Blog

  • ஓர் விண்ணப்பம்

     ராதா விஸ்வநாதன் index

    பிரம்மனே..
    பருவத்தில்
    கொடுத்தாய் பல
    இராசாயன மாற்றங்கள்
    வாழ்த்துகிறோம் அதற்காக

    இன்று….
    மீண்டும்
    உனக்கு ஓர் விண்ணப்பம்

    தகாத முறையில்
    பெண்மை தாக்கப் பட்டால்
    பெண்மையைக் காக்க
    கொடுப்பாய் புதியதொரு
    இரசாயன மாற்றம்

    அக்கணத்திலே கொடியதொரு
    நாற்றத்துடன் உடல் விஷமாகிட
    அருள் வேண்டுகிறோம்
    கலியுக பாஞ்சாலிகள்

    அநுப்புனர்…….
    வி. நந்திதா

    படத்துக்கு நன்றி

    http://thestorybehindthefaces.com/tag/picasso/

    Share
  • ஆண்களின் உலகம்

    நிர்மலா ராகவன்

    “எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க! நாம்ப கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செய்து பாப்போமேன்னுதான்..!” நான் கேட்காமலேயே விளக்கம் தந்தாள்.

    அவள் — கமலினி. கலைத்துறைக்காக வைத்துக்கொண்ட பெயர். பெற்றோர் வைத்த பெயர் கோமளம் என்று எங்கோ, எப்போதோ, படித்த நினைவு.

    “உங்களுடைய எழுத்தை ஒன்றுவிடாமல் படித்திருக்கிறேன், ஆன்ட்டி! பெண்கள் தைரியமாக இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி உங்களை மாதிரி யார் எழுத முடியும்!’ என்று ஏதோ இலக்கிய விழாவில், தானே வந்து பாராட்டினாள்.

    பெருமையுடன், அந்தப் பெண்மேல் பச்சாதாபமும் உண்டாயிற்று. தெரிந்தவர்கள் பலரும் கேட்டிருக்கக் கூடும், `காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல், சினிமா, டிராமான்னு ஏன் அலையறே?’ என்று.

    பள்ளி நாட்களிலேயே அவள் புகழ் பெற்றிருந்தது அக்கம்பக்கத்தினர்  வெறும் வாயை மெல்லக் கிடைத்த அவல்.

    கோலாலம்பூரின் பெருமிதச் சின்னமான இரட்டைக் கோபுரம் கண்ணுக்கு அருகே தெரியும் புறம்போக்கு நிலத்தில், சுவர்கள் மரப்பலகையாலும், தரையில் மட்டும் சிமெண்டாலும் கட்டப்பட்ட வீட்டில் வளர்ந்தவள் கமலினி.

    குடித்தே தன் சொற்ப சம்பாத்தியத்தையும் அழித்துவிடும் தொழிலாளிக்கு ஆறில் ஒரு குழந்தையாகப் பிறந்தவள் இப்படி நாடு முழுவதும் அறிந்தவளாகிவிட்டாளே என்று வயிற்றெரிச்சல் பட்டிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான்.

    `டி.வியில ஆடுது, பாடுது! இதுக்கெல்லாம் என்ன குடுத்திச்சோ!’ என்று தமக்குள் பேசிக்கொண்டிருப்பார்கள்.

    எனக்கு அவர்கள் யாரும் அறிமுகம் இல்லைதான். ஆனாலும், எனக்கு உலகம் தெரியும்.

    `பெண்களே பெண்களுக்கு ஏன் எதிரி ஆகிறார்கள், தெரியுமா? அவர்கள் தம் முழு அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தாமல் இருப்பதால்தான்!’ அமெரிக்காவில் பெண்களுக்கென பிரத்தியேகமான ஸ்மித் கல்லூரியில் எனக்குக் கற்பிக்கப்பட்ட  முதல் பாடம்.

    பிறரது ஏச்சுப்பேச்சுக்கு பயந்துவிடாது, தான் எடுத்த முடிவில் நிலையாக நின்ற இந்த சின்னப் பெண்ணைப் பார்த்து எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை தமிழ்ப் பெண்களுக்கு இந்த தைரியம் வரும்!

    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இவளைப் பார்த்து வருகிறேன், திரையில். இன்றும் பதினெட்டு வயதுப் பெண்ணாகத்தான் இருந்தாள். எனக்கோ இன்னும் நாற்பது வயதுகூட ஆகவில்லை. என்னை `ஆன்ட்டி’ என்று உரிமையுடன் அழைக்கிறாள்! என் அபரிமிதமான சாப்பாட்டு ஆசையும், ஓயாது படித்து, உடற்பயிற்சியை அலட்சியம் செய்வதும் காரணமோ? அவளிடம் ஒரு சிறிய கோபம் எழுந்தது.

    ஒருவேளை,  மலேசிய வழக்கப்படி, தன்னைவிட நான்கே வயது பெரியவர்களாக, அது கடைக்காரரோ, டாக்ஸி டிரைவரோ ஆனாலும், `அங்கிள்,’ `ஆன்ட்டி’ என்று அதிமரியாதையுடன் அழைத்துப் பழகியதால் இருக்கலாம் என்று என்னையே நான் சமாதானம் செய்துகொண்டேன்.

    நான் இப்படி குண்டாகப் போயிருப்பது இந்த ஆண்களால்தான் என்று ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களையும் மனதுக்குள் வைதேன்.

    பின்னே என்னவாம்? பழைய ஓவியங்களையும், கோயில் சிற்பங்களையும் பாருங்கள்! எத்தனை பெண்கள் இப்படி உருண்டு திரண்டு இருக்கிறார்கள், இல்லை, இருந்திருப்பார்கள்? எல்லாம் இந்த ஆண் ஓவியர்கள், சிலை வடிப்பவர்கள் செய்த திரிசமன். அவர்களுடைய கனவுலகில் இருக்கும் பெண்களை நனவாக்கிக்கொள்ளும் அற்பர்கள்!

    தாம் ஏதோ விதத்தில் மட்டமானவர்கள் என்று பல பெண்கள் சுருங்கிப்போவது இந்தமாதிரி ஆண்களால்தான்! அதனால்தான் நான் வேண்டுமென்றே உடலழகை அலட்சியம் செய்தேன்.

    `இக்கல்லூரியில் உங்களது எல்லையை விரிவாக்கப் போகிறோம். உலகெங்கும் இருக்கும் பெண்களின் நிலையை நீங்கள் உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு! நம் கல்லூரியில் படித்த நான்ஸி ரீகன் அமெரிக்காவின் முதல் பெண்மணியானார் என்பதை மறவாதீர்கள்!’ எங்களது போதனைகள் அந்த ரீதியில் அமைந்ததால், நான் குதிரைச் சவாரி, உயிர்காக்கும் ரப்பர் உபகரணங்கள் எதுவுமின்றி ஆழ்கடலில் நீச்சல் எல்லாம்  பழகினேன்.

    `என்னால் இவ்வளவெல்லாம் செய்ய முடிகிறதே!’ என்ற வியப்பு எழுந்தபோதே, ஆண்களின்பால் விதைக்கப்பட்ட கசப்பு அதிகரித்தது. தாம் இரண்டாந்தார மக்கள்தாம்  என்று பெண்களை எவ்வளவு காலமாக நம்ப வைத்திருக்கிறார்கள்!

    அப்படி எண்ணாத ஒருவர் என்னை மணக்க விரும்பியபோது, அதிக யோசனை செய்யாது அவரை மணந்தேன்.

    ஆனால், ஆண்களின் மொத்தப் பிரதிநிதி என்றவரைப் பாவித்து, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் நான் அவரைத் தாக்குவேன் என்று நாங்கள் இருவருமே அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

    நான் வெளிநாட்டில் தங்கிப் படித்த அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொண்டேன், எழுத்து மூலமாக. என் பெண்ணியக் கருத்துகளை இளம்பெண்கள் ஆர்வமாகப் படித்தார்கள். (வயதான பெண்மணிகளைத் திருத்த அவர்களைப் படைத்த இறைவனால்கூட முடியாது).

    “ஒரு பெண் கொஞ்சம் முன்னுக்கு வந்தாலே அவளைப்பத்தி இல்லாததையும், பொல்லாததையும் பேசறவங்களைப்பத்தி என்ன நினைக்கறீங்க, ஆன்ட்டி?” கமலினி கேட்டபோது, புன்னகைத்தேன்.

    “இந்த ஒலகம் இருக்கே, அது நாம்ப வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். எப்படியும்தான் பேசப்போறாங்க! நாம்ப புகழோட வாழ்ந்து, மத்தவங்களுக்கு பேச ஒரு வாய்ப்பு குடுப்போமே!” கல்லூரியில் எனக்குக் கொடுக்கப்பட்ட உபகாரச் சம்பளம் வீண்போகவில்லை என்ற பெருமிதம் ஏற்பட்டது.

    ஓசையெழாமல் அவள் கைதட்டினாள். “நல்லவேளை, நீங்க வர்றது தெரிஞ்சு இன்னிக்கு ஒங்களைப் பாக்க வந்தேன்! என் மனசில இருந்த குழப்பமெல்லாம் போயிடுச்சு!”

    என்ன குழப்பம் என்று நான் கேட்கவில்லை.

    தானே தெரிந்தது, சில மாதங்களுக்குள். எல்லா தமிழ் தினசரிகளின் ஞாயிறு பதிப்புகளிலும் முதல் பக்கத்திலேயே போட்டிருந்தார்கள், `நம்ப கமலினி கோலிவுட்டில் நடிக்கப் போகிறார்!’ என்று. உள்ளே அந்தப் பெண்ணின் முழுப்பக்க பேட்டி, புகைப்படத்துடன்.

    அவளுடைய போட்டோ ஆண்களின் மனத்தைக் கவரவென்றே எடுக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றியது. கணுக்கால் தெரிய, இடுப்பை அகலமாகக் காட்டும் பாவாடை. கண்ணைக் குத்துவதுபோன்ற, இயற்கைக்குப் புறம்பான அளவில் இருந்த மார்பகங்களை மேலும் எடுத்துக் காட்டவென்றே உடலைப் பிடிக்கத் தைக்கப்பட்ட மேல்சட்டை.

    முன்பு சுமாராக இருந்த அவள் முகத்தில் நிறைய வித்தியாசம். முன்னாள் உலக அழகியின் சாயலைக் காப்பி அடித்தமாதிரி வெகு அழகாக மாறியிருந்தாள்.

    ஓ! முகத்தின் பல பாகங்களிலும், மார்பகத்திலும் தாராளமாக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறாள்! லேசாகச் சிரிப்பு வந்தது.

    அன்று மத்தியானம் நான் தனியாக அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, சின்னத்திரையில் கமலினி வந்தாள். ஆங்கில உச்சரிப்புடன் தமிழில் ஏதோ பேசினாள். உற்சாகமாக அவரைக் கூவி அழைத்தேன்.

    “இது இந்த ஊர் பொண்ணு! இப்போ..,” நான் தொடர்வதற்குள், அவர் தன் கையாலேயே என்னைத் தடுத்தார்.

    “இதுக்கா அவ்வளவு அவசரமா என்னைக் கூப்பிட்டே? யார் எப்படிப் போனா நமக்கென்ன?” அபூர்வமாகத்தான் அவர் குரலை உயர்த்துவார்.  “நாம்ப மத்தவங்களைப்பத்தி வம்படிச்சா, அப்புறம் நம்மைப்பத்தி மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு பயந்துக்கிட்டே காலந்தள்ளணும்!”

    நாலடி நடந்தவர், என்னைத் திரும்பிப் பார்த்தார். “இவ்வளவு படிச்சும், நீ இப்படி பாமரத்தனமா பேசறது ஆச்சரியமா இருக்கு!”

    எனக்கு அவமானமாக இருந்தது. பட்டென்று டி.வியை நிறுத்தினேன். அன்று பூராவும் ஏதேதோ வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டேன். சோயா பீன்ஸை வெந்நீரில் ஊறவைத்து அரைத்து, வடிகட்டிய பாலைக் கொதிக்க வைத்தேன்.

    `எனக்கு ஓய்வே கிடையாதா!’ என்று கெஞ்சுவதுபோல் தோள் வலிக்க, அதைப் பிடித்துவிட்டுக் கொண்டேன். அதை அவர் பார்த்திருக்க வேண்டாம்.

    “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன். எதுக்கு ஓயாம வேலை செய்யறே? இப்போ உயிரைக் குடுத்து இதைப் பண்ணணுமா? கடையில நாலு பாக்கெட் வாங்கினாப் போச்சு!”

    அவரது கரிசனம் ஏற்கெனவே கொந்தளித்துக்கொண்டிருந்த என்னை மேலும் உசுப்பியது. “ஒங்களை யாரும் கேக்கல. எல்லாம் எனக்குத் தெரியும்!” என்று சீறினேன்.

    `இப்போது நான் என்ன செய்தேன்!’ என்பதுபோல் ஒரு புதிரான பார்வை பார்த்துவிட்டு, அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

    `நான் ஏன் இப்படி இருக்கிறேன்!’ என்ற வருத்தம் எழுந்தது.

    நீர்க்க இருக்காமல், நிஜமான சர்க்கரை போட்டு, நாமே வீட்டில் சோயா பால் பண்ணினால் உடம்புக்கு நல்லது என்று நான் செய்ததை அவர் பாராட்டவில்லையே என்ற வருத்தமா?

    சிறிது யோசித்தபின், உண்மைக் காரணம் அதுவல்ல என்று புரிந்தது. நான் அந்த நடிகையைப்பற்றிப் பேசியதை அவர் ரசித்துக் கேட்கவில்லை என்ற கோபம் எனக்கு.

    என் கோபம் தணியும்வரை அவர் என் கண்ணிலேயே படமாட்டார் என்பது தெரிந்ததுதான். கம்ப்யூட்டர் அறையிலேயே இரவில் வெகு நேரம் உலக சமாசாரங்கள், அதனுடன் செஸ் விளையாட்டு. அப்புறம் அங்கேயே படுக்கை என்று பொழுதைக் கழிப்பார்.

    நானே அவ்வளவு சோயா பாலையும் குடித்துத் தொலைத்தேன்.

    `ஆணும் பெண்ணும் சமம்’ என்று போதித்தார்களே எங்கள் கல்லூரியில், அடிப்படையிலேயே அவர்களிடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு! அவர்கள்தான் சொன்னால், என் புத்தி எங்கே போயிற்று? அறிவாளி என்று பெயர்தான்!

    என்னால் தூங்க முடியவில்லை. எண்ணமெல்லாம் அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்தது. கமலினியின் நடையுடை பாவனைகள் எல்லாமே ஆண்களை மனதில் வைத்துத்தான் என்று தோன்றியது.

    `பிறர் முன்னுக்கு வரவிடாமல் செய்கிறார்கள்!’ என்று பெண்களின்மேல் குற்றம் சாட்டியவள்,`அவர்கள் என்ன சொல்வது!’ என்ற மிதப்புடன், ஒரேயடியாக ஆண்கள் பக்கம் சாய்ந்துவிட்டாளே என்ற வருத்தமா?

    அவள் இப்படி ஆக, நானும் ஒரு வகையில் காரணம் ஆகிவிட்டேனோ, பெண்களைப் பழித்ததால்?

    `இது ஆண்களின் உலகம்!’ என் பேராசிரியரே சொல்வதுபோல் காதருகே கேட்டது.

    எனக்குக் கோபம் வந்தது. உடனே படபடப்பு உண்டாயிற்று.

    `நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும்!’ ஒவ்வொரு முறையும் டாக்டர் என்னிடம் கெஞ்சுதலாகச் சொன்னது நினைவுக்கு வந்தது.

    முதல்முறை நான் இதனை என் கணவரிடம் தெரிவித்தபோது, அவர் மெல்லச் சிரித்தபடி, “உன்னைமாதிரி அறிவுஜீவிகளுக்கு மூளையை விரிவு படுத்தத்தான் நேரம் சரியாக இருக்கிறது!”என்று குரல் அதிராது சொன்னாலும், மறுநாளே ஆயிரம் ரிங்கிட்டுக்குமேல் கொடுத்து, வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஒரு சாதனம் வாங்கிவந்தார்.

    `நீ குண்டு!’ என்று சொல்லாமல் சொல்கிறார்!

    `உங்கள் ஒட்டடைக்குச்சி உடம்பிற்கு இது எவ்வளவோ தேவலாம்!’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டே அப்பால் சென்றேன். எதுவும் பேசப் பிடிக்கவில்லை. பணத்தைப் பாழ் செய்து வாங்கிய பொருள் தூசு படிந்து கிடக்கும்போது அவரே புரிந்துகொள்ளட்டும்!

    வழக்கம்போல் எங்கள் கோபம் ஓரிரண்டு நாட்களே நீடித்தது.

    `எவ்வளவு வயதானாலும், என்ன இப்படி சின்னக் குழந்தைபோல நடந்து கொள்கிறேன்!’

    அறிவு வளர்ந்த அளவுக்கு உணர்ச்சிகள் வளரவில்லையோ? நினைக்கும்போதே அயர்ச்சி வந்தது.

    இந்த லட்சணத்தில், பிறருக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இருக்கிறதா!

    நத்தைபோல் என்னுள்ளேயே சுருங்கிக்கொண்டு, ஓயாமல் படித்தேன்.

    அந்த தினசரியின் முதல் பக்கத்தில் கமலினியின் போட்டோ!

    அடக்க முடியாத ஆர்வத்துடன் பார்த்தேன்.

    தலைப்பே அதிரவைத்தது. `விபசாரக் கேஸில் மாட்டிய நடிகை!’ மேற்கொண்டு படிக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. பேப்பரை வீசியெறிந்தேன்.

    `ஒரு ஆணுக்கு மனைவியாக, அடங்கி வாழ்வதில் என்ன சிறப்பு?’ என்றவள், தெரிந்தே பல ஆண்களுக்குக் கைப்பாவையாக ஆகியிருக்கிறாள்!

    `பாவம்! அந்த ஏழைப்பெண் எப்படித்தான் குறுகிய காலத்தில் நிறைய பணமும் புகழும் சம்பாதிப்பது!’ என்று அறிவு வாதாடினாலும், கசப்பான ஒர் உண்மை புலப்பட்டது.

    இது ஆண்களின் உலகம்தான். சில அப்பாவிகளை எதிர்ப்பதால் மட்டும் அதை மாற்றிவிட முடியாது.

    உடற்பயிற்சி செய்யும் கருவியைத் தூசி தட்டினேன். போகாத ஊருக்கு உயிரை விட்டுக்கொண்டு, அந்த சைக்கிளின் பெடலை அமுக்கினேன்.

    பார்த்தும் பாராததுபோல அப்பால் நகர்ந்தார் என் கணவர்.

    Share
  • சிறுகை அளாவிய கூழ் – 5

    இவள் பாரதி

    அவள் முகத்திலிருந்து
    ஒரு புன்னகை
    வரவழைக்க
    அதிக பிரயத்தனம்
    ஏதும் தேவையில்லை
    உங்களிடமிருந்து
    ஒரு புன்னகை
    வெளிப்பட்டால் போதும்

     

    கொடுக்க நானும்
    குடிக்க நீயும்
    தவித்துக் கிடக்கிறோம்
    கட்டிய பாலை
    வெளியேற்ற
    தோதான இடமின்றி
    யாருமறியாமல் அழுகிறேன்
    அலுவலகத்தில்

     

    Share
  • மொழிகடந்த மொழி

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    அதிகாலையில்
    அதே நேரத்தில்
    அதே நிறுத்தத்தில்
    அதே பேருந்தில்
    ஏறுவதுண்டு

    நாடு
    அந்நிய நாடு
    நானும்
    அந்நியன்

    எந்த நிலையிலும்
    என்
    இதயம் நழுவ
    வாய்ப்பில்லை
    வழியில்லை

    அந்த நேரம்
    எப்போதும்
    நெருக்கடி நேரம்தான்

    நின்றுகொண்டிருந்த
    நான்
    ஒரு திருப்பத்தில்
    பேருந்து
    திரும்பும்போது
    பின்னிருக்கையிலிருந்து
    ஒரு மஞ்சள் நிலா
    கீற்றென
    இமைகளை அசைத்து
    இசைவைச்சொன்னது

    தீப்பொறி
    தீண்டியதுபோல்
    திடுக்கிட்டேன்

    பாம்பை மிதித்தவனாய்
    பதறினேன்

    இனம், மதம்
    மொழிகடந்த
    மொழியில் தவித்தேன்

    வழிதெரியாது
    விழித்தேன்

     

     

    யாரும் அறியா
    மின்னலை என்னுள்ளே
    விழுங்கினேன்

    அன்று
    இடம்பார்த்து அமராமல்
    நின்று
    பயணத்தை முடித்தேன்

    இன்னும் முடியவில்லை
    நினைவின் பயணம்
    இன்னும் உலரவில்லை
    நினைவின் ஈரம்

    (1990-ல் ஒருநாள் பேருந்தில் நிகழ்ந்த நிகழ்வை நினைத்தவேளையில் 2.03.2014)

    Share
  • கூகிளாண்டவரின் அசரீரி!…

    இன்னம்பூரான்

    கூகிளாண்டவரின் அசரீரி!

    doodle_for_google_India_past_winners

    தேர்தல் வரும்பின்னே ! ஆருடங்கள் வரும் முன்னே!

    கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் எடுத்துரைப்பதாவது:

    இணைய வாசிகள் இந்திய அரசியலை பற்றி நுட்பங்களும், நாட்டு நடப்பும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். வரும் தேசீய தேர்தலில், தலைவர்களின் மோதல் மட்டுமில்லை; கட்சிகளின் கோட்பாடுகளும், உகந்த/கூடாநட்புகளும் பற்றியும், ராகுல் காந்தி vs நரேந்திர மோடி என்ற ஜடுகுடு பற்றியும் அறிய விழைகிறார்கள். மேலும், ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளக்கின்றன.

    2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து ஆகியவை பற்றி கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை. ராகுலரின் மஹாத்மியங்களும், ‘ஆம்’ ஆத்மி ‘இல்லை’ ஆன விவகாரமும் எங்கும் பேச்சு. 1984 & 2002 கலவரங்களும் வரலாற்று நோக்கில் மீள்பார்வையில் உளன.

    முதற்கண்ணாக லஞ்ச லாவண்யமும் லோக்பால் பிரச்னையும் தலைமை வகிக்கின்றன.

    இன்றைய பார்வை லோக்பால் பிரச்னை பற்றியது. சர்வ விசாரணை வல்ல லோக் பால் என்ற சூப்பர் தணிக்கையாளனை கண்டெடுப்பது பற்றி. மஹாராஜ ராஜ ஶ்ரீ அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி தன் தலையிலேயே அபிஷேகம் செய்து கொண்டு, கண்டெடுப்பு கமிட்டியில் அமர ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும் மறுத்ததால் எமக்கு இக்கட்டு இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் சொன்னதற்கு பதில் இல்லை. (அ-து) கண்டெடுப்பு கமிட்டி சிபாரிக்குமாம். அப்பறம் பிரதமர் தலைமையில், எதிர் கட்சி தலைவர் உட்பட்ட உப்பரிகை கமிட்டி பெரும்பான்மை முடிவு எடுக்குமாம்?

    இந்தியா! நீ எங்கே செல்கிறாய்?

    Image Credit: http://cdn.ndtv.com/tech/images/doodle_for_google_India_past_winners.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • வாழ்க்கை எனும் ரயில் வண்டி

    விசாலம்trainimages
    வாழ்க்கை எனும் ரயில்  பாரு
    குறைந்த சுமையுடன்  அதில் ஏறு
    அதிக சுமைகள் அங்கு  தாங்காது ,
    அதிலுள்ளே இடமும்  போதாது .
    சுமைகளைப் பத்திரமாய் காத்தல்
    சுமந்து வரும் மன உளைச்சல் .
    பிரச்சனைகள் அதனால் வரும்
    பின் துன்பதையே அவை தரும்
    இலேசான சுமைகள் தூக்க சுலபம்
    இல்லாத சுமை அதைவிட லாபம்
    பந்தபாசச்சுமை    கனத்த எடை ,
    பக்தி வழி செல்ல அது ஒரு தடை ,
    அளவில்லா ஆசை  சுமைகளை வளர்க்கும்
    ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
    மனசுமைகள் இறக்க,  வேண்டும் ஒரு கூலிக்காரன்
    ஆன்மீக நிலையத்தில் நிற்கும்  ஒரு கூலிக்காரன்
    கூப்பிட்டவுடன்   நம் முன் தோன்றுவான்
    கூடிய  சுமையை அவன் தாங்குவான்
    அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி
    ஆத்ம ஞானம்  யாசிப்போம், பெறுவோம்   நிம்மதி ,
    நன்நடத்தையோடு   சுமையைக் கொடுப்போம்
    நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .
    படத்துக்கு நன்றி

    https://drawingfromexperienceblog.wordpress.com/tag/train/

    Share
  • திருமால் திருப்புகழ் (15)

     

    கிரேசி மோகன்

    unjal seva1
    தான தத்த தானா தனந்தன தான தத்த தானா தனந்தன
    தான தத்த தானா தனந்தன -தனதான….

    ———————————————————————————————————————–

    “சீதம் முத்தி சாவாய் முடிந்திட மாலை இட்டு மாரார் மயங்கிட img1090925013_1_1
    ஓலை கட்டி நாலாள் சுமந்திட -வனமேகி
    சூடு பட்டு சோறாய் அவிந்திட கூடு விட்டு பேயாய் அலைந்திடும்,
    வேடன் தொட்டு வாவா விளம்பிட -உனதாவி

    ஓதும் முத்தி சோணா சலந்தனில் வாழும் சித்தர் நானார் விளம்பலில்
    ஞான முற்று தானாய் விளங்கிடும் -சுகமேவ
    ஆழி சத்தம் ஆகா முழங்கிட சேட மெத்தை மீதே வளர்ந்திடும்
    யோக நித்ரை மாலே வழங்கிட -வருவாயே

    மாது சக்தி பாகா னசங்கரன் தோடு குத்தும் காதோ ரமந்திரம்
    ஓது வித்த ஓமா திமைந்தனின், -மகமாயி
    ஆதி சக்தி ஆகா ரமுண்டவள் வீர சக்தி வேலா ளுகின்றவன்,
    சூரை குத்தி கூறாய் வகிர்ந்தவன், -முறைமாம

    ஏது புத்தி அய்யா முணங்கிடும் ஏழை கத்தல் ஏனோ மறந்தனை
    ஆத ரிக்க வாராய் அனந்தச -யனசாமி
    போதி சத்வம் வேணாம், முகுந்தனுன் பாடல் பெற்ற ஆழ்வார் தலங்களில்
    பாடும் பக்தி வாநாள் உகந்திடு -பெருமாளே”

    படத்திற்கு நன்றி : தினமணி

    Share
  • திருமால் திருப்புகழ் (14)

     

                      கிரேசி மோகன்

    krishna3xp

    தான தத்தன தானதத்தன
    தான தத்தன தானதத்தன
    தான தத்தன தானதத்தன-தந்ததான….
    ———————————————————————————————————————–

    “தாம சத்தொடு ராஜ சத்தினை p36b
    தூய சத்வமும் தான கற்றிவி
    சார யுக்தியில் நானொ ழித்துளம் -சம்புவாக
    மோன நிட்டையில் மூழ்கி பக்தரின்
    ஞான சத்குரு வாய்ச கத்தினில்
    சோணை வெற்படி வார முற்றவர் -சொன்னவாறு

    மாம முத்தமிழ் வேல வர்க்கபி
    ராமி சக்தியின் நேச முற்றச
    கோத ரத்துவ, வாழ வைத்திடு -செங்கண்மாலே
    வாத பித்தக பாதி சர்க்கரை
    சோகை ரத்தவி யாதி உற்றுவ
    யோதி கத்தினில் சாயு மக்கணம் -நொந்திடாது

    ராம தத்துவ தார கத்தினை
    நாளும் செப்பிடு யோக பக்தியில்
    நார தற்கிணை யாய்நி லைத்திடல் -தந்திடாயோ
    ராச தத்துவ லீலை யுற்றெமு
    னாந திக்கரை கோபி யர்க்கென
    ஞான பக்குவ காம நர்த்தன -நந்தலாலா

    நேமி சக்கிர ,கூவும் நிர்பய
    ஆழி ,விற்தொகை, வாளும், மொத்திடும்
    கோலும் உற்றுல கேழும் ரக்ஷனை -தந்துபோகும்
    சீர ணைத்திட சேட மெத்தையில்
    சீற லைத்தவ யோக நித்திரை
    நீல பத்தும நாப நிர்குண -எம்பிரானே”
    —————————————————————————————————————————————-

    Share
  • சீரடி தரிசனம் கேட்டேன்

     

    சீரடி தரிசனம் கேட்டேன் சாயி

    நேரடி தரிசனம் தந்தீரே

    ஓரடி வைத்து வந்தேன் சாயி

    நூறடி முன்னால் நின்றீரே ()

     

    வாடிய பக்தனை கண்டதும் சாயி

    வாயென் பக்கம் என்றீரே

    நாடியக் காரணம் சொல்லும் முன்னாலே

    சேயெனக் கெல்லாம் தந்தீரே

    பாடியப் பாடலை கேட்டதும் சாயி

    பக்தனைப் பார்த்து சிரித்தீரே

    தேடிய தெய்வம் நீயென்றாகி

    தெளிவுடன் மனதில் அமர்ந்தீரே ()

     

     

    பசியென வேளையில் அழுதிடும் போது

    பாலாய் தேனைப் பகிர்ந்தீரே

    வலியென நானும் வாடதிருந்திட‌

    மருந்தாய் அமுதம் பொழிந்தீரே

    கலியினில் வஞ்சகம் கவ்வாதிருக்க‌

    காப்பாய் கவசம் ஆனீரே

    புவியினில் குருவாய் தினமும் எனக்கு

    புதுபுது ஞானம் அளித்தீரே ()

     

    பெற்றோர்  சேவை பெருஞ்சேவையென‌

    பெரு உபதேசம் செய்தீரே

    கற்றோர்  சபையில் கலந்திட எனக்கொரு

    பேரும்புகழும் கொடுத்தீரே

    உற்றோர் உறவினர் விலகியப் போதிலும்

    உறவாய் உறுதி அளித்தீரே

    மற்றோர்  பிறவிகள் எடுத்தாலுமெனை

    சீடனிவனென அருள்வீரே ()

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ’மனைவி அமைவதெல்லாம் ’ என்று முன்பொருநாள் என்னுடைய வலைப்பகுதியிலே மனைவியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் (http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html) இந்த விஷயத்தில் . என் எண்ணம் இன்றைக்கும் மாறவில்லை. என்றைக்கும் மாறவும் மாறாது. மனைவி என்பவள் என்றைக்குமே ஒரு ஆச்சரியக் குறி. சுயநலமில்லாதவள். தனக்கென வாழாது குடும்பத்துக்கென வாழும் அவளால்தான் இந்தியாவுக்கு, இந்திய சமூகத்துக்கு இன்றளவும் உலகத்தில் நல்லபெயர். இந்த விஷ்யம் விவாதத்துக்குரியதே இல்லை என்பது கூட என் கணிப்பு.

    அவ்வப்போது இந்த கல்யாணமே செய்துகொள்ளாமல் பிரமச்சரியமாக இருப்போர் செயலையும் சொல்லையும் பார்க்கும்போதெல்லாம் ஒரு பரிதாபம் கூடத் தோன்றும். இவர்கள் மட்டும் திருமணபந்தத்தில் வந்திருந்தால் இவர்களது புத்தியானது மிகவும் கூரடைந்து சீராக இருந்திருக்குமே.. மனைவியானவள் அமைவதின் பயனை இவர்களும் அனுபவித்திருக்கலாமே இப்படி ஒரு நல் வாய்ப்பை நழுவ விடுகிறார்களே என்று கூட தோன்றும். இதனால் பிரமச்சார்ய சமுதாயம் என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம். மனைவியானவளின் சக்தி அபரிமிதமானது என்பதை அறியாமலே வாழ்க்கையைக் கழிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் சொன்னேன்… அவ்வளவே..

    ஆண் பெண் யாராக இருந்தாலும் அந்த ஆத்மாவுக்கு நிச்சயம் வாழ்வின் முடிவில் நினைத்துப் பார்க்கும்போது ஒரு நிம்மதி கிடைக்கவேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது பொதுவாக தனக்காக விதிக்கப்பட்ட கடமையை செவ்வனே கழிப்பது பெண் அதாவது மனைவியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனைவி எனும் ஸ்தானத்தில் நிம்மதியை அதி சீக்கிரம் அவள் அடைவதாகவும் நினைப்பதுண்டு. அப்படியானால் ஆண்களுக்கு நிம்மதி கிடையாதா எனக் கேட்க வேண்டாம். அதைப் பற்றி ’கணவர்’ என்ற தலைப்பு கிடைக்கும்போது நிறைய பேசலாம்.

    சமீபத்தில் வல்லமையில் இந்தக் கட்டுரையைப் படித்தேன். (http://www.vallamai.com/?p=42320) கஸ்தூரி பா காந்தியைப் பற்றியது. காந்தியைத் தெரிந்த அளவுக்கு கஸ்தூரிபா அவர்களைப் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்களோ.. கஸ்தூரிபா வின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் இந்தக் கட்டுரையின் மூலம் தெரிய வருவது. காந்தியை விட அவர் ஆத்மா நிச்சயம் சாந்தியடைந்திருக்கவேண்டும் என்றும் மனதில் பட்டதை சொல்லிவிடவேண்டும்தான்.

    unnamed (3)

    //கஸ்துர்பா அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்தது, அவர்களுக்கு மூளையில் இரத்தக் கசிவு இருந்தது. ”அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்; அவர் உடல் மயக்க மருந்தை ஏற்கும் தகுதியற்றதாக இருக்கிறது” என்று மருத்துவர் அண்ணலிடம் தெரிவித்தார். காந்திஜி அன்னையிடம் இதைத் தெரிவித்தார். அவர்கள் உடனே, ’’நான் வலியைத் தாங்கிக் கொள்கிறேன். மயக்க மருந்து தர வேண்டாம்” என்று கஸ்தூர்பா அவர்கள் மருத்துவரிடம் தெரிவித்துவிட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இந்த அம்மையாருக்கு இத்தகையதொரு ஆன்ம பலம் எவ்வாறு கிட்டியது? அவருடைய கர்மயோகத்தின் வலிமையே காரணம். கணவரின் செயல்களை தன் உள்ளத்தில் ஏற்றி உண்மையாகவே அவற்றை செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்ததன் பயன் தான் இந்துமதத்தின் அடிப்படைக் கருத்துகளில் அசையா நம்பிக்கை அவருக்கு. படிப்பறிவோ எழுத்தறிவோ கிடையாது. ஆனால் ஞானம் பெற்ற பெண்மணியாக விளங்கினாள்.

    அறுவை சிகிச்சை முடிந்தது. எனினும் அவர்தம் உடல்நிலை தேறவில்லை. அன்னைக்கு மாட்டிறைச்சி தேநீர் கொடுத்தால் உடல் தேறும் என்று மருத்துவர் கூறினார். காந்திஜி இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, இதை அன்னையிடம் தெரிவிக்க, ”நான் அந்தத் தேநீரைக் குடிக்க மாட்டேன். இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்தது அரிது. நான் என் உடலை அசுத்தப்படுத்த விரும்பவில்லை. அதைவிட நான் உங்கள் மடியில் உயிரை விட விரும்புகிறேன்” என்று பதிலளித்துவிட்டார். அவர்கள் வாழ்ந்து வந்த பீனிக்ஸ் பண்ணைக்கு வந்த ஸ்வாமி மாட்டிறைச்சி தெநீர் அருந்துவதில் தவறில்லை என்றும் இந்துமத நூல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் தெரிவித்தார். ஆனால் அன்னை அவர்கள் மறுத்துவிட்டார். நூல்கள் கூறினாலும் தன் கொள்கையினின்றும் சற்றும் பிறழாத தன்மைதான் காந்தி-கஸ்தூர்பா வாழ்க்கையின் சிறந்த அம்சமாகும். ஏனெனில் காந்திஜி அன்னையிடம் சொல்லுவார், ”நாம் மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறோம், நாம் செய்யும் செயல்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்” என்று. அதனால் கஸ்தூர்பா அவர்கள் தான் செய்யும் செயல்கள் தன் கணவரின் நெறிக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்பார்

    ஆகாகான் மாளிகையில் அவர் இறுதிக் காலம் கழிந்தது. அவர்கள் அங்கே சிறைபடுத்தப்பட்டிருந்தார். அவர் உடல்நிலை மிக மோசமாகிக் கொண்டு வந்தது. பா அவர்கள் காந்திஜியின் மடியில்தான் தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். தன் உடல் மீது காந்திஜி அவர்கள் நூற்ற நூலினால் நெய்யப் பட்ட துணியைத்தான் தன் மீது போர்த்த வேண்டும் என்றும் தன் சமாதி மகாதேவ் தேசாயின் சமாதியின் அருகில்தான் இருக்க வேண்டும் எண்றும் ஆசைப்பட்டார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டது. பா அவர்கள் உயிர் 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிரிந்தது. காந்திஜி வேதனையுடன் கூறினார், ”என்னை என் மூத்த ஆனால் என்னிடம் நம்பிக்கையுள்ள உடனுறை தோழியிடமிருந்து எவ்வாறு பிரிக்க முடியும்? அவள் என்னுடன் பின்னிப் பிணைந்து விட்டாள். அவள் பிரிவு நிரப்ப முடியாத ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.” //.

    இந்தக் கட்டுரைக்குத் தலைப்பாக ‘ஒரு மனைவியின் பெருமை’ என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது. அருமையான கட்டுரையை வல்லமையில் பகிர்ந்து கொண்ட திரு விப்ரநாராயணன் திருமலையை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி. திரு திருமலைக்கு எனது வாழ்த்துகள்.

    கடைசி பாரா::திருமதி மேகலாவின் இறைநேசர் கட்டுரையில் உள்ள குறளுக்கு விளக்கம்:

    பகைவர்கள் வணங்கித் தொழுகின்ற கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தன்மையானதே!’

    Share
  • வார ராசி பலன் 03.03.2014-09.03.2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: பெண்கள் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமானால், ஆரோக்கி யத் தில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த வாரம் மனை விற்பனை விஷயமாக சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். வியாபாரிகள் புதியவர்களை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதில் கவனமாக இருந்தால், இழப்புகளைக் குறைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுபவரிடமிருந்து விலகி இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொண் டால், நீங்கள் இனிமையான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
    ரிஷபம்: சக கலைஞர்களிடையே பிரச்னை எழும் வாய்ப்பிருப்பதால், எதையும் நன்கு யோசித்து பேசினால், உறவுகள் உறுதியாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் நல்லது செய்தாலும், பிள்ளைகளிடமருந்து பாராட்டைப் பெறுவது கடினமே. பணிவாகப் பேசுங்கள். உங்கள் கருத்துக்களை பிறர் அப்படியே ஏற்றுக் கொள்வர். பணியில் ஏற்படும் வேண்டாத இடமாற்றம் சிலரை நெருக்கடியான சூழலுக்குத் தள்ளி விடும். எதிர்பாராத செலவுகளால் பெண்களின் திட்டங்களில் தொய்வு ஏற்படலாம். மாணவர்கள் கவனமாக செயல்படவில்லை என்றால், சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எனவே எதிலும் கவனமாக செயல்படுவது அவசியம்.
    மிதுனம்: அலுவலகத்தில் இருப்போர்கள் அவசரப் பிரச்னைகளின் பொருட்டு அங்கும் இங்கும் அல்லாட வேண்டியிருக்கும். பெண்கள் அவ்வப்போது தலை காட்டும் தேவையற்ற சஞ்சலத்தை மாற்ற மனதுக்கு பிடித்த பொழுது போக்கில் ஈடுபடுங்கள். உங்களின் தொழில் வளத்தை மேன்மை படுத்தும் பொருட்டு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தாலும்,அதற்கேற்ற லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தங்கள் கோபத்தை கட்டுப் படுத்தி வைத்தால், பிரச்னைகளுக்கான தீர்வை எளிதில் கண்டு விடலாம். இந்த வாரம் பெற்றோர்கள் பிள்ளைகளின் மன அழுத்தம் அதிகரிக்க இடம் கொடாமல் நடந்து கொள்வது நல்லது.
    கடகம்:வியாபாரிகள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் இயன்ற வரை சக மாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டால் எப்போதும் நிலைமை சீராக இருக்கும். இந்த வாரம் கலைஞர்கள் அதிக போட்டிகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஏற்றவாறு தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகள் லாபகரமாய் அமைய கூட்டு முயற்சி கை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கையான பணியாளர்களை சந்தேகப்பட்டு சிக்கலை வரவழைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் உறவுகளின் போக்கினை அறிந்து முக்கிய முடிவுகளை எடுப்பதே புத்திசாலித் தனம்.
    சிம்மம்: பெண்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களையும், கடமைகளையும் நல்லபடியாக முடித்து நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்கள். முதியவர்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான தொல்லைகள் அவ்வப்போது வந்து போகும். உங்களின் நிர்வாகத் திறன் பெருகுவதால் புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற வசதிகளும் வந்து சேரும். மாணவர்கள் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் குழப்பம் அடைவதைத் தவிர்த்துவிடவும். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்க, இனிமையாகப் பேசுங்கள். பணியில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களின் குற்றம் குறைகளை பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். வேலைகள் எளிதில் முடியும்.
    கன்னி: மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு செயல் படும் காரியங்களில் கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்கள் கிடைத்த ஒப்பந்தங் களை குறித்த காலத்தில் முடிப்பதில் கருத்தாக இருந்தால், உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் .சொந்தங் களையும், உடனிருப்பவர்களையும் அரவணைத்து நடத்திச் செல்லும் பெண்களுக்கு நல்ல ஒத்துழைப்போடு நல்ல பெயரும் வந்து சேரும். இந்த வாரம் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்குவதால், மீண்டும் இல்லத்தில் மகிழ்ச்சி மலரும். மாணவர்கள் தெளிவான மன நிலையுடன், பாடங்களை ஆர்வத்துடன் படித்து நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.
    துலாம்: வியாபாரிகள் விருத்திக்காக மேற் கொள்ளும் முயற்சிகளுக்கேற்ப உங்கள் லாபமும்,நட்பு வட்டமும் கூடும். இந்த வாரம் கலைஞர்களுக்கு பிரபலங்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் விருந்து, விழா என்று மகிழும் வாய்ப்பு பல உண்டு. மாணவர்கள் சின்ன சின்ன முயற்சிகளுக்கு கூட, அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்துச் செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் அறிமுகமில்லாத நபர்களை சட்டென்று நம்பிவிட வேண்டாம். சுயதொழில் புரிபவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள் லாபகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைவதால், நம்பிக்கையோடு செயலாற்றுவார்கள்.
    விருச்சிகம்: மாணவர்கள் தேவையில்லாமல் எவரிடமும் பகைமை பாராட்ட வேண்டாம். இந்த வாரம் பணத் தட்டுப்பாடால், உறவுகளிடையே அவ்வப்போது பூசல்கள் உருவாகலாம். பெண்கள் நினைத்த வாறு காரியங்களை சாதித்துக் கொள்ள, பொறுமையைக் கடை பிடியுங்கள். வியாபாரிகள் விரிவாக்கத்திற்காக திட்டமிடும் போது நிறை குறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட்டால் முழு பலனை அடையலாம். பலரும் பயனடையும் திட்டங்களுக்காக பொது வாழ்வில் உள்ளவர்கள் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்.கலைஞர்கள் வீண் கவலை உங்கள் வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    தனுசு:நல்ல பெயரை வாங்க, மாணவர்கள் நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். நண்பர்களோடு ஏற்படும் கருத்து மோதல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக் கொண்டால், நட்பு பிரியாமலிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொண்டால் அவர்களால் எந்த தொந்தரவும் இராது.பணியில் இருப்பவர்கள் ரகசிய த்தைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தால், மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்போர்கள் நடு நிலையாக செயல்படுபவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். வியாபார வட்டத்தில் சில சங்கடங்கள் தோன்றினாலும், அனைத்தையும் நல்லவரின் உதவியுடன் சமாளித்து விடு வீர்கள்.
    மகரம்: இந்த வாரம் கலைஞர்கள் பிரச்னைக்குரிய விஷயங்களில் பட்டும் படாமலும் நடந்து கொண்டால், மன உளைச்சலை தவிர்த்து விடலாம். அதிக அலைச்சல், தூக்கம் கெடுதல் ஆகியவை அன்றாட வாழ்வை பாதிக்காமல் பார்த்துக் கொண்டால், பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் தங்கள் வேலையில் ஈடுபட முடியும். மாணவர்கள் சலிப்புக்கு இடம் தராமல், பணியில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் பண ஓட்டத்திற்கு ஏற்றவாறு செலவுகளை சுருக்கிக் கொண்டால், கடன் வாங்கும் சூழலைத் தவிர்த்து விடலாம். வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களை தேடிவர வியாபாரிகள் சுறுப்பாகவும், சாமர்த்தியமாகவும் செயல்படுவது நல்லது .
    கும்பம்:சக கலைஞர்களுடன் ஆலோசனை செய்து புதிய நிகழ்ச்சிகளை துவக்கினால், கலைஞர்களுக்கு வேண்டிய பாராட்டும், புகழும் வந்து சேரும். பெற்றுத் தருவார். பாராமுகமாய் இருந்த உறவும், நட்பும் உங்களை தேடி வரும் போது உறவுகளை மீண்டும் புதிப்பித்துக் கொண்டால்,பெண்கள் பல நன்மைகளைப் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் காட்டும் உங்கள் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உங்களுக்கு உரிய பாராட்டைப் பெற்றுத் தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் யார் என்று அறிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியம். இந்த வாரம் வியாபாரிகள் மறைமுகப் போட்டிகளை சமாளித்தே வெற்றி வாகை சூட வேண்டியிருக்கும்.             
    மீனம்: இந்த வாரம் பெண்கள் உங்கள் கருத்தை நிலை நாட்ட, வாக்குவாதங்களில் இறங்காமலிருந்தால், யாருக்கும் வீண் வருத்தம் ஏற்படாது. , நண்பர்கள் உங்களை சரிவர புரிந்து கொள்ளாமல் முரண்பாடாக நடந்து கொண்டாலும், நிதானமாக நடந்தாலே நல்ல பலன் கிட்டும். மாணவர்கள் சிறிய விஷயங்கள் உங்கள் கவனத்தை மாற்ற இடம்கொடுக்க வேண்டாம். கலைஞர்கள் விமர்சனங்கள் எதற்கும் கவலைப் படாமல் தங்கள் பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பதே புத்திசாலித்தனமாகும். கடன் தொல்லைகளால், மன நிம்மதி குறைய லாம். பங்குச் சந்தையில் ஏற்றமும், இறக்கமும் காணப் படுவதால், அதிக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 110 (03..03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     
    கவுந்தியின் மறுமொழி

    கவுந்தியடிகளும் இங்ஙனம் மறுமொழி பகன்றார்:
    “இவர்கள் எம்முடைய மக்கள்;
    நீங்கள் கூறியது போல்
    மன்மதனோ ரதியோ அல்லர்.
    நீண்ட வழி நடந்து வந்து
    மிகவும் களைப்புற்று இருக்கின்றனர்.
    தொந்தரவு செய்யாமல்
    இவர்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.”

    காமுகர்கள் பழிப்புரை

    அதற்கு பதில்கூறுமுகமாய்,
    “ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவர்
    கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது என்பது
    நீர் கற்ற எந்த நூலிலும் உள்ளதோ?”
    என்று கேலி பேசினர் அந்தக் காமுகர்கள்.

    கவுந்தியடிகள் சாபம்

    இத்தீய மொழிகளைக் கேட்ட கண்ணகி
    தன் செவிகள் மூடிக் கொண்டு
    தன் கணவன் முன்னே நடுநடுங்கி நின்றாள்.

    “பூமாலை போன்ற என் கண்ணகியை
    இவர்கள் கேலி பேசுகிறார்களே…
    இவர்கள் முள் நிறைந்த காட்டில்
    முதுநரிகளாகத் திரிந்து அலைவார்களாக”
    எனச் சாபமிட்டார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  225 – 232

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    நபிதாஸ்

    அன்புள்ள மணிமொழிக்கு,

    அன்பு தந்தையின் அன்பான அறிவுரைகள்.

    மகளே !

    அன்று செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை வென்று மனித நடைமுறை வாழ்க்கையில் ஏக்கம்; தேக்கம்.

    அன்று, இன; மொழி; நிறம்; இடம் வேறுபாடற்று ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம்.

    இன்று, இனத்திலும்; மொழியிலும்; நிறத்திலும்; இடத்திலும் வேற்றுமை விதைகளைத் தூவி வேற்றுமை உணர்வுகளை செழிக்கச் செய்து வருகின்றனர்.

    மகளே ! வாழ்க்கையே இன்று யுத்தக் களம். போரிடுவோர்கள் ஒருவரல்ல பலர்.

    அமைதியும் அன்பும் மனிதருள் தழைத்து இன்பமுடன் செழித்து வாழ அன்று போதிக்கப்பட்டது. பின்னால் அது மதம் என்று முத்திரைக் குத்தப்பட்டது.

    ஒவ்வொருக் காலக் கட்டத்திலும், வேறுபட்ட ஒவ்வொரு இடத்திலும் நுண்ணறிவுஜீவிகளால் மனித நல் வாழ்வு அமைய அவ்வாறு ஆங்காகே போதனைகள் வகுத்துத் தரப்பட்டன.மனிதர்களைப்பிரிப்பதற்கன்று மாறாக புனிதர்களாகப் பக்குவப்படுத்தப்படவே.

    அந்த நுண்ணறிவு ஜீவிகள் தாங்கள் புகழப்பட வேண்டும் என்றோ, அல்லது தமக்கு முன் வாழ்ந்த நுண்ணறிவு ஜீவிகள் அல்லது மற்ற நுண்ணறிவு ஜீவிகள் அவர்களால்வகுத்துத் தந்த வழிமுறையை விட்டு தன் வழிமுறைகள் வேறுப்பட்டுக் காணப்பட வேண்டும் என்றோ எண்ணியதில்லை. அந்தந்தக் கலக்காட்டம் இடம் சூழல் இதற்கேற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துத் தந்தனர்.

    அறிவு போதனைகள் தந்த அவர்கள் பெயர்களால் அல்லது போதனையின் மையக் கருவின் பொருளால் அல்லது இடத்தால் அவ்வழிமுறைகள்  பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டு அமைதியும், அன்பும் போதிக்கப்பட்டே வந்தன; வருகின்றன.

    பின்னாளில் காலத்தாலும், இடத்தாலும் தோன்றிய இம்மனித நல்வாழ்வுப் போதனைகளில்,அதஅதனைப் பின்பற்றுபவர்கள்

    • அவர்களின் அறிவு தெளிவிற்கு ஏற்ப ஆழமான நுண்ணறிவுகளை சில அனுஷ்ட்டானங்களில் அமைத்து இறைச் சிந்தனையுடன் வகுத்துத் தந்ததனால் அதனில் தெளிவடையாதனாலும், அப்போதனையின் நோக்கம் உலகில் மனிதனின் அமைதி, அன்பு என்பதை அறியாமாலும், புரிந்துக்கொள்ள முடியாமைனாலும்,

    (தான் பின்பற்றும் வழிமுறைகளில் விளங்கிக்கொள்ளாமல் ஊறிப் போனதாலும்,)

    • அனுஷ்ட்டானத்தின் தெளிவுகள் பின்னாளில் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளால் இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மக்களின் அறிவுப்பரிணாம வளர்ச்சி இதற்கேற்பவும், பழமையும் காத்துஅக்கால மனித நல்வாழ்வு போதனைகளை அமைத்துத் தந்த அதனை,பழமையின் தொடர்வாகப் புரிந்துக்கொள்ள முடியாமையினாலும்,

    அல்லது இறைச் சிந்தனையுடன் தான் ஏற்ற போதனைகள் பின்னப்பட்டதால் தெய்வக் குற்றம் என்றாகி உண்டாகி விடுமோ என்று பின் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளின் தெளிவுப் பரிணாமங்களை புரிந்துக் கொள்ளமுடியாமையினாலும்,

    (அல்லது அவைகளை ஒன்றிணைத்து வழிகாட்டப்பட்டவைகளை புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாமையினாலும்)

    • இதுபோல அந்நுண்ணறிவு ஜீவிகளான அம்மகான்களின் நிலையை இவர்களால் எட்ட முடியாமையினாலும்,
    • அவ்வழிமுறைகளில் புனித நிலையடைந்தவர்கள்; தெளிவடைந்தவர்கள் இவ்வறிவில் பெரும்பான்மையான பாமரநிலை மக்கள் மனதில் தங்கள் வழிமுறை மீதுக் கொண்ட பற்று சிதைந்து விடாமல் இருப்பதற்காகவும்,

    அமைதி; அன்பு இதனை உலகில் நிலைக்க வேண்டிச் செய்த நல்வழிகளை, அவ்வழிகளிலேயே இவ்வாறான நிலைகளினால் வேறு வேறாகப் பிரித்துப் பிரித்தே இனம் காட்டி, பிரிவினைகளை வளர்த்து உலகில் மனிதனின்அமைதி; அன்பு இவைகளைத் தான் அறியாமலே சிதைக்கின்றனர். இவர்கள் ஒருவகை வகையானப் போராளிகள்.

    தான் ஏற்று நம்பிய வழியின் மூலம்போதனைப் பெற்றவர்கள்வழித் தலைமுறையில் பின்னாளில், இதுவரை ஏற்று வந்த அப்போதனைகளை அவர்கள் தன்சுய (த்தெளிவில்லா அல்லது தெளிவை அடைய முடிய) அறிவுக் கண்ணோட்டத்தினால் அவ்வழிமுறைகளிலே பிரிவினைக் கொண்டு; கண்டு அமைதியும், அன்பும் அதற்கு வேறுச் சுய அர்த்தங்களை கொண்டு; கற்பித்துப் பிரிவினைகளை தன் மதத்துக்குள்ளே ஏற்படுத்தினார்கள்.நாங்கள் கூறுவதுதான் சரியான ஆதாரப்பூர்வ உண்மையான நல் வழிகாட்டல்கள் என்றும் கூறுகின்றனர்.

    இவ்வாறு ஒவ்வொரு மதத்தினுள்ளும் அமைதியும்; அன்பும் அதனை தாம் அழிக்கின்றோம் என்பதை அறியாமலே அவர்களுக்குள்ளும் அமைதி; அன்பு அதனை அழிக்கின்றானர்.எங்கள் வழியே உயர்ந்தது; சிறந்தது. அதிலே அமைதியும்; அன்பும் கொண்டு வாழலாம் என்று சமூகத்தில் நிலைக்கவேண்டிய அமைதியையும்; அன்பையும் பிரிவினையால் குலைக்கின்றார்கள்.இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    மகளே ! இவைகள் மனித வாழ்வியல் கொள்கையை வைத்துப் பிரிவினைகள் ஆக்கியவைகள்; ஆக்கியுள்ளனர். இதோடல்லாமல் இன்னும் பலப் போராளிகள் உள்ளனர். அவர்களையும் நீ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    அன்று, அமைதியும்; அன்பும் நிலைக்க, மக்கள் இனிமையாக வாழ,’என்னிடமே அல்லது என் தலைமையின் கீழே நல்ல நிர்வாக ஆட்சி அமைப்பு உள்ளது’, என்ற எண்ணத்தில், ஆளுமையில் ஆசைக்கொண்டு,நாங்களே சிறந்த திறமையுள்ளவர்கள் என்று, இம்மாதரியான இந்த குணத்தைக் கொண்டுமனிதனின்அமைதி; அன்பு இவைதான் முக்கியம் என்பதை அறியாமலும்; உணராமலும் தன் சுய நலத்திற்காகஅடுத்த நாட்டுடன் போரிட்டு மனிதர்களை அழித்தார்கள்.

    இன்று சமூகத்தில் பல கருத்துக்களில் பிரிவினைகளைத் தூவி அல்லது புதிதாக ஒன்றைக் கிளப்பி அதில் பிரிவினையைத் தடவித் தூவி எங்களுக்கே ஆதரவுத் தாருங்கள் என்று தன் சுய நலத்திற்காக அமைதியையும், அன்பையும் மக்கள் வாழ்வில்அழித்து; குலைத்து, (மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி) ஆட்சி பீடத்தில் உட்காரத் துடிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    அமைதியும், அன்பும் அதனை,’நான் தலைவனாகி என்கீழ்தான் கொண்டு வரமுடியும், நல்லாட்சி தரமுடியும்’, என்று அந்த ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அக்கட்சியில் உள்ள சிலர் தான் தலைவனாக ஆசைப்பட்டு அக்கட்சியை உடைத்துப் புதுப்புது எண்ணிறைந்த கட்சிகளையும் ஏற்படுத்தி, அமைதியும்; அன்பும் ஒரு குறிப்பிட்ட தன் இன மக்களிடம் மட்டும் என்ற இலக்கணத்திலாக்கி பொது மனிதஅமைதியையும், அன்பையும் அழிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    மகளே ! இதுமட்டுமல்ல ! இதோ இவர்களையும் தெரிந்துக்கொள்.

    அமைதியும், அன்பும் நாங்கள் பேசும் மொழி இனத்தார்களுக்குள் மட்டும் தான் உண்டு என்று அமைதியையும், அன்பையும் மொழிக்குள்ளே அடைத்து மொழிவாரி அமைதியையும், அன்பையும் அழிக்கின்றானர். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

    அமைதியும், அன்பும் இன்று குடும்பம்வாரியாக, தெருவாரியாக, ஊர்வாரியாக, மாநிலம்வாரியாக, நாடுகள்வாரியாக, கண்டங்கள்வாரியாக சுருக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் உணமைப் பொருளை அழித்து வழிகாட்டப்படுகின்றன; வழிகாட்டப்படுகின்றனர். இவ்வாறான இவர்களும் ஒருவகை வகையானப் போராளிகள்.

    அறியாமையை அகற்றாமல் கற்றவர்கள்; கல்லாதவர்கள், உயர்ந்தவன்; தாழ்ந்தவன் என்றும் இனம் பிரிக்கப்பட்டு அமைதியையும், அன்பையும் அழித்தும்அறியாமையால் அறிவாக்கப்படுகிறது. இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

    இவ்வாறு ஏதாவது ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைதியும், அன்பும் அழிக்கப்படுகிறது மகளே !

    நீ இதற்கெல்லாம் அடிமைப்படாது தன்னைப் போலவே அனைவரையும்; அனைத்தையும் கருதி, அதுதான் உண்மை, அதனை உணர்ந்து நேசித்துவாழ்ந்தால் அமைதியும்; அன்பும், தழைக்கும்; செழிக்கும்,உன்னிடமும்; உன்மூலம்.

    அப்போதும் உன்னைத் தெய்வப் பிறவி என்று பிரிக்கத்தான் இவர்கள் பார்ப்பார்கள். உன் அளவிற்கு அனைவரும் உயர நீ வேறுபாடுப் பிரிவினைகளைக் காட்டாவிட்டாலும், உன் அறிவளவிற்கு இவர்கள் உயரச்சிந்திக்க மாட்டார்கள். உன் கண்ணியம்; புனிதம் புரியாமாட்டார்கள். ஆனால், அங்குமட்டும் சமத்துவம் கண்டு சக மனிதன் என்றுக் கூறி, உன்னை அவர்கள் அறிவுக்கு தாழ்த்திப் பேசுவார்கள். அல்லது”தான்; நான்” என்ற அகம்பாவத்தால் உன் புனித நிலையை மறக்கடித்து தன் பெயரை நிலைநாட்டப்பேச்சில் மட்டும் அமைதி; அன்பு என்றும் பேசுவார்கள். இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

    இந்த வகை வகையானப் போராளிகளினால்தான் அன்றும் செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை ஓரளவு வென்றாலும் மனித நடைமுறை வாழ்க்கையில் அமைதி; அன்பு இல்லாமல் ஏக்கம்; தேக்கம்.

    கவனம் மகளே ! அமைதியும், அன்புடனுமே நீ வாழ் வேண்டும்.

    அமைதியும், அன்பும் தழைக்க, செழிக்க விரும்பும்

    தந்தை.

    நபிதாஸ்.

    Share
  • மணிமொழிக்கு ஓர் அன்புமடல்

    ஞா. க​லையரசி

    சென்னை,

    28/12/1984.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு,

    ஆதிரை எழுதியது. இங்கு யாவரும் நலமே. அங்கு எல்லோரது நலமும் அறிய ஆவல்.

    எனக்கு 11/12/84 அன்று, அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம் தான். கவின்மலர் என அவளுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். முன்பே உனக்குக் கடிதம் எழுத நினைத்தும், வேலைப்பளு காரணமாய் முடியவில்லை.

    குழந்தைகளுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கவேண்டும் என்ற கொள்கை உடையவள் நான். இது உனக்குத் தெரியுமாதலால், மற்றவர்களைப் போல், “பழைய பெயராக இருக்கிறதே, இக்காலத்துக்கேற்ப புது பேஷனாக வைக்கக்கூடாதா?” எனக் கேட்கமாட்டாய்.

    “வருவோர் போவோருக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது. பேசாமல் எல்லோரையும் போல, திவ்யா, அக்ஷ்யா, ஐஸ்வர்யா என்று புதுமையாக வைச்சிருக்கலாம்; உன் பேச்சைக் கேட்டது தப்பாப் போச்சு” என்று என் கணவர் புலம்பத் துவங்கிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்.

    தமிழ்க் குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால், அது பழைய பேஷனாம்! கவின் என்றவுடன், ஏதோ கிரேக்கம், லத்தீன் சொல்லைக் கேள்விப்பட்டது போல, சிலர் முழிக்கும் முழி இருக்கிறதே, படு கேவலமாயிருக்கிறது மணி!

    குழந்தையைப் பார்த்துப் பெரியவள் கயல், கொஞ்சம் ஏங்கத்தான் செய்கிறாள். நீ ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது போல, அவ்வப்போது அவளையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.  என் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவே, தொட்டதற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கிறாள். சின்ன விஷயங்களுக்கெல்லாம், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள். கோபப்படக்கூடாது என்பதில் பல சமயம் கவனமாயிருந்தாலும், சில சமயம் யார் மீதோ உள்ள கோபத்தை அவள் மீது காட்டி அடித்துவிடுகிறேன்.  உன் யோசனைப்படிக் கோபத்தைக் கட்டுப்படுத்த நானும் முயலாமலில்லை. ஆனால் குழந்தையைப் பார்க்க வருவோரின் பேச்சும் நடவடிக்கையும், என் கோபத்தைக் கிளறி அதிகமாக்குகின்றனவே, நான் என்ன செய்யட்டும் மணி?

    “உன்னை விட தங்கச்சி ரொம்ப அழகாயிருக்கா, சிவப்பாயிருக்கா, இனிமே உன்னை யாரும் தூக்கமாட்டாங்க, உன்னை யாரும் சட்டை பண்ணமாட்டாங்க, இனிமே அவளுக்குத் தான் செல்லம் அதிகம்,” போன்ற வசனங்களைப் பேசிக் குழந்தையின் மனதைக் காயப்படுத்தி, தங்கையின் மீது பாசம் உண்டாக்குவதற்குப் பதில், ஏற்கெனவே இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகமாக்குகின்றனரே!

    குழந்தையைப் பார்க்க வரச் சொல்லி யார் இவர்களை அழைத்தது? அப்படித்தான் வருகிறார்களே, வந்தோமா, பார்த்துவிட்டுப் போனோமா என்றில்லாமல், தேவையற்ற விஷயங்களைப் பேசிக் குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறவர்களை, ஓங்கி ஓர் அறை விடலாமா என்று கூட சமயத்தில், எனக்கு ஆத்திரம் வருகிறது.

    முதல் குழந்தை பெண் என்பதால், இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்; அடுத்தது கண்டிப்பாக ஆண்தான் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு, கவின் பெண்ணாகப் பிறந்தவுடன் ஏமாற்றமாகப் போய்விட்டது.  பிறந்த குழந்தையைச் சரியாகக் கவனிக்காமல் ஒரு சில நாட்கள் வருத்தத்துடன் இருந்தேன். பாவம்! குழந்தை என்ன செய்யும்?அதன்பின் ஓரிரு நாட்களில் மனதைத் தேற்றிக்கொண்டு, குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

    ஆனால் வருகிறவர்கள், நான் மறக்க நினைக்கும் செய்தியைத் திருப்பித் திருப்பிப் பேசித் துன்பத்தை அதிகமாக்கும்போது, என் ஆத்திரம் எல்லையை மீறுகிறது மணி!

    அன்றொரு நாள், என் மாமியாருக்குத் தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி. அது வரும் போதே, ஏதோ துக்க வீட்டுக்கு வருவது போல் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு வந்தது. த்சொ, த்சொ என உச்சுக் கொட்டிக்கொண்டு, “இதுவாவது ஆணா பொறந்திருக்கக்கூடாதா, என்னமோம்மா, போன ஜென்மத்துல நீ செஞ்ச பாவம், இதுவும் பொட்டையாயிடுச்சு,” எனஅங்கலாய்த்தது.

    “ஏன்? இது பொண்ணா இருந்தா, ஒங்களுக்கென்ன கஷ்டம்? வளர்க்கப் போறவ நான் தானே?” என்றேன், நான்காட்டத்துடன்.

    நான் கோபமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு, அதோடு வாயை மூடிக் கொண்டு போயிருந்தால், எந்தப் பிரச்சினையுமில்லை.  “சாண் புள்ளைன்னாலும் ஆண்புள்ளைன்னு சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்துல?பொட்டைப் புள்ளைங்க கல்யாணம் ஆயி, புருஷன் வீட்டுக்குப் பூடும். ஆம்பளைப் புள்ளைதான் கடைசிக்காலத்துல நம்மளை வச்சுக் காப்பாத்தும், கஞ்சிஊத்தும்,” என்றது அது.

    “ஒங்களுக்கு ரெண்டும் ஆம்பிளை புள்ளைங்க தானே?கடைசி காலத்துல ஒங்களை வைச்சு, ஒரு வேளை கஞ்சிக் கூட ஊத்தாம, ஏன் வூட்டை விட்டு துரத்தினாங்க?” என்றேன் நான்.

    வாயடைத்து விட்டது கிழவிக்கு. என் மாமியாரிடம் போய் என்னைப் பற்றி என்ன வத்தி வைத்ததோ, அதற்குப் பிறகு வீட்டில் ஒரே கசமுசா. சம்பாதிக்கும் திமிர் என்ற வார்த்தை மட்டும், அடிக்கடி என் காதில் விழுந்தது. என் காதில் விழவேண்டும் என்பதற்காகவே, சத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

    உண்மையைச் சொன்னால், எனக்குச் சம்பாதிக்கும் திமிராம்! நீ அடிக்கடி சொல்வது போல், இப்படியெல்லாம் யாரையும் முகத்துக்கு நேராக எடுத்தெரிந்து பேசக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் இந்தக் காலத்திலும் பொட்டச்சி என்றெல்லாம், ஒரு பெண் குழந்தையை மட்டமாக, அதுவும், ஒரு பெண்ணே பேசுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லையே மணி!  நான் என்ன செய்ய?

    அந்தப் பாட்டி கிளம்பின மறுநாள், “வயசானவங்க ஏதாவது சொல்வாங்கதான்.  அதுக்காக வாய்த்துடுக்காப் பேசி மரியாதைக் குறைவாக இப்படி நடந்துக்கக்கூடாது,” எனக் கடுமையாக எச்சரித்தார் என் கணவர்.

    அவருக்கு ஏற்கெனவே என் மேல் கோபம். இரண்டாவதும் பெண் குழந்தை என்றவுடன், அவரது அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு, “குடும்பக் கட்டுப்பாடு இப்போ வேணாம்; மூணாவது குழந்தையைப் பார்த்துட்டுச் செஞ்சுக்கலாம்; அது ஆம்பிளைப் புள்ளையாயிருந்தா, நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே?” என்றார்.

    அது ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

    அதுவும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டுப் பிடிவாதமாக இருந்து, குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டேன்.  இப்போது இந்தக் கிழவியிடம் நான் கேட்ட கேள்வியால் ஏற்பட்ட கோபத்தோடு, பழைய கோபமும் சேர்ந்து கொண்டதால், எப்போதும் என்னிடம் கடுகடு என்றிருக்கிறார்.

    என் கால்களில் நான் நிற்கும்போதே, என் தேவைகளுக்காக இவர்களை எதிர்பார்க்காத போதே, என் குழந்தையைப் பற்றி இவர்கள் இப்படிப் பேசும்போது, ஒருவேளை நான், இவர்கள் கையை எதிர்பார்க்கிறவளாக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

    தென்தமிழகத்தில், பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் அல்லது நெல்மணி போட்டுக் கொல்கிறார்களாமே, அதுபோல் என்னையும் கொல்லச் சொல்லியிருப்பார்களோ? இது போன்றத் தேவையில்லாத எண்ணங்கள், என் மனதை அலைக்கழிக்கின்றன மணி!

    நான் மருத்துவமனையில் இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்தவருக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது. அந்தம்மா பாவம், என்னிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். அவருக்கும் இது இரண்டாவது குழந்தையாம். “ஆம்பிளைப் புள்ளை பொறந்தா வீட்டுக்கு வா, இல்லேன்னா, உங்கம்மா வீட்டுலேயே இரு,”ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாராம், அவரது கணவர்.

    “நீங்களாவது சம்பாதிக்கிறீங்க. ஒங்கப் புருஷன் ஒங்களைக் கைவிட்டாலும் பாதகமில்லை. எங்கம்மாவூட்டிலேயும் வசதியில்லை. ரெண்டு பொம்பிளைப் புள்ளைகளை வைச்சிக்கிட்டு நான் என்னம்மா செய்வேன்,” என்று ஓன்னு கதறி விட்டார் அவர். எனக்கு அவரைப் பார்க்க மிகவும் பாவமாயிருந்தது.

    பெண்களுக்குக் கல்வியும், சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரச் சுதந்திரமும், மிகவும் முக்கியம் என்று நீ அடிக்கடி சொல்வாயல்லவா?அது எவ்வளவு உண்மை என்பதை, அன்றைக்குத் தெரிந்துகொண்டேன் மணி.

    குழந்தை பெண்ணாகப் பிறக்கிறதுக்கும், ஆணாகப் பிறக்கிறதுக்கும் காரணம் கூடத் தெரியாமல், அப்பாவி பெண்டாட்டி மேல் பழியைப் போடுகிற கடைந்தெடுத்த முட்டாள், ஒருவேளை நம் கணவனாக வாய்த்து விட்டால் நம் கதி?

    என் அம்மாவிடம் எப்போதாவது என் மனக்குறையைச் சொல்லத் துவங்கினால் போதும்.  “ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருக்கும். போகப் போகச் சரியாயிடும். நீதான் எல்லாரையும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்,” என்று சொல்லி,என்வாயை அடைத்துவிடுகிறார்.

    கணவரிடமும் உன்னிடம் பேசுவது போல், எல்லா விஷயங்களையும் பேச முடியவில்லை.

    என் உள்ளக் குமுறல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடப்பதால், என் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது மணி.

    தபாலாபீஸ் சென்று டிரங்கால் பதிவு செய்து, உன்னிடம் தொலைபேசியில் பேசுவோமா என்று முதலில் நினைத்தேன். அலுவலக நேரத்தில் உன்னைத் தொந்திரவு செய்வதை நீ விரும்பமாட்டாய். மேலும் டிரங்கால் இணைப்பு எளிதில் கிடைக்காமல், நம் பொறுமையைச் சோதித்துவிடும். பொது இடத்தில், தனிப்பட்ட செய்திகளைப் பேசவும் எனக்குத் தயக்கம்.

    வீட்டுக்கு வரச் சொல்லிக் கடிதம் எழுதுவோமா என்றும் நினைத்தேன். ஆனால் இங்கு எல்லோருக்கும் முன்னால், மனம் விட்டு எதுவும் பேச முடியாது என்பதால், மனதில் உள்ளவற்றை ஒன்று விடாமல் கொட்டிக் கடிதம் எழுதுவதெனத் தீர்மானித்தேன்.

    இக்கடிதத்தில் என் மனச் சுமையை உன்னிடம் இறக்கி வைத்த பிறகு, மனம் இலகுவாகி, சிறகுகள் முளைத்து, வானில் பறப்பதுபோல் உணர்கிறேன் மணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

    என் மன அழுத்தத்தை நீக்கிப் புத்துணர்வு கொடுத்த, இந்தக் கடிதத்துக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

    உரிமையுடன் என்னைக் கண்டித்து, நான் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிப் புத்திமதி சொல்லி, உடனே நீ பதில் எழுதுவாய் என எனக்குத் தெரியும். என் நலனில் உண்மையான அக்கறை உள்ளவள் என்பதால், நீ என்ன சொன்னாலும் கேட்டு, அதன்படி நடப்பேன். உன்னைப் போன்ற தோழி, எனக்கு வாய்த்தது நான் செய்த புண்ணியம்.

    ஒரு மகிழ்ச்சியான செய்தி மணி!  முதலிலேயே எழுத மறந்துவிட்டேன்.

    என் குழந்தை பிறந்த நாளைக் கவனித்தாயா? எனக்குப் பிடித்த பாரதியாரின் பிறந்த நாளில் தான், என் கவியும் பிறந்திருக்கிறாள். வருங்காலத்தில் ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்,’ என்று சொல்லும் பாரதியின் புதுமைப் பெண்ணாக, இவள் பிரகாசிப்பாளோ?

    நான் விடுப்பு முடிந்து வேலையில் சேர, இன்னும் இரு மாதங்களுக்கு மேலாகும். குழந்தை பிறந்த விஷயத்தை அலுவலகத்தில் எல்லோரிடமும் தெரிவித்து விடு. அங்கு ஏதும் சிறப்புச் செய்திகள் உண்டா?

    உன் கடிதங் கண்டு பதில்,

    இப்படிக்கு

    உன் அன்பு நண்பி

    ஆதிரை.

    Share
  • ஆம்பிளே

    தமிழ்த்​தேனீ

    சரவணன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு முருகன் திருஉருவப் படத்தின் முன்னால் நின்று கொண்டு அமைதியாக கந்தா முருகா கார்த்திகை மைந்தா  என்று  கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    வள்ளி பக்கத்திலே நின்று கொண்டு அவனையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    கந்த சஷ்டி  கவசத்தை முடித்துவிட்டு வழக்கம் போல் கந்த சஷ்டி கவசம் முற்றிற்று  என்றான் சரவணன்.

    ‘களுக்’கென்று சிரித்தாள்  வள்ளி.

    திரும்பிப் பார்த்த சரவணன் “என்ன வள்ளி? எதுக்கு சிரிக்கற?” என்றான்.

    “இல்லே! கந்த சஷ்டி கவசம் சொல்றீங்க. சொல்லி முடிச்சவுடனே நீங்களே ‘கந்த சஷ்டி கவசம் முற்றிற்று’ அப்பிடீன்னு சொல்றீங்களே. அதான் சிரிச்சேன்” என்றாள்.

    “ஓ அதுவா! நாம எப்பிடி மனப்பாடம் செய்யிறோமோ அதுஅது  அப்பிடியே தங்கிப் போவுது மனசுக்குள்ளே. கந்த சஷ்டி கவசம் மனப்பாடம் செஞ்சிட்டு  கடைசீயிலே போட்டிருக்குமே ‘கந்த சஷ்டி கவசம் முற்றிற்று’ அப்பிடீன்னு அதையும் சேர்த்து  மனப்பாடம் செஞ்சிட்டேன். சொல்லும் போது  தானா அந்த வரியும் வந்துடும்” என்றான்.

    வள்ளி நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள். இப்பிடி அமைதியா இருக்கற தன் புருஷனா நேற்று அப்படி நடந்துகொண்டான் என்று ஆச்சரியப்பட்டு மனதுக்குள்ளேயே ‘நீதாய்யா ஆம்பிளை, என் ஆம்பிளை’ என்று ச்லாகித்துக்கொண்டே சரவணன் அருகே வந்து அவன் தலையை செல்லமாகக் கோதிவிட்டாள்.

    “என்ன இன்னிக்கு ஒரே பாச மழையா இருக்கு?” என்றான் சரவணன், “ஒண்ணுமில்லே சும்மாத்தான்” என்றாள் வள்ளி.

    சரவணனுக்கு அவனுடைய  தாயார்  மீனாக்‌ஷி இப்பிடி அன்போடு வாஞ்சையாக தலையைக் கோதிவிடுவாளே அது நினைவுக்கு வந்தது

    தாய்க்குப் பின் தாரம் என்பது உண்மைதான் என்று நினைத்துக் கொண்டே, “சரி வள்ளி. நான் ஆபீசுக்கு போயிட்டு வரேன். கதவைத் தாள் போட்டுக்க, பயப்படாத, ஜாக்கிறதையா இரு” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

    “எனக்கென்ன  பயம்? என் ஆம்பிளே நீங்க இருக்கும் போது, அதுவும் நேத்து சாயங்காலத்திலேருந்து நெலைமையே மாறிப் போச்சே! எல்லாரும் என்னை மரியாதையா பாக்கறாங்க. முந்தா நேத்து வரைக்கும் உங்களை மரியாதை இல்லாம பேசினவங்க கூட உங்களைப் பத்தி பேசினாவே பயப்படறாங்க,  உங்களை மரியாதையா ஐய்யான்னு சொல்றாங்க” என்றாள்.

    “வள்ளி! சொல்றேன்னு தப்பா நெனைக்காத. இனிமேத்தான் நாம எல்லார்கிட்டயும் இன்னும் மரியாதையா நடந்துக்கணும். அமைதியா பேசணும், எல்லாருக்கு  மரியாதை குடுத்து பேசணும். புரியுதா?” என்றான் சரவணன்.

    “சரிங்க. நாம எப்பவும் போலவே நல்லபடியா மரியாதையா நடந்துக்குவோம், அது சரி!  நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க”  என்றாள்.

    “சரி வள்ளி. நான் போயிட்டு வரேன்” என்றபடி கிளம்பினான் சரவணன்.

    அவன் கிளம்பியதும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் வள்ளி. கை வேலை செய்து கொண்டிருந்தாலும்  மனம் நேற்று முன் தினம்  நடந்ததையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

    மாலை ஆறு மணி இருக்கும். சரவணன் ஹாலில் உட்கார்ந்து தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். திடீரென்று வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள் வள்ளி. ஒரு குரல் கேட்டது, “இதோ பார்ரா! வீராங்கனை எட்டிப்பாக்கறாங்க. ஏ உள்ளே போ, மருவாதையா” என்றான் ஒருவன். முழுக் குடியில் அவன் கண்கள் சிவந்திருந்தன.

    பதறிப் போய்க் கதவைச் சார்த்திவிட்டு படபடப்புடன் “ஏனுங்க, வாசலில் ஒரு குடிகாரன் கத்தி கலாட்டா செஞ்சிகிட்டு இருக்கான்” என்றாள்.

    “சரி இதுக்கெல்லாம் நாம என்ன செய்ய  முடியும். அவனே போயிடுவான். நீ உள்ளாற வா” என்றான் சரவணன்.

    “அதில்லைங்க. அந்தக் குடிகாரன் நம்ம பக்கத்து வீட்டு சரோஜாவை முடியைப் பிடிச்சு இழுத்து அடிச்சிகிட்டு இருக்கான். இந்தத் தெருவிலே எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க” என்றாள்.

    சரவணன் ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கே போய் அந்தக் குடிகாரனிடம், “எதுக்கு  இந்தம்மாவை அடிக்கறீங்க? அவங்களை விட்றுங்க” என்றான்.

    “இதோடா! தரும புத்திரன் வந்துட்டாரு, யோவ் போய் வேலையைப் பாருய்யா, டீவீயிலே சீரியல் பாக்கறதை விட்டுட்டு இங்கே வந்து குரல் வுடறே போய்யா” என்றான் போதையுடன்.

    சரவணன் அவன் கையைப் பிரித்து சரோஜாவின் முடியை விலக்கி சரோஜாவை பார்த்து, “நீங்க போங்கம்மா” என்றான்.

    “யோவ்! மரியாதையா உன் வேலையைப் பாத்துக்கிணு போயிடு, இவளோட புருஷன் 10000 ருபா வாங்கிட்டு தராம ஏமாத்தறான்,  இது எங்க ப்ரச்சனை மரியாதையா போயிடு… இல்லே, வெட்டிருவேன்” என்று அரிவாளை உயர்த்தினான் குடிகாரன். லாவகமாக அந்த அரிவாளை அவன் கையிலிருந்து பிடுங்கி  தூற எறிந்துவிட்டு, “இதோ பாருங்க! இந்தம்மாவோட புருஷன் பணம் தரலேன்னா அவரைக் கேளுங்க. இந்த அம்மாவை எதுக்கு அடிக்கறீங்க?  மரியாதையா போறீங்களா, இல்லே போலீசைக் கூப்பிடவா?” என்றான் சரவணன்.

    “ஓ போலீசைக் கூப்புடுவியா! இரு இரு, எங்க ஆளுங்களைக் கூட்டி வந்து உன்னை என்னா செய்யறேன் பாரு” என்று கருவிக்கொண்டே தள்ளாடியபடி  சென்றான் அந்தக் குடிகாரன்.

    சற்று நேரத்தில் “யார்ரா அது? என் ஆளை போலிசிலே பிடிச்சுக் குடுப்பேன்னு சொன்னது” என்றபடி பத்து பேர் கொண்ட கும்பல் சரவணனை தாக்க ஆரம்பித்தது.

    கீழே விழுந்த சரவணன் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சியாகக் கட்டிக் கொண்டு எதிர்த்தாக்குதலை தொடங்கி இரண்டு நிமிடத்தில் பத்து பேரும் அடிவாங்கித் தலை தெறிக்க ஓடினர் .

    நினைவலைகள் கொடுத்த அந்தக் காட்சியின்  தீவிரம் மனதுக்குள் உரைக்கவே ‘களுக்’கென்று சிரித்தாள் வள்ளி. பக்கத்து வீட்டு ஜன்னல் திறந்தது. “என்னா வள்ளி, உங்க வீட்டுக்கார ஐயா வேலைக்குப் போயிட்டாரா” என்றாள் அஞ்சலை .

    “ஆமாம். அப்பவே போயிட்டாரே” என்றாள் வள்ளி.

    “வள்ளி, சும்மா சொல்லக் கூடாது! குனிஞ்ச தலை நிமிராம அடக்கமா இருந்த உன் புருஷன் தர்மிஷ்டன், தரும புத்திரன், இல்லே இல்லே பீமன், இல்லே இல்லே எம் ஜீ ஆரு, சிவாஜி, ரஜினி எல்லாம். இத்தினி பேரு இருக்காங்க இந்தத் தெருவுலே, ஆனா ஒருத்தருக்கும் தைரியம் இல்லே! பெரிய பெரிய மீசை வெச்சவன் எல்லாம் கதவைத் தாப்பாள் போட்டுகிட்டாங்க” என்றாள் அஞ்சலை.

    “என் புருஷன் நேர்மையான ஆம்பிள்ளை  என்றாள் பெருமிதத்துடன் வள்ளி.

    Share