Blog

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16

    தேமொழி

    சகலகலா வாணி

     

    sagalakalaa vani

     

    சகலகலா வாணியே 
    ராகம்:  கேதாரம்
    தாளம் : ஆதி
    பாடல்: சுத்தானந்த பாரதி

    பல்லவி:
    சகல கலா வாணியே- சரணம் தாயே
    சங்கீத வீணா பாணியே
    (சகலகலா வாணியே)

    அனுபல்லவி:
    இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
    எங்களுக் கருள்வாய்- மங்களச் செல்வியே
    (சகலகலா வாணியே)

    சரணம்:
    அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
    ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
    திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
    தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
    (சகலகலா வாணியே)

    முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
    முப்பெரும்  அறிவுடன் இப்பொது விளங்கிடும்
    புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
    பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
    (சகலகலா வாணியே)

     

    சரசவாணியே! சகலகலாவல்லியே!

    வீணையேந்திய சகலகலா வாணியே
    வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
    வெண்டாமரையிலுறையும் அன்னையே
    வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

    நூல்வடிவாய் நின்ற நாயகியே
    பால்வடியும் கவிமாலையானவளே
    கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
    சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!
    – பவள சங்கரி

    கமலமே  உந்தன் வெண்ணிறமே
    அமரவே  என்  உள்ளமே
    உயருமே  உவகை கொள்ளுமே!

    வீணையே உன் வடிவு விந்தையே
    ஆணையாய்  உன் ஒலியிலே
    இருப்பவள் தன்னையே
    அருள்தரச்சொல்லுவையே!
    – ஷைலஜா

    வெள்ளைக் கலையுடுத்தி வீணையுடன் வீற்றிருப்பாய்
    வெல்லும் திறமளித்து வீழ்ச்சியில்லா வாழ்வளிப்பாய்
    வெம்மை நிறைந்தொளிரும் பொன்சுடரே சாரதையே
    வேண்டும் வரம் பெறவே கரம் குவித்தோம் பதமருள்வாய்

    வாணி நாமகளே பாரதியே பாமகளே
    வாக்கின் எழிலரசி  வணங்குகிறோம் கலைமகளே
    வேத நாதன் தொழும் ஞானத் திருமகளே
    வெற்றி முரசொலிக்க‌  விரைவாய் வந்தருள்வாய்
    – பார்வதி இராமச்சந்திரன்

    நான்முகன் நாயகியே வேதவல்லி உன்னை
    நாத மழையில் நித்தம் நனைத்திடுவேன்
    நாயகன் மனம்மகிழ் நாதஸ்வரூபிணி

    அருள்வாய் வரங்கள் தயங்காது நீயினி
    பார் முழுதும் உன்னை பூஜிக்கும் நாளிது
    விஜய தசமியிலே வேண்டிடும் சேயிது
    – ஜெயஸ்ரீ

     

    பாடல் வரிகளை வழங்கிய சுத்தானந்த பாரதிக்கும், எனது தோழியருக்கும் நன்றி.

    படத்தைப் பற்றியக் குறிப்பு:
    சரியாக கால் நூற்றாண்டிற்கு முன் வரைந்த கோட்டோவியம் இது.  மாசுபடிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின்  படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.

     

     

     

     

     

     

    Share
  • சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு

     

    பிச்சினிக்காடு இளங்கோ
    சந்தமென்றும் சிந்துஎன்றும்

    சங்கதிகள் தெரியாமல்

    சத்தமிட்டுப் பேசுகிறான் பேச்சு-அது

    சரக்கில்லா வெத்துவேட்டு ஆச்சு
    பந்தமென்றும் சொந்தமென்றும்

    பங்கமிலா நண்பரென்றும்

    கொண்டாடும் மனநிலையை விட்டு-அவன்

    குண்டரெனக் காட்டுகிறான் மட்டு

     

    வண்டாடும் சோலையிலும்

    செண்டாடும் மாலையிலும்

    கொண்டாடும் புள்ளினமாய் மாறு- அதில்

    திண்டாடும் மனநிலையே வேறு

     

    சிந்தனைத்தேன் ஊறுவதை

    சிந்தித்தே மாறுவதை

    சந்தனம்போல் கமழவைத்துக் காட்டு- அதுவே

    சந்ததியை மகிழவைக்கும் பாட்டு

     

    போதிமரம் சேதிதரும்

    சோதியென நீதிதரும்

    வேதமெனும் மந்திரம்போல் பாடு- சூது

    பேதமெனும் தந்திரத்தைச் சாடு

     

    மானுடத்தைப் பாடுகிற

    மாந்தரினம் தேடுகிற

    ஞானமது பாட்டினிலே வேண்டும்-தமிழ்த்

    தேனமது பருகிடவே மீண்டும்

     

    Share
  • சுழற்சி

    மாதவன் இளங்கோ

    சென்னை வடபழனியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இருந்த அந்த வீடு, கிட்டத்தட்ட ஒரு வருடம் நான்கு நாட்களுக்கு முன்பு அது இருந்த அதே நிலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

    இது நிச்சயம் என்னுடைய கதை அல்ல. நான் மேலே குறிப்பிட்ட அந்த வீட்டில், ஒரு வருட காலமாக வசித்து வந்த கார்த்திக் – திவ்யா தம்பதியினரின் கதை.

    அன்று அந்த வீட்டின் ஒரு மூலையில் புத்தகக் குவியல், மறு மூலையில் பாத்திரக் குவியல், இன்னொரு மூலையில் இருந்த திவானின் மீது கண்ணாடிப் பொருட்கள் என்று வகைப்படுத்தி வைத்துக்கொண்டிருந்தனர் கார்த்திக்கும், திவ்யாவும்.

    இது தவிர, பலதரப்பட்ட கடைகளின் பிளாஸ்டிக் உறைகள் –

    உடைந்துபோன பென்சில், தலை வேறு முண்டம் வேறாகக் கிடக்கும் மைதீர்ந்த பேனாக்கள், ஸ்கெட்ச் போன்ற எழுதுபொருட்கள் –

    கம்பிவடங்கள், தேய்ந்து போன குறுந்தகடுகள், தொலைந்து போய் விட்டதாய் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த உடைந்து போன தொலையியக்கி ஒன்று, என்றைக்கோ உயிரை விட்டிருந்த மின்கலங்கள் போன்ற மின் கழிவுகள் –

    வெவ்வேறு அளவிலான அட்டைப்பெட்டிகள், நைந்து போன கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், அறிமுக அட்டைகள், தொலைபேசி கட்டண ரசீதுகள், கடன் அட்டை கணக்கு அறிக்கை போன்ற காகிதக் குப்பைகள் –

    இப்படி அனைத்து வகையான எண்ணிலடங்கா குப்பைகள் அந்த வீடெங்கும் இறைந்து கிடந்தன.

    என்றோ படித்து முடித்துவிட்டுப் பரண் மேல் போட்டு வைத்திருந்த  புத்தகங்களை எடுத்து தூசுதட்டி, புத்தகக் குவியலின் மீது எறிந்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவன் ஒவ்வொரு முறை எறிந்த போதும் புத்தகக் குவியலைச் சுற்றி இருந்த தூசிப்படலம் சீற்றத்துடன் மேலெழுந்து, சில நொடிகளில் வலுக்குன்றி மெதுவாய் அடங்கியது. ஒரு சில கனத்த புத்தகங்களை எறிந்தபோது உருவான தூசிச்சுனாமி அவன் நாசிவரை சென்று சீண்டிப் பார்த்தது.

    “ஏன் இப்படி புக்ஸ எல்லாம் தூக்கிப் போட்டுட்டே இருக்க?” என்று மூக்கை விரல்களால் பொத்தியபடி கேட்டுக்கொண்டே சமயலறையில் இருந்த இரண்டு ஒட்டா தவாக்களை கொண்டு வந்து பாத்திரப் பகுதியில் வைத்தாள் திவ்யா.

    அன்றைக்கு மட்டும் முப்பத்து மூன்றாவது முறையாக தும்மிவிட்டு, “அதுக்கென்ன பா. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வந்து எல்லாம் ப்ராபரா எடுத்து பேக் பண்ணிடுவாங்க. நாம கேடகரைஸ் மட்டும் பண்ணா போதும்” என்றான் கார்த்திக்.

    “அதுக்காக புக்ஸ போயி யாராவது தூக்கிப் போடுவாங்களா?”

    “ஏன் சாமி கண்ண குத்துமா?” என்று கடவுளை வம்புக்கு இழுத்தான் கார்த்திக்.

    “இல்ல. சரஸ்வதி சபிச்சுடுவா. அடுத்த பிறவியில உனக்குப் படிப்பே வராது.” என்று புன்னகைத்துக் கொண்டே குழந்தைத்தனமாக அச்சுறுத்தினாள் திவ்யா.

    “அது சரி. அடுத்த பிறவிக்கு பயந்துகிட்டு மேல கீழனு ஏறி எறங்கிட்டு இருந்தா, இந்தப் பிறவியில என் முதுகு என்ன ஆகறது?”

    “ஆளவிடு சாமி. உன் லெக்சர் செஷன ஆரம்பிச்சிடாத.” என்று நொந்துகொண்டவளிடம் அங்கே தூசிபடிந்து கிடந்த ‘உடைந்த நிலாக்கள்’ என்ற புத்தகத்தை எடுத்துக் காட்டினான் கார்த்திக்.

    “ஹே, திவி, இந்த புக் உனக்கு நியாபகம் இருக்கா?”

    “ஒ, யா. நாம இங்க வந்த பர்ஸ்ட் டே வாங்கினதுன்னு நெனெக்கிறேன்.”

    “எஸ். அன்னைக்கு நைட் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இத படிச்சோம்.”

    “யா. அப்ப நீ பொயெடிகா சொன்னது கூட எனக்கு நியாபகம் இருக்கு. ‘உடைந்த நிலாக்களைப் பற்றி வாசிக்கும் உடையாத நிலாக்கள்’”.

    காதலை எதிர்த்த தம் குடும்பங்களைத் துறந்து, திருமணம் செய்து கொண்ட அந்த நிலாக்களின் நினைவுகள் ஒரு வருடம் பின்னோக்கிப் பயணித்தது.

    “நாம பர்ஸ்ட் என்ன வாங்கினோம்னு நியாபகம் இருக்கா திவி உனக்கு?”

    “ஐ திங்க் ஃபேன். அந்த டைம்ல பயங்கர வெயில். சோ, பர்ஸ்ட் ஃபேன் வாங்கிட்டு, அந்த எலக்ட்ரிகல்ஸ் கடைலயே லைட்செல்லாம் வாங்கிட்டு வந்து நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிக்ஸ் பண்ணோம்.”

    அவள் குறிப்பிட்ட அன்றைய தினம் அந்த வீட்டில் இருந்தவற்றை மிக எளிதாகப் பட்டியலிட்டு விடலாம்.

    இரண்டு பெட்டிகள். ஒரு பை.

    இரண்டு தலையணைகள். ஒரு மெத்தை. அதுவும் கூட தரையில்தான் கிடந்தது.

    மெத்தைக்கு அருகே இரண்டு தண்ணீர் பாட்டில்கள்.

    உடைந்த நிலாக்கள் புத்தகம், அதைப் படித்துக்கொண்டிருந்த அந்த இருவர். கொஞ்சம் சிரிப்பு. நிறைய சோகம்.

    அன்று மட்டும் திவ்யா அவளின் பெற்றோரையும், தம்பியையும் நினைத்து ஒரு பத்து முறையாவது அழுதிருப்பாள். அன்று மட்டுமல்ல, அவள் அழுவதும், அவன் அவளை அணைத்துத் தேற்றுவதும் நாள்தோறும் நடந்துகொண்டுதானிருந்தது.

    காதலில் வெற்றி கிட்டினாலும் கிட்டத்தட்ட வெற்றிடத்தில் ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கையில், சிறிது சிறிதாகப் பொருட்களும், மனிதர்களின் அன்பும் வந்து குவிந்து கொண்டிருந்தன.

    முதலில் சமையலறை நிரம்பியது. அடுத்ததாகப் படுக்கையறை, பின்னர் வரவேற்பறை என்று படிப்படியாக ஒவ்வொரு அறையிலும் பொருட்கள் பல்கிப் பெருகியது.

    முதலில் கல்லூரி நண்பர்கள் வந்தார்கள், பின்பு உடன் பணிபுரிபவர்கள் வந்து வாழ்த்தினார்கள். அவனது சகோதரி வந்தாள்; அவளது சகோதரன் வந்தான். இருவரது சித்தி சித்தப்பாவும், அத்தை மாமாவும் வந்தார்கள். அவ்வளவு ஏன், அவளது பாட்டி கூட வந்துவிட்டாள்.

    ஆனாலும் அவளின் அழுகை நின்றபாடில்லை. அவனுக்கும் தேற்றுவது சலிக்கவில்லை. அவளுடைய அழுகைக்கான காரணத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

    ஒரு புரோகிதன் இன்னொரு புரோகிதனின் மகளை மணக்கலாம். ஒரு நாவிதன் இன்னொரு நாவிதனின் மகளை மணக்கலாம். ஒரு வைசியன் இன்னொரு வைசியனின் மகளை மணக்கலாம். ஆனால் ஒரு மென்பொருள் வல்லுநரான அவன், இன்னொரு மென்பொருள் வல்லுநரின் மகளான அவளை விரும்பியது தவறாம். ஏனென்றால் அவன் சத்ரியன் மகனாம். இன்னும் சொல்லப்போனால், அவளே கூட ஒரு மென்பொருள் வல்லுநர் தான். இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின்  தர்க்கம் எங்கோ இடிக்கத்தான் செய்கிறது.

    திருப்பதி, மதுரை, வேளாங்கண்ணி போன்ற வெளியூர்களுக்கும், உள்ளூரிலேயே இருக்கும் மயிலாப்பூர், திருவல்லிகேணி போன்ற இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்ததனால், கடவுளர் படங்களால் பூஜையறை (பூஜை அலமாரி என்று தான் சொல்லவேண்டும்) நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பொம்மை, சிலையென்று வேறு வாங்கியதில், கிட்டத்தட்ட நவராத்திரி கொலு வைக்குமளவிற்கு அவை பெருகிவிட்டதால் இட நெருக்கடியின் காரணமாகப் பரணுக்கு புலம்பெயர்ந்துவிட்டன.

    அந்த இளம் தம்பதியினர் உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஊர்களுக்குச் சென்றதாகத் தெரியவில்லை.

    இரவு நேரங்களில் பலமுறை தாம்பரத்திலிருக்கும் அவளது வீட்டிற்கு மிக அருகே சென்று காருக்குள் இருந்தபடியே, உயர்த்தப்பட்ட ஜன்னலினூடே அவளது தாயைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பற்றி இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் பேச்சுகளுக்கிடையே அவளுடைய அழுகைச் சத்தம் அடிக்கடி எட்டிப் பார்க்கும்.

    ஒருநாள் கார்த்திக்கின் தாயும் தந்தையும் வந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் இவர்களுக்கு அப்படியொரு திகைப்பு; அப்படியொரு களிப்பு. அவள் விதம்விதமாய்ச் சமைத்தாள். இருவரும் அவர்களோடு சிரித்தார்கள்; மகிழ்ச்சியில் திளைத்தார்கள்; கொண்டாடினார்கள்.

    ஆனாலும், அவளின் அழுகை ஓய்ந்தபாடில்லை. அழும் நேரம் மட்டும் மாறியிருந்தது. அவன் அலுவலகத்திற்குச் சென்றவுடன் தனியாய் இருக்கும்போது மட்டும் குமுறினாள். அவனாவது நிம்மதியாய் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கலாம். பூஜை அலமாரியின் முன்பு நின்று மேலே (முதலில்) குறிப்பிட்ட ஊர்களின் பெயர்களைச் சொல்லி அங்கு வருவதாய் வேண்டி வேண்டி அழுதாள்.

    யாரேனும் வந்தால் அதீத மகிழ்ச்சியும், யாருமில்லாத நேரத்தில் அதீத துக்கமும் என்று அவளுடைய மனநிலை மாறி மாறிச் சுழன்று கொண்டே இருந்தது.

    கடைசியில் வந்தே விட்டார்கள் – அவளின் பெற்றோர்கள். அவள் அழுதாள். அவர்கள் தேற்றினார்கள். அவன் ஆனந்தத்திலும் அமைதியாய் கைகட்டி நின்றான். அவள் மீண்டும் அழுதாள். அவளது இத்தனை நாள் சிரிப்பின் ஆழத்தில் புதைந்து கிடந்தது என்னவோ துக்கத்தின் ஈரம் மட்டுமே. ஆனால், அன்றைய நாள் அழுகையின் ஆழத்தில் ஆனந்தமே புன்னகைத்தது. அவளது ஒவ்வொரு அழுகையின்போதும் துளித் துளியாய் வெளியேறிய துக்கத்தின் ஈரம், அன்று முழுவதுமாய் வெளியேறி விட்டது போலும்.

    கடந்த ஒரு வருடத்தில் பொருட்களின் எண்ணிக்கையும் மனிதர்களின் வரவும் அதிகரித்து விட்டிருந்தபடியால், மனதிற்கு நிறைய பிடித்திருந்தாலும் அந்த வீடு அவர்களுக்குப்  போதுமானதாய் இல்லை. அதனால் வேளச்சேரியில் அதை விட சற்றுப் பெரிய அளவிலான அடுக்கு வீடொன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு செல்வதற்காகத்தான் அன்றைக்கு அவ்வளவு பரபரப்பாகத் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

    நள்ளிரவு வரை பொருட்களை வகைப்படுத்தி வைத்துவிட்டு அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.

    அடுத்தநாள் இருவரும் வந்தார்கள், கூடவே அவளுடைய தந்தை, தம்பி மற்றும் அவனுடைய நண்பனும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த சில நிமிடங்களிலேயே ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ வந்து எல்லா பொருட்களையும் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து, அதன் மேல் வகை விவரத்துணுக்குகளை ஒட்டி, ஒவ்வொன்றாய் வெளியே எடுத்துக்கொண்டு போனார்கள். நம்பவே மாட்டீர்கள், ஐம்பது நிமிடங்களில் அனைத்தையும் நேர்த்தியாக முடித்து வீட்டைக் காலி செய்துவிட்டார்கள்.

    “என்ன இவ்ளோ சீக்கிரம் பேக் பண்ணி கொண்டுபோயிட்டாங்க?” என்று வியந்தாள் திவ்யா.

    “அதுக்குத்தான் ப்ரோபெஷனல்ஸ் வேணுங்கறது. சரி, மத்தவங்கல்லாம் போகட்டும். நாம கடைசியா ஒருமுறை செக் பண்ணிட்டு பைக்ல  போய்டலாம்” என்று கூறி மற்ற அனைவரையும் அனுப்பிவைத்துவிட்டு, இருவரும் சோகம் ததும்பிய முகத்தோடு வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

    நான் மேலே குறிப்பிட்டிருந்த குப்பைப் பட்டியலில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை இன்னும் இங்கேயும் அங்கேயும் இறைந்து கிடந்தன. வீட்டைக் காலி செய்த பின்பு எக்காரணத்தைக் கொண்டும் வீட்டைப் பெருக்கவோ, கழுவித் துடைக்கவோ கூடாது என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டிருந்தார் வீட்டு உரிமையாளர்.

    “ரொம்ப ராசியான வீடு கார்த்திக். போறதுக்கே மனசே இல்ல. எவ்ளோ நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு இந்த வீட்ல…” என்றாள் திவ்யா.

    “என்ன பண்றது. யாராவது வந்தா தங்கக் கூட இடமில்லையே.”

    “இந்த ஒரு வருஷத்துல நாம நெனெச்செ பாக்காதது எல்லாம் நடந்துடுச்சி கார்த்திக். நம்ம மேரேஜ். நீ செத்தாலும் உன்ன பாக்க வரமாட்டேன்னு சொன்ன என் அப்பா இன்னைக்கு நாம வீடு காலி பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணிட்டு இருக்கார். நாம இந்த வீட்டுக்கு வந்தப்ப எவ்ளோ காலியா இருந்திச்சி. இன்னைக்கு ஒரு டெம்போவே பத்தாத அளவுக்கு நிரம்பிடிச்சி. இவ்ளோவும் யாரோட ஹெல்பும் இல்லாம பண்ணியிருக்கோம். உன்னோட ஹார்டு வொர்க் கார்த்திக். எவ்ளோ பெயின். எவ்ளோ சந்தோசம்.”

    “லைபே அப்படித்தான் திவி. சந்தோஷம், துக்கம், அப்ஸ் அண்ட் டவுன்ஸ், நல்லது, கெட்டதுனு சுத்திட்டே தான் இருக்கும். இப்படி மாறி மாறி வந்து நான் இருக்கேன்னு உணரவெக்கும். இதோ இந்த ஃபேன்-லர்ந்து வர்ற காத்து வெதருக்கு ஏத்த மாதிரி சூடாவும், சில்லுனும் மாறி மாறி வீசி ஃபேன் இருக்கறத உணர்த்தறது மாதிரி.”

    “ப்பா… தத்துவம் பா. ரொம்ப புக்ஸ் படிக்காதன்னு சொன்னா கேக்கறியா? இன்னைக்கு டெம்போல பாதி எடத்த உன் புக்ஸ்தான் அடைச்சிருக்கு. ” என்று கூறிவிட்டு ஹாலுக்குள் நுழைந்தவள் சடாரெனத் திரும்பி, “கார்த்திக், ஃபேனை மறந்துட்டோமே?” என்று கேட்டாள்.

    “ப்ரீயா விடு திவி. ஒரு வருஷம் இருந்திருக்கோம். ஃபேன், லைட்டெல்லாம் இங்கயே விட்டுடலாம். ஓனர் வேற தங்கமான மனுஷன்.” என்றான்.

    “போப்பா. நாம மொத மொதல்ல வாங்கினதே இந்த ஃபேன் தான். அத பிக்ஸ் பண்ண ஸ்டூல் கூட கிடையாது அன்னைக்கி. இப்போ பாரு. எல்லாம் இந்த பேன் வந்த ராசி. அதுக்கு பதிலா ஓனருக்கு எதாச்சும் காஸ்ட்லியா கிப்ட் வாங்கிக் கொடுத்திடலாம். ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

    “ஒகே ஒகே. சென்டி போடாத. கழட்டி எடுத்திட்டுப் போய்டலாம்” என்று கூறிவிட்டு சுவிட்சை தட்டினான்.

    கார்த்திக் மின்னோட்டத்தை நிறுத்திய அடுத்த நொடி –

    அவளின் சுக துக்கங்களில் அவளுக்கே தெரியாமல் பங்கெடுத்து, ஒவ்வொருமுறை அவள் அழுதபோதும் அவளது கண்ணீரின் ஈரம் தாங்கிய அந்த அறையின் காற்றை, சுழற்றி சுழற்றி வேகமூட்டி புறந்தள்ளி, அவளது தாயிடம் கொண்டுபோய் சேர்க்கச் சிறு உதவிபுரிந்த என்னை இங்கேயே விட்டுவிட்டு போய்விடுவாளோ?‘ என்று அதுவரை எண்ணி ஏங்கிச் சுழன்றுகொண்டு இருந்த நான், குதூகலத்துடன் என்னுடைய சுழற்சியை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு, அவர்களோடு புறப்படத் தயாரானேன்.

    Share
  • காதலிதன் நலம் பாராட்டல்!

     

    புவனேஷ்வர்

     

    சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று

    முத்தொளி யன்னநீ வந்தாய் – ஒரு

    செந்திரு வன்னாயுன் சோதிமு கங்கண்டு

    சிந்தை திறை கொடுத்தேன்;

     

    நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்

    வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;

    அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்

    தேயாத திலகமிட்ட திங்களடி நீ.

     

    நினைக்கின்றேன் உன்னை நான் என்

    நினைவினில் வாழ்கின் றாய்நீ;

    பனிக்காலப் போர்வை போலும்

    இனிக்கின்ற இதம் நீ என்னில்;

     

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – உயர்

    காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

    காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்

    ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

     

    Share
  • உன்னாலே……

    தனுசு

    நெரிசல் மிகுந்த சாலையில்
    உன்னோடு
    ஒரு
    நடைபயணம் போகிறேன்

     

    அங்கே பார்
    அத்தனை பேரின் கண்களும்
    உன் மீதும் என் மீதும்
    என் ஆண்மைக்கே கம்பீரம் சேர்த்தது
    நம் ஜோடிப்பொருத்தம்

     

    பட்டால் நெய்த வனப்பும்
    சுட்டு இழுக்கும் உன் இளைப்பும்
    சொல்லாமல் சொல்கிறது
    நீ ஒரு
    தொட்டால் மலரும் பூவின் ஜாதியென்று

     

    உன்னை முதன் முதலில்
    ஒரு திருமணத்தில் பார்த்தேன்
    பின்
    என் நண்பனுக்குப் பெண் தேட
    இணையம் வந்தபோது
    துணையாக உன்னையும் கண்டேன்
    பின்
    வணிகவளாகத்தில் பார்த்தேன்

     

    அன்றிலிருந்து
    கனவும்
    கடமையும் நீயானாய்
    தினமும்
    தரிசனம் நீயானாய்

     

    ஆனால்
    நான் மட்டும்
    நானாயில்லை
    உன் நினைவே எனை ஆண்டதன்றி வேறில்லை

     

    உனக்காக நின்றேன்
    பெற்றோரிடம் போராட்ட வீரனாக
    சகோதரியிடம் சிபாரிசுக்காக

     

    முயற்சியும் பலன் தந்தது
    என் நம்பிக்கையும் வென்றது
    இன்று
    நீ
    என்னிடம்
    இனி
    நீ
    எனக்கே
    எனக்கு மட்டும்

     

    அன்று
    நீயே அறியாமல்
    உன்னை பார்க்க வந்தேன் அடிக்கடி
    இன்று
    எனக்கு நீ சொந்தமானதால்
    நான் உயர்ந்தேன்
    வாழ்க்கையில் இன்னும் ஒரு படி

     

    அன்று
    ஆதாமையும் ஏவாளையும் சேர்க்க
    ஒரு ஆப்பிளை படைத்தான் இறைவன்
    இன்று
    எனக்காக
    ஆப்பிளாகவே
    படைத்தான் உன்னை

     

    இதோ
    என்னை யாரோ அழைக்கிறார்
    அவருக்கு
    உன் மூலமே பதில் சொல்கிறேன்
    ஹலோ…
    ஹலோ…

     

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 5ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    பொது

    உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு

    அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
    விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில்
    வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே. 1.

    இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன).

    இதே பாடல் வரிகளை மகாகவி பாரதியும் தன் சுயசரிதையில் “தேம்பாமை” எனும் துணை தலைப்பில் சொல்லும் கருத்தும் கவனிக்கத் தக்கது:–

    “வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
    வான் பிறைக்குத் தென் கோடு” பார்மீதிங்கே
    விடமுண்டுஞ் சாகாமலிருக்கக் கற்றால்
    வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
    திடங் கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டாம்
    தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
    இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
    எதற்குமினி அஞ்சாதீர் புவியிலுள்ளீர்.”

    இந்த வரிகளையும் பட்டினத்தாரின் மேற்சொன்ன வரிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    வீடு நமக்குத் திருவாலங்காடு, விமலர் தந்த
    ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
    நாடு நமக்கு உண்டு கேட்டதெல்லாம் தர நன்னெஞ்சமே
    ஈடு நமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே. 2.

    என் நெஞ்சே கேள்! நமக்கு வீடு திருவாலங்காடு எனும் புண்ணியத் தலமாகும் (காரைக்கால் அம்மையாருக்குக் கையிலையில் இருந்து சிவபெருமான் அருள் புரிந்தத் தலம் என்பதால்), சிவனடியார்களுக்கே உரிய பிட்சா பாத்திரமாக சிவன் அளித்த ஓடு இருக்கிறது, அது அட்சய பாத்திரம் அன்றோ! எடுக்க எடுக்க உணவளிக்கும் பாத்திரமாகிய அதுவும் இருக்கிறது, இந்த பரந்து விரிந்த நாடும் மக்களும் இருக்கிறார்கள் நமக்குத் தேவையானவற்றைக் கேட்டதும் அள்ளிக் கொடுக்க, அப்படிப்பட்ட எமக்கு இங்கு ஈடு இணை யார் இருக்கிறார்கள் சொல் பார்ப்போம். “மேலே ஆகாயம், கீழே பூமி” என்றொரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு எதற்கென்று கவலைப்பட வேண்டும்?

    நாடிக்கொண்டு ஈசரை நாட்டம் உற்றாயில்லை, நாதரடி
    தேடிக்கொண்டாடித் தெளிந்தாயில்லை, செகமாயை வந்து
    மூடிக்கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த என்றும்
    பீடிப்பையோ நெஞ்சமே உனைப்போல் இல்லை பித்தர்களே. 3.

    ஓ என் மனமே! இறைவனின் கருணையை நாடிக் கண்டுகொள்ளவில்லை, அவன் பாதாரவிந்தங்களைத் தேடி அடைந்தாயில்லை, அவன் அருள் கருணையை உணர்ந்தாயில்லை, இது குறித்தெல்லாம் சிறிதும் கவலை கொள்ளாமல், உலக மாயா விவகாரங்களில் மயங்கி வீழ்ந்து, அவை தரக்கூடிய தொல்லைகளால் மனம் வருந்தி வாடுகிறேன் என்றும் சொல்லி வருந்துவாயேல், உன்னைப் போல பைத்தியக்காரர்கள் உலகில் வேறு எவரும் இல்லை என்பதை உணர்ந்து கொள்.

    கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
    பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
    மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்
    செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே. 4.

    ஐயனே! இறைவா! எனது கைகள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருக்க, விழிகளோ வேறெதையோ பார்த்துக் கொண்டிருக்க, மனமோ வேறெதையோ எண்ணிக் கொண்டிருக்க, வஞ்சனையை மாற்றி மாற்றிப் பேசுகின்ற நா வேறெதையோ பேசிக் கொண்டிருக்க, புலால் நாற்றம் வீசும் இந்த உடலானது எதையெதையோ அனுபவிக்க, செவிகள் எதையெதையோ கேட்டுக் கொண்டிருக்க பூஜை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு நான் மலரை எடுத்து உன் சிலையில் அல்லது படத்தின் மீது போட்டால், இறைவா, அதை நீ எங்ஙனம் ஏற்றுக் கொள்வாய் வினைதீர்க்கும் அருள் கொண்ட இறைவா சொல்.

    கண்ணுண்டு காணக், கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
    பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையால்
    எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
    மண்ணுண்டு போகுதையோ கெடுவீர் இந்த மானிடமே. 5.

    இறைவனின் தெய்வீகக் காட்சியைக் காண அவன் அளித்துள்ள இரு கண்கள் இருக்கின்றன; அவனுடைய கருணை உள்ளத்தை எண்ணி உருக நல்ல மனம் இருக்கிறது; அவனை எண்ணி உருகிப் பாட அவன் புகழ்பாடும் பாமாலைகள் பல உள்ளன; அவற்றைக் கேட்டு இன்புற்று அவனை வணங்க இரு செவிகள் உள்ளன; ஈசன் திருவடிகளைப் போற்றி பச்சிலைகளால் அர்ச்சிக்கப் பல மந்திரங்கள்உண்டு; இப்படிப் பல விதங்களால் அவன் அருளால் அவனடி தொழ வழிமுறைகள் இருக்கும்போது, இவற்றுக்காகவே இப்புவியில் பிறவியெடுத்த மானுடப் பிறவியில் உடலை வீணாக மண்ணுக்குத் தின்னக் கொடுக்கின்றோமே, கெடுக இந்த மானுடப் பிறவி.

    சொல்லினும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
    அல்லினும் மாசற்ற ஆகாயம் தன்னிலும் மாய்ந்து விட்டோர்
    இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்கும் இடம்
    கல்லினும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே? 6.

    நெற்றியொற்றைக் கண்ணனான சிவபெருமான், அவன் புகழ்பாடும் சொற்களிலும், அந்த மந்திரச்சொற்களின் முடிவான பலன்களிலும், வேதங்களின் சாரத்திலும், இருளிலும், தெளிந்த வெட்டவெளி ஆகாயத்திலும், சிவனோடு ஐக்கியமாகிவிட்ட அன்பர்கள் இல்லங்களிலும், சிவனடியார்களிடத்திலும் இருக்கின்ற ஈசனை அங்கெல்லாம் சென்று பார்க்காமல், கல்லில் வடித்த சிலைகளிலும், செம்பில் வார்த்த சிலா வடிவங்களிலுமா இருப்பான். அன்பர் உள்ளங்களே அவன் வாழும் இடம் என்பதை உணர்தல் வெண்டும்.

    வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய் வினைதான் ஒழிந்தால்
    தினைப் போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதம் நினை
    நினைப்போரை மேவு நினையாளர் நீங்கி இந்நெறியினின்றால்
    உனைப்போல் ஒருவர் உண்டோ மனமே எனக்கு உற்றவரே. 7.

    இந்த மானுடப் பிறவியே நாம் செய்த முற்பிறவி வினைகளினால்தான் என்பதை உணர்ந்திருக்கிறோம்; அவ்வினைகள் நீங்கிவிட்டால் இந்த உடல் ஒரு நொடிப்போதும் இப்பூவுலகில் இல்லாமல் நீங்கிவிடும் என்பதும் உணர்ந்திருக்கிறோம்; ஆனபடியால் எம்பிரான் ஈசனின் பாதாரவிந்தங்களை எப்போதும் மனதால் நினை; அப்படி சிவ சிந்தனையில் திளைத்திருப்போரின் துணையையும் எப்போதும் நாடு; இறை சிந்தனை இல்லாமல் அவனின்றும் நீங்கி நிற்பார்தம் உறவினை நீக்கிவிடு; இப்படி நீக்குவன நீக்கி, சேர்வன சேர்ந்து வாழ்ந்தால் அவனைப் போல இறைவனருள் பெற்றவர் வேறு எவரும் இலர் என்பதை உணர்ந்து கொள்.

    பட்டைக்கிழித்துப் பருவூசிதன்னைப் பரிந்தெடுத்து
    முட்டச்சுருட்டியென் மொய்குழலாள் கையில் முன்கொடுத்துக்
    கட்டியிருந்த கனமாயக்காரிதன் காமமெல்லாம்
    விட்டுப்பிரிய என்றோ இங்ஙனே சிவன் மீண்டதுவே. 8.

    வாழ்கின்ற வரையில் பட்டும் பீதாம்பரமும் அணிந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும், முடிவில் காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே எனும் உண்மையை எனக்கு உணர்த்துவதற்காக வன்றோ அந்த ஈசன் என்பால் கருணை வைத்து என்னைப் பற்றியிருந்த காமக் குரோத ஆசைகள் எல்லாம் விட்டொழிக்க எண்ணியன்றோ என்னை ஆட்கொண்டிருக்கிறான். பட்டாடை அணிந்து கோலாகலமாக வாழ்ந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒரு பட்டுத்துணியை எடுத்துக் கிழித்து, போகும்போது இதுகூட உன் கூட வராது என்பதைக் குறிக்கும் வகையில் அதில் ஓர் பெரிய ஊசியையும் வைத்து நன்கு சுருட்டி அதனை அடர்ந்த கூந்தல் வாய்ந்த என் மனையாட்டியின் கையில் கொடுத்து, வாழ்வின் இரகசியத்தைப் புரியவைத்த அவன் கருணையை என்னவென்று சொல்வேன்.

    சூதுற்ற கொங்கையு மானார் கலவியும் சூழ் பொருளும்
    போதுற்ற பூசலுக்கு என் செயலாம் செய்த புண்ணியத்தால்
    தீதற்ற மன்னவன் சிந்தையினின்று தெளிவதற்கோ
    காதற்ற ஊசியைத் தந்துவிட்டான் என்றன் கைதனிலே. 9.

    பருத்த கொங்கைகளையுடைய மனையாளும், மானின் விழிகளையொத்த இன்பம் தரும் மாதருடன் கொண்ட போகங்களும், உலக இன்பங்களை நுகர்தற் பொருட்டு சேர்த்து வைத்த செல்வங்களும், வாழ் நாள் முடிந்து போகுங்காலை இவைகளால் ஐம்பொறிகளும் படும் பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோம். ஏதோ முற்பிறவிப் பயனால் அன்பே உருக்கொண்ட இறைவன் ஈசன் நம் மனம் தெளிந்து வாழ்வின் உண்மைகளை உணர்ந்து கொள்ளவென்றோ காதற்ற ஊசியொன்றை என் கைகளிலே கொடுத்துப் உணர வைத்தான்.

    வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
    போதுற்று எப்போதும் புகலும் நெஞ்ச்சே இந்தப் பூதலத்தில்
    தீதுற்ற செல்வம் என், தேடிப் புதைத்த திரவியம் என்
    காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. 10.

    நெஞ்சே கேள்! திண் தோள் தகையாளரும், திரு அண்ணாமலையில் வீற்றிருப்பவருமான சிவபெருமானுடைய திருவடிகளே கதியென சரணம் அடைந்திடுவாய். எப்போதும் அவரையே துதி செய்திடுவாய். இப்பூவுலகில் செல்வத்தால் உருவாகும் தீமைகள் எத்தனை, பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த செல்வம் தான் எத்தனை, இவை அனைத்தும் இவ்வுலக வாழ்வை நீங்கி போகும் காலை கூடவே எவை வரும், காதற்ற ஊசிகூட உன் கூட வராது என்பதை உணர்ந்து கொள்.

    (இன்னும் உண்டு)

    Share
  • சீதாயணம் படக்கதை -2

     

    சி. ஜெயபாரதன்

     

    Scene -2

     

    Scene -3

     

    Share
  • “மின்னி’ மீனாட்சி ஆனாள்!

    விசாலம்

     

    கொலுவே உன்னை வரவேற்கிறேன்.

    கொலுசு சத்தம் என் வீட்டில் கேட்க

    “மின்னி’ யாக இருந்த என்னவள் இன்று

    மீனாட்சியாக மாறியிருக்கிறாள்.

    தலைவிரிக்கோலம் மாறி இருக்க

    தலையில் பின்னலுடன் பூச்சூடியிருக்கிறாள்.

    கண்களை மறைக்கும் முடிகள் இன்று

    கறுப்பு கிளிப்பில் நுழைந்தன.

    வெறிச்சென்று இருக்கும் அவள் நெற்றி

    வெம்பிப் போகும் என் மனம்

    இன்று காண்கிறேன் மங்கல குங்குமம்

    இனிக்கும் மனத்துடன் நிறைவு பெறுகிறேன்.

    வந்தது ஜீன்ஸ், டீ ஷர்ட்டுக்கு  முடிவு .

    வருடத்தில் ஒரு முறை புடவை ஏறியது.

    மொட்டைக்கையும் வாச்சும் மறைய.

    மொழமொழ கையில் வளைகள் குலுங்கின

    பாத்ரூமில் மாட்டும் தாலி இன்று

    பார்யாள் கழுத்தில் பளபளத்தது.

    என் கனவுக்கன்னியை இன்று காண்கிறேன்

    என் கனவை நினைவாக்கிய கொலுவை வாழ்த்துகிறேன்.

    Share
  • வார ராசிபலன்!…14-10-13 – 20-10-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடப்பதால் பெண்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் உங்கள் வாகனம் உங்கள் வசமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவும், மன உளைச்சலும் இராது.வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் யாருடனும் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் இயன்றவரை புதிய கடன் வாங்குதலைத் தள்ளிப் போடுங்கள். கலைஞர்கள் அளவாகப் பேசி, காரியங்களை முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டால், எதிலும் வெற்றி கிட்டும். பதற்றம், எரிச்சல் ஆகியவற்றால் உங்கள் பணியின் வேகம் மட்டுப்பட இடம் கொடுக்க வேண்டாம்.

    ரிஷபம்: சக கலைஞர்களிடையே பிரச்னை எழும் வாய்ப்பிருப்பதால், எதையும் நன்கு யோசித்து பேசினால், உறவுகள் உறுதியாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் நல்லது செய்தாலும், பிள்ளைகளிடமருந்து பாராட்டைப் பெறுவது கடினமே. பணிவாகப் பேசுங்கள். உங்கள் கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக் கொள்வர். பணியில் ஏற்படும் வேண்டாத இடமாற்றம் சிலரை நெருக்கடியான சூழலுக்குத் தள்ளி விடும். எதிர்பாராத செலவுகளால் பெண்களின் திட்டங்களில் தொய்வு ஏற்படலாம். மாணவர்கள் கவனமாக செயல்படவில்லை என்றால், சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.

    மிதுனம்: அலுவலகத்தில் இருப்போர்கள் அவசரப் பிரச்னைகளின் பொருட்டு அங்கும் இங்கும் அல்லாட வேண்டியிருக்கும். பெண்கள் அவ்வப்போது தலை காட்டும் தேவையற்ற சஞ்சலத்தை மாற்ற மனதுக்கு பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள். உங்களின் தொழில் வளத்தை மேன்மை படுத்தும் பொருட்டு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தாலும்,அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் கோபத்தை கட்டுப் படுத்தி வைத்தால், பிரச்னைகளுக்கான தீர்வை எளிதில் கண்டு விடலாம். இந்த வாரம் பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல் நடந்து கொள்வது நல்லது.

    கடகம்: வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் இயன்ற வரை சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டால் எப்போதும் நிலைமை சீராக இருக்கும். இந்த வாரம் கலைஞர்கள் அதிக போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் லாபகரமாய் அமைய கூட்டு முயற்சி கை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையான பணியாளர்களை சந்தேகப்பட்டு சிக்கலை வரவழைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் உறவுகளின் போக்கினை அறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பதே புத்திசாலித் தனம்.

    சிம்மம்: பெண்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்துவிடவும். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும்.

    கன்னி: மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங் களை குறித்த காலத்தில் முடிப்பதில் கருத்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் .சொந்தங் களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும். மாணவர்கள் தெளிவான மன நிலையுடன், பாடங்களை ஆர்வத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.

    துலாம்: வியாபாரிகள் விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும்,நட்பு வட்டமும் கூடும். இந்த வாரம் கலைஞர்களுக்கு பிரபலங்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் விருந்து, விழா என்று மகிழும் வாய்ப்பு பல உண்டு. மாணவர்கள் சின்ன சின்ன முயற்சிகளுக்கு கூட, அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்துச் செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் அறிமுகமில்லாத நபர்களை சட்டென்று நம்பிவிட வேண்டாம். சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள்.

    விருச்சிகம்: மாணவர்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். பெண்கள் நினைத்த வாறு காரியங்களை சாதித்துக் கொள்ள, பொறுமையைக் கடை பிடியுங்கள். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காக திட்டமிடும் போது நிறை குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழு பலனை அடையலாம். பலரும் பயனடையும் திட்டங்களுக்காக பொது வாழ்வில் உள்ளவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.கலைஞர்கள் வீண் கவலை உங்கள் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    தனுசு: நல்ல பெயரை வாங்க, மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். நண்பர்களோடு ஏற்படும் கருத்து மோதல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக் கொண்டால், நட்பு பிரியாமலிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்களால் எந்த தொந்தரவும் இராது.பணியில் இருப்பவர்கள் ரகசிய த்தைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தால், மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்போர்கள் நடு நிலையாக செயல்படுபவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். வியாபார வட்டத்தில் சில சங்கடங்கள் தோன்றினாலும், அனைத்தையும் நல்லவரின் உதவியுடன் சமாளித்து விடு வீர்கள்.

    மகரம்: இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது.

    கும்பம்: சக கலைஞர்களுடன் ஆலோசனை செய்து புதிய நிகழ்ச்சிகளை துவக்கினால், கலைஞர்களுக்கு வேண்டிய பாராட்டும், புகழும் வந்து சேரும். பெற்றுத் தருவார். பாராமுகமாய் இருந்த உறவும், நட்பும் உங்களை தேடி வரும் போது உறவுகளை மீண்டும் புதிப்பித்துக் கொண்டால்,பெண்கள் பல நன்மைகளைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் காட்டும் உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு உரிய பாராட்டைப் பெற்றுத் தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்று அறிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளை சமாளித்தே வெற்றி வாகை சூட வேண்டியிருக்கும்.

    மீனம்: பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கி யத் தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    Share
  • குறவன் பாட்டு – 14

    சச்சிதானந்தம்

    ஆலமரமும் அழகுக் குறத்தியும்

     

    சிறுகுறும் பறவைகள் சிலநூறு வாழ்ந்திடும்,

    சிற்றிலை ஆல்பெற்ற விழுதினைப் பற்றியே,

    நற்குணக் குறத்தியும் உடலெற்றி ஆடிடும்,

    அற்புதக் காட்சியைப் பறவைகள் கண்டன!                             106

     

    பறவைகளின் தவம்  

     

    பல்வகைப் பறவைகள் காற்றினில் பண்பாடும்,

    நன்மலர்ச் சோலையில் குறத்தியைக் கண்டதும்,

    இன்குரல் பறவைகள் தம்குரல் மறந்ததால்,

    கண்ணிமைப் பொழுதிற்கு மௌனமாய் நின்றன!                       107

     

    புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்

    பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்

    வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு

    தம்மினம் சேரத் தவம்செய் தனவே!                                                     108

     

    அணில்களும் அன்புக் குறத்தியும்

     

    சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,

    இருகை எடுத்து இடையில் பதித்து,

    வருகை புரியும் குறத்தியை அறிந்து,

    சிறுகை குவித்து அணில்கள் ஆடும்!                                                                                          109

     

    அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,

    கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,

    மடியில் வைத்து தடவிக் கொடுத்து,

    விடியல் போல வண்ணம் கொண்டாள்!                                                                                   110

     

    களிறுகளும் மாஞ்சோலையும்

     

    மாவின் அடிமரத்தை உரித்துத் தின்று

    மேலே உயர்ந்திருக்கும் கிளைகள் உலுக்க,

    துதிக்கை தனை உயர்த்தி யானை இழுக்க,

    கனிகளும் உதிர்ந்தன, கிளைகளும் முறிந்தன!                          111

     

    கிளையைச் சுற்றிய துதிக்கை கண்டு

    கருநாகம் என்று எண்ணிப் பதறி

    மரத்தில் வாழும் குயில்கள் இரண்டு

    வானில் உயரக் கூவிப் பறந்தன !                                                                                                112

     

    யானை சென்ற பின்னர் அந்த

    சோலைப் பக்கம் வந்தாள் குறத்தி

    தன்மனக் குறிப்பை உணர்ந்து  மரங்கள்,

    கனிகள் உதிர்த்தன என்றே நினைத்தாள்!                                                                 113

     

    மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,

    மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,

    சோலை மஞ்சள் மாங்கனி கடித்து,

    செம்மஞ்சள் வானம்போல இதழ்கள் கொண்டாள்!                                                           114

     

    பூங்குரல் குறத்தி மாங்கனி எடுத்துத்

    தின்றது போக மீதிப் பழங்களைத்

    தன்னுடன் எடுத்துச் சென்றாள் கூடையில், முன்பே

    எடுத்த கனிகளினோடும் மலர்களி னோடும்!                                                                         115

     

    நெல்லிக்கனி சேகரித்தல்

     

    செல்லும் வழியில் நெல்லிக்கனிமரம், கண்டே

    உள்ளம் துள்ளிக் குதித்து, மாங்கனி எடுத்து

    கல்லெனத் தொடுத்து நெல்லியை அடித்து,

    சிதறிய கனிகளை எடுத்துக் கடித்தாள்!                                                                                      116

     

    செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,

    அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,

    நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,

    பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்!                                                                 117

    Share
  • புத்தக மதிப்புரை போட்டி!

    பவள சங்கரி

    வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!

    நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

    ஒரு முறைக்கு பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகங்கள், படித்தவுடன் பச்சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் புத்தகங்கள், படித்தவுடன் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிற நூல், இப்படி ஆக்கப்பூர்வமாக நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது நல்ல நூல்களின் வாசிப்பு. சில நேரங்களில் உணர்வுப்பூர்வமாக நம்மை ஒன்றிணைத்தும்விடுகிறது. வாழ்க்கையில் உள்ள கோடிக்கணக்கான சுவாரசியங்களும், அதிசயங்களும் ஒரு ஆசிரியரின் பார்வையில் IMG_2588எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதைவிட ஒரு படி மேலாக அந்த வாசகனுக்கும் ஏற்படுத்துகிறது என்பதே சத்தியம். ஆனால் அந்த வாசகன் அதை எந்த அளவிற்கு உள்வாங்கி வாசிக்கிறான்.. அல்ல..அல்ல… நேசிக்கிறான் .. அல்ல.. சுவாசிக்கிறான் என்பதை வைத்தே அதன் அளவுகோல் நிர்ணயமாகிறது! தாம் இறந்த பின்புகூட தம் சடலத்தின் மீது மலர் செண்டுகள் வைக்க வேண்டாம், மகத்தான புத்தகங்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்ட புண்ணியவான் பண்டித நேரு அவர்கள். புற்று நோயால் பாதிப்படைந்து, தன் இறுதி நாளை எண்ணிக்கொண்டிருந்த சமயம், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில், தமக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டாராம், அறிஞர் அண்ணா. காரணம் தெரியாமல் விழித்தவர்களிடம் தாம் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் மீதமுள்ள சில பக்கங்களை முழுவதுமாக வாசித்து முடிக்க வேண்டும் என்றாராம்! இப்படிப்பட்ட அற்புதமான வாசிப்பை ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பகிர்ந்து கொள்வதுதானே முறை? வாசிப்பு எனும் தியானத்தை நேசிப்போம்! அதைச் சுவையாக அறிமுகமும் செய்து பரிசுகளையும் வெல்வோம்! வாருங்கள் நண்பர்களே! எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும். தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    போட்டிக்கான விதி முறைகள்:

    ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.

    மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    மாதந்தோறும் தேர்வான 12 மதிப்புரைகளிலிருந்து, ஆண்டின் இறுதியில் சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    மாதம் ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ரூ. 100 பரிசாக வழங்கப்படும். ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஆண்டின் இறுதியில் அதிலிருந்து சிறந்த மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    முதல் பரிசு 1000
    இரண்டாம் பரிசு 500
    மூன்றாம் பரிசு 300

    அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து வருகிற மதிப்புரைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு மாத இறுதியிலும் அதிலிருந்து ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.100 பரிசாக வழங்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் மாதாமாதம் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 15

    தேமொழி

    கெளதம புத்தர்

    Gold Buddha

     

    மின்பலகையில் ‘ஸ்கெட்ச் புக் எக்ஸ்ப்ரெஸ்’ (SketchBook Express apps for Tablets) என்ற ஓவியம் வரையும் மென்பொருள் கொண்டு என் முதல் முயற்சியாக உருவாக்கிய எண்ணிம கெளதம புத்தர் ஓவியம்.

    SketchBook Express for Tablets – https://play.google.com/store/apps/details?id=com.adsk.sketchbookhdexpress&hl=en

     

     

     

     

     

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 6

    தஞ்​சை ​​வெ. ​கோபாலன்

    தில் வீட்டில் சாமிநாதனின் பெண்ணுக்கு தினந்தினம் நரக வேதனைதான். என்ன செய்வது? பெற்றோர்களும் மனதைக் கல்லாக்கிக் கொண்டனர். நாம் வருந்துவது தெரிந்தால் அவளுக்கும் வருத்தம் அதிகமாகும், ஆகையால் அங்கு அவள் படும் துன்பங்கள் தங்களுக்குத் தெரியாதது போல நடந்து கொள்ளத் துவங்கினர். ஆனால் அவள் தன் தம்பியிடம் போனில் பேசி தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து வெளியே கொண்டு வாடா, நீயும் நானும் எவ்வளவு அன்பாக, ஆசையாக விளையாடிக்கொண்டு நம் வீட்டில் சுதந்திரமாக இருந்தோம். நான் இங்கே சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சுடா. நேத்து ராத்திரி இவா என்னைப் படுத்தின பாடு தாங்காம எங்கேயாவது போய் செத்துப் போயிடலாம்னு தெருக்கடைசில போயி நின்னுண்டிருந்தேன். எங்கே போறது, எப்படி சாகறதுன்னு தெரியலை. மறுபடி வீட்டுக்கே வந்து அழுதுண்டே படுத்துத் தூங்கிட்டேன். என்னை ஏண்டா அப்பா இப்படியொரு பாழும் கிணற்றில் கொண்டு வந்து தள்ளிவிட்டு, அவர் பாட்டுக்கு இருக்கிறார் என்று அழுதிருக்கிறாள். தம்பிக்கு வருத்தம் தாங்கவில்லை. நெஞ்சு வெடித்துவிடுவது போல துக்கம் அவனை வாட்டியது. உடனே ஓடிப்போய் அக்காவை அந்த கொடுங்கோலர்களிடமிருந்து மீட்டுவிட வேண்டுமென்ற வெறி. பி.காம் ஃபைனல் இயர் படிக்கும் அந்த இளைஞன் தன் அக்காவின் மேல் அளவற்ற பாசம் வைத்திருந்தான். அப்பாவிடம் சொல்லிவிட்டுத் தான் போய் அக்காவைப் பார்த்துவிட்டு வருவதாகத் தன் பைக்கை எடுத்துக் கொண்டு மாம்பலம் சென்றான்.

    அக்காவின் வீட்டையடைந்த சமயம் அங்கு அக்காவுக்கு ஏதோ அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. திவானா தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கடுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். எங்க மாமியார் எனக்குச் சொல்லிக்கொடுத்தபடிதான் நான் நடப்பேன். நீ என்ன? படிச்சுட்டோம்கிற திமிர்ல பதில் பேசறே. அப்பாவை நான்கூட எதிர்த்து ஒருவார்த்தை பேசினது கிடையாது, எனக்கும் கல்யாணமாகி புக்ககம் வந்து இதோட முப்பது வருஷம் ஆச்சு. நீ ஒவ்வொண்ணுக்கும் பதில் சொல்லிண்டு நிக்கறயே. அவரை யார்னு நினைச்சே. அவா கம்பெனி எம்.டிக்கு அவர் பி.ஏ. தெரியுமா. அவர் நெனைச்சா எந்த காரியமும் சாதிக்க முடியும். அவரைப் போய் நீ எதிர்த்து பதில் பேசறது நன்னா இல்லை. நன்னா வளர்த்திருக்கா பெண்ணை என்று முனகிக் கொண்டு வாசல் புறம் திவானா வரவும் அங்கு மருமகளின் தம்பி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    தன் அக்கா ஆதரவில்லாத அனாதையா என்ன? இந்தக் கிழவி வாயில் வந்ததெல்லாம் சொல்லி திட்டிக் கொண்டிருக்கிறாளே. என் அம்மா கூட தன் பெண்ணை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசினது கிடையாது. அவளுக்குக் கல்யாணம் பண்ற வரையிலும் கூட அவளைத் தன் மடியில் தலை வைத்து படுக்கச் சொல்லி அவளைக் கொஞ்சிக் கொண்டிருப்பாளே. அப்பாவுக்குக் கூட தெரியாமல் பெண் மீது செல்லம் கொடுத்து, அவள் வேண்டியதை யெல்லாம் வாங்கித் தருவாளே. அவள் காலேஜ் விட்டு வீட்டுக்கு வருவதற்கு முன்பாக அவளுக்கு ஸ்பெஷலா டிபன் பண்ணிக் கொடுப்பாளே. அவள் பசி தாங்க மாட்டான்னு அவளுக்கு மட்டும் அம்மா எவ்வளவு கரிசனத்தோடு பரிந்து பரிந்து எல்லாம் செய்து கொடுப்பாள். அவள் கால் தரையில் பட்டால் கூட அடடா, வலிக்குமே என்று வருந்தும் அந்தத் தாய் எங்கே, இங்கே சதா திட்டித் தீர்க்கும் இந்த ‘இடும்பி’ போன்ற சூன்யக்காரக் கிழவி எங்கே? அவனுக்குத் தாளமுடியாத கோபம் வந்தது.

    கிழவி தன் எதிரில் வந்து நிற்கவும் அவன் கோபம் தலைக்கேறிவிட்டது. இளைஞனல்லவா? பக்குவமாய் தன் கோபத்தை வெளிப்படுத்தத் தெரியவில்லை. “என்ன மாமி. என்ன நீங்க பாட்டுக்கு என் அக்காவை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிண்டு இருக்கீங்க. நான் எல்லாத்தையும் கேட்டுண்டுதான் வந்து நிக்கறேன். எங்க வீட்டிலே எங்களுக்கெல்லாம் மரியாதைன்னா என்னன்னு சொல்லிக்கொடுத்துதான் வளத்திருக்காங்க. நீங்க ஒண்ணும் புதுசா மரியாதை சொல்லித் தர வேணாம். உங்க ஆத்துக்காரர் எம்.டிக்கு பி.ஏ.வாக இருக்கலாம். எங்க அப்பா, ஃபாக்டரி மானேஜர். உங்க வீட்டுக்காரரை விட அதிக சம்பளம். அதிக அதிகாரம். பெரிய கம்பெனி. தெரியுமா?” என்றான்.

    “இப்ப என்னடா ஆயிடுத்து. வந்து நுழைந்தும் நுழையாம மல்லுக் கட்டிண்டு சண்டைக்கு வரயே. இதெல்லாம் உங்காத்துல வச்சுக்கோ. இப்போ உன்னை இங்கே யாரு வெத்தல பாக்கு வைச்சு அழைச்சா?” என்றாள் திவானா.

    பையனின் கோபம் இன்னும் அதிகமாகியது. “அதிகமா பேசினேள்னா தெரியும் சேதி. நான் உங்க புருஷன் இல்ல. உங்க வாய்க்கு பயந்து தொப்புக்கரணம் போட, நாக்கைப் புடிச்சு இழுத்து வச்சு அறுத்துடுவேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தில் வந்து பின்புறமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டான்.

    தில்லுக்கு மகா கோபம். “அறுப்பேடா, அறுப்பே, போடா வெளியே, யூ கெட் அவுட்” என்று கத்தினார்.

    இந்த விவகாரத்தை உள்ளேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த சாமிநாதனின் மகள் ஓவென்று அழுது அரற்றினாள். தன் தம்பிக்கு ஏற்பட்ட சங்கடத்தை நினைத்து அவள் துக்கம் தாங்க முடியாமல் போனது. என்ன செய்வாள் பாவம். “டேய், சுரேஷ், போயிடுடா, நீ ஆத்துக்குப் போயிடு. அவாகிட்டே நின்னு பேசிண்டு இருக்காதே, அவா அப்படித்தான் பேசுவா” என்றாள்.

    “நீ போடி உள்ளே. வந்துட்டா தம்பிக்கு பரிஞ்சுண்டு” என்று உத்தரவு போட்டாள் திவானா.

    சுரேஷுக்கு எல்லை மீறிவிட்டது கோபம். தன்னை ‘கெட் அவுட்’ என்று சொன்ன தில்லைப் பார்த்து “என்னய்யா சொன்னே?” என்றான்.

    “போடா வெளியே, கெட் அவுட்” என்று தலையைக் குனிது, கையை நீட்டி, கண்ணை மூடிக்கொண்டு அதிகார தோரணையில் அவர் விரட்ட, சுரேஷ் விட்டான் ஒரு அறை அவர் கன்னத்தைப் பார்த்து. தில் கிழம் ஆடிப்போய் விட்டது.

    “என்னையா அடிச்சே, அடேய், உன்னை சும்மா விடமாட்டேண்டா, போலீசைக் கூப்பிடறேன்” என்று சொல்லிக்கொண்டே, திவானைவைப் பார்த்து “என்னடி பாத்துண்டு நிக்கறே, போயி அக்கம் பக்கத்துல இருக்கறவாள கூட்டிண்டு வா, சின்னப் பய இவன் என்னை கன்னத்துல ஓங்கி அடிச்சுட்டான், போடி” என்று பதறினார். திவானா கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகம் மாதிரி உருமிக்கொண்டு அங்கும் இங்குமாக உலவினாள். உள்ளே மருமகள் ஓவென்று பெருங்குரல் எழுப்பி அழத்தொடங்கியிருந்தாள்.

    சுரேஷ் தில் மீது பாய்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு வெளியே வந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு விர்ரென்று தன் வீடு நோக்கிப் பயணமானான் தன் அப்பா அம்மாவை அழைத்து வர. அது சின்னத் தெரு, தில் எதிர்பார்த்தது போல ஒருவரும் இவருடைய உதவிக்கு வரவில்லை. எல்லோரும் வாசலில் வந்து நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்தார்கள். அடுத்த வீட்டு மாடி ஃப்ளாட்டில் இருக்கும் பெரியவர் மட்டும் வீட்டு வாசலுக்கு வந்து, சின்ன குழந்தைகள் அவாளோடு சரிசமமா நின்னு சண்டைக்கு நிக்கறேளே. நீங்க இல்லாதபோது உங்காத்து மாமி பேசற பேச்சை அந்தக் குழந்தையாகக் கொண்டு கேட்டுண்டு பொறுமையா இருக்கு. அந்தப் பையன் அடிச்சுட்டான்னு கத்தறேளே, வெட்கமாயில்லை. வீட்டுக்கு வந்த மாட்டுப்பொண்ணை நல்லபடியாக அன்பா நடத்தத் தெரியலை, நீரெல்லாம் ஒரு பெரிய மனுஷன், தூ” என்று காறித் துப்பிவிட்டுப் போய்விட்டார். மற்ற வீட்டுக்காரர்கள் சிரித்துக் கொண்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர்.

    அடிபட்ட தில்லுக்குப் பொறுக்கவில்லை. சின்ன பையன் அடித்தது ஒருபுறம், பக்கத்து வீட்டு பெரிசு வந்து தன்னை திட்டிவிட்டுப் போனது அவருக்கு மேலும் கோபம். தெருக்காரர்களும் ஒருத்தரும் ஆதரவாகப் பேசவில்லை, தில்லும் திவானாவும் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போய்விட்டனர். தெருக்காரர்கள் மீது இருந்த கோபம் முழுவதும் இப்போது அந்த அனாதை மருமகள் பெண்ணின் மீது பாய்ந்தது. சர்க்கஸ் கூண்டுக்குள் இருக்கும் புலி சிங்கத்துக்குப் போடப்படும் மாமிசத்தை அவை எப்படிக் கடித்துக் குதறுமோ அப்படியொரு குதறல் தாழிட்ட வீட்டுக்குள். பலியானது அந்தச் சின்னஞ்சிறு பெண். பாவம்!

    மாலை ஆயிற்று. தில் திவானாவின் மகன் வீட்டுக்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மயான அமைதியில் வீடு இருப்பதைக் கண்டான். தில்லும் திவானாவும் அவர்கள் அறையில் உட்கார்ந்து கொண்டு ‘குசுகுசு’ வென்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவன் மனைவி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவர்கள் அறைக்குச் சென்று பார்த்தான். அங்கு அவன் மனைவி தரையில் அழுது ஓய்ந்து போய் விசும்பிக் கொண்டு படுத்திருந்தாள்.

    “என்னமா ஆச்சு, ஏன் இப்படி தரையிலே படுத்திண்டுருக்கே” என்று அன்போடு தன் மனைவியை எழுப்பினான் அந்தப் பையன். அவள் எழுந்து ஒன்றும் சொல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, “என்னை கொன்னு போட்டுடுங்கோ, இந்த வீட்டிலே என்னால ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது, இல்லைன்னே எங்க வீட்டுக்குப் போறேன்” என்றாள்.

    இதைக் கேட்டுக் கொண்டே அறை வாயிற்படியருகில் நின்று கொண்டிருந்த திவானா, அழிச்சாட்டியக்காரி, என்னமா டிராமா போடறா பாரு என்று சொல்லிக் கொண்டே, தன் மகனைப் பார்த்து, “இதைப் பாருடா, பொண்டாட்டி அழறான்னு உடனே அவளை சமாதானப் படுத்திண்டு இருக்கிறே. இவ தம்பி என்ன செஞ்சான் தெரியுமா? உன் அப்பாவை கை நீட்டி ஓங்கி அறைஞ்சுட்டு ஓடிப்போயிட்டான். அதைக் கேளு முதலில்” என்றாள்.

    “அடிச்சுட்டானா. அவன் இங்கே வந்திருந்தானா? எதுக்கு அப்பாவை அடிச்சான்? அவன் அடிக்கும்படியா இவர் ஏதாவது சொன்னாரா?” என்றான் மகன்.

    “ஆமாண்டா. பொண்டாட்டியையும் மச்சினனையும் விட்டுக் கொடுப்பியா. அப்பாவை அடிச்சுட்டாண்டான்னு சொன்னா, அவர் அதுக்கு என்ன தப்பு பண்ணினார்னு கேட்டுண்டு நிக்கறியே. ஒனக்கு அப்பா மேல கொஞ்சமாவது பாசம் இருக்கா?” என்றாள் திவானா.

    “அதெல்லாம் எனக்குத் தெரியும். என்ன நடந்தது. யார் என்ன பேசினாங்கன்னு விசாரிச்சுட்டுத்தான், தப்பு யார் மேல இருந்தாலும் அவாளைக் கண்டிக்கணும். கண்ணை மூடிண்டு எதையும் என்னால செய்ய முடியாது. என்ன நடந்தது, அதை முதலில் சொல்லு” என்றான் தன் தாயைப் பார்த்து.

    மகனைத் தங்கள் அறைக்கு அழைத்துக் கொண்டு போய், அவன் மனைவியும், அவள் தம்பியும் தங்களைக் கொல்ல வந்தது போலவும், இவர்கள் சத்தம் போட்டு ஊரைக்கூட்டியதும் அவன் பயந்து கொண்டு ஓடிவிட்டதாகவும் கதை அளந்தாள். நடந்த முழு விவரங்களையும் அவள் சொல்லப்போவதில்லை என்று தெரிந்து கொண்ட பையன் உடனே தன் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாமிநாதன் வீட்டுக்கு விரைந்தான். அங்கு போய் தன் மைத்துனனை விசாரித்தால் நடந்த விவரம் தெளிவாகத் தெரியும். மனைவியோ அழுதுகொண்டு பேச மறுக்கிறாள். அவன் மாமனார் வீடு நோக்கிப் போனான். அங்கு சாமிநாதன் தன் மகன், மனைவியோடு இவர்கள் வீட்டுக்குக் கிளம்பி வந்து கொண்டிருந்தார். மாப்பிள்ளையைப் பார்த்ததும் வீட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போய் நடந்த விவரங்களை ஒன்று விடாமல் சொன்னார்கள்.

    “என்னதான் அவங்க மரியாதைக் குறைவா பேசியிருந்தாலும், நீ அவரை அடித்திருக்கக்கூடாது. அவங்க பேசினது, நடந்தது எல்லாம் தப்புத்தான். அதே போல நீ அவரை அடிச்சதும் தப்புத்தான், சரி என்ன செய்யணுமோ அதைச் செய்யறேன். நீங்க இப்போ அங்கே வந்து பேசினா சண்டை இன்னும் பெரிசாகும். அதனால நான் மட்டும் போறேன்” என்றார் மாப்பிள்ளை.

    “இல்லை மாப்பிள்ளை, நானும் வரேன். என் பிள்ளை செஞ்ச தப்புக்கு நான் அவர் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். என்ன இருந்தாலும் சின்ன பையன், இவன் அவரை கைநீட்டி அடித்திருக்கக்கூடாது, மகா தப்பு” என்றான் சாமிநாதன்.

    “வேண்டாம். சொன்னா கேளுங்க. உங்க பெண்ணுக்கு நான் பாதுகாப்புக் கொடுத்துப் பார்த்துக்கறேன். தயவு செஞ்சு நீங்க இப்போ வந்து புதுசா எந்த பிரச்சினையும் ஏற்படக் காரணமா இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் போய்விட்டார். சாமிநாதன், அவன் மனைவி, சுரேஷ் ஆகியோருக்கு வருத்தம், பசியில்லை, தூக்கம் இல்லை, கவலை அவர்கள் மனதைப் பாறாங்கல் போல அழுத்திக் கொண்டிருந்தது.

    அங்கே வீடு திரும்பிய மாப்பிள்ளை நேரே திவானாவிடம் போய், “அவன் அப்பாவை அடிச்சது தப்புத்தான். அவன் அதுக்காக அவர்கிட்டே மன்னிப்பு கேக்கறேங்கறான். அவா அப்பாவும் மன்னிப்புக் கேட்கறேங்கறார். ஆனா, இவ்வளவுக்கும் நீ பேசினதுதான் காரணம்னு தெரியறது. உனக்கு அவள் மருமகளா எதிரியா. ஏன் எப்போ பார்த்தாலும் அவளைப் போட்டு ரணப்புடுங்கல் புடுங்கறே” என்றார்.

    “ஓகோ, மாமனார் மாமியார் சொல்லிக் கொடுத்து இங்க வந்து என் மேலயே குத்தம் சொல்லறியா. போ, போ உன் மாமனார் வீட்டுக்கே உன் பொண்டாட்டியையும் அழைச்சுண்டு போ. அப்பா அடிபட்டுட்டார்னு கவலை இல்லாம, மச்சினனுக்கும், பொண்டாட்டிக்கும் பரிஞ்சுண்டு பேச வந்துட்டியா” என்று கத்திக் கொண்டிருக்கும்போதே உள்ளேயிருந்து தில் திடீரென்று தோன்றி, தன் மகனிடம் ஆத்திரத்தோடு, “பொண்டாட்டிக்குப் பரிஞ்சு பேசிண்டு இங்கே இருக்க வேண்டாம். போகச்சொல்லு அவனை வெளில. இந்த வீட்டிலே அவாளுக்கு இடம் இல்லை. இது என் வீடு. என் சம்பாத்தியத்துல கட்டினது. அவன் மச்சினனை மட்டும் ‘கெட் அவுட்’னு சொல்லல. இவனையும்தான் சொல்றேன். போகச்சொல்லு, ‘கெட் அவுட்” என்று கத்தினார்.

    மாப்பிள்ளை ஒரு நிமிஷம் மெளனமாக நின்றார். ஏதோ முடிவுக்கு வந்தது போல சரியென்று தலையாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அங்கு தன் மனைவியுடன் ஏதோ ஆலோசித்துவிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கையில் பெட்டி, பைகளோடு இருவரும் வெளியே வந்தனர். தில்லும் திவானாவும் தங்கள் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    மாப்பிள்ளை மட்டும் பெட்டியோடு ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் வாயில்புறம் போனார். சாமிநாதனின் மகள் மட்டும் தில், திவானா இருக்கும் அறைக்குப் போய் மாமனார் மாமியாருக்கு ஒரு நமஸ்காரத்தைச் செய்துவிட்டு எழுந்து, அவர் எங்கேயோ அழைச்சிண்டு போராராம். அங்கேதான் நாங்க இருக்கப் போறோம். நான் வரேன்” என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு எதிர்பாராமல் விறுவிறுவென்று வந்து மாப்பிள்ளையுடன் அவர் ஸ்கூட்டரில் உட்கார்ந்துகொண்டு போய்விட்டாள்.

    இருவரும் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்கள் கோடம்பாக்கம் அருகில் ஒரு பலமாடிக் கட்டடத்தில் ஒரு ஃபிளாட்டில் குடியிருந்தனர். அவரிடம் சென்று நடந்ததெல்லாம் சொல்லி தங்களுக்கு ஒரு வீடு தேவை என்று கேட்டனர். அதற்கு அவர் ‘நல்ல காலம் இப்போ வந்தே. நம்ம எதிர் பிளாட் இப்போ காலியாத்தான் இருக்கு. அதன் ஓனர் எங்கிட்டே சொல்லி, நல்ல டெனண்ட் வந்தா குடிவைக்கச் சொல்லியிருக்கார். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கலாம். நீங்க நன்னா செட்டில் ஆற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் எங்காத்துல கெஸ்ட்” என்றார் அவர்.

    மாப்பிள்ளை அவரிடம் சொன்னார். “ரொம்ப நன்றி. உன்னை நம்பித்தான் வெளியே போன்னு அவர் சொன்னதும் பெட்டியோடு வந்துட்டேன். எனக்கு நெற்குன்றத்துல ஒரு இடம் இருக்கு. நாளைக்கே போயி அந்த இடத்தைப் பார்த்துட்டு பாங்க் லோன் போட்டு வீட்டை கட்டிடறேன். ஒரு ஆறுமாசத்துல கட்டிட முடியாதா?” என்றார்.

    “நல்ல கண்ட்டிராக்டர்னா ஆறுமாசத்துல முடிச்சுக் கொடுத்துடுவார். தாராளமா செஞ்சுடலாம். நீ கவலைப்படாதே. உனக்கு என்ன உதவின்னாலும் நான் செய்யறேன். என்னால முடியாவிட்டாலும் எனக்கு வேண்டியவங்ககிட்டே சொல்லி ஏற்பாடு செய்யறேன். நீ கவலைப்படாதே. நீ உன் காலில் நிற்கறதுன்னு முடிவு பண்ணின உன் துணிச்சலைப் பாராட்டறேன். உன் மனைவி சின்னப் பொண்ணூ. அதுக்குள்ள அவளுக்கு இத்தனை துன்பம் கூடாதுடா. அவளைக் கண்கலங்காமப் பாத்துக்கறது உன் கடமை. நான் இருக்கேன் உனக்கு வீடு கட்டறதுக்கு என்ன வேணுமோ எல்லாம் செய்யறேன் ” என்றார் நண்பர்.

    அதன்பின் நெற்குன்றத்தில் தனிவீடு கட்டிக்கொண்டு இவர்கள் குடிபோனபோது மரியாதைக்காக மாப்பிள்ளை அவருடைய பெற்றோர்கள் தில், திவானாவையும் அழைத்தனர். அவர்களும் ஒன்றுமே நடக்காதது போல வந்து வாயில்படிக்கு சந்தனம் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, அருகிலிருந்த ஒருவரிடமிருந்து பசுமாடு கன்றை ஓட்டிக்கொண்டு வந்து சாமிநாதனிடமும், அவன் மனைவியிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு கிரஹப்பிரவேசம் நடந்தது. சாமிநாதனின் மகன் மட்டும் இவர்கள் பக்கம் பார்க்காமல் நின்றிருந்து விட்டுப் போய்விட்டான். அதன் பின் தில் திவானா மாம்பலம் திரும்பினர். சாமிநாதனின் மகளும் மருமகனும் நெற்குன்றத்தில் தனியாகக் குடித்தனம் செய்தனர்.

    அப்பாடா விட்டது தொல்லை என்று இருக்கமுடியவில்லை. தில் திவானாவின் விஷமம் தொடர்ந்து கொண்டிருந்தது.

    (​தொடரும்)

    Share
  • அபிராமியம்மன் பதிகம்

    மேகலா இராமமூர்த்தி

     

    Abirami_Ma

    கல்வி நலந்தரு கன்னிகை நீயே!

    செல்வ வளந்தரு செல்வியும் நீயே!

    வல்லியே நிதமுனை வணங்குகின் றேனே

    நல்லவை எண்ணிடும் மனமருள் வாயே!

     

    அதிசயம் நிகழ்த்திடும் அன்னையே உன்னை

    மதியினில் வைத்தே மனமகிழ்ந் திடுவேன்

    விதியினை மாற்றிடும் விமலையே என்றும்

    கதியென்று நினைத்தேன் நின்பதம் தனையே!

     

    துணையற்ற மனிதர்க்குத் துணையாகும் தாயே!

    இணையற்ற உன்னருட் பார்வையி னாலே

    தீராத துயர்களைத் தீர்த்திடு வாயே

    வாராது வந்திட்ட மனோன்மணி நீயே!

     

    விடமுண்ட கண்டனின் இடப்பாகத் திருந்தே

    இடர்களை கின்றாய் இப்புவி சிறக்க!

    தொடரும் இருவினை எனுமிருள் நீக்கிச்

    சுடரே நிலவே ஒளிதரு வாயே!

     

    காலனும் உனைக்கண்டு அஞ்சிடு வானே!

    வேல்விழி கண்டால் விரைந்தோடு வானே!

    தோல்விகண் டறியாத் தூயவள் உனையே

    பால்போல் சொற்கொண்டு போற்றிடு வேனே!

     

    நிலையில்லாப் பொருட்செல்வப் பற்றினை யறுத்து

    விலையில்லா அருட்செல்வம் அளித்திடு தாயே!

    மலைமகள் உன்னடி பணிகின்ற பக்தர்

    கலையாத கல்வியைப் பெற்றிடு வாரே!

     

    அழகரசி உந்தன் எழில்தனைப் பருக

    விழியிரண்டு போத வில்லையே அம்மா!

    தொழுதிடு வேனுனைத் தவறாது நித்தம்

    குழவியென் பிழைகளைப் பொறுத்தருள் வாயே!

     

    மணியின் ஒளியாய்ச் சுடர்விடும் அன்னாய்!

    பிணிகள் நீக்கிடும் மாமருந் தனையாய்!

    பணிந்தே போற்றிடும் பாமர னுக்கும்

    துணிந்தே அருளும் பரமனின் துணைவி!

     

    பந்த பாசங்கள் எனும்தளை நீக்கி

    வந்த வினைகள் ஓடிடச் செய்வாய்!

    கந்த வேளினை இப்புவி தனக்கே

    சொந்த மாக்கிய சுந்தர வல்லி!

     

    அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்திட

    அகமது தூய்மையாய் என்றும் திகழ்ந்திட

    மறவாது பற்றினேன் நின்னடி தனையே

    பிறவாமை நல்கியே பேரின்பம் காட்டு!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…78

    சக்தி சக்திதாசன்

     

     அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.

    இந்த வாழ்க்கை எமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் எம்மைச் சூந்துள்ள அகப்புறச் சூழல்கள் வேறுபட்டவை..

    சில சமயங்களில் இந்த வாழ்க்கை எமக்கு இனிப்பாகவும் சில சமயங்களில் கசப்பாகவும் இருக்கிறது.

    பல சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் எமக்கு ஒன்று புரிவதில்லை. அதாவது இது ஒன்ரும் நாம் வேண்டிப் பெறப்பட்ட வாழ்க்கை அல்ல எம்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கை.

    இந்தப் பெற்றோர்களுக்கு, இத்தனையாவது சேயாக வேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டல்ல எமது வாழ்க்கை எமக்குக் கிடைக்கிறது.

    ஆனால் கிடைத்த இவ்வாழ்க்கையில் எம்மில் எத்தனைபேர் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது கிலவும் சிக்கலான கேள்வி.

    மகிழ்ச்சி என்பதன் அர்த்தத்தையே நாம் ஒவ்வொருவரும் வித்தியாசமாக விளங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுவே உண்மை.

    ஆனால் இவ்வித்தியாசங்களினால் தான் இவ்வாழ்க்கையே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுவே உண்மை.

    எமக்குக் கிடைக்காதவற்றைத் தேடி ஓடிப்போவது தான் இவ்வாழ்க்கையில் பலரது வாழ்வில் சகஜமாக நிகழ்கிறது.

    அது தவரென்றும் கூறமுடியாது. ஏனெனில் இத்தேடலின் விளைவுகளாய்த்தான் இலட்சியங்கள் பரிமணிக்கின்றன..

    ஆனால் இத்தெடல்கள் நியாயம் எனும் வரம்பினைக் கடக்கும் போதுதான் பலரது வாழ்வில் நிம்மதி பறி போகிறது.

    என்னடா இது ! சக்தி என்ன ஒரே ததுவ மார்க்கத்தில் இம்மடலை வரைந்து கொண்டு போகிறானே என்றுறு எண்ணி அங்கலாய்க்காதீர்கள்.

    விடயத்திற்கு வருகிறேன்.

    உலகில் பலர் விபத்துக்களின் நிமித்தம் தமது அங்க அவயங்களைப் பறிகொடுப்பது உண்டு. ஆனால் சிலரோ பிறக்கும் போதே அங்கவீனர்களாக பிறக்கும் துர்பாக்கியத்தை அடைகிறார்கள்.

    இதுகூட அவர்கள் கேட்டுப் பெறுவது அவர்களின் மீது திணிக்கப்படுவது ஒன்றே. விபத்தின் மூலம் அங்கத்தைப் பரி கொடுப்பவர்களின் துரதிர்ஷ்டத்தில் வேண்டுமானால் சில சமயங்களி அவர்களின் பங்கு ஒரு பகுதியாக இருக்கலாம்.

    ஆனால் பிறப்பின் போதே அங்கத்தைப் பறிகொடுத்துப் பிறப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது.

    அப்படியாக முழங்காலுக்கு கீழாக இரு கால்களையும் இழந்த நிலையில் பிறந்தவர் தான் ரிச்சார்ட் வைட்கெட் (Richard Whitehead) .

    இவருக்கிருந்த அங்கக் குறைபாடுகளைப் பற்றி இவரது பெற்றோர் மனமுடைந்து மூலையில் இருந்து விடவில்லை.

    சிறுவயதிலேயே முழங்காலுக்குக் கீழ் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட இவர் தனது வாழ்வைஇல் வெற்றியடைய ஒரேவழி விளையாட்டுத்துறை என்று இவரது பெற்றோர் இவருக்கு விளையாட்டுக்கள் மீது இருந்த ஆர்வத்தினால் தீர்மானித்தனர்,

    தாய்தந்தையர் இவரை விளையாட்டுக் கழகங்களுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஓட்டப் போட்டியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்.

    பாடசாலைப் போட்டிகளில் பல பரிசில்கள் பெற்றார்.

    இவ்வரது முதலாவது பணி 27 வயதில் அவர் வாழ்ந்த நகரத்தின் நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுவிக்கும் பயிற்சியாளரானார்.

    இலண்டனில் நடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறளாளிக்களுக்கான பந்தயங்களில் அதீத வெற்றியீட்டினார்.

    அவருக்கு இப்போ இங்கிலாந்து மகாராணியார் வழங்கும் விருதுகளில் ஒன்றான “மெம்மர் ஒவ் பிரிட்டிஷ் எம்பயர்”; எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

    38 வயதான இவர் ஒரு பெண்குழந்தைக்குத் தந்தையாவார். தன்னுடைய குழந்தையின் நல்வாழ்க்கையே தனக்கு அதீத முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்.

    அனைவரையும் போல என்னாலும் அனைத்தையும் புரிய முடியும் ஆனால் என்ன கொஞ்ச நேரம் அதிகமாகும் என்கிறார் மிகவும் சாதாரணமாக.

    ஒரு சாதாரண தலைவலியோ அன்றிக் காய்ச்சலோ வந்து விட்டால் ஓடிப்போய் படுக்கையில் விழுந்து விடுகிறோம். பிறவியிலே தனக்கு இயற்கை கொடுத்த குறைபாட்டை ஒரு குறைபாடாகவே கருதாமல் வாழ்க்கையில் போராடி வெற்றியடைந்த இவரின் வாழ்வு . . . . . .

    எமக்கெல்லாம் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கவில்லையா?

    கிளம்புங்கள் சாதிக்க இன்னும் பலவுண்டு

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share