Photo of a young boy and his father on a bicycle lane, learning to ride a bike.

Photo of a young boy and his father on a bicycle lane, learning to ride a bike.

நிர்மலா ராகவன்

(பழகத் தெரிய வேணும் – 5)

என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

இன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே?”

நானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”.

மாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், ‘எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம்.

என் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா.

நான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்!” என்ற பழிச்சொற்கள் எழும்.

நான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

விதவைகளுக்குச் செய்யப்பட்ட அநீதி

அந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் — ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள்.

வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி?) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா! (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்).

பாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. ‘கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். ‘வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, ‘என்னமா முதுகுசொரியறது! ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் ‘திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.

திருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே! ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ!” என்று அழுதார்கள் பாட்டி.

பாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: ‘நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை!’ என்று!

வசவா, செல்லமா?

எல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள் மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை.

அதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா?

கைம்பெண்ணாக நடித்தபோது

மலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். ‘வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம் பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.

நான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே!

எனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை!

என் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன்.

‘நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்?’ என்று ஒருவர் பாராட்டியபோது, ‘வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன்.

எதையும் தாங்கலாம்

எப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, ‘இவள் என்ன டைப்? புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று என்னைக் குறித்துக் கேட்க, ‘இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது!’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம்.

நான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா!

அடித்து வளர்ப்பது

தினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பால் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்!) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்?

அடித்தால், ‘தண்டித்து விட்டார்களே!’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு.

அழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்?

“பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது).

தடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.

உங்கள் கையில்

தகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. ‘ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது.

குழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு குழந்தை முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது.

அவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும்.

கதை

என் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன்.

“ஏம்மா குழந்தையை அழவிடறே?” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள்.

“கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. ‘தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா?”

அதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி

பாராட்டுங்கள்

ஒரு முறை நான் ரயிலில் நீண்ட பயணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன்.

உடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை.

ஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை ‘தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது.

பெண்களுக்கு உலகின் போக்கு புரிய

ஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா?”

“உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா!” என்ற விளக்கம் வந்தது.

‘எது செய்தாலும் சரிதான்!’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன?

சமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும்.

‘கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல.

அருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.