சேக்கிழார் பா நயம்தொடர்கள்

சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

திருச்சி  புலவர் இராமமூர்த்தி

திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்சிவனடியார்களுடன் சேரும் திருவருள் எப்போது கிட்டுமோ என்றெண்ணி திருக்கோயில் வாயிலை அடைந்தார். அவர் முன்னே எதிரே காட்சியளித்த சிவபிரானின்  திருவடிகளைக் கண்டமையால் பெற்ற ஞானத்தால், திருவடிப் புகழ்ச்சியை நான்கு திருப்பாடல்களில் பாடி மகிழ்ந்தார். அப்போது சிவபிரான் அடியார்களின் தன்மையைச் சுந்தரருக்கு  உணர்த்தியருளினார்.

அடியார்களின் எழுவகைச் சிறப்புக்களை ஆண்டவனே உணர்த்திய அழகை இத்திருப்பாடல் வழங்குகிறது. இப்பாடலில்,

1. “பெருமையினாலே தமக்குத்  தாமே ஒப்பாவார்கள்;
2. பேணுதல் தன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப் பெற்றார்கள்;
3. எம்மோடு  ஒன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை வெல்வார்;
4. அதனால் மேலே  வரக்கடவன  வாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்;
5. பிறர் எவரும் நிற்றற்கு   அரிய நிலையிலே நின்றவர்கள்;
6. அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்;
7. இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்

இத்தகையினராகிய இந்த அடியவர்களை நீ சேர்வாயாக“ என்று,இறைவன்  கூறியருளுகின்றார்.

விளக்கம்: பிறர் யாரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தவர்கள் என்பதே இவர்களின் பெருமையாகும். இதனைத் திருவள்ளுவர், ‘’செயற்கரிய செய்வார் பெரியர்‘’ என்று போற்றுகின்றார். இப்பெருமை எய்தற்கு அரியது. இதனை எய்திய அடியார்களைப் பற்றித் திருக்களிற்றுப் படியார் என்ற சாத்திர நூல்,

‘’செய்தற்   கரிய  செயல்பலவும்   செய்துசிலர்
எய்தற்    கரியதனை   எய்தினர்கள்’’

என்று கூறுகின்றது. பசித்து வருந்திய எல்லா உயிர்களுக்கும், தாம் வருந்தாமல் பெரிய அளவில் உணவு வழங்கி உதவுதலே பெருமையாகும்.

பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம் அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், “பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய அளவில்,  எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும், இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே,

“பூதமைந்தும்  நிலையில்   கலங்கினும்,
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“

என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை பின்னர் ஒவ்வொரு  வரலாற்றிலும்  காண்க.

தம்மை ஒப்பார் – தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர் இவருக்கு  இணையாகார். “தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்த அடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வொரு  நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.

பேணலால் எம்மைப் பெற்றார் – பேணுதல் – குழவியைத் தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார் புராணம் காண்க. பசிக்குமே  என்றெண்ணி இறைவனுக்கே உணவூட்டியவர் கண்ணப்பர். எம்மைப் பெறுதலாவது – எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் – நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க. பேணுதல் – உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி ‘ என்ற திருக்குறள்  உரையில் காண்க!

ஒருமையால் உலகை வெல்வார் – ஒருமை உணர்ச்சியினால் இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்துள்ளார்.

ஊனம் மேல் ஒன்றுமில்லார் – ஊனம் – குறித்ததொன் றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும் அது. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனம் என்றெண்ணும்போது, ஏனை ஊனங்கள் உடம்பில்  ஒடுங்குவன. உடம்பெடுத்தலே – பிறவியே – ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.

அருமையாம் நிலை – பிறரால் அடைதற்கரிய நிலை.

அன்பினால் இன்பம் ஆழ்வார் – அன்பு காரணமாக இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“,  “இறவாத வின்ப அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்களால்  புலப்படும்.

இருமையும் கடந்து நின்றார் – இருமை – இம்மை மறுமை என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன்“. என்ற வாக்குகள்  இதனை உணர்த்தும்.

“நின், திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும்  மனைவியும்  ஒக்கலுந் திருவும்
பொருளென நினையா துஉ ன்னரு ளினைநினைந்து
இந்திரச் செல்வமும்  எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர்  ஒதுக்கிச்
சின்னச் சீரை துன்னல்  கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
சிதவ லோடு ஒன்று  உதவுழி எடுத்தாங்கு
இடுவோர்  உளரெனின்  நிலையில் நின் றயின்று
படுதரைப் பாயலில்  பள்ளி மேவி ஓவாத்
தகவெனும்  அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர்  அனைத்தையும்  ஒக்கப் பார்க்கும் நின்
தெய்வக் கடவுள்   தொண்டர்“

என்று திருவிடை மருதூர்  மும்மணிக் கோவை  கூறுகிறது.bஇத்தகைய திருவாக்குகளிற் கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும் காண்க.

இருமை – “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர் இருமை   யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை – எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த  பேராவியற்கை பெற்றார்  என்பதை அறிக.

“பெத்தத்தும்   தன்பணி யில்லை பிறத்தலான்
முத்தத்தும்  தன்பணி யில்லை முறைமையால்
அத்தற்கு  இரண்டும்  அருளால்  அளித்தலால்
பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“

என்ற திருமூலர் திருமந்திரக் கருத்தினைக்கொண்டு இவர் நிலையினை  இவ்வாறு உரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம்.

“வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க. இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும், பிறப்பிறப்புக் களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.

இவரை – அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.

அடைதல் – அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். ஆகவே அடியார்களை  ஆண்டவனோடு ஒருங்கு வைத்துப் போற்றும்  சேக்கிழாரின் வாக்குச் சிறப்பை எண்ணி எண்ணி, மகிழ்கிறோம்! இனி மீண்டும் பாடலைப்  படித்துப் பயில்வோம் .

பெருமையால்   தம்மை  ஒப்பார் ; பேணலால்  எம்மைப்  பெற்றார்;
ஒருமையால்   உலகை  வெல்வார்;   ஊனம்  மேல் ஒன்றும்  இல்லார்;
அருமை ஆம்  நிலையில்  நின்றார்; அன்பினால்   இன்பம் ஆர்வார்;
சிறுமையும்   கடந்து  நின்றார் , இவரை நீ  அடைவாய்!’’ என்றார்!

இப்பாடலால்,  இறைவன்   நமக்கும்  அடியாரை அடையும் தேவையை  வலியுறுத்துகிறார்!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க