ஆம்பிளே
தமிழ்த்தேனீ
சரவணன் நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டு முருகன் திருஉருவப் படத்தின் முன்னால் நின்று கொண்டு அமைதியாக கந்தா முருகா கார்த்திகை மைந்தா என்று கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்தான்.
வள்ளி பக்கத்திலே நின்று கொண்டு அவனையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கந்த சஷ்டி கவசத்தை முடித்துவிட்டு வழக்கம் போல் கந்த சஷ்டி கவசம் முற்றிற்று என்றான் சரவணன்.
‘களுக்’கென்று சிரித்தாள் வள்ளி.
திரும்பிப் பார்த்த சரவணன் “என்ன வள்ளி? எதுக்கு சிரிக்கற?” என்றான்.
“இல்லே! கந்த சஷ்டி கவசம் சொல்றீங்க. சொல்லி முடிச்சவுடனே நீங்களே ‘கந்த சஷ்டி கவசம் முற்றிற்று’ அப்பிடீன்னு சொல்றீங்களே. அதான் சிரிச்சேன்” என்றாள்.
“ஓ அதுவா! நாம எப்பிடி மனப்பாடம் செய்யிறோமோ அதுஅது அப்பிடியே தங்கிப் போவுது மனசுக்குள்ளே. கந்த சஷ்டி கவசம் மனப்பாடம் செஞ்சிட்டு கடைசீயிலே போட்டிருக்குமே ‘கந்த சஷ்டி கவசம் முற்றிற்று’ அப்பிடீன்னு அதையும் சேர்த்து மனப்பாடம் செஞ்சிட்டேன். சொல்லும் போது தானா அந்த வரியும் வந்துடும்” என்றான்.
வள்ளி நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள். இப்பிடி அமைதியா இருக்கற தன் புருஷனா நேற்று அப்படி நடந்துகொண்டான் என்று ஆச்சரியப்பட்டு மனதுக்குள்ளேயே ‘நீதாய்யா ஆம்பிளை, என் ஆம்பிளை’ என்று ச்லாகித்துக்கொண்டே சரவணன் அருகே வந்து அவன் தலையை செல்லமாகக் கோதிவிட்டாள்.
“என்ன இன்னிக்கு ஒரே பாச மழையா இருக்கு?” என்றான் சரவணன், “ஒண்ணுமில்லே சும்மாத்தான்” என்றாள் வள்ளி.
சரவணனுக்கு அவனுடைய தாயார் மீனாக்ஷி இப்பிடி அன்போடு வாஞ்சையாக தலையைக் கோதிவிடுவாளே அது நினைவுக்கு வந்தது
தாய்க்குப் பின் தாரம் என்பது உண்மைதான் என்று நினைத்துக் கொண்டே, “சரி வள்ளி. நான் ஆபீசுக்கு போயிட்டு வரேன். கதவைத் தாள் போட்டுக்க, பயப்படாத, ஜாக்கிறதையா இரு” என்று கூறிவிட்டு கிளம்பினான்.
“எனக்கென்ன பயம்? என் ஆம்பிளே நீங்க இருக்கும் போது, அதுவும் நேத்து சாயங்காலத்திலேருந்து நெலைமையே மாறிப் போச்சே! எல்லாரும் என்னை மரியாதையா பாக்கறாங்க. முந்தா நேத்து வரைக்கும் உங்களை மரியாதை இல்லாம பேசினவங்க கூட உங்களைப் பத்தி பேசினாவே பயப்படறாங்க, உங்களை மரியாதையா ஐய்யான்னு சொல்றாங்க” என்றாள்.
“வள்ளி! சொல்றேன்னு தப்பா நெனைக்காத. இனிமேத்தான் நாம எல்லார்கிட்டயும் இன்னும் மரியாதையா நடந்துக்கணும். அமைதியா பேசணும், எல்லாருக்கு மரியாதை குடுத்து பேசணும். புரியுதா?” என்றான் சரவணன்.
“சரிங்க. நாம எப்பவும் போலவே நல்லபடியா மரியாதையா நடந்துக்குவோம், அது சரி! நீங்க ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க” என்றாள்.
“சரி வள்ளி. நான் போயிட்டு வரேன்” என்றபடி கிளம்பினான் சரவணன்.
அவன் கிளம்பியதும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள் வள்ளி. கை வேலை செய்து கொண்டிருந்தாலும் மனம் நேற்று முன் தினம் நடந்ததையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
மாலை ஆறு மணி இருக்கும். சரவணன் ஹாலில் உட்கார்ந்து தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். திடீரென்று வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள் வள்ளி. ஒரு குரல் கேட்டது, “இதோ பார்ரா! வீராங்கனை எட்டிப்பாக்கறாங்க. ஏ உள்ளே போ, மருவாதையா” என்றான் ஒருவன். முழுக் குடியில் அவன் கண்கள் சிவந்திருந்தன.
பதறிப் போய்க் கதவைச் சார்த்திவிட்டு படபடப்புடன் “ஏனுங்க, வாசலில் ஒரு குடிகாரன் கத்தி கலாட்டா செஞ்சிகிட்டு இருக்கான்” என்றாள்.
“சரி இதுக்கெல்லாம் நாம என்ன செய்ய முடியும். அவனே போயிடுவான். நீ உள்ளாற வா” என்றான் சரவணன்.
“அதில்லைங்க. அந்தக் குடிகாரன் நம்ம பக்கத்து வீட்டு சரோஜாவை முடியைப் பிடிச்சு இழுத்து அடிச்சிகிட்டு இருக்கான். இந்தத் தெருவிலே எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க” என்றாள்.
சரவணன் ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கே போய் அந்தக் குடிகாரனிடம், “எதுக்கு இந்தம்மாவை அடிக்கறீங்க? அவங்களை விட்றுங்க” என்றான்.
“இதோடா! தரும புத்திரன் வந்துட்டாரு, யோவ் போய் வேலையைப் பாருய்யா, டீவீயிலே சீரியல் பாக்கறதை விட்டுட்டு இங்கே வந்து குரல் வுடறே போய்யா” என்றான் போதையுடன்.
சரவணன் அவன் கையைப் பிரித்து சரோஜாவின் முடியை விலக்கி சரோஜாவை பார்த்து, “நீங்க போங்கம்மா” என்றான்.
“யோவ்! மரியாதையா உன் வேலையைப் பாத்துக்கிணு போயிடு, இவளோட புருஷன் 10000 ருபா வாங்கிட்டு தராம ஏமாத்தறான், இது எங்க ப்ரச்சனை மரியாதையா போயிடு… இல்லே, வெட்டிருவேன்” என்று அரிவாளை உயர்த்தினான் குடிகாரன். லாவகமாக அந்த அரிவாளை அவன் கையிலிருந்து பிடுங்கி தூற எறிந்துவிட்டு, “இதோ பாருங்க! இந்தம்மாவோட புருஷன் பணம் தரலேன்னா அவரைக் கேளுங்க. இந்த அம்மாவை எதுக்கு அடிக்கறீங்க? மரியாதையா போறீங்களா, இல்லே போலீசைக் கூப்பிடவா?” என்றான் சரவணன்.
“ஓ போலீசைக் கூப்புடுவியா! இரு இரு, எங்க ஆளுங்களைக் கூட்டி வந்து உன்னை என்னா செய்யறேன் பாரு” என்று கருவிக்கொண்டே தள்ளாடியபடி சென்றான் அந்தக் குடிகாரன்.
சற்று நேரத்தில் “யார்ரா அது? என் ஆளை போலிசிலே பிடிச்சுக் குடுப்பேன்னு சொன்னது” என்றபடி பத்து பேர் கொண்ட கும்பல் சரவணனை தாக்க ஆரம்பித்தது.
கீழே விழுந்த சரவணன் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சியாகக் கட்டிக் கொண்டு எதிர்த்தாக்குதலை தொடங்கி இரண்டு நிமிடத்தில் பத்து பேரும் அடிவாங்கித் தலை தெறிக்க ஓடினர் .
நினைவலைகள் கொடுத்த அந்தக் காட்சியின் தீவிரம் மனதுக்குள் உரைக்கவே ‘களுக்’கென்று சிரித்தாள் வள்ளி. பக்கத்து வீட்டு ஜன்னல் திறந்தது. “என்னா வள்ளி, உங்க வீட்டுக்கார ஐயா வேலைக்குப் போயிட்டாரா” என்றாள் அஞ்சலை .
“ஆமாம். அப்பவே போயிட்டாரே” என்றாள் வள்ளி.
“வள்ளி, சும்மா சொல்லக் கூடாது! குனிஞ்ச தலை நிமிராம அடக்கமா இருந்த உன் புருஷன் தர்மிஷ்டன், தரும புத்திரன், இல்லே இல்லே பீமன், இல்லே இல்லே எம் ஜீ ஆரு, சிவாஜி, ரஜினி எல்லாம். இத்தினி பேரு இருக்காங்க இந்தத் தெருவுலே, ஆனா ஒருத்தருக்கும் தைரியம் இல்லே! பெரிய பெரிய மீசை வெச்சவன் எல்லாம் கதவைத் தாப்பாள் போட்டுகிட்டாங்க” என்றாள் அஞ்சலை.
“என் புருஷன் நேர்மையான ஆம்பிள்ளை என்றாள் பெருமிதத்துடன் வள்ளி.