Blog

  • குறளின் கதிர்களாய்…(481)

    குறளின் கதிர்களாய்…(481)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(481)

    பணிவுடைய னின்சொல னாத லொருவற்
    கணியல்ல மற்றுப் பிற.

           –திருக்குறள் –95(இனியவை கூறல்)

    புதுக் கவிதையில்…

    ஒருவன்
    பெரியோர்களிடத்துப்
    பணிவுடையோனாய் இருத்தல்,
    எல்லோரிடமும் இனிய சொல்லே
    பேசுபவனாய் இருத்தல் ஆகிய
    உயர் குணங்கள் மட்டுமே
    அவனுக்கு ஆபரணங்களாய்
    அணிசெய்கின்றன..

    உடலில் அணியும்
    பிற நகைகளெல்லாம்
    உண்மையில்
    ஆபரணங்கள் ஆகா…!

    குறும்பாவில்…

    உயர்ந்த குணங்களாம் பணிவோடிருத்தல்
    இன்சொல்லே பேசுதல் போன்றவையே ஒருவனுக்கு
    அணிகலன்கள், மற்றவை அல்ல…!

    மரபுக் கவிதையில்…

    பெரியோ ரிடத்துப் பணிவுடைமை
         பேசும் பேச்சே இன்சொல்லாம்
    அரிய குணமே ஒருவர்க்கே
         அணியாய் சிறக்கும் வாழ்வினிலே,
    தெரிந்த வரையில் இவைதவிரத்
         தேடிப் பிடித்தே அணிகின்ற
    பெரிதும் சிறிதாய்ப் பிறநகைகள்
         பெருமை பெறாதே அணியெனவே…!

    லிமரைக்கூ…

    பணிவு பேசுமின்சொல் என்றே
    இரண்டும் அணியாகும் ஒருவனுக்கு வாழ்வில்,                
    மற்றெதும் அணியாகா நின்றே…!

    கிராமிய பாணியில்…

    பேசணும் பேசணும்
    நல்ல பேச்சே பேசணும்,
    எங்கயும் எப்பவும்
    நல்ல பேச்சே பேசணும்..

    பெரியவுங்க கிட்ட
    பணிவா இருக்கிறதும்
    அடுத்தவங்க கிட்ட
    அன்போட நல்ல பேச்சா
    பேசுறதும்தான்
    ஓலகவாழ்க்கயில ஒருத்தனுக்கு
    ஓசத்தியான ஆபரணம்,
    அது யில்லாம
    ஒடம்புல போட்டு
    அழகு பாக்கிறதெல்லாம்
    உண்மயில ஆபரணமே யில்ல..

    அதால
    பேசணும் பேசணும்
    நல்ல பேச்சே பேசணும்,
    எங்கயும் எப்பவும்
    நல்ல பேச்சே பேசணும்…!

    Share
  • எழினி!

    எழினி!

    -மேகலா இராமமூர்த்தி

    பழந்தமிழ்ச் சொற்கள் பலவற்றின் பயன்பாட்டை நாம் காலப்போக்கில் நிறுத்திவிட்டோம்; அல்லது பயன்படுத்த மறந்துவிட்டோம். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் ’எழினி’ என்ற நற்றமிழ்ச் சொல். இந்நாளில் நாம் ’திரைச்சீலை’ (curtain) என்றழைப்பதை அந்நாளில் ’எழினி’ என்ற பெயரால் அழைத்தன பண்டைத் தமிழ்நூல்கள்.

    சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியருள் ஒருத்தியான மாதவிமடந்தையின் நாட்டிய அரங்கேற்றத்தை விளக்குகின்ற ‘அரங்கேற்று காதை’யில் தூணிலே கட்டப்பட்டிருந்த மூன்றுவிதமான எழினிகளை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றார் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்.

    ”ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
    கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
    ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
    மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
    விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்து
    …” (சிலப்: அரங்கேற்று. – 109-113)

    இடத்தூணிடத்தே தொங்கவிடப்பட்டுக் கயிற்றை உருவியவழி வலத்தூண்வரை சென்று மறைப்பது ஒருமுக எழினியென்றும், வலத்துண்கள் இரண்டின் மருங்கும் தொங்கவிடப்பட்ட இரண்டு திரைகள், உருவியவழி இரண்டு பக்கத்திலிருந்தும் வந்து நடுவில் ஒன்றோடொன்று இணைவது பொருமுக எழினியென்றும், கூத்தர் அவையோர்க்குப் புலப்படாமல் மறைந்துநின்று அமரர்கள் பேசுமாறு பேசுதற்கமைந்த, மேலிருந்து கீழாக இறங்கும் திரைச்சீலை கரந்துவரல் எழினியென்றும் உரையாசிரியர்கள் இவற்றுக்கு விளக்கமளிக்கின்றனர்.

    இன்று நாம் காணுகின்ற ஒருபக்கத் திரை, இருபக்கத் திரை, மேலிருந்து கீழாக இறங்கும் திரை ஆகியவை அக்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்கின்றன என்பது சிலம்பின் வாயிலாக நமக்குப் புலனாகின்றது.

    இம்மூவகை எழினிகள் அல்லாமல் எந்திரத்தால் இயங்கும் ’எந்திர எழினி’யும் அன்றிருந்தமையைச் சீவக சிந்தாமணி நமக்கு அறியத் தருகின்றது. சிந்தாமணியின் கதைத் தலைவன் சீவகனுக்கும், காந்தருவதத்தைக்கும் திருமணம் முடிந்தபின்னர் சீவகனைக் கண்டு நாணிநின்ற தத்தையை அவளின் தோழியர் உள்ளேயிருத்திப் பூம்பட்டால் ஆன எழினியால் அவ்விடத்தை மூடினராம்.

    ”கோதையும் தோடுமின்னக்குண்டலம் திருவில்வீச
    மாதரம் பாவைநாணி மழைமினின் ஒசிந்துநிற்பக்
    காதலம் தோழிமார்கள் கருங்கயற் கண்ணினாளை
    ஏதமொன் றின்றிப்பூம்பட் டெந்திர எழினிவீழ்த்தார்
    .” (சீவக: காந்தருவ தத்தையார் இலம்பகம் – 740)

    எந்திர எழினி என்பதனால் ஏதேனும் கருவிகொண்டு (machine) அத்திரையைத் தத்தையின் தோழியர் இயக்கியிருக்கவேண்டும். 

    போருக்குச் சென்ற மன்னனின் பாசறையை இரண்டு அறைகளாகப் பிரிக்கும் நோக்கில் இடையே உறுதியான கயிற்றாலே திரைச்சீலையை வளைத்துக் கட்டி, அவ்விரண்டு அறைகளுள் உள்ளறையாகிய பள்ளியறையில் மன்னனின் காவலுக்குச் சட்டையணிந்த, வாயினால் உரைக்கவியலாமல் செய்கைகளால் உரைக்கும், ஊமை மிலேச்சர் காவலாயிருந்தனர் எனும் செய்தியைச் சங்கநூலான முல்லைப்பாட்டு தெரிவிக்கின்றது.

    …………………………….திண்ஞாண்
    எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
    உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

    படம்புகு மிலேச்சர் உழையர் ஆக… (முல்லைப்பாட்டு: 63-65)

    துணியால் ஆன திரைச்சீலைகளையே தமிழிலக்கியப் புலவோர் பலரும் தம் பாடல்களில் விரித்துரைக்க, கவிச்சக்கரவர்த்தி கம்பரோ கவினார் இயற்கைக் காட்சியொன்றை நம் கண்முன் நிறுத்திப் புதுமையானதொரு திரைச்சீலையையும் நமக்கு முன்னே அசையவிடுகின்றார். அக்காட்சி இதோ:

    ”சோலைகளில் மயில்கள் அழகாய்த் தம் தோகையை விரித்து ஆடுகின்றன;  அந்த மயிலாட்டம் சுற்றியுள்ள அனைவர்க்கும்/அனைத்திற்கும் தெளிவாய்த் தெரியும் வகையில் தாமரை மலர்கள் விளக்குகளாய் ஒளிவீசி நிற்கின்றன; ஆட்டம் என்றால் அதற்குப் பக்கவாத்தியங்கள் வேண்டாவா? அதனால் வானத்து மேகங்கள் இடியெனும் முழவினை வாசிக்கின்றன; இந்த அதிசயக் காட்சியினை, மகளிரின் கண்ணொத்த, குவளை மலர்கள் வியப்போடு விழித்து நோக்குகின்றன; ஆட்டத்திற்கு மேலும் மெருகூட்ட வண்டுகள் மகர யாழொலிபோல் இனிமையாய்ப் பாடுகின்றன. ஆங்…ஆட்ட அரங்கிற்குத் திரைச்சீலை வேண்டுமல்லவா? அருகிலுள்ள நீர்நிலையின் அலைகளே வெண்ணிறத் திரைச்சீலையாய்த் திகழ்கின்றன. இவ்வழகிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தையெல்லாம் மருதமெனும் மங்கை கம்பீரமாய் வீற்றிருந்து இரசிக்கின்றாள்” என்று கற்பனைநயம் சொட்டச் சொட்டக் காட்சிப்படுத்துகின்றார் கம்பர்.

    தண்டலை மயில்கள் ஆட,
       தாமரை விளக்கம் தாங்க,
    கொண்டல்கள் முழவின் ஏங்க,
       குவளைகண் விழித்து நோக்க,
    தெண்திரை எழினி காட்டத் 
       தேம்பிழி மகர யாழின்
    வண்டுகள் இனிது பாட
       மருதம்வீற் றிருக்கும் மாதோ. (கம்ப. பாலகாண்டம் – 35)

    நீர்நிலையில் எழும்பும் அலைகளை ’எழினி’ என்று கம்பர் பொருத்தமாய் இயம்பியிருப்பது இரசனைக்குரியது.

    இவ்வாறு, எழினி என்ற சொல் திரைச்சீலையைக் குறிக்கும் வகையில் அன்றைய இலக்கிய நூல்களில் பலவிடங்களில் பயின்று வந்திருக்கக் காண்கின்றோம்.

    எழினி, அஃறிணையான திரைச்சீலைக்கு மட்டுமே உரித்தான பெயரா என்றால் ”இல்லை” இப்பெயர் எங்களுக்கும் உரியதே என்று நம்முன் வரிசையாக வருகின்றனர் குறுநிலமன்னர்கள் சிலர். அவர்கள் யார் என்று பார்ப்போமா?

    ’எழினி’ எனும் பெயரில் சங்க நூல்களில் குறிக்கப்படுவோரில் முதன்மையானவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகவும் சிறந்த பொருநனாகவும் அறியப்படும் அதியமான் நெடுமானஞ்சி.

    குறுநில மன்னனான குமணனிடம் பரிசில்பெறச் சென்ற பெருஞ்சித்திரனார் எனும் புலவர்பெருந்தகை, ”கடையெழு வள்ளல்களின் மறைவுக்குப்பின் நீயே இரந்தோரின் துயர் தீர்க்கும் வள்ளலாய்த் திகழ்கின்றாய் என்றறிந்து உனைநாடி வந்தேன்” என்று அவனிடம் கூறுமிடத்து, கடையெழுவள்ளல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டுக் குமணனின் வள்ளன்மையைப் புகழ்கின்றார். அவ்விடத்தில் ’எழினி’ என்று அதியமான் குறிக்கப்படுகின்றான்.

    …கறங்குவெள் ளருவி கல்லலைத்து ஒழுகும்
    பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
    மாரி ஈகை மறப்போர் மலையனும்
    ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
    கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்…
    (புறம்: 158 – பெருஞ்சித்திரனார்)

    இப்பாடலுக்கு உரைவரைந்த உரைவேந்தர் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை, எழினி என்பது அதியனின் தந்தை பெயர். அப்பெயரோடு சேர்த்து அவன் எழினியதியமான் என்றழைக்கப்பட்டான்; தந்தையின் பெயரைப் பெயரனுக்கு வைக்கும் மரபு பற்றி அவனுடைய மகனுக்கும் எழினி என்ற பெயர் வந்தது என்கின்றார்.  

    ”வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி” (குறுந்: 80) எனக் குறுந்தொகையிலும், ”சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி” (அகம்: 105) என அகநானூற்றிலும், பெருஞ்சேரல் இரும்பொறையோடு பொருது வீழ்ந்த நிலையில், ”பொய்யா எழினி பொருது களம்சேர” (புறம்: 230) எனப் புறநானூற்றிலும்  எழினி எனும் பெயரால் அதியமான் குறிக்கப்படுகின்றான். 

    அதியமானை அதிகம் பாடிய புலவர் சங்க கால ஔவையார்; அவர், பொகுட்டெழினி என்றும் எழினி என்றும் அழைக்கப்பட்ட அதியனின் மகனையும் பாடியுள்ளார். புறநானூற்றின் 392ஆவது பாடல் அதிலொன்று. அப்பாடலில், வறுமையில் வாடி, கிழிந்த ஆடையோடு, ”மதியேர் வெண்குடை அதியர்கோமான் கொடும்பூ ணெழினி”யின் அரண்மனை முற்றத்தில் வந்துநின்று கிணைப்பறை இசைத்த பொருநன் ஒருவன், தன் வறுமை நீங்கப்பெற்றுப் புத்தாடையும், தேறலும், நல்ல உணவும் பெற்றமையைப் புகழ்ந்துரைக்கின்றார் ஔவையார்.  

    இவர்கள் இருவரல்லாமல், நெடுஞ்செழியனோடு தலையாலங்கானத்தில் போரிட்டுத் தோற்ற எழுவர் கூட்டணியில் ஒருவனாகப் “பொலம்பூண் எழினி” (பொன்னாலான அணிகளையுடை எழினி) என்றோர் எழினி அகநானூற்றின் 36ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான்.

    முதுகுன்றம் எனும் ஊரின் தலைவனும், வீரமிகு படையை உடையவனுமாகிய கண்ணன் எழினி என்பவன் அகநானூற்றின் 197ஆவது பாடலில், ”மறம்மிகு தானை கண்ணன் எழினி” என்று பேசப்படுகின்றான். முதுகுன்றம் என ஈண்டுக் குறிக்கப்பட்டிருப்பது இன்று விருத்தாசலம் எனும் வடமொழிப் பெயரோடு விளங்கும் ஊராக இருக்கலாம். 

    மற்றோர் எழினி, ”கல்லா எழினி” எனும் அடையோடு அகநானூற்றின் 211ஆவது பாடலில் குறிக்கப்படுகின்றான். சோழமன்னன் ஒருவன் இவனை யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு அழைத்திருக்க, அறிவிலியான இந்த எழினி வரவில்லையாம்; அதனால் கோபமுற்ற அம்மன்னன், தன் ஆளுகைக்கு உட்பட்ட கழார் (கழாஅர்) எனும் பகுதியை ஆட்சிசெய்த பரதவர்கோமான் மத்தி என்பவனை அழைத்து எழினிக்குப் புத்தி கற்பிக்குமாறு ஏவ, அவ்வாறே மத்தி இந்த எழினியோடு போரிட்டு இவன் பல்லைப் பிடுங்கிவந்து தனக்குச் சொந்தமான வெண்மணி எனும் ஊரின் வாயிலிலுள்ள வன்மையான கதவில் பதித்தான் என்கிறார் மாமூலனார். பகைவனை அவமானப்படுத்தும் வகையில் அவன் பல்லைப் பிடுங்கித் தம் கோட்டையில் பதித்துவைப்பது அந்நாளைய அரசர்களின் (கோர) வழக்கமாக இருந்திருப்பதனை இதன்மூலம் அறிகின்றோம்.

    சேரநாட்டிலுள்ள வாட்டாறு எனும் பகுதிக்குத் தலைவனாக இருந்த எழினியாதனை, ”வளநீர் வாட்டாற்று எழினி யாதன்” என்று புறநானூற்றின் 396ஆவது பாடலில் குறிப்பிடும் புலவர் மாங்குடி கிழார், இவன் ஊக்கமில்லாதவர்க்கு ஊக்கமளிப்பவன்; உறவில்லாதவர்க்கு உறவாயிருப்பவன்; தன்னை நாடிவருவோர்க்கு வாரி வழங்குபவன் என்று பாணனின் கூற்றாகப் புகழ்ந்துள்ளார். இந்த எழினியாதன், தலையாலங்கானத்துச் செருவில் பாண்டிய நெடுஞ்செழியனோடு போரிட்டுத் தோற்ற எழினியின் மகன்; தந்தைக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இவன், நெடுஞ்செழியனோடு நட்புச் செய்துகொண்டான் என்கிறார் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.  

    வேலெறிவதில் வல்லவனான செல்லிக் கோமான் ஆதன் எழினியை ”எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி” என்று நமக்கு அறிமுகப்படுத்துகின்றது அகநானூற்றின் 216ஆவது பாடல். இவன் கோசர்களின் தலைவன் என்று அதில் சுட்டப்பெறுகின்றான்.  

    இவ்வாறு எழினியெனும் பெயரிலிருந்த ஆட்சியாளர்களையும் சங்கப்பாடல்கள் வாயிலாய் நாம் அறியமுடிகின்றது.  

    ஆக, எழினி என்பது திரைச்சீலைக்கும், குறுநில மன்னர்கள் சிலர்க்கும் பொதுவான பெயராக அன்றிருந்தமை தெளிவு. நாம் மறந்துபோன எழிலார் பெயரான எழினியைத் திரைச்சீலைக்கு மீண்டும் அணிவிப்போம்; குழந்தைகட்கும் சூட்டி மகிழ்வோம்!

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. புறநானூறு மூலமும் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதிய விளக்க உரையும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    2. அகநானூறு மூலமும் நாவலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் எழுதிய பதவுரை விளக்கவுரையும்.
    3. குறுந்தொகை மூலமும் மகாமகோபாத்தியாய, தாக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதிய உரையும்.
    4. முல்லைப்பாட்டு – பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரை.
    5. சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்.
    6. சீவக சிந்தாமணி மூலமும் புலவர் அரசு, பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் ஆகியோர் எழுதிய உரையும்.
    7. கம்பராமாயணம் – கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.  

     

    Share
  • பயணமும் பணமும் (சிறுகதை)

    பயணமும் பணமும் (சிறுகதை)

    முனைவர். நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ‘விஸ்வா விடு நாங்க எடுத்துக்கறோம். நீ இந்த அளவுக்கு எங்களுக்கு உதவுறதே பெரிய விஷயம். பெட்டிய விடு.’

    ‘விடுங்க பெரியப்பா. உங்களுக்கு செய்யறதுல எனக்கு என்ன சங்கடம். விடுங்க நான் வண்டில கொண்டு போய் வைக்கிறேன் என்றான் விஸ்வா.

    ‘கிளம்பிட்டீங்களா சித்தப்பா……….. என்று கேட்டுக்கொண்டே அவசரமாக ஆட்டோவை விட்டு இறங்கினான் கண்ணன்.
    ஒரு வாடக வந்துருச்சு  சித்தப்பா அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.

    ‘பரவால்ல கண்ணா அதுதா எங்களுக்கு விஸ்வா இருக்கானே எதுன்னாலும் பாத்து பாத்து செய்யறதுக்கு அப்பறம் எங்களுக்கு என்ன  கவல.’’

    ‘ அப்பா எப்படி இருக்காரு இப்ப  துணி தெச்சிட்டு இருக்காரா? தைக்கிறதுக்கு வருதா ?’’

    ‘அப்பப்போ ஏதாவது தைப்பாரு.  பெருசா  ஒண்ணுமில்ல சித்தப்பா. அவராலையும் இப்போ முடியறதில்ல.  என்ன கடைசி காலத்துல ஒரு தடவையாவது வெளிநாடு எங்கயாவது கூட்டிட்டு போடான்னு சொல்லிகிட்டே இருப்பாரு .

    ‘அவனுக்கு என்ன சொல்லுவா.   பொழைக்கத் தெரியாம பொழைச்சாச்சு. யார் பேச்சயும் கேட்கவும் மாட்டா. ஆனா ஆசை மட்டும் நெறைய இருக்கு.’

    ‘ஆமா சித்தப்பா.  பார்க்கலாம். சரி நீங்களும் சித்தியும் எவ்வளவு நாள் கொடைக்கானல் தங்க போறீங்க. விஸ்வா அண்ணாவும் தங்கறாரா?’

    ‘அவ இல்லாம நாங்க எங்க போவோம். நீயும் தானப்பா எங்க கூட தங்கறேன்னு’ விசுவாவை பார்த்துக் கேட்டார் கமலநாத்.

    ‘வீட்ல சுனிதா கிட்ட சொல்லிட்டு தான்  வந்தே பெரியப்பா’ என்று கூறியவாறு பெட்டிகளை எடுத்து அவன் கார் டிக்கில வைத்தான்.

    ‘விஸ்வாண்ணா கார்லயே போறீங்களா?’

    ‘ஆமா அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறா. எங்கார்ல போலாங்கறா’

    ‘சரி சித்தப்பா பார்த்து போயிட்டு வாங்க. கண்ணன் கிளம்பினான்.’

    வேகமாக வீட்டை அடைந்த கண்ணனை ஏம்ப்பா லேட்டா வர்றே என்ற மிரட்டல் தொணியில் தையல் மெஷினை மிதித்துக் கொண்டே மருதாசலம் கேட்டான்.

    ‘சித்தப்பாவும் சித்தியும்  இன்னக்கி  கொடைக்கானல் சுத்திப்பார்க்க கிளம்பறாங்க. சில ஐட்டம்ஸ் வாங்கிட்டு வர சொன்னாங்க. சரி வர வழி தானேனு வாங்கி கொடுத்துட்டு வழி அனுப்பி வெச்சிட்டு வர்றேன் .’

    ‘தனியாவா?’

    ‘இல்ல விஸ்வாண்ணாவும் கூடப் போறாரு. அவரு கார்ல தான் இவங்க போறாங்க. அந்த அண்ணன் போகாம இருப்பாரா?’

    ‘ம்ஹூம் கொடுத்து வச்சவங்க பைய, பிரான்ஸ்ல இருந்து மாசாமாசம் காசு அனுப்புறான். இங்கே எல்லாத்தையும் விஸ்வா தன் பிள்ளையா இருந்து கவனிச்சுக்கறா. ம்ஹூம் அதுக்கும் ஒரு கொடுப்பின வேணும்.’

    கை கால் மூஞ்சி கழுவிட்டு வர்றதுக்குள்ள லதா டிஃபன் எடுத்துவைத்தாள். மகள் கீதா ஹோம் வொர்க்  எழுதிக் கொண்டிருந்தாள். கண்ணனுக்கு மனக்கஷ்டமாக இருந்தது. மனசுக்குள்ள நெனச்சுகிட்டா சித்தப்பா, பசங்கள நல்லா படிக்க வெச்சாரு. வெளிநாட்டில் செட்டில் ஆகியிருக்காங்க. நமக்குத் தெரிஞ்சது இந்த ஆட்டோ தொழில் மட்டும்தான். கவர்ன்மென்ட் பள்ளில பத்தாவது வர படிக்கவெச்சாரு.  இதுல எப்ப பார்த்தாலும் அவங்களோட நம்மள வச்சு ஒப்பிட்டு பார்த்துட்டு இருக்கிறது வேற ஒரு கொறச்சல். கோபந்தா வருது. வேற வழி சகிச்சிகிட்டுதானே ஆகணும். சாப்பிட்டு படுக்கையறைக்கு சென்றவன் இருந்த மன வருத்தத்தில் கீதா சாப்பிட்டாளா என்று கூட கேட்கவில்லை. படுத்துத் தூங்கி விட்டான்.

    2

    கொடைக்கானல் மாலை 4 மணிக்கு வண்டி போய் சேர்ந்தது.  ஹோட்டல் அறையில் பெட்டிகளை எடுத்து வைத்துவிட்டு அவர்களை சிறிது நேரம் ஓய்வெடுக்கவிட்டு, வேறொரு அறைக்குச்சென்றான் விஸ்வா.

    ‘ஏங்க இந்த விஸ்வா நம்ம பெத்த புள்ள மாதிரி நாம எப்ப கூப்பிட்டாலும் ஓடிவரா நாம பெத்த புள்ள கூட நம்மள இந்த மாதிரி அக்கறையா கவனிப்பானானு தெரியல.

    ‘ஆமா அவ அப்பா இறந்தது அவனால ஏத்துக்க முடியல. இன்னும் கொஞ்ச நாளு இருப்பாருன்னு எதிர்பார்த்தா. அதனால் தான் சின்ன ஹாஸ்பிடலா இருந்தாலும் நல்ல ஹாஸ்பிடலா அட்மிட் பண்ணி பாத்துக்கிட்டா.’

    ‘ஆமா அவனுக்கு அப்பா மேல பாசம் அதிகம்தா. தங்கவேல் அண்ணனும் அப்படித்தான் என்னன்னாலும் புள்ளைக்கி புள்ளைக்கினு யோசிப்பாரு. அப்படியே யோசிச்சு கட்டுனதுனால தான் இப்ப இவ்வளவு பெரிய சொந்த வீட்ல இருக்கா.’

    ‘சரிதா நீங்க சொல்றது அவன் பொண்டாட்டி சுனிதாவும் மாமியா சாகுற வரைக்கும் நல்லா தா பாத்துகிட்டா. அந்த அம்மா கழுத்தில் கெடந்த எட்டு பவுன் தாலியை கூட நாத்தனாருக்கே கொடுத்துட்டா. ஆனா அந்த அம்மா கிட்ட எப்படியும் அதை சேர்த்தாம 40 பவனாவது இருந்திருக்கும். அது யாருக்கு போச்சுன்னு தெரியல .’

    ‘நமக்கு எதுக்கு அதெல்லாம் அது அவங்க ஃபேமிலி விஷயம். விஸ்வநாதன் நம்மகிட்ட எப்படி இருக்கான்னுதா பாக்கணும். ஞாயிற்றுக்கிழமையானா நோன்வெஜ்ஜோட  காலைல  வந்து நிக்கறா. எங்க போறதா இருந்தாலும் நம்மளையும் அவங்க பேமிலியோட சேர்த்து கூப்பிட்டு போறான். என்ன வேணும்னாலும் சொன்னா உடனே வாங்கிட்டு வர்றான். டாக்டர் கிட்ட போகணும்னா கூட்டிட்டு போறா. ஃபோன் பண்ணனா உடனே வந்து நிக்கறா. இதை விட என்ன வேணும். போய் படுத்து தூங்கு.’

    கொடைக்கானலில் ஒரு வாரம் சுத்தி பார்த்துவிட்டு வீடு திரும்பினர். கமலநாதனும், தங்கவேலுவும் பால்ய நண்பர்கள். தங்கவேலு ஒரு வயது தான் சின்னவன். இருவரும் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள். பிறகு தங்கவேலுவிற்கு அரசு வேலை கிடைத்து விட்டது. கமலநாதனுக்கு அதே  பர்னிச்சர் வேலைதான். பர்னிச்சர் என்றால் லட்சங்கள் புரளும் வியாபாரம். பெரிய பெரிய விலை உயர்ந்த மரங்களை வியாபாரிகளுக்கு கைமாத்தி விடுற வியாபாரம். அவருக்குனு ரெகுலர் கஸ்டமர்ஸ் இருந்தாங்க. யாரு எப்ப வருவாங்க எப்படி  டீலிங் பேசுவாங்கன்னு தெரியாது. ஆனா பிசினஸ் போயிட்டே இருக்கும் அந்த சில டெக்னிக்ஸ யாருக்கும் சொல்லியே தர மாட்டார்.

    3

    கண்ணன் ஆட்டோ ஓட்டுன காசை கொஞ்சம்  பெரிய ஸ்டீல் உண்டியல் வாங்கி அதில் போட்டு வச்சான்.  சரி அப்பாவுக்கும் ஒரு ஆசை தானே விமானத்தில் போய் ஏதாவது ஒரு வெளிநாட்டில் போய் இருந்துட்டு வரணும்னு. துபாய் தான் பக்கமா இருக்கு அங்கே கூட்டிட்டு போலாம். அதுக்கு தான் உண்டியல்ல காசு சேர்த்துக்கொண்டிருந்தான்.  சித்தப்பா பசங்க ஃபிரான்சில இருக்கிறதுனால அவர் அடிக்கடி போயிட்டு வருவாரு. ஒருவேளை அவரை பார்த்து கூட இவருக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். சரி ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம் மனைவி லதாவும் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் சொல்ல  மாட்டா . கொடைக்கானலில் இருந்து கார்ல திரும்பி வரும் போதுதான் கமலநாதன், விஸ்வா கிட்ட சொன்னார்.

    ‘விஸ்வா…………. வீட்ல போய் இனி வேலைக்கு ஒரு ஆள் விட்டு கொஞ்சம் மராமத்து வேலை எல்லாம் செய்யணும்.’

    ‘ஏன் பெரியப்பா திடீர்னு ‘

    ‘உங்கிட்ட சொல்லலையா வினோத் பேமிலியோட அடுத்த மாசம் வர்றா.’

    ‘அப்படியா எவ்வளவு மாச லீவு.’

    ‘இல்ல திரும்ப போறதப்பத்தி இங்க வந்துதா யோசிக்கணும்னு சொல்றா’

    ‘அப்படியா ?’

    ‘ஆமா ‘

    பார்ப்போம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கழித்து கமலநாதன் விசுவாவுக்கு போன் செய்தார். ‘ஏம்ப்பா இந்த பக்கம் ஆளையே காணோம்.’

    ‘பெரியப்பா கொஞ்சம் வேலை பிசி.’

    ‘சரி சரி பாருப்பா அந்த வீட்டு மெயின்டன்ஸ்க்கு ஆளக்கேட்டிருந்தேனே!’

    ‘ஆ……. ஆமா மறந்துட்டே………. வரச்சொல்றே .

    ‘பெரியப்பா நா அப்புறம் பேசுறேன் .’

    வினோத் ஊரில் இருந்து குடும்பத்தோடு வந்தான் விஸ்வநாதன் அவனை ஏர்போர்ட்டுக்கு ரிசீவ் பண்ண போனான் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றவன் ஒரு வாரமா வரவே இல்லை. போன் பண்ணாலும் சரியா ரெஸ்பான்ஸ் இல்ல.

    ஒரு வாரம் மகன்கூட நல்லா ஊரச்சுத்திட்டு வீட்ல உட்காந்திட்டு இருக்கும்போது அப்பாவுக்கும் மகனுக்குமான விவாதம் தொடர்ந்து பெரிதாகிக்கொண்டே சென்றது.

    ‘அப்பா எனக்கு உங்க சொத்தெல்லாம் ஒன்னும் வேண்டா.  நாம இந்த வீட்டக் காலி பண்ணிட்டு உங்களுக்கு பிசினஸ் பாக்குறதுக்கு வசதியா டவுன பார்த்து போவோம்.  உங்க கூட இருந்து உங்க பிசினச கத்துக்கறே.’

    ‘அப்போ நான் சொன்னப்ப எல்லாம் கேட்கல. என்னால பிசினஸ் பார்க்க முடியலன்னு அப்போ இதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இப்போ எனக்காக ஒரு கஸ்டமர் வட்டாரத்தை உருவாக்கி வச்சிருக்கேன் இப்போ உனக்கு என் பிசினஸ் வேணுமா ? .’

    ‘சரி உங்க பிசினஸ் வேண்டாம். இந்த வீட்ட கொடுத்துட்டு டவுன்ல நல்ல ஒரு வீடா பார்த்து வாடகைக்கு போலாம். இத வாடகக்கு விட்டர்றலாம்’

    ‘என்னோட இந்த வீட்டை விட்டுட்டு நான் பொறந்த இந்த வீட்ட விட்டுட்டு உன் கூட வந்து அடிமையா இருக்கணுமா. அதெல்லாம் முடியாது.’

    ‘அப்பா  ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க.’

    ‘ஆமா பேசாம எனக்கு முடியலடா எங்க கூடவே இருடான்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்படி கெஞ்சினே. அப்ப எல்லாம் ஒனக்கு எதுவும் தோணல.  இப்போ  உன்னோட மாமனார் செத்திட்டாரு  அவரு  பிசினஸ் பார்க்க ஆளு வேணும் அதனால இங்க செட்டில் ஆயிடலாம்னு வந்திருக்கே. உன்ன விட விஸ்வா எவ்வளவோ மேல். நாங்க பெறாத புள்ளையா இருந்தாலும் எங்களுக்கு இன்னும் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து பண்ணுறா.  எதயும் எதிர் பார்க்க மாட்டா.’

    ‘ஆமா மாமனார் பிசினஸ் பாத்துக்க தான் வந்தே. இப்ப என்ன அதுக்கு உங்க பிசினஸ நீங்களே பாருங்க, ஆனா இந்த வீட்ல எனக்கு முழு உரிமை இருக்கு. தனியா இருக்கிறது தான் எங்களுக்கு பிடிக்கும்னு தானே அங்கே வந்தப்போ ஒரே மாசத்துல திரும்பி வந்தீங்க. நா அங்க ரெண்டு குழந்தைகள வெச்சிட்டு தனியா கஷ்டப்படுறேன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா .’

    ‘இந்தர்றா உனக்கு இந்த வீடு தானே வேணும். வெச்சுக்கோ. நான் இப்பவே இங்கிருந்து போறேன். கண்ணனப் பாரு அவங்க அப்பா அவனுக்கு ஒண்ணுமே சேத்து வைக்கல ஆனா அவங்க அப்பனுக்கு ஒண்ணொண்ணும் பார்த்து பார்த்து செய்யறா, அவங்க அப்பா ஆசைப்படுறாருனு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வச்சு அவங்க அப்பாவை துபாய்க்கு கூட்டிட்டு போறான். நேத்துதான் எனக்கு போன் பண்ணி சொன்னா இந்த வாரத்தில் துபாய் போறோம் சித்தப்பானு.  ஒன்ன எல்லாம் படிக்க வெச்சு ஆளாக்கனதுக்கு நீ இப்படித்தாண்டா கடைசில பேசுவே. நானும் எங்க கூட கடைசி காலத்தை கழிக்கதான் வந்திருக்கேன்னு நினைச்சே. இனிமே நீ இருக்கிற வீட்ல நான் இருக்க மாட்டே.  நான் இப்பவே கிளம்பறேன்டா  நீயே இரு என்று ஒரு பெரிய பை நிறைய  துணிகளை போட்டுக்கொண்டு வெளியிலிறங்கினான். செண்பகம் கோயிலுக்கு போயிட்டு வர்ற வரைக்கும் கூட காத்திருக்கல. ஆட்டோ ஏறிச் சென்று விட்டார்.

    4

    ‘ஏங்க நீங்க உங்க பெரியப்பா வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு ஏன் போகலையா?’

    ‘அதுதான் அவருடைய பையன் ஊர்ல இருந்து வந்திருக்கறானே.’

    ‘அதுக்கு என்ன இப்போ இதுக்கு முன்னாடி வந்தப்போ உங்க கார்ல தானே ஊரு சுத்துனாங்க இப்ப மட்டும் என்ன ஆச்சு?’

    ‘இனி அவன் திரும்ப வெளிநாட்டுக்கு போக மாட்டானாம்’

    ‘ ஏ………..?’

    ‘அவ அப்பாவோட பிசினஸை பார்க்க போறானாம்’

    ‘அதுக்கும் நீங்க அவங்க வீட்டு போறதுக்கும் என்ன இருக்கு?’

    ‘உண்மைய சொல்லட்டுமா நான் அவரு வீட்டுக்கு போறது, வேணுங்கிறதெல்லாம் வாங்கி கொடுக்கறதெல்லாம் காரணமாத்தான் .’

    ‘என்ன சொல்றீங்க ?’

    ‘ஆமா நான் என்ன லூசா? எங்க அப்பாவும் அவரும் நல்ல நண்பர்களாத்தா இருந்தாங்க. அண்ணந்தம்பியாதா பழகனாங்க, நான் இல்லைன்னு சொல்லல. எங்க அப்பாவுக்கு கவர்மெண்ட் வேலை அவருக்கு பிரச்சனை இல்ல. ஆனா என்ன கமலநாத சித்தப்பாவோட பிசினஸ் விஷயங்கள தெரிஞ்சுக்கணும்னு எவ்வளவு தடவை அனுப்பி இருப்பாரு.  போறப்ப எல்லாம் எடுபிடியா என்ன வெச்சிருந்தாரு.  முக்கியமான கஸ்டமர்ஸெ பார்க்கப்போகும் போது என்ன ஒரு தெரு தள்ளி  நிக்க வெச்சுட்டு போவாரு. அவரோட பிசினஸ் சூட்சமங்கள கத்துக்கணும்னு தான் அவருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி போனே. என்னோட வண்டில கூகுள் மேப் ரெக்கார்டோட செட் பண்ணி இருக்கேன் அதனால தான் நிறைய இடத்துக்கு அவங்க கார எடுக்க விடாம, நம்ம கார எடுத்துட்டு போனே. அவங்க பிசினஸ் டீலிங் பேசும் போதெல்லாம் நான் காருக்கு வெளியில்தான் நிப்பேன்.  அவங்க உள்ள உட்கார்ந்து பேசுனதெல்லாம் ரெக்கார்ட் ஆயிருக்கு. நல்லா வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல பானை ஒடஞ்ச மாதிரி ஊர்ல இருந்து அவரு பைய வந்திட்டா. இனி எனக்கு சொல்லித்தரவா போறாரு.’

    ‘ நிஜமா நீங்க இதுக்கு தான் போறீங்கன்னு தெரியாம போச்சு.’

    ‘ நாமும் நம்ம லைஃப்ல செட்டில் ஆக வேண்டாமா? திவ்யா பிளஸ் டூவந்துட்டா அடுத்த வருஷம் நீட். அவ ஏவரேஜாதா படிப்பானு எனக்கும் தெரியும். ஆனா அவளை டாக்டர் ஆக்கணும்ங்குறது எங்கனவு. வருமானத்த ஜாஸ்தி பண்ண வேண்டாமா?’

    ‘இதுக்கே நீ ஷாக் ஆனா என்ன பண்றது. உனக்கு தெரியாத இன்னொரு விஷயத்தையும் சொல்றேன் ஆத்திரம் வரும்போது எல்லாத்தையும் சொல்றதுதா.  எங்க அப்பாவ நல்லா கவனிச்சிருந்தா இன்னும் ரெண்டு வருஷம் நல்லா இருந்திருப்பாரு. அவரோட பேங்க் பேலன்ஸ் ஃபுல்லா காலி பண்ணித்தா வைத்தியம் பார்த்தேன் ரெண்டாவது ஒரு ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரு. முப்பது நாள் போகட்டும்னு சொன்னப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அந்த ஆபரேஷன் செலவுக்கு கண்டிப்பா எனக்கு அவர் கட்டுன வீட்ட தான் அடமானம் வைக்கணும். அதுவும் பத்துமா இல்ல விக்க வேண்டியது வருமானு தெரியல. மொதல் ஆபரேஷனுக்கப்பறம் அவருக்கு கேஸ் ட்ரபுள் இருக்கிற ஐட்டம், கூல்டிரிங்க்ஸ், சிசர், ஊறுகா, மது இதெல்லா  கொடுக்க கூடாதுனு டாக்டர் தெளிவா சொல்லியிந்தாரு. வேற வழி தெரியல மனசாட்சியை கட்டி போட்டுட்டு தான் பிரிட்ஜ் ஃபுல்லா கொக்க கோலாவும், சரக்கு பாட்டிலுமா வாங்கி அடிக்கினே. அவரு அத பார்த்தா சும்மா இருக்க மாட்டார்னு எனக்குத்தெரியும். ஆனா நானா ஊத்திக் கொடுக்கல. அவராத்தான் எடுத்து குடிச்சிட்டாரு. கேஸ் அடச்சு உயிரை விட்டுட்டாரு.’

    வாயில் கைப்பொத்தி  திகைத்துப்போயி  உக்காந்தா சுனிதா.

    ‘என்ன ஷாக் ஏங்க உங்கள பாக்கவே பயமா இருக்கு. நாளைக்கு எங்களையும் இப்படி எல்லாம் யோசிப்பீங்களானு சினிமா டயலாக் எல்லாம் பேசாதே. எல்லாம் நம்ம குடும்பத்துக்காகத்தான் மத்தவங்களுக்கு முன்னாடி என் பொண்ணு டாக்டர் ஆகணும் அவ்வளவுதான். இப்படி பாக்குற அளவுக்கு நான் ஒன்னும் கொலைகாரன் கிடையாது. செய்ற வேலைல  சாதகங்களைத் தேடுறேன் அவ்வளவுதான். எல்லாம் நம்ம எதிர்காலத்துக்காகத்தான். அந்த கிழவங்கிட்டதா கொஞ்சம் ஏமாந்திட்டேன். அந்த ஆட்டோக்காரன் கண்ணன  அவருகிட்ட நெருங்க விடாம கவனமா இருந்தே. ஆனா அவன் பையன் இப்படி உடனே வருவானு  யோசிக்காம போயிட்டே…. ச் …..சே…..’

    விஸ்வாவின் வீட்டை நம்பி தஞ்சம் புக நெனச்சு வந்த கமலநாதன் கதவுக்கு வெளியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார். ஆட்டோவில் இருந்து இறங்குகிற  மனைவி செண்பகத்தின் குரலும், மகனின் குரலும் கேட்டது. கமலநாதனின் எண்ணங்கள் மிதக்கத் தொடங்கின, வாயு மண்டலத்தில் பறப்பதாக உணர்ந்தார் .

    சத்தம் கேட்டு  விஸ்வாவும் சுனிதாவும் வெளியில் வந்தனர்

    Share
  • இந்திய விண்ணுளவி ஆதித்யா -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத் தொடங்கியது

    இந்திய விண்ணுளவி ஆதித்யா -L-1 சூரிய சுற்று அரங்கில் ஆய்வு செய்யத் தொடங்கியது

    சி. ஜெயபாரதன், B. E. (Hons) P.Eng [Nuclear] கனடா

    https://youtu.be/XrmKEF70L1A

    2024 ஜனவரி 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வகம் [இஸ்ரோ] ஏவிய ஆதித்யா-L-1, பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் ( 1.5 மில்லியன் கி.மீ) தூரத்தில் உள்ள மாயச் சுற்றுப் பாதையில் [HALO ORBIT AROUND LAGRANGIAN POINT (L-1)] சுற்ற ஆரம்பித்தது.  அந்த ஆதித்யா விண்ணுளவி 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி PSLV-C57 ராக்கெட்டில் ஏவப்பட்டது. ஏழுவிதமான கருவிகளைச் சுமந்து செல்லும் விண்ணுளவி அடுத்த 5 ஆண்டுகள் சூரியனை ஆய்வு செய்து தகவல் அனுப்பும். ஏழில் 4 கருவிகள் சூரிய ஒளியை ஆராய்பவை. மற்ற 3 கருவிகள் ஒளிப் பிழம்பு [Plasma] & காந்த சக்தியை உளவு செய்பவை.

    ஆதித்தியா ஆய்வுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
    1.  ஆதித்தியா   L-1  சூரியனை உற்று நோக்க, தங்கு அரங்கில் சுற்றுப் பாதை அமைக்கப்பட வேண்டும்.

    2.  ESA  தகவல்படி,  L-1 தங்கு அரங்கில் பெரிய இரு கோள்களின் ஈர்ப்பு விசைகள் கழிவுபட்டு நகர்ச்சி எளிதாய் ஆகிறது.

    3. முதன்முதல் முழுவட்டச் சூரிய வடிவம் பதிவு செய்யப்பட்டது,

    4.  சூரியப் புயல்கள், சூரிய வீச்சுகள் [Solar Flares] பற்றி முதல் விளக்கமாக அறிய முடிந்தது. அவற்றின் விளைவுகள் பூமியின் காலநிலையை எப்படி மாற்றுகின்றன?  விண்வெளியில் இயங்கும் 7800 உலக துணைக்கோள்கள் எவ்விதம்
    பாதிக்கப்படுகின்றன?  என்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்கிறார்கள்.

    5.  ஆதித்யா திட்டச் செலவு 46 மில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது.

    Share
  • பொங்கலோ பொங்கல் !

    பொங்கலோ பொங்கல் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
    தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
    பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
    புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

    நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
    நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
    உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
    உயர்வான எங்களது பொங்கல் விழாவே

    வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
    மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
    தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
    தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

    வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியே
    விரைவாக நீராடி புத்தாடை அணிந்துமே
    பொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவே
    மங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள்

    பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்
    அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவா
    அரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமே
    அம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவா

    பானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்
    பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம்
    பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமே
    அரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம்

    பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்
    அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம்
    பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியே
    பொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம்

    அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார்
    அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும்
    பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்
    அம்மாவுடனே  பொங்கலினை இறக்கி வைத்திடுவார்

    கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமே
    பொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்
    அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்
    அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம்

    தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்
    தாத்தாபாட்டி  தூரநின்று கேட்டு மகிழுவார்
    அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்
    ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமே

    தாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்
    ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார்
    அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்
    ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும்

    பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்
    எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம்
    ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்
    ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம்

    பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்
    தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம்
    உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்
    உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம்

    பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்தது
    மங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பது
    எங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பது
    இனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது

    Share
  • பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்

    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு”

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மன மிருத்தும் அமுத வாக்குகள்.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்க ரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலுந்தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவை அனைத்தும் ஒன்றாய் இணையும் விழாவினைப் பற்றி அறிவது அவசியம் அல்லவா? அந்த விழாவின் உட்கருத்தை அறிவோமா ? வாருங்கள் !

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல் !

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட் களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல்யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டு மென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழவைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றை யெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரி தாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும் , தைப் பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கி றார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்.

    Share
  • அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு.

    இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக வந்தது.

    `கணக்கு’ என்றதுமே உமா ஞாபகம்தான் எழுந்தது.

    கண்டிப்பாக உமாவுக்குப் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும். அதே சாயல், அதே வெட்கங்கலந்த சிரிப்பு.

    அவனுடன் படித்த உமா படிப்பில் கெட்டிக்காரி. பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் அவளுடன் பழகியவன் அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.

    சிடுமூஞ்சி கணக்கு வாத்தியாரைப்போல் இல்லாது, பொறுமையாக விளக்கிவிட்டு, “நான் என்ன, ஒன்னோட டீச்சரா?” என்று சிரிப்பாள் உமா. வெட்கமும் பெருமையும் அதில் கலந்திருக்கும்.

    “சனிக்கிழமை என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா? என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, அவள் அதிகம் யோசிக்கவில்லை.

    “எங்கேடா?” என்றுமட்டும் கேட்டாள்.

    “சொன்னாத்தான் வருவியா? அது ஒரு சர்ப்ரைஸ்! ஒனக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்று புதிர் போட்டுவிட்டு, “லைப்ரரின்னு வீட்டிலே சொல்லிட்டு வா!” என்று திட்டம்கூட வகுத்துக்கொடுத்தான்.

    “எங்கேடா?” மீண்டும் கேட்டாள்.

    “ராஜன் வீட்டுக்கு!” என்று மட்டும் தெரிவித்தான்.

    அவர்களுடன் இன்னும் நாலைந்துபேர் இருந்தார்கள். ஒன்றாகப் படித்தவர்கள்.

    “டி.வி பாக்கத்தான் என்னை வரச்சொன்னியா? இதுக்கு வீட்டிலேயே ஒக்காந்து படிச்சிருப்பேன்,” என்று அலுத்தவளிடம், “இது வேற மாதிரி,” என்று நமட்டுச்சிரிப்புடன் புதிர்போட்டான் ரமணன்.

    அவளுக்குப் பயம் வந்தது. “ராஜன்! ஒங்க வீட்டிலே பெரியவங்க யாரும் இல்லே?” என்று கேட்டாள்.

    “அப்பா வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிருக்கார். அம்மாவும் கூடப்போயிருக்காங்க. வீட்டிலே நானும், அண்ணனும்தான். நல்ல காலம், அவனுக்கு இன்னிக்கு ஏதோ விளையாட்டுப்போட்டி! நாம்ப ஜாலியா படம் பாக்கலாம்!” பெரிய சிரிப்புடன் பதில் வந்தது.

    “நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான் ரமணன். “ஒனக்கும் சேர்த்துக் காசு குடுத்திருக்கேன் உமா. கொஞ்சம் பாரு. பிடிக்காட்டி போயிடலாம்”.

    அறையில் அசாத்திய மௌனம் நிலவியது. எல்லாம் படம் ஆரம்பிக்கும்வரைதான். அதன்பின் ஒரே கூச்சல், கும்மாளம்.

    படிப்பைத்தவிர வேறு எதையும் அறிந்திராத அந்த பதினான்கு வயதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது.

    `பெண்களை என்னமாக இழிவு படுத்துகிறார்கள்!’ என்று கோபமும் வந்தாலும், புதிய விஷயத்தை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்துடன் பார்த்தாள்.

    திரையில் வரும் பெண்ணாகவே காமத்துடன் தன்னைப் பார்க்கிறார்கள் நண்பர்கள் என்று புரிந்துகொண்டபோது நிலைமை முற்றியிருந்தது.

    அதற்கடுத்த வாரம் பள்ளியில், “ஸாரி உமா. இனிமே அப்படிப் பண்ணமாட்டேன்,” என்று ரமணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.  “நடந்ததை மறந்துடு”.

    ஆனால், நடந்ததை மறக்கமுடியாதபடி விதி விளையாடியது.

    “யாருடி அவன்? நீ படிச்சு முன்னுக்கு வருவேன்னு பாத்தா, இப்படி கெட்டுப்போய் வந்து நிக்கறியே!” அப்பா குதித்தார்.

    இருபுறமும் போலீஸ் காவலுடன், தலையைக் குனிந்தபடி, ரமணன் நடந்தபோது பள்ளி முழுவதும் வேடிக்கை பார்த்தது. பின்னால், வருத்தமே உருவாக அவனுடைய விதவைத்தாய்.

    இளம் வயது அவனுக்குத் துணையாக இருந்தது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினார்கள்.

    ராஜன்தான், `எனக்கென்ன பயம்? எங்கப்பா எனக்கு ஆதரவா இருக்காரு!’ என்று வீறாப்பாகப் பேசினாலும், ஈராண்டுகளாக இப்படி ஒரு தொழிலில் சாமர்த்தியமாகச் சம்பாதித்த தனக்கு உலை வைத்துவிட்டானே பாவி என்று குமுறினான்.

    `அந்தப் பொண்ணு `நோ! நோ!’ ன்னு கத்தினா. அவ கையையும், காலையும் ரெண்டு, ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு,” என்ற வர்ணனையுடன் வாக்குமூலம் அளித்தான்.

    வீடியோ கடைக்குப்போய், `ஸ், ஸ்’ என்று ரகசியக்குரல் கொடுக்க, மேசை அடியில் கொடுப்பார்கள் அப்படங்களை. அவன் நல்ல காலம், `அவங்க அந்த மாதிரி படம் பாக்கறப்போ ஒனக்கென்ன அங்கே வேலை?’ என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே!

    வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, புதிய மனிதனாக வெளியே வந்த ரமணன் முதல் வேலையாக உமாவைத் தேடிப்போனான்.

    அவளிருந்த வீட்டில் யாரோ குடியிருந்தார்கள். எங்கு போய் தேடுவது என்ற குழப்பம்தான் எழுந்தது அவனுக்குள்.

    விரக்தியுடன், தானுண்டு, தன் கடை உண்டு என்று வாழ ஆரம்பித்தான்.

    ரமணனுடைய மினி மார்க்கெட்டில் வேலை செய்த பரதனுக்குக் கல்யாணமாம்.

    “எல்லாரும் ஒங்களைமாதிரி சன்யாசியா இருப்பாங்களா ஸார்?” என்று விளையாட்டாகக் கேட்டபடி பத்திரிகை கொடுத்தான் மாப்பிள்ளை.

    நானா சன்யாசி! நான் பிஞ்சிலேயே வெம்பிப்போனவண்டா!

    “என்னடா? லவ்வா?”

    வெட்கப்பட்டான். “அதெல்லாம் இல்ல ஸார். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்த பொண்ணு. பஸ் ஸ்டாப்பில பாத்தேன். பிடிச்சுப்போச்சு”.

    “அப்போ அது லவ்தான்!” தனக்கும் மீண்டும் கலகலப்பு வந்துவிட்டதே என்ற ஆச்சரியம் எழுந்தது ரமணனுக்கு.

    மணவறையில் அமர்ந்த பெண்ணைப் பார்த்ததும், அவன் மனம் ஆடிப்போயிற்று.

    இவளா? இவளா அனாதை?

    அப்பன் நானிருக்கிறேன்.

    ஆனால், அதை உரக்கச் சொல்லமுடியுமா?

    பிறந்ததுமே, `வேண்டாம்!’ என்று உன்னை உதறிவிட்டுப் போய்விட்டாளா உன் தாய்? ஆத்திரம் எழுந்தது.

    `பாவம், சிறு பெண்! அவள் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று மூளை தர்க்கம் செய்தது.

    நான் செய்த தவற்றுக்கு இப்பெண்கள் இருவரும் பலி!

    “மொதல்லே முதலாளி காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம், வா!”

    கூச்சத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ரமணன்.  “நல்லா இருங்க!” என்று வாழ்த்தியபோது, குரல் தழுதழுத்தது.

    தனக்கு நாதியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை இனி இல்லை. கடையை பரதனுக்குக் கொடுப்பதுதான் தான் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இனியாவது மகள் செல்வச்செழிப்புடன் வாழ்வாள்.

    தன்னைப்போல் தனிமரமாக இல்லாது, எங்கோ குடும்பம், குழந்தைகள் என்றிருப்பாள் உமா. அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது.

    “ஸார் முகத்திலே இன்னிக்குத்தான் சிரிப்பைப் பாக்கறேன்!” என்று மகிழ்ச்சியுடன் புதுமனைவியிடம் கூறினான் பரதன்.

    அது நிலைக்காது என்று அப்போது எவரும் நினைக்கவில்லை.

    ஒரு வாரத்திற்குப்பின். “ஒங்க மொதலாளி நீங்க நினைக்கிறமாதிரி நல்லவரில்லே. என்னை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறாருங்க. நாம்ப வேற எங்கேயாச்சும் போயிடலாம். ஒங்களுக்கு இந்த வேலை வேணாம்!” என்று கெஞ்சலும் பயமுமாகக் கூறியபோது, மனைவியின் விருப்பத்திற்கு அடிபணிந்தவனாக, “நானும் கவனிச்சுட்டுத்தான் வரேன். காலாகாலத்திலே கல்யாணம் கட்டாட்டி இப்படித்தான்!” என்று அந்த பிரச்னைக்கு முடிவு கட்டினான் பரதன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(480)

    குறளின் கதிர்களாய்…(480)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(480)

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற.

           –திருக்குறள் –61(புதல்வரைப் பெறுதல்)

    புதுக் கவிதையில்…

    புவன வாழ்வில்
    பெறத்தகுந்த பேறுகளில்
    அறியவேண்டியவற்றை அறியும்
    அறிவு படைத்த
    நன்மக்களாம் செல்வத்தைப்
    பெறுவதைத் தவிர
    மற்றவற்றை ஒருவன்
    பெறத்தக்க பேறுகளாய் யாம்
    மதிப்பதில்லை…!

    குறும்பாவில்…

    பெறத்தகுந்த பேறுகளில் அறிவுடை
    நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றவற்றைப்
    நல்ல பேறுகளாய் மதிப்பதில்லை…!

    மரபுக் கவிதையில்…

    பெற்றிடும் பேறுகள் பலவற்றுள்
         பெருமையும் சிறப்பதும் கொண்டதுதான்
    வற்றிடா அறிவினைக் கொண்டவராய்
         வளர்ந்திடும் செல்வமாம் நன்மக்கள்
    பெற்றதால் வந்திடும் பெருமையதே
         பேணியே காத்திடும் அருமையிதே,
    மற்றவை அனைத்துமே பேறென்ற
         மதிப்பினை யுடையவை யல்லவாமே…!

    லிமரைக்கூ…

    பேறுகளில் மிகச்சிறந்த பேறு
    அறிவுடை நன்மக்களைப் பெறுதலே, இதைவிடச்
    சிறந்ததாய் இல்லை வேறு…!

    கிராமிய பாணியில்…

    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
    நல்ல அறிவுள்ள புள்ளயள
    பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்..

    மனுச வாழ்கயில கெடைக்கிற
    பேறுலயெல்லாம் பெரும்பேறு
    அறியவேண்டியத அறியிற
    அறிவு உள்ள நல்ல
    புள்ளயள பெத்தெடுக்கிறதுதான்,
    அதவிட ஒசத்தியா மதிப்புள்ள
    பேறெதுவுமே இல்ல..

    அதால
    செல்வம் செல்வம் பெருஞ்செல்வம்
    ஒலக வாழ்க்கயில பெருஞ்செல்வம்,
    நல்ல அறிவுள்ள புள்ளயள
    பெத்தெடுக்கிறதே பெருஞ்செல்வம்…!

    Share
  • கடந்த வருடத்தில் நனைந்த பொழுதுகள்

    கடந்த வருடத்தில் நனைந்த பொழுதுகள்

    சக்தி சக்திதாசன்

    ஓடியே போய் விட்டது 2023. எம் கைகளில் 2024 எனும் குழந்தையைத் திணித்து விட்டுத் தான் போய்.சரித்திரப் புத்தகத்தினுள் புதைந்து விட்டது.

    நடந்து முடிந்த விடயங்கள் நடந்தவையேதான். அவற்றைத் திருப்பிப் புரட்டிப் பார்க்கலாமே தவிர மாற்றியமைக்க முடியாது.

    ” நடந்ததை எண்ணிக் கவலைப்பட்டால் அவன் மூடன் ” எனும் வரிகள் கவியரசரின் பாடல் ஒன்றிலே வரும்.
    பின்

    ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும் ?
    ஒவ்

    வொரு திருப்பத்திலும் ஒரு பாடல் எமக்கு போதிக்கப்படுகிறது.

    சிலவற்றில் இன்பத்தை நுகர்கிறோம் சிலவற்றில் துன்பத்தில் துடிக்கிறோம்

    அவையிரண்டும் எமக்கு அனுபவப் பாடங்களே !

    அப்பாடங்களின் மூலம் நாம் கற்றுக் கொண்டது என்ன ?

    அதுவே இந்தத் திரும்பிப் பார்த்தலின் நோக்கமாகிறது.

    2023 ம் ஆண்டு பிறக்கும்போதும் நான் சென்னையிலே தான் அதன் பிறப்பினைத் தரிசித்தேன்.

    2023 சர்வதேசரீதியில் பல நிகழ்வுகளைத் தோற்றுவித்திருக்கிறது.

    2023 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் தாக்கம் என் பிரத்தியேக வாழ்க்கை , என்னைத் தனது தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய இராச்சியம், நான் தமிழ்த்தாகம் தீர்க்கவும், ஆன்மீக விளக்கங்களுக்காகவும் தேடியோடும் இந்தியா , என் தாய்மண்ணான இலங்கை எனும் வகையில் எவற்றை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலே இது.

    குழந்தைப் பருவம், வாலிபம், நடுத்தர வயது எனும் பருவங்களைக் கடந்து இன்று முதுமையின் வாசலினுள் நுழைந்த எனக்கு 2023 போதித்தது என்ன ?

    அறுபத்தியேழு எனும் இந்த அகவையில் நான் கற்றுக் கொண்டவைகள் இருபதில் தெரிந்திருந்தால் ?

    இன்றிருக்கும் எழுத்தாளன் சக்தி சக்திதாசன் என்பவன் இருந்திருப்பானா என்பது சந்தேகமே !

    என் வாழ்க்கைப் பாதையின் வளைவுகளும், நெளிவுகளும் எனக்குக் கற்றுக் கொடுத்தவைகளை எதற்காகவும் இழக்கத் தயாராக இல்லை.

    2023ம் ஆரம்பத்தை தமிழகத்தில் சந்தித்த வேளையில் என்னை நான் அறிந்து கொள்ளும் பயணத்தில் என்னைத் தொலைத்தேன்.

    நாம் வாழ்வில் சந்திக்கும் யாவருமே எமக்கு எதையோ கற்றுக் கொடுத்து விட்டுத்தான் செல்கிறார்கள்.

    அக்கற்பித்தல்களுள் புதைந்திருக்கும் நேர்மறையான புரிதல்களை இனங் கண்டு கொள்வதே எமது சவாலாகிறது.

    தமிழகத்தின் ஆன்மீக வாசல்கள் என்னைத் தியானம் எனும் தீயில் புடம் போடும் வகைக்கு இட்டுச் சென்றது.

    என்னை நானே அறிந்து கொள்ளும் பயணத்தில் ஒரு புதுப் பரிணாமத்துக்குள் புகுவித்தது.

    இந்தப் புதுப்புரிதல்களின் அடிப்படையில் எனக்குள் நான் என்னைத் தேடும் படலத்தின் அடுத்தபடியே 2023 எனக்குத் தந்த மாற்றம்.

    இங்கிலாந்து எனும் எனது வளர்ப்பு அன்னை பூமியில் 2013 விளவித்த மாற்றங்கள் பல.

    19 வயது வாலிபனாக இங்கிலாந்து நாட்டிற்குள் காலடி வைத்தபோது அந்நாட்டின் முடியாட்சியை அலங்கரித்த இரண்டாம் எலிசபேத் மகாராணியை இழந்து ஒரு வருடப் பூர்த்தியைக் கண்டது 2023.

    மகாராணியை இழந்த இங்கிலாந்தின் மன்னராக உத்தியோகபூர்வமாக முடிசூடிக் கொண்டார் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ்.

    ஒரு நாட்டின் ராஜ வைபவமான முடிசூட்டுவிழாவை வாழ்வில் கண்டுகளிக்கும் சந்தர்ப்பத்தை அளித்தது 2023.

    பொருளாதரப் பிரச்சனை இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாரிய தாக்கத்தைக் கொடுத்தது.

    ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது ஆசியப் பின்னனியைக் கொண்ட பிரதமர் ரிஷி சுனாக் அவர்களின் தலைமைக்குச் சவாலாக பல பிரச்சனைகள் உருவெடுத்தன.

    பொருளாதரா சிக்கல்களினால் ஊதியத்தில் முன்னேற்றம் காணாத தேசிய சுகாதாரத்துறை ஊழியர்கள் டாக்டர்கள் அடங்கலாக வேலை நிறுத்தங்களில் குதித்தனர்.

    தொடரும் யூக்கிரேன், ரஷ்ய யுத்தத்தில் யூக்கிரேனுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திலிருந்த பிரித்தானியாவை இஸ்ரேல், பாலஸ்தீனிய யுத்தம் மேலும் சிக்கலுக்குள் தள்ளியது.

    பாலஸ்தீனிய தீவிரவாதிகள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது அக்டோபர் 7 ம் தேதி மேற்கொண்ட மிலேச்சத்தமமான தாக்குதலின் பிரபலிப்பாக இஸ்ரேல் தொடங்கிய காஸா மீதான தாக்குதலின் நியாயத்தை ஏற்றுக்கொண்டாலும் உயிர்ச்சேதங்களின் அளவினைக் கண்டிக்க வேண்டிய தேவை இங்கிலாந்துப் பிரதமரை சங்கடமான நிலையில் தள்ளியுள்ளது.

    இங்கிலாந்து.பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேல் மீதான விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டிய தேவையும் இங்கிலாந்துப் பிரதமருக்கு உண்டு.

    பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக அகதிகள் என்று கூறிக்கொண்டு உள்நுழையும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    இப்பிரச்சனையை வெள்நாட்டிலிருந்து குடியேறிய சந்ததி வழியான பிரித்தானிய பிரதமர் எவ்வாறு கையாள்கிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல அவரது கட்சியின் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வல்லமை படைத்தது.

    பிறக்கும் இந்த்ஜ 2024 இங்கிலாந்து நாட்டின் தேர்தல் ஆண்டாகும் என்பது அனைத்து அரசியல் அவதானிகளினதும் கருத்தாகும்.

    வாழ்வாதாரம், வெளிநாட்டவரின் குடியேற்றம், சர்வதேச அரசியல் நிலவரம் என இவையனைத்தையும் இங்கிலாந்துப் பிரதமர் எவ்வகையில் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.

    பொதுவாகவே 2024ம் ஆண்டில் இங்கிலாந்து அரசுக் கட்டிலில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பலமான தோல்விக்கு உள்ளாகும் என்றே பலரது கருத்தும் இருக்கிறது.

    அடுத்து இந்தியாவுக்கும் 2024 ம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு யார் இந்தொயாவின் பொருளாதார உயர்ச்சியை சரியான திசையில் எடுத்துச் செல்லப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கப் போகிறது.

    2015ம் ஆண்டினைப் போலவே 2023ம் ஆண்டும் தமிழகத்தைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்தது.

    2015ல் கற்றுக்கொண்ட பாடம் 2023ல் உபயோகமாகிற்றா என்பது கேள்விக்குறியே !

    2023ல் இலங்கையில் நான் பயின்ற பாடசாலையான யாழ் பரியோவான் கல்லூரி தனது 200வது பிறந்தநாளைக் கொண்டாடியது.

    இவ்விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன் என்பது எனது உள்ளத்தைத் தாலாட்டுகிறது.

    இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே மீண்டும் கிடப்பில் போடப்பட்டதைப் போல ஒரு உணர்வு.

    இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்குவது ஒரு பாரிய அரசியல் பிரச்சனை என்பதையும் இதைத் தீர்க்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளது என்பதை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொண்டுள்ளனவா ? எனும் கேள்வி பூதாகரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

    ஆக மொத்தம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை ஒரு விடையில்லா வினாவாகத்தான் 2024க்குள் பிரவேசிக்கிறது என்பதே உண்மை.

    அடுத்து சர்வதேச கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளான அமேரிக்கா , இந்தியா, ரஷ்யா , சீனா எடுக்கப்போகும் சர்வதேச அரசியல் நகர்வுகளை எதிர்நோக்கியபடி ஒரு அச்சம் கலந்த உணர்வுடன் உலக மக்கள் இந்தப் புதுவருடத்தினுள் நுழைகின்றனரோ எனும் சந்தேகம் எழுகிறது.

    பொதுவாகவே ஒரு நாடகம் பார்ப்பது போன்றே இனிவரும் வருட நிகழ்வுகளை எதிர்கொள்வதே இன்றைய தேவை.

    இனம், மதம், நாடு, மொழி எனும் பாகுபாடுகளைக் கடந்த ஆன்மா எனும் நிலைப்பாட்டில் கிடைக்கும் ஆன்மீகப் புரிதல்களின் அவசியத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    வருட முடிவு, வருட ஆரம்பம் என்பன சாதாரண நிகழ்வுகளே !

    வருட முடிவோ அன்றி வருட ஆரம்பமோ எமது வாழ்வின் போக்குகளை மாற்றப் போவதில்லை.

    வருடமொன்றின் முடிவிலும், அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் எமது எண்ணங்ளைக் கட்டுப்படுத்தி நேர்மறையான இலக்குகளை நோக்கிச் செலுத்தக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளக்கூடிய மனோதைரியத்தைக் கொண்டிருக்கிறோமா என்பதுவே முக்கியம்.

    கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் நனைவது தவறல்ல.

    வெறுமையாக நனைந்ததைத் தவறுதலாக மூழ்கி விட்டோம் என்றெண்ணி அதனுள் அமிழ்ந்து போவதே தவறாகும்.

    அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

    Share
  • கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

    “வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை”

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம். இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது  மரம் அல்ல. அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும். பனையின் நிலையினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும். இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து,  தளர்வின்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம். அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது, எமது முன்னோர்களின்  சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை. ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க்கிறதல்லவா!  “பயன்மரம்” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    “ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று “தாலவிலாசம்” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்”

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம். பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண்ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணுகையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

    ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை “பனை மர சோபனம்” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
    மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
    அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
    ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
    ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
    அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
    தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
    இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
    பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
    திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
    நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
    வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
    சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
    அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
    மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
    எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா!

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண்டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங்களையும் பார்க்கப் பார்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக்கும். எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல்லில், மரத்தில், களிமண் தகட்டில், தோலில், செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாகவும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண்டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும். ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண்டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிடவும் இயலாது, சுருக்கமாய் அதேவேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன்படி நான்மறையாளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும், அரசர்கள் இருபது விரற் கடை அளவும்,  வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும், வேளார்கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண்டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    “ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகின்றன. வெற்றிலைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க “கவளி” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப்பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

      “மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
      பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் “பொத்தகச் சுவடி” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே “பொத்தகச் சுவடி” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட்டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

    ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழைத்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குருத்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு “சாரோலை” என்கிறோம். காய்ந்த பின்னர் “காவோலை” என்கிறோம். குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத்தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு. மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும், பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

     (வளரும்)

    Share
  • புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லன நடக்க வேண்டும்
    நாடெலாம் சிறக்க வேண்டும்
    வல்லமை பெருக வேண்டும்
    வாழ்வது உயர வேண்டும்

    தொல்லைகள் தொலைய வேண்டும்
    தோல்விகள் அகல வேண்டும்
    இல்லது என்னும் வார்த்தை
    இன்மையாய் ஆதல் வேண்டும்

    போரெனும் வார்த்தை மண்ணில்
    பொசுங்கியே போதல் வேண்டும்
    மாசுடை  ஆட்சி மண்ணில்
    மடிந்துமே ஆக வேண்டும்

    ஊழலும் ஒழிய வேண்டும்
    உண்மையே நிலைக்க வேண்டும்
    வாய்மையின் வழியில் மக்கள்
    மண்ணிலே நடக்க வேண்டும்

    உழைபவர் உயர வேண்டும்
    நல்லூதியம் கிடைக்க வேண்டும்
    கொடுப்பவர் பெருக வேண்டும்
    குவலயம் சிறக்க வேண்டும்

    கல்வியில் உயர்வு வேண்டும்
    கசடுகள் அகல வேண்டும்
    கண்ணியம் என்றும் வாழ்வில்
    கட்டாயம் அமர வேண்டும்

    அறவழி என்னும் எண்ணம்
    அகத்தினில் அமர வேண்டும்
    அன்புதான் உயர்வு என்று
    அனைவரும் உணர வேண்டும்

    இரப்பது அகல வேண்டும்
    கொடுப்பது உயர வேண்டும்
    பொறுப்பது சிறப்பு என்று
    விருப்புடன் ஏற்க வேண்டும்

    வேற்றுமை அகல வேண்டும்
    வெறுப்புகள் ஒழிய வேண்டும்
    சமத்துவம் நிலைக்க வேண்டும்
    சன்மார்க்கம் தளைக்க வேண்டும்

    பண்பது உயரவேண்டும்
    பக்குவம் நிறைதல் வேண்டும்
    அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
    அனைவரும் இணைதல் வேண்டும்

    புது வருடம் அத்தனையும்
    சுமந்து கொண்டே வரட்டும்
    வரும் அனைத்தும் எங்களுக்கு
    வளங் கொடுக்க வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப்
    புது வருடம் வரட்டும்
    வரு வருடம் நமக்கு
    வரங் கொண்டு வரட்டும்

    Share
  • Goodbye Captain

    Goodbye Captain

    Baskar Seshadri

    Vijaykanth who passed away today (28th Dec 2023) had a bright Future in Politics at some point of time after he contested the elections and secured close to nine Percent of votes. This he did opposing both Jayalalaitha and Karunanidhi. It was a master stroke at that time. With no big social media, he was able to achieve this. Later During elections after aligning with ADMK He was able to get twenty-Nine MLA’s elected. In-fact it was his best support that made Jaya to win in the election at that time. Later he parted ways due to uncontrolled emotions and lost balance in public places.

    Remember the slap he gave to one of his Volunteer in full Public View? Had he contested the election aligning with DMK, Kalaignar could have come to power in 2016. But he kept away from DMK.

    In other words, it was captain who made Jaya to come to power and also made DMK to Lose in 2016. He was a real strong man who was aiming high and was able to reach better Heights with the mass support and Cinema Glamour. But he failed to use the sentimental cinema glamour beyond a point and there started his fall.

    If only had he grown better at the same speed he was travelling he could have become the chief Minister of Tamilnadu in the absence of Jaya and Kalaignar.

    But sadly, he missed the Bus. Today he is no more.

    I am sure the Glamour of Tinsel world is not dead. It’s a mass Movement that matters and voters don’t see the background of the Messiah as voters mostly are emotional in Tamilnadu.

    Captain did his best in the film industry with all his helping tendency and was able to give life to the Nadigar Sangam.

    He is a do gooder and a nice Samaritan. If only he had a better guide and adviser probably, he could have done the election Politics better.

    But it was Otherwise. A big crowd puller and a mass hero Could not do what he Thought in Tamilnadu. That was Sad. And We could not help.

    Share
  • இறந்த மன்னனோடு உயிருடன் புதைக்கப்பட்ட எளியோர் கல்வெட்டு

    இறந்த மன்னனோடு உயிருடன் புதைக்கப்பட்ட எளியோர் கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பண்டைய கால மன்னர் தம் ஆட்சி, அதிகாரம் நிலைப்பதிலேயே குறியாக இருந்ததால் பொது மக்கள் உரிமைகள், நலன்களை அடியோடு புறந்தள்ளினர். மன்னர்கள் தம் நலன், நம்பிக்கை ஆகியவற்றுக்காக பல சடங்கு, சம்பிரதாயங்களை கடைபிடித்தனர். காட்டாக, சதி என்னும் உடன்கட்டை, உடன் பள்ளிகொள்ளல் என்னும் கீழ்கொண்டி முறையில் எளியோரை உயிர் பலி கொடுத்தல் ஆகியவற்றை இறப்பிற்கு பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் என்னும் நம்பிக்கையில் செய்தனர். உடன் பள்ளி என்னும் உயிர் பலி பண்டு பல்வேறு நாகரிகங்களில் கடைபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இந்த இறப்பின் பிற்பட்ட வாழ்க்கை, சொர்க்கம் ஆகிய நம்பிக்கைகள் மேலை ஆசியாவில் தோன்றி அங்கிருந்து இங்கு வந்தேறிய வேளிர்களால் இந்தியாவிலும் பரவியதாக கருதலாம். திருவண்ணாமலை தாமரைப் பாக்கத்தில் அக்னீசுவரர் கோவிலில் பாடும் பெண்டிர் மூவர் இறந்த பிருதிகங்க மன்னனுடன் உயிருடன் புதைக்கப்பட்ட செய்தி கூறும் தொடர்புடைய மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதே போல மன்னனுடன் எளியோர் புதைக்கப்பட்ட கல்வெட்டுகள் கருநாடகம், ஆந்திரத்தில் கீள்கொண்டி என்ற குறிப்புடன் அறியப்படுவதோடு இதை ஒப்பிடலாம்.

    மன்னர்களான கங்கர், நொளம்பர், பிருதிகங்கர், அதியமான், வாணர் போன்றோர் சங்கப் புலவர் கபிலரால்  குறிப்பிடப்படும் 12 வேளிராக கருத இடமுள்ளது. காரணம் இவர்கள் சுமேரிய நாகரிக வழக்கமான இறந்தோருடன் உயிருடன் இருப்பவரை புதைக்கும் வழக்கத்தை கடைபிடித்ததே ஆகும். ஏதோ ஒரு இடத்தில் வழங்கிய வழக்கத்தை தம் முன்னோர் வழக்கமாக தாம் சென்ற இடங்களில் எல்லாம் வழிவழியாக பின்பற்றி இந்நாட்டின் சமூக வழக்கமாவே பரவிடச் செய்துள்ளனர். மன்னர்கள் செய்த சதி என்னும் உடன்கட்டை குற்றத்துக்கு இந்து மதம், சனாதன தர்மம், பிராமணர் தான் காரணம் என்று பழி சுமத்துவது வெறுப்பில் தானே ஒழிய சான்றினால் அல்ல. மனுஸ்மிருதியில் எங்குமே உடன்கட்டை பற்றி கூறப்படவில்லை.   இந்தியாவில் பிராமணர் உள்ளிட்ட பிற பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளியில் தான் மலம், மூத்திரம் கழித்தனர்.   ஆனால் அரச குடும்பத்தவர் மட்டும் பாதுகாப்பு, அந்தஸ்து கருதி தமக்கென தனியே கழிப்பறை கட்டிக்கொண்டு மலம் கழித்தனர். கழித்த அந்த மலத்தை மனிதரை கொண்டு அகற்றினர். இதை பிற்காலத்தில் நகரங்களில் வாழ்ந்த செல்வர்களும் பின்பற்றினர். இதனால் மலம் அகற்றுவதற்கு என்றே  ஆந்திரத்து ஒடுக்கப்பட்ட சாதியாரை பணிக்கு அமர்த்தினர். ஆனால் இதை சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, பிராமணர் ஏற்படுத்தினர் என்று புனைகின்றனர். ஏன் ஆண்ட பரம்பரை பெருமை பேசுபவரை யாரும் இதற்காக பழிப்பதில்லை? முக்காலமும் உணர்ந்த மகான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார், பழனி ஈசுவர பட்டர் போன்றோர் இன்றைய சமூக கேடுகளுக்கு மன்னராட்சியில் அதிகாரத்தில் இருந்த வேந்தர் (emperor), மன்னர் (king),  அரையர் (Duke), கிழார்கள் (knight) தான் முழுக் காரணம் என்கின்றனர். வேந்தனுக்கு கீழ்நிலை ஆட்சியாளர்கள் ஒரே வேந்தன் கீழ் இருந்தும் தமக்கென தனிப்படை பேணி அடுத்த நாட்டை பாவிட போரிட்டு இருநாட்டு மக்களுக்கும் உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படுத்தி தம் ஆடம்பர வாழ்விற்கும் படை பேணலுக்கும் மக்கள் மீது பல்வேறு வரிகளை சுமத்தினர் என்பதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம்  அக்னீசுவரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவநச் சக்ரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதி 
    2.  கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்
    3. டிருக்கும் மனக்கேதம் தீர்த்தமைக்கும் சந்தா[ந சா]மமாக பதினறு சாண் கோலால் விட்ட நிலம்  ஒரு வேலியும்  இ
    4. வர்கள்  வங்கிசமுள்ளதனையும் செல்வதாக விட்ட நிலத்துக்கு  நம் வங்கிசத்து இதுக்கு இலங்கனம் சொல்லுவா
    5. ர் ‘மதுராந்தக வேளான் கால்கழுவின நீருங் குடிச்சுக் கலச்சோறும்  தின்பாந்‘, கெங்கையிடைக்  குமரியிடைச் செய்
    6. தார்  செய்த பாவங்கள் கொள்வார் . பள்ளமுணோக்கி  கு 406, குமிலி  148, புலையக்கள்  193, கிணற்றின் கீழ்ப்பட்டி 
    7. நூறு உட்கழனியில் தடி 3, சிங்கன் த[டி] 484, சேரியான் பட்டி 190, பொன்
    8. னராயந்  த
    9. ண்டில்  84 
    10. சஈத்தி 188
    11. நடு 
    12. வில் கழுவ
    13. ல் வடதலை 
    14. 55

    ஐயன் / ஐயர் – தந்தை; பள்ளிகொண்ட – பிணத்தோடு உயிருடன் புதைக்கப்பட்ட; கேதம் / கேது – இழவுத்  துன்பம், துயரம்; சாமம் – இன்மை; வங்கிசம் – வமிசம்; இலங்கனம் – வில்லங்கம், செல்லாது; கால்கழுவின – குண்டிகழுவிய; கலச்சோறு – எச்சிற் கலச் சோறு;

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் (duke) பிருதிகங்க சோமநாதன் இந்த கல்வெட்டை வெட்டினான். இதில் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழவு வருத்தம் தீர்த்ததற்காகவும், பிள்ளைகள் இன்றி போனதற்காகவும் இழப்பீடாக பதினாறு சாண் கோலால் அளந்து விட்ட நிலம் ஒரு வேலியை இவர்கள் வம்சம் உள்ளவரையில் இவர்கள் உரிமையாக இருக்கும் என்றும்  கொடையாக கொடுத்ததை தன் வம்சத்தார் வில்லங்கம் செய்தால் அவர்கள் “மதுராந்தக வேளான் குண்டி கழுவிய பீத் தண்ணீரை குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்” என வசை பாடுகிறான். மேலும் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களை கொள்வார் என்று சபிக்கிறான். இந்த ஒரு வேலி தவிர மேலும் நிலம் கொடுத்தானா அல்லது இந்த ஒரு வேலியை வெவ்வேறு இடங்களில் குழி கணக்கில் கொடுத்தனா என்று தெரியவில்லை. கணக்கு முரண்படுவது தான் இதற்கு காரணம். 40 குழி ஒரு சென்டு என்றால்  நூறு சென்டு ஒரு ஏக்கர் என்றால் 6.17 ஏக்கர் கொண்ட ஒரு வேலிக்கு எத்தனை குழி?  ஆனால் மொத்தம் 5000க்கு குறைவான அளவுள்ள குழி கொடுத்துள்ளான் என்று தெரிகிறது. அவை பள்ளமுனோக்கியில் 406, குமுலியில் 148, புலையக்களில் 193, கிணற்றின் கீழ்ப்பட்டியில் 100, உட்கழனியில் தடி 3, சிங்கன் தடியில்  484, சேரியான் பட்டி 190, பொன்னராயன் தண்டில் 84, சஈத்தி 188, நடுவில்கழுவல் வடதலையில் 55 = 1851.

    மதுராந்த வேளான் அரசன் சோமநாத பிருதிகங்கனுக்கு அணுக்க செயலன் போலத் தோன்றுகிறது. அதனால் தான் அவனைக்  குறிப்பாகச் சுட்டி அவனுக்கு வந்த அறிவு தன் சொந்தங்களுக்கும் வரட்டும் என்ற  எண்ணத்தில் நாக் கூசும்படியான வசவுச் சொல்லை பயன்படுத்துகிறான். இப்படியான ஆணவப் பேச்சு வசவுச் சொற்கள் 12 ஆம் நூற்றாண்டு முதல் தான் கல்வெட்டுகளில் இடம் பெறத் தொடங்கின. “குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு என் மனைவியை மிணாட்டி ஆக்கியவன் ஆவேன்” என்று ஒரு வாணகோ உரைக்கிறான். இப்படியான இழிவழக்கைத் தமிழகத்தில் ஊன்றியவர் தமிழரல்லாத அரசரே ஆவார். இது அவர்கள் தம் கீழ்படிந்த பணியாளர்களை அவ்வப்போது எப்படி நடத்தி இருப்பர் என்பதை நினைக்க அறுவறுப்பாக உள்ளது. இந்த ஆணவப் பேச்சை புனிதமான கோவிலில் கல்வெட்டாய் பொறித்தானே அவன் இறையுணர்வை ஐயப்பட வேண்டியுள்ளது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம் 50 – 51. எண்; 27

     

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபக் கிழக்குச் சுவரில் உள்ள 4 வரிக் கல்வெட்டு.

    1. [ஸ்வஸ்தி] ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ  கொலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது சோமனான பிருதிகங்க[நேந்]
    2. எங்களய்யர்  கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும், சதுர நடை
    3. ப்பெருமாள்க்கும், நிறைதவந்  சேதாளுக்கும் சந்தானச் சா[ம]மாக விட்ட நிலம் பதினறு சாண் கோலா
    4. லே     

    விளக்கம்: மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1188 இல் அரசன் சோமநாத பிருதிகங்கன் தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்ட ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவம் சேதாள் ஆகிய மூன்று பாடும் பெண்களான தேவரடியார் குலப்  பெண்களுக்கு குடும்பத்தில் பிள்ளை இன்றி போனதற்கு இழப்பீடாக விட்ட நிலம் பதினாறு கோலால் அளந்து தரப்பட்டது என்று கூறுகிறான். மேலுள்ள கல்வெட்டில் உயிருடன் இறந்தவர் பெயர் குறிப்பிடாததை இதில் குறிக்கிறான்.

    பார்வை நூல்:த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் பக்கம்: 52, எண்: 28.

    திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோயில் முன் மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 5 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10 வது 
    2. ஆடும் ஆழ்வாரும், சதுரநடைப் பெருமாளும், நிறை தவஞ் செய்தாரும் சந்தாந சாமத்தில் உ
    3. டையார் திருவ[ங்]கீசுரமுடைய நாயநார்]க்கு _ _ _  [பாடிசையா]க ஐஞ்சு தேவரடியாற்கு பதிநறு 
    4. சாண் கோலால் ஆயிரங் குழி விட்டேன் சோமநாத தேவனேன். இது விலக்குவாந் கெங்கை இ
    5. டைக் குமரி இடைப் பாவங் கொள்வான்.        

    பாடிசை – வருத்த இணக்கம்; விலக்கு – இல்லாது செய்

    விளக்கம்: சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188 இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப்பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குல பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இது இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தை கொள்வான் என்று நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று முந்தைய கல்வெட்டுகளில் கூறாமல் விட்டதை இதில் குறிப்பிடுகிறான். ஆனால் இங்கு அந்த தேவரடியார் ஐவர் பெயரைக் குறிக்கவில்லை. 13 ஆம் நூற்றாண்டில் வேற்று மொழி அரசர்களுக்கு தேவரடியார் என்றால் இளக்காரம் தான் போலும். தமிழ் வேந்தர்கள் செய்ததற்கு மாறாக அல்லவா இது உள்ளது.

    பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், பக்கம்: 44 – 45, எண்: 24

    மைசூர் மாவட்டம், திருமகூட்லு நரசிபுர வட்டம் தொட்ட ஹூண்டி கிராமத்தின் குளத்தில் இருந்த 24 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்தி நீதி மார்க்க கொங்குணி வர்ம்ம தர்ம்ம மஹா / ராஜாதி ராஜ  கோவளாபுரவரரேஸ்வர நந்த / கிரிநாத ஸ்ரீமத் பெம்மானடிகள  ஸ்வர்க்கமேற்   / எறுதொட பெம்மானடிகள மனேமகர்த்தி  அக /ரய்யன்  நீதி மார்க்க பெம்மனடிகே கீள்குண்டேயாதம்  பெம்ம / னடிகள ஸுபுத்ர ஸத்யவாக்ய  பெமானடிகள் குண்ட கல்லின பக்கதல்லி  / ரிதிய / கல்நாடு / கொட்டது  க  / ப்பஹள்ளி  / பரிஹார / இதனரிம்   /தோ வாராணா  / சிய வரி / தம்  / இதக்கெ  கம்ம / ளி  நகெயர / ல்ல கும்மண்ட / கதங்கே ஸிகே  /  துவஸ்தரு கு / ளவேடம / ண்டு இதனசிதோம பா / தகன்   

    விளக்கம்: மேலை கங்க வேந்தன் ஸ்ரீ புருஷனின் மகன் இரணவிக்ரமன் ஆன முதலாம் எரிகங்க நீதிமார்கன் 869 இல் சமணத்தின் சல்லேகனம் என்னும் உடல்மெலிதல் நெறியில் உயிர் துறந்துள்ளான். அவனை கோவளால நகரத்து இருந்து ஆளும் நந்தகிரியின் தலைவன், நீதிமார்க்க கொங்குணிவர்மன், அறங்காக்கும் பேரரசன் என விவரித்து பெருமானடிகள் சொர்க்கம் எய்தினார் என்கிறது கல்வெட்டு. அவரோடு  பெருமானடிகளின் உள்மனைப் பணியாள் (அகம்படி) அகரய்யன் கீழ்க்கொண்டியாகி (பள்ளி கொண்டான் ஆகி) உயிருடன் புதைக்கப்பட்டு இறந்தான். பெருமானடிகளின் மூத்த நன்மகன் சத்யவாக்ய பெருமானடிகளின் நடுகல்லின் பக்கத்தில் அமைந்த கப்பஹள்ளி என்னும் ஊரில் இறையிலி நிலம் (கல்நாடு) கொடுத்தான். இதனை அழித்தோர் வாரணாசியை அழித்தவராவார். இதனை அழித்தோன் பாதகன் ஆவான்.

    பார்வை நூல்: Epigraphia Carnatica Vol 3, Part I, Inscriptions in Mysore Dist., page 287 number TN 91.

    பெல்லாரி  மாவட்டம் இராயதுர்க வட்டம் கலுகோடு கிராமத்திற்கு தெற்கே உ ள்ள  பலகையில் வெட்டிய 25 வரி கன்னட  கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸகரிப ஸகாலாதித்த ஸம் / ம்பத்ஸர ஸதங்களேண்டு நூற தொம்ப / த்தொம்பத்தநய வருஷம் ப்ரவர்த்திஸ / ஸ்வஸ்தி  ஸமதிகத பஞ்ச மஹா ஸ / ப்த பல்லவாந்வய ஸ்ரீ  ப்ருதுவீவ / ல்லப   பல்லவகொலதீலக/ ஸ்ரீமந்  மய்தம்மரஸப்  ப்ரதுவீ ராஜ்யங்கெய்து ப / ரகொரொ ளிர  எறேகங்கய்ய ஸக்க ம்மேறிதொடே களுநேநர / ஸர மகம் மய்தம்ம கீள்கொண்டேயாகி ஸத்தொன்டே காம / ராராதித்ய நந்திகாஸ்ரயநப்ப அய்யப்ப தேவந கொட்டு  / து கல்னாடுரகு வெந்து நெலதநேஸருள்ளின  ஸாஸன / – – – விதுரரி – – – – வா சந்த்ரார்கமிதம் ஸலிப்ரது. இதன / ரிரதோன்  வாரணாசியும் ஸாஸிர  கவிலேயும் ஸாஸி / ர்வ்யர்ப்பார்வ்யரும் ஸாஸிவ்யர்ப்பஸிர்ப் பெண்டிரும்  / ஸாயிர கெறேயு  மனரேதோன லோகக்கே ஸல்கு / அய்யப்ப தேவநக்கர விக்ரமாதித்யநக்கர இயுக ப – – – /  ர அய்யப்ப / சோள ( கொ) / ட்டுது. இத / வ் பெஸகெய்தோ  / க்ரித யுகசோ  / ள  / யிதாசாரி  

    ப்ரவர்த்தி – நடக்கையில்; ஸமதிகத – நெருங்கிய; ஸக்க – சொர்க்கம்;  காமர் ஆராதித்ய  – நட்பும் சுற்றமும் போற்றும்; நெலத நேஸரு – நிலவும் சூரியனும்; சந்திரார்கமிதம் – நிலவும் ஞாயிறும் உள்ளளவும்; ஸாஸிர – பரிவுக்குரிய, கருணைக்குரிய, leniency; அக்கர – அக்ஷர, எழுத்து     

    விளக்கம்: இக்கல்வெட்டு சக ஆண்டின் காலவரிசை ஆண்டுகளின் நூற்றாண்டு எ(ண்)ட்டு நூற்று தொன்னூற்று ஒன்பதாம் (கி.பி.977) ஆண்டு நடக்கையில். ஐம்பெரும் ஒலியை நெருங்கிய பல்லவர் வழி வந்த திரு பிருதிவி வல்லப பல்லவகுல திலக நோலம்ப பல்லவன் மய்த்தம்மரசன் பருகூரில் இருந்து மண்ணாண்டு கொண்டிருந்த போது எறெகங்கய்ய சொர்க்கம் எய்திய போது களுநெநரசரின் கீழ்நிலைப் படை வீரன் மய்தம்ம என்பவன் கீழ்க் கொண்டியாகி (பள்ளி கொண்டியாகி) இறந்ததால் உற்றார்  போற்றும் நந்திகாசிரயனப்ப ஐயப்ப தேவன் அவனுக்கு உரித்தாகுகவென்று கொடுத்த இறையிலி நிலம் நிலவும் ஞாயிறும் உள்ளளவும் நிற்கும் ஆவணம் _ _ _ நிலவும் ஞாயிறும் உள்ளவரை செல்வதாக. இதனை அழித்தோன் வாரணாசியையும், பரிவுக்குரிய (கவிலை) குறால் பசுவையும், பரிவுக்குரிய உடல் மெலிந்தோரையும், பரிவுக்குரிய மெலிந்து வறுமையுற்ற பெண்டிரையும் கொல்வோர் செல்லும் அனல் (நரக) உலகிற்கு செல்க. ஐயப்ப தேவன் எழுத்து, விக்கிரமாதித்தியன் எழுத்து. இக்கல்வெட்டை கொட்டுவித்தவன் ஐயப்ப தேவன். இதை கல்வெட்டாய் வெட்டியவன் கிரிதயுகசோழ _ _ யிதாசாரி என்பவன்.

    நுளம்பன் மய்தம்மரசன் மன்னன் என்றால் எறிகங்கன் அவனுக்கு கட்டுப்பட்ட கங்கர் கிளை மரபு அரையன் என்று தோன்றுகிறது. நந்திகாசிரிய ஐயப்ப தேவன் எறிகங்கன் மகன் ஆதல் வேண்டும். களுநேநரசன் அவன் படைத் தளபதி ஆவான். தென்னிந்திய கல்வெட்டு குறிப்பது போல எறிகங்கன் போரில் இறக்கவில்லை. சொர்க்கம் ஏகினான் என்பதை வைத்து அவனும் சமண சல்லேகனம் இருந்து இறந்தானா? வீரன் மய்தம்மன் அவனுடன் உயிருடன்  புதைக்கப்பட்டு இறந்தானா? தெரியவில்லை. இதே போல நுளம்ப மன்னன் இரிவ நுளம்பன் இறந்த போதும் இதே போன்ற கிழ்கொண்டி முறையில் ஒருவன் புதைக்கப்பட்ட செய்தி உண்டு.

    பார்வை நூல்: South Indian Inscription Vol IX, No 40, ARN 442 of 1923, பக்கம் 23

    Share
  • குறளின் கதிர்களாய்…(479)

    குறளின் கதிர்களாய்…(479)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(479)

    மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
    னன்கல னன்மக்கட் பேறு.

           –திருக்குறள் -60 (வாழ்க்கைத் துணைநலம்)

    புதுக் கவிதையில்…

    நற்குண
    நற்செயல்களையுடைய மனைவி
    ஒருவனுக்கு அமைவது
    இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்பர்
    எல்லாமறிந்த பெரியோர்,
    அந்த அழகுக்கு
    அழகு சேர்க்கும்
    அணிகலனாய் விளங்குவது
    நல்ல பிள்ளைகளைப்
    பெறுவதே…!

    குறும்பாவில்…

    நற்குணவதி மனைவியாய் அமைவது
    இல்லறத்தில் மங்கலமென்பர் பெரியோர், அதற்கணிகலன்
    ஆவது நன்மக்களைப் பெறுவதே…!

    மரபுக் கவிதையில்…

    மங்கை யொருத்தி குணவதியாய்
         மனைவி யானால் ஒருவனுக்கு,
    மங்கலம் தங்கும் இல்லிலென
         மதிப்பு மிக்கோர் உரைத்தனரே,
    பொங்கும் அழகுக் கணிகலனாய்ப்
       பொருந்தி அழகு சேர்த்திடுமே
    தங்கும் செல்வம் பிள்ளைகளாய்த்
         தாங்கி யவளே பெற்றிடலே…!

    லிமரைக்கூ…

    நற்குண மனைவியால் தங்குமே
    மங்கலம் இல்வாழ்வில், நன்மக்களைப் பெறுதல்
    அழகுக்கழகு சேர்க்கும் எங்குமே…!

    கிராமிய பாணியில்…

    வேணும்வேணும் தொணவேணும்
    வாழ்க்கயில ஒருத்தனுக்கு
    நல்ல தொணவேணும்,
    நல்ல பொஞ்சாதி தொணவேணும்..

    நல்ல கொணமுள்ள பொஞ்சாதி
    ஒருத்தனுக்குக் கெடச்சிண்ணா
    அதுதான் குடும்ப வாழ்க்கயில
    ரெம்ப அழகுண்ணு
    பெரியவுங்க சொல்லியிருக்காங்க,
    அதோட
    அந்த அழகுக்குக்
    கூடுதலா அழகுசேக்கிற ஒசந்த
    நககளப்போலத்தான் ஆவும்
    நாம பெத்துக்கிற
    நல்ல கொழந்தையளுமே..

    அதால
    வேணும்வேணும் தொணவேணும்
    வாழ்க்கயில ஒருத்தனுக்கு
    நல்ல தொணவேணும்,
    நல்ல பொஞ்சாதி தொணவேணும்…!

    Share