சேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
திருத்தொண்டர்களுள் முதலாமவராகிய திருநீலகண்டர் அருள் வரலாற்றைக் கூறும் இப்புராணத்தில் அத்தொண்டர்தம் மனைவியார் பற்றியும், சிவநேயத்தைப் பற்றியும் இப்பாடல் கூறுகிறது.
அவ்வடியாரின் மனைவியார் அருந்ததி என்ற கற்புக்கரசிக்கிணையான மேம்பட்ட கற்புக்கரசி ஆவார். கற்பு – கணவனார் வழி நிற்கும்பெண்ணியல்பு. “கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை“ என்பதுபழமொழி. அருந்ததி – வசிட்டரது மனைவி. கற்பினிற் சிறந்தவள். வரம்பெற்று அப்பெயர் பூண்ட ஒரு விண்மீனாகி நிற்கின்றாள் எனவும்,கற்பினுக் குதாரணமாகக் கொள்ளப் பெறுபவள் எனவும் புராணங்கள் கூறும்.கல்யாணச் சடங்குகளில் அருந்ததி காணும் வழக்கம் காண்க.
உலகம் உய்யும்பொருட்டுப் பாற்கடலில் பொங்கி மேலெழுந்த விடத்தை இறைவன் அமுதுசெய்ய (அது உள்ளே சென்று மறைந்துபடாமல் எமக்கெல்லாம் அறிகுறியாக விளங்கி இருக்கும்படி) யாங்கள் செய்த தவப்பேறுதான் அம்மட்டில் நிற்கும்படி தடுத்ததோ என்று சொல்லும்படியாக இந்தக் கண்டமல்லவா அதனைத் தடுத்துத் தானே தரித்து நிற்கிறது என்ற கருத்தினாலே; சிவபெருமானாகிய எமது இறைவனது கழுத்தையே எப்போதும் எண்ணுபவராய் இவ்வடியார் திருநீலகண்டம் என்று போற்றி வருவார். நஞ்சுண்டது தேவர்களின் பொருட்டேயாயினும் அதனைக் கழுத்தளவில் நிறுத்தித் தரித்தது தமது கருணையை எல்லாப் புவனங்களிலும் உள்ள எல்லா உயிர்களும் உணர்ந்து உய்யும்பொருட்டாதலின், உய்யத்தரித்தது என்றார். இவர் இன்பத்துறையில் எளியரானாலும் அவரே முன்னர்ச் சொல்லிய
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழத்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்;
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்;
சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார்.
என்ற இயல்புடன் “திருநீலகண்டம்“ என்பாருமானார் என்க. தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதம்பெற வேண்டித் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அங்ஙனம் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டனர். கடையவே வாசுகி வருத்தமிக்கு நஞ்சுமிழ்ந்தது. அது தேவர்களை வருத்திற்று. முன்னர் வெள்ளை நிறமுடைய திருமால் மேனி கறுகினர். பொன்னிறத்தவரான பிரமர் புகை நிறமாயினர். தேவர்கள் இறைவனைத் துதித்து ஓலமிட அவர் அந்த நஞ்சினை உண்டு கழுத்தளவில் நிறுத்தித் தேவரைக் காத்தனர். அந்த நஞ்சு இருத்தலின் இறைவனது கண்டம் நீலகண்ட மாயிற்று என்பது வரலாறு. இச்சரிதம் மாபுராணங்கள் எல்லாவற்றிலும் பேசப் பெற்றது.
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே
என்பது முதலிய சைவத் தெய்வத் திருவாக்குக்கள் எங்கெங்கும் இக்கருணைத் திறத்தினைத் தேற்றம்பெறப் போற்றி முழக்குதல் காண்க. திருநீலகண்டம் என்ற இத்திருப்பெயரின் ஆணையாலே பதிக முழுதும் ஆணையிட்டு ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருநீலகண்டத் திருப் பதிகமுங் காண்க.
அல்லாமலும் இவர் மனைவியார் திருநீலகண்டம் என்று சிவபெருமானைப் போற்றும் தன்மையினார் என்றும் கூறுவார். ஆனால் திருநீலகண்டத்துக் குயவனார் என்று சுந்தரர் பாடியதாலும், இக்குயவர் ‘’திருநீலகண்டம்’’ என்ற திருப்பெயரையே எப்போதும் கூறிவந்தமையாலும் ‘திருநீலகண்டர்’ என்பதே இவர் திருப்பெயர் ஆயிற்று! சிவனாகிய எந்தை நஞ்சுண்டதாலும் கழுத்திற்றரித்ததாலும் யாமெல்லாம் உளமாயினோம் என்ற கருத்துந்தோன்ற இங்குச் சிவனெந்தை என்ற சொல்லாற் போற்றினார். திருநீலகண்டத்திற் பற்று மிக்குப் பயின்ற பண்பினாலே அன்றோ மனைவியார் அதனைக் கூறி ஆணையிட்டவுடன், “தாங்கொண்ட ஆர்வ“த்தினாலே “பேதியா ஆணை கேட்ட பெரியவர்“ அதனை ஆயுள்முழுதும் கடவாது உய்த்ததும் ஆம் என்க.
“அடியாரா மிமையவர்தங் கூட்ட முய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட வமுதே“ – முதலிய பல திருவாக்குக்களும் காண்க. இனி இப்பாடல் முழுவதையும் பயின்று பயன் பெறுவோம்.
‘’அவர்தங்கள் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்குநஞ்சு உண்ண யாம்செய்
தவம்நின்று தடுத்ததென்ன தகைத்து தான் தரித்தது என்று
சிவனெந்தை கண்டந்தன்னைத் திருநீல கண்டம் என்பார்!
இப்பாடலில் இறைவன் உண்ட நஞ்சினைத் தடுத்து கண்டத்தில் நிறுத்திய செயல் பார்வதியுடையது. அதனைத் ‘தவம் நின்று தடுத்தது’ என்று கூறியதன் நுட்பத்தை அறிந்து கொள்வோம்! அவ்வாறே திருநீலகண்டரின் தவறான செயலைத் தடுத்து நிறுத்தியது, ‘’திருநீலகண்டம்‘’ என்ற சூளுரையே ஆயிற்று! அப்பெயர் அடியாரின் திருமந்திரமாகவும், அடியார் திருப்பெயராகவும், மனைவியரின் சூளுரையாகவும் விளங்கிய வலிமையை எண்ணியெண்ணி மகிழலாம்!