2

நாங்குநேரி வாசஸ்ரீ

100. பண்புடைமை

குறள் 991

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

யாராயிருந்தாலும் அவுக கூட எளிமையாப் பழகுனோம்னா அதுவே பண்புடைமைங்குத நல்ல ஒழுக்குத பெறுததுக்கான சிறந்த வழியா அமையும்.

குறள் 992

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

நேசமானவரா இருக்கது ஒசந்த குடியில பொறந்த தன்ம அமைஞ்சிருக்கது இந்த ரெண்டும் பண்புடையவரா வாழுத நல்ல வழியாவும்.

குறள் 993

உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

பாக்குத உடல் உறுப்புக்கள் ஒண்ணுபோல இருக்கதனால ஒத்துப்போகுதது ஆவாது. நல்ல பண்பால மத்தவுகளோட ஒத்துப்போவுததே ஒத்துப்போவுதது ஆவும்.

குறள் 994

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு

நியாயத்துக்கு கேடு இல்லாம நல்ல காரியங்களச் செய்து மத்தவுகளுக்கு ஒபயோகமா வாழுத பெருமக்களோட நல்ல கொணத்த ஒலகம் பாராட்டும்.

குறள் 995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு

விளையாட்டுக்குக்கூட ஒருத்தங்கள எளக்காரமா பேசினோம்னா கேடு உண்டாவும். புத்தியுள்ள பெருமக்க பகையாளிக்கிட்ட கூட கொணங்கெட்டு நடந்துக்கிட மாட்டாக.

குறள் 996

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்

கொணமுள்ளவுக இருக்கதாலதான் ஒலகம் நெலைச்சி இருக்கு. அவுக இல்லாமப் போனாகன்னா மனுச வாழ்க்க மண்ணுக்குள்ள பொதைஞ்சு அழிஞ்சு போவும்.

குறள் 997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

அரம் கணக்கா கூர்மையான புத்தியுள்ளவுகளா இருந்தாலும் மனுசத்தன்ம இல்லாதவுக ஓரரிவு இருக்க மரத்துக்குச் சமம் தான். ‘

குறள் 998

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

சேக்காளியா இருக்க ஏலாம தீம செய்யுத கொணம் இருக்கவங்ககிட்ட கூட நல்லவுகளா நடந்துக்கிடாம இருக்கது தாழ்ச்சிதான்.

குறள் 999

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்

மத்தவுகளோட கலந்து பழகி சந்தோசமா இருக்க ஏலாதவுகளுக்கு வெளிச்சமான பகலும் கருக்கல் கணக்கா இருட்டாத்தான் தோணும்.

குறள் 1000

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

கொணங்கெட்டவங்கிட்ட இருக்க சொத்து சுத்தமில்லாத ஏனத்துல ஊத்திவச்ச பால் திரிஞ்சிபோவுதது கணக்கா அழிஞ்சு போவும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.