கார்த்திகேயன், விமலதாரணி

கேள்வி :1

                    நான் 17 வயது மாணவி.  கிராமத்துப் பள்ளியில் பயின்றவள் தற்போது நகரத்தில் பயில்வதால் எனக்கு பாடம் மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாததை கேட்டால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். என்னை பொருட்படுத்த மாட்டேங்கிறார்கள். ஏனெனில் நான் மட்டும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவி. டியுசன் வைக்கவும் வீட்டில் வசதி இல்லை. நான் தனித்து விடப்பட்டது போல் உணருகிறேன். என்னுடன் சாப்பிடுவதற்குக் கூட தோழிகள் இல்லை கல்லூரியில் இப்படி இருப்பதால் வெளி இடத்திலும் பேசுவதற்குக் கூச்சமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது. நான் என்ன செய்வது?

பதில்

வாழ்க்கை வாழ்வதற்கு தான். வாழ்க்கையைக் கண்டு பயப்படும் பெண்ணால் வாழ்க்கையை ரசிக்க முடியாது, வெல்லவும் முடியாது. சின்ன விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் மோதிப் பார்த்துவிட வேண்டும் ”என்னாலும் முடியும்” என்ற தைரியத்தோடு களத்தில் இறங்கி விட வேண்டும். மொழி என்பது நாம் நம் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் கருவி. ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். சுலபமாக எளிமையாக ஒரு மொழியில் பேச வேண்டுமென்றால் முதலில் அம்மொழியில் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அப்போது தான் அந்த மொழியில் சரளமாகப் பேச முடியும். உங்களின் எண்ண ஒட்டம் தமிழில் இருந்தால் எதிரே நிற்கும் நபரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது சிரமம். பேச்சில் சரளம் இல்லாமல் திக்கித் திக்கி திணறவேண்டி வரும். காரணம் பேசுவதற்கு முன்னால் உங்களை அறியாமல் உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கும். இது சிரமத்தை ஏற்படுத்தும் . ஆங்கிலத்திலேயே பேச விரும்புவதால் அந்த மொழியிலேயே சிந்தனை ஓட்டத்தை உருவாக்குங்கள்.

                         உங்கள்தோழியிடமும் ஆங்கிலம் தெரிந்த உறவினர்களிடமும் தப்பு, தவறு என்று பார்க்காமல் ஆங்கிலத்தில் பேசிப் பழங்குகள். தப்பாக பேசினாலும் பரவயில்லை . அதை மற்றவர்கள் பரிகாசம் செய்தாலும் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் தினமும் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கடிதத்தில் ஒரு விஷயம் என்னை யோசிக்க வைக்கிறது. ஆங்கிலம் தெரியாததால் மட்டுமே உங்களுக்கு இந்த பாதிப்பு இல்லை. எனென்றால் அன்பு, நட்பு எல்லாம் மொழிக்கும் அப்பாற்பட்டது. மொழி தெரியாததால் தோழிகள் கிடைக்காமல் தனிமையை அனுபவிப்பதாகக் கூறுவது தவறு. உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதனால் உங்களையே நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள் . தாழ்வு மனப்பான்மையை கண்டறிந்து அதனை விலக்குங்கள்.

கேள்வி: 2

                     எனக்கு 30 வயது ஆகிறது. எனது தந்தை மிகவும் கண்டிப்பாக நடத்தியதால் எனது 10 வயதில்  இருந்தே மனதில் ஒருவித பயம் தோன்றி விட்டது. எனக்கு பேச்சு திக்கித் திக்கி வரும். புது ஆட்களிடமும், பெரிய மனிதர்களிடமும் பேச முற்படும் போதெல்லாம் ஒரு வித படபடப்போடு, கை கால்களும் மிகவும் குளிர்ச்சியடைகிறது. இதை எப்படிப் போக்குவது?

பதில் :

சிறு வயதின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் வல்லமை பெற்றவை தான். ஆனால் முதலெழுத்து கோணி விட்டதால் கடிதமே கோணலாய் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான வலிமை உள்ளது.

இங்கே உங்களுக்கு எற்பட்ட பாதிப்புக்கு அதிக கண்டிப்புடன் உங்களை வழிநடத்திய தந்தை காரணமாய் இருந்திருக்கிறார். நாளடைவில் தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் விசுவரூபம் எடுத்து உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை திருத்தி அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களுடையது தான். திக்கு வாயால் வாழ்க்கையை ஆரம்பித்த சிலர் இன்று தலைசிறந்த மேடை பேச்சாளர்களாய் இருப்பது நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கும் உண்மை. முதலில் உங்கள் பயத்தைப் போக்கி  தன்னம்பிக்கையை  வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தந்தையை உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை உங்களிடம் எதிர்பார்த்து அது நிறைவேறாமல் போன போது உங்களிடம் கோபம் கொண்டிருக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். உங்கள் சக்திக்கு உட்பட்ட இலக்கை நீங்கள் அடையும் போது உங்கள் மனதிற்கு அது புது தெம்பைக் கொடுக்கும். தினமும் காலை எழும் போது உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் வழிபடும் கடவுளிடம் இன்று எனக்கு பிரச்சனை எதிர் நோக்கும் பலத்தைக் கொடு என்று முழுமனதுடன் வேண்டிக் கொள்ளுங்கள் . புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ள அது துணையாய் இருக்கும். நண்பர்களிடம் அதிகமாகப் பேசுங்கள். விவாதங்களில் ஈடுபடுங்கள். உணர்ச்சி வசப்படும்போது திக்குவதை பொருட்படுத்தாமல் பேசுங்கள். பயத்தால் ஏற்படும் பலகீனத்தால் தான் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது. தேவைப்பட்டால் மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையும் பெறுங்கள்

கேள்வி 3

                   நான் 28 வயது பெண். வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். பலரும் பாராட்டும்படி படித்தேன். நான் படித்து முடித்ததும் தகுதி அடிப்படையில் நல்ல வேலை கிடைத்தது. அன்றும் இன்றும் எனக்கு பணத்திற்கும், அழகிற்கும்,  அந்தஸ்திற்கும் குறைவில்லை. என் தோழிகளாகட்டும் என்னோடு வேலை பார்ப்பவர்களாகட்டும் நம்ம ’சுஜா கொடுத்து வைத்தவள்’ என்று என் காது படவே பேசுகிறார்கள். ஆனால் நானோ எதையோ இழந்தவள் போல மகிழ்ச்சி இல்லாத நிலையில் இருக்கிறேன். பணி முடிந்து திரும்பும்போது எனது காரை  எங்கேயாவது நிறுத்தி விட்டு சாலை ஓரத்து குடிசைகள் வழியாக நடக்கிறேன். அவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நானும் சராசரி பெண்களைப் போல மகிழ்ச்சியாக இருக்க வழி சொல்லுங்கள்.

பதில்

இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் பலரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது இன்று பலரும் பணம் அந்தஸ்து அழகால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை இருந்தால் கூட மகிழ்ச்சி இல்லை என்பதை நீங்கள் உணர்த்துகிறீர்கள். இன்னொரு விஷயம். நடைப்பாதை குடிசைவாசிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்கள் நினைப்பது எப்படி சரி இல்லையோ அது போல அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பதும் சரியல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவுக்கு பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும். அதனை  எதிர்கொண்டு அதையும் மீறி ஆங்காங்கே இருக்கும் மகிழ்ச்சியான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதனை அனுபவித்து யார் நிம்மதி அடைகிறார்களோ அவர்களுக்கே மகிழ்ச்சி கிடைக்கிறது. நீங்களும் உங்கள் அளவில் இருந்து கொண்டு மகிழ்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் சாதனைகளை சத்தமாக வெளியே சொல்லுங்கள். சறுக்கி விழுந்ததை மறந்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள் மனதில் எதையும் மூடி வைக்காதீர்கள். உற்சாகமாக இருங்கள் மகிழ்ச்சி தானே வரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.