குருவே சரணம்
ராதா விஸ்வநாதன்
விண்ணி லிருந்து ஞானப்பொறி வீழ்ந்து
மண்ணில் நடமாடும் தெய்வமாகி வாழ்ந்து
உண்ணா நோன்பு நமக்காக நோற்றதும்
எண்ணில டங்குமோ இத் தரணியில்!
குற்றம் நிறை மாந்தர் கூட்டத்தின்
குறை தீர்த்து குணக்குன்றாய் நின்று
எரிக்கவே நம் பாவத்தை தன் தவத்தால்
கரைந்தது நம் கர்மவினையும் கற்பூரமாய்
அகிலமே அவரடியில் தஞ்சமடைந்து
அன்னை பிதா குரு நீரே என்றது
கண்டதும் அவரது திருமுகம் அன்றே
கருமமும் நமதாவும் தொலைந்தது
பண்டய வினை போக்கும் குருவே
கண்கொண்டு உமைக் கண்ட எமக்கு
கண்டங்கள் இனி உண்டோ இங்கே
தண்டங்கள் எமது ஏற்கும் தருணமிதே
உமைப் புகழ சொல்லுக்கும் பஞ்சம்
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் கூடி
தவமாய் தவம் கிடந்து தந்தது ஒன்றை
‘தவயோகி’ என்ற தமிழ்ச் சொல்லை
இனியும் ஒரு தெய்வம் நடமாடுமோ
இனிய சொல்லையும் இனி உதிர்க்குமோ
இமை பொழுதும் எம்மை அகலாது
இடர் சூழ் உலகில் சுடரென வருமோ