Blog

  • பாராட்டா, வசவா?

    பாராட்டா, வசவா?

    நிர்மலா ராகவன்

    (பழகத் தெரிய வேணும் – 5)

    என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

    இன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே?”

    நானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”.

    மாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், ‘எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம்.

    என் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா.

    நான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்!” என்ற பழிச்சொற்கள் எழும்.

    நான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

    விதவைகளுக்குச் செய்யப்பட்ட அநீதி

    அந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் — ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள்.

    வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி?) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா! (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்).

    பாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. ‘கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். ‘வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, ‘என்னமா முதுகுசொரியறது! ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் ‘திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.

    திருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே! ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ!” என்று அழுதார்கள் பாட்டி.

    பாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: ‘நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை!’ என்று!

    வசவா, செல்லமா?

    எல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள் மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை.

    அதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா?

    கைம்பெண்ணாக நடித்தபோது

    மலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். ‘வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம் பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.

    நான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே!

    எனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை!

    என் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன்.

    ‘நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்?’ என்று ஒருவர் பாராட்டியபோது, ‘வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன்.

    எதையும் தாங்கலாம்

    எப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, ‘இவள் என்ன டைப்? புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று என்னைக் குறித்துக் கேட்க, ‘இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது!’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம்.

    நான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா!

    அடித்து வளர்ப்பது

    தினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பால் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்!) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்?

    அடித்தால், ‘தண்டித்து விட்டார்களே!’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு.

    அழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்?

    “பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது).

    தடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.

    உங்கள் கையில்

    தகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. ‘ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது.

    குழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு குழந்தை முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது.

    அவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும்.

    கதை

    என் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன்.

    “ஏம்மா குழந்தையை அழவிடறே?” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள்.

    “கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. ‘தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா?”

    அதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி

    பாராட்டுங்கள்

    ஒரு முறை நான் ரயிலில் நீண்ட பயணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன்.

    உடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை.

    ஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை ‘தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது.

    பெண்களுக்கு உலகின் போக்கு புரிய

    ஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா?”

    “உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா!” என்ற விளக்கம் வந்தது.

    ‘எது செய்தாலும் சரிதான்!’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன?

    சமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும்.

    ‘கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல.

    அருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.

    Share
  • ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள். பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல்.  இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் – ஒராங்குட்டான்.

    பாடல்

    நண்பா!
    எப்போது காதல் வாய்த்தது?
    அப்போது என்ன நேர்ந்தது?

    ஒரு சூறாவளி
    இதயச் சிறுகூட்டில் சுழன்றதா?
    ஒரு கோதாவிரி
    முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?

    இலவம்பஞ்சு போலே
    உடல் மிதந்து போகாதோ
    உன்னை நினைத்தால்

    வார்த்தை மொழியிழந்து போகும்
    சொல் தீர்ந்து போனாலும்
    உரையாடல் தீராது

    கண்ணா! வினோத வேதனை
    கண்தூங்கும் போதும்
    காதல் சிந்தனை

    Share
  • கதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்

    கதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்

    சுப்ரபாரதிமணியன்

    ‘கனவு இலக்கிய வட்டம்’ சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை எழுதும் “கதைசொல்லி..“ போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து131 கதைகள் வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு. தபாலில் பரிசுகள் அனுப்பபட்டன.

    திருப்பூர் பகுதிப் பள்ளிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு  26/2/2020 காலை. முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, கூத்தம்பாளையம், அண்ணாநகர் விரிவு, பி.என். சாலை, திருப்பூரில் நடைபெற்றது. எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் வழங்கினார். அவர், பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பள்ளி நிர்வாகி பசுபதி உட்பட்டோர் கலந்துகொண்டனர். கதைகளைத் தேர்வு செய்தவர்கள்கவுரவிக்கப்பட்டனர்.

    “கதை சொல்லும் பயிற்சியைப் போல் கதை எழுதும் முறைகளைக் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டியது பற்றி எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் பேசினார். கதைகள், இலக்கியம்- வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை. வழிகாட்டுபவை. இலக்கியத்தை நிராகரிப்பவன் பகுத்தறிவு இல்லாத மிருகமாகவே  வளர்வான்“ என்றார், எழுத்தாளர் நாமக்கல் நாதன்.

    ”கனவு இலக்கிய வட்டம்“ சார்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:

    “பாட்டிகள் மடியில் உட்கார்ந்து கதை கேட்ட தலைமுறை இன்றில்லை. பாட்டிகளும்முதியோர் இல்லத்தில். குழந்தைகளும் டிவி முன்னால் உட்கார்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்னர் பத்திரிகைகள் கதைகள் சொல்லின. இப்போது  அதில் பெரும் பகுதி டிவிதான். கதை சொல்லும் மரபைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், பேச்சில் கூச்சம் இல்லாமல் இருக்கவும், சிந்தனையை வளர்க்கவும் இக் கதை சொல்லும் நிகழ்ச்சி உதவுகிறது.

    “கதை சொல்லும் மரபு விடுபட்டுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். பாட்டிகளும் முதியோர்களும் முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகிறார்கள். தொலைக்காட்சிகள் அந்த இடத்தை  எடுத்துக்கொள்ள முடியாது. கதைசொல்லலில் கற்பனைத் திறன் வளரும். பேச்சில் கூச்சம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கைவளரும். கதை கேட்காத, கதை சொல்லாத தலைமுறைகளால் மொழித் திறன் வளராமல் போகும். மேலை நாடுகளில் கதை சொல்லல், பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. பாடப் பகுதிகளை கதைகளாகச் சொல்வதும் மாணவர்களுக்குப் பாடங்களை எளிதில் புரிய வைக்க உதவும். இலக்கியப் பகுதிகளைக் கதைகளாக்கி, பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கலாம் என்றார்.

    தாளாளர் பசுபதி வாழ்த்திப் பேசினார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 247

    படக்கவிதைப் போட்டி – 247

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    திரு. முகம்மது ரபியின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 246க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். படக்கலை நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அலையெனவே அலைந்தாடும் மனித மனங்கள் அவா அறுக்கும் கலையறிந்து அடக்கத்தோடு வாழ்ந்தால் வாழ்வில் இன்பம் கோபுரமாய் உயர்ந்துநிற்கும் எனத் தோன்றுகின்றது இப்படக் காட்சியைக் காண்கையில். ஆயினும் அவ் உயர்நிலை வாய்க்கக் கடும் பயிற்சியும் விடா முயற்சியும் தேவை.

    இப்படக்காட்சியைக் காணும் கவிஞர்களின் உள்ளத்தில் கவிதை வெள்ளம் பொங்கிப் பெருகும் என நினைக்கிறேன். அவ்வெள்ளத்தில் நீந்தி மகிழும் நல்வாய்ப்பை எமக்களிக்க வாரீர் எனக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    அசைந்தாடும் நதிநீரை, அந்நீரின் பளபளப்பை, ஓரம்நின்று இரசிக்கும் படகுகளை, கட்டடங்களின் பின்னே மறைந்து நின்று சிரிக்கும் மரங்களை எனப் படத்தில் தெரிகின்ற அனைத்தையும் தன் கவிதைக்குள் கவினார் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    அசைந்தாடும் நதிநீரை
    அணைத்தபடி கட்டடங்கள்
    அழகழகாய்த் தெரிகிறதே
    அதில் நம் மனமும் லயிக்கிறதே

    இடைவிடாது ஓடுகின்ற
    இந்நதி நீரின் பளபளப்பு
    இறைவன் தந்த பரிசளிப்பு
    நம்மிரு கண்ணில் ஜொலிஜொலிப்பு

    மரங்களும் தான் தெரிகிறதே
    மறைக்கும் கட்டடங்கள் பின்புறத்தில்
    சில்லென்று காற்றடிக்கச்
    சீறியெழச் சிரிக்கிறதே!

    கதிரவனின் ஒளிவீச்சால்
    தங்கக்குவியலாய் இந்நதிநீரோ
    அதனுடே நீலநிறம்
    அதற்குத்தான் முத்தாய்ப்போ?!

    படகுகளும் ஓரம் நின்று
    நதியைத்தான் ரசிக்கிறதோ
    ஆலயங்கள் கரைமீது
    அமைதியைத்தான் தருகிறதோ!

    அழகென்று எதைச் சொல்ல…?
    அற்புதப் படப்பதிவில்
    அருமையான காட்சியே என்று
    அறுதியிட்டுக் கூறுகின்றேன்!

    *****

    ”அலைகடலே அடங்கிக் கிடப்பாய்! அடங்காது ஆடும் அறிவற்ற மனிதனுக்கு, நேற்றிருந்தோர் இன்று இல்லை எனும் நிலையாமையை நீ உரைப்பாய்!” என்று கடலை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனுக்குப் பாடம்…

    ஆற்றல் மிகுந்த அலைகடலே
    அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
    ஏற்றம் வந்தால் மனிதனவன்
    ஏதும் தெரியா தாடுகின்றான்,
    கூற்றின் வரவு தெரியாதே
    குற்றம் பலவும் செய்கின்றான்,
    நேற்றுச் செய்தோர் இன்றில்லை
    நெறியாம் பாடம் சொல்வாயே…!

    *****

    ”யாத்திரை என்றதும் நினைவில் வரும் திருத்தலம் காசி; முதுமைவந்து முத்தமிட, அமைதி தேடும் மனங்களுக்குப் புகலிடமும் இந்தக் காசியே” என்று காசினி போற்றும் காசியின் புகழ்பாடுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பஞ்சபூதங்களில்
    நிலமும் நீரும்
    வீசும் காற்றும் வானும்
    வந்து நின்று போஸ் கொடுக்க
    தீமை விலகி நன்மை பெருகத்
    தீ மட்டும் விலகிச் சென்றதோ?

    நித்திரையில் கூட
    யாத்திரை என்றதும்
    நினைவில் வரும்…. காசி
    கங்கையில் தினம்
    கறைகள் நீராட
    புனிதமாய் மாறி
    புண்ணிய ஸ்தலமானதோ?

    குற்றங்கள் பெருகிப் பாவங்கள் நிறைந்திட
    புனித நீராடி
    பாவங்களைத் துறந்து பரிசுத்தம் ஆகும்
    நம்பிக்கையைப்
    பலர் நெஞ்சில் விதைத்தவன்
    தன்னம்பிக்கை விதைக்க மறந்ததென்ன?

    எதிர்காலம் பற்றிச்
    சிந்தையேதும் இன்றியே
    பொருள் தேடி ஓடியே
    இளமை முழுதும் கழியுமே
    வந்து போக மனமின்றி
    தங்கிவிட்டச் சக்தி யாவும்
    ஒன்று சேர்ந்து உருவான ஊரு இது!

    முதுமை வந்து முத்தமிட
    அமைதி தேடி அலைந்திடும்
    மனங்கள் அனைத்திற்கும்
    புகலிடமாய் அமைந்திடும்
    காசி எனும் இத்தலமே!

    *****

    ”புலன்களால் ஏறிய புழுதியைப் படித்துறையில் துலக்கி, பக்திக்கடலில் மூழ்கி, முக்தியெனும் முத்தெடுக்கக் காத்திருக்கும் கட்டங்கள் இவை” என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

    புலன்களால் புழுதியேறி
    அடர்ந்திருந்த அழுக்காற்றுக் கறையைப்
    படித்துறையிலே துலக்கி,
    சினம் தொலைத்து, மோகம் களைந்து,
    பக்தியெனும் கடலில் மூழ்கி,
    முக்தியெனும் நல்முத்தெடுக்க,
    தமது முறைக்காக
    வரிசையில் காத்திருக்கும்
    கட்டடங்கள்.

    *****

    ”வானோங்கி நிற்கும் இக் கட்டடங்கள் நிலைத்திருக்க, கடலது கரை தாண்டாமல் கண்ணியம் காக்கவேண்டும்” என்ற உண்மையை விண்டுரைக்கின்றார் திருமிகு. சத்தியா இரத்தினசாமி.

    வல்லென மனிதன் வனைந்த கட்டடங்கள் வானம் தொட.
    முனைந்து நிற்கும் இவ்வகையைப் பார்க்கையிலே….
    உள்ளூர ஓர் உணர்வெழுகின்றது.
    இக் கட்டடக் காட்சியெல்லாம் கரையிலே நிலைத்திருத்தல்,
    கண்ணியம் காக்கும் கடல் கரை தாண்டா வரையிலேயே…

    *****

    நீரையும் நீரைச் சார்ந்துநிற்கும் ஏனைய பொருள்களையும் அழகாய்த் தம் கவிதைகளுக்குள் அடக்கி, வாழ்வியல் உண்மைகளை அவற்றோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் அகங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது…

    ஜீவநதி!

    காட்சிகள் மாறினாலும்
    காலங்கள் மாறினாலும்
    மாட்சிமை(யை) நிலத்து நிற்க
    மன அழுக்கை அடித்து ஓட்டு!

    சலசலத்துப்
    பொங்கியோடி
    வையகத்தின் வளம் சேர்க்கத்
    தினம் தினம் புதிப்பித்துக் கொள்!

    ஓரிடத்தில் ஒடுங்கி
    பழமை சேர்ந்து
    பாசி படிந்து
    குட்டையாய்த் தேங்கிடாமல்
    ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!

    ”மனிதா! மாட்சியோடு என்றும் நிலத்தில் நிலைத்துநிற்க, உன்னை நித்தமும் புதுப்பித்துக்கொள்! குட்டையாய்த் தேங்கிடாமல் ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!” என வாழ்வின் வெற்றி இரகசியத்தை எளிமையாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12

    தி. இரா. மீனா      

    கதிரெம்மவே

    கதிரரெம்மய்யனின் மனைவியான இவருக்கு ரெப்பவ்வ என்ற பெயருமுண்டு. இராட்டையில் நூல் நூற்பது இவரது காயகமாகும். ”கதிரரெம்மி ஒடைய கும்மேஸ்வரா” இவரது முத்திரையாகும். சரணபதி, லிங்கபதி பாவனை, தொழிலின் உயர்வு, சரணரைப் போற்றுதல் ஆகியவை இவரது வசனங்களில் வெளிப்படுகின்றன. காயகத்தின் வழக்குகள் வசனங்களில் இடம் பெறுகின்றன.

    1. “என் இராட்டையின் குலம்சாதி என்னவெனக் கேட்பவரே,
    கீழ்ப்பலகை பிரம்மன்; நாராயணன் தோரணம்
    நின்றிருக்கும் பொம்மை சிவன்
    சிவனின் பின்புறம் சூத்திரமிரண்டு
    அறிவென்கிற நூற்புக் கயிற்றை பக்தியெனும் கையால் சுழற்ற
    சுற்றி நூல் நிறைந்தது நூல்கதிர்
    இராட்டையைச் சுழற்ற மாட்டேன் என் கணவன் கோபிப்பான்
    இனி என்செய்வேன் கதிரரெம்மியொடய கும்மேஸ்வரனே ”

    கன்னடி காயகதா அம்மி தேவய்யா

    இவருடைய  காயகம் சவரம் செய்வதாகும். ”கமலேஸ்வரலிங்க” இவரது முத்திரையாகும். காயகம் பற்றி எழுதுவதும், எந்தச் சாதி, குலத்திலிருந்து வந்திருந்தாலும் அவரவர் காயகத்திற்கும், பக்திக்கும் இழிவு வராதபடி பார்த்துக் கொள்ளவேண்டுமென்பது இவரது வசனங்களின் சாராம்சமாகும்.

     1. “எந்தக் குலம் சாதியில் பிறந்திருப்பினும்
    தம் காயகத்திற்கு பக்திக்கேற்ப
    களங்கமில்லாமலிருக்க வேண்டும்
    முக்குணத் தூய்மையோடிருக்க வேண்டும்
    அறம் பொருளின்பத்திற்கு மூக்கறுபடலாமா?
    அறிஞர் சொன்னாரென பொருத்தமற்றவை செய்யலாமா?
    எண்ணத்தில் தூய்மையாகி சென்ன பசவனின் சாட்சியாகி
    கமலேஸ்வரலிங்கம் போற்றவேண்டும்”

     2. “தீப்பந்தம் ஏந்தியவனுக்கு ஐயமிருக்கலாம்
    தீபத்திற்கு ஐயமுண்டோ?
    சம்சாரத் துன்பத்தில் காமனின் தகிப்பில்
    தவிப்பவனுக்கு கொந்தளிப்பு!
    அதிசயலிங்கமணிந்தவனுக்கு கொந்தளிப்பா?
    சென்னபசவன் சாட்சியாக இக்குணமுடையவனை
    கமலேஸ்வரலிங்கமென்பேன்”

    கன்னடி காயகத ரெம்மம்மா

    ரேமம்மா, ரெம்மவ்வா என்ற பெயர்களுடையவர். நாவிதம் இவருடைய காயகம். ”சத்குரு சங்க நிரங்கலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “கையில் கண்ணாடியிருக்க தன்னைத்தான் பாரக்கக் கூடாதா?
    ஜங்கமரின் பிரசாதம் ஏற்கவில்லையெனில்கொல்லக் கூடாதா?
    கொன்றால் முக்தியில்லையென்போரின் வாயில்
    காவலனின் காலணியை வைப்பேன்
    விடுகதைக்கு விடைகொடுங்கள்
    உம்மிடம் விடை இல்லையெனில் அழியுங்கள்
    இறந்த நாயின் வால்போல
    சத்குருசங்க நிரங்க இலிங்கத்தில்”

    கன்னத மாரிதந்தே

    திருடனாக வாழ்ந்த இவர் இறையருளால் சரணராக மாறி நல்ல வாழ்க்கை  நடத்துகிறார். ”மாரன வைரிமாரேஸ்வரா’ இவரது முத்திரையாகும். களவுத் தொழில் பின்னணி என்பதால் அது தொடர்பான சொற்களே வசனங்களில் இடம் பெறுகின்றன.

    “இருட்டில் கன்னம் வைத்தால் என் கர்த்தனுக்கு அவமானம்
    தூங்குகின்றவர் வீட்டில் புகுந்தால் தொழிலுக்கு அவமானம்
    தூங்கியவனை எழுப்பி எடுத்த பொருளை அவனுக்குக் காட்டி
    எனக்குரியதை எடுத்துவந்தேன் மாறன வைரி மாரேஸ்வரனே”

    கம்பத மாரிதந்தே

    காயகம் மீன் பிடிப்பதாகும். ’கதம்பலிங்க’ இவரது முத்திரையாகும்.

    “பிறவிகள் பலவெடுப்பினும் உத்திகள் பல பேசினாலும்
    சாட்சிகள் பல இருந்தாலும்
    இடமறியவேண்டும்
    பேச்சறிவோமெனப் பேசாமல்
    சான்றோன் என மௌனம் காட்டாமல்
    அவ்வக்காலத்தின் நீதியறிந்து
    அறம் சார்ந்து இருப்பதே உயர்வாகும்
    கதம்பலிங்கனே”

    கரஸ்தலதா மல்லிகார்ச்சுனதேவா

    “பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுன “ என்பது இவரது முத்திரையாகும். இஷ்டலிங்க வழிபாடு, சிவன் பெருமை பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    1.“அகத்தில் தெளிவின்றி புறத்தில் செயலிருப்பின் என்னபயன்?
    அது பார்வையற்றவனின் வாழ்வு போன்றது
    புறத்தில் செயலின்றி அகத்தெளிவால் என்ன பயன்?

    அது சூன்யத்திலுள்ள விளக்கு போன்றது
    அகம், புறமிரண்டும் இணைய வேண்டும்
    “அகந்தர்ஞான பஹிம்கிரியா ஏகியாவோ விசேஸத”
    என்பது போல அகத் தெளிவு,புறச்செயல் உடையவன்
    பக்தன்,பிரசாதி, அடியவனாவான்
    நம் பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுனனுக்கு ”

    2.“கடலின் ஆலங்கட்டியைச் செதுக்கி தூணாக்கி
    வீடுகட்டி வாழ்வு நடத்த முடியுமா?
    அக்னிக்குள்ளிருக்கும் கற்பூர குடுவைக்குள்
    மணம் சேர்த்து பசையாக்க முடியுமா?
    காற்றின் மணம் பிடித்து மாலையாக்கி சூடமுடியுமா?
    கானல்நீரை எடுத்து வந்து சமைத்துண்ண முடியுமா?
    உன்னை அறிந்து தன்னை மறந்த சிவயோகிக்கு
    இன்னொரு பிறவியுண்டோ
    பரமகுரு மல்லிகார்ச்சுனனே?  “

    கருளகேதய்யா

    “சங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும். நோன்புக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றியவர். வீரசைவரல்லாதவரோடு சேருதல், அர்ப்பணம் செய்யாததை உண்ணுதல் ஆகியன கூடாது என்ற கருத்துக்களைத் தன் வசனங்களில் வெளிப்படுத்தியவர்.

    1.“சாவு விட்டுவிடாது என்பதறிந்தும்
    ஒழுக்கம் விட்டு நாளும் மடிவதேன்?
    இலிங்கத்திற்கு மனம் அர்ப்பணித்து
    மனதிற்கினிமையான சங்கேஸ்வரனோடு இணைவீர் ”

    2.“உடல் தனக்குத் தேவையற்றதை விரும்பினால் வெட்டுவேன்
    கைகள்  தனக்கற்றதைத் தீண்டினால் சீவிவிடுவேன் உடனே
    காதுகள் தனக்கற்றதைக் கேட்டால் அறுப்பேன்
    நாசி தனக்கற்றதை முகர்ந்தால் கூராணி செலுத்துவேன்
    பார்வை தவறினால் களைந்தெறிவேன்
    மனம் மற்றது நினைத்தால் ஆன்மாவை எறிந்துவிடுவேன்
    மனதிற்கு இனிமை சங்கேஸ்வரலிங்கமே”

    கலகேதய்யா

    இவர் கிராமியக் கலைஞர். “மேகலேஸ்வரலிங்கா “ இவரது முத்திரையாகும். ”அரிஹர’, “பீமகவி”, ஆகிய காவியங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    “வேலை செய்வதைச் சொல்லி இரப்பதேன்?
    கிடைக்காத போது வைவதேன்?
    கடவுள் தருவாரெனச் சொல்லி கோயிலில்
    கூட்டத்தில் காத்திருப்பதேன்?இது பெருமையோ?
    வயிற்றை நிரப்புபவரின் வாழ்வியல் நிலை இது
    மேகலேஸ்வரலிங்கனை இவரடைய முடியாது “

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி                           

    திருத்தொண்டர்களுள் முதலாமவராகிய திருநீலகண்டர் அருள் வரலாற்றைக்  கூறும் இப்புராணத்தில் அத்தொண்டர்தம் மனைவியார் பற்றியும், சிவநேயத்தைப்   பற்றியும்  இப்பாடல்  கூறுகிறது.

    அவ்வடியாரின் மனைவியார் அருந்ததி என்ற கற்புக்கரசிக்கிணையான மேம்பட்ட  கற்புக்கரசி ஆவார். கற்பு – கணவனார் வழி நிற்கும்பெண்ணியல்பு. “கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை“ என்பதுபழமொழி. அருந்ததி – வசிட்டரது மனைவி. கற்பினிற் சிறந்தவள். வரம்பெற்று அப்பெயர் பூண்ட ஒரு விண்மீனாகி நிற்கின்றாள் எனவும்,கற்பினுக் குதாரணமாகக் கொள்ளப் பெறுபவள் எனவும் புராணங்கள் கூறும்.கல்யாணச் சடங்குகளில் அருந்ததி காணும் வழக்கம் காண்க.

    உலகம் உய்யும்பொருட்டுப் பாற்கடலில் பொங்கி மேலெழுந்த விடத்தை இறைவன் அமுதுசெய்ய (அது உள்ளே சென்று மறைந்துபடாமல் எமக்கெல்லாம் அறிகுறியாக விளங்கி இருக்கும்படி) யாங்கள் செய்த தவப்பேறுதான் அம்மட்டில் நிற்கும்படி தடுத்ததோ என்று சொல்லும்படியாக இந்தக் கண்டமல்லவா அதனைத் தடுத்துத் தானே தரித்து நிற்கிறது என்ற கருத்தினாலே; சிவபெருமானாகிய எமது இறைவனது கழுத்தையே எப்போதும் எண்ணுபவராய் இவ்வடியார் திருநீலகண்டம் என்று போற்றி வருவார். நஞ்சுண்டது தேவர்களின் பொருட்டேயாயினும் அதனைக் கழுத்தளவில் நிறுத்தித் தரித்தது தமது கருணையை எல்லாப் புவனங்களிலும் உள்ள எல்லா உயிர்களும் உணர்ந்து உய்யும்பொருட்டாதலின், உய்யத்தரித்தது என்றார். இவர் இன்பத்துறையில் எளியரானாலும்  அவரே முன்னர்ச் சொல்லிய

    ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
    நாதனார் கழல்கள் வாழத்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.
    பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல் சடை முடியார்க்கு அன்பர்
    மெய் அடியார் கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்;
    வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்;
    சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார்.

    என்ற இயல்புடன் “திருநீலகண்டம்“ என்பாருமானார் என்க. தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதம்பெற வேண்டித் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அங்ஙனம் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டனர். கடையவே வாசுகி வருத்தமிக்கு நஞ்சுமிழ்ந்தது. அது தேவர்களை வருத்திற்று. முன்னர் வெள்ளை நிறமுடைய திருமால் மேனி கறுகினர். பொன்னிறத்தவரான பிரமர் புகை நிறமாயினர். தேவர்கள் இறைவனைத் துதித்து ஓலமிட அவர் அந்த நஞ்சினை உண்டு கழுத்தளவில் நிறுத்தித் தேவரைக் காத்தனர். அந்த நஞ்சு இருத்தலின் இறைவனது கண்டம் நீலகண்ட மாயிற்று என்பது வரலாறு. இச்சரிதம் மாபுராணங்கள் எல்லாவற்றிலும் பேசப் பெற்றது.

    பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
    பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
    தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
    தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே

    என்பது முதலிய சைவத் தெய்வத் திருவாக்குக்கள் எங்கெங்கும் இக்கருணைத் திறத்தினைத் தேற்றம்பெறப் போற்றி முழக்குதல் காண்க. திருநீலகண்டம் என்ற இத்திருப்பெயரின் ஆணையாலே பதிக முழுதும் ஆணையிட்டு ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருநீலகண்டத் திருப் பதிகமுங் காண்க.

    அல்லாமலும் இவர் மனைவியார் திருநீலகண்டம் என்று சிவபெருமானைப் போற்றும் தன்மையினார் என்றும் கூறுவார். ஆனால் திருநீலகண்டத்துக் குயவனார் என்று  சுந்தரர் பாடியதாலும், இக்குயவர் ‘’திருநீலகண்டம்’’ என்ற திருப்பெயரையே எப்போதும் கூறிவந்தமையாலும் ‘திருநீலகண்டர்’ என்பதே இவர் திருப்பெயர் ஆயிற்று!  சிவனாகிய எந்தை நஞ்சுண்டதாலும் கழுத்திற்றரித்ததாலும் யாமெல்லாம் உளமாயினோம் என்ற கருத்துந்தோன்ற இங்குச் சிவனெந்தை என்ற சொல்லாற் போற்றினார்.  திருநீலகண்டத்திற் பற்று மிக்குப் பயின்ற பண்பினாலே அன்றோ மனைவியார் அதனைக் கூறி ஆணையிட்டவுடன், “தாங்கொண்ட ஆர்வ“த்தினாலே “பேதியா ஆணை கேட்ட பெரியவர்“ அதனை ஆயுள்முழுதும் கடவாது உய்த்ததும் ஆம் என்க.

    “அடியாரா மிமையவர்தங் கூட்ட முய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட வமுதே“ – முதலிய பல திருவாக்குக்களும் காண்க. இனி இப்பாடல் முழுவதையும்  பயின்று பயன் பெறுவோம்.

    ‘’அவர்தங்கள்  மனைவியாரும்  அருந்ததிக்   கற்பின்   மிக்கார்
    புவனங்கள்   உய்ய ஐயர்  பொங்குநஞ்சு உண்ண யாம்செய்
    தவம்நின்று    தடுத்ததென்ன   தகைத்து தான்   தரித்தது என்று
    சிவனெந்தை   கண்டந்தன்னைத்   திருநீல  கண்டம்  என்பார்!

    இப்பாடலில் இறைவன் உண்ட நஞ்சினைத் தடுத்து கண்டத்தில் நிறுத்திய செயல் பார்வதியுடையது. அதனைத்  ‘தவம்  நின்று  தடுத்தது’  என்று கூறியதன் நுட்பத்தை அறிந்து கொள்வோம்! அவ்வாறே திருநீலகண்டரின் தவறான செயலைத் தடுத்து நிறுத்தியது, ‘’திருநீலகண்டம்‘’ என்ற சூளுரையே  ஆயிற்று! அப்பெயர்  அடியாரின் திருமந்திரமாகவும், அடியார் திருப்பெயராகவும், மனைவியரின்  சூளுரையாகவும்  விளங்கிய வலிமையை  எண்ணியெண்ணி மகிழலாம்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நாங்குநேரி வாசஸ்ரீ

    117. படர் மெலிந்திரங்கல்

    குறள் 1161

    மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
    கூற்றுநீர் போல மிகும்

    என் நேசம்ங்குத சங்கடத்த மத்தவங்க தெரிஞ்சுக்கிடாம நான் மறைப்பேன். ஆனா அது ஊத்துத் தண்ணி கணக்கா எறைக்க எறைக்க அதிகமாவுது.

    குறள் 1162

    கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
    குரைத்தலும் நாணுத் தரும்

    என் நேசத்த மறைக்கவும் ஏலல. நேசம் வச்சவரு கிட்ட சொல்லவும் கூசுது.

    குறள் 1163

    காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
    நோனா உடம்பின் அகத்து

    சங்கடத்தப் பொறுத்துக்கிட ஏலாம என் உசிரயே காவடித்தண்டா வச்சிக்கிட்டு நேசம்ங்குத நோய் ஒரு பக்கமும், அதச் சொல்ல ஏலாத வெக்கம் ஒரு பக்கமும் தொங்குது.

    குறள் 1164

    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்

    காதல் என்னயச் சுத்திச்சூழ கடல் கணக்கா நின்னு சங்கடப்படுத்துது. அத நீந்திக் கடக்க பாதுகாப்பான தோணிதான் இல்ல.

    குறள் 1165

    துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்

    (சந்தோசமான) சேக்காளியா இருக்கையிலயே சங்கடத்தக் குடுக்குத இவரு பகையாளியா ஆனா என்ன செய்வாரோ?

    குறள் 1166

    இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது

    நேசம் குடுக்குத சந்தோசம் கடல்கணக்கா பெரிசு. அது பிரிவுங்குத தொல்ல தருத நேரம் வருத சங்கடம் கடலை விடப் பெரிசு.

    குறள் 1167

    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்

    நேசம்ங்குத கொடும் கடல்ல நீந்தின பொறவும் என்னால கரையக் காங்க ஏலல. நடுசாமத்துலயும் ஒறங்காம நான் தனியாவே கெடந்து கலங்குதேன்.

    குறள் 1168

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்ல தில்லை துணை

    பாவம் இந்த ராப்பொழுது. இது எல்லா உசிரையும் ஒறங்கவச்சிப்போட்டு தனியாவே கெடக்கு. இதுக்கு என்னயத் தவித்து வேற தொண இல்ல.

    குறள் 1169

    கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா

    இந்நாளையில ராப்பொழுதுநீண்டுக்கிட்டே போவுதது கணக்கா தோணுது. நேசம் வச்சவரு பிரிஞ்சி போனதக்காட்டிலும் இந்தக் கொடும பெருங்கொடும.

    குறள் 1170

    உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோவென் கண்

    நேசம் வச்சவரு இருக்க எடத்துக்கு எம் மனசு கணக்கா போவ முடிஞ்சிச்சின்னா கண்ணீர் வெள்ளத்துல சிக்கி என் கண்ணு நீந்த வேண்டியதில்ல.

    Share
  • திருப்பூர் சக்தி விருது 2020

    திருப்பூர் சக்தி விருது 2020

    (செய்திக் குறிப்பு)
     
    வணக்கம், வாழ்த்துகள்.
     
    திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப் பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
     
    பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை (எல்லாப் பிரிவுப் படைப்பாக்க நூல்களையும்)  அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளையும் அனுப்பலாம்.
     
    31 மார்ச், 2020க்குள் அனுப்பித் தர வேண்டுகிறோம்.
     
    திருப்பூர் சக்தி  விருது  2020  குழுவினர், திருப்பூர்
     
    (ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ஆம் வீதி, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர்  641 604 / 99940 79600)
     
     
    Share
  • உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு மொழி தனது இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றால் அவ்வக்கால நிகழ்வுகளைப் பதிந்துகொண்டு அதை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் இன்னொரு தலைமுறைக்கும் கடத்தும் ஊடகமாகத் (media) தான் திகழ்கின்றது. இது தான் எல்ல மொழிகளின் அடிப்படைப் பண்பு. இந்த நிகழ்வுப் பதிவுகள் காலம் கடக்கக் கடக்க ஒரு காலத்தின் கண்ணாடியாகவே ஆகிவிடுகின்றன. இந்த அடிப்படைக் கருத்தில் இருந்து விலகி பேராசிரியர் வீ. அரசு போன்றோர் தலித்தியம், திராவிடவியல் நோக்கில் சாதிய மொழி என்ற கருத்தாக்கத்தை ஒரு மொழியின் மீது திணிக்கின்றனர். ஒரு மொழியில் சாதி, வருணாசிரமம், தீண்டாமை ஆகியன பற்றிய பதிவு இருப்பதாலேயே அம்மொழியை சாதிய மொழி என்று அழைப்பது அத்தகையோரின் மடமையைத் தான் காட்டுகின்றது. நல்லது தீயது, உகந்ததுஉகாதது ஆகிய செய்திகளை அவ்வக்காலத்து மக்கள் தாம் ஒரு மொழியில் பதிகின்றனர். அந்த வகையில் பதிகின்ற மக்கள் தாம் அந்த செய்திகளின் விளைவிற்கு பொறுப்பாவரே ஒழிய மொழியை அதற்கு எப்படி பொறுப்பாக்க முடியும்? இந்த மடமை இவர்களோடு நில்லாமல் இவர்தம் பேச்சு, எழுத்துகளால் பிறரையும் மடமையின் பிடிக்குள் தள்ளுகின்றது என்பதே இங்கு வருத்தத்திற்குரியதாக உள்ளது. தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி, தீண்டாமை பற்றிய செய்திகள் இருப்பதாலேயே தமிழ் ஒரு சாதிய மொழி ஆகிவிடாது. அதன் விளைவுகள் அச்செய்திகளைப் பதிந்தோரைச் சார்கின்றது. அவர்களாலும் தம் காலச் சூழல் நிகழ்வுகளை ஒட்டித் தான் எழுத முடியும் அது அவர் தவறல்ல. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழிகளுக்கும் பிற மொழி பேசுநருக்கும் பொறுந்தும்.

    தீண்டாமை முதன் முதலாக தமோ குணமுடைய பிணத்தை தீண்டலாகாது என்பதில் இருந்து தான் தொடங்கியது. இது தொடக்கத்தில் புத்த மதத்தாரால் தான் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புராண மதத்தை தழுவிய போது அந்த வழக்கத்தை புராண மதத்திலும் நடைமுறைப்படுத்தினர். இதனால் சாவுத் தீண்டாமை ஒரு சமூக வழக்காக காலப் போக்கில் ஆகிப்போனது. பின்னர் இது பிணத்தைக் கையாளும் வெட்டியான் குடும்பத்தாரும் தீண்டத்தகாதவர் என்று விரிந்தது. பிணம் ஆளும் தொழில் குடும்பரீதியாய் தொடர்ந்ததே இதற்கு காரணம்.  தமிழ்க் கல்வெட்டுகளில் இப்படி தீண்டார் எனக் குறிப்பது இந்த பிணம் கையாளும் வெட்டியான்களைத் தான் எனலாம்.  ஆனால் இன்று சமூகத்தில் இத்தீண்டாமை என்பது இவர்களையும் கடந்து இன்னும் பல சாதியாரை உள்ளடக்கியதாக ஆகிவிட்டது. பறையர் என்போர் இத்தகு தீண்டாமைக்கு 16 – ம் நூற்றாண்டு முடியும் வரை ஆட்பட்டிருக்கவில்லை என்பதற்கு அவர்கள் கோவில்களில் சந்தி விளக்கு எரிக்கக் காசு கொடுத்து எரிக்க ஏற்பாடு செய்தததற்கான கல்வெட்டுகளே சான்றாகின்றன.  இப்படி விளக்கு எரிப்போர் தமது முதல் விளக்கெரிப்பின் போது கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சந்தி விளக்கெரித்த பறையர் கோவலுக்குள்ளே சென்று வந்தது அவர்கள் தீண்டாமைக்கு ஆட்பட வில்லை என்பதைக் காட்டுகின்றது. கீழே அது தொடர்பான மூன்று கல்வெட்டுகள் விளக்கத்துடன்.

    இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் அமைந்த மங்களநாதசுவாமி கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 21 வரிக் கல்வெட்டு.

    1. சகாப்தம் 1355  ன் மேல் ஸ்ரீ கோமாரபன்மரான திரிபு
    2. வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 2 வருஷம் எதிர் வருஷம்
    3. மீந நாயற்று பூர்வ பக்ஷத்துலே தசமியும் புதன் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் முத்தூ
    4. ற்றுக் கூற்றத்து பிரமதேசம் மருங்கூரான பண்டித சோழ சதிர்வேதி மங்கலத்து
    5. பார்கவ கோத்திரத்து ஆஸ்ரயந சூத்திரத்து நாராயண சர்ம்மன் வீரபாண்டி
    6. ய தேவனுக்கு  தனக்கு நம்முடைய பேர் கூலிக்கு செம்பி நாட்
    7. டில் நம்முடைய உழவுப் பற்றான புறக்குளம் உட்பட்ட ப
    8. ற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும்
    9. உதக பூர்வ தன்மதானமாக நாம் தருகையில் _ _ _ கு எல்லையாவது கீழ்பாற்கு எல்லை நல்
    10. லாண் குடிக்கும் அஸவத்ர குடிக்கும் மேற்கு தென்பாற் கெல்லை கடம்பங்குடிக்கு வட
    11. க்கு மேற்பாற் கெல்லை வடவாலங் குளத்துக்கு கிழக்கு வடபாற் கெல்லை பனைக்குளத்து
    12. க்கும் இயற்கைக் குடிக்காலுக்கும் தெற்கும் ஆக இப்பெரு நான்கெல்லைக் குட்பட்ட ப
    13. ற்றும் மண்திடல், ஊருணி, உடைப்புகுளம், குளப்பரப்பு நன்செய், புன்செய் மேனோக்கிய
    14. மரமும் கீனோக்கிய கிணறு தீண்டா அடிமை மற்றும் எப்பேர்பட்டனவும் ஸமஸ்த ப்ராப்திகளும்
    15. கடமை வினியோகஞ் செக்கிறை தறிக்கடமை தட்டொலிப் பாட்டமும் மாவடை மரவடை
    16. பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்பேறு முதலாக எப்பேற்பட்டவையும் சர்வமான்யமாக நம் வரியிலார் கணக்
    17. கிலும் பதினொன்றாவது முதலுக்கு கழித்த அளவுக்கு இம்மரியாதியிலே இந்த நாள் முதலுக்கு உதக பூ
    18. ர்வ தன்ம தானமாக சந்திராதித்த வரை சந்ததிப் பிரவேசமே தான  வினியோக விசயங்களுக்கு உரித்தாக கல்லி
    19. லுஞ் செம்பிலும் வெட்டிக் கையாண்டு கொள்ளவும். இந்த உதக பூர்வ தன்ம தானத்துக்கு நம்முடைய வகை
    20. யிலுள்ளாரிலும் மற்றும் ஆராகிலும் விக்கினஞ் செய்யிர பேர்கள் கெங்கைக் கரையிலே பிரம்ம ஹத்தியும்
    21. கோ ஹத்தியும் செய்த பாவத்தை யெய்தக் கடவார்களாகவும்.

    கூலி – செய்த பணிக்கு தர வேண்டிய கூலி; உழவுப்பற்று – உரிமையுள்ள வேளாண் நிலம்; புறஞ்சேரி – ஊருக்கு வெளியே அமைந்த சேரி; அடிமை – கொத்தடிமை; உதகபூர்வ – நீரட்டி கொடு; சந்தி விக்கிரகப்பேறு – ஆவணக் கட்டணம்; சந்ததிப் பிரவேசம் – தலைமுறை தலைமுறையாக; கடவார்களாக – அடைவார்களாக.

    விளக்கம்:  சக ஆண்டு 1355 (கி.பி. 1433) குறிப்பிடப்பட்ட வீரபாண்டியனின் 3 ஆம் ஆண்டு கல்வெட்டு. இதில் வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுகின்றான்.  அப்போது விஜயநகரத்தில் இரண்டாம் தேவராயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் என்பதைப் பார்க்கும் போது சிறு காலப் பொழுதிற்கு இராமநாதபுரம் விஜயநகர ஆட்சியில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவன் தென்காசி பாண்டியரில் இருந்து வேறுபட்டவனாக இருக்கலாம்.

    முத்தூற்றுக் கூற்றத்தில் அடங்கிய பிரம்மதேசமான மருங்கூர் என்னும் பண்டித சோழ சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்திர கொண்ட ஆஸ்ரயன சூத்திரத்தை சேர்ந்த நாராயண சர்மன் என்ற பிராமணன் வீரபாண்டியன் என்பவனுக்கு தான் தர வேண்டிய கூலிக்கு ஈடாக செம்பி நாட்டில் தனக்கு உரிமையான புறக்குளம் உள்ளிட்ட உழவு நிலத்தையும் இதாவது, அதனுடன் சேர்ந்த மண்திடல், கிணறு, குளத்தைச் சுற்றி அமைந்த நன்செய் புன்செய் ஆகியவற்றையும் இவ்வூரின் வெளியே அமைந்த சேரியில் வாழும் தீண்டாரைச் சேர்ந்த கொத்தடிமையையும் நீரட்டி தர்மதானமாகத் தந்துவிட்டான். நிலத்தின் அமைவிடமாக அதன் நான்கு எல்லைகள் விரிவாகக் குறிக்கப்படுகின்றன. அதற்குண்டான அரச வரிஇனம், செக்குவரி, தறிவரி, ஆவணக் கட்டணம் என எந்த வகை வரியும் இல்லாமல் வரியிலார் கணக்கில் பதியப்பட்டு தசமிக்கு மறுநாளான பதினோரம் நாள் முதல் இப்படியாகச் செல்வதாக நீரட்டி தர்மதானமாக சந்திர சூரியர் உள்ள காலம் வரைக்கும் தலைமுறை தலைமுறையாக தானம் முதலானவை செய்வதற்கு பயன்படும்படி கையாண்டுவர இதை கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக என்கிறான். இந்த தான தர்மத்துக்கு என்னுடைய உற்றார் உறவுகள் மற்றும் வேறு எவரேனும் தடை எற்படுத்துவாரானால் அவர் கங்கைக் கரையில் பிராமணரையும் பசுவையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று கூறி நிறைவு செய்கிறான்.

    கல்வெட்டில் நாராயண சர்மனுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. இந்த தான தர்மத்தால் கோவிலுக்கு ஒரு பயனும் இல்லை. இவனது இந்த செம்பி நாட்டு நிலம் அரசனிடம் இருந்து நேரடியாகப் பிரம்மதேய இறையிலியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம். எனவே அதை விற்றால் வரி இல்லாச் சலுகை போய் ஆவணக் கட்டணமும் கட்ட வேண்டி வரும் என்பதால் தனது அந்த உரிமையை அப்படியே தர்ம தானமாக வீரபாண்டியன் என்பவனுக்கு மாற்றிக் கொடுக்கின்றான்.  நாராயண சர்மன் இப்படி செய்வதற்கு அவனுக்கு வாரிசு இல்லாமல் போனதால் அதை தான தர்மத்திற்கு பயன்படுத்த வீரபாண்டியனை ஒரு கண்காணியாக்கி (care taker) இப்படி கொடுத்திருக்கலாம் அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தானதர்ம முறையை கைக்கொண்டிருக்கலாம். இந்த கிராமத்தின் வருவாய் மன்னனால் இறையிலியாக கோவிலுக்கே விடப்பட்டிருந்தால் அதில் அடங்கிய இந்நிலத்திற்கு கோவிலுக்கு வரிகள் செலுத்தப்பட வேண்டும். வரிகளைக் கட்டத்தேவையில்லை என்று நாராயண சர்மன் அறிவிப்பதால் அது ஏற்கனவே கோவிலின் வரி கட்டாத வரியிலார் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டதால் இச் செய்தி இக்கோவிலில் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளது என்பதை ஊகிக்க முடிகின்றது.

    இக் கல்வெட்டில் தீண்டார் என்று குறிப்பது இடுகாட்டில் பிணங்களைக் கையாளும் வெட்டியாரைத் தான் என்று தெரிகின்றது. ஏனென்றால் பறையர்கள் கோவிலில் சந்தி விளக்கேற்றப் பணம் அளித்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அதனால் விளக்கேற்றும் போது தம் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.  ஆகவே பறையர் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க முடியாது. அது 17- ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட புது வழக்கம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 11, பக்கம் 71-72.

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள மூலநாதர் கோவில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 11 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர  என்ற முதலாம் இராசேந்திரச் சோழனின் மெய்கீர்த்தி 1-5 வரிகளுக்கு நீளுகின்றது.  இனி 6 ஆவது வரியில் இருந்துகீழே.

    கோப்பரகேஸரிபந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு 16 ஆவது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பவித்திர மாணிக்க வளநாட்டு வாகூரான அழகிய சோழ சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோ[ம்]. இவ்வா / ட்டை தனு நாயற்று பூர்வ பக்ஷத்து பிரிதிதஷியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற பூரட்டாதினாள்  நம்மூர் அழகிய சோழன் அம்பலத்தேய் இன்னாட்டு வகை செய்கின்ற உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கப்பூர் உடையார் நீலன் வெண்காடனாரும் இருந்து நம்மூர் ஏரிக்கு ஏரியாயமாக புறவூரார் இருந்து. இவ்வூர் நிலத்து நெல்லும் வரகும் கரும்பும் எள்ளும் உள்ளிட்டுப் பயிற் செதாரைப் போகங்கள்டோறும் பன்நிரு சாண் கோலால் இருநூற்றைம்பத்தாறு குழி கொண்ட / தொரு மாவாக மாத்தால் எண்ணாழி கொள்ளுங் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் கைய்செய் வார்த்தேய் நெல்லு இரு தூணிநெல்லும் ஆட்டாண்டுதோறும் போகங்கள் தோறும் அவ்வவாண்டு ஏரி வாரியம் செய்வாரே ஏரி ஆயமாகக் கொள்வாராகவும். புறவூர் இருந்து இவ்வூர் வரும் குடிகளை ஏரியாய மல்லாது மாற்று இறை கொள்ளப் பெறாதாராகவும். இவ்வூரிலும் இவ்வூரோடும் ஏரினவாரியங்களிலும் இருந்தாரில் தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில்ப் பத்து வயஸுக்கு மேல் எண்பது வயஸு / க்கு கீழ்பட்டாரை முதலெடுத்து நாற்ச்சாண் உள்ள கோலால் இரு கோலுக்கு இரு கோல்லகலமும் ஒரு கோல் மட்டுங் கொண்டு பேரால் ஒரு குழி ஆட்டாண்டுதோறும் இவ்வூர் ஏரியிலேய் கல்லக் கடவார்களாகவும். இப்பரிசு கல்லகடவாரை அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரேய் குழி கல்லுவிக்க [க]டவார்களாகவும். குழி கல்லக்கடவார் குழி கல்லாதாரை ஏரியாயமாக பேரால் காற்பொன் அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரே தண்டிக் கொள்ளப் பெறுவார்களாகவும். குழி கல்லாதா / ரைத் தண்டக் கடவ பொன் அவ்வவ் ஆண்டு நேராகத் தண்டாத ஏரி வாரியஞ் செய்வாரை பேரால் கழஞ்சு பொன் ஏரியாயமாக கொள்வதாகவும். இவ்வூர் நிலம் அடுத்தபடியன்றி அடையில் அழிந்துண்டாரை ஏரியாயமாக பேரால் கழஞ்சு பொன் கொள்ள பெறுவதாகவும் ஏரியாயமாகக் கட்டுவன வெயிற்றில் ஏரிக் கணக்கன் ஒருவனுக்கு நிசதப் பதக்கு நெல்லும். இவ்வேரிக்கு வேண்டுவன வெயிறுக்குமல்லது அழிப்பாரும் இப்பரிசு செய்யாமல் காப்பாரும் திருவாணை யென்று இக்க / ப்பூரூடையார் திருவாணை கூறினமையில் இப்பரிசு செய்வதாய் இவ்வண்ணம் ஏரியாயமாகக் கல்வெட்டுவித்தோம் பெருங்குறிப் பெருமக்களோம். பணித்தார் பாக்கைச் சோமநாத கிரமவித்தனும். பாவைக்கால் நின்ற ந[ம்]பிபட்டனும். நெலவங்கன் ஸ்ரீ க்ருஷ்ணக் கிரமவித்தனும். பணியால்  உத்தமப்பிரியன் எழுத்து. யாண்டு 1[6] நாள் 30. [ஏ]ரியா[ய]ம் சுட்டி திருவாணை கூறின திருவாணை கூற்றுவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களின் செயற்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள பிராமண ஊர்ச் சபை உறுப்பினர், மூத்தோர்; அம்பலத்தே – கூட்டத்தில், மன்றத்தில்; புறவூரார் – வெளியூரார்; வகை செய்பவர் – நிலத்தின் அளவு, தரம் ஆகியன அளந்து வரி விதிப்பவர்; போகம் – பயிர் சுழற்சி, rotation of crop; பரிசு – விவரம், ஏற்பாடு, arrangement; கல்லுதல் – தோண்டுதல்; அடுத்தபடி – சார்ந்தபடி; அடை – விளைபயிர்; அழி – பயன்கொள்,செலவிடு, கழி; நிசதம் – நாள்தோறும்; காப்பார் – விலக்குவார்; கிரமவித்தன் – வேதத்தை நெறிப்படி ஆள்பவன்; திருவாணை- அரசாணை.

    விளக்கம்:  முதலாம் இராசேந்திரச் சோழனின் 16 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி.1028) கல்வெட்டு. அன்னாளிலே வாகூரான இன்னாளய பாகூர் எனும் அழகிய சோழ ச் சதுர்வேதி மங்கலத்தின் வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர் சபை மூத்த உறுப்பினர்கள் ஒன்று கூடி இக்கல்வெட்டால் தெரிவிப்பது யாதெனில், “இந்த ஆண்டு தனுசு ராசியில் வளர்பிறையும் வெள்ளிக் கிழமையும் ஆன பூரட்டாதி நட்சத்திர நாளில் (மாதம் குறிக்கப்படவில்லை) அழகிய சோழன் ஊர்க் கூட்டத்தில் வரி அதிகாரியான கருப்பூருடைய நீலன் வெண்காடன் இங்கு நம்மோடு அமர்ந்து இருக்க நம்மூர் ஏரிப் பராமரிப்பிற்காக ஏரிவரியை முடிவு செய்ய உள்ளூராரும் வெளியூராரும் வந்து பங்கு கொண்டுள்ளனர்.

    இவ்வூரின் விளைநிலத்தில் நெல், வரகு, கரும்பு, எள் உள்ளிட்டன பயிர் செய்வாரிடம் ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் 12 சாண் கோலால் 256 குழிநிலம் கொண்ட பெரிய அளவு நிலப்பரப்பை உருவாக்கி அதில் எண்ணாழி கொள்ளும் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் மா ஒன்றுக்கு இருதூணி நெல்லை கையால் அள்ளிப் போட்டு அளந்து ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் ஏரிவாரியப் பணியை மேற்கொள்வார் ஏரிவரியாகப் பெறவேண்டும். வேற்றூரில் இருந்து இவ்வூருக்கு வரும் குடிகளிடம் ஏரிவரி தவிர வேறு எந்த வரியையும் பெறக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வூரில் குடியேறியவரில் தீண்டாதாரான வெட்டியான் குடும்பத்தவரை தவிர்த்து பத்து வயதுக்கு மேல் 80 வயதிற்குள் உள்ள ஆள் ஒவ்வொருவரும் நான்கு சாண் உள்ள கோலால் இருகோலுக்கு இரண்டு கோல் அகலமும் ஒரு கோல் மட்டத்திற்கு ஒவ்வொருவரும் குழி தோண்டித் தூர்வார வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி குழி தோண்டுகின்றவரை அந்தந்த ஆண்டு ஏரிவாரியத்தாரே குழி தோண்டுவதில் ஈடுபடுத்த வேண்டும்.   குழி தோண்டாதவர்களுக்காக மாற்று ஆளை (substitute) அமர்த்தி குழி தோண்டினால் குழி தோண்டாதவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏரிவாரியத்தார் கால்பொன்னை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம். குழிதோண்டுவதில் கலந்து கொள்ளாதவரிடம் இருந்து அந்தந்த ஆண்டே திரட்ட வேண்டிய கால்பொன்னைத் திரட்டாவிடில் அதற்கு தண்டமாக (fine) ஏரிவாரிய பொறுப்பில் உள்ளவர் ஒவ்வொருவரிடம் இருந்தும் கழஞ்சு பொன்னை ஏரிவரியாகப் பெறவேண்டும். வாழக்கைக்கு இவ்வூர் விளைநிலத்தை சார்ந்திராமல் விளைபயிரை மட்டும் கொள்முதல் செய்து உண்பவரிடம் கழஞ்சு பொன் ஏரிவரியாகப் பெற வேண்டும். ஏரிவரியாகக் கட்டுவனவற்றில் இருந்து ஏரிக்கணக்கன் ஒருவனுக்கு நாள்தோறும் பதக்கு நெல் தரவேண்டும். இந்த ஏரிக்கு வேண்டியதைச் செய்யாமல் அதை பயன்படுத்த மட்டும் செய்வாரும் இந்த ஏற்பாட்டை புறக்கணித்து விலக்குவாரும் அரசாணையை மீறினவர் ஆகின்றனர். கருப்பூருடையார் அரசாணையிட்டபடியே இந்த ஏற்பாட்டை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டோம். அதன்படியே ஏரிவரி பற்றி கல்லில் வெட்டுவித்தோம்” என்று வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர்சபை மூத்தோரில் சோமநாத கிரமவித்தன், நம்பிபட்டன், ஸ்ரீ கிருஷ்ண கிரமவித்தன், உத்தமப்ரியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இராசேந்திர சோழனின் 16 ஆட்சி ஆண்டு 30 நாளில் ஏரிவரியை முடிவுசெய்து அரசாணை அறிவிக்கும் அரசாணையை கூறிவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    தீண்டார் பற்றிய குறிப்புள்ள அரிய கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்று. கோவிலுக்கும் இந்த ஏரிவரிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.  இதனால் கோவிலுக்கு எந்த பயனும் இல்லாத போதும் இக்கல்வெட்டு ஏன் கோவிலில் இடம் பெற்றது என்ற கேள்வி நம்மில் எழுகின்றது. “ஏரிக்கு வேண்டியதை செய்யாமல், இந்த ஏற்பாட்டை விலக்குவோர்” ஆகிய எதிர்மறைக் கருத்துகளை இதில் குறிப்பிடுவதில் இருந்து வாரியக் கண்காணிப்பு அதிகாரமுடைய பெருங்குறி சபை உறுப்பினர்களுக்கு இந்த ஏரிவரியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற ஐயம் இருந்துள்ளதை காட்டுகின்றது. சிக்கல் எழும் போதெல்லாம் இந்த அரசாணையைக் காட்டி முரண்படும் மக்களை ஏரிவரிகட்ட உடன்படச் செய்யலாம் என்ற எண்ணம் தான் பெருங்குறி சபையாரை இக்கல்வெட்டை கோவிலில் பொறிக்க வைத்தது எனலாம். பெருங்குறி சபை மக்களும் கோவிலில் பணிபுரியும் பிராமணர் தானே!!

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பக் 25-28, S. குப்புசாமி, G. விஜய வேணுகோபால். புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன வெளியீடு. தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அறிய உண்மைகள், பக் 303-304, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்,

    செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பாலூர் பதங்கீசுவரர் கோவில் முன்மண்டப வடக்குச் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 15 வது
    2. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டுப் பா
    3. லையூரான இராசேந்திர சோழ நல்லூர் உடையார் திருப்பதங்காடுடைய நாயநா[ர்]க்கு இக்
    4. கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டன் மகன் உய்யக் கொண்டாநாந காக்கு
    5. நாயக பட்டனேன். இந்நாயனார்க்குத் திருப்பாலையூர் கிழவன் பறையடியாரில் வாசி மகன் பெருங்காடநாந
    6. இளமைப் பெரும்பறையன் வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு நான் உபையாமாகக் கைக் கொண்ட காசு ஆறு. (கல்வெட்டு முற்றுப் பெறவில்லை)

    காணிஉடைய – பரம்பரை உரிமை உடைய; கிழவன் – கிராமத் தலைவன்; பறையடியார் – பறையர்குல வேலையாள்; சந்தி விளக்கு – பகலும் இரவும் கூடும் வைகறை, மாலை வேளைகளில் கோவிலில் எரிக்கும் எண்ணெய் விளக்கு.

    விளக்கம்:  மூன்றாம் இராசராச சோழனின் 15 – ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1231) செயங்கொண்ட சோழமண்டலத்தில் அடங்கிய ஊற்றுக்காட்டு (வாலாஜாபாத் அருகில்) கோட்டத்தில் அடங்கிய பாலையூர் நாட்டின் ஊரான பாலையூரில் கோவிலுடைய திருப்பதங்காடு ஈசுவரன் கோவிலின் பரம்பரை பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டனுடைய மகன் உய்யக்கொண்டனான காக்குநாயக பட்டன் செய்யும் சத்திய பிரமாணம் யாதெனில், “இக்கோயில் இறைவர்க்கு திருப்பாலையூர் தலைவனிடம் வேலை செய்யும் பறையரான வாசி என்பாரது மகன் பெருங்காடனான இளமைப் பெரும்பறையனிடம் இருந்து அன்றாடம் ஒரு சந்தி விளக்கு ஏற்றுவதற்காக நான் உபையமாக ஆறு காசுகளை ‘அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக் கொண்டு’ பெற்றுக் கொண்டேன்”.

    இளமைப் பெரும்பறையன் கோவிலுக்குச் சென்று உய்யக் கொண்டான் காக்குநாயக பட்டனை சந்தி ஆறு காசு உபயம் கொடுத்து சந்தி விளக்கெரிக்கச் செய்தான். அதன் தொடக்க நாளில் அவன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டிருக்க வேண்டும். இச்செயல் பறையர் தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்க வில்லை என்பதற்கு தக்க சான்றாகின்றது. இக்கல்வெட்டு மூலம் பறையர் தீண்டாதாரில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IX, பக். 83, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    பறையர் சந்தி விளக்கு எரித்த மேலும் சில கல்வெட்டுகளைக் காண சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/w2Ov5Sd8KG0/QaXdrvWCCAAJ

    https://groups.google.com/d/msg/vallamai/BqrYqyng6uY/orQnsT4ADgAJ

    Share
  • மூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை

    மூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை

    பாஸ்கர் சேஷாத்ரி

    எங்கு திரும்பினாலும் பிண்ட புத்தி
    மயிலாப்பூரா காளத்தி ரோஸ் மில்க்
    பட்டணம் சென்றால் ரங்கவிலாஸ் காபி
    அல்லிக்கேணியில் சாம்பார் இட்லி
    பொருட்காட்சியில் பெரிதாய் அப்பளம்
    பிறப்பே புரியவில்லை ,பண்டம் மட்டும் மனப்பாடம்
    காமம் அறுத்திடலாம் வாயை கட்ட இயலவில்லை
    உதறத்தான் கிளம்பினேன்,
    நிறுத்தி கொஞ்சம் -கிருஷ்ணவிலாசம்

    Share
  • இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா

     

    Image result for westinghouse nuclear reactor ap1000

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய் கோகலேயும் அமெரிக்க அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது. பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டுகளாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது? அணு உலை இயக்கும் இந்தியாவா? அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது. “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்] முனைந்துள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன. நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    ++++++++++++++++++++++++++++++++++++++++

    ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக அணு மின்சார நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றித் தீர்மானங்கள் -1

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1. புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    –

    –

    Belarus
    –
    –

    2

    2.218

    Belgium

    7

    5.913

    –

    –

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    –

    –

    Canada

    19

    13.524

    –

    –

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    –

    –

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    –

    –

    Hungary

    4

    1.889

    –

    –

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    –

    –

    Japan

    43

    40.290

    2

    2.650

    Korea, Republic

    25

    23.133

    3

    4.020

    Mexico

    2

    1.440

    Share
  • குருவே சரணம்

    குருவே சரணம்

    ராதா விஸ்வநாதன்

    விண்ணி லிருந்து  ஞானப்பொறி வீழ்ந்து
    மண்ணில்  நடமாடும் தெய்வமாகி வாழ்ந்து
    உண்ணா நோன்பு  நமக்காக நோற்றதும்
    எண்ணில டங்குமோ இத் தரணியில்!

    குற்றம் நிறை  மாந்தர் கூட்டத்தின்
    குறை தீர்த்து குணக்குன்றாய் நின்று
    எரிக்கவே நம் பாவத்தை  தன் தவத்தால்
    கரைந்தது நம் கர்மவினையும் கற்பூரமாய்

    அகிலமே  அவரடியில் தஞ்சமடைந்து
    அன்னை பிதா குரு நீரே என்றது
    கண்டதும் அவரது திருமுகம் அன்றே
    கருமமும் நமதாவும் தொலைந்தது

    பண்டய   வினை போக்கும்  குருவே
    கண்கொண்டு உமைக் கண்ட எமக்கு
    கண்டங்கள் இனி உண்டோ இங்கே
    தண்டங்கள்  எமது ஏற்கும் தருணமிதே

    உமைப் புகழ சொல்லுக்கும் பஞ்சம்
    உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் கூடி
    தவமாய் தவம் கிடந்து தந்தது ஒன்றை
    ‘தவயோகி’ என்ற  தமிழ்ச் சொல்லை

    இனியும் ஒரு தெய்வம் நடமாடுமோ
    இனிய  சொல்லையும் இனி உதிர்க்குமோ
    இமை பொழுதும் எம்மை அகலாது
    இடர் சூழ் உலகில் சுடரென வருமோ

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நாங்குநேரி வாசஸ்ரீ

     116. பிரிவு ஆற்றாமை

    குறள் 1151

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை

    பிரிஞ்சுபோவமாட்டன்னா எங்கிட்ட சொல்லு. இப்பம் போயிட்டு வெரசலா வாரேன்னு சொல்லணும்னா அத நீ திரும்பி வாரெயில யாரு உசிரோட இருப்பாகளோ அவுககிட்ட சொல்லு.

    குறள் 1152

    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு

    முன்னயெல்லாம் அவுகளக் கண்ணால பாக்குததே சந்தோசத்தக் குடுத்துச்சு. இப்பம் கூடிச்சேந்தாலும் பிரிஞ்சு போயிடுவாரோங்குத பயத்துல சங்கடமா இருக்கு.

    குறள் 1153

    அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்

    எல்லாத்தையும் அறிஞ்சுக்கிட்ட காதலரும் ஒருசமயம் பிரிஞ்சுபோவாருங்கதால இப்பம் பிரிய மாட்டேம்னு உறுதியா சொல்லுதத நம்ப ஏலாது.

    குறள் 1154

    அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க் குண்டோ தவறு

    பிரியமாட்டேம் பயப்படாதன்னு சொன்னவரு பொறவு பிரிஞ்சுபோனாகன்னா அவுக சொன்ன சொல்ல நம்பினதுல என்ன குத்தம் இருக்க முடியும்.

    குறள் 1155

    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு

    நேசிக்கவரு பிரிஞ்சு போனா மறுபடி சேருதது சுளுவு இல்லங்கதால மொதவே பிரியாம காப்பாத்திக்கிடணும்.

    குறள் 1156

    பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை

    போயிட்டுவாரேம்னு சொல்லுத அளவு கல்நெஞ்சுக்காரர் திரும்ப வந்து நேசம் காட்டுவாருனு எதிர்பாக்குதது வீண்.

    குறள் 1157

    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை

    என்னையத் தலைவன் பிரிஞ்சுபோன சேதிய எம்முன்னங்கையிலேந்து நழுவிவிழுத வளவி ஊர் முழுக்க தூத்தி விட்டுருமே.

    குறள் 1158

    இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
    இன்னா தினியார்ப் பிரிவு

    நேசம் இல்லாதவுக இருக்க ஊர்ல வாழுதது சங்கடம். அத விடக் கொடும மனசார நேசிக்கவரப் பிரிஞ்சு வாழுதது.

    குறள் 1159

    தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ

    கங்கு (நெருப்பு) அதத் தொட்டாதான் சுடுமேயொழிய காதல் நோய் கணக்கா எட்ட நின்னாலும் சுடுமோ?

    குறள் 1160

    அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்

    பிரிஞ்சுபொவுததுக்கு ஒத்துக்கிட்டு அதனால வர சங்கடத்தையும் பொறுத்துக்கிட்டு தன்காரியத்த பாத்துக்கிட்டு பொறுமயா வாழுதவங்க பலபேரு இருக்காங்க.

    Share