அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 247

 1. அரங்கன் நாமத்தை
  அனுதினமும் அரங்கேற்றும்
  கிளிகளிரண்டும் – வறண்ட
  கிளைகளில்
  பையக் காலூன்றி
  ரங்கா ரங்கா என்றே
  ராகமிசைத்து
  மென்சிறகின் வர்ணத்தை
  மெல்லத் தோய்த்ததில்,
  உலர் மேனி சிவந்து
  கிளர்ந்தெழுந்த பூந்துளிர்.

 2. என் நிற மரங்களெல்லாம் இன்று
  செந்நிறமாய் மாறி நிற்பதறிந்து
  குடும்பத்துடன் ஓடி வந்து பார்த்தேன்..

  திரும்பிய திசையெங்கும் பச்சை கண்டு
  திக்கெட்டும் மானுடர் இச்சை கொண்டு
  திகைப்புடன் நம் தேசம் புகுந்ததொரு காலம்..

  வளங்கள் அனைத்தும் அழித்து
  வானுயர கட்டிடங்கள் செழித்து
  உயிரினங்கள் மாற்று தேசம் தேடுது இக்காலம்..

  தாய் மண்ணை பிரிந்து
  தாயிழந்த பிள்ளையாய் வறிந்து
  தவித்துத் தான் நிற்கிறோம் அந்நிய தேசத்தில்..

  வாயற்ற ஜீவனென்று விட்டுவிட்டாய்
  வாழ்க்கை என்பதை தொலைத்துவிட்டாய்
  என் கதி விரைவில் உணக்கென்பதை மறந்துவிட்டாய்

  நான் தொலைந்து போனது போல்
  நீ தொலைந்து போகுமுன்னே நிதானமாய் யோசி

  கண்ணை அழித்து ஓவியம் வாங்கி
  மண்ணை அழித்து சொத்துக்கள் சேர்த்து – உன்
  மக்களை செவ்வாய் கிரகம் அனுப்பும் எண்ணமோ?

  பசுமை தனை அழிக்குமுன்னே பல முறை யோசி – உன்
  தலைமுறை வாழ வழி விட யோசி..

  -சத்தியப்ரியா சூரியநாராயணன்

 3. படக்கவிதை 247 ; கிளி

  பச்சைநிறக் கிளியே உனைக்
  கண்டால் பரவச நிலையே
  சொன்னதை சொல்லும் கிளியே
  நீ சுந்தர வதன எழிலே

  பழங்களைத் தின்னும் கிளியே உனைப்
  பார்ப்பவர் மனதில் மகிழ்வலையே
  காதல் சிந்தனைத் தூண்டும் கிளியே
  நீ சிறகடித்துப் பறப்பது பைம்பொழிலே

  சருகான மரத்திலும் நீ
  சாய்ந்தாடும் கொடியிலும் நீ
  பசுமைநிறச் செடியிலும் நீ
  பாய்ந்தோடும் நதிக்கரையிலும் நீ

  எங்கெங்கு காணிணும் உந்தன் வண்ணம்
  மனமகிழ்ச்சியை அளிக்கும் அதுவே திண்ணம்
  அதில் உருவாகும் ஆயிரம் எண்ணம்
  அத்தனையும் புதுப்புது ஜாலவர்ணம்

  மதுரை மீனாட்சி கையில் நீ
  மார்கழி நாயகி கோதை கையிலும் நீ
  நல்லதொரு சேதிகள் நாளும் சொல்ல
  நாங்களும் இருக்கிறோம் அவ்வழகைக் காண
  கிளியே கிளியே நீ பறந்துப் போகாதே…

  Sudha M

 4. கிளிகள் பாடம்…

  அடுத்த வேளை உணவிற்கே
  ஆலாய்ப் பறந்திடும் ஏழையர்முன்,
  கிடைத்த உணவு போதாதெனக்
  கூடுதல் வாங்கிப் பாழ்படுத்தி
  அடுத்த வர்க்கும் கொடுக்காத
  அன்பே யில்லா மாந்தர்களே,
  கொடுத்துக் கூட்டமாயச் சேர்ந்துண்ணும்
  கிளிகள் பாடம் கற்பீரே…!

  செண்பக ஜெகதீசன்…

 5. அன்னையுடன் ஆடிப்பழகும்
  அற்புத வாய்ப்புமின்றி
  சுற்றி வட்டமிட்டு
  கற்றிடுமோர் சூழலற்று
  கூண்டில் அடைபட்டு
  வேற்றுமொழி ஓதி தினம்
  வாடி வதங்கிடும்
  பள்ளிச் சிறார் போலன்றி
  புனம் தோறும் சுற்றி நாளும்
  புதுக் காற்றைச் சுவாசித்து
  தினைவளத்தைத் தான் புசித்து
  திளைத்திட வா! என் கிள்ளாய்

 6. கூண்டுக்குள் இருந்து சுதந்திரம் கிடைத்து பறந்து வந்த -பச்சை வண்ணக்கிளிகளே

  உங்கள் பரபர ஓசை கேட்டு ஓடி வந்தேன் அங்கே றெக்கை விரித்து
  அமர்ந்திருந்த ஒரு கிளியை பிடித்தது

  அதை பார்க்க அருகில் சென்ற போது
  என் ஓசையை கேட்டு -எங்கோ ஒளிந்து கொண்டது

  ஆனால் பழுத்த மிளகாய் போல் உன்
  மூக்கு காட்டிவிட்டது கிளியே- நீ அங்கே என்று

  கொஞ்சுகின்ற கிளியே- என் மனதை கொள்ளை அடித்தை சொல்வாயோ

  உன் வசியம் செய்யும் விழி -என்னை மயக்கிட செய்யுதே

  உன் கொஞ்சும் பேச்சு -என்னை கவர்ந்திடுதே

  சொன்னதை சொல்லும் வித்தை எங்கு கற்றாய்

  கிளியே உன்னை பார்க்கும் போது கவிதை என்னும் கண்மணியை கரம் பிடித்து நான் கவிஞன் ஆகிறேன்

  செடியில் அமர்ந்து -என்ன செய்கிறாய்
  பறந்து வந்து என் தோளின் மேல்
  அமர்ந்து விடு நாம் நட்புக்கொள்வோம்.

  இப்படிக்கு
  பா.மஞ்சு பார்கவி
  (1st BSC cs)
  Sri ramakrishna college of arts and science for women

 7. வறண்டு நிற்கும் குச்சிகளை
  அலங்கரிங்க அதில் அமர்ந்திருக்கும் கிளிகளே….!

  பெண்களின் கழுத்தை அலங்கரிக்கும்
  ஆபரணங்களை, மேலும் அழகூட்ட அதில்,
  பதிக்கப்படும் பச்சை மரகத மணிகளை போன்று அத்தவரங்களை அலங்கரிக்கின்றீர்….!

  நீங்கள் அமர்ந்ததால் என்னவோ, அச்செடியில் மாத்திரம் பச்சை இலைகளின் சங்கமம்….!

  மனிதர்களின் கொடிய செயலால் இப்படி
  வறண்டு கிடக்கின்றது இப்புவி…
  ஆனால் உங்களின் எச்சில் கூட இப்புவியை பசுமையாக்குகின்றது….!
  உங்கள் எச்சில் கூட இப்புவியை பசுமையாக்குகின்றது பச்சை கிளிகளே…!

  சாய்ந்து வறண்டு விழப்போகும் அந்த செடிகளை பிடித்து இப்புவியில்
  பசுமையை நிலைநாட்டுகிறீர்….!
  இந்த மனிதர் கூட்டம் உங்களிடம்
  பாடம் கற்க வேண்டும்……

  – அபிநயா சம்பத்

 8. கூண்டுக்குள் கிளியே
  உன்னை கண்டு கண்டு
  சுதந்திரமாய் பறந்து திரிவதை கண்டதும்
  சொர்கம் என்று நினைத்தேன்

  பறந்து திரிந்து காய் கனிகளை
  உண்டு மகிழ்ந்த உன்னை
  சிறகொடித்து கூண்டிலடைத்து
  சிறு உணவிற்கு
  சீட்டெடுத்து கொடுக்க பழக்கியதேன்

  எடுத்து கொடுக்கும் சீட்டை வைத்து
  எதிர்காலம் சொல்லி முடிக்க
  எல்லாம் அவன் செயல் என்று அறிந்தும்
  எதிர்காலம் அறிந்து நீ என்ன செய்வாய்

  எதிர்வரும் நிகழ்வுகளை
  எதிர்பார்த்து காத்திருக்க
  கவலை உந்தன் நெஞ்சில்
  மெல்ல குடிபுகுமே

  ஜோதிடத்தில் வைத்த நம்பிக்கையை
  உன் மீது வைத்து தன்னம்பிக்கையோடு முயன்றிடு
  சிறகை விரித்து மெல்ல விண்ணை நோக்கி பறந்திடு
  வெற்றிக்கனியை உண்டு மகிழ்ந்திடு

  மானிடரின் ஜாதகத்தை
  சொல்லி முடிக்க நீ உதவிட
  உன்னை பற்றி இங்கு சொல்லி
  ஜோதிடனாய் நான் மாறினேனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *