தமிழர் திருநாள் வாழ்த்து!
ஏறன் சிவா
வீடெலாம் தோரணங்கள்!
வியத்தகு கோலம் கொள்ள!
மாடெலாம் அணிகள் பூண்டு
மகிழ்ச்சியில் எம்பித் துள்ளக்
காடெலாம் கழனி எல்லாம்
காய்,கனி குலுங்கித் தள்ளப்
பாடலாம் வாரீர் என்றே
பைந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
ஏடெலாம் இழந்த தாலே
இழந்தநம் சிறப்பை மீட்கக்,
கூடலாம்! புதிதாய்ச் செம்மைக்
கொள்கைகள் வகுத்து இந்த
நாடெலாம் அறிஞர் கூட்டி
நம்முடை வேரின் ஆழம்
தேடலாம்! வாரீர் என்றே
தீந்தமிழ் வாழ்த்தைச் சொல்வோம்!
கலைபல வளர்ப்ப தற்குக்
கலைமன்றம் செய்வோம்! வீழ்ந்த
நிலைதனை உயர்த்து தற்கு
நெறிமுறை வகுப்போம்! நம்மின்
தலைமுறை வாழு தற்குத்
தமிழ்முறை செய்வோம் என்றே
தலைதனைத் தாழ்த்திச் சொல்வோம்
தமிழரின் திருநாள் வாழ்த்தை!
பழித்திரை போக்கு தற்குப்
பல்துறை அறிவு வேண்டும்!
விழித்திரை போக்கு தற்கு
விழிப்புடன் வாழ வேண்டும்!
வழித்திரை போக்கு தற்கு
வல்லமை பெறவும் வேண்டும்!
மொழித்திரை போக்க மூச்சை
மொழியுடன் கலக்கச் சொல்வோம்!