-எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

வானத்து வெண்நிலவு
வசைபாடி நிற்பதில்லை                                             moon and clouds for jayarama sarma kavithai
வண்ணமிகு தாரகைகள்
வம்புதும்பு செய்வதில்லை
நீலநிற முகிற்கூட்டம்
நிந்தனையும் செய்வதில்லை
நீள்புவியில் வாழ்பவர்கள்
நினைத்துமிதைப் பார்ப்பதுண்டா?

கண்சிமிட்டும் தாரகைகள்
கண்டனமும் செய்வதில்லை
கருமேக முகிற்கூட்டம்
கருத்தேதும் சொல்வதுண்டா?
சுட்டெரிக்கும் சூரியனும்
சுடுசொற்கள் சொல்வதில்லை
சுற்றிநிற்கும் மனிதரிதைக்
கற்றுக்கொள்ள வேண்டாமா!

சோலைமயில் எந்நாளும்
தோகைவிரித் தாடிவிடும்
காலைமாலை என்றின்றி
கருங்குயிலும் பாடிவிடும்
காலைவேளை வருந்தென்றல்
கன்னமதை வருடிவிடும்
ஞாலமீது உள்ளவர்கள்
நல்லதையேன் மறக்கின்றார்?

வளர்ந்து மரம்நிழல்கொடுக்கும்
வகைவகையாய்க் கனிகொடுக்கும்
பரந்தவெளி வளர்புல்லும்
பசுவினத்தின் பசிதீர்க்கும்
பயன்கருதா உதவிநிற்கும்
பாங்கினையும் பார்த்தபின்னர்
பாரிலுள்ள மனிதரெல்லாம்
பக்குவத்தை அடையாரா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *