Blog

  • அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்

    இசைக்கவி ரமணன்

     

    எந்த உறவு சொந்தமுடன்
    எனது குறைகளைச் சுட்டிக் காட்டுமோ
    எந்த உறவு சுட்டிக் காட்டினால்
    இடைமறிக்காமல் ஏற்றுக்கொள்ளுமோ
    அந்த உறவே அமையவேண்டும்
    அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்
    எந்த உறவும் அந்த உறவாய்
    இயற்றி விட்டால் பாடுகின்றேன்!

    அவரவர் போக்கில் அவரவர் பயணம்
    அவரவர் மனதில் அவரவர் சலனம்
    அழுகையும் சிரிப்பும் அவரவர் அனுபவம்
    அறியாமைகளில் ஆயிரம் தனித்துவம்!
    எவரெவர் எப்படி இருந்தால் என்ன?
    எதையும் பேச நமக்கே துரிமை?
    இருக்கும் உரிமைகள் புகழவும் போற்றவும்
    இறங்கி மேலும் இறங்கிப் பணியவும்
    ஏதும் அறியான் போலே இருப்பதும்
    இங்கிதமாக விலகவும் தானே??!!

    நேசம் இருப்பதால் நெஞ்சு பதைக்கலாம்
    நெஞ்சு பதைப்பதை நேரில் சொன்னால்
    நெருடல் முளைக்கலாம்; உரிமை மீறலாய்க்
    கருதப் படலாம்; கலகம் நேரலாம்
    வாசம் வண்ணம் வழங்குதற்கப்பால்
    வாழ்ந்து உதிரும் மலர்க்கென்ன உரிமை?!
    வாழ்த்தி வணங்கி நகர்வதல்லவா
    வழிப்போக்கர்க்கு வாய்த்த கடமை!

    தவறும் சரியும் முறையாய்த் தெரிந்தால்
    தவமும் எதற்கு? தவிப்புகள் ஏது?
    அவர்கள் அறியார்; ஆயினும் அன்பர்;
    அறிந்ததாய் எண்ணி அயரும் மழலையர்!

    ரசனைகளின் ராட்சதத்தனங்களும்
    நாகரீகத்தின் மோக முகங்களும்
    கல்வியிருந்தும் காதலிருந்தும்
    கண்ணில் ஏனோ படுவதில்லையே!
    கசடு தெரியுமா கண்ணில் இருந்தால்?
    கண்டவர் சொன்னால் மனதுதான் ஏற்குமா?
    கடவுளே! என்குறை அன்றி வேறெதும், என்
    கண்ணில் படாமல் காத்தருள்கவே!

    நான்
    நேசிக்கின்ற இதயங்களுக்காய், என்னை
    நேசிக்கின்ற நெஞ்சங்களுக்காய், உன்னை
    யாசிக்கின்றேன் ஒருவரம் அருள்வாய்!
    ஊசிமுனை அளவு கூட, அவர்கள்
    உள்ளத்தினிலே குறையின்றிக் களைக!
    உலகில் அவர்கள் நலமாய் வாழ்க!
    ஒருபிழையும் அவர் செய்யாதிருக்க!
    ஒருதீங்கும் அவரை அண்டாதிருக்க!
    வலமும் இடமும் எதிரும் பின்னும்
    மேலும் கீழும் உள்ளும் புறமும்
    நீயே இருந்தவரைக் காவல் செய்க
    நலமே அந்த நல்லவர்க்கருள்கவே!

    16.06.2014 / திங்கள் / 22.43

    Share
  • திருமால் திருப்புகழ் (116)

    கிரேசி மோகன்

    Bhagavatha:  Amritha and the Mohini avatara  - Keshav
    Bhagavatha: Amritha and the Mohini avatara – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-blogger-image-1088852207

    பாரேழை உண்டுமிழ்ந்து, பள்ளிகொண்ட பாலகனே,
    பாரேழை எந்தன் பரிதவிப்பை, -பேரேழாய்,
    மாமன்கை எட்டாது, ஜாமம்போய் எட்டானோய்,
    காமமப்பேய் கொல்லும்முன் கொள்….(210)

    மூப்பும் பிணியும், முகமன் உரைத்திடும்,
    தோற்பும் பகையும் திரண்டெழும், -காப்பாய்,
    மருதம் முறித்து, மதயானை கொன்ற,
    வரதனை நெஞ்சே வணங்கு….(211)

    பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
    என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
    பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
    தொழுது கிடப்பதே தொண்டு….(212)
    ஆழ்வாரி தன்னில், அனந்த சயனத்தில்,
    ஆழ்வாரே ஆண்டாளின் அப்பாவாம், -ஆழ்வாரின்,
    பாடல் அழகால், பெருமை அடைந்தவனே,
    கூடல் அழகனே காப்பு….(213)

    ஆனைவா வென்றைக்க, ஆழியுடன் வந்தானை,
    ஆனைவாய் உண்டுமிழ்ந்த ஆழியானை, -ஆணைவாய்ச்,
    சங்கூதி பாரதம், செய்தானை பள்ளிகொள்ளும்,
    பொங்கோத ஆழியானைப் போற்று….(214)

    தீபாவளி EVE பாமா துணை
    ————————————————-
    நமக்குள் இருக்கும், நரகா சுரனார்,
    இமைக்கும் பொழுதில் இறக்க, -சமர்த்தன்,
    யதுகுலக் கண்ணன், இணைசகி பாமா,
    உதவிக்கு உண்டு உனக்கு…(215)

    ————————————————————————————————————–

    Share
  • பெரிய ஆசைகள்

    இசைக்கவி ரமணன்

     

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    மண்ணில் விழுந்த
    மழைத்துளி என்னும் ஆச்சரியக்குறியை
    உள்ளங்கையில் பம்பரம்போல் ஏந்தி
    உற்றுப் பார்க்கவேண்டும்

    ஒய்யாரி ஆடும் மழையின் இழைகளில்
    ஒருதுளியும் நனையாமல்
    கண்ணா மூச்சு ஆடவேண்டும்
    காற்றோடு

    நிலவில் வெண்ணெய் எடுத்து
    உலவும் முகிலில் ஒன்றைத் திரியாக்கி, என்
    கவிதையைச் சுடராக்கி, அவள்
    கண்ணில் படும்படி வைத்துவிட்டு, அவள்
    கண்ணில் படாமல், அவள்
    கண்களைப் பார்க்கவேண்டும்

    கால்பட்ட இடமெல்லாம்
    கார்மழை பொழியவேண்டும்
    கைபட்ட இடமெல்லாம்
    கலயம் பொங்கவேண்டும்

    காதலே கவிதையாய்
    கவிதையே கண்களாய்
    கண்களே நெஞ்சமாய்
    நெஞ்சோடு எல்லோரையும்
    நேசத்தால் அணைக்கவேண்டும்

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    கர்பத்திலிருந்தே மரணம்
    கழுத்தைக் கவ்விப் பிடித்தபடிதான் இருக்கிறது
    கால்வைத்த இடமெல்லாம் பொய்மை
    கப்பித்தான் கிடக்கிறது

    எனினும்
    அழகான இந்த ஆசைகள்தான்
    அற்ப உலகில்
    அடுத்த அடியை எடுத்துவைக்க
    ஆணையிடுகின்றன

    வாழத்தானா பிறந்தோம்? மற்றவரை
    வாழ்த்துவதே வாழ்க்கைக்கு
    வலுவான காரணம். என்
    வாசலெங்கும் சூறையிலும்
    வரவேற்கும் தோரணம்

    நிறைவேறிவிடுகின்ற ஆசைகளில்
    நெஞ்சுக்கு லயிப்பில்லை
    மின்னல்களை வகைபிரித்து
    மீட்டும் வரை, என்பாடலை
    இசைக்கப் போவதேயில்லை
    எதற்கும் பொறுத்திருங்களேன்!
    மீண்டும் நான் வருவேன்
    மிரளாத வானத்தில்
    மின்னலுக்குப் பஞ்சமேது

    16.06.2014 / திங்கள் / 19,53

    Share
  • திருமால் திருப்புகழ் (115)

    கிரேசி மோகன்

    Bhagavatha --Ulukala bandhanam - Keshav
    Bhagavatha –Ulukala bandhanam – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–
    மீண்டும் உரலிழுத்து ,மாமருதம் சாய்த்தரவத்,
    தாண்டவம் ஆடித் தயிருண்டு, -வேண்டிய,
    ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
    யாதவா வந்திங்(கு) எழுது….(204)

    பாற்கடலை இன்றுவிலை, பேரமாய்ப் பேசினால்,
    வேர்கடலை கூட வராதுகேள், -யார்கடவுள்,
    உண்டுமிழ்ந்த நீயா ? உமிழ்ந்ததை உண்ணமீண்டும்
    பண்டமாற்று வோனா பகர்….(205)

    பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
    வள்ளலென பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
    நேர்நிகர் ஆவார் நமக்கு….(206)

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
    ———————————————————–

    மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி,
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம், -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு….(207)

    பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும், -மாலே,
    பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
    அழகிய சிங்கா அருள்….(208)

    ஆராரோ என்றாய்ச்சி, சீராட்டித் தன்முலைப்பால்,
    சோறாலே எவ்வாறு சொக்கவைத்தாள் ! -பாரேழை,
    உண்டு பசியாறி, ஊழியில் ஆலிலையில்,
    பண்டு படுத்தோய் பகர்….(209)
    ————————————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(31)

    -செண்பக ஜெகதீசன்

    இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
    யொழுக்க முடையார்வாய்ச் சொல்.
    (திருக்குறள்: கேள்வி – 415)

    புதுக் கவிதையில்…

    வழுக்கி விழாதிருக்க                                           old-man-with-walking-stick
    வகையாய் உதவிடும்
    ஊன்றுகோல்…

    வாழ்வில் அதுபோல்,
    தடுக்கி விழாமல்
    தாங்கிப் பிடித்திடும்,

    நீ
    கேட்டு நடக்கும்
    ஒழுக்கமுடையோர் சொல்!

    குறும்பாவில்…

    ஊன்றுகோல் விழவிடாது தாங்கிடும்
    உடலை,
    ஒழுக்கமுடையவர் சொல் – வாழ்வை!

    மரபுக் கவிதையில்…

    உடலது தளர்ந்த போதினிலே
         வழுக்கிக் கீழே விழுந்திடாமல்
    நடந்து திடமாய்ச் செல்லுதற்கே
         நல்ல துணைதான் ஊன்றுகோலே,
    உடலைத் தாங்கிடும் துணையதுபோல்
         வாழ்வில் வழுக்கி வீழ்ந்திடாமல்
    இடரது அகற்றிடும் இன்துணையாய்
         இயக்கிடும் ஒழுக்க முடையோர்சொலே!

    லிமரைக்கூ…

    வழுக்கி வீழ்ந்திடாதிருக்க ஊன்றுகோலுடன் செல்!
    அதுபோல் வாழ்வில்
    வழுக்கிடாதிருக்கக் கேட்டுநட ஒழுக்கமுடையோர் சொல்!

    கிராமிய பாணியில்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி,
    தடுக்கி வுளாமக் காத்திடுமே
    தக்க தொணயா வந்துடுமே!

    மனுச வாழ்க்கக் கதயிதுதான்
    ஒழுங்கானவன் பேச்சக் கேட்டா
    ஒழுங்காப் போவும் வாழ்க்கயுமே,
    வழுக்கிவுளாமக் காப்பாத்தும்
    வாழ்க்கத்தொணயாக் கூடவரும்,
    நல்லசொல்லக் கேட்டுநட
    நன்மயெல்லாஞ் சேந்துவரும்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி!

     

    Share
  • பக்குவத்தை அடையாரா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    வானத்து வெண்நிலவு
    வசைபாடி நிற்பதில்லை                                             moon and clouds for jayarama sarma kavithai
    வண்ணமிகு தாரகைகள்
    வம்புதும்பு செய்வதில்லை
    நீலநிற முகிற்கூட்டம்
    நிந்தனையும் செய்வதில்லை
    நீள்புவியில் வாழ்பவர்கள்
    நினைத்துமிதைப் பார்ப்பதுண்டா?

    கண்சிமிட்டும் தாரகைகள்
    கண்டனமும் செய்வதில்லை
    கருமேக முகிற்கூட்டம்
    கருத்தேதும் சொல்வதுண்டா?
    சுட்டெரிக்கும் சூரியனும்
    சுடுசொற்கள் சொல்வதில்லை
    சுற்றிநிற்கும் மனிதரிதைக்
    கற்றுக்கொள்ள வேண்டாமா!

    சோலைமயில் எந்நாளும்
    தோகைவிரித் தாடிவிடும்
    காலைமாலை என்றின்றி
    கருங்குயிலும் பாடிவிடும்
    காலைவேளை வருந்தென்றல்
    கன்னமதை வருடிவிடும்
    ஞாலமீது உள்ளவர்கள்
    நல்லதையேன் மறக்கின்றார்?

    வளர்ந்து மரம்நிழல்கொடுக்கும்
    வகைவகையாய்க் கனிகொடுக்கும்
    பரந்தவெளி வளர்புல்லும்
    பசுவினத்தின் பசிதீர்க்கும்
    பயன்கருதா உதவிநிற்கும்
    பாங்கினையும் பார்த்தபின்னர்
    பாரிலுள்ள மனிதரெல்லாம்
    பக்குவத்தை அடையாரா!

    Share
  • இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்

    முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி.

    கோபகுமார் 1புதுவை மாநில அரசு ‘அறுமுகனம்’ என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் – இராசம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.

    சு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராஜம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராஜம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்திறன் மிகுதியாக இருந்தது.

    சு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர்  கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.

    சு. கோபகுமார்  அவர்கள் கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    சு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.

    இதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.

    கோபகுமார் 2

    இந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு நா. அரங்கசாமி முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சு. கோபகுமார்  அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

    இவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.

    ஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.

    சு. கோபகுமார்  அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.

    மேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர். கீர்த்தனம்,  தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு,  ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய ஜதியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.

    இவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மின்னணு இசைக்கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார்  அவர்கள் விரும்புகின்றார்.

    புள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

    தமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.

    பொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.

    முகவரி:
    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்
    எண் 98, ஆறாம் குறுக்கு,
    தந்தை பெரியார் நகர்,
    புதுச்சேரி- 605 005, இந்தியா

    செல்பேசி: 0091 94433 76671

     

    படம் உதவி:  http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_16.html
    நன்றி: http://muelangovan.blogspot.in/

    Share
  • மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன், விமலதாரணி

    கேள்வி :1

                        நான் 17 வயது மாணவி.  கிராமத்துப் பள்ளியில் பயின்றவள் தற்போது நகரத்தில் பயில்வதால் எனக்கு பாடம் மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாததை கேட்டால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். என்னை பொருட்படுத்த மாட்டேங்கிறார்கள். ஏனெனில் நான் மட்டும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவி. டியுசன் வைக்கவும் வீட்டில் வசதி இல்லை. நான் தனித்து விடப்பட்டது போல் உணருகிறேன். என்னுடன் சாப்பிடுவதற்குக் கூட தோழிகள் இல்லை கல்லூரியில் இப்படி இருப்பதால் வெளி இடத்திலும் பேசுவதற்குக் கூச்சமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில்

    வாழ்க்கை வாழ்வதற்கு தான். வாழ்க்கையைக் கண்டு பயப்படும் பெண்ணால் வாழ்க்கையை ரசிக்க முடியாது, வெல்லவும் முடியாது. சின்ன விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் மோதிப் பார்த்துவிட வேண்டும் ”என்னாலும் முடியும்” என்ற தைரியத்தோடு களத்தில் இறங்கி விட வேண்டும். மொழி என்பது நாம் நம் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் கருவி. ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். சுலபமாக எளிமையாக ஒரு மொழியில் பேச வேண்டுமென்றால் முதலில் அம்மொழியில் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அப்போது தான் அந்த மொழியில் சரளமாகப் பேச முடியும். உங்களின் எண்ண ஒட்டம் தமிழில் இருந்தால் எதிரே நிற்கும் நபரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது சிரமம். பேச்சில் சரளம் இல்லாமல் திக்கித் திக்கி திணறவேண்டி வரும். காரணம் பேசுவதற்கு முன்னால் உங்களை அறியாமல் உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கும். இது சிரமத்தை ஏற்படுத்தும் . ஆங்கிலத்திலேயே பேச விரும்புவதால் அந்த மொழியிலேயே சிந்தனை ஓட்டத்தை உருவாக்குங்கள்.

                             உங்கள்தோழியிடமும் ஆங்கிலம் தெரிந்த உறவினர்களிடமும் தப்பு, தவறு என்று பார்க்காமல் ஆங்கிலத்தில் பேசிப் பழங்குகள். தப்பாக பேசினாலும் பரவயில்லை . அதை மற்றவர்கள் பரிகாசம் செய்தாலும் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் தினமும் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கடிதத்தில் ஒரு விஷயம் என்னை யோசிக்க வைக்கிறது. ஆங்கிலம் தெரியாததால் மட்டுமே உங்களுக்கு இந்த பாதிப்பு இல்லை. எனென்றால் அன்பு, நட்பு எல்லாம் மொழிக்கும் அப்பாற்பட்டது. மொழி தெரியாததால் தோழிகள் கிடைக்காமல் தனிமையை அனுபவிப்பதாகக் கூறுவது தவறு. உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதனால் உங்களையே நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள் . தாழ்வு மனப்பான்மையை கண்டறிந்து அதனை விலக்குங்கள்.

    கேள்வி: 2

                         எனக்கு 30 வயது ஆகிறது. எனது தந்தை மிகவும் கண்டிப்பாக நடத்தியதால் எனது 10 வயதில்  இருந்தே மனதில் ஒருவித பயம் தோன்றி விட்டது. எனக்கு பேச்சு திக்கித் திக்கி வரும். புது ஆட்களிடமும், பெரிய மனிதர்களிடமும் பேச முற்படும் போதெல்லாம் ஒரு வித படபடப்போடு, கை கால்களும் மிகவும் குளிர்ச்சியடைகிறது. இதை எப்படிப் போக்குவது?

    பதில் :

    சிறு வயதின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் வல்லமை பெற்றவை தான். ஆனால் முதலெழுத்து கோணி விட்டதால் கடிதமே கோணலாய் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான வலிமை உள்ளது.

    இங்கே உங்களுக்கு எற்பட்ட பாதிப்புக்கு அதிக கண்டிப்புடன் உங்களை வழிநடத்திய தந்தை காரணமாய் இருந்திருக்கிறார். நாளடைவில் தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் விசுவரூபம் எடுத்து உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை திருத்தி அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களுடையது தான். திக்கு வாயால் வாழ்க்கையை ஆரம்பித்த சிலர் இன்று தலைசிறந்த மேடை பேச்சாளர்களாய் இருப்பது நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கும் உண்மை. முதலில் உங்கள் பயத்தைப் போக்கி  தன்னம்பிக்கையை  வளர்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் தந்தையை உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை உங்களிடம் எதிர்பார்த்து அது நிறைவேறாமல் போன போது உங்களிடம் கோபம் கொண்டிருக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். உங்கள் சக்திக்கு உட்பட்ட இலக்கை நீங்கள் அடையும் போது உங்கள் மனதிற்கு அது புது தெம்பைக் கொடுக்கும். தினமும் காலை எழும் போது உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் வழிபடும் கடவுளிடம் இன்று எனக்கு பிரச்சனை எதிர் நோக்கும் பலத்தைக் கொடு என்று முழுமனதுடன் வேண்டிக் கொள்ளுங்கள் . புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ள அது துணையாய் இருக்கும். நண்பர்களிடம் அதிகமாகப் பேசுங்கள். விவாதங்களில் ஈடுபடுங்கள். உணர்ச்சி வசப்படும்போது திக்குவதை பொருட்படுத்தாமல் பேசுங்கள். பயத்தால் ஏற்படும் பலகீனத்தால் தான் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது. தேவைப்பட்டால் மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையும் பெறுங்கள்

    கேள்வி 3

                       நான் 28 வயது பெண். வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். பலரும் பாராட்டும்படி படித்தேன். நான் படித்து முடித்ததும் தகுதி அடிப்படையில் நல்ல வேலை கிடைத்தது. அன்றும் இன்றும் எனக்கு பணத்திற்கும், அழகிற்கும்,  அந்தஸ்திற்கும் குறைவில்லை. என் தோழிகளாகட்டும் என்னோடு வேலை பார்ப்பவர்களாகட்டும் நம்ம ’சுஜா கொடுத்து வைத்தவள்’ என்று என் காது படவே பேசுகிறார்கள். ஆனால் நானோ எதையோ இழந்தவள் போல மகிழ்ச்சி இல்லாத நிலையில் இருக்கிறேன். பணி முடிந்து திரும்பும்போது எனது காரை  எங்கேயாவது நிறுத்தி விட்டு சாலை ஓரத்து குடிசைகள் வழியாக நடக்கிறேன். அவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நானும் சராசரி பெண்களைப் போல மகிழ்ச்சியாக இருக்க வழி சொல்லுங்கள்.

    பதில்

    இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் பலரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது இன்று பலரும் பணம் அந்தஸ்து அழகால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை இருந்தால் கூட மகிழ்ச்சி இல்லை என்பதை நீங்கள் உணர்த்துகிறீர்கள். இன்னொரு விஷயம். நடைப்பாதை குடிசைவாசிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்கள் நினைப்பது எப்படி சரி இல்லையோ அது போல அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பதும் சரியல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவுக்கு பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும். அதனை  எதிர்கொண்டு அதையும் மீறி ஆங்காங்கே இருக்கும் மகிழ்ச்சியான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதனை அனுபவித்து யார் நிம்மதி அடைகிறார்களோ அவர்களுக்கே மகிழ்ச்சி கிடைக்கிறது. நீங்களும் உங்கள் அளவில் இருந்து கொண்டு மகிழ்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    உங்கள் சாதனைகளை சத்தமாக வெளியே சொல்லுங்கள். சறுக்கி விழுந்ததை மறந்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள் மனதில் எதையும் மூடி வைக்காதீர்கள். உற்சாகமாக இருங்கள் மகிழ்ச்சி தானே வரும்.

    Share
  • அன்பு

    –விசாலம் .

    அன்பே கடவுள்  என்கிறோம்.  இதிலிருந்து அன்பு,வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய  பங்கு வகிக்கிறது என  தெரிகிறது. ஒருவருடைய கோபத்தால் அவரது  குடும்பம் முழுவதும் நிம்மதி இழந்து   தவிப்பதைப்பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒருவருடைய அன்பினால் எப்படிப்பட்ட குடும்பத்தையும் கட்டிப்போட முடியும்  அரவணைத்துக்கொண்டு போக முடியும்.

    “அன்புஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
    நண்பு என்னும் நாடாச்சிறப்பு ” என்கிறார் திருவள்ளுவர் .
    அது உலகத்தாரையே நட்பாக்கும். சிறப்பாக்கும் என்கிறார் .

    “அன்பு என்பதே தெய்வமானது
    அன்பு என்பதே இன்பமானது
    மதத்தின்  மேல் வைத்த அன்பு பக்தியானது
    மனிதன் மீது வைத்த அன்பு  பாசமானது
    இதய மீது வைத்த அன்பு உண்மையானது
    ஏழை மீது வைத்த அன்பு கருணையானது”

    என்ற மிக அழகான பாடலை நமது கவியரசர் திரு கண்ணதாசன் அவர்கள்   கொடுத்திருக்கிறார். அன்பு  இருக்கும் இடத்தில் முகம் மலர்ந்திருக்கும். முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். அங்கு மன்னிப்பு இருக்கும். பணிவு இருக்கும் மரியாதை இருக்கும். அன்புக்கு மிருகங்களும் கட்டுப்படும். அன்பு எனும் சொல் ஒன்றுதான் ஆனாலும் அதை வெளிபடுத்தும் விதத்தில் வித்தியாசம் ஏற்படும் . தாய் தந்தையிடம் காட்டும் அன்பு, காதலியிடம் காட்டும் அன்பு , குழந்தைகளிடம் காட்டும் அன்பு ,  நண்பர்களிடம் காட்டும் அன்பு ,  இறைவனிடம் கட்டும் அன்பு என்று பலவகை இருந்தாலும் இறைவனிடம் காட்டும் அன்பே நிரந்தரமானது, இதைப்புரிந்துக்கொள்ள ஒரு சின்னக் கதை ….

    Lakshmi On Lotusஒரு செல்வந்தர் விடாமல் லட்சுமி பூஜை செய்து வந்தார்  ஒரு நாள்   அவர் கனவில் லக்ஷ்மி   தோன்றினாள்.  ” சேட்ஜி  நான் இன்னும் சில தினங்களுக்குள்  உன்னை விட்டுப்போய்விடுவேன்  நீ செய்த புண்ணியச்செயல்களால் தான் உன்னுடன் இருந்தேன். உன் புண்ணியங்கள் முடிந்து விட்டன ஆகவே நான் வீட்டை விட்டுப்போகப்போகிறேன் அதற்குள்  ஏதாவது வரம் கேட்க விரும்பினால்  கேட்டு வாங்கிக்கொள் ” என்றாள்.

    “அம்மா திருமகளே நான் என் குடும்பத்தில் இதைப்பற்றிக் கேட்டப்பின்  வரம் கேட்கிறேன்  நீ என்னை  விட்டுப்போவது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது ” என்று மனமொடிந்துக் கூறினார். மறு நாள் கனவைப்பற்றி தன் குடும்பத்தாருக்குத் தெரிவித்தார் மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று எல்லோரிடமும் கேட்டார் .

    “வைரம் முத்து மரகதம் மாணிக்கம் என்று கேளுங்கள்”  என்று முந்திக்கொண்டாள் மனைவி.

    பொற்குவியல்களைக் கேளுங்கள் அப்பா ” என்றான் மூத்த  மகன்.

    “உணவு பண்டங்கள் கேட்கலாமே” என்றான் இரண்டாவது மகன்.

    வேறு சிலர் வீடு வாகனங்கள் என பல கேட்கச்சொன்னார்கள் .

    பின் வந்தாள் அவரது கடைசி மருமகள்.  ” அப்பா   எல்லோரும் பலவிதமானப் பொருட்களைக் கேட்டனர் அவைகள் எல்லாம் வந்தாலும் கூட எப்போ லட்சுமி போகப்பாவதாகச்சொன்னாளோ அப்போதே இந்தப்பொருட்களும்  அழிந்து விடும்.  இவைகள் ஒன்றும் நிலைத்திருக்காது.   ஆகையால் தாங்கள் நம் குடும்பத்தில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கட்டும்   என்ற வரம் கேளுங்கள் எத்தனைக்கஷ்டங்கள் வந்தாலும் பரஸ்பரம் அன்பு இருந்தால் அங்கு நிம்மதி நிலைக்கும். வாழ்க்கை நிம்மதியாகக் கழிக்க முடியும் ” என்றாள்

    எல்லோருக்கும் இது சரியென்றே பட்டது.

    மறுநாள் கனவில் திருமகள் தோன்றினாள் ”  என்ன சேட்ஜி என்ன கேட்க நினைத்தாய்?”

    “̀தேவி தாங்கள் என்னைவிட்டுப்போவதில் வருத்தமே, ஆனாலும் நீங்கள் சொன்னபடி எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.   என் குடும்பத்தினரிடையே பரஸ்பர  அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும்இந்த வரத்தை அளிக்க  வேண்டும்.

    புன்னகைப்பூத்தாள் திருமகள். “மகனே  இந்த வரம் கேட்டு என்னை இங்கயே கட்டிப்போட்டு விட்டாய். எங்கு சண்டையில்லையோ  அன்பு இருக்கிறதோ அங்கு நான்  நிரந்தரமாக இருக்க விரும்புவேன்.குடும்பத்தில் அன்பு நிலவ வேண்டும் என்று நீ கேட்டு விட்டாய்.     உன் குடும்பத்தை விட்டு எப்படி  நான் செல்ல முடியும் ?  என்று சொன்னபடியே அங்கேயே நிலைத்து விட்டாள்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.oldindianarts.in/2011/07/goddess-lakshmi-on-lotus-1940s-vintage.html

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 8

    கே.ரவி-

    download

    புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவி உண்டு என்று சொன்னேன் இல்லையா? அவள் பெயர் மனோன்மணி என்று வைத்துக் கொள்ளலாமே. அவள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று எண்ணிவிட வேண்டாம். அவள்தான் கற்பனை, கற்பனைதான் அவள்.

    மனோன்மணி இல்லாமல் சிகாமணி தனியே இருக்கும் போது அவன் சொல்வதெல்லாம் வெற்று வேதாந்தமாக (எவ்வளவு உயர்ந்த சொல்லை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகிவிட்டோம்!), விறுவிறுப்பில்லாத, ஸ்வாரஸ்யமில்லாத வரட்டுப் பேச்சாக இருக்கும். ஆனால், மனோன்மணியோடு சேர்ந்து விட்டாலோ சிகாமணிக்கு ரொம்ப குஷி வந்துவிடும். குதூகலமாகப் பேசுவான். அவன் சொல்லும் கதையெல்லாம் விறுவிறுப்பாகப் பழைய விட்டலாச்சார்யாவின் மாயாஜாலப் படங்கள் பாணியில் அமோகக் காட்சிகளாக ஜொலிக்கும். காந்தாராவ், ஜெயமாலினி எல்லாரும் வருவார்களா என்று கேட்டு விடாதீர்கள். சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.

    எனக்கென்னமோ இந்த புத்தி சிகாமணியும், மனோன்மணியும் எப்படியோ பாரதியின் படைப்பிலும் இடம்பிடித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆம், இரண்டு கயிற்றுத் துண்டுகளுக்குக் கந்தன், வள்ளி என்று பெயரிட்டு அவன் எழுதிய மிக உயர்ந்த, உன்னதமான காதல் காவியத்தின் நாயக, நாயகியர் இவர்களே என்று எண்ணுகிறேன். அவர்களுடைய ஊடலையும், கூடலையும் எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான் பாரதி!

    ஆனால், சில நேரங்களில் மனோன்மணி மட்டும் சிகாமணி இல்லாமல் ஏதேதோ பேசத் தொடங்கி வகையாக மாட்டிக் கொள்வாள். ஒரு சம்பவம் சொல்கிறேன். அதை சொல்வதற்கு முன் ஒரு சிறு வரலாற்றைச் சொல்ல வேண்டும். பீடிகை பீதாம்பரம் என்று எனக்குப் பட்டம் கொடுத்தாலும் பரவாயில்லை, நான் அதைச் சொல்லியே ஆக வேண்டும்.

    இன்று மிகச்சிறந்த பேச்சாளராக மதிக்கப்படும் என் இனிய நண்பன் சுகி சிவம், பள்ளி,கல்லூரி நாட்களில், அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கவிதைகளும் எழுதியிருக்கிறான். உலகம் போற்றும் பேச்சாளனாகவும், சிந்தனையாளனாகவும் வளர்ந்துவிட்ட அவனை இப்பொழுது ஒருமையில் அழைக்கவே கூச்சமாக உள்ளது. ஆனால் மரியாதை நிமித்தம் அவர், இவர் என்று போட நெருக்கம் இடம்தர மறுக்கிறது.

    அவன் எழுதிய கவிதைகள் தரமானவை, சுவையானவை. அதுவும் வேற்காடு கருமாரியம்மன் மீது அவன் எழுதி, நாங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் வாரம்தோறும் பாடிய பாடல்கள் எங்கள் குழுவில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள்.

    “அண்ட முட்டையினை விண்டு கண்டிடினும்
    அன்னை சக்திவரு வாளடா – அவள்
    தீமை வெட்டுமொரு வாளடா

    . . .. . .
    . . . . . .
    . . . . . .

    கொத்து வேப்பிலைக் கைத்த லத்திடை
    வைத்த நற்குங்கு மச்சிலை – தொழ
    வாடும் உன்மன்ம தக்கலை”

    போன்ற பக்திமணம் கமழும் வரிகள்;

    கொடியோர்கள் கண்டஞ்சும் தாரார்புஜம் – கொண்ட
    கொடிநின்னை அல்லாமல் வேறார்நிஜம்
    விடியாத படிசெய்த மாபாதகம் – தீர்க்கக்
    குடிலுக்குள் குடிகொண்ட கோமேதகம்”

    போன்ற வைர வரிகள்!

    இவையெல்லாம் அவனுடைய சொல்லாளுமைக்கும், கற்பனை வளமிக்க கவிதையுள்ளத்துக்கும் சில சான்றுகள்.

    ஒருநாள்…! இப்பொழுது நான் சொல்வதை யாரும் தயவு செய்து அவன் மனைவி ராஜியிடம் போய் சொல்லி வத்தி வைத்து உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டிவிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு சொல்கிறேன். ஒருநாள், அதாவது, சிவத்துக்குத் திருமணம் ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் அவன் கனவில் ஒரு பேரழகியைப் பார்த்ததாகச் சற்று படபடப்போடு சொன்னான். நீ என்ன செய்தாய் என்று கேட்டேன். பளிச்சென்று கவிதையிலேயே பதில் சொன்னான், அசந்து விட்டேன்.

    “கண்ணளந்து நின்றிருந்தாள் கதலித்தேன்
    கையளைந்து நானவளைக் காதலித்தேன்

    கையளந்து இல்லையப்பா, கையளைந்து! “சிறுகை அளாவிய கூழ்” நினைவுக்கு வருகிறதோ!

    எவ்வளவு சுவையான வரிகள். கதலித்தேன் நீண்டு காதலித்தேன் என்று ஆன சுவையைத் தாண்டிப் போக முடியவில்லையே! உஷ், மூச்சுவிடக் கூடாது.

    சிவமும் நானும் எங்கள் கல்லூரி நாட்களில் ரசித்துப் படித்துக் கொண்டிருந்த கவிஞர்களில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கே முதலிடம். அதற்குக் காரணமாக இருந்தவர் திரு.ஒளவை நடராஜன்.

    சுரதா, அப்போது தொடர்ந்து ஆனந்த விகடனில் செய்திகளையெல்லாம் செய்யுள் நடையில் எழுதி வந்தார். திருமதி கே.ஆர்.விஜயாவுக்குக் குழந்தை பிறந்த செய்தியை “கேயார் விஜயா தாயார் ஆனார்” என்று அவர் எழுதியது மிகவும் பிரபலமானது.

    அவருடைய இந்த முயற்சிகளைக் கேலி செய்து ‘கம்பாசிடர் கவிதைகள்’ என்று திரு.சோ அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து விட்டார்.

    அந்த விமர்சனத்துக்கு ஓர் அருமையான கவிதை மூலம் சுரதாவே விடை சொல்லியிருந்தார். அந்தக் கவிதையின் நிறைவு வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய வரிகள்:

    “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
    மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

    தீவிர சுரதா ரசனையின் பிடியிலிருந்த சிவமும், சோவின் விமர்சனத்துக்கு ஒரு நல்ல பதில் கவிதை எழுதி அதுவும் பிரசுரமானது. ஆனால் ஆனந்த விகடனில் இல்லை. பின் எந்தப் பத்திரிகையில்? அது ஒரு பெரிய கதை!

    எங்கோ போய்விட்டோம். மீண்டும் சிகாமணி, மனோன்மணி விவகாரத்துக்கு, (விவாக ரத்துக்கு என்று மாற்றிப் படித்துவிட வேண்டாம்) வருவோம். கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்வோமே.

    “என்னய்யா, மூச்சு விடாதே என்கிறீர், மூச்சு விடு என்கிறீர்” என்று நீங்கள் அங்கலாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. சற்று நேரம் என்னை நான் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, சிகாமணி-மனோன்மணி விஷயத்துக்கும், சிவம் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்கிறேனே! அப்புறம் சந்திப்போமா?

    (தொடரும்)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 16, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பெனோ செபீன்  அவர்கள்

    BENO
    இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து  ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப்  பரிந்துரைக்கப்பட்டது.  அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின்  வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான  ‘பெனோ செபீன்’ (Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)  நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில்,   அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர்.  இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ  செபீனும் ஒருவர்.  ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.

    Beno Zephine3

    ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும்  இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ  நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில்  பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்),  லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர்.  தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர்  திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.

    இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார்.  சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல்  கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.

    Beno Zephine2
    விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல  போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில்  பரிசு பெற்றவர் பெனோ.  இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது.   துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

    Beno Zephine
    மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை  வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று  பரிசீலனை செய்து அரசாணையும்  பிறப்பித்துள்ளார்.  பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

    Beno Zephine5

    இவரது கல்லூரி நாட்களில், 2008  ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ,  மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து  லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப  உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும்  ஏற்பாடு செய்துள்ளார்.  பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

    Beno Zephine6

    இதனை அவரே விவரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்: -http://youtu.be/aGq9d9q2YBs

    சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட  பெனோ,

    “எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”

    என்று நமக்கு அறிவுரையும்  கூறுகிறார்.

    வல்லமையாளரை பா எழுதி பாராட்டுகிறார் கவிஞர் காவிரி மைந்தன்

    முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே…
    புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே…
    இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு
    கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!!

    இவர்தம் வளர்ச்சிக்காய் இதயங்கள் இரண்டிணைந்து இயங்குவதை..
    ஈரமுள்ள விழிமலரால் காணத்தான் முடிகிறதே…
    திறமைக்கு கண்ணில்லை.. முயற்சிதான் முக்கியம் என்பதை
    அருமையாய் உணர்த்திட்ட பெனோ செபீன் வாழியவே…

     

    தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

    படம், தகவல்கள்  செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 123

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    மூவரும் மேற்செல்லும்போது, வழி நடந்த வருத்தத்தால் கவுந்தி அடிகளும் கண்ணகியும் வழிமருங்கு இருப்ப, கோவலன் அண்மையிலுள்ள ஒரு பொய்கைக்கு நீர் அருந்தச் செல்லுதல்.

    குறைந்திடாது உயர்ந்த கொள்கையுடைய                      kovalan kannaki and kavundhi
    கோவலன் கண்ணகி தம்முடன்
    அன்றைய பகல் பொழுதில்
    ஓர் அரிய ஊரில் தங்கி,
    அடுத்த நாளில் மூவரும்

    அவ்விடம் விட்டுப் புறப்பட்டு
    மதுரை செல்லும் வழியில் சென்றனர்.

    வழி நெடுக நடந்ததால்,
    துன்பத்தாலும், தாகத்தாலும் வருந்திய
    கருந்தடங்கண்ணி கண்ணகியும், கவுந்தியடிகளும்
    வழியின் ஓரம் ஓய்வுக்காய் அமர்ந்தனர்.

    கோவலன், தாம் நடந்து வந்த வழியின்
    பக்கத்திலிருந்த இன்னுமொரு வழியில் சென்று
    அங்குள்ள பொய்கையில் தண்ணீர்ப் பருகி,
    பின் கவுந்தியடிகளுக்கும் கண்ணகிக்கும்
    நீர் கொண்டுவரும் விருப்பம் கொண்டவனாய்ப்
    பெரிய துறையை  அடைந்தான்.

    வனதேவதை வசந்தமாலையின் உருவில் தோன்றி, கோவலனிடம் முறையிடுதல்.

    அப்போது,
    முன்னர் மறையோன் உரைத்த
    கானகத்தில் உறையும் தெய்வம்
    கோவலன் முன்னே தோன்றியது.

    மாதவியிடம் கொண்ட காதலால்,
    அவள் தோழியையும் விரும்புவான் என்று கருதி,
    அவன் முன்னே அத்தெய்வம்
    வசந்தமாலை வடிவில் தோன்றியது.

    பூங்கொடி ஒன்று நடுநடுங்கிக்
    கீழே விழுந்தது போல
    அவன் காலடியில் விழுந்து
    கண்ணீர் உகுத்தது.

    “நறுமணம் கொண்ட தாழை மடலில்
    கோவலனுக்குச் செய்தி அனுப்பியபோது
    நான் தவறாக ஒன்றும் எழுதிடவில்லை.
    நீ பிழையான மொழிகளைக்
    கோவலனிடம் கூறியிருக்கிறாய்;

    அதனால்தான் கோவலன்
    என்னைப் பிரிந்துசெல்லும்

    கொடுமையினைச் செய்தான்”
    என்று தம்மிடம் கூறிய மாதவி
    வானளவு துயருற்று வருந்தியதாக
    அத்தெய்வம் கூறியது.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  150 – 162
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 7

    கே. ரவி

    jungle-morning-mist-breeze-cool-path-wild-142659

    புத்தி சிகாமணி கேட்டானே, “காற்றும் கவிதையும் ஒன்றா?” என்று, அந்தக் கேள்விக்கு நான் பாட்டாலேயே பதில் சொல்வதற்குள் அவன் எங்கோ காற்றுவாக்கில் பறந்து போய்விட்டான். பரவாயில்லை. அது என்ன பதில் என்று நாமும் கேட்டு வைப்போமே.

    பழைய பாட்டு சாமி, 1988-ல் வந்தது. சுத்தமான சுபந்துவராளி ராகத்தில்தான் வந்தது. ஆனால், அமரர், கவிமாமணி தேவநாராயணன் வீட்டில் நடந்த பாரதி கலைக் கழகக் கவியரங்கத்தில் என்னால் கொஞ்சம் அப்படி இப்படியாகப் பாடப் பட்டது. மிஸ்ர நடை வேறு. பாரதி கலைக் கழக உறுப்பினர்கள் ரொம்பப் பொறுமைசாலிகள். இதோ பாட்டு:

    காற்று வேறு கவிதை வேறு
    இரண்டும் ஒன்றாய் இணையும் போது
    பாடல் உருவாகும் – அதில்
    பார்வை தெளிவாகும்

    நேற்றும் இன்றும் நாளை யென்றும்
    மாற்ற மின்றி மலர்ந்தி ருக்கும்
    தோற்றம் உருவாகும் – உயிர்
    தோயும் ஒளியாகும்

    வெண்ணி லாவில் அமுதம் அள்ளிக்
    கொண்டு வந்த தென்றலும்
    சொற்க ளுக்குள் சொக்கி வீழும்
    சொர்க்கம் எங்கள் பாடலே
    மின்னிமின்னித் தார கைகள்
    கண்சி மிட்டும் தாளத்தில்
    மெல்ல மெல்லச் சொல்லெ டுத்து
    மீட்டும் எங்கள் பாடலே
    (காற்று வேறு)

    தூண்டி லுக்குள் துவளும் மீனின்
    தோல்வி எங்கள் பாடலே
    காண்டி பத்தில் இடிமு ழக்கும்
    வெற்றி எங்கள் பாடலே
    மலரில் வண்டு துயிலு கின்ற
    மர்மம் எங்கள் பாடலே
    தனிமை யுள்ளும் தர்க்கம் செய்யும்
    தர்மம் எங்கள் பாடலே
    (காற்று வேறு)

    நாம் காற்றைத் தேடுவதுபோல், காற்றும் கவிதை தேடுகிறதோ என்று சகோதரி கீதா மதிவாணன் இன்று காலை என்னை வியக்க வைத்து விட்டார்.

    “கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப் படபடப்போடு புரட்டிக் கொண்டிருந்தது காற்று”

    பக்கங்களைப் படபடப்போடு புரட்டுவது என்றதும் அந்த ஹிட்லர் மீசைக்காரர்தான் நினைவுக்கு வருகிறார். அவர் பாடல் ஒன்று நினைவுத் திரையில் நிழலாடுகிறது.

    அவன் ஏதோ மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறானாம். அவனையே வைத்தகண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். இல்லை, ஓடையிலே பூத்திருக்கும் குளிர்ந்த மலர்ப் பார்வையினால் அவனை அருந்திக் கொண்டிருக்கிறாளாம். அப்போது சட்டென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையில் அவள் பார்வை பட்டுத் தெறிக்க. . . .! அடடா, பார்வை தெறித்துச் சிதறும் சத்தம் கண்ணாடி உடைவது போல் கேட்கிறதா? அந்தவொரு கணச் சிதறலில், தன் ஆடைவிலகிப் போய்த் தான் நிர்வாணப் பட்டது போல் அவளுக்கு ஒரு நாணம் விளைய, சரியாகவே இருக்கும் ஆடையை அவள் சரிசெய்து கொள்கிறாளாம்! அவனோ, ” ஐய்யய்யோ, நான் பார்க்கவே இல்லை அம்மாடீ!” என்பதுபோல் குனிந்து கொண்டு புத்தகத்தின் பக்கங்களைப் படபடவென்று புரட்டுகிறானாம். ஆயிரம் ஏடு திருப்புகிறான் என்று முடிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்:

    “கூடத்தி லேமனப் பாடத்தி லேவிழிக்
    கூடிக் கிடந்திட்ட ஆணழகை
    ஓடைக் குளிர்மலர்ப் பார்வையி னாலவள்
    உண்ணத் தலைப்படும் நேரத்திலே
    பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
    பட்டுத் தெறித்தது மானின்விழி
    ஆடை திருத்திநின் றாளவள் தானவன்
    ஆயிரம் ஏடு திருப்புகிறான்”

    விழிகள் பட்டுத் தெறிக்கும் ஓசையும், ஒருசில பக்கங்களையே ஆயிரம் பக்கங்கள்போல் சரசரவென்று அவன் புரட்டிக்கொண்டே இருக்கும் ஓசையும் கேட்க வைக்கும் நல்ல கவிதையிது. ஆங்கிலத்தில் onomatopoeic என்பார்களே, அப்படிப்பட்ட த்வனிச் சிறப்போடு விளங்குகிறது.

    கவிதையில் சொல்லப்படும் அறிவு சார்ந்த கருத்துகள் படிப்பவன் அறிவு வரை மட்டுமே செல்லும். ஆனால் அதன் த்வனியாகிய ஒலியின்பமே அறிவைக் கடந்து மனத்தளத்தின் ஆழத்தில் போய் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. அதுவே ஆகாயத்தை அளாவி நிரந்தரமான, அட்சரம் என்ற அழிவற்ற நிலையில் பரவியிருக்கக் கூடியது.

    “என்ன ஓய், உபன்யாசமெல்லாம் பலமா இருக்கு?”

    கலகலவென்று சிரித்துக் கொண்டே கேட்டது நான்; கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் துவண்டு போனது, வேறு யாருமில்லை, ஓடிப்போய்விட்டு நடுவில் சடாரென்று திரும்பி வந்து எனக்குள் புகுந்து கொண்டு வசனம் பேசிய நம்ம பழைய பிரஹஸ்பதி, சாட்சாத் புத்தி சிகாமணிதான்.

    புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவியுண்டு. எனக்குத் தெரிந்தவரை ஒரே மனைவி. அவள் பெயர் . . . .ம்! என்ன பெயர் வைக்கலாம்? கொஞ்சம் யோசித்து விட்டு அப்புறம் வருகிறேனே.

    (தொடரும்)

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –ப.கண்ணன்சேகர்.

     “கவியரசர் பார்வையில் மகளிர்”

    Kannadasan  பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சமுதயாத்திற்கு எண்ணற்ற காவியங்களையும் கவிதைகளையும் படைத்திருக்கிறார். இவை அனைத்தும் தலைமுறைகளைத் தாண்டி தமிழ்ச்சமுதாயத்திற்கு  பயன்படும் கல்வெட்டுக்களாக திகழ்கின்றன. இவர் பேனா தொடாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு எழுத்துலகில் கோலோச்சியுள்ளார்.

    குடும்பத்தில் ஒவ்வொரு உறவுக்கும் இவரின் வழிகாட்டுதல்கள் எல்லாத் தலைமுறையும் ஏற்றுக்கொள்ளும் முறையாக அமைந்துள்ளது. குறிப்பாக  மகளிர்காக இவரின் படைப்புக்கள் சிறப்பாகவே இருப்பதை அறிய முடிகிறது.பெண்மை, பக்தி, ஆளுமை, குடும்பம், உறவுகள் என பல வடிவங்களில் மகளிர் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். பெண்ணாக பிறந்து விட்டால் பக்தி என்பது இயல்பாய் வரக்கூடியது எனவும், நாத்திகனாக கணவன் இருந்தாலும் அந்த வீட்டில் இறை உணர்வுடன் மனைவி இருப்பது பல குடும்பங்களில் கண் கூடு. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த சிவகாமி மகனிடம் பாடலில்,

    பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
    வேலை வணங்காமல் வேறேன்ன வேலை?

    அதே போல “அவன் பித்தனா”  படத்தில் “இறைவன் இருக்கின்றானா..” பாடலில்,

    “மனிதன் இருக்கின்றானா..
    இறைவன் கேட்கின்றான்
    …………………………..
    ஒன்றையே நினைத்திருந்தும்
    ஒன்றாக வாழ்ந்திருந்தும்
    பெண்ணாக பிறந்தவரை
    கண்ணாக யார் மதித்தார்.. ”

    ஒரு பெண் கற்புடையவளாக தனது கணவன், குடும்பம் என வாழ்தாலும், அவளை மதிக்காத சமூகமே நிறைந்து காணப்படுவதை தமது வரிகளால் கவியரசர் குறிப்பிடுவது பெண்ணுக்கு வாதாடும் வக்கீலாகவே காணப்படுகிறார். அதே போல் மாதராண்டு வரவேற்போம் என தமது கவிதையில்,

    பாவையர் வாழ்க்கை என்றும்
    வீடு காப்பது – எங்கள்
    பாரதத்துப் பெண்மை
    இன்று நாடுகாப்பது
    சேவை செய்யும் பெண்மை
    இன்று அதிகமானது..

    (கண்ணதாசன் கவிதைகள் -6 பக்:164)

    மகளீரின் நாட்டுப்பற்றை குறிப்பிட்டு, இன்று எல்லாத்துறையிலும் பெண்களின் வளர்ச்சி கண்டிருப்பதை எழுதியுள்ளார். ஆணுக்கு பெண் சமம் என்ற பாரதியின் சமதர்ம சிந்தனைகளை கவியரசர் பாடல்களிலும் பல இடங்களில் காண முடிகிறது.  நல்லபெண்மணி இருக்கும் ஒரு வீடு கோவிலுக்கு இணையாகும் என்பதை,  ஒரு பாடலில் மகளிரின் பெருமையை உயர்த்திக் காட்டுகிறார். பச்சைவிளக்கு திரைப்படத்தில் “கேள்வி பிறந்தது அன்று…”  பாடலில்,

    குலமகள் வாழும் இனியகுடும்பம்
    கோயிலுக்கிணையாகும்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே
    வாழ்வும் சுவையாகும்..

    இப்படி ஒரு பெண்ணிடம் சிறு குறை இருந்தாலும் அவற்றை பெரிது படுத்தாமல் இருக்கும் உறவுகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை சுவையானது என சுவைபட வார்த்தைகளை வகைப்படுத்தி எழுதும் பக்குவம் கவியரசரைத் தவிர வேறு யாருக்கு வரும்?

    இதை விட மிகச்சிறப்பாக தனது மனைவி பொன்னம்மாளுக்கு காது கேட்காது என்றாலும் அதை பக்குவமாக ஏற்றுக் கொண்டு, அந்த சீமாட்டியை சிறப்பிக்கும் கவியரசரின் குணம் குன்றின் மேல் வைத்த விளக்காய் ஒளிர்கிறது.

                                                      செவிகள்பழு தானாலும்
                                                                        சேவைச் சிறப்பால்என்
                                                     கவிகள்பழு தாகாமல்
                                                                     காத்துவந்த ராஜாத்தி!  
                                                    குடிக்க துணிந்ததற்கோ
                                                                         குத்துகின்ற ஊசிகட்கோ
                                                   கண்ணான என்மனைவி
                                                                         காரணமாய் இருந்ததில்லை!

    (“பொன்னம்மா என் மனைவி” கவிதை நூல்)

    இந்த வைரவரிகள் கவியரசரின் மனைவியை குறிப்பிடுவதாய் இருந்தாலும் ஊனமுற்ற மகளீருக்கும் இவரின் எழுத்துக்கள் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. இப்படி பெண்ணின் பெருமைப் பற்றி கவியரசர் எழுதியுள்ளதை பல மேற்கோள்களுடன் பல பக்கங்களுக்கு எழுதலாம்.

    பெண்களை ஆடையில்லாமல் வர்ணிக்கும் ஆபாச உலகில் “ஆடைக் கட்டிய ரதமே ரதமே.. அருகில் அருகில் நான் வரவா… என்று பெண்மையை போற்றி புகழ்ந்தவன் நமது கவியரசு கண்ணதாசன். பெண்மையின் புகழை பெருமையாய் பாடிய அந்த கவிஞனை என்றும் போற்றுவோம்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    பி.எஸ்.டி. பிரசாத்

    என் பார்வையில் கண்ணதாசன்

     

    Kannadasan“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மன‌தில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்”

    என்று பாட்டாலே வீரம் ஊட்டிய கவியரசு கண்ணதாசன், இன்று சரித்திரமாகி நிற்பதற்கான முக்கியமான காரணம் என நான் எண்ணுவது, பல்லாயிரம் தமிழ் ஆர்வலர்களுக்கு, கவிதை மற்றும் பாடல் அமைப்பு செய்வதற்கான இலக்கண எடுத்துக்காட்டுக்களாக விளங்கிய அவரது திரைப் பட பாடல் வரிகள்தான். அவரது பாடல் வரிகளை ரசித்து, நாமும் முயலலாம் எனக் கவிதை எழுத வந்தவர்கள் எத்தனை பேர்? அந்த வகையிலே, கவியரசு அவர்கள் என் பார்வையில், பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் முன்னோடியாகவும், மாபெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தியவராகவும் பார்க்கிறேன்.

    முன்னோடிப் பாடல் வரிகள் (Inspirations):

    “உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில் வரும் வரிகள்:

    “தெய்வம் என்றால் அது தெய்வம்
    அது சிலை என்றால் வெறும் சிலை தான்”

    திரு.கமல்ஹாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் வரும்

    “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..” என்ற பாடலுக்கு எப்பேர்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

    “ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா” என்ற வரிகள்தான் பின் வந்த நாட்களில்,

    “நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
    படுத்தால் ஆறடிபோதும்” என்ற பாடலுக்கு ஊக்கமாக இருந்திருக்குமோ?

    ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் இனிமையான பாடல்

    “இரவும் நிலவும் வளரட்டுமே…நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே,,,”

    “இலைமறை காய்மறை”யாகச் சொல்வதற்கு இந்த வரிகளை உதாரணம் சொல்லலாம். இந்த வரிகள், நிறைய பாடல்களில் வெவ்வேறு சொல்லாக்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “அன்பு” என்ற திரைப்படத்தில் வரும் “தவமின்றி கிடைத்த” என்று தொடங்கும் பாடலில் வரும் வரிகளைச் சொல்லலாம்.

    “பகல் எல்லாம் இரவாகிப் போனால் என்ன? இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன?
    நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தாலென்ன?”

    “ரத்தத் திலகம்” என்ற திரைப்படத்தில் வந்த பிரபலமான பாடல்தான் “கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடல். அந்தப் பாடலில் “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்ற வரிகள் “மடை திறந்து தாவும் எனத் துவங்கும் பாடலில் வரும் “புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே”  என்ற வரிக்கும், “பாட்டுக்களை படைப்பதனால் பிரம்மனாகிறோம்” என்ற வரிக்கும் என்னவொரு தாக்கமாக அமைந்திருக்கிறது !

    நீ காற்று…நான் மரம் என்று தொடங்கும் அருமையான பாடல். அப்பாடலில் “நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்” என்ற வரிகள் வரும். இந்த பாடலின் அமைப்புக்கே கவியரசு அவர்களின் நீ எந்தன் வானம்…நான் அங்கு நீலம…நீ எந்தன் வாசல்…நான் அங்கு கோலம்” (படம்: அமரகாவியம் – பாடல்:  செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன்) என்னும் வரிகள் தான் ஊக்கமாய் அமைந்ததோ!

    வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்றாலும், நாம் அடுத்து பார்க்க இருக்கும் பாடல், கண்ணதாசனின் தாக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தான் செய்கிறது.

    “சேச் சேச் சேச் சே ! ஆம்பளைங்களா நீங்க…ஆம்பளைங்களா – ஒரு ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களேன் !”
    என்ற பாடல் (படம்: உரிமைக் குரல்)  – தேவர் மகன் படத்தில் வரும் “சாந்து பொட்டு…ஒரு சந்தன பொட்டு எடுத்து வெச்சுக்க  வெச்சுக்க மாமா !” என்ற பாடல்கள் !

    அடுத்ததாக, “பொம்பளையா லட்சணமா பொடவையக் கட்டு சும்மா குளுகுளுன்னு கிழுஞ்சு போன ட்ரௌசர விட்டு” (படம்: இளைய தலைமுறை) என்ற பாடல் வரிகளின் தாக்கம்….எந்த பாட்டில் தெரிகிறது சொல்லுங்கள்….ம்…சரியான விடை: “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே…சேல உடுத்தத் தயங்கினியே ! நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிருயே !” என்ற பாடலுக்குத் தான். மறைந்த திரு. சாகுல் ஹமீது அவர்கள் நன்றாகப் பாடியிருப்பார்.

    முடிவுரை:

    இவ்வாறாக, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்….இது வரை மட்டுமல்ல…இனி வரும் கவிஞர்கள் பலருக்கும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் மாபெரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    “மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
    மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
    நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை ​”

    என்று முழங்கிய கண்ணதாசன் அவர்கள் இன்றைய கவிஞர் என்னும் நிலவுக்கெல்லாம், சூரியனாக ஒளி தந்து என்றும் வாழ்பவராக என் பார்வையை பதிவு செய்கிறேன் !..வளர்க‌ அவர் புகழ் !

    பி.எஸ்.டி. பிரசாத்
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

    Share