நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101
நாங்குநேரி வாசஸ்ரீ
101. நன்றியில் செல்வம்
குறள் 1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
வேணுமட்டும் வீடுமுழுக்க செல்வத்தச் சேத்த பொறவு அத வச்சி சாப்புட்டு சந்தோசமா அனுவிக்காம ஒருத்தன் செத்தாம்னா சேத்த செல்வத்தால என்ன பிரயோசனம்?
குறள் 1002
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
யாருக்கும் என்னமும் கொடுக்காம தங்கிட்ட இருக்க பொருளால எல்லாம் ஆவும்னு நெனைச்சி அத விடாம புடிச்சிக்கிட்டு இருக்கவனுக்கு சிறப்பில்லாத தாழ்ச்சியான பொறப்பு உண்டாவும்.
குறள் 1003
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
மத்தவனவிட அதிகமா சொத்து சேக்கணும்னு நெனச்சி அதையே குறியா வச்சி புகழ விரும்பாம இருக்கவனோட பொறப்பு இந்த பூமிக்கு பாரம்.
குறள் 1004
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
மத்தவுகளுக்கு ஒதவி செய்யாத காரணத்தால யாருக்கும் பிடிக்காம இருக்கவன் செத்த பொறவு மிஞ்சி நிக்கப்போவுதுனு எத நெனைச்சிக்கிடுவானோ?
குறள் 1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்
மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவி தானும் தேவப்படும்போது அனுவிச்சிக்கிட்டு இல்லாம இருக்கவன் கிட்ட கோடி கோடியா செல்வம் குவிஞ்சிச்சின்னாலும் பிரயோசனம் இல்ல.
குறள் 1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
தானும் அனுவிக்காம பொறத்தியாருக்கும் கொடுக்காம வாழுதவன் தான்கிட்ட இருக்க பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவான்.
குறள் 1007
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
ஏழபாழைக்கு கொடுத்து ஒதவாத செல்வம் அழகி ஒருத்தி கலியாணம் முடிக்காம தனிச்சு நின்னு கிழவி ஆயிட்டதுக்குச் சமானம்.
குறள் 1008
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
எல்லாராலையும் வெறுக்கப்படுதவனுடைய சொத்து ஊருக்கு நடுவுல பழுத்துக் குலுங்குத வெசமரத்தோட பழத்துக்குச் சமானமாவும்.
குறள் 1009
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
அறவே நேசமில்லாம தன்னையும் வருத்திக்கிட்டு சத்தியத்துக்குப் பொறம்பா சேக்குத சொத்த கொள்ளயடிச்சு மத்தவுகதான் அனுபவிப்பாக.
குறள் 1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து
மத்தவுகளுக்கு கொடுத்து புகழோட இருக்க பணக்காரவுக கொஞ்ச காலம் வறுமைப்பட்டாகன்னா அது ஒலகத்தக் காக்குத மழையத் தருத மேகம் வறுமைப்பட்டதுக்கு சமானமாவும்.