பிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு, 18.01.2020 அன்று சென்னையில் நடக்கிறது. அழைப்பிதழ் காண்க.
Blog
-

ஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது
அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பிக்கிறது.
The Rise என்ற எழுமின் அமைப்பு, உலகளாவிய தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்களை இணைத்து, சுமார் 30 நாடுகளில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் மதுரைக் கிளை, ஜல்லிக்கட்டு வீரர்கள் பலர், வாழ்வாதார வசதிகள் இன்றி வாடுவதை எழுமின் அமைப்பின் பொதுக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அனைத்துலக எழுமின் அமைப்பு, அத்தகைய வீரர்களுக்கு உதவ முடிவு செய்தது.
முதற்கட்டமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில், கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் அதிக மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 8 கறவை நாட்டு மாடுகளை அலங்காநல்லூர் அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று மாலை வழங்குகிறது.
எழுமின் அமைப்பின் உலகளாவிய தொழிலதிபர்கள் மலேசியா தான்சிறி டத்தோ பலன், கத்தார் பஸீத் அஹமது, சிங்கப்பூர் அஹமது புகாரி, மதுரை பெரிஸ் மகேந்திர வேல், கனடா ஸ்டன் முத்துலிங்கம், சென்னை சௌகியா குழுமத்தின் சிவகுமார், சென்னை சில்க்ஸ் நிறுவனம் உள்ளிட்டோர் இந்தக் கறவை மாடுகளை நன்கொடையாகத் தந்துள்ளனர்.
“வீரர்கள் வாழ்ந்தால்தான் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் வாழும்” என எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார். கறவை மாடுகள் வழங்கும் பணியினை எழுமின் மதுரைத் தலைவர்கள் பாலகுரு, ஜலீல், சரவணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நல்லதொரு தொடக்கத்தைத் தந்துள்ளனர். ஜல்லிக்கட்டு வீரர்களின் வாழ்வாதாரத்திற்குக் கறவை மாடுகள் தந்து உதவ, உலகத் தமிழர்களை எழுமின் அமைப்பு அழைக்கிறது. முன்வருவோர் ஹேமாவதி அவர்களை +91 94443 35177 தொடர்பு கொள்ளலாம்.
(பத்திரிகைச் செய்தி)
-

An Oral Folk History of Kongu Natu: Dr.Brenda Beck
About the talkThe talk will discuss the oral Tamil folk epic known as the Annanmar Kathai and detail the extraordinary contribution this story makes to our understanding of Tamilnadu on many levels. The speaker will interpret this rich and long legend as a broad metaphor couched in the format of one family’s life experiences over three generations, but which can also be understood as a tool helpful in telescoping about 500 years of local history. Dr. Beck’s own life-long immersion in Kongu natu culture will be woven into the story with photos of her first of many visits to the area in 1954. The themes discussed will include local myths, star lore, temple layouts and more. It will also suggest possible trade contact both with ancient Babylon and with the early Indus Valley civilization. This heavy illustrated presentation will conclude by linking all of the above to a discussion of the significance of the Patti Pongal in the Kongu area, to the Pleiades and to Siva’s great bull, Nandi.About the SpeakerBrenda Beck is an Oxford-educated Social Anthropologist who has spent a lifetime studying South Asia and, in particular, the Kongu nadu area of Tamilnadu. She has published eight books, two of which are double-volume works, and she has contributed to and/or edited many more. She has also authored over sixty journal articles. Dr. Beck has a passion for South Asian mythology. She has written a number of articles related to divine figures including Indian goddesses and animal figures like the wild boar. She has also examined a number of human epic characters, detailing their stories and describing their related festivals. One unique folk epic, the Legend of Ponnivala Nadu, has held her interest for over fifty years. Brenda is an Adjunct (Full) Professor of Anthropology at The University of Toronto and President of The Sophia Hilton Foundation of Canada, a charitable foundation that promotes the use of storytelling in education at all levels. Her earliest ethnographic work, Peasant Society in Kongu has just been translated into Tamil by Adaiyaalam, a South Indian educational publishing house. In the past three years alone Brenda has received twelve awards from Tamil community groups based in the US, in Canada, in Tamilnadu, and also one in Malaysia for her work in helping to deepen a worldwide appreciation of Tamil folk literature, especially by those living in the Diaspora.About Prof. M. AnandakrishnanProf. Anandakrishnan obtained Ph.D in Civil Engineering (1960) from the University of Minnesota, USA. He served as Professor of Civil Engineering at IIT, Kanpur between 1963 and 1974. He served the United Nations in the UN Centre for S&T for Development(1978-1989); as the Vice-Chancellor of Anna University (1990-96); and as Vice-Chairman of the Tamil Nadu State Council for Higher Education from 1996-2002. Currently he is the Chairman, Board of Governors, Indian Institute of Technology Kanpur and Rajasthan; President, Ranganathan Centre for Information Studies (RCIS), Chennai; President, Tamil Nadu Academy of Sciences, Chennai; Member, Board of Management, NUEPA, Delhi; Member, High Power Committee on Renovation and Rejuvenation of Higher Education in India and Chairman, Executive Council, Science City, Chennai. He was Chairman, MIDS between 2003 and 2008. He has served as Chairman or Member of several high level committees of MHRD, UGC, AICTE and NAAC. His honours and awards include Padma Shri from the President of India (2002); the Order of Scientific Merit from the President of Brazil (1996); Distinguished Leadership Award of the University of Minnesota (2003); Honorary Fellow of the Indian Society for Technical Education (2005); UGC National Swami Pranavananda Saraswati Award in Education (2006); Fellow of the Institution of Engineers, India and Fellow of the National Academy of Sciences, India. -

ஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’
மக்கள் தொடர்பாளர் ஜான்
இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச் செருக்கு’.
ஓவியர் வீர சந்தானம், வ.ஐ.ச. ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர். பொறியியல் படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்..
“பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது. அதன்பிறகு ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்.
சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதம் தேவையில்லை என நினைத்ததால், நானே குறும்படங்களை எடுக்க ஆரம்பித்து அதன் மூலம் சினிமா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஒரு கட்டத்தில் பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீர சந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.
இந்தக் கதையை படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்றுகூடப் பலர் கூறினார்கள். முதலில் அரைமணி நேரம் படமாக எடுத்துப் பார்ப்போம் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒரு தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைக் கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று கூறினார்.
எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்தப் படத்தைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்தப் படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்தச் சமயத்தில் விலகிவிட்டனர். அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் முறையில் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இப்படி ஒரு விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்குத் தெரியாது. ஆனால் படப்பிடிப்பு நடத்தத் தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்துத் திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம், எனது மாமாவின் பெர்சனல் லோன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்தப் படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.
இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்தப் படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது பிளஸ் பாயிண்ட். இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது.
அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்தப் படத்தின் வேலைகளை முடித்தேன். இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு இந்தப் படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
நான் எடுத்துள்ளது கமர்சியல் படம்தான். ஆனாலும் இந்தப் படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன. இந்தப் படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து கைகொடுத்துப் பாராட்டினார். பாரதிராஜாவைப் பொறுத்தவரை இதுவரை பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜாவிடம் மட்டுமே கை கொடுத்து வாழ்த்தியுள்ளாராம்.
அதன் பிறகு என்னிடம் கைகொடுத்து வாழ்த்தியுள்ளதாக மற்றவர்கள் சொன்னபோது எனக்கு இதுவே மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. அவர் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டி உள்ளார்கள்.
இது வெகுஜனப் படம்தான். இந்தப் படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன. 80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்தப் படம்.
இந்தச் சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படிப் பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும். அந்த அளவிற்கு முழுக்க முழுக்க கமர்சியல் படம்தான் இது. குடித்துவிட்டு கூத்தடிப்பவர்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது. காரணம் நான் குப்பைப் படத்தை எடுக்கவில்லை. படம் பார்க்க வரும் ரசிகர்களை முட்டாளாக்கி அனுப்பக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
நல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை. நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாகக் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை. இதற்கடுத்த எனது படங்கள் கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். விரைவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார் தரணி ராசேந்திரன்.
ஃஃபார்ட்சூன் ஃப்ரேம்ஸ் சார்பில் செல்வராம், வெங்கடேஷ் ஆகியோர், இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
-

நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101
நாங்குநேரி வாசஸ்ரீ
101. நன்றியில் செல்வம்
குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்வேணுமட்டும் வீடுமுழுக்க செல்வத்தச் சேத்த பொறவு அத வச்சி சாப்புட்டு சந்தோசமா அனுவிக்காம ஒருத்தன் செத்தாம்னா சேத்த செல்வத்தால என்ன பிரயோசனம்?
குறள் 1002
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்புயாருக்கும் என்னமும் கொடுக்காம தங்கிட்ட இருக்க பொருளால எல்லாம் ஆவும்னு நெனைச்சி அத விடாம புடிச்சிக்கிட்டு இருக்கவனுக்கு சிறப்பில்லாத தாழ்ச்சியான பொறப்பு உண்டாவும்.
குறள் 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறைமத்தவனவிட அதிகமா சொத்து சேக்கணும்னு நெனச்சி அதையே குறியா வச்சி புகழ விரும்பாம இருக்கவனோட பொறப்பு இந்த பூமிக்கு பாரம்.
குறள் 1004
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்மத்தவுகளுக்கு ஒதவி செய்யாத காரணத்தால யாருக்கும் பிடிக்காம இருக்கவன் செத்த பொறவு மிஞ்சி நிக்கப்போவுதுனு எத நெனைச்சிக்கிடுவானோ?
குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவி தானும் தேவப்படும்போது அனுவிச்சிக்கிட்டு இல்லாம இருக்கவன் கிட்ட கோடி கோடியா செல்வம் குவிஞ்சிச்சின்னாலும் பிரயோசனம் இல்ல.
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்தானும் அனுவிக்காம பொறத்தியாருக்கும் கொடுக்காம வாழுதவன் தான்கிட்ட இருக்க பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவான்.
குறள் 1007
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்றுஏழபாழைக்கு கொடுத்து ஒதவாத செல்வம் அழகி ஒருத்தி கலியாணம் முடிக்காம தனிச்சு நின்னு கிழவி ஆயிட்டதுக்குச் சமானம்.
குறள் 1008
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்றுஎல்லாராலையும் வெறுக்கப்படுதவனுடைய சொத்து ஊருக்கு நடுவுல பழுத்துக் குலுங்குத வெசமரத்தோட பழத்துக்குச் சமானமாவும்.
குறள் 1009
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்அறவே நேசமில்லாம தன்னையும் வருத்திக்கிட்டு சத்தியத்துக்குப் பொறம்பா சேக்குத சொத்த கொள்ளயடிச்சு மத்தவுகதான் அனுபவிப்பாக.
குறள் 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்துமத்தவுகளுக்கு கொடுத்து புகழோட இருக்க பணக்காரவுக கொஞ்ச காலம் வறுமைப்பட்டாகன்னா அது ஒலகத்தக் காக்குத மழையத் தருத மேகம் வறுமைப்பட்டதுக்கு சமானமாவும்.
-

இதம், பதம், இயற்கை!
வேதா. இலங்காதிலகம்,
டென்மார்க்தூர் வரை மனத்துள் புகுந்து
வேர் ஊன்றிய அன்புத் தேன்
தார் எனப் படியக் கருத்திட்டு
நார் போன்று பிணைந்து மனமேந்துங்கள்
சேர்ந்து நம்பிக்கையாய் நெருங்குங்கள்
நீர்க் குமிழி உறவு தேவையற்றதுபூவிதழின் மென்மையாய், கால்நனைய
பூரித்துச் சிதறும் அலைக்குளிர்மையாய்
பூமணல் மென்மையாய், தொலைதூரப்
பூஞ்சிறகுக் குருவியின் கீச்சு மொழியாய்ப்
பூச்சிதறும் மனமிழையும் கணங்களினிமை
பூட்டின்றிப் பூரணையாய் பூரித்தலினிமைமழைத்தூறல் சிறகடிக்க மனம்
மகிழ்ந்து வனமேகிக் கிளைகள் தேடுதலில்
நம்பகமின்றி மனம் மகிழலாம், இலை
ஈரங்களின் இதமான சிலிர்ப்பில் , மூங்கிலிசையில்
ஈரலிப்பற்ற மனிதத்திலும் இயற்கை சிறப்பு
ஈசனுக்கு இணையானதன்றோ இயற்கை -

படக்கவிதைப் போட்டி – 241
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
-

படக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணெய் உண்ண விழையும் கண்ணனைத் தன் படப்பெட்டிக்குள் பதுக்கி வந்திருக்கின்றார் திரு. கோபி சங்கர். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு வழங்கியுள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்றுசேரட்டும்!
பானை வெண்ணெயைத் துழாவும் பச்சிளங் குழந்தையைப் பார்க்கையில்,
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே (புறம் – 188) எனும் பாண்டியன் அறிவுடைநம்பியின் அறிவுசால் பாடலே நெஞ்சில் நிழலாடுகின்றது.தவழும் கண்ணனுக்குத் தமிழ்ப்பா பாடக் காத்திருக்கும் கவிஞர்களுக்கு இனி வாய்ப்பை வழங்குவோம்.
*****
கண்ணன் செய்யும் களவுக் குறும்பையெல்லாம் நிஜவாழ்வில் செய்வோரை யாரும் பாராட்டுவதில்லை. எனவே விளையாட்டுக்கும் வேண்டாம் களவுப் பழக்கம் என்று நல்லுரை நவிலுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
பழக்குங்கள் பண்பை…
வெண்ணெய் திருடும் கண்ணனாக
வேடம திட்டுப் பிள்ளைக்கு,
கண்ணன் வந்தான் வீட்டுக்கென
களிப்பு மிகவே வாழ்த்துகிறோம்,
உண்மையில் திருட வந்தாலோ
உதவாக் கரையென ஒதுக்குகிறோம்,
பண்பை அன்பைப் பழக்கிடுங்கள்
பால வயதிலே பெரியோரே…!*****
மழலையில்லா மங்கை ஒருத்தியின் மனக்குறையையும் அவளை அரக்கமனமும் அநாகரிகமும் படைத்த சுற்றமும் நட்பும் தகாத வார்த்தைகளால் திட்டும் அவலத்தையும் யதார்த்தமாகப் படம் பிடித்துள்ளார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ் இக்கவிதையில்.
வா கண்ணா வா!
உன் வாசல் வந்து வேண்டி நின்றேன்
வறுமை என்று…. வசதி தந்தாய்
என் தனிமை தீர்ந்திட வேண்டி நின்றேன்
துணையோடு வாழ்க்கை தந்தாய்
வீட்டு விளக்கேற்ற வந்தவள்
வாரிசை இன்னும் சுமக்கவில்லை என்று வையும் அத்தை
என்றும் ஏளனமாய்ப் பேசி எள்ளி நகையாடும்
குழந்தைப்பேறு இல்லை என்று
சுற்றமும் நட்பும்
வீட்டில் மழலையாய்
தவழ்ந்து வந்த மருமகனைக்
கண்ணன் வேடமிட்டு அழகு பார்த்தேன்
பானை நிறைய பஞ்சை
பொய்யாய் வெண்ணெய் எனக்
கண்ணா உனக்குப் படையல் வைத்தேன்
என் பிராத்தனைகள் பொய்யில்லை
வெண்ணெய் திருடிய வாயில்
யசோதைக்குச் சுற்றும் உலகைக் காட்டிய
களிப்பூட்டும் கதைகள் சொல்லி மகிழ்ந்திருந்தேன்
வயிற்றில் கரு ஒன்று உருவாகி
மழலைச் செல்வமாய் அது பிறந்து
மலடியெனும் பட்டம் நீக்கி
அன்பை பொழிந்திடும்
அன்னையாய் என்னை மாற்றிட
வா கண்ணா வா*****
மனைமாட்சியின் நன்கலமான மழலையின் வரவை மாதவனிடம் வேண்டும் கவிதையிது. இரசாயன மருந்துகளின் நுகர்வாலே கருவுறுதல் இக்காலத்தில் பிரச்சினை ஆனதோ எனும் கவிஞர் திரு. ராவணா சுந்தரின் வினா சிந்திக்க வைக்கின்றது.
மழலையின் வருகை
கருமை நிறக் கண்ணா
கோகுலத்தின் மைந்தா
லீலைகளின் மன்னா
உன் பொற்பாதம்
குடியானோரின் குடிகளில்
குழந்தையாய்க் குதித்தோடி
நீ விரும்பும் வெண்ணெயை
எங்கள் அனுமதியில்லாது
உன் குறும்புத்தனத்தில்
நீ உண்டு மகிழ
எங்களின் மாயோனே
உன் கருணைக் கடலில்
சிறு துளியளித்துப்
பிள்ளை வரத்தை இந்நாளில்
அருள்வாயா கண்ணா…?
கலியுகப் பெண்களில்
பல பேர் கண்ணீரில் கலங்குவதேனோ?
விண்ணைமுட்டும் விஞ்ஞானமிருந்தும்
தாய்மை மரித்துப்போனதேனோ?
இரசாயன மருந்துகளின் ஊடுருவல்
கருவுறுதலைக் குறைத்ததோ?
குறைதீர்க்கும் கண்ணா
எங்கள் எல்லோர் குலங்களையும்
தழைக்க வழிசெய்வாயாக!*****
குழந்தையை வைத்துக் குவலயத்துக்கு நீதியையும் பல சேதியையும் சொல்லியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருப்பது….
எதிர்காலப் பொங்கல்!
விளை நிலங்கள் தமையெல்லாம்
விலை கொடுத்து வாங்கி,
வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
வித்தகரின் கூட்டம்!சோறு போடும் நிலங்களையே
கூறுபோட்டுப் பார்த்து – எரி
வேதிப்பொருள் தேடத் தினம்
விழைந்திடுமோர் அரசு!பாடுபட்டு உழைத்துச் செங்கதிர்
பயிர்வளர்த்து வந்த மண்ணில் – வேறு
நாட்டதனின் கூட்டம் தினம்
செய்யும் பல ஆய்வு!நிலைதிருத்தி விதிமாற்ற
வழியேதும் எண்ணிடாமல்
வெள்ளித்திரை வழியே தலைவனைத்
தேடும் மக்கள் கூட்டம்!மகிழ்ச்சி கொண்டு குடும்பத்துடன் கொண்டாடக்
கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றி
நெகிழிப் பானையில் பஞ்சுப் பொங்கல் வைத்து
கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!சோறுபோடும் விளைநிலங்களையெல்லாம் கூறுபோட்டு விலை நிலங்களாக்கி விற்றுவிட்டு, வெள்ளித்திரையில் தலைவனைத் தேடும் மக்கள் சமூகத்தின் எதிர்காலப் பொங்கல் இவ்வாறு நெகிழிப்பானையில் வைக்கப்படும் பஞ்சுப் பொங்கலாகத்தான் இருக்கும் என்று நெஞ்சுவெந்து பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
-
தமிழர் திருநாள் வாழ்த்து!
ஏறன் சிவா
வீடெலாம் தோரணங்கள்!வியத்தகு கோலம் கொள்ள!மாடெலாம் அணிகள் பூண்டுமகிழ்ச்சியில் எம்பித் துள்ளக்காடெலாம் கழனி எல்லாம்காய்,கனி குலுங்கித் தள்ளப்பாடலாம் வாரீர் என்றேபைந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!ஏடெலாம் இழந்த தாலேஇழந்தநம் சிறப்பை மீட்கக்,கூடலாம்! புதிதாய்ச் செம்மைக்கொள்கைகள் வகுத்து இந்தநாடெலாம் அறிஞர் கூட்டிநம்முடை வேரின் ஆழம்தேடலாம்! வாரீர் என்றேதீந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!கலைபல வளர்ப்ப தற்குக்கலைமன்றம் செய்வோம்! வீழ்ந்தநிலைதனை உயர்த்து தற்குநெறிமுறை வகுப்போம்! நம்மின்தலைமுறை வாழு தற்குத்தமிழ்முறை செய்வோம் என்றேதலைதனைத் தாழ்த்திச் சொல்வோம்தமிழரின் திருநாள் வாழ்த்தை!பழித்திரை போக்கு தற்குப்பல்துறை அறிவு வேண்டும்!விழித்திரை போக்கு தற்குவிழிப்புடன் வாழ வேண்டும்!வழித்திரை போக்கு தற்குவல்லமை பெறவும் வேண்டும்!மொழித்திரை போக்க மூச்சைமொழியுடன் கலக்கச் சொல்வோம்! -

உழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
தைத்திங்கள் பிறக்கிறது
தைப்பொங்கல் வருகிறது
தை, தை எனக் குதித்து
‘தை’ மகளை வரவேற்போம்.உலகோர் பசி தீர்க்க
உழைக்கின்ற உழவர்க்கு
உற்சாகம் தருகின்ற
உன்னத விழாவன்றோ!ஏரோட்டி, சால் அமைத்து
நீர் பாய்ச்சி, நாற்றுநட்டு,
களையெடுத்து, எரு இட்டு,
தலையெடுத்த பயிரை
அறுவடை செய்தடுக்கி,
அறுவடை முடித்த வயலில்
புத்தடுப்பு தானமைத்து
புதுப்பானைப் பொங்கலிட்டு
புத்தாடை தானுடுத்து
பொங்கிவரும் பால்கண்டு
பொங்கலோ பொங்கலெனக்
குலவையிட்டுக் கொண்டாடி,
ஆதவனைக் கும்பிட்டு
ஆவினத்தைச் சீராட்டி ,
நன்றி நவிலும் நாளே
பொங்கல் எனும் நன்னாள் – இது .
உழவர்களின் திருநாள் .ஊரார் பசிதீர்க்கும்
உழவர்தம் துயர்தீர்க்க
உரிய விலைகொடுத்து
உயர்த்திடுவோம் அவர்நிலையை .இடைத்தரகர் எனும்
ஈனப்பிறவிகளின்
கொட்டத்தைத் தானடக்கி
கொள்ளையைத் தடுத்திடுவோம்.நீர்நிலைகள் புனரமைத்து
நீர்வளம் பெருக்கிப் பயிர்
வீணாகும் நிலையை
விரைந்து சரிசெய்வோம் .
இயற்கைப் பேரிடரால்
இன்னல் விளைந்தக்கால்
நம் கை கொடுத்து அவர்க்கு
நம்பிக்கை அளித்திடுவோம் .வில்லேருழவர்க்கும்,
சொல்லேருழவர்க்கும்,
எல்லோர் வயிற்றுக்கும்
நல்லேர்தான் ஆதாரம்.உழவுக்கும் உழவர்க்கும்
உழைப்புக்கும் வந்தனம். -

மங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
முன்னாள் தமிழ்மொழி கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா.“தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். புலம் பெயர்ந்த நாட்டினில் வாழுகின்ற எங்களின் பிள்ளைகளுக்கு இந்த மொழியின் அர்த்தம் என்னவென்று தெரியவே மாட்டாது. அவர்கள் தையைப் பற்றியோ அல்லது தையில் வருகின்ற பொங்கலைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதே இல்லை. வயது வந்தவர்களான நாங்கள்தான் வருஷா வருஷம் தவறாமல் பொங்கலைப் பொங்கி வருகின்றோம். நாங்கள் பொங்கலைப் பொங்கி மகிழ்வது முக்கியம் தான். அதே வேளை எங்களின் பிள்ளைகளுக்கும் பொங்கலைப் பற்றி நாங்கள் தெளிவு படுத்துதலும் முக்கியமானது என்பதை நாங்கள் அனைவரும் மனத்தில் இருத்துவது மிகவும் அவசிய மானதே.
புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அங்குள்ள சூழலுக்கு ஏற்பவே தங்களை மாற்றிக்கொள்ளுகிறார்கள். அவ்வாறு மாறும் வேளை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவில் மாறலாம். உடையில் மாறலாம். உழைப்பில் மாறலாம். ஆனால் உள்ளத்தில் தங்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய எண்ணங்களை மட்டும் மாற்றாமல் அவர்கள் இருப்பதுதான் மிகவும் முக்கியமாகும். பண்பாடு, கலாசாரம், இவற்றினை உணர்த்துபவையே எங்களின் விழாக்களும் கொண்டாட்டங்களும். பண்பாட்டினை நிலைநிறுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக அமைவதுதான் “தைப்பொங்கல்” எனலாம்.
தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம்? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன? இவையெல்லாம் புலம் பெயர்ந்த நாட்டில் வாழுகின்ற எங்கள் பிள்ளைகளுக்குச் சரிவரத் தெரியாது. நாங்களும் அதைப்பற்றி விளக்கிச் சொல்லுவதும் கிடையாது. பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும்.
உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள், உழைப்புக்கு உதவிடும் கருவிகள் கவனத்தில் கொள்ளபடுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்று எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலகிலே உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது என்பதை எங்கள் பிள்ளைகளின் மனதில் இருத்துவதும் முக்கியமான பொறுப்பாகும். இவையாவும் தைப்பொங்கலுடன் இணைகின்றன என்பதுதான் இங்கு சுட்டப்பட வேண்டிய அவசியமான அம்சம் எனலாம்.
விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம் கொண்டு வருகின்ற பொருட்களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப்படுகின்றன. விவசாயத்தைச் செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா என்பதை நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
நகரத்தில், புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் செய்யப்படும் விவசாயமோ, அதன் முறைகளோ, அங்கு விலங்குகள் விவசாயத்துக்கு உதவும் விதமோ, விவசாயத்துக்குப் பயன் படுத்தப்படும் ஏர் போன்ற கருவிகளோ தெரிவதற்கு உரிய வாய்ப்பு இல்லைதான். அவர்களுக்கு அவற்றினைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கும் பொழுதுதான் தைப்பொங்கலின் போது செய்யப்படும் மரபார்ந்த விஷயங்களை அவர்களின் மனத்தில் பதியச் செய்யக் கூடியதாக இருக்கும்.
தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து, மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து, குடும்பத்தில் உள்ளவர்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாதது.
கலப்படம் இல்லாமல் யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவை தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை என்பதை எங்களின் பிள்ளைகளை உணரச் செய்யவேண்டும்.
கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக்கொள்ளலாம். வருடத்தின் தொடக்கமாய் வரும் தையினை மங்கலகரமாக வரவேற்க வேண்டுமென்று எண்ணிப் பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனத்தில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழ வைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா?
பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்துப் பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனத்திலுள்ள பொறாமை வஞ்சகம், பொய், கபடு, சூது, வாது, இவற்றையெல்லாம் ஞானம் என்னும் தீயில் பொசுக்கி மனத்தைத் தூய்மை ஆக்கி, புத்தாடை உடுத்து, புதுப்பொங்கலைச் சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாத்பரியம் எனலாம்.
பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை, ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.
மாட்டுப் பொங்கல், போகித் திருநாள், காணும் பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரத்தில் வாழ்கின்றவர்களுக்கோ, புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி, தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைத்தான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடியிருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரிதாபமாகவே இருக்கும்.
உழைப்பினை மையமாக்கி, தொழிலினை மையமாக்கி, அந்தஸ்தினை மையமாக்கி அன்னிய நாட்டினில் வாழும் எங்கள் தமிழர்களின் தைப்பொங்கல் சற்று சறுக்கிய தைப்பொங்கலாகவே அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. சொந்த ஊரினில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும் குடியேறிய அன்னிய நாட்டில் தைப்பொங்கல் கொண்டாடுவதற்கும் வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதில் தமிழர்கள் பின்னிற்கவில்லை என நினைக்கையில் பெருமிதம் கொள்ளத்தான் வேண்டும்.
சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறிஸ்தவராயினும், இந்துக்களாயினும், தைப்பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமயச் சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய் தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா!
நன்றி நவிலும் விழா! உழைப்பாளரின் உன்னத விழா! கூட்டுறவின் விழா! மதபேதமற்ற மகோன்னத விழா! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள் !
-

தைப் பொங்கல் வைப்போம்!
சி. ஜெயபாரதன், கனடாபொங்கல் வைப்போம்
புத்தரிசிப்
பொங்கல் வைப்போம்
சர்க்கரைப்
பொங்கல் வைப்போம்
வீட்டு வாசலில்
மாட்டுப்
பொங்கல் வைப்போம்
முன் வாசலில்
கோலமிட்டு, பெண்டிர்
கும்மி அடித்து
செங்கரும்புப் பந்தலிட்டு
சீராய்த் தோரணம் கட்டிப்பால் பொங்கல் வைப்போம் !
புத்தாடை அணிந்து
பூரிப்போடு
பொங்கல் வைப்போம்.
பொழுது புலர்ந்ததும்
வெய்யோன் விழித்ததும்
வெண்பொங்கல் வைப்போம்.
கூட்டாகத் தமிழர்
கொண்டாடும் அறுவடைத் திருவிழா
கோலகலமாகப்
பொங்கலோ பொங்கல் என்று
மங்கையர் பாடிக்
கோலடித்து
பொங்கல் வைப்போம்.
தைப் பொங்கல் வைப்போம். -

குழவி மருங்கினும் கிழவதாகும்-14
மீனாட்சி பாலகணேஷ்
(மொழி பயிலல்)
பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.
இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.
‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
………………………………………….
பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.
சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.
மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.
இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின் சிறப்பையுமே நோக்கலாம்.
முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!
துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).
முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.
இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
யற்றின்ப வெள்ளமே!
…………………………………………………………………..
பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
பாலின்வெள் ளைக்குநடுவட்
படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
பகர்மொழிப கர்ந்தவாற்றை
……………………………………………………………………………….
வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
கத்தலர வாய்மலர்கவே2!மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:
‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.
‘குறிய மதத்த ரறமெம்பாற்
கூறக் கேட்ட செவிப்புண்ணும்
………………. கதிரமலை
யழகே! யமிழ்தம் பொழிகவே!
யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
லமிழ்தம் பொழிக பொழிகவே3!’என்பன பாடல்வரிகள்.
அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.
மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)
புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).
உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.
மலரவ னான்மறை யோதக் கல்லான்
மரநிழ லமர்தென்னன்
வாய்மையை நால்வர்க் கோத……
……………………………………………………………….
உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
உரலிடை யாப்புண்டோ
னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
உலர்மர முங்குழைய
வலரன செந்நா வரசைய ழைத்தா
யஃதெங் கனமருளே4
………………………………………………………………..மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
(வளரும்)பார்வை நூல்கள்:
1. பிங்கல நிகண்டு
2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர் -

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 6
தி. இரா. மீனா
அக்கம்மா
அக்கம்மா ஏலேஸ்வரத்தில் [ஏலேரி] பிறந்து கல்யாணில் ஐக்கியமானவர். இராமலிங்கேஸ்வர லிங்கா இவரது அடையாளம். வசன எண்ணிகையைப் பொறுத்த வரையில் அக்கமகாதேவி, நீலம்மா ஆகிய இருவருக்கும் அடுத்தபடியாக அதிக அளவு வசனங்களைப் படைத்தவர். நோன்பு முறைகள், முன்னோர் மரபு ஆகியவற்றை முதன்மையாக வைத்தே இவரது வசனங்கள் அமைகின்றன. மக்களின் பழக்க வழக்கம், வாழ்க்கை நம்பிக்கைகள் ஆகியவையும் வசனங்களினூடே வெளிப்படுகின்றன. அது அக்காலச் சமுதாய நிலையை அறிய உதவுகின்றது.
1. “குருவாயிருப்பனும் ஒழுக்கமற்றவரை பின்பற்ற முடியாது
இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு மாறானால் பின்பற்ற
முடியாது
ஜங்கமனாயினும் ஆசாரமில்லையெனில் போற்ற முடியாது
ஒழுக்கமே சாரம்
விரதமே உயிர்
செயலே அறிவு
அறிவே பொருள்
ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”2. “பக்தனுக்கு ஆசையுண்டா?
சிரஞ்சீவிக்கு இறப்புண்டா?
அடியவர்க்குப் பொய் உண்டா?
கர்த்தன் சேவகனாகும்போது செயல் மறுத்தல் ஒழுக்கமாகுமா?
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் ஆணை.”3. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவனில்லை
வாளுக்கு அஞ்சும் வரையில் வீரனில்லை
மூவகை உடலுள்ளவரையில் இலிங்க அங்கமுடையவனில்லை
பழிக்கு உயிர் விடவில்லையெனில் ஒழுக்கமுடையோனில்லை
இத்தகையவனுக்கு அச்சமெதுவுமில்லை
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”அஜகண்ண தந்தே
பெண் வசனக்காரான முக்தாயக்காவின் சகோதரன் அஜகண்ண தந்தே. லக்குண்டியிலுள்ள சோமேஸ்வரர் இவனது அடையாளம். இஷ்ட இலிங்கத்தை வாயில் வைத்துக் கொண்டு சிவனை வழிபட்டவன். உணர்வுகள் மூலமாக இறைவனை வழிபடுவதென்பது இவனது பாவனை. ஐக்கியஸ்தலத்தின் பிரதிநிதியென்று வசனகாரர்கள் இவனைக் குறிப்பிடுகின்றனர். குருவின் பண்பு, சரணரின் தனித்துவம் ஆகியவற்றை இவன் வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.
“சூரியனைக் கண்ட இருள் போலானது என் குருவின் சொற்கள்
காற்றின் கரத்திலுள்ள தீபம் போலானது என் குருவின் சொற்கள்
நெருப்பின்முகமான கற்பூரம் போலானது என்குருவின் சொற்கள்
மஹாகன சௌராஸ்டிரசோமேஸ்வரன் என் கரத்திற்கு
வந்ததால் தீமைகள் என்னை விட்டகன்றன.”அக்கநாகம்மா:
நாகம்மா, அக்கநாகம்மா, நாகலாம்பிகே என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் பசவேசரின் சகோதரி. பாகேவாடியிலுள்ள இங்களேஸ்வராவில் பிறந்தவர். கல்யாண் நகரின் மகாமனையிலும், அனுபவ மண்டபத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர். ’பசவண்ண பிரிய சென்ன சங்கையா ’ இவரது அடையாளம். கல்யாண் நகரில் புரட்சி வெடிக்கும் போது சரணர் பிரிவிற்குத் தலைமையேற்று உளுவி என்னுமிடத்திற்குச் சென்றவர். பிஜ்ஜள சிப்பாய்களுடன் போராடி வசன சாகித்யத்தைக் காப்பாற்றியவர்.
’மனத்தின் தலைவன் மகாதேவனின் மனதைக் கண்டேனென
ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொள்வேன்
இதனால் மனமே கலங்காதே உடலே நீ பதறாதே
உண்மையை மறவாதிருத்தல் வேண்டும்
மலை போன்ற குற்றங்களையும்
பசவண்ணப் பிரிய செங்கைய்யன்
விரலொன்றால் நீக்குவான்.”அல்லமாபிரபு
அல்லமாபிரபு கர்நாடக மாநிலம். சிமோகா மாவட்டம், பனவாசி அருகேயுள்ள பெல்லகாவி கிராமத்தில் சுஜ்னனி—நிரசங்கரா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். சிவபெருமானருளால் பிறந்த மகனுக்கு பெற்றோரிட்ட பெயர் பிரபுவாகும். நடன ஆசிரியரான தந்தையின் கலையுணர்வு அழகும் அறிவும் நிறைந்தவராக விளங்கிய பிரபு வையும் ஆட்கொண்டது. அதனால் கோயிலில் முரசு இசைக்கும் பணியை மேற்கொண்டார். கமலாத்தே என்ற பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவே பிறந்தவர்கள் என்பது போல் இணைபிரியாமல் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். திடீரென கமலாத்தே கடும்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனாள். அவள் இல்லாத வாழ்வு அல்லமா பிரபுவுக்கு வெறுமையானது. தன்னை மறந்து பித்துப்பிடித்தவராக காடுமேடுகளில் அலைந்தார். ஒரு நாள் காட்டில் உட்கார்ந்திருந்த போது மேடு போன்ற மண்குவியலைச் சாதாரணமாக சுரண்டியபோது புதுமையான ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தை மேலும் தோண்டும் போது மூடிய கதவு போன்ற அமைப்பு தெரிந்தது. அதை வேகத்தோடு உதைக்க கதவு திறந்தது. உள்ளே ஒரு யோகி தன் கையில் இருக்கும் இலிங்கத்தை பார்த்தபடி இருந்தார். அல்லமாபிரபு அவரைக் கண்டு வியந்து நின்றபோது அவர் கையில் உள்ள இலிங்கத்தை பிரபுவிடம் தந்துவிட்டுச் சாய்ந்தார். அந்தக் கணத்தில் அல்ல மாபிரபுவின் எண்ணமும், செயல்பாடுகளும் முழுவதும் மாறிவிட்டன. ஞானம் பெற்றவர் போலானார். அதையடுத்து இறையருளால் பல இடங்களுக்கும் சென்றார். அறிவின் சிறப்பும், கருத்துறுதியும், மெய்ஞ் ஞானமும் அவரை மிகச்சிறந்த குருவாக்கியது. வீரசைவத்தின் கொள்கைகளை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பசவேசரால் உருவாக்கப்பட்ட அனுபவ மண்டபத்தின் குருவாக அல்லமாபிரபு விளங்கினார். அக்கமாதேவியை எல்லோரின் முன்பாகவும் பல விதமான கேள்விகளைக்கேட்டு அவள் அறிவுக் கூர்மையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியவர். ஸ்ரீசைலத்தின் கதளிவனம் சென்று இறைவனுடன் பிரபு கலந்ததாக அவர் வரலாறு அமைகிறது. குகேஸ்வரன் என்பது சிவனின் யோகப் பெருமையை விளக்கும் பெயராக அமைவதால் ’குகேஸ்வரா’ என்பது அவரது வசனங்களின் முத்திரையாகிறது. இறைவனோடு இணைவதும், உணர்வதுமான பாவனையிலேயே அவருடைய வசனங்கள் அமைகின்றன.
1. “மலைகள் குளிரில் நடுங்குமானால்
எதை வைத்து அவைகளைப் போர்த்த முடியும்?
விண்வெளியே நிர்வாணமானால்
எதை அதற்கு ஆடையாக்க முடியும்?
கடவுளின் மனிதர்கள் உலகப்பற்று உடையவர்களானால்
நான் உருவகத்தை எங்கே தேடுவது?
ஓ குகேஸ்வரா”2.“இந்த உடலில்
முழு ஆலயம் உள்ளபோது
வேறு எங்கோஅதைத் தேட
என்ன தேவை?
யாரும் இரண்டைக் கேட்பதில்லை
ஓ குகேஸ்வரா..
நீ கல்லென்றால் நான் என்ன?3.“ஓடும் ஆறுகள் எல்லாம் கால்கள்
எரியும் நெருப்பு எல்லாம் வாய்கள்
வீசும் காற்று எல்லாம் கைகள்
ஓ குகேஸ்வரா
உன் மனிதர்களுக்கு
ஒவ்வொரு அவயமும் அடையாளம்தான்”.4.“இங்கே பார் கால்கள் இரு சக்கர வண்டி
உடல் ஒரு பாரவண்டி
ஐவர் அதை இயக்குகின்றனர்
ஒருவரைப் போல் ஒருவரில்லை
முழுச்சிந்தனையோடு இயக்காவிட்டால்
அச்சுமுறிந்துவிடும் குகேஸ்வரா!”5.“ என்ன விந்தை
தேனி வந்தபோது மணம் தப்பியோடியதைப் பார்த்தேன்
மனம் வந்தவுடன் அறிவு தப்பியோடியதைப் பார்த்தேன்
கடவுள் வந்தபோது கோவில் ஓடுவதைப் பார்த்தேன்
ஓ..குகேஸ்வரா! “6. “குயில் எங்கே மாமரம் எங்கே?
எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
மலை நெல்லி எங்கே கடலின் உப்பெங்கே?
எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
எப்போது நான்
குகேஸ்வரனின் உறவினனானேன் ?”7. “நான் ஒன்றென நினைத்தால்
அது இரண்டாகத் தெரிகிறது
நான் இரண்டென நினைத்தால்
அது ஒன்றாகத் தெரிகிறது
இது என்ன மாயை?
ஒன்று மற்றும் இரண்டின் பொருளென்ன?
பிரிக்க முடியாத இணைவுக்கு
அருளான உலகம் இன்றியமையாதது.
ஓ.. குகேஸ்வரா! “8. “தீயாக மழை பெய்யுமானால்
நீ தண்ணீராக இருக்கவேண்டும்
பெருமழைப் பிரளயம் என்றால்
நீ காற்றாக இருக்கவேண்டும்
மிதமிஞ்சிய வெள்ளமெனில்
நீ வானமாக இருக்கவேண்டும்
உலகங்களின்’ ஊழி’வெள்ளமெனில்
நீ ’உன்னை’ விட்டு கடவுளாக வேண்டும்
ஓ..குகேஸ்வரா!”9. “எத்தனை முயன்றும் எத்தனை தேடினாலும்
அவர்களால் கண்ணாடியில்
மனப்படிமத்தைப் பார்க்கமுடியாது.
புருவங்களின் இடையே
வட்டத்தில் அது சுடராகிறது
யாருக்குத் தெரியும்
இதுதான் கடவுளென்று?
ஓ..குகேஸ்வரா!”10. “அறிந்தோம் அறிந்தோமென்பீர் அறிந்தவிதம் சொல்வீரோ?
அறிந்தவர்கள் அறிந்தோம் என்பாரோ?
அறிய முடியாத மேன்மையை அறிந்தவர்
அறியாதவர் போலிருப்பர் குகேஸ்வரா!”11. ’அனைத்தும் கண்டு தன்னைக் காணாதவன் குருடன்
அனைத்தும் கேட்டு தன் குரல் கேளாதவன் செவிடன்
அனைத்தும் பேசி தன்னைப் பேசாதவன் ஊமை
உண்மையோடு தன்னைத் தான் காணவேண்டும்
உண்மையோடு தன்னுள்ளே தான் கேட்க வேண்டும்
உண்மையோடு தன்னுள்ளே தான் பேசவேண்டும்
இதுவே தன் நிலையாம் ,இருப்பிடமாம் உருவாம்
பாராய் குகேஸ்வரா!”12. “மாயையின் தலையைக் களையாத வரையில்
உடலின் கவலையை வென்றென்ன?
ஞானத்தின் நிலையை அறியாத வரையில்
மாயையின் தலையை வெட்டியென்ன?
தான் தானாகாத வரையில்
ஞானத்தின் நிலையை அறிந்தென்ன?
தானே தானேயான அடியானின் நிலைக்கு
எந்தக் கட்டுப்பாடுமில்லை குகேஸ்வரா!”13. “உடலுள் கோயிலிருக்க
வேறொரு கோயிலெதற்கு?
இரண்டெனும் பேச்சுக்கிடமில்லை
குகேஸ்வரா,நீங்கள் கல்லெனின்
என் நிலையென்ன?”14. “நான் தெய்வமன்றி நீ தெய்வமா?
நீ தெய்வமெனில் எனையேன் புரக்கவில்லை?
ஒரு மிடறு நீர் கொடுப்பேன் அன்பாய்
பசித்தால் ஒரு கவளம் படையலிடுவேன்,
தெய்வம் நான் காணாய் குகேஸ்வரா!”15. “பாத்திரத்திலுள்ள வெண்ணெயைச் சூடுபடுத்த
கரைந்தது பாத்திரம் மிஞ்சியது வெண்ணெய்
வண்டிருந்தது மணமில்லை; மணமிருந்தது வண்டில்லை
இருந்தான் அவன் இல்லை அவனுருவம்
இருந்தான் குகையீசன் அங்கே இலிங்கமில்லை.”பெரிய ஞானி என்றே தன் சமகாலத்தவர்களால் போற்றப்படும் அவருக்கு அல்லமா, அல்லையா, பிரபுதேவர் என்று பல பெயர்கள் உண்டு. கன்னட பக்தி உலகம் பசவேசரை அண்ணனாகவும் [பசவண்ணா], அக்கமகாதேவியை அக்காவாகவும் [அக்கா என்றே சொல்லுதல்] அல்லமாபிரபுவை [பிரபு தேவரு] பிரபுவாகவும் காண்கிறது. இலிங்காயத்துவத்தின் மும்மூர்த்திகளாக அல்லமாபிரபு, பசவேசர், அக்கமாதேவி ஆகியோர் போற்றப்படுகின்றனர்.
(தொடரும்)
-

சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்சிவனடியார்களுடன் சேரும் திருவருள் எப்போது கிட்டுமோ என்றெண்ணி திருக்கோயில் வாயிலை அடைந்தார். அவர் முன்னே எதிரே காட்சியளித்த சிவபிரானின் திருவடிகளைக் கண்டமையால் பெற்ற ஞானத்தால், திருவடிப் புகழ்ச்சியை நான்கு திருப்பாடல்களில் பாடி மகிழ்ந்தார். அப்போது சிவபிரான் அடியார்களின் தன்மையைச் சுந்தரருக்கு உணர்த்தியருளினார்.
அடியார்களின் எழுவகைச் சிறப்புக்களை ஆண்டவனே உணர்த்திய அழகை இத்திருப்பாடல் வழங்குகிறது. இப்பாடலில்,
1. “பெருமையினாலே தமக்குத் தாமே ஒப்பாவார்கள்;
2. பேணுதல் தன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப் பெற்றார்கள்;
3. எம்மோடு ஒன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை வெல்வார்;
4. அதனால் மேலே வரக்கடவன வாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்;
5. பிறர் எவரும் நிற்றற்கு அரிய நிலையிலே நின்றவர்கள்;
6. அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்;
7. இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்இத்தகையினராகிய இந்த அடியவர்களை நீ சேர்வாயாக“ என்று,இறைவன் கூறியருளுகின்றார்.
விளக்கம்: பிறர் யாரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தவர்கள் என்பதே இவர்களின் பெருமையாகும். இதனைத் திருவள்ளுவர், ‘’செயற்கரிய செய்வார் பெரியர்‘’ என்று போற்றுகின்றார். இப்பெருமை எய்தற்கு அரியது. இதனை எய்திய அடியார்களைப் பற்றித் திருக்களிற்றுப் படியார் என்ற சாத்திர நூல்,
‘’செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள்’’என்று கூறுகின்றது. பசித்து வருந்திய எல்லா உயிர்களுக்கும், தாம் வருந்தாமல் பெரிய அளவில் உணவு வழங்கி உதவுதலே பெருமையாகும்.
பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம் அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், “பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய அளவில், எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும், இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே,
“பூதமைந்தும் நிலையில் கலங்கினும்,
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை பின்னர் ஒவ்வொரு வரலாற்றிலும் காண்க.
தம்மை ஒப்பார் – தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர் இவருக்கு இணையாகார். “தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்த அடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வொரு நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.
பேணலால் எம்மைப் பெற்றார் – பேணுதல் – குழவியைத் தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார் புராணம் காண்க. பசிக்குமே என்றெண்ணி இறைவனுக்கே உணவூட்டியவர் கண்ணப்பர். எம்மைப் பெறுதலாவது – எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் – நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க. பேணுதல் – உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி ‘ என்ற திருக்குறள் உரையில் காண்க!
ஒருமையால் உலகை வெல்வார் – ஒருமை உணர்ச்சியினால் இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்துள்ளார்.
ஊனம் மேல் ஒன்றுமில்லார் – ஊனம் – குறித்ததொன் றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும் அது. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனம் என்றெண்ணும்போது, ஏனை ஊனங்கள் உடம்பில் ஒடுங்குவன. உடம்பெடுத்தலே – பிறவியே – ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.
அருமையாம் நிலை – பிறரால் அடைதற்கரிய நிலை.
அன்பினால் இன்பம் ஆழ்வார் – அன்பு காரணமாக இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“, “இறவாத வின்ப அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்களால் புலப்படும்.
இருமையும் கடந்து நின்றார் – இருமை – இம்மை மறுமை என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்“. என்ற வாக்குகள் இதனை உணர்த்தும்.
“நின், திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலுந் திருவும்
பொருளென நினையா துஉ ன்னரு ளினைநினைந்து
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுக்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடு ஒன்று உதவுழி எடுத்தாங்கு
இடுவோர் உளரெனின் நிலையில் நின் றயின்று
படுதரைப் பாயலில் பள்ளி மேவி ஓவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நின்
தெய்வக் கடவுள் தொண்டர்“என்று திருவிடை மருதூர் மும்மணிக் கோவை கூறுகிறது.bஇத்தகைய திருவாக்குகளிற் கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும் காண்க.
இருமை – “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர் இருமை யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை – எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த பேராவியற்கை பெற்றார் என்பதை அறிக.
“பெத்தத்தும் தன்பணி யில்லை பிறத்தலான்
முத்தத்தும் தன்பணி யில்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“என்ற திருமூலர் திருமந்திரக் கருத்தினைக்கொண்டு இவர் நிலையினை இவ்வாறு உரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம்.
“வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க. இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும், பிறப்பிறப்புக் களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.
இவரை – அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.
அடைதல் – அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். ஆகவே அடியார்களை ஆண்டவனோடு ஒருங்கு வைத்துப் போற்றும் சேக்கிழாரின் வாக்குச் சிறப்பை எண்ணி எண்ணி, மகிழ்கிறோம்! இனி மீண்டும் பாடலைப் படித்துப் பயில்வோம் .
பெருமையால் தம்மை ஒப்பார் ; பேணலால் எம்மைப் பெற்றார்;
ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்;
அருமை ஆம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;
சிறுமையும் கடந்து நின்றார் , இவரை நீ அடைவாய்!’’ என்றார்!இப்பாடலால், இறைவன் நமக்கும் அடியாரை அடையும் தேவையை வலியுறுத்துகிறார்!






