அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.01.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

3 thoughts on “படக்கவிதைப் போட்டி – 241

 1. பதின்மம்
  =========
  பதின்ம வயதினிலே
  புதுமைக் கிளர்ந்து எழும்
  மதிக்கு ஒப்புகின்ற
  பதிலைத் தேடி எழும்

  புதிய உலகமொன்று
  உதயம் ஆவததே
  பதியம் போடும் விதை
  பண்பு விதை களெனில்

  மகிழ்வைக் கெடுக்காதே
  மாண்பைப் பயிற்றிடலாம்
  மனம் நல்நிலமாமே
  குணத்தை வளர்த்திடலாம்

  இதிலே கோட்டை விட்டால்
  இனியும் வாய்ப்பு இல்லை
  இகத்தை மாற்றுதற்கு
  இவரே அடித்தளமாம்

 2. அடித்தளமாய்…

  மணலில் வீடு கட்டியேதான்
  மனம்போ லாடிய காலமெல்லாம்
  மணல்போல் மறைந்தே போயினவே
  மனதில் நினைவை விட்டுவிட்டே,
  கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
  களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
  பிணக்குடன் அவரைத் தடுக்காதே
  பிறகவர் உயர்வுக் கடித்தளமே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. மனிதம் பழக்கு

  அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
  அலைபேசி சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
  கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
  களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

  மணற்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
  புணல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
  சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
  கூடி வாழ்ந்து கோடி நன்மைப் பெற்று வாழ வேண்டும்

  வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
  ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
  கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவுக் கைக்கொள்ள வேண்டும்
  சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க