சச்சிதானந்தம்
ஆலமரமும் அழகுக் குறத்தியும்
சிறுகுறும் பறவைகள் சிலநூறு வாழ்ந்திடும்,
சிற்றிலை ஆல்பெற்ற விழுதினைப் பற்றியே,
நற்குணக் குறத்தியும் உடலெற்றி ஆடிடும்,
அற்புதக் காட்சியைப் பறவைகள் கண்டன! 106
பறவைகளின் தவம்
பல்வகைப் பறவைகள் காற்றினில் பண்பாடும்,
நன்மலர்ச் சோலையில் குறத்தியைக் கண்டதும்,
இன்குரல் பறவைகள் தம்குரல் மறந்ததால்,
கண்ணிமைப் பொழுதிற்கு மௌனமாய் நின்றன! 107
புள்ளினங்களும் புள்ளி மானினங்களும் நூறுவகைப்
பூவினங்களும் பூவில் தேனெடுக்கும் பொன்
வண்டினங்களும் குறத்தியைக் கண்டினங் கண்டு
தம்மினம் சேரத் தவம்செய் தனவே! 108
அணில்களும் அன்புக் குறத்தியும்
சருகைத் தவிர்த்துக்காலைத் தரையில் பதித்து,
இருகை எடுத்து இடையில் பதித்து,
வருகை புரியும் குறத்தியை அறிந்து,
சிறுகை குவித்து அணில்கள் ஆடும்! 109
அணில்களுக் கெல்லாம் அன்னை போலக்,
கனிகள் கொட்டைகள் உண்ணக் கொடுத்து,
மடியில் வைத்து தடவிக் கொடுத்து,
விடியல் போல வண்ணம் கொண்டாள்! 110
களிறுகளும் மாஞ்சோலையும்
மாவின் அடிமரத்தை உரித்துத் தின்று
மேலே உயர்ந்திருக்கும் கிளைகள் உலுக்க,
துதிக்கை தனை உயர்த்தி யானை இழுக்க,
கனிகளும் உதிர்ந்தன, கிளைகளும் முறிந்தன! 111
கிளையைச் சுற்றிய துதிக்கை கண்டு
கருநாகம் என்று எண்ணிப் பதறி
மரத்தில் வாழும் குயில்கள் இரண்டு
வானில் உயரக் கூவிப் பறந்தன ! 112
யானை சென்ற பின்னர் அந்த
சோலைப் பக்கம் வந்தாள் குறத்தி
தன்மனக் குறிப்பை உணர்ந்து மரங்கள்,
கனிகள் உதிர்த்தன என்றே நினைத்தாள்! 113
மாதுளை கொறித்துச் சலித்த குறத்தி,
மாம்பழம் சுவைக்கும் ஆசை துரத்தி,
சோலை மஞ்சள் மாங்கனி கடித்து,
செம்மஞ்சள் வானம்போல இதழ்கள் கொண்டாள்! 114
பூங்குரல் குறத்தி மாங்கனி எடுத்துத்
தின்றது போக மீதிப் பழங்களைத்
தன்னுடன் எடுத்துச் சென்றாள் கூடையில், முன்பே
எடுத்த கனிகளினோடும் மலர்களி னோடும்! 115
நெல்லிக்கனி சேகரித்தல்
செல்லும் வழியில் நெல்லிக்கனிமரம், கண்டே
உள்ளம் துள்ளிக் குதித்து, மாங்கனி எடுத்து
கல்லெனத் தொடுத்து நெல்லியை அடித்து,
சிதறிய கனிகளை எடுத்துக் கடித்தாள்! 116
செவ்விதழும் சிற்றிடையும் கொண்டிருக்கும் குறத்தி,
அவ்விதழால் பற்றியொரு நெல்லிக்கனி கடிக்கும்,
நவ்வியத்தைக் காண்பதற்குக் காத்திருக்கும் குயில்கள்,
பவ்வியமாய் அவளருகில் வந்தமர்ந்து கூவும்! 117

Leave a Reply