காற்று வாங்கப் போனேன் – பகுதி 7
கே. ரவி
புத்தி சிகாமணி கேட்டானே, “காற்றும் கவிதையும் ஒன்றா?” என்று, அந்தக் கேள்விக்கு நான் பாட்டாலேயே பதில் சொல்வதற்குள் அவன் எங்கோ காற்றுவாக்கில் பறந்து போய்விட்டான். பரவாயில்லை. அது என்ன பதில் என்று நாமும் கேட்டு வைப்போமே.
பழைய பாட்டு சாமி, 1988-ல் வந்தது. சுத்தமான சுபந்துவராளி ராகத்தில்தான் வந்தது. ஆனால், அமரர், கவிமாமணி தேவநாராயணன் வீட்டில் நடந்த பாரதி கலைக் கழகக் கவியரங்கத்தில் என்னால் கொஞ்சம் அப்படி இப்படியாகப் பாடப் பட்டது. மிஸ்ர நடை வேறு. பாரதி கலைக் கழக உறுப்பினர்கள் ரொம்பப் பொறுமைசாலிகள். இதோ பாட்டு:
காற்று வேறு கவிதை வேறு
இரண்டும் ஒன்றாய் இணையும் போது
பாடல் உருவாகும் – அதில்
பார்வை தெளிவாகும்
நேற்றும் இன்றும் நாளை யென்றும்
மாற்ற மின்றி மலர்ந்தி ருக்கும்
தோற்றம் உருவாகும் – உயிர்
தோயும் ஒளியாகும்
வெண்ணி லாவில் அமுதம் அள்ளிக்
கொண்டு வந்த தென்றலும்
சொற்க ளுக்குள் சொக்கி வீழும்
சொர்க்கம் எங்கள் பாடலே
மின்னிமின்னித் தார கைகள்
கண்சி மிட்டும் தாளத்தில்
மெல்ல மெல்லச் சொல்லெ டுத்து
மீட்டும் எங்கள் பாடலே
(காற்று வேறு)
தூண்டி லுக்குள் துவளும் மீனின்
தோல்வி எங்கள் பாடலே
காண்டி பத்தில் இடிமு ழக்கும்
வெற்றி எங்கள் பாடலே
மலரில் வண்டு துயிலு கின்ற
மர்மம் எங்கள் பாடலே
தனிமை யுள்ளும் தர்க்கம் செய்யும்
தர்மம் எங்கள் பாடலே
(காற்று வேறு)
நாம் காற்றைத் தேடுவதுபோல், காற்றும் கவிதை தேடுகிறதோ என்று சகோதரி கீதா மதிவாணன் இன்று காலை என்னை வியக்க வைத்து விட்டார்.
“கவிதைப் புத்தகத்தின் வெற்றுப் பக்கங்களைப் படபடப்போடு புரட்டிக் கொண்டிருந்தது காற்று”
பக்கங்களைப் படபடப்போடு புரட்டுவது என்றதும் அந்த ஹிட்லர் மீசைக்காரர்தான் நினைவுக்கு வருகிறார். அவர் பாடல் ஒன்று நினைவுத் திரையில் நிழலாடுகிறது.
அவன் ஏதோ மும்முரமாகப் படித்துக் கொண்டிருக்கிறானாம். அவனையே வைத்தகண் வாங்காமல் அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாளாம். இல்லை, ஓடையிலே பூத்திருக்கும் குளிர்ந்த மலர்ப் பார்வையினால் அவனை அருந்திக் கொண்டிருக்கிறாளாம். அப்போது சட்டென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வையில் அவள் பார்வை பட்டுத் தெறிக்க. . . .! அடடா, பார்வை தெறித்துச் சிதறும் சத்தம் கண்ணாடி உடைவது போல் கேட்கிறதா? அந்தவொரு கணச் சிதறலில், தன் ஆடைவிலகிப் போய்த் தான் நிர்வாணப் பட்டது போல் அவளுக்கு ஒரு நாணம் விளைய, சரியாகவே இருக்கும் ஆடையை அவள் சரிசெய்து கொள்கிறாளாம்! அவனோ, ” ஐய்யய்யோ, நான் பார்க்கவே இல்லை அம்மாடீ!” என்பதுபோல் குனிந்து கொண்டு புத்தகத்தின் பக்கங்களைப் படபடவென்று புரட்டுகிறானாம். ஆயிரம் ஏடு திருப்புகிறான் என்று முடிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்:
“கூடத்தி லேமனப் பாடத்தி லேவிழிக்
கூடிக் கிடந்திட்ட ஆணழகை
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையி னாலவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே
பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
பட்டுத் தெறித்தது மானின்விழி
ஆடை திருத்திநின் றாளவள் தானவன்
ஆயிரம் ஏடு திருப்புகிறான்”
விழிகள் பட்டுத் தெறிக்கும் ஓசையும், ஒருசில பக்கங்களையே ஆயிரம் பக்கங்கள்போல் சரசரவென்று அவன் புரட்டிக்கொண்டே இருக்கும் ஓசையும் கேட்க வைக்கும் நல்ல கவிதையிது. ஆங்கிலத்தில் onomatopoeic என்பார்களே, அப்படிப்பட்ட த்வனிச் சிறப்போடு விளங்குகிறது.
கவிதையில் சொல்லப்படும் அறிவு சார்ந்த கருத்துகள் படிப்பவன் அறிவு வரை மட்டுமே செல்லும். ஆனால் அதன் த்வனியாகிய ஒலியின்பமே அறிவைக் கடந்து மனத்தளத்தின் ஆழத்தில் போய் அதிர்வுகளை ஏற்படுத்த வல்லது. அதுவே ஆகாயத்தை அளாவி நிரந்தரமான, அட்சரம் என்ற அழிவற்ற நிலையில் பரவியிருக்கக் கூடியது.
“என்ன ஓய், உபன்யாசமெல்லாம் பலமா இருக்கு?”
கலகலவென்று சிரித்துக் கொண்டே கேட்டது நான்; கேள்விக்குப் பதில்சொல்ல முடியாமல் துவண்டு போனது, வேறு யாருமில்லை, ஓடிப்போய்விட்டு நடுவில் சடாரென்று திரும்பி வந்து எனக்குள் புகுந்து கொண்டு வசனம் பேசிய நம்ம பழைய பிரஹஸ்பதி, சாட்சாத் புத்தி சிகாமணிதான்.
புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவியுண்டு. எனக்குத் தெரிந்தவரை ஒரே மனைவி. அவள் பெயர் . . . .ம்! என்ன பெயர் வைக்கலாம்? கொஞ்சம் யோசித்து விட்டு அப்புறம் வருகிறேனே.
(தொடரும்)