இசைக்கவி ரமணன்

 

சின்ன வயதிலிருந்தே, சில
பெரிய பெரிய ஆசைகள்
பின்னிப் போட்டிருக்கின்றன
உயிரை உலகோடு

மண்ணில் விழுந்த
மழைத்துளி என்னும் ஆச்சரியக்குறியை
உள்ளங்கையில் பம்பரம்போல் ஏந்தி
உற்றுப் பார்க்கவேண்டும்

ஒய்யாரி ஆடும் மழையின் இழைகளில்
ஒருதுளியும் நனையாமல்
கண்ணா மூச்சு ஆடவேண்டும்
காற்றோடு

நிலவில் வெண்ணெய் எடுத்து
உலவும் முகிலில் ஒன்றைத் திரியாக்கி, என்
கவிதையைச் சுடராக்கி, அவள்
கண்ணில் படும்படி வைத்துவிட்டு, அவள்
கண்ணில் படாமல், அவள்
கண்களைப் பார்க்கவேண்டும்

கால்பட்ட இடமெல்லாம்
கார்மழை பொழியவேண்டும்
கைபட்ட இடமெல்லாம்
கலயம் பொங்கவேண்டும்

காதலே கவிதையாய்
கவிதையே கண்களாய்
கண்களே நெஞ்சமாய்
நெஞ்சோடு எல்லோரையும்
நேசத்தால் அணைக்கவேண்டும்

சின்ன வயதிலிருந்தே, சில
பெரிய பெரிய ஆசைகள்
பின்னிப் போட்டிருக்கின்றன
உயிரை உலகோடு

கர்பத்திலிருந்தே மரணம்
கழுத்தைக் கவ்விப் பிடித்தபடிதான் இருக்கிறது
கால்வைத்த இடமெல்லாம் பொய்மை
கப்பித்தான் கிடக்கிறது

எனினும்
அழகான இந்த ஆசைகள்தான்
அற்ப உலகில்
அடுத்த அடியை எடுத்துவைக்க
ஆணையிடுகின்றன

வாழத்தானா பிறந்தோம்? மற்றவரை
வாழ்த்துவதே வாழ்க்கைக்கு
வலுவான காரணம். என்
வாசலெங்கும் சூறையிலும்
வரவேற்கும் தோரணம்

நிறைவேறிவிடுகின்ற ஆசைகளில்
நெஞ்சுக்கு லயிப்பில்லை
மின்னல்களை வகைபிரித்து
மீட்டும் வரை, என்பாடலை
இசைக்கப் போவதேயில்லை
எதற்கும் பொறுத்திருங்களேன்!
மீண்டும் நான் வருவேன்
மிரளாத வானத்தில்
மின்னலுக்குப் பஞ்சமேது

16.06.2014 / திங்கள் / 19,53

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *