-மேகலா இராமமூர்த்தி

வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

வெண்ணெய் உண்ண விழையும் கண்ணனைத் தன் படப்பெட்டிக்குள் பதுக்கி வந்திருக்கின்றார் திரு. கோபி சங்கர். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு வழங்கியுள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்றுசேரட்டும்!

பானை வெண்ணெயைத் துழாவும் பச்சிளங் குழந்தையைப் பார்க்கையில்,

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
(புறம் – 188) எனும் பாண்டியன் அறிவுடைநம்பியின் அறிவுசால் பாடலே நெஞ்சில் நிழலாடுகின்றது.

தவழும் கண்ணனுக்குத் தமிழ்ப்பா பாடக் காத்திருக்கும் கவிஞர்களுக்கு இனி வாய்ப்பை வழங்குவோம்.

*****

கண்ணன் செய்யும் களவுக் குறும்பையெல்லாம் நிஜவாழ்வில் செய்வோரை யாரும் பாராட்டுவதில்லை. எனவே விளையாட்டுக்கும் வேண்டாம் களவுப் பழக்கம் என்று நல்லுரை நவிலுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பழக்குங்கள் பண்பை…

வெண்ணெய் திருடும் கண்ணனாக
வேடம திட்டுப் பிள்ளைக்கு,
கண்ணன் வந்தான் வீட்டுக்கென
களிப்பு மிகவே வாழ்த்துகிறோம்,
உண்மையில் திருட வந்தாலோ
உதவாக் கரையென ஒதுக்குகிறோம்,
பண்பை அன்பைப் பழக்கிடுங்கள்
பால வயதிலே பெரியோரே…!

*****

மழலையில்லா மங்கை ஒருத்தியின் மனக்குறையையும் அவளை அரக்கமனமும் அநாகரிகமும் படைத்த சுற்றமும் நட்பும் தகாத வார்த்தைகளால் திட்டும் அவலத்தையும் யதார்த்தமாகப் படம் பிடித்துள்ளார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ் இக்கவிதையில்.

வா கண்ணா வா!

உன் வாசல் வந்து வேண்டி நின்றேன்
வறுமை என்று…. வசதி தந்தாய்
என் தனிமை தீர்ந்திட வேண்டி நின்றேன்
துணையோடு வாழ்க்கை தந்தாய்
வீட்டு விளக்கேற்ற வந்தவள்
வாரிசை இன்னும் சுமக்கவில்லை என்று வையும் அத்தை
என்றும் ஏளனமாய்ப் பேசி எள்ளி நகையாடும்
குழந்தைப்பேறு இல்லை என்று
சுற்றமும் நட்பும்
வீட்டில் மழலையாய்
தவழ்ந்து வந்த மருமகனைக்
கண்ணன் வேடமிட்டு அழகு பார்த்தேன்
பானை நிறைய பஞ்சை
பொய்யாய் வெண்ணெய் எனக்
கண்ணா உனக்குப் படையல் வைத்தேன்
என் பிராத்தனைகள் பொய்யில்லை
வெண்ணெய் திருடிய வாயில்
யசோதைக்குச் சுற்றும் உலகைக் காட்டிய
களிப்பூட்டும் கதைகள் சொல்லி மகிழ்ந்திருந்தேன்
வயிற்றில் கரு ஒன்று உருவாகி
மழலைச் செல்வமாய் அது பிறந்து
மலடியெனும் பட்டம் நீக்கி
அன்பை பொழிந்திடும்
அன்னையாய் என்னை மாற்றிட
வா கண்ணா வா

*****

மனைமாட்சியின் நன்கலமான மழலையின் வரவை மாதவனிடம் வேண்டும் கவிதையிது. இரசாயன மருந்துகளின் நுகர்வாலே கருவுறுதல் இக்காலத்தில் பிரச்சினை ஆனதோ எனும் கவிஞர் திரு. ராவணா சுந்தரின் வினா சிந்திக்க வைக்கின்றது.

மழலையின் வருகை

கருமை நிறக் கண்ணா
கோகுலத்தின் மைந்தா
லீலைகளின் மன்னா
உன் பொற்பாதம்
குடியானோரின் குடிகளில்
குழந்தையாய்க் குதித்தோடி
நீ விரும்பும் வெண்ணெயை
எங்கள் அனுமதியில்லாது
உன் குறும்புத்தனத்தில்
நீ உண்டு மகிழ
எங்களின் மாயோனே
உன் கருணைக் கடலில்
சிறு துளியளித்துப்
பிள்ளை வரத்தை இந்நாளில்
அருள்வாயா கண்ணா…?
கலியுகப் பெண்களில்
பல பேர் கண்ணீரில் கலங்குவதேனோ?
விண்ணைமுட்டும் விஞ்ஞானமிருந்தும்
தாய்மை மரித்துப்போனதேனோ?
இரசாயன மருந்துகளின் ஊடுருவல்
கருவுறுதலைக் குறைத்ததோ?
குறைதீர்க்கும் கண்ணா
எங்கள் எல்லோர் குலங்களையும்
தழைக்க வழிசெய்வாயாக!

*****

குழந்தையை வைத்துக் குவலயத்துக்கு நீதியையும் பல சேதியையும் சொல்லியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருப்பது….

எதிர்காலப் பொங்கல்!

விளை நிலங்கள் தமையெல்லாம்
விலை கொடுத்து வாங்கி,
வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
வித்தகரின் கூட்டம்!

சோறு போடும் நிலங்களையே
கூறுபோட்டுப் பார்த்து – எரி
வேதிப்பொருள் தேடத் தினம்
விழைந்திடுமோர் அரசு!

பாடுபட்டு உழைத்துச் செங்கதிர்
பயிர்வளர்த்து வந்த மண்ணில் – வேறு
நாட்டதனின் கூட்டம் தினம்
செய்யும் பல ஆய்வு!

நிலைதிருத்தி விதிமாற்ற
வழியேதும் எண்ணிடாமல்
வெள்ளித்திரை வழியே தலைவனைத்
தேடும் மக்கள் கூட்டம்!

மகிழ்ச்சி கொண்டு குடும்பத்துடன் கொண்டாடக்
கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றி
நெகிழிப் பானையில் பஞ்சுப் பொங்கல் வைத்து
கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!

சோறுபோடும் விளைநிலங்களையெல்லாம் கூறுபோட்டு விலை நிலங்களாக்கி விற்றுவிட்டு, வெள்ளித்திரையில் தலைவனைத் தேடும் மக்கள் சமூகத்தின் எதிர்காலப் பொங்கல் இவ்வாறு நெகிழிப்பானையில் வைக்கப்படும் பஞ்சுப் பொங்கலாகத்தான் இருக்கும் என்று நெஞ்சுவெந்து பேசும் இக்கவிதையை இயற்றியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.