தனுசு

நெரிசல் மிகுந்த சாலையில்
உன்னோடு
ஒரு
நடைபயணம் போகிறேன்

 

அங்கே பார்
அத்தனை பேரின் கண்களும்
உன் மீதும் என் மீதும்
என் ஆண்மைக்கே கம்பீரம் சேர்த்தது
நம் ஜோடிப்பொருத்தம்

 

பட்டால் நெய்த வனப்பும்
சுட்டு இழுக்கும் உன் இளைப்பும்
சொல்லாமல் சொல்கிறது
நீ ஒரு
தொட்டால் மலரும் பூவின் ஜாதியென்று

 

உன்னை முதன் முதலில்
ஒரு திருமணத்தில் பார்த்தேன்
பின்
என் நண்பனுக்குப் பெண் தேட
இணையம் வந்தபோது
துணையாக உன்னையும் கண்டேன்
பின்
வணிகவளாகத்தில் பார்த்தேன்

 

அன்றிலிருந்து
கனவும்
கடமையும் நீயானாய்
தினமும்
தரிசனம் நீயானாய்

 

ஆனால்
நான் மட்டும்
நானாயில்லை
உன் நினைவே எனை ஆண்டதன்றி வேறில்லை

 

உனக்காக நின்றேன்
பெற்றோரிடம் போராட்ட வீரனாக
சகோதரியிடம் சிபாரிசுக்காக

 

முயற்சியும் பலன் தந்தது
என் நம்பிக்கையும் வென்றது
இன்று
நீ
என்னிடம்
இனி
நீ
எனக்கே
எனக்கு மட்டும்

 

அன்று
நீயே அறியாமல்
உன்னை பார்க்க வந்தேன் அடிக்கடி
இன்று
எனக்கு நீ சொந்தமானதால்
நான் உயர்ந்தேன்
வாழ்க்கையில் இன்னும் ஒரு படி

 

அன்று
ஆதாமையும் ஏவாளையும் சேர்க்க
ஒரு ஆப்பிளை படைத்தான் இறைவன்
இன்று
எனக்காக
ஆப்பிளாகவே
படைத்தான் உன்னை

 

இதோ
என்னை யாரோ அழைக்கிறார்
அவருக்கு
உன் மூலமே பதில் சொல்கிறேன்
ஹலோ…
ஹலோ…

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உன்னாலே……

 1. //ஆதாமையும் ஏவாளையும் சேர்க்க
  ஒரு ஆப்பிளை படைத்தான் இறைவன்
  இன்று
  எனக்காக
  ஆப்பிளாகவே
  படைத்தான் உன்னை//

  படிக்கும் பொழுது முறுவலை வரவைத்த வரிகள். நன்று.

  //தொட்டால் மலரும் பூவின் ஜாதியென்று// என்று வர்ணித்திருப்பது அருமை.
  வாழ்த்துக்கள் நண்பரே!

Leave a Reply

Your email address will not be published.