ஞா. க​லையரசி

சென்னை,

28/12/1984.

அன்புள்ள தோழி மணிமொழிக்கு,

ஆதிரை எழுதியது. இங்கு யாவரும் நலமே. அங்கு எல்லோரது நலமும் அறிய ஆவல்.

எனக்கு 11/12/84 அன்று, அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவம் தான். கவின்மலர் என அவளுக்குப் பெயர் சூட்டியுள்ளோம். முன்பே உனக்குக் கடிதம் எழுத நினைத்தும், வேலைப்பளு காரணமாய் முடியவில்லை.

குழந்தைகளுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கவேண்டும் என்ற கொள்கை உடையவள் நான். இது உனக்குத் தெரியுமாதலால், மற்றவர்களைப் போல், “பழைய பெயராக இருக்கிறதே, இக்காலத்துக்கேற்ப புது பேஷனாக வைக்கக்கூடாதா?” எனக் கேட்கமாட்டாய்.

“வருவோர் போவோருக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது. பேசாமல் எல்லோரையும் போல, திவ்யா, அக்ஷ்யா, ஐஸ்வர்யா என்று புதுமையாக வைச்சிருக்கலாம்; உன் பேச்சைக் கேட்டது தப்பாப் போச்சு” என்று என் கணவர் புலம்பத் துவங்கிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்.

தமிழ்க் குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால், அது பழைய பேஷனாம்! கவின் என்றவுடன், ஏதோ கிரேக்கம், லத்தீன் சொல்லைக் கேள்விப்பட்டது போல, சிலர் முழிக்கும் முழி இருக்கிறதே, படு கேவலமாயிருக்கிறது மணி!

குழந்தையைப் பார்த்துப் பெரியவள் கயல், கொஞ்சம் ஏங்கத்தான் செய்கிறாள். நீ ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது போல, அவ்வப்போது அவளையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.  என் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகவே, தொட்டதற்கெல்லாம் பிடிவாதம் பிடிக்கிறாள். சின்ன விஷயங்களுக்கெல்லாம், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள். கோபப்படக்கூடாது என்பதில் பல சமயம் கவனமாயிருந்தாலும், சில சமயம் யார் மீதோ உள்ள கோபத்தை அவள் மீது காட்டி அடித்துவிடுகிறேன்.  உன் யோசனைப்படிக் கோபத்தைக் கட்டுப்படுத்த நானும் முயலாமலில்லை. ஆனால் குழந்தையைப் பார்க்க வருவோரின் பேச்சும் நடவடிக்கையும், என் கோபத்தைக் கிளறி அதிகமாக்குகின்றனவே, நான் என்ன செய்யட்டும் மணி?

“உன்னை விட தங்கச்சி ரொம்ப அழகாயிருக்கா, சிவப்பாயிருக்கா, இனிமே உன்னை யாரும் தூக்கமாட்டாங்க, உன்னை யாரும் சட்டை பண்ணமாட்டாங்க, இனிமே அவளுக்குத் தான் செல்லம் அதிகம்,” போன்ற வசனங்களைப் பேசிக் குழந்தையின் மனதைக் காயப்படுத்தி, தங்கையின் மீது பாசம் உண்டாக்குவதற்குப் பதில், ஏற்கெனவே இருக்கும் வெறுப்பை இன்னும் அதிகமாக்குகின்றனரே!

குழந்தையைப் பார்க்க வரச் சொல்லி யார் இவர்களை அழைத்தது? அப்படித்தான் வருகிறார்களே, வந்தோமா, பார்த்துவிட்டுப் போனோமா என்றில்லாமல், தேவையற்ற விஷயங்களைப் பேசிக் குடும்பத்தில் குழப்பம் பண்ணுகிறவர்களை, ஓங்கி ஓர் அறை விடலாமா என்று கூட சமயத்தில், எனக்கு ஆத்திரம் வருகிறது.

முதல் குழந்தை பெண் என்பதால், இரண்டாவது ஆணாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்; அடுத்தது கண்டிப்பாக ஆண்தான் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு, கவின் பெண்ணாகப் பிறந்தவுடன் ஏமாற்றமாகப் போய்விட்டது.  பிறந்த குழந்தையைச் சரியாகக் கவனிக்காமல் ஒரு சில நாட்கள் வருத்தத்துடன் இருந்தேன். பாவம்! குழந்தை என்ன செய்யும்?அதன்பின் ஓரிரு நாட்களில் மனதைத் தேற்றிக்கொண்டு, குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் வருகிறவர்கள், நான் மறக்க நினைக்கும் செய்தியைத் திருப்பித் திருப்பிப் பேசித் துன்பத்தை அதிகமாக்கும்போது, என் ஆத்திரம் எல்லையை மீறுகிறது மணி!

அன்றொரு நாள், என் மாமியாருக்குத் தூரத்துச் சொந்தம் ஒரு பாட்டி. அது வரும் போதே, ஏதோ துக்க வீட்டுக்கு வருவது போல் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு வந்தது. த்சொ, த்சொ என உச்சுக் கொட்டிக்கொண்டு, “இதுவாவது ஆணா பொறந்திருக்கக்கூடாதா, என்னமோம்மா, போன ஜென்மத்துல நீ செஞ்ச பாவம், இதுவும் பொட்டையாயிடுச்சு,” எனஅங்கலாய்த்தது.

“ஏன்? இது பொண்ணா இருந்தா, ஒங்களுக்கென்ன கஷ்டம்? வளர்க்கப் போறவ நான் தானே?” என்றேன், நான்காட்டத்துடன்.

நான் கோபமாக இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு, அதோடு வாயை மூடிக் கொண்டு போயிருந்தால், எந்தப் பிரச்சினையுமில்லை.  “சாண் புள்ளைன்னாலும் ஆண்புள்ளைன்னு சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்துல?பொட்டைப் புள்ளைங்க கல்யாணம் ஆயி, புருஷன் வீட்டுக்குப் பூடும். ஆம்பளைப் புள்ளைதான் கடைசிக்காலத்துல நம்மளை வச்சுக் காப்பாத்தும், கஞ்சிஊத்தும்,” என்றது அது.

“ஒங்களுக்கு ரெண்டும் ஆம்பிளை புள்ளைங்க தானே?கடைசி காலத்துல ஒங்களை வைச்சு, ஒரு வேளை கஞ்சிக் கூட ஊத்தாம, ஏன் வூட்டை விட்டு துரத்தினாங்க?” என்றேன் நான்.

வாயடைத்து விட்டது கிழவிக்கு. என் மாமியாரிடம் போய் என்னைப் பற்றி என்ன வத்தி வைத்ததோ, அதற்குப் பிறகு வீட்டில் ஒரே கசமுசா. சம்பாதிக்கும் திமிர் என்ற வார்த்தை மட்டும், அடிக்கடி என் காதில் விழுந்தது. என் காதில் விழவேண்டும் என்பதற்காகவே, சத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

உண்மையைச் சொன்னால், எனக்குச் சம்பாதிக்கும் திமிராம்! நீ அடிக்கடி சொல்வது போல், இப்படியெல்லாம் யாரையும் முகத்துக்கு நேராக எடுத்தெரிந்து பேசக்கூடாது என்று தான் நினைக்கிறேன். ஆனால் இந்தக் காலத்திலும் பொட்டச்சி என்றெல்லாம், ஒரு பெண் குழந்தையை மட்டமாக, அதுவும், ஒரு பெண்ணே பேசுவதை என்னால் ஜீரணிக்க முடியவில்லையே மணி!  நான் என்ன செய்ய?

அந்தப் பாட்டி கிளம்பின மறுநாள், “வயசானவங்க ஏதாவது சொல்வாங்கதான்.  அதுக்காக வாய்த்துடுக்காப் பேசி மரியாதைக் குறைவாக இப்படி நடந்துக்கக்கூடாது,” எனக் கடுமையாக எச்சரித்தார் என் கணவர்.

அவருக்கு ஏற்கெனவே என் மேல் கோபம். இரண்டாவதும் பெண் குழந்தை என்றவுடன், அவரது அம்மா பேச்சைக் கேட்டுக்கொண்டு, “குடும்பக் கட்டுப்பாடு இப்போ வேணாம்; மூணாவது குழந்தையைப் பார்த்துட்டுச் செஞ்சுக்கலாம்; அது ஆம்பிளைப் புள்ளையாயிருந்தா, நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே?” என்றார்.

அது ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அதுவும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டுப் பிடிவாதமாக இருந்து, குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டுவிட்டேன்.  இப்போது இந்தக் கிழவியிடம் நான் கேட்ட கேள்வியால் ஏற்பட்ட கோபத்தோடு, பழைய கோபமும் சேர்ந்து கொண்டதால், எப்போதும் என்னிடம் கடுகடு என்றிருக்கிறார்.

என் கால்களில் நான் நிற்கும்போதே, என் தேவைகளுக்காக இவர்களை எதிர்பார்க்காத போதே, என் குழந்தையைப் பற்றி இவர்கள் இப்படிப் பேசும்போது, ஒருவேளை நான், இவர்கள் கையை எதிர்பார்க்கிறவளாக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

தென்தமிழகத்தில், பெண் குழந்தைகளைக் கள்ளிப்பால் அல்லது நெல்மணி போட்டுக் கொல்கிறார்களாமே, அதுபோல் என்னையும் கொல்லச் சொல்லியிருப்பார்களோ? இது போன்றத் தேவையில்லாத எண்ணங்கள், என் மனதை அலைக்கழிக்கின்றன மணி!

நான் மருத்துவமனையில் இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்தவருக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது. அந்தம்மா பாவம், என்னிடம் புலம்பித் தீர்த்துவிட்டார். அவருக்கும் இது இரண்டாவது குழந்தையாம். “ஆம்பிளைப் புள்ளை பொறந்தா வீட்டுக்கு வா, இல்லேன்னா, உங்கம்மா வீட்டுலேயே இரு,”ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டாராம், அவரது கணவர்.

“நீங்களாவது சம்பாதிக்கிறீங்க. ஒங்கப் புருஷன் ஒங்களைக் கைவிட்டாலும் பாதகமில்லை. எங்கம்மாவூட்டிலேயும் வசதியில்லை. ரெண்டு பொம்பிளைப் புள்ளைகளை வைச்சிக்கிட்டு நான் என்னம்மா செய்வேன்,” என்று ஓன்னு கதறி விட்டார் அவர். எனக்கு அவரைப் பார்க்க மிகவும் பாவமாயிருந்தது.

பெண்களுக்குக் கல்வியும், சொந்தக் காலில் நிற்கும் பொருளாதாரச் சுதந்திரமும், மிகவும் முக்கியம் என்று நீ அடிக்கடி சொல்வாயல்லவா?அது எவ்வளவு உண்மை என்பதை, அன்றைக்குத் தெரிந்துகொண்டேன் மணி.

குழந்தை பெண்ணாகப் பிறக்கிறதுக்கும், ஆணாகப் பிறக்கிறதுக்கும் காரணம் கூடத் தெரியாமல், அப்பாவி பெண்டாட்டி மேல் பழியைப் போடுகிற கடைந்தெடுத்த முட்டாள், ஒருவேளை நம் கணவனாக வாய்த்து விட்டால் நம் கதி?

என் அம்மாவிடம் எப்போதாவது என் மனக்குறையைச் சொல்லத் துவங்கினால் போதும்.  “ஆரம்பத்துல எல்லாம் அப்படித்தான் இருக்கும். போகப் போகச் சரியாயிடும். நீதான் எல்லாரையும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்,” என்று சொல்லி,என்வாயை அடைத்துவிடுகிறார்.

கணவரிடமும் உன்னிடம் பேசுவது போல், எல்லா விஷயங்களையும் பேச முடியவில்லை.

என் உள்ளக் குமுறல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல், வீட்டிலேயே அடைப்பட்டுக் கிடப்பதால், என் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது மணி.

தபாலாபீஸ் சென்று டிரங்கால் பதிவு செய்து, உன்னிடம் தொலைபேசியில் பேசுவோமா என்று முதலில் நினைத்தேன். அலுவலக நேரத்தில் உன்னைத் தொந்திரவு செய்வதை நீ விரும்பமாட்டாய். மேலும் டிரங்கால் இணைப்பு எளிதில் கிடைக்காமல், நம் பொறுமையைச் சோதித்துவிடும். பொது இடத்தில், தனிப்பட்ட செய்திகளைப் பேசவும் எனக்குத் தயக்கம்.

வீட்டுக்கு வரச் சொல்லிக் கடிதம் எழுதுவோமா என்றும் நினைத்தேன். ஆனால் இங்கு எல்லோருக்கும் முன்னால், மனம் விட்டு எதுவும் பேச முடியாது என்பதால், மனதில் உள்ளவற்றை ஒன்று விடாமல் கொட்டிக் கடிதம் எழுதுவதெனத் தீர்மானித்தேன்.

இக்கடிதத்தில் என் மனச் சுமையை உன்னிடம் இறக்கி வைத்த பிறகு, மனம் இலகுவாகி, சிறகுகள் முளைத்து, வானில் பறப்பதுபோல் உணர்கிறேன் மணி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

என் மன அழுத்தத்தை நீக்கிப் புத்துணர்வு கொடுத்த, இந்தக் கடிதத்துக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

உரிமையுடன் என்னைக் கண்டித்து, நான் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிப் புத்திமதி சொல்லி, உடனே நீ பதில் எழுதுவாய் என எனக்குத் தெரியும். என் நலனில் உண்மையான அக்கறை உள்ளவள் என்பதால், நீ என்ன சொன்னாலும் கேட்டு, அதன்படி நடப்பேன். உன்னைப் போன்ற தோழி, எனக்கு வாய்த்தது நான் செய்த புண்ணியம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி மணி!  முதலிலேயே எழுத மறந்துவிட்டேன்.

என் குழந்தை பிறந்த நாளைக் கவனித்தாயா? எனக்குப் பிடித்த பாரதியாரின் பிறந்த நாளில் தான், என் கவியும் பிறந்திருக்கிறாள். வருங்காலத்தில் ‘அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம்,’ என்று சொல்லும் பாரதியின் புதுமைப் பெண்ணாக, இவள் பிரகாசிப்பாளோ?

நான் விடுப்பு முடிந்து வேலையில் சேர, இன்னும் இரு மாதங்களுக்கு மேலாகும். குழந்தை பிறந்த விஷயத்தை அலுவலகத்தில் எல்லோரிடமும் தெரிவித்து விடு. அங்கு ஏதும் சிறப்புச் செய்திகள் உண்டா?

உன் கடிதங் கண்டு பதில்,

இப்படிக்கு

உன் அன்பு நண்பி

ஆதிரை.

2 thoughts on “மணிமொழிக்கு ஓர் அன்புமடல்

  1. இரண்டாவதும் பெண்ணென்றவுடன் பெற்றவர்களை கழிவிரக்கத்துடன் நம் சமுதாயம் பார்க்கும் பார்வையைத் தாங்கவியலாமல், தன் அன்புத்தோழிக்கு எழுதிய கடிதத்தில் ஒரு அன்னையின் ஆதங்கமனைத்தும் வெளிப்பட்டுள்ளன. தமிழில் பெயர் வைப்பது துவங்கி, முதல் குழந்தையின் மனத்தில் மற்றவர்கள் வேற்றுமையுணர்வை உண்டாக்குவது, அடுத்தது ஆண்பிள்ளை பிறக்குமென்ற அசட்டு நம்பிக்கையில் வரிசையாய் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவது, உண்மையைச் சொன்னால் சம்பாதிக்கும் திமிர் என்று பெண்களை அடக்குவது என்று முப்பது வருடங்களுக்கு முந்தைய தேதியிட்ட இக்கடிதத்தின் சாராம்சத்தில் இன்றும் பெரிய அளவில் மாற்றமேற்பட்டுவிடவில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்க செய்தி. நல்லதொரு தோழமையால் வாழ்க்கை சிறக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வரிகளுடன் கடிதம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இனிய பாராட்டுகள்.  

  2. ஆம் கீதா!  பெண் முன்னேற்றம் பற்றிப் பேசுகிறோம் ஆனால் இன்றும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.  கடிதத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் கோர்வையாக எடுத்துச் சொல்லிப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி கீதா!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க