காற்று வாங்கப் போனேன் – பகுதி 8
கே.ரவி-
புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவி உண்டு என்று சொன்னேன் இல்லையா? அவள் பெயர் மனோன்மணி என்று வைத்துக் கொள்ளலாமே. அவள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று எண்ணிவிட வேண்டாம். அவள்தான் கற்பனை, கற்பனைதான் அவள்.
மனோன்மணி இல்லாமல் சிகாமணி தனியே இருக்கும் போது அவன் சொல்வதெல்லாம் வெற்று வேதாந்தமாக (எவ்வளவு உயர்ந்த சொல்லை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகிவிட்டோம்!), விறுவிறுப்பில்லாத, ஸ்வாரஸ்யமில்லாத வரட்டுப் பேச்சாக இருக்கும். ஆனால், மனோன்மணியோடு சேர்ந்து விட்டாலோ சிகாமணிக்கு ரொம்ப குஷி வந்துவிடும். குதூகலமாகப் பேசுவான். அவன் சொல்லும் கதையெல்லாம் விறுவிறுப்பாகப் பழைய விட்டலாச்சார்யாவின் மாயாஜாலப் படங்கள் பாணியில் அமோகக் காட்சிகளாக ஜொலிக்கும். காந்தாராவ், ஜெயமாலினி எல்லாரும் வருவார்களா என்று கேட்டு விடாதீர்கள். சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.
எனக்கென்னமோ இந்த புத்தி சிகாமணியும், மனோன்மணியும் எப்படியோ பாரதியின் படைப்பிலும் இடம்பிடித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆம், இரண்டு கயிற்றுத் துண்டுகளுக்குக் கந்தன், வள்ளி என்று பெயரிட்டு அவன் எழுதிய மிக உயர்ந்த, உன்னதமான காதல் காவியத்தின் நாயக, நாயகியர் இவர்களே என்று எண்ணுகிறேன். அவர்களுடைய ஊடலையும், கூடலையும் எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான் பாரதி!
ஆனால், சில நேரங்களில் மனோன்மணி மட்டும் சிகாமணி இல்லாமல் ஏதேதோ பேசத் தொடங்கி வகையாக மாட்டிக் கொள்வாள். ஒரு சம்பவம் சொல்கிறேன். அதை சொல்வதற்கு முன் ஒரு சிறு வரலாற்றைச் சொல்ல வேண்டும். பீடிகை பீதாம்பரம் என்று எனக்குப் பட்டம் கொடுத்தாலும் பரவாயில்லை, நான் அதைச் சொல்லியே ஆக வேண்டும்.
இன்று மிகச்சிறந்த பேச்சாளராக மதிக்கப்படும் என் இனிய நண்பன் சுகி சிவம், பள்ளி,கல்லூரி நாட்களில், அதாவது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கவிதைகளும் எழுதியிருக்கிறான். உலகம் போற்றும் பேச்சாளனாகவும், சிந்தனையாளனாகவும் வளர்ந்துவிட்ட அவனை இப்பொழுது ஒருமையில் அழைக்கவே கூச்சமாக உள்ளது. ஆனால் மரியாதை நிமித்தம் அவர், இவர் என்று போட நெருக்கம் இடம்தர மறுக்கிறது.
அவன் எழுதிய கவிதைகள் தரமானவை, சுவையானவை. அதுவும் வேற்காடு கருமாரியம்மன் மீது அவன் எழுதி, நாங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் வாரம்தோறும் பாடிய பாடல்கள் எங்கள் குழுவில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்கள்.
“அண்ட முட்டையினை விண்டு கண்டிடினும்
அன்னை சக்திவரு வாளடா – அவள்
தீமை வெட்டுமொரு வாளடா
. . .. . .
. . . . . .
. . . . . .
கொத்து வேப்பிலைக் கைத்த லத்திடை
வைத்த நற்குங்கு மச்சிலை – தொழ
வாடும் உன்மன்ம தக்கலை”
போன்ற பக்திமணம் கமழும் வரிகள்;
“கொடியோர்கள் கண்டஞ்சும் தாரார்புஜம் – கொண்ட
கொடிநின்னை அல்லாமல் வேறார்நிஜம்
விடியாத படிசெய்த மாபாதகம் – தீர்க்கக்
குடிலுக்குள் குடிகொண்ட கோமேதகம்”
போன்ற வைர வரிகள்!
இவையெல்லாம் அவனுடைய சொல்லாளுமைக்கும், கற்பனை வளமிக்க கவிதையுள்ளத்துக்கும் சில சான்றுகள்.
ஒருநாள்…! இப்பொழுது நான் சொல்வதை யாரும் தயவு செய்து அவன் மனைவி ராஜியிடம் போய் சொல்லி வத்தி வைத்து உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டிவிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு சொல்கிறேன். ஒருநாள், அதாவது, சிவத்துக்குத் திருமணம் ஆவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் அவன் கனவில் ஒரு பேரழகியைப் பார்த்ததாகச் சற்று படபடப்போடு சொன்னான். நீ என்ன செய்தாய் என்று கேட்டேன். பளிச்சென்று கவிதையிலேயே பதில் சொன்னான், அசந்து விட்டேன்.
“கண்ணளந்து நின்றிருந்தாள் கதலித்தேன்
கையளைந்து நானவளைக் காதலித்தேன்“
கையளந்து இல்லையப்பா, கையளைந்து! “சிறுகை அளாவிய கூழ்” நினைவுக்கு வருகிறதோ!
எவ்வளவு சுவையான வரிகள். கதலித்தேன் நீண்டு காதலித்தேன் என்று ஆன சுவையைத் தாண்டிப் போக முடியவில்லையே! உஷ், மூச்சுவிடக் கூடாது.
சிவமும் நானும் எங்கள் கல்லூரி நாட்களில் ரசித்துப் படித்துக் கொண்டிருந்த கவிஞர்களில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கே முதலிடம். அதற்குக் காரணமாக இருந்தவர் திரு.ஒளவை நடராஜன்.
சுரதா, அப்போது தொடர்ந்து ஆனந்த விகடனில் செய்திகளையெல்லாம் செய்யுள் நடையில் எழுதி வந்தார். திருமதி கே.ஆர்.விஜயாவுக்குக் குழந்தை பிறந்த செய்தியை “கேயார் விஜயா தாயார் ஆனார்” என்று அவர் எழுதியது மிகவும் பிரபலமானது.
அவருடைய இந்த முயற்சிகளைக் கேலி செய்து ‘கம்பாசிடர் கவிதைகள்’ என்று திரு.சோ அவருக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து விட்டார்.
அந்த விமர்சனத்துக்கு ஓர் அருமையான கவிதை மூலம் சுரதாவே விடை சொல்லியிருந்தார். அந்தக் கவிதையின் நிறைவு வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படவேண்டிய வரிகள்:
“மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை
மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”
தீவிர சுரதா ரசனையின் பிடியிலிருந்த சிவமும், சோவின் விமர்சனத்துக்கு ஒரு நல்ல பதில் கவிதை எழுதி அதுவும் பிரசுரமானது. ஆனால் ஆனந்த விகடனில் இல்லை. பின் எந்தப் பத்திரிகையில்? அது ஒரு பெரிய கதை!
எங்கோ போய்விட்டோம். மீண்டும் சிகாமணி, மனோன்மணி விவகாரத்துக்கு, (விவாக ரத்துக்கு என்று மாற்றிப் படித்துவிட வேண்டாம்) வருவோம். கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்வோமே.
“என்னய்யா, மூச்சு விடாதே என்கிறீர், மூச்சு விடு என்கிறீர்” என்று நீங்கள் அங்கலாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. சற்று நேரம் என்னை நான் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, சிகாமணி-மனோன்மணி விஷயத்துக்கும், சிவம் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்கிறேனே! அப்புறம் சந்திப்போமா?
(தொடரும்)