உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

1

சேசாத்திரி ஸ்ரீதரன்

ஒரு மொழி தனது இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றால் அவ்வக்கால நிகழ்வுகளைப் பதிந்துகொண்டு அதை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் இன்னொரு தலைமுறைக்கும் கடத்தும் ஊடகமாகத் (media) தான் திகழ்கின்றது. இது தான் எல்ல மொழிகளின் அடிப்படைப் பண்பு. இந்த நிகழ்வுப் பதிவுகள் காலம் கடக்கக் கடக்க ஒரு காலத்தின் கண்ணாடியாகவே ஆகிவிடுகின்றன. இந்த அடிப்படைக் கருத்தில் இருந்து விலகி பேராசிரியர் வீ. அரசு போன்றோர் தலித்தியம், திராவிடவியல் நோக்கில் சாதிய மொழி என்ற கருத்தாக்கத்தை ஒரு மொழியின் மீது திணிக்கின்றனர். ஒரு மொழியில் சாதி, வருணாசிரமம், தீண்டாமை ஆகியன பற்றிய பதிவு இருப்பதாலேயே அம்மொழியை சாதிய மொழி என்று அழைப்பது அத்தகையோரின் மடமையைத் தான் காட்டுகின்றது. நல்லது தீயது, உகந்ததுஉகாதது ஆகிய செய்திகளை அவ்வக்காலத்து மக்கள் தாம் ஒரு மொழியில் பதிகின்றனர். அந்த வகையில் பதிகின்ற மக்கள் தாம் அந்த செய்திகளின் விளைவிற்கு பொறுப்பாவரே ஒழிய மொழியை அதற்கு எப்படி பொறுப்பாக்க முடியும்? இந்த மடமை இவர்களோடு நில்லாமல் இவர்தம் பேச்சு, எழுத்துகளால் பிறரையும் மடமையின் பிடிக்குள் தள்ளுகின்றது என்பதே இங்கு வருத்தத்திற்குரியதாக உள்ளது. தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி, தீண்டாமை பற்றிய செய்திகள் இருப்பதாலேயே தமிழ் ஒரு சாதிய மொழி ஆகிவிடாது. அதன் விளைவுகள் அச்செய்திகளைப் பதிந்தோரைச் சார்கின்றது. அவர்களாலும் தம் காலச் சூழல் நிகழ்வுகளை ஒட்டித் தான் எழுத முடியும் அது அவர் தவறல்ல. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழிகளுக்கும் பிற மொழி பேசுநருக்கும் பொறுந்தும்.

தீண்டாமை முதன் முதலாக தமோ குணமுடைய பிணத்தை தீண்டலாகாது என்பதில் இருந்து தான் தொடங்கியது. இது தொடக்கத்தில் புத்த மதத்தாரால் தான் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புராண மதத்தை தழுவிய போது அந்த வழக்கத்தை புராண மதத்திலும் நடைமுறைப்படுத்தினர். இதனால் சாவுத் தீண்டாமை ஒரு சமூக வழக்காக காலப் போக்கில் ஆகிப்போனது. பின்னர் இது பிணத்தைக் கையாளும் வெட்டியான் குடும்பத்தாரும் தீண்டத்தகாதவர் என்று விரிந்தது. பிணம் ஆளும் தொழில் குடும்பரீதியாய் தொடர்ந்ததே இதற்கு காரணம்.  தமிழ்க் கல்வெட்டுகளில் இப்படி தீண்டார் எனக் குறிப்பது இந்த பிணம் கையாளும் வெட்டியான்களைத் தான் எனலாம்.  ஆனால் இன்று சமூகத்தில் இத்தீண்டாமை என்பது இவர்களையும் கடந்து இன்னும் பல சாதியாரை உள்ளடக்கியதாக ஆகிவிட்டது. பறையர் என்போர் இத்தகு தீண்டாமைக்கு 16 – ம் நூற்றாண்டு முடியும் வரை ஆட்பட்டிருக்கவில்லை என்பதற்கு அவர்கள் கோவில்களில் சந்தி விளக்கு எரிக்கக் காசு கொடுத்து எரிக்க ஏற்பாடு செய்தததற்கான கல்வெட்டுகளே சான்றாகின்றன.  இப்படி விளக்கு எரிப்போர் தமது முதல் விளக்கெரிப்பின் போது கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சந்தி விளக்கெரித்த பறையர் கோவலுக்குள்ளே சென்று வந்தது அவர்கள் தீண்டாமைக்கு ஆட்பட வில்லை என்பதைக் காட்டுகின்றது. கீழே அது தொடர்பான மூன்று கல்வெட்டுகள் விளக்கத்துடன்.

இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் அமைந்த மங்களநாதசுவாமி கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 21 வரிக் கல்வெட்டு.

 1. சகாப்தம் 1355  ன் மேல் ஸ்ரீ கோமாரபன்மரான திரிபு
 2. வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 2 வருஷம் எதிர் வருஷம்
 3. மீந நாயற்று பூர்வ பக்ஷத்துலே தசமியும் புதன் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் முத்தூ
 4. ற்றுக் கூற்றத்து பிரமதேசம் மருங்கூரான பண்டித சோழ சதிர்வேதி மங்கலத்து
 5. பார்கவ கோத்திரத்து ஆஸ்ரயந சூத்திரத்து நாராயண சர்ம்மன் வீரபாண்டி
 6. ய தேவனுக்கு  தனக்கு நம்முடைய பேர் கூலிக்கு செம்பி நாட்
 7. டில் நம்முடைய உழவுப் பற்றான புறக்குளம் உட்பட்ட ப
 8. ற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும்
 9. உதக பூர்வ தன்மதானமாக நாம் தருகையில் _ _ _ கு எல்லையாவது கீழ்பாற்கு எல்லை நல்
 10. லாண் குடிக்கும் அஸவத்ர குடிக்கும் மேற்கு தென்பாற் கெல்லை கடம்பங்குடிக்கு வட
 11. க்கு மேற்பாற் கெல்லை வடவாலங் குளத்துக்கு கிழக்கு வடபாற் கெல்லை பனைக்குளத்து
 12. க்கும் இயற்கைக் குடிக்காலுக்கும் தெற்கும் ஆக இப்பெரு நான்கெல்லைக் குட்பட்ட ப
 13. ற்றும் மண்திடல், ஊருணி, உடைப்புகுளம், குளப்பரப்பு நன்செய், புன்செய் மேனோக்கிய
 14. மரமும் கீனோக்கிய கிணறு தீண்டா அடிமை மற்றும் எப்பேர்பட்டனவும் ஸமஸ்த ப்ராப்திகளும்
 15. கடமை வினியோகஞ் செக்கிறை தறிக்கடமை தட்டொலிப் பாட்டமும் மாவடை மரவடை
 16. பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்பேறு முதலாக எப்பேற்பட்டவையும் சர்வமான்யமாக நம் வரியிலார் கணக்
 17. கிலும் பதினொன்றாவது முதலுக்கு கழித்த அளவுக்கு இம்மரியாதியிலே இந்த நாள் முதலுக்கு உதக பூ
 18. ர்வ தன்ம தானமாக சந்திராதித்த வரை சந்ததிப் பிரவேசமே தான  வினியோக விசயங்களுக்கு உரித்தாக கல்லி
 19. லுஞ் செம்பிலும் வெட்டிக் கையாண்டு கொள்ளவும். இந்த உதக பூர்வ தன்ம தானத்துக்கு நம்முடைய வகை
 20. யிலுள்ளாரிலும் மற்றும் ஆராகிலும் விக்கினஞ் செய்யிர பேர்கள் கெங்கைக் கரையிலே பிரம்ம ஹத்தியும்
 21. கோ ஹத்தியும் செய்த பாவத்தை யெய்தக் கடவார்களாகவும்.

கூலி – செய்த பணிக்கு தர வேண்டிய கூலி; உழவுப்பற்று – உரிமையுள்ள வேளாண் நிலம்; புறஞ்சேரி – ஊருக்கு வெளியே அமைந்த சேரி; அடிமை – கொத்தடிமை; உதகபூர்வ – நீரட்டி கொடு; சந்தி விக்கிரகப்பேறு – ஆவணக் கட்டணம்; சந்ததிப் பிரவேசம் – தலைமுறை தலைமுறையாக; கடவார்களாக – அடைவார்களாக.

விளக்கம்:  சக ஆண்டு 1355 (கி.பி. 1433) குறிப்பிடப்பட்ட வீரபாண்டியனின் 3 ஆம் ஆண்டு கல்வெட்டு. இதில் வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுகின்றான்.  அப்போது விஜயநகரத்தில் இரண்டாம் தேவராயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் என்பதைப் பார்க்கும் போது சிறு காலப் பொழுதிற்கு இராமநாதபுரம் விஜயநகர ஆட்சியில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவன் தென்காசி பாண்டியரில் இருந்து வேறுபட்டவனாக இருக்கலாம்.

முத்தூற்றுக் கூற்றத்தில் அடங்கிய பிரம்மதேசமான மருங்கூர் என்னும் பண்டித சோழ சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்திர கொண்ட ஆஸ்ரயன சூத்திரத்தை சேர்ந்த நாராயண சர்மன் என்ற பிராமணன் வீரபாண்டியன் என்பவனுக்கு தான் தர வேண்டிய கூலிக்கு ஈடாக செம்பி நாட்டில் தனக்கு உரிமையான புறக்குளம் உள்ளிட்ட உழவு நிலத்தையும் இதாவது, அதனுடன் சேர்ந்த மண்திடல், கிணறு, குளத்தைச் சுற்றி அமைந்த நன்செய் புன்செய் ஆகியவற்றையும் இவ்வூரின் வெளியே அமைந்த சேரியில் வாழும் தீண்டாரைச் சேர்ந்த கொத்தடிமையையும் நீரட்டி தர்மதானமாகத் தந்துவிட்டான். நிலத்தின் அமைவிடமாக அதன் நான்கு எல்லைகள் விரிவாகக் குறிக்கப்படுகின்றன. அதற்குண்டான அரச வரிஇனம், செக்குவரி, தறிவரி, ஆவணக் கட்டணம் என எந்த வகை வரியும் இல்லாமல் வரியிலார் கணக்கில் பதியப்பட்டு தசமிக்கு மறுநாளான பதினோரம் நாள் முதல் இப்படியாகச் செல்வதாக நீரட்டி தர்மதானமாக சந்திர சூரியர் உள்ள காலம் வரைக்கும் தலைமுறை தலைமுறையாக தானம் முதலானவை செய்வதற்கு பயன்படும்படி கையாண்டுவர இதை கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக என்கிறான். இந்த தான தர்மத்துக்கு என்னுடைய உற்றார் உறவுகள் மற்றும் வேறு எவரேனும் தடை எற்படுத்துவாரானால் அவர் கங்கைக் கரையில் பிராமணரையும் பசுவையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று கூறி நிறைவு செய்கிறான்.

கல்வெட்டில் நாராயண சர்மனுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. இந்த தான தர்மத்தால் கோவிலுக்கு ஒரு பயனும் இல்லை. இவனது இந்த செம்பி நாட்டு நிலம் அரசனிடம் இருந்து நேரடியாகப் பிரம்மதேய இறையிலியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம். எனவே அதை விற்றால் வரி இல்லாச் சலுகை போய் ஆவணக் கட்டணமும் கட்ட வேண்டி வரும் என்பதால் தனது அந்த உரிமையை அப்படியே தர்ம தானமாக வீரபாண்டியன் என்பவனுக்கு மாற்றிக் கொடுக்கின்றான்.  நாராயண சர்மன் இப்படி செய்வதற்கு அவனுக்கு வாரிசு இல்லாமல் போனதால் அதை தான தர்மத்திற்கு பயன்படுத்த வீரபாண்டியனை ஒரு கண்காணியாக்கி (care taker) இப்படி கொடுத்திருக்கலாம் அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தானதர்ம முறையை கைக்கொண்டிருக்கலாம். இந்த கிராமத்தின் வருவாய் மன்னனால் இறையிலியாக கோவிலுக்கே விடப்பட்டிருந்தால் அதில் அடங்கிய இந்நிலத்திற்கு கோவிலுக்கு வரிகள் செலுத்தப்பட வேண்டும். வரிகளைக் கட்டத்தேவையில்லை என்று நாராயண சர்மன் அறிவிப்பதால் அது ஏற்கனவே கோவிலின் வரி கட்டாத வரியிலார் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டதால் இச் செய்தி இக்கோவிலில் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளது என்பதை ஊகிக்க முடிகின்றது.

இக் கல்வெட்டில் தீண்டார் என்று குறிப்பது இடுகாட்டில் பிணங்களைக் கையாளும் வெட்டியாரைத் தான் என்று தெரிகின்றது. ஏனென்றால் பறையர்கள் கோவிலில் சந்தி விளக்கேற்றப் பணம் அளித்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அதனால் விளக்கேற்றும் போது தம் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.  ஆகவே பறையர் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க முடியாது. அது 17- ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட புது வழக்கம்.

பார்வை நூல்: ஆவணம் இதழ் 11, பக்கம் 71-72.

புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள மூலநாதர் கோவில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 11 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர  என்ற முதலாம் இராசேந்திரச் சோழனின் மெய்கீர்த்தி 1-5 வரிகளுக்கு நீளுகின்றது.  இனி 6 ஆவது வரியில் இருந்துகீழே.

கோப்பரகேஸரிபந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு 16 ஆவது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பவித்திர மாணிக்க வளநாட்டு வாகூரான அழகிய சோழ சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோ[ம்]. இவ்வா / ட்டை தனு நாயற்று பூர்வ பக்ஷத்து பிரிதிதஷியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற பூரட்டாதினாள்  நம்மூர் அழகிய சோழன் அம்பலத்தேய் இன்னாட்டு வகை செய்கின்ற உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கப்பூர் உடையார் நீலன் வெண்காடனாரும் இருந்து நம்மூர் ஏரிக்கு ஏரியாயமாக புறவூரார் இருந்து. இவ்வூர் நிலத்து நெல்லும் வரகும் கரும்பும் எள்ளும் உள்ளிட்டுப் பயிற் செதாரைப் போகங்கள்டோறும் பன்நிரு சாண் கோலால் இருநூற்றைம்பத்தாறு குழி கொண்ட / தொரு மாவாக மாத்தால் எண்ணாழி கொள்ளுங் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் கைய்செய் வார்த்தேய் நெல்லு இரு தூணிநெல்லும் ஆட்டாண்டுதோறும் போகங்கள் தோறும் அவ்வவாண்டு ஏரி வாரியம் செய்வாரே ஏரி ஆயமாகக் கொள்வாராகவும். புறவூர் இருந்து இவ்வூர் வரும் குடிகளை ஏரியாய மல்லாது மாற்று இறை கொள்ளப் பெறாதாராகவும். இவ்வூரிலும் இவ்வூரோடும் ஏரினவாரியங்களிலும் இருந்தாரில் தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில்ப் பத்து வயஸுக்கு மேல் எண்பது வயஸு / க்கு கீழ்பட்டாரை முதலெடுத்து நாற்ச்சாண் உள்ள கோலால் இரு கோலுக்கு இரு கோல்லகலமும் ஒரு கோல் மட்டுங் கொண்டு பேரால் ஒரு குழி ஆட்டாண்டுதோறும் இவ்வூர் ஏரியிலேய் கல்லக் கடவார்களாகவும். இப்பரிசு கல்லகடவாரை அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரேய் குழி கல்லுவிக்க [க]டவார்களாகவும். குழி கல்லக்கடவார் குழி கல்லாதாரை ஏரியாயமாக பேரால் காற்பொன் அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரே தண்டிக் கொள்ளப் பெறுவார்களாகவும். குழி கல்லாதா / ரைத் தண்டக் கடவ பொன் அவ்வவ் ஆண்டு நேராகத் தண்டாத ஏரி வாரியஞ் செய்வாரை பேரால் கழஞ்சு பொன் ஏரியாயமாக கொள்வதாகவும். இவ்வூர் நிலம் அடுத்தபடியன்றி அடையில் அழிந்துண்டாரை ஏரியாயமாக பேரால் கழஞ்சு பொன் கொள்ள பெறுவதாகவும் ஏரியாயமாகக் கட்டுவன வெயிற்றில் ஏரிக் கணக்கன் ஒருவனுக்கு நிசதப் பதக்கு நெல்லும். இவ்வேரிக்கு வேண்டுவன வெயிறுக்குமல்லது அழிப்பாரும் இப்பரிசு செய்யாமல் காப்பாரும் திருவாணை யென்று இக்க / ப்பூரூடையார் திருவாணை கூறினமையில் இப்பரிசு செய்வதாய் இவ்வண்ணம் ஏரியாயமாகக் கல்வெட்டுவித்தோம் பெருங்குறிப் பெருமக்களோம். பணித்தார் பாக்கைச் சோமநாத கிரமவித்தனும். பாவைக்கால் நின்ற ந[ம்]பிபட்டனும். நெலவங்கன் ஸ்ரீ க்ருஷ்ணக் கிரமவித்தனும். பணியால்  உத்தமப்பிரியன் எழுத்து. யாண்டு 1[6] நாள் 30. [ஏ]ரியா[ய]ம் சுட்டி திருவாணை கூறின திருவாணை கூற்றுவிட்டேன் கப்பூர் உடையானேன்.

பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களின் செயற்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள பிராமண ஊர்ச் சபை உறுப்பினர், மூத்தோர்; அம்பலத்தே – கூட்டத்தில், மன்றத்தில்; புறவூரார் – வெளியூரார்; வகை செய்பவர் – நிலத்தின் அளவு, தரம் ஆகியன அளந்து வரி விதிப்பவர்; போகம் – பயிர் சுழற்சி, rotation of crop; பரிசு – விவரம், ஏற்பாடு, arrangement; கல்லுதல் – தோண்டுதல்; அடுத்தபடி – சார்ந்தபடி; அடை – விளைபயிர்; அழி – பயன்கொள்,செலவிடு, கழி; நிசதம் – நாள்தோறும்; காப்பார் – விலக்குவார்; கிரமவித்தன் – வேதத்தை நெறிப்படி ஆள்பவன்; திருவாணை- அரசாணை.

விளக்கம்:  முதலாம் இராசேந்திரச் சோழனின் 16 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி.1028) கல்வெட்டு. அன்னாளிலே வாகூரான இன்னாளய பாகூர் எனும் அழகிய சோழ ச் சதுர்வேதி மங்கலத்தின் வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர் சபை மூத்த உறுப்பினர்கள் ஒன்று கூடி இக்கல்வெட்டால் தெரிவிப்பது யாதெனில், “இந்த ஆண்டு தனுசு ராசியில் வளர்பிறையும் வெள்ளிக் கிழமையும் ஆன பூரட்டாதி நட்சத்திர நாளில் (மாதம் குறிக்கப்படவில்லை) அழகிய சோழன் ஊர்க் கூட்டத்தில் வரி அதிகாரியான கருப்பூருடைய நீலன் வெண்காடன் இங்கு நம்மோடு அமர்ந்து இருக்க நம்மூர் ஏரிப் பராமரிப்பிற்காக ஏரிவரியை முடிவு செய்ய உள்ளூராரும் வெளியூராரும் வந்து பங்கு கொண்டுள்ளனர்.

இவ்வூரின் விளைநிலத்தில் நெல், வரகு, கரும்பு, எள் உள்ளிட்டன பயிர் செய்வாரிடம் ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் 12 சாண் கோலால் 256 குழிநிலம் கொண்ட பெரிய அளவு நிலப்பரப்பை உருவாக்கி அதில் எண்ணாழி கொள்ளும் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் மா ஒன்றுக்கு இருதூணி நெல்லை கையால் அள்ளிப் போட்டு அளந்து ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் ஏரிவாரியப் பணியை மேற்கொள்வார் ஏரிவரியாகப் பெறவேண்டும். வேற்றூரில் இருந்து இவ்வூருக்கு வரும் குடிகளிடம் ஏரிவரி தவிர வேறு எந்த வரியையும் பெறக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வூரில் குடியேறியவரில் தீண்டாதாரான வெட்டியான் குடும்பத்தவரை தவிர்த்து பத்து வயதுக்கு மேல் 80 வயதிற்குள் உள்ள ஆள் ஒவ்வொருவரும் நான்கு சாண் உள்ள கோலால் இருகோலுக்கு இரண்டு கோல் அகலமும் ஒரு கோல் மட்டத்திற்கு ஒவ்வொருவரும் குழி தோண்டித் தூர்வார வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி குழி தோண்டுகின்றவரை அந்தந்த ஆண்டு ஏரிவாரியத்தாரே குழி தோண்டுவதில் ஈடுபடுத்த வேண்டும்.   குழி தோண்டாதவர்களுக்காக மாற்று ஆளை (substitute) அமர்த்தி குழி தோண்டினால் குழி தோண்டாதவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏரிவாரியத்தார் கால்பொன்னை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம். குழிதோண்டுவதில் கலந்து கொள்ளாதவரிடம் இருந்து அந்தந்த ஆண்டே திரட்ட வேண்டிய கால்பொன்னைத் திரட்டாவிடில் அதற்கு தண்டமாக (fine) ஏரிவாரிய பொறுப்பில் உள்ளவர் ஒவ்வொருவரிடம் இருந்தும் கழஞ்சு பொன்னை ஏரிவரியாகப் பெறவேண்டும். வாழக்கைக்கு இவ்வூர் விளைநிலத்தை சார்ந்திராமல் விளைபயிரை மட்டும் கொள்முதல் செய்து உண்பவரிடம் கழஞ்சு பொன் ஏரிவரியாகப் பெற வேண்டும். ஏரிவரியாகக் கட்டுவனவற்றில் இருந்து ஏரிக்கணக்கன் ஒருவனுக்கு நாள்தோறும் பதக்கு நெல் தரவேண்டும். இந்த ஏரிக்கு வேண்டியதைச் செய்யாமல் அதை பயன்படுத்த மட்டும் செய்வாரும் இந்த ஏற்பாட்டை புறக்கணித்து விலக்குவாரும் அரசாணையை மீறினவர் ஆகின்றனர். கருப்பூருடையார் அரசாணையிட்டபடியே இந்த ஏற்பாட்டை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டோம். அதன்படியே ஏரிவரி பற்றி கல்லில் வெட்டுவித்தோம்” என்று வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர்சபை மூத்தோரில் சோமநாத கிரமவித்தன், நம்பிபட்டன், ஸ்ரீ கிருஷ்ண கிரமவித்தன், உத்தமப்ரியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இராசேந்திர சோழனின் 16 ஆட்சி ஆண்டு 30 நாளில் ஏரிவரியை முடிவுசெய்து அரசாணை அறிவிக்கும் அரசாணையை கூறிவிட்டேன் கப்பூர் உடையானேன்.

தீண்டார் பற்றிய குறிப்புள்ள அரிய கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்று. கோவிலுக்கும் இந்த ஏரிவரிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.  இதனால் கோவிலுக்கு எந்த பயனும் இல்லாத போதும் இக்கல்வெட்டு ஏன் கோவிலில் இடம் பெற்றது என்ற கேள்வி நம்மில் எழுகின்றது. “ஏரிக்கு வேண்டியதை செய்யாமல், இந்த ஏற்பாட்டை விலக்குவோர்” ஆகிய எதிர்மறைக் கருத்துகளை இதில் குறிப்பிடுவதில் இருந்து வாரியக் கண்காணிப்பு அதிகாரமுடைய பெருங்குறி சபை உறுப்பினர்களுக்கு இந்த ஏரிவரியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற ஐயம் இருந்துள்ளதை காட்டுகின்றது. சிக்கல் எழும் போதெல்லாம் இந்த அரசாணையைக் காட்டி முரண்படும் மக்களை ஏரிவரிகட்ட உடன்படச் செய்யலாம் என்ற எண்ணம் தான் பெருங்குறி சபையாரை இக்கல்வெட்டை கோவிலில் பொறிக்க வைத்தது எனலாம். பெருங்குறி சபை மக்களும் கோவிலில் பணிபுரியும் பிராமணர் தானே!!

பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பக் 25-28, S. குப்புசாமி, G. விஜய வேணுகோபால். புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன வெளியீடு. தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அறிய உண்மைகள், பக் 303-304, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்,

செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பாலூர் பதங்கீசுவரர் கோவில் முன்மண்டப வடக்குச் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 15 வது
 2. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டுப் பா
 3. லையூரான இராசேந்திர சோழ நல்லூர் உடையார் திருப்பதங்காடுடைய நாயநா[ர்]க்கு இக்
 4. கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டன் மகன் உய்யக் கொண்டாநாந காக்கு
 5. நாயக பட்டனேன். இந்நாயனார்க்குத் திருப்பாலையூர் கிழவன் பறையடியாரில் வாசி மகன் பெருங்காடநாந
 6. இளமைப் பெரும்பறையன் வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு நான் உபையாமாகக் கைக் கொண்ட காசு ஆறு. (கல்வெட்டு முற்றுப் பெறவில்லை)

காணிஉடைய – பரம்பரை உரிமை உடைய; கிழவன் – கிராமத் தலைவன்; பறையடியார் – பறையர்குல வேலையாள்; சந்தி விளக்கு – பகலும் இரவும் கூடும் வைகறை, மாலை வேளைகளில் கோவிலில் எரிக்கும் எண்ணெய் விளக்கு.

விளக்கம்:  மூன்றாம் இராசராச சோழனின் 15 – ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1231) செயங்கொண்ட சோழமண்டலத்தில் அடங்கிய ஊற்றுக்காட்டு (வாலாஜாபாத் அருகில்) கோட்டத்தில் அடங்கிய பாலையூர் நாட்டின் ஊரான பாலையூரில் கோவிலுடைய திருப்பதங்காடு ஈசுவரன் கோவிலின் பரம்பரை பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டனுடைய மகன் உய்யக்கொண்டனான காக்குநாயக பட்டன் செய்யும் சத்திய பிரமாணம் யாதெனில், “இக்கோயில் இறைவர்க்கு திருப்பாலையூர் தலைவனிடம் வேலை செய்யும் பறையரான வாசி என்பாரது மகன் பெருங்காடனான இளமைப் பெரும்பறையனிடம் இருந்து அன்றாடம் ஒரு சந்தி விளக்கு ஏற்றுவதற்காக நான் உபையமாக ஆறு காசுகளை ‘அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக் கொண்டு’ பெற்றுக் கொண்டேன்”.

இளமைப் பெரும்பறையன் கோவிலுக்குச் சென்று உய்யக் கொண்டான் காக்குநாயக பட்டனை சந்தி ஆறு காசு உபயம் கொடுத்து சந்தி விளக்கெரிக்கச் செய்தான். அதன் தொடக்க நாளில் அவன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டிருக்க வேண்டும். இச்செயல் பறையர் தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்க வில்லை என்பதற்கு தக்க சான்றாகின்றது. இக்கல்வெட்டு மூலம் பறையர் தீண்டாதாரில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகின்றது.

பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IX, பக். 83, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

பறையர் சந்தி விளக்கு எரித்த மேலும் சில கல்வெட்டுகளைக் காண சொடுக்குங்கள்

https://groups.google.com/d/msg/vallamai/w2Ov5Sd8KG0/QaXdrvWCCAAJ

https://groups.google.com/d/msg/vallamai/BqrYqyng6uY/orQnsT4ADgAJ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

 1. மேலும் படித்தறிய சொடுக்குங்கள் https://groups.google.com/forum/#!topic/vallamai/8aWs-otzjLM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *