உழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

தைத்திங்கள் பிறக்கிறது
தைப்பொங்கல் வருகிறது
தை, தை எனக் குதித்து 
‘தை’ மகளை வரவேற்போம்.

உலகோர் பசி தீர்க்க 
உழைக்கின்ற உழவர்க்கு 
உற்சாகம் தருகின்ற 
உன்னத விழாவன்றோ!

ஏரோட்டி, சால் அமைத்து 
நீர் பாய்ச்சி, நாற்றுநட்டு,
களையெடுத்து, எரு இட்டு, 
தலையெடுத்த பயிரை

அறுவடை செய்தடுக்கி,
அறுவடை முடித்த வயலில் 
புத்தடுப்பு தானமைத்து  
புதுப்பானைப்  பொங்கலிட்டு 
புத்தாடை தானுடுத்து 
பொங்கிவரும் பால்கண்டு
பொங்கலோ பொங்கலெனக்    
குலவையிட்டுக் கொண்டாடி,
ஆதவனைக் கும்பிட்டு 
ஆவினத்தைச் சீராட்டி ,
நன்றி நவிலும்  நாளே 
பொங்கல் எனும் நன்னாள் – இது   .
உழவர்களின் திருநாள் .     

ஊரார் பசிதீர்க்கும் 
உழவர்தம் துயர்தீர்க்க
உரிய விலைகொடுத்து 
உயர்த்திடுவோம் அவர்நிலையை .

இடைத்தரகர் எனும் 
ஈனப்பிறவிகளின்  
கொட்டத்தைத் தானடக்கி 
கொள்ளையைத் தடுத்திடுவோம். 

நீர்நிலைகள் புனரமைத்து 
நீர்வளம் பெருக்கிப் பயிர் 
வீணாகும் நிலையை 
விரைந்து சரிசெய்வோம் .
இயற்கைப் பேரிடரால் 
இன்னல் விளைந்தக்கால் 
நம் கை கொடுத்து அவர்க்கு 
நம்பிக்கை அளித்திடுவோம் .

வில்லேருழவர்க்கும்,
சொல்லேருழவர்க்கும்,
எல்லோர் வயிற்றுக்கும்
நல்லேர்தான் ஆதாரம்.   

உழவுக்கும் உழவர்க்கும் 
உழைப்புக்கும் வந்தனம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க