வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 6

0

தி. இரா. மீனா 

அக்கம்மா

அக்கம்மா ஏலேஸ்வரத்தில் [ஏலேரி] பிறந்து கல்யாணில் ஐக்கியமானவர். இராமலிங்கேஸ்வர லிங்கா இவரது அடையாளம். வசன எண்ணிகையைப் பொறுத்த வரையில் அக்கமகாதேவி, நீலம்மா ஆகிய இருவருக்கும் அடுத்தபடியாக அதிக அளவு வசனங்களைப் படைத்தவர். நோன்பு முறைகள், முன்னோர் மரபு ஆகியவற்றை முதன்மையாக வைத்தே இவரது வசனங்கள் அமைகின்றன. மக்களின் பழக்க வழக்கம், வாழ்க்கை நம்பிக்கைகள் ஆகியவையும் வசனங்களினூடே வெளிப்படுகின்றன. அது அக்காலச் சமுதாய நிலையை அறிய உதவுகின்றது.

1. “குருவாயிருப்பனும் ஒழுக்கமற்றவரை பின்பற்ற முடியாது
இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு மாறானால் பின்பற்ற
முடியாது
ஜங்கமனாயினும் ஆசாரமில்லையெனில் போற்ற முடியாது
ஒழுக்கமே சாரம்
விரதமே உயிர்
செயலே அறிவு
அறிவே பொருள்
ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”

2. “பக்தனுக்கு ஆசையுண்டா?
சிரஞ்சீவிக்கு இறப்புண்டா?
அடியவர்க்குப் பொய்  உண்டா?
கர்த்தன் சேவகனாகும்போது செயல் மறுத்தல் ஒழுக்கமாகுமா?
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் ஆணை.”

3. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவனில்லை
வாளுக்கு அஞ்சும் வரையில் வீரனில்லை
மூவகை உடலுள்ளவரையில் இலிங்க அங்கமுடையவனில்லை
பழிக்கு உயிர் விடவில்லையெனில் ஒழுக்கமுடையோனில்லை
இத்தகையவனுக்கு அச்சமெதுவுமில்லை
ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்.”

அஜகண்ண தந்தே

பெண் வசனக்காரான முக்தாயக்காவின் சகோதரன் அஜகண்ண தந்தே. லக்குண்டியிலுள்ள சோமேஸ்வரர் இவனது அடையாளம்.   இஷ்ட இலிங்கத்தை வாயில்  வைத்துக் கொண்டு சிவனை வழிபட்டவன். உணர்வுகள் மூலமாக இறைவனை வழிபடுவதென்பது இவனது பாவனை. ஐக்கியஸ்தலத்தின் பிரதிநிதியென்று வசனகாரர்கள் இவனைக் குறிப்பிடுகின்றனர். குருவின் பண்பு, சரணரின் தனித்துவம் ஆகியவற்றை இவன் வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.

 “சூரியனைக் கண்ட இருள் போலானது என் குருவின் சொற்கள்
காற்றின் கரத்திலுள்ள தீபம் போலானது என் குருவின் சொற்கள்
நெருப்பின்முகமான கற்பூரம் போலானது என்குருவின் சொற்கள்
மஹாகன சௌராஸ்டிரசோமேஸ்வரன் என் கரத்திற்கு
வந்ததால் தீமைகள் என்னை விட்டகன்றன.”

 அக்கநாகம்மா:

நாகம்மா, அக்கநாகம்மா, நாகலாம்பிகே என்ற பெயர்களில் அழைக்கப்படும் இவர் பசவேசரின் சகோதரி. பாகேவாடியிலுள்ள இங்களேஸ்வராவில் பிறந்தவர். கல்யாண் நகரின் மகாமனையிலும், அனுபவ மண்டபத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டவர்.  ’பசவண்ண பிரிய சென்ன சங்கையா ’ இவரது அடையாளம். கல்யாண் நகரில் புரட்சி வெடிக்கும் போது சரணர் பிரிவிற்குத்  தலைமையேற்று உளுவி என்னுமிடத்திற்குச் சென்றவர். பிஜ்ஜள  சிப்பாய்களுடன் போராடி வசன சாகித்யத்தைக் காப்பாற்றியவர்.

’மனத்தின் தலைவன் மகாதேவனின் மனதைக் கண்டேனென
ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொள்வேன்
இதனால் மனமே கலங்காதே உடலே நீ பதறாதே
உண்மையை மறவாதிருத்தல் வேண்டும்
மலை போன்ற குற்றங்களையும்
பசவண்ணப் பிரிய செங்கைய்யன்
விரலொன்றால் நீக்குவான்.”

அல்லமாபிரபு

அல்லமாபிரபு கர்நாடக மாநிலம். சிமோகா மாவட்டம், பனவாசி அருகேயுள்ள பெல்லகாவி கிராமத்தில் சுஜ்னனி—நிரசங்கரா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். சிவபெருமானருளால் பிறந்த மகனுக்கு பெற்றோரிட்ட பெயர் பிரபுவாகும். நடன ஆசிரியரான தந்தையின் கலையுணர்வு அழகும் அறிவும் நிறைந்தவராக விளங்கிய பிரபு வையும் ஆட்கொண்டது. அதனால் கோயிலில் முரசு இசைக்கும் பணியை மேற்கொண்டார். கமலாத்தே என்ற பெண்ணின் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவே பிறந்தவர்கள் என்பது போல் இணைபிரியாமல் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். திடீரென கமலாத்தே கடும்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனாள். அவள் இல்லாத வாழ்வு அல்லமா பிரபுவுக்கு வெறுமையானது. தன்னை மறந்து பித்துப்பிடித்தவராக காடுமேடுகளில் அலைந்தார். ஒரு நாள் காட்டில் உட்கார்ந்திருந்த போது மேடு போன்ற மண்குவியலைச் சாதாரணமாக சுரண்டியபோது புதுமையான ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த இடத்தை மேலும் தோண்டும் போது மூடிய கதவு போன்ற அமைப்பு தெரிந்தது. அதை வேகத்தோடு உதைக்க கதவு திறந்தது. உள்ளே ஒரு யோகி தன் கையில் இருக்கும் இலிங்கத்தை பார்த்தபடி இருந்தார். அல்லமாபிரபு அவரைக் கண்டு வியந்து நின்றபோது அவர் கையில் உள்ள இலிங்கத்தை பிரபுவிடம் தந்துவிட்டுச் சாய்ந்தார். அந்தக் கணத்தில் அல்ல மாபிரபுவின் எண்ணமும், செயல்பாடுகளும் முழுவதும் மாறிவிட்டன. ஞானம் பெற்றவர் போலானார். அதையடுத்து இறையருளால் பல இடங்களுக்கும் சென்றார். அறிவின் சிறப்பும், கருத்துறுதியும், மெய்ஞ் ஞானமும் அவரை மிகச்சிறந்த குருவாக்கியது. வீரசைவத்தின் கொள்கைகளை மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பசவேசரால் உருவாக்கப்பட்ட அனுபவ  மண்டபத்தின் குருவாக அல்லமாபிரபு விளங்கினார். அக்கமாதேவியை எல்லோரின் முன்பாகவும் பல விதமான கேள்விகளைக்கேட்டு அவள் அறிவுக் கூர்மையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியவர். ஸ்ரீசைலத்தின் கதளிவனம் சென்று இறைவனுடன் பிரபு கலந்ததாக அவர் வரலாறு  அமைகிறது. குகேஸ்வரன் என்பது சிவனின் யோகப் பெருமையை விளக்கும் பெயராக அமைவதால் ’குகேஸ்வரா’ என்பது அவரது வசனங்களின் முத்திரையாகிறது. இறைவனோடு இணைவதும், உணர்வதுமான பாவனையிலேயே அவருடைய வசனங்கள் அமைகின்றன.

1. “மலைகள் குளிரில் நடுங்குமானால்
எதை வைத்து அவைகளைப் போர்த்த முடியும்?
விண்வெளியே நிர்வாணமானால்
எதை  அதற்கு ஆடையாக்க முடியும்?
கடவுளின் மனிதர்கள்  உலகப்பற்று உடையவர்களானால்
நான்  உருவகத்தை எங்கே தேடுவது?
ஓ  குகேஸ்வரா”

2.“இந்த உடலில்
முழு ஆலயம் உள்ளபோது
வேறு எங்கோஅதைத் தேட
என்ன தேவை?
யாரும் இரண்டைக் கேட்பதில்லை
ஓ குகேஸ்வரா..
நீ கல்லென்றால் நான் என்ன?

3.“ஓடும் ஆறுகள் எல்லாம் கால்கள்
எரியும் நெருப்பு எல்லாம் வாய்கள்
வீசும் காற்று எல்லாம் கைகள்
ஓ  குகேஸ்வரா
உன் மனிதர்களுக்கு
ஒவ்வொரு அவயமும் அடையாளம்தான்”.

4.“இங்கே பார் கால்கள் இரு சக்கர வண்டி
உடல் ஒரு பாரவண்டி
ஐவர் அதை இயக்குகின்றனர்
ஒருவரைப் போல் ஒருவரில்லை
முழுச்சிந்தனையோடு இயக்காவிட்டால்
அச்சுமுறிந்துவிடும் குகேஸ்வரா!”

5.“ என்ன விந்தை
தேனி வந்தபோது மணம் தப்பியோடியதைப் பார்த்தேன்
மனம் வந்தவுடன் அறிவு தப்பியோடியதைப் பார்த்தேன்
கடவுள் வந்தபோது கோவில் ஓடுவதைப் பார்த்தேன்
ஓ..குகேஸ்வரா! “

6. “குயில் எங்கே  மாமரம் எங்கே?
எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
மலை நெல்லி எங்கே கடலின்  உப்பெங்கே?
எப்போது அவர்கள் உறவினரானார்கள்?
எப்போது நான்
குகேஸ்வரனின் உறவினனானேன் ?”

7. “நான் ஒன்றென நினைத்தால்
அது இரண்டாகத் தெரிகிறது
நான் இரண்டென நினைத்தால்
அது ஒன்றாகத் தெரிகிறது
இது என்ன மாயை?
ஒன்று மற்றும் இரண்டின் பொருளென்ன?
பிரிக்க முடியாத இணைவுக்கு
அருளான உலகம் இன்றியமையாதது.
ஓ.. குகேஸ்வரா! “

8. “தீயாக மழை பெய்யுமானால்
நீ தண்ணீராக இருக்கவேண்டும்
பெருமழைப் பிரளயம் என்றால்
நீ காற்றாக இருக்கவேண்டும்
மிதமிஞ்சிய வெள்ளமெனில்
நீ வானமாக இருக்கவேண்டும்
உலகங்களின்’ ஊழி’வெள்ளமெனில்
நீ ’உன்னை’ விட்டு கடவுளாக வேண்டும்
ஓ..குகேஸ்வரா!”

9. “எத்தனை முயன்றும்  எத்தனை தேடினாலும்
அவர்களால்  கண்ணாடியில்
மனப்படிமத்தைப் பார்க்கமுடியாது.
புருவங்களின் இடையே
வட்டத்தில் அது சுடராகிறது
யாருக்குத் தெரியும்
இதுதான் கடவுளென்று?
ஓ..குகேஸ்வரா!”

10. “அறிந்தோம் அறிந்தோமென்பீர் அறிந்தவிதம் சொல்வீரோ?
அறிந்தவர்கள் அறிந்தோம் என்பாரோ?
அறிய முடியாத மேன்மையை அறிந்தவர்
அறியாதவர் போலிருப்பர் குகேஸ்வரா!”

11. ’அனைத்தும் கண்டு தன்னைக் காணாதவன் குருடன்
அனைத்தும் கேட்டு தன் குரல் கேளாதவன் செவிடன்
அனைத்தும் பேசி தன்னைப் பேசாதவன் ஊமை
உண்மையோடு தன்னைத் தான் காணவேண்டும்
உண்மையோடு தன்னுள்ளே தான் கேட்க வேண்டும்
உண்மையோடு தன்னுள்ளே தான் பேசவேண்டும்
இதுவே தன் நிலையாம் ,இருப்பிடமாம் உருவாம்
பாராய் குகேஸ்வரா!”

12. “மாயையின் தலையைக் களையாத வரையில்
உடலின் கவலையை வென்றென்ன?
ஞானத்தின் நிலையை அறியாத வரையில்
மாயையின் தலையை வெட்டியென்ன?
தான் தானாகாத வரையில்
ஞானத்தின் நிலையை அறிந்தென்ன?
தானே தானேயான அடியானின் நிலைக்கு
எந்தக் கட்டுப்பாடுமில்லை குகேஸ்வரா!”

13. “உடலுள் கோயிலிருக்க
வேறொரு கோயிலெதற்கு?
இரண்டெனும் பேச்சுக்கிடமில்லை
குகேஸ்வரா,நீங்கள் கல்லெனின்
என் நிலையென்ன?”

14. “நான் தெய்வமன்றி நீ தெய்வமா?
நீ தெய்வமெனில் எனையேன் புரக்கவில்லை?
ஒரு மிடறு நீர் கொடுப்பேன் அன்பாய்
பசித்தால் ஒரு கவளம் படையலிடுவேன்,
தெய்வம் நான் காணாய் குகேஸ்வரா!”

15.  “பாத்திரத்திலுள்ள வெண்ணெயைச் சூடுபடுத்த
கரைந்தது பாத்திரம் மிஞ்சியது வெண்ணெய்
வண்டிருந்தது மணமில்லை; மணமிருந்தது வண்டில்லை
இருந்தான் அவன் இல்லை அவனுருவம்
இருந்தான் குகையீசன் அங்கே இலிங்கமில்லை.”

பெரிய ஞானி என்றே தன் சமகாலத்தவர்களால் போற்றப்படும் அவருக்கு அல்லமா, அல்லையா, பிரபுதேவர் என்று பல பெயர்கள் உண்டு. கன்னட பக்தி உலகம் பசவேசரை அண்ணனாகவும் [பசவண்ணா], அக்கமகாதேவியை அக்காவாகவும் [அக்கா என்றே சொல்லுதல்] அல்லமாபிரபுவை [பிரபு தேவரு] பிரபுவாகவும் காண்கிறது. இலிங்காயத்துவத்தின் மும்மூர்த்திகளாக அல்லமாபிரபு, பசவேசர், அக்கமாதேவி ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.