த்தை பிளக்கும் நரசிம்மம்

அவன் வேதங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்!

அவனே      பாற்கடல்  கடையும்  நேரம்  வடவரை  தாங்கிய  ஒருகூர்மம்!

 அவனே     ஏனம்,      எனவடி   வங்கள்  பலவாய் எடுத்துத் தோன்றிடினும்  

அவதா       ரத்தின் பரிணா    மத்தில் அற்புத    வடிவம்          நரசிம்மம்

 

விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!

எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!

சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்! 

இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச்  சத்தியமாக்கும்    நரசிம்மம்! 

 

அகந்தைக் கால்கள் அறிவுத் தூணை எட்டிஉ தைக்கும் அந்நேரம்

யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே  சீயம்  கர்ஜிக்கும்

அகமும்புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்! 

 நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!

 

அழகிய சிங்கம் துளஸி  தரிக்கும்அபயமளிக்கும், துயர்நீக்கும்

அழகிய  வடிவினள்  திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்

கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்

பழவினை   யெல்லாம்  பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

 

போக்கும்வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!

யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?

கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்

வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே  வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நரஸிம்ஹ ஜயந்தி

  1. தூணைப் பிளந்த நரசிம்மம்,

    தூரிகை வழியே வருசிம்மம்,

    கவிரவி வரிகளில் கலைநயம் கொஞ்ச,

    தேனென இனிக்கும் தமிழ்ச்சிங்கம்!

    ஓவியமும் கவிதையும் மிகவும் அருமை திரு.ரவி அவர்களே! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.