-மேகலா இராமமூர்த்தி 

திரு. முகம்மது ரபியின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 246க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். படக்கலை நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

அலையெனவே அலைந்தாடும் மனித மனங்கள் அவா அறுக்கும் கலையறிந்து அடக்கத்தோடு வாழ்ந்தால் வாழ்வில் இன்பம் கோபுரமாய் உயர்ந்துநிற்கும் எனத் தோன்றுகின்றது இப்படக் காட்சியைக் காண்கையில். ஆயினும் அவ் உயர்நிலை வாய்க்கக் கடும் பயிற்சியும் விடா முயற்சியும் தேவை.

இப்படக்காட்சியைக் காணும் கவிஞர்களின் உள்ளத்தில் கவிதை வெள்ளம் பொங்கிப் பெருகும் என நினைக்கிறேன். அவ்வெள்ளத்தில் நீந்தி மகிழும் நல்வாய்ப்பை எமக்களிக்க வாரீர் எனக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

*****

அசைந்தாடும் நதிநீரை, அந்நீரின் பளபளப்பை, ஓரம்நின்று இரசிக்கும் படகுகளை, கட்டடங்களின் பின்னே மறைந்து நின்று சிரிக்கும் மரங்களை எனப் படத்தில் தெரிகின்ற அனைத்தையும் தன் கவிதைக்குள் கவினார் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

அசைந்தாடும் நதிநீரை
அணைத்தபடி கட்டடங்கள்
அழகழகாய்த் தெரிகிறதே
அதில் நம் மனமும் லயிக்கிறதே

இடைவிடாது ஓடுகின்ற
இந்நதி நீரின் பளபளப்பு
இறைவன் தந்த பரிசளிப்பு
நம்மிரு கண்ணில் ஜொலிஜொலிப்பு

மரங்களும் தான் தெரிகிறதே
மறைக்கும் கட்டடங்கள் பின்புறத்தில்
சில்லென்று காற்றடிக்கச்
சீறியெழச் சிரிக்கிறதே!

கதிரவனின் ஒளிவீச்சால்
தங்கக்குவியலாய் இந்நதிநீரோ
அதனுடே நீலநிறம்
அதற்குத்தான் முத்தாய்ப்போ?!

படகுகளும் ஓரம் நின்று
நதியைத்தான் ரசிக்கிறதோ
ஆலயங்கள் கரைமீது
அமைதியைத்தான் தருகிறதோ!

அழகென்று எதைச் சொல்ல…?
அற்புதப் படப்பதிவில்
அருமையான காட்சியே என்று
அறுதியிட்டுக் கூறுகின்றேன்!

*****

”அலைகடலே அடங்கிக் கிடப்பாய்! அடங்காது ஆடும் அறிவற்ற மனிதனுக்கு, நேற்றிருந்தோர் இன்று இல்லை எனும் நிலையாமையை நீ உரைப்பாய்!” என்று கடலை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

மனிதனுக்குப் பாடம்…

ஆற்றல் மிகுந்த அலைகடலே
அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
ஏற்றம் வந்தால் மனிதனவன்
ஏதும் தெரியா தாடுகின்றான்,
கூற்றின் வரவு தெரியாதே
குற்றம் பலவும் செய்கின்றான்,
நேற்றுச் செய்தோர் இன்றில்லை
நெறியாம் பாடம் சொல்வாயே…!

*****

”யாத்திரை என்றதும் நினைவில் வரும் திருத்தலம் காசி; முதுமைவந்து முத்தமிட, அமைதி தேடும் மனங்களுக்குப் புகலிடமும் இந்தக் காசியே” என்று காசினி போற்றும் காசியின் புகழ்பாடுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

பஞ்சபூதங்களில்
நிலமும் நீரும்
வீசும் காற்றும் வானும்
வந்து நின்று போஸ் கொடுக்க
தீமை விலகி நன்மை பெருகத்
தீ மட்டும் விலகிச் சென்றதோ?

நித்திரையில் கூட
யாத்திரை என்றதும்
நினைவில் வரும்…. காசி
கங்கையில் தினம்
கறைகள் நீராட
புனிதமாய் மாறி
புண்ணிய ஸ்தலமானதோ?

குற்றங்கள் பெருகிப் பாவங்கள் நிறைந்திட
புனித நீராடி
பாவங்களைத் துறந்து பரிசுத்தம் ஆகும்
நம்பிக்கையைப்
பலர் நெஞ்சில் விதைத்தவன்
தன்னம்பிக்கை விதைக்க மறந்ததென்ன?

எதிர்காலம் பற்றிச்
சிந்தையேதும் இன்றியே
பொருள் தேடி ஓடியே
இளமை முழுதும் கழியுமே
வந்து போக மனமின்றி
தங்கிவிட்டச் சக்தி யாவும்
ஒன்று சேர்ந்து உருவான ஊரு இது!

முதுமை வந்து முத்தமிட
அமைதி தேடி அலைந்திடும்
மனங்கள் அனைத்திற்கும்
புகலிடமாய் அமைந்திடும்
காசி எனும் இத்தலமே!

*****

”புலன்களால் ஏறிய புழுதியைப் படித்துறையில் துலக்கி, பக்திக்கடலில் மூழ்கி, முக்தியெனும் முத்தெடுக்கக் காத்திருக்கும் கட்டங்கள் இவை” என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

புலன்களால் புழுதியேறி
அடர்ந்திருந்த அழுக்காற்றுக் கறையைப்
படித்துறையிலே துலக்கி,
சினம் தொலைத்து, மோகம் களைந்து,
பக்தியெனும் கடலில் மூழ்கி,
முக்தியெனும் நல்முத்தெடுக்க,
தமது முறைக்காக
வரிசையில் காத்திருக்கும்
கட்டடங்கள்.

*****

”வானோங்கி நிற்கும் இக் கட்டடங்கள் நிலைத்திருக்க, கடலது கரை தாண்டாமல் கண்ணியம் காக்கவேண்டும்” என்ற உண்மையை விண்டுரைக்கின்றார் திருமிகு. சத்தியா இரத்தினசாமி.

வல்லென மனிதன் வனைந்த கட்டடங்கள் வானம் தொட.
முனைந்து நிற்கும் இவ்வகையைப் பார்க்கையிலே….
உள்ளூர ஓர் உணர்வெழுகின்றது.
இக் கட்டடக் காட்சியெல்லாம் கரையிலே நிலைத்திருத்தல்,
கண்ணியம் காக்கும் கடல் கரை தாண்டா வரையிலேயே…

*****

நீரையும் நீரைச் சார்ந்துநிற்கும் ஏனைய பொருள்களையும் அழகாய்த் தம் கவிதைகளுக்குள் அடக்கி, வாழ்வியல் உண்மைகளை அவற்றோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் அகங்கனிந்த பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது…

ஜீவநதி!

காட்சிகள் மாறினாலும்
காலங்கள் மாறினாலும்
மாட்சிமை(யை) நிலத்து நிற்க
மன அழுக்கை அடித்து ஓட்டு!

சலசலத்துப்
பொங்கியோடி
வையகத்தின் வளம் சேர்க்கத்
தினம் தினம் புதிப்பித்துக் கொள்!

ஓரிடத்தில் ஒடுங்கி
பழமை சேர்ந்து
பாசி படிந்து
குட்டையாய்த் தேங்கிடாமல்
ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!

”மனிதா! மாட்சியோடு என்றும் நிலத்தில் நிலைத்துநிற்க, உன்னை நித்தமும் புதுப்பித்துக்கொள்! குட்டையாய்த் தேங்கிடாமல் ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!” என வாழ்வின் வெற்றி இரகசியத்தை எளிமையாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

  1. படக்கவிதை போட்டி 246
    எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  2. படக்கவிதை போட்டி 246 எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *