குறளின் கதிர்களாய்…(31)
-செண்பக ஜெகதீசன்
இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல். (திருக்குறள்: கேள்வி – 415)
புதுக் கவிதையில்…
வழுக்கி விழாதிருக்க
வகையாய் உதவிடும்
ஊன்றுகோல்…
வாழ்வில் அதுபோல்,
தடுக்கி விழாமல்
தாங்கிப் பிடித்திடும்,
நீ
கேட்டு நடக்கும்
ஒழுக்கமுடையோர் சொல்!
குறும்பாவில்…
ஊன்றுகோல் விழவிடாது தாங்கிடும்
உடலை,
ஒழுக்கமுடையவர் சொல் – வாழ்வை!
மரபுக் கவிதையில்…
உடலது தளர்ந்த போதினிலே
வழுக்கிக் கீழே விழுந்திடாமல்
நடந்து திடமாய்ச் செல்லுதற்கே
நல்ல துணைதான் ஊன்றுகோலே,
உடலைத் தாங்கிடும் துணையதுபோல்
வாழ்வில் வழுக்கி வீழ்ந்திடாமல்
இடரது அகற்றிடும் இன்துணையாய்
இயக்கிடும் ஒழுக்க முடையோர்சொலே!
லிமரைக்கூ…
வழுக்கி வீழ்ந்திடாதிருக்க ஊன்றுகோலுடன் செல்!
அதுபோல் வாழ்வில்
வழுக்கிடாதிருக்கக் கேட்டுநட ஒழுக்கமுடையோர் சொல்!
கிராமிய பாணியில்…
தடியிது தடியிது கைத்தடி
தாங்கிப் புடிக்கும் கைத்தடி,
தடுக்கி வுளாமக் காத்திடுமே
தக்க தொணயா வந்துடுமே!
மனுச வாழ்க்கக் கதயிதுதான்
ஒழுங்கானவன் பேச்சக் கேட்டா
ஒழுங்காப் போவும் வாழ்க்கயுமே,
வழுக்கிவுளாமக் காப்பாத்தும்
வாழ்க்கத்தொணயாக் கூடவரும்,
நல்லசொல்லக் கேட்டுநட
நன்மயெல்லாஞ் சேந்துவரும்…
தடியிது தடியிது கைத்தடி
தாங்கிப் புடிக்கும் கைத்தடி!
அனைத்துக் கவிதைகளும் அருமை நண்பரே! வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வழங்கிச் சிறப்பித்த
நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு,
மிக்க நன்றி…!